Sunday, February 20, 2011

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை"

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை" நாவலுக்கான விமர்சனம். - ச .முத்துவேல்


24 x 7 மனிதர்களின் இயலா நிலை 


அனைவருக்கும் வணக்கம்,

துப்பறியும் நாவல்கள், தோராயமாக 50 பாலகுமாரன் நாவல்கள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நான் வாசித்த நாவல்களின் எண்ணிக்கை 20 லிருந்து 30 வரைகூட தேறாது. அந்தளவுக்குப் புதிய வாசகனான எனக்கு நெடுஞ்சாலை நாவல் பற்றிய விமர்சனம் என்பது மிகையான சுமைதான். எனவே என் பக்குவத்தில் நெடுஞ்சாலை குறித்த வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்

கண்மணி குணசேகரன் நவீனத் தமிழிலக்கிய உலகம் நன்கறிந்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி. நடு நாட்டைக் களமாகவும், நடு நாட்டு வட்டாரமொழியிலும் எழுதும் இயல்புவாதப் படைப்பாளி. அடிப்படையில் விவசாயி. இதுவரையிலும் அவர் எழுதியுள்ளவற்றில் ஒரு விவசாயியே தென்படுகிறார். ஆனால், அவர் தொழில்முறையாக கம்மியர். அதாவது மோட்டார் மெக்கானிக். அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணியாற்றும் தொழிலாளி. நான்கூட நினைத்ததுண்டு. வேளாண் சார்ந்தே எழுதும் கண்மணி, ஏன் தன் துறைசார்ந்து எழுதுவதில்லையென்று? நானறிந்தவகையில் வெள்ளெருக்குத் தொகுப்பில் இடம்பெற்ற கொடிபாதை சிறுகதை மட்டுமே சற்று போக்குவரத்துத் துறைக்கு நெருங்கிவருவதாக நினைவுகூர்கிறேன். இவ்வாறான சூழலில் தன் தொழில், துறை சார்ந்து எழுதியிருக்கும் நாவல்தான் நெடுஞ்சாலை. போக்குவரத்துத் துறை, ஓட்டுனர், நடத்துனர், கம்மியர் ஆகியவர்களை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பது.

துறை சார்ந்த அனுபவங்களை படைப்புகளாக்குவதன்மூலம் அறியப்படாத பக்கங்களை நுட்பமாகவும், வாழ்வனுபவமாகவும் உணரமுடிகிறது. ஓர் இன்னலின் அல்லது அவலத்தின் தீவிரத்தை தொடர்பற்றவர்களும் நன்கு உணரச்செய்யும் வகையில் உணர்வுபூர்வமாக சம்பவங்களாகவும், தகவல்களாகவும், வாழ்வனுபவங்களாகவும் நீட்டிக்கச் செய்து வாசிக்கக் கிடைக்கும்போது அத்தீவிரத்தை நன்கு உணரமுடிகிறது. போக்குவரத்துத் துறை சார்ந்த இந்த நாவல் அந்தத் துறையைப் பற்றியும், அங்கு பணியாற்றும் மனிதர்களின் கொண்டாட்டங்கள், அவலங்கள் ஆகியவற்றை நமக்கு அளிக்கிறது. கண்மணி இந்த நாவலின் மூலம் சொல்லவிரும்புவதும் இவைகளாகத்தான் இருக்கமுடியும். பணிமனை, தொழிற்சாலை சார்ந்தவை இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நெடுஞ்சாலையில் விரிவாகப் பதிவாகியிருக்கிறது. அந்தவகையில் இதைப் புதுமையான களம் என்று எண்ணுகிறேன்.இலக்கியமும் வாழ்வாதாரமும் ஒன்றாகவே அமைந்தவர்கள், அல்லது நெருக்கமாக அமையப் பெற்றவர்களைக் காட்டிலும், இயந்திரங்களோடு வாழும் அடிப்படையான தொழிலாளர்கள் இலக்கியத்தில் ஈடுபடுவது ஒப்பீட்டளவில் கூடுதல் பாராட்டுக்குரியதுதான். அந்தவகையில் கண்மணி குணசேகரன், மு.ஹரிகிருஷ்ணன் போன்றவர்களின்மீது வியப்பும் , மதிப்பும் ஏற்படுகிறது.

நெடுஞ்சாலை நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பணிமனை, தொழிற்சாலை , ஆட்டோமொபைல் சார்ந்த வாழ்க்கையைக் கொண்ட ஒரு தொழிலாளியாகவே நானும் இருப்பதால் இந்த நாவலில் எனக்குப் பெரிய அளவில் புதியதொரு வாழ்பனுபவம் கிடைக்கவில்லை என்பதையும் பதிவுசெய்ய விரும்புகிறேன். இது நிச்சயம் என்வரையிலானது.

நான் இங்கு கதையைச் சொல்லிவிடப்போவதில்லை. கதையென்று சொன்னால் ஓரிரு வரிகளில் சொல்லிவிடமுடியும்.எனவே, கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலின் மூலம் எழுப்பப்பட்டுள்ள சமூக விமர்சனங்கள், நுட்பங்கள் ஆகியவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

ESSENTIAL SERVICE எனப்படும் இன்றி அமையாதவைகளான மின்சாரம், போக்குவரத்து, பால், காவல், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் கடிகாரச் சுற்றுப்பணி எனப்படும் round the clock shift duty ல் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவேண்டியவர்கள். பரபரப்பாக ஓடி சூடுபறக்க பணிமனைக்கு வந்து நிற்கும் வண்டியில் அந்தச் சூட்டிலும் பராமரிப்புப் பணீசெய்யவேண்டியவர்கள் இவர்கள். சாணி, மலம் ஆகியவை ஒட்டியிருக்கும் ஈரம் காயாத பகுதிகளைத் தொட்டு வேலை செய்யவேண்டிவர்கள்.பயணிகள் எடுக்கும் வாந்தியைக் கழுவித்தள்ள வேண்டிய வர்கள்..இவர்களூக்கு பண்டிகை நாட்கள், ஞாயிறு விடுமுறை, இரவுத்தூக்கம், நேரத்திற்கு உணவு என்பதெல்லாம் மற்றவர்களைப் போன்று அமையப்பெறாதவர்கள். எல்லோரும் உறங்கப்போகையில் இவன் வேலைக்குச் சென்றுகொண்டிருப்பான். செய்தித்தாள் போடுபவனுக்கு விடிகாலைத்தூக்கம் என்பது வெறும் கனவு. அரிதாகக் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் உடலென்னும் இயந்திரம் வழக்கம்போல் விழித்துக்கொண்டுவிடும். எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க ஓட்டுனர் விழிப்புணர்வோடு வண்டியோட்டிக்கொண்டிருப்பார். இதுபோன்ற, இன்றி அமையாத பணிபுரிபவர்களை அரசாங்கம் எப்படி நடத்துகின்றது? என்ன சிறப்புச் சலுகைகள், மரியாதைகள் அளிக்கிறது என்று பார்த்தோமானால் கசப்பே மிஞ்சும். தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பையளிக்க வேண்டிய அரசாங்கம் அவர்களைத் தற்காலிகத் தொழிலாளர்களாக நியமித்து, அத்துக்கூலிகளாக பயன்படுத்தி சுரண்டல் செய்கிறது. இந்த நிலையிலேயே பணி நாள் முழுதும் கழித்துவிட்டு ஓய்வுபெறவேண்டியவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் சுரண்டல் செய்வதோடல்லாமல் பணியில் நிகழக்கூடிய தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் தண்டனையாக இவர்களின் கூலியையேப் பறித்துக்கொள்ளும் அவல நிலையையும் நாவலில் சுட்டிக்காட்டுகிறார்.டீசல் சிக்கனம் செய்யாதவர்களிடமிருந்து அதற்குரிய தொகையாக தண்டனைப்பணம் கூலியில், சம்பளத்தில் பிடிக்கப்படுவது போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.

இந்த நாவலின் மையமாக இருப்பது பேருந்தா? ஓட்டுனர், நடத்துனர், கம்மியர் எனப்படும் தொழிலாலிகளா? போக்குவரத்துத் துறையா? தனியார் வாகனங்களா? இவை எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கும் நெடுஞ்சாலைதான். பொருத்தமான தலைப்பை இட்டிருக்கிறார் ஆசிரியர்

380 பக்கங்களைக் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாகப் பிரித்திருக்கிறார். முதல் 300 பக்கங்களை வீடு என்றும், எஞ்சியவற்றை நாடு என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இவ்விரண்டு பாகங்களும் தனித்து நின்றாலும் முழுமையுடையதாகக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. நேரடியாக இரண்டாம் பாகத்தைப் படித்தாலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளது. முதல் பாகம் கதையில் வரும் மூன்று முதன்மையான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து, அவர்களோடு ஆழ்ந்த நெருக்கத்தை அளிக்கிறது. இதேபோன்று முதல் பாகத்தில் வரும் அத்தியாயங்கள் 15 மற்றும் 16 ஆகியவை மட்டுமேகூட தனித்தனியாக நின்று இரண்டு சிறந்த சிறுகதைகளாகவும் விளங்குகிறது. முதல் பாகம் அழுத்தமானதாகவும் ,உணர்வுபூர்வமாகவும் அமைந்துள்ளது.

நாவல் என்பது விரிவான களம் கொண்டது. எவ்வளவு சொன்னாலும் தீராத விரிவும், இன்னும் சொல்ல நிறைய இருக்கும் அளவிற்கும் அனுபவங்களைக் கோருவது. இன்னும் விரிவாக கண்மணி அவர்களால் எழுதிவிடமுடியும். ஆனால் அந்த விரிவு நாவலுக்கு வலுசேர்க்கும் வகையில் நெருக்கமாகவும், பொருத்தமானதாகவும் இருக்கவேண்டும். நெடுஞ்சாலையில் ஆசிரியர் கையாண்டுள்ள சில பகுதிகள் நாவலின் விரிவுக்கும், மையத்திற்கும் சற்று இடைவெளி கொண்டுள்ளது. உதாரணமாக கம்மியர் பணிக்கு எழுத்துத் தேர்வுக்குச் செல்பவனிடம் வைக்கப்படும் கேள்வித்தாளில் இடம்பெற்றுள்ள கேள்விகளையெல்லாம் எழுதிக்கொண்டிருப்பது என்பன போன்று சிலவற்றைச் சொல்லலாம். கதாபத்திரங்கள் நிகழ்த்தும் அவர்களுக்கிடையிலான உரையாடல்களின் வழியாக துணைக் கதைகள் சேர்க்கப்பட்டுள்ளது, நாவலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. மாறாக இவற்றிற்குப் பதிலாக, essential service செய்யக்கூடியவர்களின் நிலையை, இன்னல்களை , பணிச்சூழலில் மனிதர்களுக்குள் விளங்கும் அரசியலை இன்னும் ஆழமாகவும் , நுட்பமாகவும் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. நன்றாகவே இதைச் செய்திருக்கிறார் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.அதேசமயம் ஆசிரியர் நிகழ்த்தும் நுட்பம் கவனத்தை ஈர்க்கிறது. உதாரணமாக சென்னையிலிருந்து வயர்லெஸ் வழியாக தகவல் சொல்லப்படுவது முதலில் திண்டிவனத்திலுள்ள பணிமனைக்குத் தெரிவிக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து தகவல் போக வேண்டிய இடமான விருத்தாச்சலத்திற்குத் தெரிவிக்கப்படும். அவர்கள் பயன்படுத்தக்கூடிய VHF SET வயர்லெஸ்ஸின் சக்தியின் நுட்பம் இயல்பாக பதிவாகியிருக்கிறது. இதை ஆசிரியர் உணர்ந்து பதிவு செய்திருந்தாரோ,இல்லையா என்று தெரியவில்லை.

இந்நாவல் நடைபெறும் காலக்கட்டம், நாவல் வெளியாகியிருக்கும் 2010லிருந்து குறைந்தது 10 ஆண்டுகள் பின்னோக்கிய காலக்கட்டம் என்று அறியமுடிகிறது. எனில் இந்த நாவலை ஆசிரியர் எப்போது எழுதத்துவங்கினார் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. செல்பேசிகள் இல்லாத காலக்கட்டம். தீரன், பெரியார், நேசமணி JJTC என்று போக்குவரத்து வட்டாரங்கள் நிலவிய காலக்கட்டம். ஹீரா, தேவயானி, ரம்பா ஆகியோர்களுக்கு நட்சத்திரத்தகுதி உச்சத்திலிருந்த கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்த காலக்கட்டம். இந்த நாவலில் கிரிக்கெட் ரசிகர்களையும் சினிமா ரசிகர்களையும் நையாண்டி செய்யும் கட்டங்கள் பதிவாகியிருக்கிறது.பொதுவாகவே இலக்கியம் அவலங்களை, சோகங்களைப் பற்றியே பேசுபவை. கொண்டாட்டம், நகைச்சுவை என்பவை திரைப்படங்களில் பெற்றிருக்கும் வரவேற்பைப்போல் இலக்கியத்தில் பெறவில்லை. நெடுஞ்சாலை நாவல் முழுக்கவே நகைச்சுவை உணர்வு மிளிர எழுதப்பட்டுள்ளது. மேலோட்டமாக சிரிப்பை வரவைத்தாலும், அடியாழத்தில் மிஞ்சும் சோகமே நம் மனதில் எஞ்சி நிற்கும். அந்தவகையில்தான் ஆசிரியரும் எழுதியிருக்கிறார்.மேலும் ஆளுங்கட்சியினரின் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், சேவற்பண்ணை போன்று ஆண்களீன் ஓய்வறையில் சுதந்திரமாக ஒருவர் நிர்வாணமாகக் குளித்துவிட்டு ஆடை மாற்றுவது, தன் கணவன் ஓட்டுனராக இயங்கும் வேளையில் அதே வண்டியில் பயணம் செய்யத்துடிக்கும் மனைவி போன்ற பல துல்லியமான பதிவுகள். முதன்மையான கதாபாத்திரங்களான மூவரும் சேர்ந்து மதுவிடுதியில் மதுவருந்தும் கட்டம் மிகுந்த நகைச்சுவையை அளிக்கிறவகையில் அமைந்துள்ளதைப்போல் நாவல் முழுக்கவே அமைந்திருக்கிறது. நவீன இலக்கியம் என்கிற பெயரில் காமம் வெளிப்படும் தருணங்களை ,உடலுறவுக் காட்சிகளை, விலாவாரியாக எழுதித் தள்ளாமல் ,ஆசிரியர் நாசூக்காகவும், படிமங்களாகவும் எப்போதும் எழுதுபவர். அய்யனாருக்கும், சித்தாளுக்கும் இடையிலான காமம் கலந்த காதல் வாசகர்களின் நெஞ்சில் கனமாக உறைந்து நிற்கக் கூடியது.

அஞ்சலை நாவலைவிட அதிகப் பக்கங்கள் கொண்டிருந்தாலும் அஞ்சலையளவுக்கு கனம் இல்லையென்று கருதுகிறேன்.

(08-05-10 அன்று சொற்கப்பல் விமர்சனதளம் மற்றும் தக்கைச் சிற்றிதழ் ஆகியவை இணைந்து நடத்திய நாவல் விமர்சனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை) 
நன்றி‍ -தடாகம்

No comments: