இராசோவின் 70க்கும் மேலான
சிறுகதைகளைப் படித்து முடித்தபிறகு, (இராசேந்திர சோழன் கதைகள்,தமிழினி பதிப்பகம்) எனக்கு
நினைவில் மேலோங்கி நிற்பவை அவருடைய ’இல்லறவியல்’ கதைகளும், அவற்றில் வரும் பொறையுடைய
பெண்களுமேதான். ஆண்பெண் உறவின் சிக்கல், நெருக்கம் என்பது என்றென்றைக்குமானது. எல்லாத்
தேசங்களுக்குமானது.
முதல்
தோற்றம்

’இராசோ பாலியல் கதைகள் எழுதியவர்,பெண்களின்
காமம் பற்றி எழுதியவர்’ என்ற சில அறிமுகங்களோடு படிக்கத் துவங்கியவன் நான். அந்த முன்தீர்மானத்தோடு
படித்துக் கொண்டே போனபோது, ஒரு கட்டத்தில் ’என்ன இவர்? பெண்களை இப்படிச் சித்தரிக்கிறார்?
பெண்கள் ஆணிடம் கிடைக்கும் உடல்சுகம் என்ற
ஒன்றுக்கே முக்கியத்துவம் தருபவர்களா?, அந்த ஒன்றுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்
கொள்கிறவர்களா?’’ என்ற மேலோட்டமான எண்ணம் எழுந்தது. ’இடம்’ கதையில் வரும் கல்லூரிப்
பெண், வாயாடி, திமிர் பிடித்தவள்...தங்கள் வீட்டில் குடியிருக்கும் மெக்கானிக் இளைஞனை
அலட்சியப்படுத்துபவள்...ஒரு நாள் அந்த மெக்கானிக் இளைஞன் அவளை வன்புணர்வு செய்தவுடன்
அவள் அப்படியே அடங்கிப் போகிறாள். அவனிடம் திமிர் காட்டுவதில்லை, வம்பு வைத்துக் கொள்வதில்லை.மாறாக,
அடங்கி, ஒதுங்கிப் போகிறாள். ‘’ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே...ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே’’ என்ற சினிமாப் பாடல் வரி வேறு
நினைவுக்கு வந்து தொலைத்தது. கமலஹாசன் சாரங்கபாணியாகி காலைத் தூக்கி வைத்து அழுத்தமாய்
பாடுவதாகவும் மனதில் ஆடியது. ’அதுபோலல்லவா
இராசோவும் எழுதுகிறார்?!’. ‘இழை’ கதையில் வார்த்தைக்கு வார்த்தை கணவனிடம் வம்பிழுத்து
இழுபறி ஆட்டம் நடத்திக் கொண்டிருந்தாலும்,எல்லா வேலைகளையும் போலவே ’அந்த’ வேலையையும் இயல்பாய் நடத்துகிறாள் அவள். ’கோணல் வடிவங்கள்’ கதையில் கள்ளக் காதலனிடம் அவ்வளவு
அடிபட்டாலும் பொறுத்துப் போகிறாள். ’புற்றில் உறையும் பாம்புகள்’ கதையில் வரும் வனமயில்,எதிர்வீட்டுக்காரன்
தன்னைக் கண்காணிப்பதாக சீற்றம் காட்டுபவளாகவும், உண்மையில் அவள்தான் அவனை தொடர்ந்து
கண்காணிக்கிறாள், தன்னைக் கண்காணிப்பதற்கும் வாய்ப்பளிக்கிறாள். தன்னுடைய சினேகிதியைப்
போல தன்னால் எல்லை மீற முடியவில்லையே என்று உள்ளூரப் பொறுமுகிறாள். ’ஊனம்’கதையில் வரும்
சாந்தா, கணவனை மதிக்காமல் அவனுடைய கெஞ்சல்களுக்கும் கட்டுப்படாமல் ஆண்களோடு பழகி,அவளுடைய
கணவனின் தற்கொலைக்கு காரணமாகிறாள். ’நாய் வேஷம்’
கதையில் வரும் மனைவி, கணவனுக்கு தெரிந்தேயிருப்பதுபோல் ஊருக்கும் தெரிந்தே சோரம் போகிறாள்.
’சூழல்’ கதையில் வரும் பெண் தொடர்ந்து கள்ள உறவு வைத்துக்கொள்கிறாள். தோது கதையில்
வரும் பொன்னம்மாவின் மகள் படிக்கும் வயதிலேயே கர்ப்பம் தரித்து நிற்கிறாள். இவ்வாறாக,
இராசோவின் கதைமகளிர் காமாந்தகிகளாகவோ, அல்லது காமத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள்.மனத்தில்
காமம் உள்ளவர்கள், செயலில் காமம் உள்ளவர்கள், காமத்தில் ஒழுக்கம் மீறுபவர்கள்...இவ்வாறு
வாசித்துக் கொண்டே போகும்போது ’ருசிப்பு’ கதை வாசிப்பின்போதுதான் எனக்கு ஒரு திறப்பு
கிடைத்தது. (ருசிப்பு கதை அதற்கானது அல்ல.எனக்கு அந்தக் கதையின் வாசிப்பின்போதுதான்
நேர்ந்தது)
இரண்டாம்
தோற்றம்
உண்மையில்,இராசோ பெண்களை பெருமைப்படுத்தியே,
உயர்வாகவே எழுதியிருக்கிறார்.ஆண்-பெண் என்ற இருமையை ஒட்டிக் காட்டி, அந்த இரண்டுக்கும்
உள்ள வேறுபாடுகளை உணர்த்துகிறார். அந்த வகையில் ஆண்களை இடித்தும், பெண்களை உயர்த்தியுமே
எழுதியிருக்கிறார்.
அவருக்கு அங்கீகாரம் அளித்த முதல் கதையான
‘எங்கள் தெருவில்’ இடம்பெறும் பவுனாம்பாள் அளிக்கும் சித்திரமே இவருடைய எல்லா பெண்
கதாபாத்திரங்களுக்கும் பொருந்துகின்ற ஒரு முன்னோடியாக அமைந்துவிட்டது என பொதுமைப்படுத்தலாம்.
அதாவது, முதல் பார்வைக்கு எதிர்மறையான தோற்றம் காட்டுவதும், அதன்பிறகே நல்லவிதமான தோற்றம் புலனாகும்படியும் அமைந்துவிட்ட
பெண்கள்.’ரோதனை’ கதையில் வரும் சண்டைக்காரியான, வாயாடிப் பெண்தான் ஒரு கர்ப்பிணியின்
வாந்தியைக் கழுவித் துடைத்து கரிசனம் காட்டுகிறாள். ’இழை’ கதையில் வரும் அந்த அவள்,
‘’உங்களுக்கென்ன ! வேளாவேளைக்கி பொண்டாட்டியும் சாப்பாடும் இருந்துட்டாப் போதும்’’
என்று அவனைப் புரிந்துகொண்டு, அதற்காகவே அவனுக்குப் பரிமாறுபவள். ’ருசிப்பு’ கதையில்
வரும் பெண்ணும் கணவனை அவன் இல்லாதபோது திட்டித் தீர்க்கிறாள்.சன்னதம் கூடிக்கொண்டே
போகிறது.ஆனால், அவனைக் கண்டதும் அத்தனையும் வடிந்து போகிறது.
’’ ஐய,
த! கைய வச்சிக்கினு சும்மா இரு.பசங்க எதுர்க்க..’’ என்று குழைகிறாள். இரண்டுமே உண்மைதான்.முதல்
நிலை அவளுடைய ஆற்றாமை.இரண்டாவது நிலை அனுசரணை.
தற்செயல் கதையில் வரும் வத்சலாவுக்கு தன்னைவிட
அந்தஸ்து குறைந்த செல்வராசு தனக்குக் கணவனாக முடியாது என்று எண்ணி அவனிடம் அவனைப்போல்
காதலேதும் இல்லாமல் , காமத்தை ஒரு விளையாட்டாக, நிகழ்த்திக் கொள்கிறாள்.//அவளுக்கு
அது என்ன ஏதென்று புரியாத ஒரு பழக்கம்.சின்னக் குழந்தைகள் தின்பண்டத்திற்கு ஆசைப்படுவது
மாதிரி.மனசில் எந்தவிதச் சிராய்ப்பும் இல்லை.எப்போதும் போலவே இருக்கிறாள்.அவன் ரொம்பக்
கரைந்து போயிருப்பதைக்கூட அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை//.ஆனால், வருங்கால கணவனுக்கு
உண்மையாகவும், பொறுப்பாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள்.
புற்றிலுறையும் பாம்புகள் கதையின்
வனமயில் மனதில் காமவிழைவு இருந்தாலும், ,ஊருக்கும் பேருக்கும் அஞ்சி வாழ்பவள். ’இடம்’ கதையில் வரும் கல்லூரிப்பெண்ணும்,
அவளுக்கு நேர்ந்த வன்புணர்வை எளிதாக எடுத்துக் கொள்ளமுடியாதவளாக இருக்கிறாள்.அவளை வன்புணர்வு
செய்த மெக்கானிக் இளைஞன், அவளைப் பழி தீர்த்துவிட்டதாக எண்ணி, அதோடு அந்தச் சம்பவத்தை
எளிதாகக் கடந்துவிடுகிறான். அவளால் அப்படி கடக்கமுடியவில்லை.அவள் அந்த ‘உண்மையை’ உள்ளுக்குள்
வைத்துக்கொண்டு மனப்போர் நடத்திக் கொண்டிருக்கிறாள். நாய்வேஷம் கதையில் வரும் பெண்,
‘இயலாத’ கணவனை மணந்துகொண்டு, ஈடேற்றுவதாகவே
பிழைப்பு நடத்துகிறாள்.’ஊனம்’ கதையின் சாந்தா,கணவனின் தற்கொலைக்குப் பிறகு விபரீதம்
உணர்ந்தவளாக இடிந்துபோகிறாள்.
’இடம்’ கதையில் வரும் இன்னொரு பெண்
சாந்தா,தன்னிடம் அத்துமீறும் மெக்கானிக் இளைஞனை, பொறுத்துக் கொண்டு, மன்னித்து, தோழமையை
தொடர்பவள்.
சொல்லப்பட்ட விதத்தில் ‘சூழல்’
கதைதான் சற்று பாலியல் கதைபோல் அமைந்துவிட்டது என்பது என் எண்ணம். என்றாலும், அந்தக்
கதை கவனப்படுத்துவது 1.அவள் அந்த இளைஞனிடம் கொள்ளும் கரிசனமும், மற்றும் 2.அவளுடைய
கணவன் நடந்த தவறை உணராமலும், 3.நடக்காத தவறுக்காக கொடுமைப்படுத்துவதுமாக நேர்ந்துவிட்ட
விசித்திரத்தைச் சொல்லும் உளவியல் கூறுகளையும் சுட்டிக் காட்டுவதுதான்.
இராசோவின் கதைமகளிர் ’’எதுவொண்ணும்
மனசுல வக்யாதவர்கள்’’. சகிப்புத் தன்மை கொண்டவர்கள். அவர்களுடைய ஆத்திரமும், புலம்பல்களும்
அவர்களுக்கு ஒரு வடிகால் மட்டுமே. அவர்களுடைய தொணதொணப்புகளை கேட்பதற்கு ஆட்கள் கூட
யாரும் தேவையில்லை. (கடவுளிடம் முறையிடுகிறார்கள் போலும்). தானாகவே, எதிரில் யாரோ இருப்பதுபோல் கொட்டித் தீர்த்து
இளைப்பாறிக் கொள்வார்கள்.
ஆண்கள் பெண்களைச் சுரண்டுபவர்களாகவும்,
பகல்தூக்க சொகுசுக்காரர்களாகவும்,சீட்டாடுபவர்களாகவும், பொய்யர்களாகவும், ஆணுக்கு ஒரு
நீதி பெண்ணுக்கு வேறு நீதி என்ற ஆதிக்க மனம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
செம்பாகம்
அன்று பெரிது
காமத்தைத்
தூண்டும் பாலுறவு விவரிப்புக் கதைகளாக அல்லாமல், காமத்தை ஆராயும் உளவியல் நுட்பங்கள்
கொண்ட கதைகளே இராசோ எழுதியுள்ளார்
காமம் என்பது உயிர்களின் அடிப்படையான, இயற்கையான
ஒரு விழைவு, மற்றும் செயல். உயிர்களின் வாழ்வில் காமத்தின் பங்கு பெரிது. எனவே, காமத்தைப்
பற்றி பேசுவதோ, கதை எழுதுவதோ, ஆராய்வதோ தவிர்க்கப்பட வேண்டியது அல்ல. அம் மாதிரியான
கதைகளை துணிந்து, வெளிப்படையாக எழுதியிருப்பது இராசோவின் துணிச்சலையும்,வெளிப்படைத்
தன்மையுமே காட்டுகிறது. காமம் நோயோ, குற்றமோ
அல்ல.அளவில் கூடும்போதும், குறையும்போதும்தான் அது நோயாகவோ, குற்றமாகவோ மாறுகிறது.மனிதன்
விலங்குகளினும் பகுத்தறிவால் பண்பட்டவன். அவன் உருவாக்கிய ’உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல்’
மீறிச் செல்வதே குற்றமாகிறது. இந்த உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது,ஒரே புவிக் கோளத்தில்,
ஒரே காலத்தில், வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மனிதர்களுக்கு வெவ்வேறாக இருப்பதையும்
கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஒழுக்கம்,பண்பாடு,சட்டங்கள் போன்றவை காலத்திற்கு காலம் மாறுவதுமாகவே இருக்கின்றன என்பதையும்
பார்க்க வேண்டும். அதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது ஆணாதிக்கம்.
இதன் அர்த்தம், கற்பு நிலை என்ற ஒன்றை வலியுறுத்தினால், இருபாலருக்கும் பொதுவாக வைப்பதுதான்
நியாயம் என்பதே. நீதிமன்றங்களில் தொடரப்படும் குடும்ப நல வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக்
கொண்டே போகும் காலத்தில் தனபாக்கியம் போன்ற பெண்களும் அவள் கணவனைப் போன்ற ஆண்களுமாக
எல்லாருமே இருந்துவிட்டால், நிறைய சிக்கல்கள்
’ரவ’ நேரத்தில் தீர்ந்துவிடும்.
இராசோவின் ஆண்-பெண் கதைகள், தனிமனிதர்களின்
வாழ்விலும், சமூகத்திலும் காமத்தின் பங்கு எவ்வாறு, என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது?
அவற்றுக்கான கடந்தகால வரலாறு என்ன? வருங்காலத் தீர்வுகள் என்ன? என்பன போன்ற சிந்தனைகளையும்
செயல்பாடுகளையும் கேளிவிக்குட்படுத்தி விசாரணைகளை
முன்வைப்பதாகவே அமைந்துள்ளன.
இராசோவின் கதைகள் எளிமையாக சொல்லப்பட்டவை
என்றாலும், வாசகனின் பங்கேற்பை கோரும் நுட்பங்களும், பல்வேறு சாத்தியங்களையும் கொண்டவை
என்பதால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோருபவையும்கூட. அரசியல் இயக்கம், சமூக விமர்சனக்
கதைகளென்று சொல்லத் தக்கவையாக மற்ற கதைகளையும் இராசோ எழுதியிருக்கிறார். என்றபோதிலும்
ஆண்பெண் உறவு பற்றி எழுதிய கதைகளே அவருக்கு
ஒரு தனித்தன்மையையும், அடையாளத்தையும், புகழையும் ஏற்படுத்திவிட்டிருக்கிறது
-ச.முத்துவேல்