Friday, December 13, 2013

திரையில் காணமுடியாத மீதிகள்        தமிழ் பேசும்படத்திற்கு வயது 80 ஆண்டுகளைத் தாண்டுகிறது. துவக்க காலங்களில் எடுக்கப்பட்ட படங்கள் பலவும் இன்று கிடைக்காத நிலையில் அழிந்தேபோய்விட்டன. எம்.ஜி.ஆர் ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது, தான் நடித்த பழைய படங்களை அழிவிலிருந்து மீட்க முயற்சியெடுத்தும், அவராலேயேகூட பெரியளவில் வெற்றிபெற முடியவில்லை.  இவ்வாறான சூழலில், முதல் பேசும் படத்திலிருந்து அவற்றின் விவரங்களை அறிந்துகொள்ள பாட்டுப் புத்தகங்கள், அப்போதைய பத்திரிக்கைகள்,  சினிமா இதழ்கள் போன்றவை பெரும் உதவி புரிகின்றன. இவற்றை சேகரித்து வைத்திருக்கக்கூடிய தனி நபர்களையோ, நூலகங்களையோ  நாடினாலும், அவை ஒரு வரைபடத்தைப்போல மட்டுமே எஞ்சும். பாட்டுப்புத்தகங்களில் கதைச்சுருக்கங்கள் பெரும்பாலும் முழுக்கதையைச் சொல்லாமல் மீதியை வெள்ளித் திரையில் காண்க என்று போக்குக்காட்டி முடிந்துபோய்விடுகிறது.

        இவ்வாறான சூழலில், படங்களை அந்தக் காலத்திலிருந்து பார்த்து அனுபவித்தவர்கள் கிட்டத்தட்ட 90 வயதுக்காரர்களாக இருக்கவேண்டும். அதிலும் அவர் கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் பார்த்திருக்கக் கூடியவராகவும், அவற்றைப் பற்றிய விவரங்களை தெரிந்தவராக, குறிப்புகள் எடுத்தவராக, நினைவாற்றல் உள்ளவராகவும் இருக்கவேண்டும். பொதுவெளியில் வைக்க அவருக்கு எழுத்தாற்றலோ, வாய்ப்புகளோ இருக்கவேண்டும். இவ்வளவு அரிய வாய்ப்புகளையும் ஒருங்கேப் பெற்றவராக, கூடிவந்த அரிய நன்மையாக விட்டல்ராவ் விளங்குகிறார். அதன் சான்றே  ,  நிழல் இதழில் அவர் எழுதிய சினிமாக் கட்டுரைகளின் தொகுப்பு நூலான தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்.
      விட்டல்ராவ் திரைத்துறையைச் சேர்ந்தவரோ, திரையியல் ஆய்வாளரோ அல்ல. தொலைபேசித் துறையில் பணிபுரிந்தவர் தன்னுடைய அன்றாடங்களிலிருந்தே இந்நூலை அனுபவித்து, தொகுத்திருக்கிறார். சிறுவயது முதலே  படங்களை நாட்குறிப்புகளாக எழுதிவந்திருக்கிறார். மேலும் தன்னுடைய வளமான நினைவாற்றலின் துணைகொண்டும் சாத்தியமாக்கியிருக்கிறார். படத்தின் கதையை உள்வாங்கி, நாட்குறிப்புகளில் கதைச்சுருக்கத்தை சிறுசிறு கதாபாத்திரங்களின் பெயர்களோடும், பதிவு செய்திருந்திருக்கிறார். இந்தப் பழக்கமே அவரை ஒரு எழுத்தாளராக வளர்த்தெடுத்தது என்று எண்ணத் துணியலாம். இவற்றையெல்லாம் செய்த சிறுவன் விட்டல்ராவை, வியப்பும் அன்பும் மேலிட்டு ,  ஆவிதழுவி உச்சி முகரத் தோன்றுகிறது.
           1935-1950வரை கிட்டத்தட்ட எல்லாப் படங்களையுமே பார்த்து,  பரந்த வாசிப்பனுபவத்தோடு சேர்த்துப் பதிவு செய்திருக்கிறார்.  நடிகர்களோடு நின்றுவிடாமல், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களைக்கூட பதிவு செய்திருக்கிறார்.படம்பார்க்கும்போதே திரையரங்கிலேயே உட்கார்ந்து குறிப்புகள் எடுத்திருப்பாரரோ !  இத்தோடும் நின்றுவிடவில்லை. அந்தக்கால கதாநாயகனான ஹொன்னப்ப பாகவதர், மாடர்ன் தியேட்டர் தொழில்நுட்பக் கலைஞர் B.V.மோடக் போன்றவர்களிடம் நேரடிப்பழக்கம் விட்டல்ராவுக்கு இருந்திருக்கிறது.  படங்களின் வெற்றி தோல்வி நிலவரம், வெளியான அந்தக் கால சூழல்கள், சிக்கல்கள் ஆகியவற்றையும் உற்றுக் கவனித்து எழுதியிருக்கிறார்.
              விட்டல்ராவ் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பதால், அவர் எழுதியிருக்கிற விதமும் சிறப்புக்குரியது. படங்களை வகைப்படுத்தும்போது தனிநபர்களின் அடிப்படையிலோ, சார்புடையவராகவோ எதையும் செய்யாமல் படங்களை, அப்படங்களின் தன்மையிலேயே வகைப்படுத்தி எழுதியிருக்கிறார். எம்.கே.டி, பி.யு.சின்னப்பாவுக்கும் முந்தைய கலைஞர்கள்,  நடிகர் கே.பி.கேசவன், இசையமைப்பளர் ரங்கசாமிநாயகர் போன்றவர்களையும்கூட கவனித்து எழுதியிருப்பதால், விடுபடல்களே இல்லையெனலாம்.
இந்நூல் ஏதோ திரையியல் ஆய்வாளர்களுக்கு மட்டுமோ, ரசிகர்களுக்கு மட்டுமோ என்று எடுத்துக்கொண்டு விடமுடியாது.ஏனெனில், அந்தக்கால அரசியல், சமூகப் பின்னணிகளும் பதிவாகியிருப்பதால் எல்லோருக்குமான நூல்.
புகைப்படங்கள் நிறைந்த அரிதினும் அரிதான இந்நூலுக்கு சமூகம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது.நீடூழி வாழ்க... விட்டல்ராவ் !
தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்- விட்டல்ராவ்
நிழல்
31/48, இராணி அண்ணாநகர்,
கே.கே. நகர், சென்னை – 78
பக்கங்கள் 230
விலை ரூ.100

 நன்றி: தி இந்து நாளிதழ் 08.12.2013, மண்குதிரை