Saturday, April 4, 2009

இரவுக்கு முன்பு வருவது மாலை (தொடர்ச்சி)


இயலாத, எளிய ஒருவனுக்கு ஏற்படும் ஆத்திரம், நிர்ப்பந்தங்கள், இன்னல்கள், உணர்வுகள் ஆகியவற்றைப் பகிரும் கதை இது. பிரதிபலன்எதிர்பார்த்து காட்டப்படும் அன்பும் அதிலுள்ள போலித்தனமும் கணபதிக்குஅயர்ச்சியை,வெறுப்பையே ஏற்படுத்துகிறது.பின் இவற்றையெல்லாம் வேறுவழியில்லை என எண்ணியவனாய், தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களாய், தன்னுடைய நிழலாய், மனம் ஒட்டாமல் ஏற்றுக்கொள்கிறான். வேறுஎன்னதான் செய்துவிட முடியும் கணபதி என்கிற ஒரு கீழ் மட்டத்துஊழியனால்?
இசக்கிபிள்ளை, காந்திமதியை பால்யகாலத்திலிருந்தே நேசிக்கிறார். காந்திமதிக்குப் பிடிக்கும்படியாக, அவளை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவே தன் போக்குகளை மாற்றிக்கொள்கிறார். பெரியவர்களாகும்போது, காந்திமதிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்துவிடுகிறது.இசக்கிப் பிள்ளைக்கு வாழ்வே வெறுத்துப்போகிறது. ஆனாலும், காந்திமதியின் மேல் அவருக்கிருக்கும் அன்பு ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்கிற பாணியில் மனதைத் தேற்றிக்கொண்டு வாழ்வைத் தொடர்கிறார்.தானும் மணம் முடித்துக்கொள்கிறார்.மனைவியையும் பரிவோடு கவனித்துக்கொள்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு இசக்கிப் பிள்ளையின் மனைவி இறந்துவிடுகிறாள். இருந்தபோதிலும், காந்திமதியை நெஞ்சில் சுமந்து கொண்டு, அவளிடம், இன்னமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற அதே சிறு பிள்ளைக் காலந்தொட்ட எண்ணத்தோடு, நல்ல காரியங்களில் ஈடுபட்டுக்கொடும், மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இவ்வாறான ஒரு நாளில்தான், தன் அன்புக்குரிய காந்திமதி வாழாவெட்டியாக வாழ்கிறாள் என்று அவருக்கு அறிய நேருகிறது.குழந்தை இல்லை என்கிற காரணத்தால், காந்திமதியை அவளின் கணவன் தள்ளி வைக்கிறான்.வேறு திருமணமும் செய்துகொள்கிறான்.இச்சங்கதிகளை அவரிடம் சொன்னவனே இன்னொரு தகவலையும் சொல்லிவிட்டுப் போகிறான். அது,இசக்கியாப் பிள்ளையை , காந்திமதி சந்திக்க விரும்புகிறாள் என்பது.இசக்கியாப் பிள்ளைக்கு என்னவென்றே அறியமுடியாத உணர்வுகள் ஏற்படுகிறது.தன்னை மலை என்றும் , காந்திமதியை நதி என்றும் உருவகித்து எண்ணங்களை சிந்திக்கிறார். கடைசி பத்தி இப்படி முடிகிறது.
“மலை நதியிடம் போகிறதா” என்று பிள்ளை நினைத்தார். அவருக்கு சிரிப்பு வந்தது. நான் மலையல்ல. வெறும் மனிதன். ஆதரவு தருவதற்காக அல்ல. ஆதரவு பெறுவதற்காகச் செல்கிறேன்.” என்று அவர் நினைத்தார்.
கொஞ்சம் பூ படக் கதாநாயகியை நினைவுப்படுத்தும் அன்பு இவருடையது.
லல்லி வேலை கிடைத்து வேலைக்குச் செல்கிறாள்.அங்கு வேலை செய்யும் சக ஊழியனான செல்வராஜ் என்பவனை நேசிக்கிறாள்.ஒரு கட்டத்தில் தொழிற்சங்கத் தலைவியாகிறாள். காதல் விலகிப்போகிறது. கதையின் கடைசி வரைப் படித்து முடித்தபிறகே, தலைப்பு புரியத் துவங்குகிறது.மிக இனிமையாக நகரத் தொடங்கும் காதல், முறிந்துபோவது வாசகர்களுக்கே வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
இந்தக்கதை என் வாழ்வனுபத்திற்கு சற்றுப் பொருந்தி வருவதாலோ என்னவோ, மிகவும் பிடித்திருந்தது. மிக இயல்பான நடை என்பதைக் குறிப்பிட வேண்டும். அலுவலகங்களுக்குள் இருக்கும் அரசியல், அதாவது மனிதர்களுக்குள் இருக்கும் அரசியல் நன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெண்கள் வேலைக்கு செல்லத் துவங்கிய காலக்கட்டத்து (சற்று பிறகு) கதை எனலாம்.ஒருதலை ராகம் திரைப்படம் வந்த காலக்கட்டம் என்பது கதைக்குள்ளாகவே வரும்.1982 ல் கதைக்கதிரில் வெளியானதாம்.அவ்வாறு ஒரு பெண் வேலைக்குச் செல்வதால், அவளை மற்றவர் எப்படிப் பார்க்கின்றனர், குடும்பத்தார் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நன்றாகவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இக்கதையும் ஒரு பெண்ணையே மையப்படுத்தி, அவளின் மனவோட்டங்களைச் சித்தரிப்பதாகவே நகர்கிறது. இது மேற்சொன்ன காரணங்களினாலேயே எனக்கு ஆச்சரியமளிக்கிறது. நேர்மையானவனாக காட்டப்படுகிற செல்வராஜ் சங்க வேலைகளில், சந்தர்ப்ப சூழலால் செயல்பட நேர்கிறது.ஆனால், சில வருடங்களுக்குப் பின், அதிலிருந்து விடுபட விரும்புகிறான். இத்தனைக்கும் ஒரு நல்ல தலைவனாகவே, நிறைவுடன் பணியாற்றியவன்தான். ஆனாலும் இதுபோன்ற சாகசங்களில் விருப்பமில்லாததாலும், யாருக்காக உழைக்கிறோமோ, அவர்களிடமே நல்ல பெயரும், திருப்தியான உறவுமுறையும் இல்லை என்கிற வருத்தத்தில், இது நமக்கான பாதை அல்ல என்று விலகுகிறான். இச்சமயத்தில்தான், லல்லி தலைவியாக்கப்படுகிறாள். செல்வராஜுக்கு இதில், உடன்பாடான எண்ணம் இல்லையென்றாலும், அவளின் சுதந்திரத்தில் தலையிட விரும்பாதவனாய், திணிக்க விரும்பாதவனாய், அவளின் எண்ணத்தை, போக்கை வரவேற்கிறான்.கொஞ்சம் ஒதுங்கவும் செய்கிறான்.லல்லி இப்படி நினைக்கிறாள்.” அவளுடைய புதிய உருவத்தைக் கண்டு அவன் பயப்படுகிறான்.அவன் வேண்டுவது காவியங்களில் வரும் தலைவனே உயிரென வாழும் தலைவி. அவளைப் போன்று மேடையில் பேச விரும்பும் தலைவி அல்ல”
ஆனால், செல்வராஜின் தரப்பு விளக்கப்படாததும்,பிறகான நாட்களில், தலைவியான லல்லி, தலைவியானதற்காக வருத்தப்பட்டாளா அல்லது பெருமை பெற்றாளா என்பதெல்லாம் சொல்லப்படாமலேயே கதை முடிகிறது.
எல்லாமே நல்ல கதைகள் என்கிற ஒரு நிறைவு ஏற்படுகிறது.


Thursday, April 2, 2009

இரவுக்கு முன்பு வருவது மாலை


1

எழுத்தாளர் ஆதவன் அவர்களின் எழுத்துக்களை இதற்கு முன் நான் படித்திருக்கிறேனென்றால், அவர் எழுதிய நூல்களின் சில தலைப்புக்களை மட்டும்தான் சொல்லலாம். இப்படியொரு சூழ்நிலையில் நான் படித்ததுதான், இரவுக்கு முன்பு வருவது மாலை என்கிற அவரின் குறு நாவல் தொகுப்பு. மொத்தம் ஆறு குறு நாவல்கள்.

1. இரவுக்கு முன்பு வருவது மாலை

2. சிறகுகள்

3. மீட்சியைத் தேடி

4. கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்

5. நதியும் மலையும்

6. பெண், தோழி, தலைவி.

இவற்றில், ”பெண், தோழி, தலைவி” என்கிற கதை வேறெந்தத் தொகுப்புகளிலும் இடம்பெறாதது.கிட்டத்தட்ட 1960 களுக்குப் பிறகான காலக்கட்டங்களில் எழுதப்பட்டவை இவை அனைத்தும் என்று அறிய நேருகிறபோது சற்று ஆச்சரியமாகத்தானிருக்கிறது. காரணம், புதுமையும், இளமையான எழுத்து நடையும் தான். லேசான நகைச்சுவை உணர்வும் விரவிக் கிடக்கிறது.

ஒரு கலங்கிய குட்டை, பிறகு தெளிவடைவதைப்போல, கிட்டத்தட்ட எல்லாக்கதைகளிலுமே, கதை மாந்தர்கள் தெளிவு பெறுகிறார்கள். அவ்வகையில், இக்கதைகள் அர்த்தமுள்ளவை.

ஆசிரியர் புதுதில்லியில் இருந்திருக்கிறார் என்பதால், இவரின் இந்த குறு நாவல்களில் எந்த வகையிலாவது புது தில்லி இடம் பெறுகிறது. (பாலசந்தர் படங்களில் பாரதியார் வருவது போல) நடுத்தர, அலுவலக ஊழியர்களின், வாழ்வை அனுபவித்துச் சித்தரிக்கிறார்.


சிறகுகள்

ஒரு இளம்பெண்ணின் கடைசிக் கல்லூரி நாளோடுத் துவங்கும் இக்கதை, அவளின் திருமண நாளுக்கான முந்தின இரவு வரை நடைபெறும் காலக்கட்டத்தைச் சித்தரிக்கிறது.இக்கதையைப் படிக்கும்போது, எனக்கு கண்மணிகுணசேகரனின் அஞ்சலை படித்த நினைவு லேசாய் வந்து போனது. காரணம் இரண்டு அம்சங்கள்.

1.ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண்ணின் மன ஓட்டங்களை நுட்பமாகச் சித்தரித்திருப்பது.

2.கதை நகர்வுக்கு ஒட்டிய தத்ரூபமான காட்சி விவரணைகள்.

நான் நிறையப் படித்தது இல்லை என்பதால் எனக்கு இப்படி மட்டுமே ஒப்பீடு எழுகிறது. ஒரு வகையில் இக்கதை பெண்ணிய எழுத்து என்றால், மறுக்கமுடியாது. ”அம்மா என்பவள் வீட்டுவேலைகளுக்கெல்லாம் மேலே, வீட்டைக் காவல் உத்தியோகம் வேறு செய்கிறாள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. பெண்களேக்கூட என்ன செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டால், ”வீட்டில்தான் இருக்கிறேன், சும்மாதான் இருக்கிறேன்” என்று சொல்கிறார்கள். ஆனால், வீட்டு வேலைகளையும், வீட்டைக் காவல் காப்பதையும் பெண்கள் செய்யும் உத்தியோகம் என்கிறார் ஆசிரியர்.சிறகுகள் என்கிறத் தலைப்பு ,ஒரு பெண், பிறந்த வீட்டிலிருந்து, புக்ககம் செல்வதற்கானக் காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டும் வகையில், சொல்லப்பட்டிருக்கிறது.அதே சமயம் பெண் விடுதலைக்கான காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைகிறது. வளர்ந்துவிட்டப் பையனுக்கும், தந்தைக்கும் இருக்கும் நெருக்கத்தைவிட மகள்- தாய் நெருக்கம் அன்னியோன்யமானதும், கூடுதல் அந்தரங்க நெருக்கம் கொண்டதாகவும் இருக்கும் என்கிற யதார்த்தத்தை, இக்கதையில் இயல்பாகக் காணமுடியும். அதேபோல், ஒரு பதின் வயதுப் பெண்ணின் மன ஓட்டங்கள், திருமணம், காதல் குறித்த ஏக்கங்கள், கனவுகள், அச்சங்கள் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் நடைபெறும் காட்சிகள், அவரவர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு, மிக இயல்பாக கதை நகர்த்தப்பட்டுள்ளது.ஒரு காட்சியில், கதையின் நாயகியை எதிர் வீட்டு இளைஞன் பார்ப்பான். அவள் நேராக வீட்டிற்குள் சென்று கண்ணாடியைப் பார்த்துக்கொள்வாள். உடனேயே,” எதற்காக நான் இப்படிப் பார்த்துக்கொள்கிறேன்?அவன் என்னைப் பார்த்தபோது நான் எப்படி இருந்தேன் என்று தெரிந்துகொள்ளவா?”

இதுபோல், ரசனைக்குரிய, உளவியல் உண்மை சார்ந்த காட்சிகள் பரவலாகத் தென்படுகிறது. வேலைக்குச் செல்வது அலுப்பான செயல் என்றும், அதற்குக் காரணம் நிர்ப்பந்தம்தான் எனும் விவரணையும் அப்பாக் கதாபாத்திரத்திலன் மூலம் சொல்லப்பட்டிருக்கும்.


இரவுக்கு முன்பு வருவது மாலை

இக்கதை படித்து முடித்தது பாலசந்தர் அவர்களின் படம் ஒன்று பார்த்ததுபோல் இருந்தது.அவரின் நவீனமான மனிதர்கள், பழக்கங்கள், புதுமை, என்று பல அம்சங்கள் இவ்வாறு நான் எண்ணிக்கொள்ள காரணமாகலாம்.

தனித்தன்மையான, ரசனையான ஒரு ஆணும், பெண்ணும் விளையாட்டாக(விதியின் ?) சந்தித்துக்கொள்கிறார்கள்.அவர்கள் புதிதாகச் சந்தித்துக்கொள்வதால், ஒருவருக்கொருவர் கதையினூடே அறிமுகமாகும்போது, வாசகர்களுக்கு சேர்ந்து அறிமுகம் ஆகிறார்கள். இரு intelectuals சந்தித்துக்கொண்டதும் நெருங்கிப் பழகுகிறார்கள். புகைப் பிடிக்கிறார்கள்.கட்டிப் பிடிக்கிறார்கள். முத்தம் கொடுக்கிறார்கள். நீச்சல் குளத்திற்குச் சென்று நீந்துகிறார்கள்.எனவே, படிப்பதற்கு விறு விறுப்பாகயிருக்கிறது.கடைசியில், எதுவரைப் போகிறார்கள், போனார்களா இல்லையா என்கிற ஆவலே படித்துமுடிக்க வைத்துவிடும். இருவரின் மனவோட்டங்களும் மாறி மாறி விவரிக்கப்பட்டும்,கதைக்குள் கதைகளாகவும்,கற்பனைகளாகவும் நீள்கிறது. இருவருமே சற்று அசாதாராணமானவர்களாக இருப்பதால், இவர்களின் உரையாடலில் பல சுவாரசியமான தெறிப்புகள்.கதை சட்டென்று முடிந்துவிடும்.

அசாதாராணமான நிகழ்வுகள், மனிதர்கள் என்பதாலேயே இக்கதை ஒரு தனி அனுபவம். நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்வேன்.


மீட்சியைத் தேடி

புது தில்லியிலிருந்து தன் சித்தப்பா வீட்டிற்கு வருகிறான், சங்கர்.மாநகர சூழலிலேயே

வளர்ந்த அவனுக்கு ஏனோ அந்த நவ நாகரிக வாழ்க்கையும்,அது தரும் போலியான வேடங்களும், நிர்ப்பந்தங்களும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தஞ்சாவூர் வந்திறங்கி, பேருந்தில் பயணிக்கும்போது, கருப்பான நிறமுடையவளாய், காவியேறிய பற்களுடனிருக்கும் இளந்தாய் ஒருத்தியிடம் கூட ஏதோ ஒரு அழகு இருப்பதாய்க் கருதும், உணர்வெழுச்சிப் பெற்ற நிலையில் இருக்கிறான்.

இவ்வாறான, மனவெழுச்சிப் பெற்ற சுழலில், சித்தப்பா வீடிருக்கும் திருவையாறும், சித்தப்பாக் குடும்பத்தினரின் எளிய வாழ்க்கை முறையும்,கிராமம் சார் நிலங்களும், காவிரியும்

அவனுக்கு மிகவும் பிடித்துப்போகிறது.அக் கிராம வாழ்வை அவன் நேசிக்கத்தொடங்குவதோடு, அதற்காக ஏங்கவும், வருந்தவும் செய்கிறான். பின் ஊருக்குப் புறப்படும்போது தெளிவு பெற்றவனாய், உற்சாகமாய் திரும்புகிறான்.திருவையாற்றில் அவனுக்கு ஏற்படும் நிகழ்வுகளும், சித்தப்பாவுடனான கலந்துரையாடலும் என ஒட்டுமொத்தமாய் அவனுக்குள் சலனத்தை ஏற்படுத்தி, ஒரு தெளிவுக்கு இட்டுச் செல்கிறது.

நல்ல கதை. எளிய வாசகனுக்கும், பிடிக்கக்கூடிய வகையில், திருப்புமுனையோடு அமைந்த கதை.

(தொடரும்…)