Monday, March 30, 2009

யாத்ராவை தெரிந்துகொள்ளுங்கள்அய்யப்ப மாதவனின் நிசி அகவல் விமர்சனக்கூட்டத்திற்குப் போயிருந்தபோது,அங்கு சந்தித்துக்கொண்ட படைப்பாளிகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டதைப் பார்த்தபோது,”இதென்ன? கொஞ்சம் அதிகப்படியா இருக்குதே! அப்படியே மேலை நாட்டுக் கலாச்சாரத்தை இதுலயும் கடைபிடிக்கறாங்களே?” அப்படின்னு நினைச்சேன்.ஆனா,இப்பதான் புரியுது,அதிலுள்ள அர்த்தம்.(இது மாதிரி நான் புரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது). யாத்ராவை நான் இப்போது நேரில் சந்தித்தால் நானும் அப்படித்தான் ஆரத் தழுவுவேன்.இப்போதைக்கு மானசீகமாய்.

குரு சுந்தர்ஜி கூட இவரை அறிமுகப்படுத்தி எழுதியிருந்தபோது, ‘நாமெல்லாம் இவர் கண்ணுக்கு ஏன் தெரிய மாட்டேங்கறோம்னு’ சின்னப்புள்ளத்தனமா யோசித்துப் பொறாமைப் பட்டேன்.ஆனா, அதுதான் குரு. சரியான கண்டுபிடிப்பு.

வலையுலகம் பக்கம் இப்போதுதான் வந்திருக்கும் இவர் வருகைக்கு நாமெல்லாம் மகிழவேண்டும். களிப்பு ஏற்படுத்தும் படைப்புகளை எழுதுபவர்கள் ஒரு ரகம்.மெல்லிய உணர்வுகள், தக்கையாய் மனதை மிதக்கவைக்கும் ரசனையான படைப்புகளை எழுதுபவர்கள்.

வலியை, அதிர்வுகளை, நிலைகுலைவை ஏற்படுத்தும் படைப்பாளிகள் ஒரு ரகம்.வலிகள்தான் நிறைய படைப்பாளிகளுக்கான பொதுவான அம்சமாக, அவர்களை எழுதவைக்கும் காரணியாக அமைந்திருப்பதை நான் பலரிடத்தில் பார்த்திருக்கிறேன்.இதுவே, அவர்களின் காத்திரமான படைப்புகளுக்கு அடித்தளம்.யாத்ராவின் கவிதைகளும் வலி மிகுந்ததாய்,அதிர்வுகளை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. இது பொதுவான ஒரு பார்வைதான். ரசனையான மற்றும் பலவிதமான கவிதகளையும் இவர் எழுதியுள்ளார்.
நிறைய படித்திருக்கிறார். வாசிப்பில்மிகத் தேர்ச்சி பெற்றவராயிருக்கிறார். ஒரு படைப்பாளியாய் இருப்பதினும் பெரியது, தேர்ந்த ஒரு வாசகனாய் இருப்பது. இதன் அருமையும், ஏக்கமும் எனக்கு நன்றாகவே தெரியும்.

இயற்பெயர் செந்தில்வேல். என் பெயரிலும் வேல் இருக்கிறது என்றெல்லாம் ,இவரோடு ஒப்பிட்டுக்கொண்டு மகிழ்ந்துகொள்கிறேன்.

இவரை இதழ்களுக்கு படைப்புகளை அனுப்பச் சொன்ன புண்ணியவான்களில் நானுமொருவன்.இதை இவர் மிகவும் சிலாகிக்கிறார். ஆனால், உண்மையில் இப்படியொரு பெருமையை, மகிழ்ச்சியை யாத்ரா எனக்கு அளித்ததற்கு நான்தான் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.(இந்த இடத்தில் வடகரை வேலன் அண்ணாச்சியை நினைக்கிறேன். இவர், இதுபோல், எப்போதும் மகிழ்ச்சியில் இருப்பவர்)இவரின் படைப்பு வேகம், ஆற்றல் மிகவும் ஆச்சரியமளிக்கிறது.இத்தனையையும் இவர்,ஏற்கனவே எழுதியது இல்லையாம். இப்போதுதான் எழுதிக்கொண்டு வருகிறாராராம்.ஏற்கனவே எழுதியவற்றை கிழித்துப் போட்டுவிட்டாராம். எவ்வளவு பெரிய இழப்பு என்று மனம் துடிக்கிறது.

தொடர்ச்சியாக உயிரோசை, நவீன விருட்சம், மற்றும் சில வலைத்தளங்கள் அவர்களாகவே விரும்பிக் கேட்டுப் பிரசுரம் செய்வது என துவக்க நிலையிலேயே பிரமிப்பூட்டுகிறார். இவர் அடையக் காத்திருக்கும் வெற்றிகள், உச்சம் வெகு தொலைவிலில்லை. அனேகமாக, வருகிற புத்தகக் கண்காட்சியில், இவரின் தொகுப்பு கிடைக்கப் பெறலாம்.

இது என்னைப்பொறுத்தவரை முழுக்க முழுக்க ஒரு சுய நலமானப் பதிவு.இவருக்கு கிடைக்கும், கிடைக்கப்போகும் வெளிச்சத்தை என் பக்கம் திருப்பிக்கொள்ளும் சுய நலம்.(எனவே,யாத்ரா,இப்பதிவுக்காக நன்றியையோ, நெகிழ்ச்சியையோ தெரிவித்து என்னைக் குற்ற உணர்வில் ஆழ்த்திவிடவேண்டாம் என்று, அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.)

கவிஞனே, யாத்ரா! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதில் முந்திக்கொள்கிறேன்.

Wednesday, March 25, 2009

அப்பாஸ் அவர்களின் கவிதை.

துப்பாக்கி

துப்பாகி என்றால்
என் மகள் கேட்கிறாள்
சுடுவதற்கு
யாரை
விரோதிகளை
விரோதிகளை என்றால்
உனக்கு பிடிக்காதவற்றைச் செய்பவர்களை
அப்படியென்றால்
எல்லோரையுமா
நானுமா
இல்லை
தேசத்தை அபகரிப்பவர்களை
தேசம் என்றால்
அபகரிப்பவர்கள் என்றால்
திருடர்களை
திருடர்கள் என்றால்
உனது பொருளை
உன் அனுமதியின்றி
எடுத்துச் செல்பவரை
அனுமதி என்றால்
சுதந்திரம்
ஓ அதுதான் துப்பாக்கியா.

-ஆறாவது பகல் தொகுப்பிலிருந்து .

அப்பாஸ் அவர்களைப் படித்ததில்லை. அவரின் மரணம் அவரை வாசிக்கத் தூண்டியதோ என்னவோ? இப்போதுதான் ஆறாவது பகல் தொகுப்பைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.உயிர் எழுத்துப் பதிப்பகத்தின் அப்பாஸ் கவிதைத் தொகுப்பு”முதலில் இறந்தவன்” என்கிற தொகுப்புக்காக பணம் அனுப்பிக் காத்திருக்கிறேன். ஆனால், புத்தகம் வரும் முன்னமே, அவர் இறந்து விட்டார் என்கிறச் செய்தி வந்துசேர்ந்துவிட்டது.

அவருக்கு அஞ்சலியாக இப்பதிவு.

Monday, March 16, 2009

அய்யப்ப மாதவனின் நிசி அகவல்-விமர்சனக்கூட்டம்


கவிஞர் அய்யப்பமாதவனின் ஆறாவது தொகுப்பான நிசி அகவல் விமரிசனக் கூட்டம் 15-03-09 அன்று, சென்னையில் நடைபெற்றிருந்தது. கவிஞர் அ.மா.(முடியல..கை வலிக்குது) என்னையும் அன்போடு அழைத்து இருந்தமையால் சென்றேன். சொல்லப்போனால், நான் கலந்துகொள்ளும் நவீன இலக்கியவாதிகள் சார்ந்த முதல் நிகழ்ச்சி என்பதே என் நிலையைச் சொல்லிவிடும். ஆழி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில் நாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக(விமரிசனத்திற்கு) வந்திருந்தவர்கள்

1.ஞானக்கூத்தன்
2.ஸ்ரீநேசன்
3.தேவேந்திரபூபதி
4.பா.வெங்கடேசன்
5.யவனிகா ஸ்ரீராம்
6.தாராகணேசன்
7.அஜயன்பாலா

கூட்டத்திற்கு முதல் ஆளாகச் சென்றவன் நான்தான். ஸ்ரீ நேசனை ஏற்கனவே தெரியும் என்பதால்,முன்கூட்டியே சென்றால், சந்தித்து ஏதோ கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே என்பதால் அப்படி. நான் நுழையும்போதுதான் அ.மா உள்ளெ யாரோ ஒருவரோடு வந்தார். பேசியிருக்கிறேனே தவிர, நேரில் பார்த்ததில்லை. புகைப்படத்தில் பார்த்ததை வைத்துக் கண்டுகொண்டேன்.(இதுலல்லாம் நம்மள அடிச்சுக்க முடியாது.ஆனா,என்ன ,அந்தக் கூட்டத்துல வந்த பலரும் புகைப்படத்துக்கும் அவங்களுக்கும் கொஞ்சம் சம்பந்தமில்லாம, வயசானவாங்களா இருந்தாங்க.). அ.மா ஏற்பாடுகளையெல்லாம் பாக்கப்போயிட்டாரு. கூட வந்தவரு மட்டும் நின்னுட்டிருந்தாரு.இவரைப் பாத்திருக்கோமே ன்னு யோசிச்சிட்டே இருக்கும்போது ஆங். (நாம யாரு), இவரு கண்டராதித்தனாச்சேன்னு யோசனை வரவும், கேட்டேன். அவரேதான்.அவர்கிட்ட ஆரம்பிச்சேன், என் மொக்கையை.


கொஞ்ச நேரத்துல ஆளுங்கள்லாம் வர ஆரம்பிச்சாங்க. நரன் வந்தாரு. அறிமுகப்படுத்தினாங்க. என் பேரைச் சொன்னதும் ச.முத்துவேலா? ன்னு initial ஐ சொல்லிக்கேட்டாரு.( நமக்கு முன்னால நம்ம பேரு போயிருக்குதே. இது ஒன்னுதாங்க இலக்கியவாதிகளுக்குக் கிடைக்கிற சுகம்) அட, நம்மளையும் தெரிஞ்சிருக்குதேன்னு நினைச்சுக்கிட்டு, அப்படியே நரனோட ஐக்கியம் ஆயிட்டேன்.உயிரோசைய வச்சுத்தான் நிறையப் பேசினோம்.


படைப்பாளிகள் வரவர கூட்டம் ஆரம்பிச்சது. அப்பப்பா..! நவினத் தமிழிலக்கியப் படைபாளிகள் பெரிய அளவில நிறைய பேரை அங்கப் பாக்க முடிஞ்சதுல எனக்கு சந்தோசம். சும்மா, எனக்கு ஞாபகத்துல வர்றவரையிலும், எனக்குத் தெரிஞ்ச முகங்கள் வரையிலும், நான் பேசித் தெரிஞ்சுக்க முடிஞ்ச முகங்கள் வரையிலுமான பட்டியல்(பெரிசா இருக்கும்..) கீழே.

1.கவிஞர் சுகுமாரன்
2.தேவிபாரதி
3.அழகிய சிங்கர்
4.ரா.ஸ்ரீனிவாசன்
5.கௌதமசித்தார்த்தன்
6.ஜெ. ஃபிரான்சிஸ்கிருபா
7.குமார் அம்பாயிரம்
8.மதுமிதா
9.தமிழ் நதி
10.இளங்கவி
11.தி.முரளி
12.பயணி
13.லக்‌ஷ்மி சரவணகுமார்
14.கண்டராதித்தன்
15. நரன்
16.கடற்கரய்
இன்னும் பலர்…

எனக்குத் தெரிஞ்சது, நினைவு வந்தது அவ்வளவுதான்.

ஒரு விசயம் நல்லாத் தெரிஞ்சது. நவீன இலக்கியம் நானூறுப் பேருக்குள்ளத்தான் விக்கிரமாதித்யன் கவிதை எழுதின மாதிரி, அங்க வெறும் படைப்பாளர்கள் மட்டுந்தான் இருந்திருப்பாங்கன்னுத் தோனுது. வாசகர்ங்கிற அளவில மட்டுமே யாரும் இல்லைன்னு நினைக்கிறென். வேணுமின்னா என்னைச் சொல்ல முடியும். ஆனா, தமிழுக்கு வந்த சோதனை, நானும் கொஞ்சம் கவிதைகள் எழுதிட்டேனே.

வீட்டூக்குக் கிளம்பறப்ப கொஞ்ச தூரம் எனக்கு வழித்துணை, லக்‌ஷ்மி சரவணகுமார்தான்.
இந்த நிகழ்வை வச்சு என்னால, இப்போதைக்கு இதுமட்டும்தான் எழுதமுடியும். மத்தபடி, விமரிசனம்,கருத்து, தொகுப்புரை எல்லாம்..கொஞ்ச நாள்போவட்டும். பார்க்கலாம்.

Tuesday, March 10, 2009

பழைய சோறு-கனகராஜன்கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கூட இருக்கும், பழையசோறு என்கிற இக்கவிதைத் தொகுப்பை வாங்கிப் படித்து. மீண்டும் ஒருமுறை படித்தேன். எல்லாமே, எளிய வாசகனையும் மிரட்டாத எளிமைத்தன்மையோடு, ஆனால், ஆழமான, கவிதைகளைக் கொண்டுள்ள தொகுப்பு. கணையாழி, தினமணிகதிர், மவ்னம்,பல்சுவை நாவல்,தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பல இதழ்களிலும் தேர்வு செய்யப்பட்டு, வெளியீடான கவிதைகளைத் தொகுத்துள்ளார் ஆசிரியர், கனகராஜன். துயரங்களையும், வறுமையையும் அனுபவப்பகிர்வோடுப்பேசும் கவிதைகள் பெரும்பான்மையாய் இருந்தாலும் அழகியல் நோக்கிலும் கவிதைகள் தென்படுகிறது(ஜன்னலோரம்). மாதிரிக்கு,சில கவிதைகள் மட்டும்…
இழவு ஆள்
எப்போதாவது வருவார்
இழவு சொல்ல சொக்கமுத்து

“சாமீயேய்ய்…” கதவிற்கு
பத்தடி தூரம் நின்ற அவர்
குரல் அடையாளமாய் ஒலிக்க
“இப்போது யாரோ..?”
பயத்துடன் முகம் தூக்கும்.

“பட்டாளத்துப் பண்ணாடி
போயிட்டாருங்க..” என்பார்.
“அடப்பாவமே ..” வேதனையில்
வெடிக்கும் அப்பாவின் குரல்

“ நேத்து ரவைக்குப்
பண்ணெண்டு மணிக்குங்கோ..
ஒரு வாரமா கெடையில
கெடந்தாருங்கோ..”
கையில் அஞ்சோ பத்தோ
வாங்கிக் கொண்டு போவார்
வழிச் செலவுக்கு

அதற்குப் பின்னால்
கிராமம் நோக்கிய
பயண ஏற்பாடுகள்

கல்வாழை இலையில்
ஈர்க்குச்சிகள் கோர்த்து
சாப்பிடுகிற சொக்கமுத்து
மொட்டையடித்து
காது குத்திய சின்ன வயதில்
அதட்டி மிரட்டி
விளையாட்டுக்காட்டியது
இன்னும் மனசுள்
நிரம்பி நிற்கிறது

இழவு சேதிக்காக மட்டுமில்லாமல்
எப்போதேனும் விசேஷ
சேதிகள் சொல்லவும்
வருகிறவர்தான்

சொக்கமுத்துவின்
வருகை நின்றுபோய்
அவரை மறந்தே போன
ஒரு நாளில்
சொக்கமுத்துவின்
மகன் மாரி வந்தான்

“தெக்காலக் காட்டு அத்தை
காலமாயிட்டாங்க..” என்றான்

“மாரி சொக்கமுத்து வரலையா?”

“அப்பன் செத்து
ஒரு மாசம் ஆச்சுங்க..” என்றான்.

(மவ்னம்-ஜனவரி 94)

மவுனக்குரல்

கடிதங்கள் வருகின்றன
எழுத்துக்களின் குரல்களைத்
தாங்கிகொண்டு

மாமா எழுதும் கடிதங்களைப்
படிக்கிறபோது
அவருடைய மென்மையான குரல்
அதில் ஒலிக்கும்

சித்தியின் கடிதங்கள்
அவளுடைய கீச்சுக் குரலில் பேசும்

அப்பாவின் அதட்டலான குரல்
எப்போதும் அவரது கடிதத்தில்

அவரவர் குரல்களை
நினைவில் கொண்டுவரும்
நண்பர்கள் கடிதங்களில்

ஊமை சங்கரன்
கடிதத்தில் மட்டும்
மனசுக்குள்ளிருந்து
ஒரு மவுனக்குரல் தொடும்

(தமிழன் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 99)

நூல் விபரம்
பழைய சோறு-கவிதைகள்
முதல் பதிப்பு: ஜூன் 2007
விலை ரூ.20
வானம் வெளியீடு
கனகராஜன்
1/9 விவேகானந்தா காலனி
சமத்தூர்
பொள்ளாச்சி 642 123
அலைபேசி 99943 16088

Friday, March 6, 2009

ராணிதிலக்-நாகதிசை -தக்கை-செவ்வி

நவீன கவிதைகளின் இருண்மைத் தன்மைக்கான காரணங்களுள் நான் கருதும் ஒன்று, அதன் நுட்பம். உலகளாவிய பிரச்னைகள், அனைவருக்கும் பொதுவான அனுபவங்கள் ஆகியவற்றைப் பதிவிடும்போது அப்படைப்புகளின் தாக்கம் ஒரு பெரிய வட்டத்தைச் சென்றடைகிறது. செறிவான மொழியில்,புதிய உத்தியில் எழுதப்பட்டிருக்கும்போதும், ஓரளவாவது புரிந்துகொள்ள முடிகிறது. மாறாக, சின்னச்சின்ன அனுபவங்கள்,மிகவும் தனிப்பட்ட அகவயமான நுண்ணுணர்வுகள் ஆகியவற்றைப் பதிவிடும்போது,அதேவிதமான, அனுபவங்களும் ,தாக்கங்களும் ஏற்படாதவர்களுக்குப் புரிவது கடினமானதாயிருக்கிறது. இவ்விடத்தில் கவிஞர் விக்கிரமாதித்யனின் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.
உனக்குப் பிடித்த கவிதை
உன் கவிதை
எனக்குப் பிடித்த கவிதை
என் கவிதை
……….
மனுஷ்யபுத்ரன் அவர்களும்,”ஒரு கவிதை எத்தனைப் படித்தாலும் உங்களுக்குப் புரியவில்லையென்றால்,விட்டுவிடுங்கள். கவலைப்படவேண்டாம்.ஏனெனில், அது, உங்களுக்காக, எழுதப்பட்ட கவிதை அல்ல என்கிறார்.
ராணிதிலக் அவர்களின் நாகதிசை என்கிற கவிதைத் தொகுப்பு உயிர்மை வெளியீடு ஆகும். இவரின் பலமாக, நான் கருதுவது
1.மொழி வளம்
2.கவித்துவமான வர்ணனைகள்
பழந்தமிழ்ச் சொற்களை நிறையப் பயன்படுத்தியிருக்கிறார். மொழிப்பயன்பாட்டில்,சோதனைகள் செய்துள்ளார். வார்த்தைகளை உடைத்து இரு வேறு பொருள் தருவதாக, பயன் தருவதாக என்றெல்லாம் பிரமிப்பூட்டுகிறார்.
ஒரே தலைப்பில் நிறைய கவிதைகள் எழுதியிருப்பது (கைக்கிளை, நாகதிசை,அக்னி நட்சத்திரக் கவிதைகள்) ஆச்சரியமளிக்கிறது.
பெரும்பான்மையான கவிதைகள் காட்சிப்படுத்துதல்களை முன்வைத்தே, நம் கண் முன் விரிகிறது.
தக்கை என்ற சிற்றிதழில், இவரின் செவ்வி(பேட்டி) இடம்பெற்றுள்ளது. கவிதைகளில் ஈடுபாடும், துவக்க நிலையில் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் என் போன்றவர்களும், அவசியம் படிக்க வேண்டிய ஒரு செவ்வி என்பதால், அதைப் பரிந்துரைத்து, இணைப்பு கொடுத்துள்ளேன்.தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகள் மட்டும் இங்கே.
கல்லறை நாள்
கல்லறை சுத்தம் செய்யப்பட்டு
மலர்களால் அலங்கரிக்கப்பட்டுவிட்டது
பிரார்த்தனை நடந்தேறியது
அவர்கள் வீடு திரும்பினர்
கனவில்,
கல்லறையின் கீழே,
ஓர் வயதான,
மலரால் அலங்கரிக்கப்பட்ட,
ஓர் எலும்புக்கூடு,
மலரின்
வாசனையில் சிரித்துக் கொண்டிருக்கிறது.
இடை,வெளி
ஒரு கண்ணாடி தம்ளர்
அதற்கு
இடையே
ஒரு மணி நேர
தூரத்தில் ஒரு தாள்.
தம்ளர்
இங்கே
கவிழ்ந்துகொண்டிருக்கிறது
தாள்
மிக தூரத்தில்
நனைந்துகொண்டிருக்கிறது.

அவசியம் படிக்க வேண்டியது: