Friday, January 20, 2012

இது என்ன தலைப்பு?
மரங்கொத்திச் சிரிப்பு என்கிற என் கவிதைகள் தொகுப்பு நூலின் தலைப்பைப் படித்த சில நண்பர்கள் ‘அப்படின்னா என்ன? என்று கேட்டனர். நண்பன் இசை கூட கேட்டார். இசைக்கு நான் சொன்னேன்.மரங்கொத்திப் பறவை போடுற சத்தம் எக்காளமா சிரிக்கிற மாதிரி இருக்கும். ஆனா, அதை சிரிக்கிறதுன்னு சொல்லலாமான்னு எனக்கு  சந்தேகம் இருந்துட்டே இருந்தது.
தகவல் பிழையாக ஆகிவிடக்கூடாதேன்னு  யோசிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம், தி.ஜானகிராமனோட மோகமுள் நாவலை நான் இப்போதான் படிச்சு முடிச்சேன். அதுல ஒரு இடத்துல மரங்கொத்தி சிரிப்புன்னு வரும். இப்போ உன்னோட உறுமீன்களற்ற நதியாகட்டும், இளங்கோகிருஷ்ணனோட காயசண்டிகை தலைப்பாகட்டும். எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும்? உறு ங்கிற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்னன்னு உன்னோட கவிதைத் தொகுப்பை படிச்சதுக்கப்புறந்தான், தேடிப்படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். அதுபோல இதுவும் இருக்கட்டும்


எப்படி ஒரு கவிதைக்குள் பொருத்தமாக குழந்தைகள் இடம்பெறும்போது, அந்தக் கவிதைக்கு ஒரு நெகிழ்ச்சி வந்துவிடுகிறதோ அதேபோல் பொருத்தமாக  பறவைகள் வந்துவிட்டாலும், அந்தக் கவிதைக்கு சிறகுகள் முளைத்துவிடுகிறது என்பேன்.

மரங்கொத்திச் சிரிப்பு என்கிற வரி என்னுடைய ஒரு கவிதையில், நான் செம்மையாக்கம் செய்யும்போதுதான் இடம்பெற்றது.அகநாழிகை இதழில் வெளியாகியிருந்த கவிதையில் திருத்தம் மேற்கொள்வதற்குமுன் பின்வருமாறு இருந்தது. (ஓரளவு, நல்ல வரவேற்பைப் பெற்ற கவிதை இது. கீழே கவிதை முழுமையாக இல்லை)

கடற்கரை வெளியில்
ஒருவன் தன் மகனை
உயரத் தூக்கி வீசி
பிடித்து
வீசி
பிடித்து
விளையாடிக்கொண்டிருந்தான்

அச்சமற்ற குழந்தையின்
முகத்தில் மகிழ்ச்சியலை
................................
................................

இவ்வரிகளை இவ்வளவு தட்டையாகச் சொல்லாமல் வேறெதாவது செய்யவேண்டும் என்று யோசனையிலிருந்தேன்.
அலுவலகத்தில் மழை சற்று பெய்து ஓய்ந்திருந்த ஒரு தேனீர் நேரத்தில்  தனியாக அமர்ந்திருந்தபோது அசரீரி போல் மரங்கொத்திப் பறவையின் சிரிப்புச் சத்தம் கேட்டது. குதூகலமாகிவிட்டேன்.திருத்திய பிறகு வந்த வரிகள் இப்படி

கடற்கரை வெளியில்
ஒருவன் தன் மகனை
உயரத் தூக்கி வீசி
பிடித்து
வீசி
பிடித்து
விளையாடிக்கொண்டிருந்தான்

முதல் பறத்தலை ருசித்த
மழலைப்பறவையின்
அச்சம் விலக்கியிருந்த கெக்களிப்பில்
மரங்கொத்திச் சிரிப்பலை
...

பொதுவாக என்னுடைய கவிதைகளில் உவமைகள், அலங்காரங்கள் இருப்பதில்லை. நேரடியாகவும், எளிமையாகவுமே இருக்கும். அந்த வகையில் நான் உவமையாய்ச் சொன்ன அரிதான ஒன்றாக இவ்வரி இருக்கிறது. தனித்துவமான தலைப்பாகவும் இருக்கும் என்று மரங்கொத்திச் சிரிப்பு என்று பெயர் தேர்ந்தெடுத்தேன்.

மரங்கொத்திச் சிரிப்பு என்கிற வரியை கூகிளில் தட்டச்சி தேடினால் ஒரு வலைப்பக்கம்கூட விடையாகக் கிடைக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் இதே அர்த்தம் கொண்ட வரியைத் தேடியபோது,இவ்வரி  மிகவும் புகழ்பெற்றதாக தெரிகிறது. இப்போது தமிழிலும் இந்தக் குறை நீங்கும் என்று உங்களையெல்லாம் நம்பிச் சொல்கிறேன்.

2 நாட்களுக்கு முன், காலையில் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பாட்டின் வரிகளை கவனித்தபோது ஆச்சரியமாகிவிட்டது. என் தனித்துவமான தலைப்புக்கு வந்த சோதனையைப் பாருங்கள். ராஜாதி ராஜா படத்தில் வருகிற பாடல்.

சிலுசிலுவென குளிரடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து
மரங்கொத்திப் பறவைகள்
மனம் விட்டுச் சிரிக்கின்றதே

மலையாளக் கரையோரம்..

கூகிளில் நான் தேடியவரை இப்பாடலை எழுதியவர் பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, பாடலை எழுதியவர்  கவிஞர் வாலி என்ற தகவலை கவிஞர் மகுடேஸ்வரனிடம் கேட்டு அறிந்தேன்

                                 

Friday, January 6, 2012

Blurb


இது நான் (ச.முத்துவேல்)செல்பேசி 9865685470


என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘மரங்கொத்திச் சிரிப்பு'' தொகுப்புக்கு நண்பர் கவிஞர் இசை அளித்துள்ள பின்னட்டை வாசகங்கள் (Blurb). இசைக்கு நன்றிகளுடன்...

‘'இக் கவிதைகள் அனுபவமாக கடல்களை நீந்திக் கடக்கவோ, மலைகளைத் தாவிக்குதிக்கவோ அவசியமில்லை. தினசரி வாழ்வின் மனிதர்களையும், காட்சிகளையும் கவித்துவத்தின் கண்களால் திருகியெடுத்துச் சேர்த்தவை இவை.இக் கவிதைகளின் சத்தியம், மேதாவிலாசத்தின் கண்களை அடைத்துக்கொண்டு எழுகிறது.ஒரு வளர் இளம் கவியின் நம்பிக்கையூட்டும் முதல் தொகுப்பு என்று இதற்கு உறுதி சொல்லலாம்''.
                                                                                                        -இசை

Thursday, January 5, 2012

மழலைப்பறவையின் முதல் பறத்தல்


 மரங்கொத்திச் சிரிப்பு


கவிஞர் ஸ்ரீநேசன் ஒரு விமர்சன அரங்கில் பேசும்போது சொன்னார், ‘ஒரு தொகுப்பில் ஐந்து  நல்ல கவிதைகள் இடம்பெற்றுவிட்டாலே, அந்தத் தொகுப்பு வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளலாம்’ என்று. நானும் இதையே ஆதாரமாகக்கொண்டு என்னுடைய கவிதைத் தொகுப்பை உங்கள் முன் வைக்கின்றேன். நிச்சயம் நல்ல கவிதைகளின்  எண்ணிக்கை ஐந்தைத்தாண்டும். ’’ மரங்கொத்திச் சிரிப்பு’’ என்பது நூலின் தலைப்பு. உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 80 பக்கங்கள். விலை ரூ.60

சராசரியான உலகியல் வாழ்க்கையோடு சேர்த்து, அல்லது அதிலிருந்து சற்று விலகி, நான் வேறொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தது அண்மையில்தான். இலக்கியத்தை அறிதல், இலக்கியத்தின் வழி அறிதல் எனும் வாழ்க்கைப்பாதையே அது.தோராயமாக 2007 லிருந்தே என் வாசிப்பும், எழுத்தும் துவங்கியிருக்கிறது. என் முதல் கவிதைக்குள்ளேயே  அப்போது நடமாடத் தொடங்கும் வயதிலிருந்த என் மகன் வந்துவிடுகிறான். 2007 ஆகஸ்டில்தான் என்னுடைய முதல்கவிதையே வெளிவந்தது. குங்குமம் வார இதழ், வாசகர் கவிதைத் திருவிழா ஒன்று ஏற்பாடு செய்து கவிஞர் வைரமுத்து அவர்களை நடுவராக நியமித்து இருந்தது. கிட்டத்தட்ட 100 கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் நானுன் ஒருவன். நான் அப்போதுதான் கொஞ்சம் வாசிக்கத்துவங்கி , சில கவிதைகளைப்போல் எழுதிப்பார்த்துக்கொண்டு, நண்பர் புது.மு. சுந்தரத்திடம் காண்பித்துக்கொண்டிருப்பேன். அந்நேரத்தில் நான் எழுதியிருந்த ஒரு கவிதையை சுந்தரம் பாராட்டவே, அதைக் குங்குமத்திற்கு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினேன். அது வைரமுத்து அவர்களால் தேர்வாகி வெளியாகியதும், அதன் பிறகு தேர்ந்தெடுத்தக்கப்பட்ட கவிஞர்களை சென்னையில் வைரமுத்து அவர்கள் சந்தித்து பாராட்டுவிழா எடுத்ததும், பரிசுகள் , அறிவுரைகள், ஆலோசனைகள் அளித்ததும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தன்னமிக்கையை அளித்தன. அந்த முதல்வெற்றியும், அது அளித்த உற்சாகமும் உந்துதலுமே இன்றுவரையிலான என் தேடலுக்கான ஊக்கசக்தியாக அமைந்தது, என்னுடைய நற்பேறுதான்.அதன் பிறகுதான் வைரமுத்து எழுதிய புத்தகங்களையேகூட தேடி படிக்க ஆரம்பித்தேன். இதுதான் என் வாசிப்பு நிலை. இத்தனைச் சிறிய காலத்திற்குள் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை நான் கவனித்துக்கொண்டே வருகிறேன். வாழ்நாளை நிறைய வீணடித்துவிட்டோமே என்று மனம் ஏங்குகிறது. 30 வயதிற்குப் பிறகு ஒருவன் கொண்டு வருகிற கவிதைத் தொகுப்பு என்று பார்க்கமுடியாத வகையில், இலக்கியத்தில் நான் துவக்கப்பள்ளி மாணவன் என்கிற நிலையிலேயே இருக்கிறேன். ஆனாலும் நன்றாகப் படிக்கும் மாணவன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்வேன்.

நான் வாசிக்க ஆரம்பித்த புதிதிலேயே, நவீன இலக்கிய அறிமுகம் நண்பர்கள் மூலம் ஏற்பட்டுவிட்டது. எனவே, முறையான வாசிப்புத் தளம் இல்லாமல், நேரடியாக நவீன இலக்கிய வாசிப்புக்குள் சென்று சேர்ந்துவிட்டேன். துவக்கத்தில் மிகவும் தடுமாற்றமாகவே இருந்தது. ஆனால், நான் தீவிர வாசிப்பை மேற்கொண்டேன். மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் வாசிப்பே எனது முதன்மையான வேலையாகியிருக்கிறது. அந்தவகையில், என் வாசிப்பின் பக்க விளைவுகளும், புறச்சான்றுகளுமே என் கவிதைகள். நான் வேறெப்போதும், வேறெதிலும் இவ்வளவு கடின உழைப்பை இதுவரையிலும் செலுத்தியதேயில்லை. வாசிப்பின் மீதான என் தீவிர ஆர்வத்திற்கு   உடல் ஒத்துழைக்கவில்லை என்கிற சூழலிலும். 

என்னுடைய வாசிப்பினால், இலக்கியம் பற்றிய புரிதல்களும், தீர்மானங்களும் ஒவ்வொரு நாளுமேகூட மாறியபடியேயிருக்கின்றன. அதாவது, அவை முன்னேறிக்கொண்டிருக்கின்றன என நான் எண்ணுகிறேன்.
        நான் வாசிக்கத்துவங்கியபோது என்னை மிகவும் கவர்ந்தவை எளிய கவிதைகள்தான்(plain poetry). அலங்காரங்கள், உவமைகள் அற்ற எளிய கவிதைகளையே நானும் எழுதத்துவங்கினேன். அல்லது அதுதான் எனக்குக் கைகூடியது என்றும் சொல்லலாம். ‘’கவிதையின் அனாவசியமான இறுக்கங்களைத் தளர்த்துவதுதான் இன்று நம் முன் இருக்கும் சவால்’’ என்கிற மனுஷ்யபுத்திரனின் வாக்கும், பழமலய் அவர்களின் கவிதைகளும் என்னை துவக்கத்தில் வழி நடத்தியது எனலாம். நானும் சவாலில் பங்கேற்றுக்கொள்ள  ஆசையை ஏற்படுத்திக்கொண்டேன். அதன்வழி எளிய கவிதைகளையே எழுதினேன்.

.
ஆனால், அண்மையில், மிக அண்மையில்தான் கவிதை பற்றிய என் புரிதலில் சிறு மாற்றம் ஏற்பட்டது. தளர்த்திக்கொண்டேன் என்றுகூட சொல்லலாம். மரபு இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றை படிக்கத் துவங்கியபோது, எனக்குள் ஏற்பட்ட தீர்மானம் இது. அழகான பொய்கள் கவிதையில்தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. (ஆனால், அழகான பொய்கள்தான் கவிதையையேத் தீர்மானிக்கின்றன என்கிற கருத்து எனக்கு இல்லை.) எனவே, கவிதை என்கிற தனித்துவமான வடிவம் என்பது அதன் உள்ளடக்கத்திற்கு அப்பால்,அழகிய பொய்கள், அலங்காரங்கள், மிகைப்படுத்துதல், புதிய சொல்லிணைவுகள், சொல்லுடைப்புகள்,  சிறப்பான புதிய உவமைகள் ஆகியவற்றை ஒரு கவிஞன் கொடையாக அளிக்கவேண்டிய   இலக்கிய வடிவம்தான் என்றும் ஆனால் அதேவேளையில் இவை கட்டாயமில்லை என்பதும் என் தற்போதைய தீர்மானம். இந்தத் தீர்மானத்தின்படியே, என்னுடைய கவிதைகளைத் தொகுப்பாக்கும் இவ்வேளையில், என் பழைய கவிதைகளில்கூட சிற்சில மாற்றங்களை நான் செய்திருக்கிறேன். அவை சில இடங்களில் முதிர்ச்சியில்லாமலும், சில இடங்களில் நன்றாகவும் அமைந்திருக்கிறது.

வெள்ளத்தனைய மலரின் நீட்டம் என்கிற வரியை நான் அடிக்கடி எண்ணிக்கொள்வேன். என்னுடைய கவிதைகளைப் படிக்கும்போதும் அப்படியே. என்னுடைய கவிதைகள் என்னுடைய வாசிப்புக்கு ஏற்றவாறு மாற்றமடைந்துகொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். என் பெருமதிப்பிற்குரியவர்கள் வைரமுத்து துவங்கி ஜெயமோகன் வரை , இன்னும் சிலராலும், நான் கவிஞன் என்று விளிக்கப்பட்டமையே என்னுடைய இது நாள் வரையான சாதனையாகக் கருதுகிறேன்.

தூறல்கவிதை(http://thooralkavithai.blogspot.com) எனும் இந்த வலைப்பூ வழியாக என் செயல்பாடுகளுக்கு அன்பும், ஆதரவும், ஆலோசனைகளும், கண்டனங்களும் அளித்து உதவிய அனைவரையும் இவ்வேளையில் நன்றியோடு நினைவுகூர்கிறேன். ‘அவரைப் பார்க்க ஆசைஎன்கிற என் கவிதையை கருப்பொருளாகக்  கொண்டு சிறுகதைப் போட்டி ஒன்றை இணைய உலகில் நடத்திய கவிஞர் லாவண்யா சுந்தரராஜன் அவர்களுக்கும் ,உறுதுணையாய் இருந்த நண்பர்களுக்கும் நன்றி.உயிர் எழுத்து இதழில்புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகான கவிஞர்கள்கட்டுரையில் கவிஞர் கரிகாலன், என் பெயரையும் சேர்த்து, தன்னுடைய நம்பிக்கையை தெரிவித்திருந்தார். கரிகாலன் அவர்களுக்கு நன்றி. அதேபோல் உயிர் எழுத்து இதழில் ஐந்தாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தலையங்கம் எழுதியிருந்த ஆசிரியர் சுதீர் செந்தில் என் பெயரைக் குறிப்பிட்டிருந்தது நன்றிக்குரியது. இலக்கியத்தில் என்னுடைய பேசுபொருளாகவே அமைந்துவிட்ட எழுத்தாளர் ஜெயமோகன் என்னுடைய ‘ நீ-யும்என்கிற கவிதையை பாராட்டி அவருடைய வலைத்தளத்தில் ‘ உறவுகளின் ஆடல்என்கிற கட்டுரையை எழுதி என்னை வியப்பிலும், உற்காகத்திலும் ஆழ்த்தினார். என்னுடைய  வளர்ச்சியில் அவருடைய எழுத்துச் செயல்பாடுகள் பெரும்பங்களிப்பவை என்பதை நன்றியோடு குறிப்பிடுகிறேன். இலக்கியப் பள்ளியில் கற்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கெல்லாம் அவ்வப்போது எழுத்தாளர் பாவண்ணன் அவர்களிடம் வீட்டுப்பாடம் பயின்று தெளிவதுண்டு. இப்போது என் தொகுப்பிற்கு ஆலோசனைகளையும், தெரிவுகளையும் பொருத்தமான ஒரு அணிந்துரையும் வழங்கி சிறப்பித்திருக்கிறார்.பாவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் படைப்புகளை வெளியிட்ட இதழ்களுக்கு நன்றி. இந்தத் தொகுப்பு வெளிவர துணைபுரிந்த கவிஞர் சமயவேல் அவர்களுக்கும், பதிப்பாளர், கவிஞர் சுதீர் செந்தில் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. கவிதைகளைத் தணிக்கைசெய்து தேர்வு செய்தும், சிறிய அளவில் ஆனால் சிறப்பான அளவில் திருத்தங்களைச் செய்தும், பின்னட்டை வாசகங்கள் எழுதித் தந்தும் உதவிய  நண்பன்,  நான் கொண்டாடும் என் மனதிற்குகந்த கவிஞன் இசைக்கும் நன்றியோடு, முத்தங்களும்.

 மரங்கொத்திச் சிரிப்பு( கவிதைகள்)
உயிர் எழுத்து பதிப்பகம்
பக்கங்கள்:80
விலை ரூ.60