Tuesday, July 1, 2008

கண்மணி குணசேகரன் கவிதைகள்


மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள் ஜெயமோகன்,நாஞ்சில் நாடன் போன்றோர் பாராட்டிப் பரிந்துரைக்கும் எழுத்தாளரான கண்மணி குணசேகரன் ஆணா? பெண்ணா? என்கிற அளவில் அவர் பற்றி அறியாதவர்களுக்கு ,அவரைப் பற்றிய ஒரு அறிமுகம். கண்மணி குணசேகரன் கடலூர் மாவட்டம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்.இயற்பெயர் அ.குணசேகர்.1971 ல் பிறந்த இவர் ,கடந்த 2007ம் ஆண்டுக்கான,சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(I T I), இயந்திர வாகனப் பராமளிப்பாளராகப் பயிற்சி பெற்று,தற்போது,அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில்,பணி புரிகிறார்.திறந்த வெளிப் பல்கலைக் கழகம் மூலம்,இளநிலை வணிகம் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.
வட்டார மொழியிலும்,யதார்த்தவாத நடையிலும் எழுதி வருகின்ற இவர்,அசலான கிராமத்து இளைஞர்.பன்முக எழுத்தாற்றல் கொண்டவர்.சிறுகதை,புதினம்,கவிதை மற்றும் நிகழ்த்துக் கலைகள் போன்றவற்றில் சாதித்து வரும் இவர்,நடுநாட்டு சொல்லகராதி என்ற ஒரு நூலையும்,தனி மனிதராக,எழுதி முடித்திருப்பது,பெரிய சாதனை.ஒரு தொழிலாளியாக இருந்துகொண்டு இவரால் இத்தனை நூல்களை எழுத முடிந்திருப்பது, வியப்பளிக்கிறது.இவரின் ‘அஞ்சலை’ என்கிற புதினம் கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.

இவரின் படைப்புகளாவன;

1.தலைமுறைக் கோபம்- கவிதைகள்
2.காட்டின் பாடல் கவிதைகள்
3.கண்மணி குணசேகரனின் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
(காலடியில் குவியும் நிழல் வேளை)
4.வெள்ளெருக்கு சிறுகதைகள்
5.ஆதண்டார் கோயில் குதிரை சிறுகதைகள்
6.உயிர்த் தண்ணீர் சிறுகதைகள்
7.அஞ்சலை புதினம்
8.கோரை புதினம்
9.நடு நாட்டு சொல்லகராதி

மேலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

கண்மணி குணசேகரனின் கவிதைகள்-கிராம வாழ்வின் ஆவணங்கள்

இவரின் கவிதைகள் எளிமையாகவும்,வட்டார மொழியிலும், பெரும்பாலும் அமைந்துள்ளன.குறுங்கவிதைகள்,மற்றும் பத்தி வடிவிலும் நிறைய எழுதியுள்ளார்.கோடை விடுமுறைக்குக் கூட கிராமங்களுக்குச் சென்றிராதவர்களுக்கு இவரின் கவிதைகளின் அருமை ஒருவேளை புரியாமல் போகலாம்.கிராம வாழ்வை தொலைத்துவிட்டு, மாநகரங்களில் குடியேறிவிட்ட தலைமுறையினருக்கு ,இக் கவிதைகள் நிச்சயம் நினைவலைகளின் மூலம் சலனம் ஏற்படுத்தும்.காட்சிப்படுத்தும் தன்மையுள்ள நிறைய கவிதைகள் காணமுடிகிறது.சிற்றூர்கள், மெல்ல மாறிக்கொண்டு வருகிறது.படிப்பறிவில்லாத கிழவியின் பேச்சில் கூட ஆங்கிலச் சொற்கள் இரண்டறக் கலந்துவிட்டது.செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் வரவு கிராமங்களில் வலுவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கண்விழித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட் பார்க்கின்றனர்.இளைஞர்களின் விளையாட்டு நேரத்தை பெரும்பாலும் கிரிக்கெட் ஆக்கிரமித்துக்கொள்கிறது.மாட்டு வண்டிகளும்,ஏர்க்கலப்பைகளும் மெல்ல தன் பயன்பாடுகளை நவீன வாழ்முறையிடம் இழந்து வரும் இவ்வாறான சூழலில் இக் கவிதைகள் சிற்றூர் வாழ்வின் ஆவணங்களாகின்றன.
மாதிரிக்கு, தொகுப்பிலிருந்து சில குறுங்கவிதைகள் மட்டும் பார்ப்போம்.
பாம்புச் சுவடு மீது
பதிந்து கிடக்கிறது
அழகாய்
பிஞ்சுப் பாதம்.

சிற்றூர் வாழ்விலிருக்கும் ஆபத்தை இதன் மூலம் எவருமே எளிதில் உணரமுடியும் அல்லவா?

பள்ளிக் காலம்
கள்ளிக் கிறுக்கல்
இன்னும்
காயாத
பால் எழுத்து.

பால் என்ற சொல்லுக்கு எத்தனை அர்த்தங்கள் இருக்கிறதோ அவை அத்தனையும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது,இக் கவதையின் சிறப்பு.இதுபோல மேலும் சில கவிதைகளும் உள்ளன.

உதிர்ந்து கிடந்த
பூக்கள்...
அழகு.
கூட்டும்போதுதான்
குப்பையாகிவிட்டது.

இதுபோல அழகியல் தன்மை கொண்ட கவிதைகளும் பரவலாக உள்ளன.

ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்.
கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்


கொலுசு இல்லா
பாத வெறுமையை
வளைத்து
நிறைவு செய்தது
வரப்பில் சாய்ந்த
தங்க மணிக் கதிர்.
எத்தனை கவிநயம் வாய்ந்த கண்ணோட்டம் ! ஏமாற்றம் அளிக்காத நிறைய கவிதைகள் நறைந்துள்ளது.
நூல் விபரம்
கண்மணி குணசேகரன் கவிதைகள்
யுனைட்டெட் ரைட்டர்ஸ்
63,பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை-14
மின்னஞ்சல் unitedwriterss@yahoo.co.in

பக்கங்கள் 160
விலை ரூ.75.