Friday, December 13, 2013

திரையில் காணமுடியாத மீதிகள்        தமிழ் பேசும்படத்திற்கு வயது 80 ஆண்டுகளைத் தாண்டுகிறது. துவக்க காலங்களில் எடுக்கப்பட்ட படங்கள் பலவும் இன்று கிடைக்காத நிலையில் அழிந்தேபோய்விட்டன. எம்.ஜி.ஆர் ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது, தான் நடித்த பழைய படங்களை அழிவிலிருந்து மீட்க முயற்சியெடுத்தும், அவராலேயேகூட பெரியளவில் வெற்றிபெற முடியவில்லை.  இவ்வாறான சூழலில், முதல் பேசும் படத்திலிருந்து அவற்றின் விவரங்களை அறிந்துகொள்ள பாட்டுப் புத்தகங்கள், அப்போதைய பத்திரிக்கைகள்,  சினிமா இதழ்கள் போன்றவை பெரும் உதவி புரிகின்றன. இவற்றை சேகரித்து வைத்திருக்கக்கூடிய தனி நபர்களையோ, நூலகங்களையோ  நாடினாலும், அவை ஒரு வரைபடத்தைப்போல மட்டுமே எஞ்சும். பாட்டுப்புத்தகங்களில் கதைச்சுருக்கங்கள் பெரும்பாலும் முழுக்கதையைச் சொல்லாமல் மீதியை வெள்ளித் திரையில் காண்க என்று போக்குக்காட்டி முடிந்துபோய்விடுகிறது.

        இவ்வாறான சூழலில், படங்களை அந்தக் காலத்திலிருந்து பார்த்து அனுபவித்தவர்கள் கிட்டத்தட்ட 90 வயதுக்காரர்களாக இருக்கவேண்டும். அதிலும் அவர் கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் பார்த்திருக்கக் கூடியவராகவும், அவற்றைப் பற்றிய விவரங்களை தெரிந்தவராக, குறிப்புகள் எடுத்தவராக, நினைவாற்றல் உள்ளவராகவும் இருக்கவேண்டும். பொதுவெளியில் வைக்க அவருக்கு எழுத்தாற்றலோ, வாய்ப்புகளோ இருக்கவேண்டும். இவ்வளவு அரிய வாய்ப்புகளையும் ஒருங்கேப் பெற்றவராக, கூடிவந்த அரிய நன்மையாக விட்டல்ராவ் விளங்குகிறார். அதன் சான்றே  ,  நிழல் இதழில் அவர் எழுதிய சினிமாக் கட்டுரைகளின் தொகுப்பு நூலான தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்.
      விட்டல்ராவ் திரைத்துறையைச் சேர்ந்தவரோ, திரையியல் ஆய்வாளரோ அல்ல. தொலைபேசித் துறையில் பணிபுரிந்தவர் தன்னுடைய அன்றாடங்களிலிருந்தே இந்நூலை அனுபவித்து, தொகுத்திருக்கிறார். சிறுவயது முதலே  படங்களை நாட்குறிப்புகளாக எழுதிவந்திருக்கிறார். மேலும் தன்னுடைய வளமான நினைவாற்றலின் துணைகொண்டும் சாத்தியமாக்கியிருக்கிறார். படத்தின் கதையை உள்வாங்கி, நாட்குறிப்புகளில் கதைச்சுருக்கத்தை சிறுசிறு கதாபாத்திரங்களின் பெயர்களோடும், பதிவு செய்திருந்திருக்கிறார். இந்தப் பழக்கமே அவரை ஒரு எழுத்தாளராக வளர்த்தெடுத்தது என்று எண்ணத் துணியலாம். இவற்றையெல்லாம் செய்த சிறுவன் விட்டல்ராவை, வியப்பும் அன்பும் மேலிட்டு ,  ஆவிதழுவி உச்சி முகரத் தோன்றுகிறது.
           1935-1950வரை கிட்டத்தட்ட எல்லாப் படங்களையுமே பார்த்து,  பரந்த வாசிப்பனுபவத்தோடு சேர்த்துப் பதிவு செய்திருக்கிறார்.  நடிகர்களோடு நின்றுவிடாமல், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களைக்கூட பதிவு செய்திருக்கிறார்.படம்பார்க்கும்போதே திரையரங்கிலேயே உட்கார்ந்து குறிப்புகள் எடுத்திருப்பாரரோ !  இத்தோடும் நின்றுவிடவில்லை. அந்தக்கால கதாநாயகனான ஹொன்னப்ப பாகவதர், மாடர்ன் தியேட்டர் தொழில்நுட்பக் கலைஞர் B.V.மோடக் போன்றவர்களிடம் நேரடிப்பழக்கம் விட்டல்ராவுக்கு இருந்திருக்கிறது.  படங்களின் வெற்றி தோல்வி நிலவரம், வெளியான அந்தக் கால சூழல்கள், சிக்கல்கள் ஆகியவற்றையும் உற்றுக் கவனித்து எழுதியிருக்கிறார்.
              விட்டல்ராவ் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பதால், அவர் எழுதியிருக்கிற விதமும் சிறப்புக்குரியது. படங்களை வகைப்படுத்தும்போது தனிநபர்களின் அடிப்படையிலோ, சார்புடையவராகவோ எதையும் செய்யாமல் படங்களை, அப்படங்களின் தன்மையிலேயே வகைப்படுத்தி எழுதியிருக்கிறார். எம்.கே.டி, பி.யு.சின்னப்பாவுக்கும் முந்தைய கலைஞர்கள்,  நடிகர் கே.பி.கேசவன், இசையமைப்பளர் ரங்கசாமிநாயகர் போன்றவர்களையும்கூட கவனித்து எழுதியிருப்பதால், விடுபடல்களே இல்லையெனலாம்.
இந்நூல் ஏதோ திரையியல் ஆய்வாளர்களுக்கு மட்டுமோ, ரசிகர்களுக்கு மட்டுமோ என்று எடுத்துக்கொண்டு விடமுடியாது.ஏனெனில், அந்தக்கால அரசியல், சமூகப் பின்னணிகளும் பதிவாகியிருப்பதால் எல்லோருக்குமான நூல்.
புகைப்படங்கள் நிறைந்த அரிதினும் அரிதான இந்நூலுக்கு சமூகம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது.நீடூழி வாழ்க... விட்டல்ராவ் !
தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்- விட்டல்ராவ்
நிழல்
31/48, இராணி அண்ணாநகர்,
கே.கே. நகர், சென்னை – 78
பக்கங்கள் 230
விலை ரூ.100

 நன்றி: தி இந்து நாளிதழ் 08.12.2013, மண்குதிரை

Tuesday, November 26, 2013

வளர்ச்சியின் வீழ்ச்சி
போக்கிடம் நாவலின் கதைச்சுருக்கம் இதுதான்….
சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ள டேனிஷ்பேட்டை ( புனைப்பெயர்தான்) கிராமத்தில், மாக்னஸைட் கிடைப்பதால், அந்த ஊரையே அரசு கையகப்படுத்திக்கொள்கிறது. ஊர் மக்களுக்கு இழப்பீடாக பணமும், வேறு ஊரில் நிலமும் அளிக்கிறது. சிற்றூர்  நகரியமாக மாறுகிறது. அதன் தாக்கங்களை பேசுகிறது  நாவல்.
Unique: Writer Vittal Rao with his award –winning book.Photo:K. Gopinathan

விட்டல்ராவின் புனைவு எழுத்தில் நான் படிக்கும் முதல் நூல் இதுதான். எந்தவித அறிமுகமும், எதிர்பார்ப்புமில்லாமல் படித்தேன். இந்தளவுக்கு என்னைக் கவரும் என்று எதிர்பார்க்கவில்லை. 1977 ல் முதற்பதிப்பு வந்திருக்கிறது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் 2013 ல் படிக்கிறேன். ஆனாலும், சமகால வாசிப்புச் சுவையோடு உள்ளது. இந்த நாவலின் சிறப்பாக முதன்மையாக நான் வலியுறுத்துவது, அது கையாண்டிருக்கும் நிலமும், மனிதர்களும்தான். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் இலக்கியத்தில் அவ்வளவாக பதிவாகாத பகுதி. இன்றைக்கு ஆதவன்தீட்சண்யா, மு,ஹரிகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதுகிறார்கள். ஆனாலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இன்றளவும் இடம்பெறவில்லை எனலாம். அம் மக்களின் வட்டார வழக்கு சொல்லாடல்கள் இலக்கியத்திலோ, சினிமாவிலோ பதிவாகவில்லை.

எனக்குத் தெரிந்த  கிராமம் என்றால் அது ஒன்றே ஒன்றுதான். என் தாய்வழி உறவுகள் இன்றும் வசித்துவரும் கிராமம். திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையிலும், தர்மபுரி மாவட்டத்தின் எல்லையிலும் அமைந்த ஒரு கிராமம். அங்கும்கூட நான் நிறைய காலம் வாழ்ந்ததில்லை. ஒரு விளையாட்டுப் பையனாக, என் பதின்வயதில் பள்ளி விடுமுறைகளில் சென்று தங்கி முழு நாட்களையும் கழித்திருக்கிறேன்.  ஆண்டின் இரண்டு பருவங்களில் வாழ்ந்திருக்கிறேன். அவை, கோடைக்காலம் மற்றும் அரையாண்டு பரீட்சை விடுமுறை வரும் காலம். அரையாண்டு விடுமுறையின்போது கிணறுகள் நிரம்பிவழியும். கோடையில் தண்ணீர் குறைவாகவே இருக்கும். அங்குதான் நீச்சல் கற்றேன். அந்த ஊரின் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களையும் முகம் அறிவேன். பெயர்கள் தெரியும். சிறுவர்கள் எல்லோரும் நண்பர்களாயிருந்தனர். அந்த வயதில் நான் பார்த்த ரஜினி, கமல் படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் வரிக்குவரி இன்றளவும் எவ்வளவு ஆழமாக நினைவில் இருக்கிறதோ அதேபோல் அந்த வாழ்க்கையும் நினைவில் இருக்கிறது. பேசிப்பேசி , நினைவுகூர்ந்து ஆழமாகப் பதிந்துபோனவை அவை. பருவராகம் படம் ரிலீசான காலகட்டத்தில், அந்தப் படத்தை வீடியோவில் கருப்பு வெள்ளை டிவி யில் அங்கேதான் பார்த்தேன். சந்தை, நுங்குவண்டி, இரவில் தெருக்கூத்து, பொம்மலாட்டம், கிராமபோன் ஆகியவை அப்போதுதான் அறிமுகம். பகல்தூக்கமும் அங்கேதான் அறிமுகம். எதுவும் வேலையில்லாமல் ஒருமுறை பகலில் தூங்கி, எழுந்து பொழுது விடிந்துவிட்டதாய் எண்ணிக்கொண்டு பல்துலக்கும்போது பரிகாசத்திற்கு ஆளானேன். தண்ணீருக்காக காட்டைவிட்டு வெளியேவந்த மானின் கறியை மனதில் கழிவிரக்கத்தோடு ஓரிரு துண்டுகள் மட்டும் சாப்பிட்டிருக்கிறேன். சிறுவர்கள்கூட சுதந்திரமாக கெட்டக்கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள். நானும் உற்சாகமாகி பேசுவேன். அந்தச் சிறுவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தியவர்கள். படிப்பில் மட்டும்தான் என்னைவிட அல்லது நகரத்து மனிதர்களை விட பின் தங்கியிருப்பார்கள்.ஆனால், பெரிய மனிதர்களுக்கு இணையாக முதிர்ச்சியும், ஈடுபாடுகளும் கொண்டவர்கள். கட்டற்றவர்கள். என்னைவிட நல்ல பணப்புழக்கம் கொண்டவர்கள். வரப்பில் சுமையோடு சைக்கிள் ஓட்டும் தீரர்கள்.  நான் அங்கே பார்த்த துவக்கப் பள்ளிக்கூடத்தில் பாடம் நடந்துகொண்டிருக்கும்.பிள்ளைகள் தன்னிசையாக எழுந்து வெளியில் ஓடுவார்கள். திரும்ப வருவார்கள்.

அப்படி நான் வாழ்ந்து பார்த்த என் கிராமத்து வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு நாளாக, அனுபவங்களாக நினைவுகளைக் கிளறும்  வகையில் அமைந்திருக்கிறது விட்டல்ராவின் எழுத்து. மீண்டும் அதே ஊருக்கு  நான் சென்றால் மட்டுமே அந்தளவுக்கு நினைவுகள் பெருக்கெடுக்கும். ஏதாவது ஒரு கிராமத்திலோ அல்லது அதே கிராமத்திலோ மீண்டும் இப்போது கொஞ்ச நாட்கள் வாழ்ந்துபார்க்க வேண்டும் என்ற ஆசை குன்றாமலிருக்கிறது. ஆனால், நான் மீண்டும் அங்கே செல்வதையோ, சென்று தங்கி வாழ்வதையோ இப்போது விரும்பவில்லை. ஏனெனில், பொதுவாக வெள்ளந்தியாக கருதப்படும் கிராமத்தார்கள் எல்லோருமே வெள்ளந்திகள் இல்லை. எனக்கு இப்போது அவர்களில் பலரும் வெறுப்புக்கு ஆளானவர்கள். வேறு ஏதாவது கிராமங்களில் வாய்ப்பு கிடைக்குபோது பார்த்துக்கொள்ளவேண்டியதுதான்.

நாவலில் வரும் பையப்பன் காலத்தையும்விட வயதில் சிறியவன் என்பதால், நான் பார்த்த கிராமம் , விட்டல்ராவ் எழுதியிருக்கும் காலத்திற்கும் பிந்தைய கிராமம். நாவலில் வரும் காலம் ,  ரேடியோ அறிமுகமாகும் காலம்  . நான் பார்த்தது டேப்ரெக்கார்டர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்ட காலம்.

வெறும் தகவல்களாக அல்லாமல் கதையோடு சேர்ந்த காட்சிகளாக காட்டையும், சந்தையையும் , வயல்களையும் கலாபூர்வமாக மாற்றி சுற்றிக் காட்டுகிறார் விட்டல்ராவ். எவத்த, இவத்த, பொறைக்கி, எருமுட்டை போன்ற சொற்கள் நான் கேட்டு அறிந்தவை. பொறைக்கி என்பதற்கு இரவு என்று குறிப்பு கொடுத்திருக்கிறார். பிறகு என்பதே பொறைக்கி என்று சொல்லப்பட்டது என்பது என் அனுமானம். ஆனால், பெரும்பாலும் பகல் வேளைகளில் மட்டுமே சொல்லப்படும் பொறைக்கிக்கு , பிறகான வேளையான இரவு என்ற அர்த்தமும் வந்துவிடும். புங்க மரத்தைப் பற்றி சொல்லும்போது புன்னை என்றும் சொல்கிறார். நானறிந்தவரையில் இரண்டும் வெவ்வெறு மரங்கள்.

சில நூறு குடும்பங்கள் கொண்ட கிராமம். அந்தக் குடும்பங்கள் அனைவருமே பொதுவாக உறவினர்களாகவே இருப்பார்கள். உறவினர்களாகாத,  மற்ற சாதியினரும் தொழில் தேவைகளின் அடிப்படையில் கொஞ்சம் பேர் இருப்பார்கள். ஊரைத்தாண்டினால், விரிந்துகிடக்கும் வயல்கள் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் உரியதாக நீண்டுகொண்டே போகும். சிலர் வயல்வெளிகளிலேயே வீடு கட்டிக்கொண்டு  தங்கிவிடுவது உண்டு.கொல்லி அல்லது கொல்லை என்பார்கள். என்னைவிட வயதில் மூத்தவர்களான கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இளைஞர்களுடனும் சுற்றியிருக்கிறேன். அப்போதுதான் நான் நிறையக் கெட்டுப்போனேன் அல்லது கற்றுக்கொண்டேன். காமம் பொதுவாக, கட்டற்றதாகவே இருக்கும். அதற்கான வாய்ப்புகள் நகரச்சூழலைக் காட்டிலும் கிராமங்களில் மிக அதிகம். எண்ணங்களை வேறுவகைகளில் மடைமாற்றிக்கொள்ளும் ஈடுபாடுகள் அவர்களுக்கு கிடையாது. பேச்சியின் வாழ்வு அப்படியான ஒன்றுதான்.

வெள்ளாள கவுண்டர்களில்தான் விதவைகள் வெள்ளைப் புடவை கட்டிக்கொள்வார்கள் . நாங்கள் அப்படியில்லை என்று பேச்சி ஓரிடத்தில் சொல்வாள். வெள்ளைப் புடவை கட்டிய வெள்ளாளர் வீட்டுக் கிழவிகளை பார்த்து, வெள்ளைப்புடவை கட்டியிருப்பதால்தான் வெள்ளாளர்கள் என்கிறார்களோ என்று அப்போது நினைத்திருக்கிறேன். எனில், இந்தக் கவுண்டர்கள் வன்னியர்கள். வன்னியர்களும், கொங்கு வெள்ளாளர்களும் கலந்துவாழும் தர்மபுரி போன்ற பகுதிகளில் வித்தியாசம் தெரிவதற்காக, வன்னியக் கவுண்டர்கள், வெள்ளாளக் கவுண்டர்கள் என்றே சொல்லிக்கொள்வார்கள். சந்தை நாட்களில் இலம்பாடிகள் எனப்படுவோர் எங்கிருந்தோ வந்துபோவார்கள். பழங்குடியினர்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குரைத்துக்கொண்டேயிருக்கும். வண்ணவண்ண ஆடைகளில் கண்ணாடிகள் வட்ட வட்டமாகப் பதிந்திருக்கும். விட்டல்ராவ் எழுதிய கதையில் ஊரில் மற்ற சாதியினர்கள் இருப்பதாக எழுதவில்லை. ஊர்த்தலைவர் முதல் உழைக்கும் அடிமட்டத் தொழிலாளர்வரை ஒரே சாதிக்காரர்கள் என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் வாழ்க்கைப் படி நிலையை காட்டும் சரியான அளவுகோல்தான் இது. ஆனால், நான் பார்த்த கிராமத்தில் தலித்துகள் உண்டு. அவர்களே பொதுவாக விவசாயக்கூலிகள். ஊர் குடியானவர்களும் விவசாயக்கூலி வேலைகள் செய்வதுண்டு.

ஊருக்குள் ரோடு ரோலர் நுழைவதன் அதிர்வை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். சுகவனம் வாத்தியாரின் மேசை கடகட வென ஆடும். அதேபோல், இன்னும் சில காட்சிப்படுத்தல்களை, கதைக்குப் பொருத்தமாக குறியீடாக அமைத்த விதம் நுட்பமானதும் கலாபூர்வமானதுமாகும். பேச்சியை மிரட்டி வற்புறுத்தி சுப்புரு உடலுறவு கொள்ளும்போது, ஆடு கட்டுப்படுத்துவாரின்றி, அத்துமீறி சுதந்திரமாக பேச்சியின் வயலில் மேயத்தொடங்கும். வயதான ஊர்த்தலைவர் மாரியப்ப கவுண்டருக்கு தொடுப்பாக வாழும் பேச்சி, தன் விருப்பம்போல் பீர் முகம்மதுவோடு ஓடிப்போகவிருக்கும் சூழலில், பையப்பனால் பெட்டிக்குள் சிறைப்படுத்தப்பட்ட பொன்வண்டு கொஞ்சம் கொஞ்சமாக பெட்டியைத் திறந்துகொண்டு வெளியேறும். இதுபோல் அழகான குறியீட்டுத்தன்மையிலான காட்சிப்படுத்தல்கள். தான் ஆசிரியராக வேலைபார்த்த நிலப்பகுதியை எழுத்தில் பதியவேண்டுமென்ற வேட்கையுடனே எழுதியிருக்கிறார். அதற்காக, மீண்டும் அந்தக் கிராமங்களுக்குச் சென்று தங்கி சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார். சேலம் ஜில்லா என் ஜில்லா என்கிறார் விட்டல்ராவ். மகிழ்ச்சியாயிருந்தது.

நாவலைப் படித்துமுடித்துவிட்டு இணையத்தில் கொஞ்சம் தேடியபோதுதான் தெரிந்தது, போக்கிடம்  நாவல் என் கருத்துக்கிணங்கவே, சிறந்த நாவலாகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறது என்பது. ஆனால்,  நாவல் பற்றிய வாசிப்பு அனுபவமோ, மதிப்புரைகளோ எனக்குத் தென்படவில்லை. எனவேதான், நான் இங்கே எழுதி பதிவிடுகிறேன். அளவில் சிறியதான நாவல் என்பதால் விரைவில் படித்துவிடலாம். ஆனால் கனமான நாவல்.
Saturday, October 5, 2013

சாவித்ரி 1941நேற்று( 04.10.13) முரசு தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு சாவித்ரி திரைப்படம் திரையிடப்பட்டதை ஆர்வத்தோடு பார்த்தேன். சத்யவான்- சாவித்ரி என்கிற புராணக் கதைதான். ஷாந்தி ஆப்தே என்னும் இந்தி நடிகை, சாவித்ரியாக நடித்திருக்கிறார். தமிழில் நடித்த முதல் வ மாநில நடிகை இவர்தானாம். நாரதர் வேடத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி நடித்திருந்தார். சத்யவானாக இப்படத்தின் இயக்குனர் ஒய் வி ராவ் என்பவரே நடித்திருந்தார்.  நல்ல அழகாய் இருந்ததோடு,  நன்றாக நடிக்கவும் செய்தார். எமனாக நடித்தவர் வி ஏ செல்லப்பா. இவர் பாடும் ஒரு பாடல் நன்றாக இருந்தது.

இப்படத்தில் நடிப்பதற்காகவே, சுமார் ஓராண்டுக்காலம், ஷாந்தி ஆப்தே தமிழ் கற்றுக் கொண்டாராம். தமிழ் கற்றுத்தந்தவர்கள் படத்தின் வசனகர்த்தாவான டி சி வடிவேல் நாயகர் மற்றும் இன்னொரு பெண்மணியாம். ஆனால், இந்தப் படத்தில்  தமிழ் பேச அப்படியொன்றும் சிரமம் ஷாந்தி ஆப்தேக்கு இருந்திருக்காது எனலாம். ஏனெனில், படத்தின் உரையாடல்கள் புராணக்காலத்து கதை என்பதாலோ, அல்லது 1941 கால கட்டம் என்பதாலோ, பெரும்பாலும் வடமொழிச் சொற்களையே நடிகர்கள் அனைவரும் பேசினர். ஆனால், 1941 காலகட்டம் என்று சொல்வதும் பொருத்தமான காரணமாக இருக்கமுடியாது. ஏனெனில், இதே காலக்கட்டத்தில் வெளிவந்த சபாபதி, இதற்கும் முந்தைய சில சமூகக் கதைப் படங்களையும் பார்த்திருக்கிறேன். பேச்சு மொழியில் இந்தப் படத்தினளவுக்கு வடமொழி நடைமுறையில் இருந்திருக்கவில்லை.ஷாந்தி ஆப்தே பார்ப்பதற்கு கொஞ்சம் ஆண்மைத்தனம் கொண்டவராக தெரிகிறார். சில க்ளோசப் காட்சிகளில் அழகாக இருக்கிறார்.

சத்யவானுடன் வீட்டில் தங்கியிருக்கும் காட்சியில் சாவித்ரி சமையல் செய்கிற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது.விறகு அடுப்பு எரிவதும், சப்பாத்திக் கட்டையில் சப்பாத்தி திரட்டுவதாகவும் காட்சி இருக்கிறது. சத்யவான் காலத்திலேயே சப்பாத்திதான் சாப்பிட்டார்களோ? அதுவும், பூரிக்கட்டையில் உருட்டி, திரட்டி.

படத்தின் கதை மிகவும் சின்னது என்பதாலோ என்னவோ, படத்தை இழுக்க, திரைக்கதை அமைக்க திணறியிருக்கிறார்கள். கல்யாணத்தில் மந்திரங்கள் சொல்வது, யாகங்களில் மந்திரங்கள் சொல்வது போன்ற காட்சிகள் நீளமாக உள்ளது. ஒருமுறை யாகம் செய்யும் காட்சியில் கும்பலில் ஒருவராக மட்டுமே நின்றிருந்தார் வி என் ஜானகி.
கே.சாரங்கபாணி பார்ப்பனராக வந்து  நவீன பார்ப்பன மொழியில் பேசுகிறார். (படத்தில் பலர் பேசுவதும் இப்படியேதான்). எனக்கு, இவரைப் பார்த்தால் கே ஏ தங்கவேலுக்கு அண்ணனாக இருப்பாரோ என்று தோன்றும். டி எஸ் துரைராஜும் நடித்திருக்கிறார். கதையை இழுப்பதற்கு உதவியிருக்கிறார். அவ்வளவுதான்.

மாயாஜால காட்சிகள்  கொண்ட படம். ப்ரிண்ட்  நன்றாக இருந்ததால் ஒலியும் ஒளியும் நன்றாக இருந்தது.
நன்றி :   தி இந்து, ராண்டார் கை.


Wednesday, September 18, 2013

உள்ளே வந்துவிட்ட கொசு


உள்ளே வந்துவிட்ட கொசு

வாகாய் கையருகில்
நெடு நேரமாய் தியானித்திருந்த கொசுவை
அடிப்பதுபோல் கை ஓங்க பறந்துவிட்டது
கைக்கெட்டா இடம் சேர்ந்து
அவனைவிட உயரமாகிப்போனது
தன் இமை மயிர் அளவேயான கொசுவை
நசுக்கிவிட பற்கள் கடித்துக்கொண்டு
ரப்பர் பந்தை விட்டெறிந்தான்
12 முறை சென்றுவந்தும்
அவன் இலக்கைத் தாக்கும் தீரம் இளக்காரமாக
அமர்த்தலாய் உட்கார்ந்துகொண்டிருந்தது
ஒரேயொருமுறை அதனருகில் விழுந்த பந்தின்
நுனி தீண்டவியலாத சுவரும் கூரையும்
இணையும் கவைக்குள் குடியேறிவிட்டது
‘எல்லாக் கொசுக்களும் டெங்கு கொசுக்களல்ல
கொசு கடித்த எல்லாரும் டெங்குவில் சாவதுமில்லை’
இயேசுவே அவன் காதில் சமாதானம் உரைத்தும்
டெங்கு பயம் மண்டைக்குள் ர்ர்ரீங்கரித்தது.
இப்போதும் பயனிலாத பந்தையே விட்டெறிய
பட்டுத் திரும்பி எரியும் மின்விளக்கின் மேல் விழுந்தது
நல்லவேளை உடையவில்லை
இப்போது இயேசு ஏதும் சொல்லாமல் கைவிட்டதால்
தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்
‘இதை கொசுவாயிருந்தபோதே அடித்திருக்கலாம்’

Thursday, August 8, 2013

நான் சாகிறேனே

நான் சாகிறேனே
என்பது கூட அல்ல
என் கவலை
எனக்காக உழைத்திட்ட
இந்த என் உடலை
அப்படியே விட்டுவிட்டுப்
போகிறேனே...

Tuesday, July 16, 2013

கதிர்பாரதிக்கு நிறையவே மச்சங்கள்

கதிர்பாரதிக்கு நிறையவே மச்சங்கள்கவிதைகளுக்கு எழுதப்படும் விமர்சனம், கவிதைகளை விட விமர்சகனைப் பொருத்தே அமைந்துவிடக்கூடியதுதானே இயல்பு! நான் எழுதும் விமர்சனத்தில் என்னைக் காட்டிக்கொள்ளும் அச்சத்துடனும், தயக்கத்துடனுமே கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ தொகுப்பைப் பற்றி தொடர்கிறேன்

கதிர்பாரதியின் இயற்பெயரைப் படித்துத் தெரிந்துகொண்டபோது ஏற்பட்ட காரணம் தெரியாத, அல்லது காரணம் தெரிந்த உற்சாகம், அடுத்த பக்கத்தைப் படித்தபோது வடிந்தே போனது. பின்னே என்னவாம்? எனக்கே எனக்கு மட்டும் கடுப்பேற்றக் கூடியது என்று நான் நம்பிக்கொள்ளும், அந்த வரிகள் இதுதான்.
’’ உலக ருசிகளையெல்லாம் ஒன்று திரட்டி என் மனைவி வைக்கும் மீன் குழம்பின் ருசிக்கு சமர்ப்பணம்’’
(எனக்கும்தான் கல்யாணம் ஆகிவிட்டது என்கிற தகவல், தெரியாதவர்களுக்காக)

கதிர்பாரதியின் முதல் தொகுப்பாகவே இருந்தாலும், பெருமையோடும், தைரியமாகவும் தமிழ்கூறும் நல்லுலகின் முன் வைக்கும் தகுதி படைத்த கவிதைகளின் தொகுப்பாகவே இருக்கிறது. பணியும், விருப்பமும் ஒன்றேயாக அமைந்துவிட்ட கதிர்பாரதியின் நற்பேறும், அனுபவமும், அவரது படைப்புகளிலும் வீணாகாமல் பிரதிபலிக்கிறது. கவிதைமொழி, உத்தி என்று கவிதையின் அம்சங்களில் நல்ல தேர்ச்சியோடு இருக்கிறது, கவிதைகள்.

தொகுப்பு குறித்த தொகுப்பான ஒரு பார்வையை வைக்குமுன், ஆங்காங்கே என் பார்வையை முன் வைக்கிறேன். வேறு யாருக்கு இது நெருக்கமாக இல்லாமல் போனாலும், கதிர்பாரதிக்கு நெருக்கமாய் இருக்கலாம்.

‘தூரத்தில் அதிரும் குளம்பொலிக்கேற்ப நுணா மரத்தடியில் ஏறி இறங்குகிறது மார்க்கச்சை ஒன்று’ என்கிற குறைந்தபட்ச சொற்களில் அமைந்த சிறிய வரியில், என் மனக்கண்ணில் விரியும் சலனக் காட்சி பெரியதாயிருக்கிறதால் மொழியை எண்ணி வியந்துபோனேன்.( கருப்பு வெள்ளை காலத்து திரைப்படமாகத்தான் ஓடியது).

உயிர்ப்பந்தல் போன்ற கவிதைகளில் தென்படும் கவிஞனின் விவசாய வாழ்வு எல்லோருக்கும் கிடைத்திடாத பாக்கியம். (இது என்ன? போகப்போக, கதிர்பாரதி, உலகத்திலுள்ள அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெற்றவர் பட்டியலில் சேர்ந்துவிடுவார் போலத் தோன்றுகிறதே!)

’கண்களிலிருந்து ஒளியையும், கொங்கைகளிலிருந்து கூச்சத்தையும்’ என்கிற வரி என்னை நிறையவே சலனமடையச் செய்தது. கொங்கைகள் எப்போதுமே மீறல்கள். அவைகளில் சில கட்டுக்கடங்காத திமிறல்கள். ஆனால், கூச்சம் என்பது அடங்குதல், குறுகுதல், உள்வாங்குதல். ஆனாலுமே கூட கொங்கைகளின் பண்பாக கதிர்பாரதியின் கூற்று பிடித்திருந்தது. ஒரு ஆணாக என் மனம், கொங்கைகளின் விஷயத்தில்  இந்த இரண்டும் கலந்த தன்மையைத்தான் விரும்புகிறது போலும்.

சில கவிதைகளை எனக்கு நானே சிறு சிறு திருத்தங்களை செய்து எனக்குகந்த வகையில் வாசித்துக் கொண்டேன். உதாரணமாக, ‘’ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான்’’ என்கிற நல்ல கவிதையின் கடைசி வரியை நீக்கிவிட்டு.

யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட, புனைவிலேற்றி சொல்லப்பட்ட கவிதைகளை, ஒரு படிமமாக்கி, அப்படிமத்திற்கு பொருந்துகிற ஒரு சூழலை, என் வாசிப்பின் வழி, நான் கண்டுபிடித்துக் கொண்டபோதுதான், அக் கவிதைகள் என்னை வந்தடைகின்றன.இம் மாதிரியான கவிதைகளும் தொகுப்பில் அடக்கம். கோழிக்கால குறிப்புகள் போன்று சில கவிதைகளில் கவிஞரே கண்டுபிடிப்பை எளிதாக்கிவிடுகிறார்.

‘கொண்டலாத்தி குகுகுகுக்கும் கோடை’ என்கிற கவிதை, வெளியிடப்பட்ட காலத்திலேயே என்னை மிகவும் வசீகரித்த கவிதை. வெகு நாட்கள் கழிந்த பின்னும், எத்தனை முறை வாசித்தாலும் அத்தனை முறைகளிலும், அதே வசீகரத்தையும், வாசிப்பின்பத்தையும் இக் கவிதை தக்கவைத்துக்கொண்டிருப்பதே சிறப்பு.

தொகுப்பில் தனித்தயொரு சாயலில், குரலில் அமைந்துள்ள ’லாபங்களின் ஊடுருவல்’ கவிதை சொல் சொல்லாகக் கவர்ந்தும், லௌகீகத்திலிருந்து விலகிய தத்தளிப்பான வாழ்க்கை கொண்டவர்களுக்கு ஆறுதலாகவும் அமைந்திருக்கிறது.

‘வேம்பின் புண்ணியத்தில் அத்தனைக் கசப்பாக இல்லை இந்தக் கோடை’ என்கிற வரியைப் படித்தபோது, ஒரு நிமிடம் தேவதேவனின் பக்கத்து இருக்கையில் கதிர்பாரதியை உட்கார்த்தி வைத்து அழகுப் பார்த்துக் கொண்டது என் உள்ளம்.

சில கவிதைகள், கவிஞனுக்கு ஏற்படுகிற தூண்டுதல்களை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கே ( தேவையில்லை என்றபோதும்) சவால் விடுகின்றன. ஆனால், மகன்களைப் பற்றிய கவிதையில் இந்த சவால் இல்லை. ’’மகன் தந்தைக்காற்றும் உதவி என்பது அவன் தரும் மழலை இன்பங்கள் மட்டுமே போதும். மற்றவையெல்லாம் உபரி’’ என்று ஒருமுறை முக நூலில் எழுதியிருந்தேன்.மகன்களால் நிறைய உதவி பெற்ற பாக்கியசாலியாகவும் இருக்கிறது கதிர்பாரதியின் வாழ்க்கை. ’இந்தாப்பா தண்ணி குடி’ என்கிற ஆறுதலெல்லாம் அதற்கும் மேலான கொடுப்பினையே. நிகழ்வுகளின் மீது, கவிஞன் வைக்கும் படைப்பூக்கமான சித்தரிப்புகளும், சிந்தனைகளும் கவிதைகளை மேலும் சிறப்பாக்குகிறது. கதிர்பாரதியின் கவித்திறனுக்கு எளிதில் சான்றளிக்கக் கூடியனவாக அமைந்துள்ளன மகன்களைப் பற்றிய கவிதைகள்.

சரி, குறைகள் என்று சொல்லிக்கொள்ளும்படியானவற்றை பட்டியலிட்டுவிடுகிறேன்.
-வாசகர்களிடம் நேரடியாக உரையாடும் தன்மையில் நிறைய கவிதைகளை எழுதியிருப்பது. அதிலும், வாசகர் தரப்பில் தானே காயை நகர்த்துவது.
- தமிழ்க் கவிதையில் நிறைய வடமொழிச் சொற்களை கலந்து எழுதியிருப்பது
-தொகுப்பை பக்கங்களின் எண்ணிக்கையில் தோராயமான பாதியாக பிரித்துக்கொண்டால், முதல் பாதி அளவுக்கு பின்பாதியில் சில கவிதைகள் வசீகரிக்காதது.
-விரிப்பின் கசங்களிலும், தலையணை பிதுங்களிலும்- என்கிற வரிகளில் எழுத்துப்பிழை

நடுத்தர வர்க்கத்தினரே பெரும்பாலும் எழுதிக்கொண்டிருக்கும் காலச் சூழலில், பாடுபொருட்களில் அப்படியொன்றும் பெரிய வேறுபாடுகளை பார்த்துவிடமுடியவில்லைதான். கவிஞனின் கூறுமுறையால்தான் கவிதைகள் கவனத்தை ஈர்க்கமுடியும். கதிர்பாரதி நன்றாகவே கவனத்தை ஈர்க்கிறார்.


ஈசல் வார்த்தைகள், மறியின் பச்சையக் கனவுகள், கண்களில் உப்புச் செடி, பத்துத் தலை காமம், மிதவையின் மேல் நோக்கி எழும் ஆன்ம வேட்கை, நீர்ப்பள்ளம் போன்ற கவித்துவமான படைப்பூக்கம் மிகுந்த சொற்றொடர்கள் வாசிப்பின்பத்தை அளிக்கின்றன. வேதாகம மொழிநடையின் தாக்கம் கவிஞரின் மொழியில் நன்கு கலந்திருக்கிறது. வாசித்து கசப்பாகும்படியாகவோ, ஏமாற்றமளிக்கும்படியோ ஒரு கவிதைகூட இல்லை.

மெசியாவின் பெயரால் தலைப்பிடப்பட்டிருந்தாலும், சாத்தானின் குரலே தொகுப்பின் நிறைய இடங்களில் ஒலிக்கிறது. தாபங்களின் சாபங்கள், வாழ்க்கையின் சுமையை சுமக்க முடியாமல் கையறு நிலையில் கொட்டி ஆற்றிக்கொள்ளும் வசைகள், புலம்பல்கள் அவை.
                                           -ச.முத்துவேல்

Thursday, January 31, 2013

உயிர் எழுத்து 4 கவிதைகள்

உறுபசி

சலிப்படைந்த உணவை
வெறுத்து
தூங்கிப்போனான்
வைராக்கியத்தோடு
உறங்காமல் பசி விழித்திருக்க
நள்ளிரவில்
தூக்கம் களைந்து
புரண்டு புரண்டு படுத்தும்
பசி துரத்த
தாளாமல் எழுந்து
பழைய சோற்றை
ஆவேசத்துடன் புசிக்கும்போது
பழைய சோற்றுக்கு
கண்களெல்லாம் ஆனந்தக் கண்ணீர்
உதட்டோரங்களில்
          கூர்வாளாய் மின்னும் கேலிப்புன்னகை

எஸ்.பி.பி மேல் சத்தியம்
வடக்கிலிருந்து
திரும்பிக்கொண்டிருந்தேன்
எஸ்.பி.பி இந்தியில்
பாடிக்கொண்டிருந்தார்
கர்னாடகாவில் கன்னடத்தில்
ஆந்திராவில் தெலுங்கில்
கேரளாவில் மலையாளத்தில்
உலகம் முழுக்க காற்றலைகளில்
விரவியிருக்கும் எஸ்.பி.பியின் குரல்
எஸ்.பி.பியையும் விடாது துரத்திக்கொண்டிருக்கும்.
சுற்றுலாத்தலத்தின் பாறையொன்றில்
பல பெயர்களின் கும்பலில்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயர்
ஆங்கிலத்தில் புதிதாய்க் கீறியிருந்தது
தன் பெயரைப் பொறித்ததாகவும் இருக்கலாம்
எனினும் பொறித்தது
எனக்கும் பிடித்த பாடகர் எஸ்.பி.பி அல்ல
இது எஸ்.பி.பி யின் மேல் சத்தியம்
பாறையில் ஏன் பெயர்களை எழுதுகிறார்கள்?
நான் ஏன் கவிதைகள் எழுதுகிறேன்?


நிர்வாண நீர்
அம்மணம்
அசிங்கமாகிடாத
குழந்தை
நீரை
வாளியிலிருந்து
அள்ளியள்ளி
உச்சந்தலைக்கு மேல் வீசி வீசி
கைகொட்டிச் சிரிக்கிறது
கரைகள், கலன்கள் அணிவித்திருந்த
ஆடைகளைத் துறந்த நீர்
அந்தரத்தில் அம்மணமாய்
களியாட்டம் போட்டுவிட்டு
குழந்தையின் அம்மணத்தின் மேல்
நிர்வாணம் மறைக்க விரும்பா
நிர்வாண ஆடையாய் சரிகிறது


விலக்கப்பட்ட கனி

எங்களுடைய தோட்டத்திலேயே இருந்தாலும்
ஒரு கனி எனக்கு விலக்கப்பட்டிருக்கிறது
இன்னொரு எவனோ புசிப்பதற்காக காத்திருப்பதும்
இடையில் ஒருவன் அதை களவாட முயன்றதும்தான்
என் நெஞ்செரிச்சலான ஏப்பங்களாக வந்துகொண்டேயிருக்கிறது
இப்போது அந்தக் கனி இன்னமும் நன்கு பழுத்து நிற்கிறது
காப்பிக் குடிக்கும்போது கண்களை மூடினால்
கண்களுக்குள்  நிறங்களோடு நின்றாடுகிறது
கடலின் ஆழத்தில் நீந்திக்கொண்டிருக்கும்போதும்
அதன் சொக்கவைக்கும் மணம் நாசியில் ஏறி கிறங்கடித்ததால்
மூச்சுத்திணறி விரைந்து மேலே வந்தேன்
வனம் வனமாய் அலைந்து
திராட்சைப் பழங்கள் முதல்
பலாப்பழங்கள் வரை பறித்து
எனது பசியின் அறையில் நிரப்புகிறேன்
ருசி கொஞ்சம் ஆறியது போலிருக்கிறது
பசி தணிந்தது போல்தானிருக்கிறது
ல தேசத்துப் பழங்களாலும் நிரப்பப்பட்ட
எனது பசியின் அறை  
நடுவில் ஒரு சிறிய வெற்றிடத்தை
விட்டுவைத்திருக்கிறது
எனக்கு விலக்கப்பட்ட கனியின்
அளவிலேயே, உருவிலேயேயிருக்கிறது அவ்
விடம்

 நன்றி- உயிர் எழுத்து ஜனவரி’13