Tuesday, March 18, 2008

"நீ ஏன் பாடறே?"

"நீ ஏன் பாடறே?"

என்று கேட்டான்,என்னோடு தங்கியிருந்த சண்முகசுந்தரம்.25 வயதிலிருந்த என்னைப் பார்த்துக் கேட்கப்பட்ட

இந்தக் கேள்வி எனக்கு மிகப்புதியது.அதிர்ச்சியாகவும் இருந்தது.என்னால் பதில் சொல்ல முடியவில்லை.பதில்

தெரிந்திருந்தால்தானே?என்னை நானே கேட்டுப் பார்த்துக்கொண்டேன்.மேலோட்டமாய்ப் பார்த்தபோது,"தோனிச்சி

பாடினேன்,இந்தப்பாட்டுப் புடிச்சிருந்திருந்தது,பாடினேன்" என்பது போன்ற பதில்களே முதலில் உதித்தது.சற்று

யோசித்துப் பார்த்தபோது வேறு சில பதில்களும் கிடைத்தன.பொதுவாகவே எல்லாவற்றிற்கும் ஒரு ஏன்,எதற்கு,எப்படி,எங்கே என்று அணுகுவதற்கு நாம் கற்பிக்கப்பட்டிருந்தாலும்,அதை செய்துப் பார்க்கும்போது

ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.பல தெளிவுகளைக் கொண்டுவருகிறது.ஊறிப்போன ஒரு விஷயத்தில்,

காலங்காலமாக செய்துகொண்டு வரும் காரியங்க்களில் நாம் இப்படிக் கேள்விகளைக் கேட்டுப்பார்ப்பதில்லை.

"அது அப்படித்தான்' என்று நமக்கு நாமே சமாதானமாகிப்போகிறோம்.நகர்ப்புறத்திலேயே வளர்ந்த எனக்கு ,எங்கள்

ஊரில் எப்போதாவது வந்து போகும் டிரெயின் எந்த ஊரிலிருந்து வருகிறது.எந்த ஊருக்குச் செல்கிறது என்ற கேள்வி

தோன்றவேயில்லை.சூரியன் கிழக்கில் உதிப்பதுப்போல் அது ஒரு வழக்கமான நிகழ்வாகியிருந்தது.மரத்திலிருந்து

ஆப்பிள் விழும்போது,அது ஏன் மேலிருந்து விழுகிறது? என்று புதுமையாய் யோசித்து விடையும் கண்டவர்,

ஐன்ஸ்டீன்.இதே கேள்வி பலருக்கும் அவருக்கும் முன்னமே தோன்றியிருந்தாலும்,அதற்கு விடை காணும் பக்குவம் அவரிடம் மட்டுமே அன்று இருந்தது.மீண்டும் டிரெயின் விவகாரத்திற்கு வருவோம்.என்னுடைய 17 வயதில் ,என்னோடு படிப்பதற்காக, கிராமத்திலிருந்து வந்திருந்த நண்பன்,"இந்த டிரெயின் எங்கயிருந்து வருது?

எங்க போவுது? "என்று உள்ளூர்க்காரன் என்ற முறையில் என்னிடம் கேட்டான்.அதுநாள் வரை அப்படியொரு

கேள்வி எனக்குத் தோன்றவேயில்லை.அதற்கு பதில் தெரியாமலிருந்தபோது, அவன் என்னை அற்பமாய்

பார்த்தது வேறு கதை.நான், உள்ளூரைத் தாண்டாதவன் என்பதாலும்,அப்படி இருந்திருக்கலாம்.அவன் கிராமத்தில்

இருந்து வந்தவன்.அவனுக்கு,இந்த டிரெயின் தனது ஊருக்குப் போகுமா? என்ற தேடல் இருந்திருக்கலாம்.சரி மீண்டும் பாட்டு விஷயத்திற்கு வருகிறேன்.பொதுவாகவே நன்றாகப் பாடும் திறமை உள்ளவர்கள்,நன்றாகப்

படிக்கவும் செய்வார்களாமே! அதனாலேயோ என்னவோ ,நான்தான் எங்கள் வகுப்பில், முதல் ரேங்க்.(நம்புங்க,

அதெல்லாம் அந்தக்காலம்)இந்த சூட்சுமமும்,எனக்கு வேறு ஒரு நண்பண் உணர்த்தியதுதான்.20 வயதில் ,அவன்

என்னிடம் வந்து "நீ நல்லாப்படிப்பல்ல? நல்லப்பாடறவங்க , பொதுவா,நல்லாப் படிப்பாங்க.நான் ஏற்கனவே

வேலை செஞ்ச கம்பெனியிலகூட ஒரு பையன் இருந்தான்.இப்படித்தான்..." என்று சொன்னபோதுதான் நான்

இதைப்பற்றி யோசித்தேன்.உண்மைதான் என்று உணர்ந்துகொண்டேன்.சின்ன வயதிலேயே எல்லாப் பாடல்களையும்,புதுப்படங்க்களிலிருந்து,தெரிந்து வைத்துக்கொண்டுப் பாடுவேன்.இத்தனைக்கும் எங்க்கள் வீட்டில்

அப்போது ஒரு வானொலிப் பெட்டி கூட இருந்ததில்லை.படங்களும் பார்க்கமுடிவதில்லை.ஆனால்,பாடல்கள்

தெரிந்திருத்தப்பதோடு,அதைப்பற்றிய புள்ளி விவரங்களோடும் தெரியும். இதையும் பள்ளிக்கூடத்தில் ஒரு பையன் தான் எனக்கு உணர்த்திணான்."உங்க வீட்ல ரேடியோ இல்ல,டேப் இல்ல.ஆனா,எப்படி எல்லாப் பாட்டும் உனக்குத்

தெரியுது?" என்று கேட்டபோதுதான்,எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது! அதானே? அதேபோல்தான்

படிப்பிலும்.இப்போது திரும்பிப் பார்க்கையில் எனக்கே ஆச்சரியமாகவும்,மகிழ்ச்சியாகவும் உள்ளது.நான் ஏன்

நன்றாகப் படித்தேன்? எப்படி முடிந்தது?இத்தனைக்கும் நோட்ஸ் வாங்கும் வசதியில்லை.டியூஷன் போனது இல்லை.ஒரு சில வருடங்கள் மண்ணெண்ணெய் விளக்கில் கூடப் படித்திருக்கிறேன்.ஆனால்,நான்தான் என்

வகுப்பில் முதல் ரேங்க்.இத்தனைக்கும் சிரத்தை எடித்துப் படிப்பதுக்கூட இல்லை.எப்படிப் பாட்டோ அது போலவே

படிப்பும்.9ம் வகுப்பில் என் வகுப்பு ஆசிரியை என்னிடம் செல்லமாய் திட்டியது நன்றாக நினைவில் உள்ளது.

"டேய் வாலு,அவனுங்கள படிக்கவிடு.உனக்கென்ன?அரட்டை அடிச்சுட்டு, நல்ல மார்க் எடுத்துடுவே. அவனுங்கள

கெடுக்காதே(!)",என்றபோதுகூட எனக்கு அது ஆச்சரியமாகத் தெரியவில்லை.23 வயதிலிருக்கும்போதுதான்

இப்படி ஒருசின்னக் கொடுப்பினை இருப்பதே என் மர மண்டைக்குத் தெரிந்தது.இதுவும் நண்பர்கள் கண்டு வியந்து

சொன்னபோதுதான்.அதேபோல்தான் பாட்டும்.நான் நன்றாகப் பாடுகிறேன் என்பது எனக்கு மற்றவர்கள் சொன்னபோதுதான் தெரிந்தது.9வது படிக்கும்போது ,எனக்குத் தெரியாமலேயே,பாட்டுப் போட்டியில் என் பெயரைக்

கொடுத்துவிட்டிருந்தார்கள் என் நண்பர்கள்.அப்போதெல்லாம் நான் இருக்கும் இடமே எனக்கேத் தெரியாது.எதிலும் ஈடுபடும் அளவுக்கு தன்னம்பிக்கையும்,குடும்பப் பின்புலமும் இல்லாதிருந்தது.ஒரு வித தாழ்வுமனப்

பான்மையோடு உழன்று கொண்டிருந்த காலம் அது.பெயரைக் கொடுத்த நண்பர்களே எனக்குப் பாடலையும் தேர்வு செய்து ,எழுதியும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.ஒரு நண்பணின் வீட்டிற்குச் சென்று,(2கி.மீ.என்பது அப்போது

மிகவும் தூரம்)அவர்கள் வீட்டு டேப் ரெக்கார்டரில் ஓரிரு முறை கேட்டதுதான்.மற்றபடி, அந்தப் பாட்டும் வரிகளும்

கோயிலில் பண்டிகை நாட்களில் காதில் வந்து தானாய் விழுந்ததுதான்."ஆயர்பாடி மாளிகையில்..." என்பதுதான்

அப்பாடல்.என் வீட்டாருக்கு இதெல்லாம் புதுசு.நான் பாடப்போவது குறித்து என்னை விட அவர்கள் படபடப்போடு

இருந்தார்கள்.பாட்டுப்போட்டி நாளும் வந்தது.நல்ல வேளையாக ஆண்,பெண் தனித்தனிப் போட்டி.(பின்ன அவங்களோட போட்டிப் போட முடியுமா?).போட்டிக்கு முன்னாலேயே பாடுகின்ற பசங்களெல்லாம் ஒன்று கூடி பாடிப் பார்ப்பது என்று முடிவெடுத்தனர்.அதில் ஒரு ப்ராமணப் பையன் ,வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்,

இருந்தது மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது.முடிவெடுத்தபடியே,ஒருவருக்கொருவர் பாடிக்காண்பித்தோம்.

எனக்கு என்னவோ எல்லாருமே நன்றாய் பாடுவதாகவே,ஒரேமாதிரியாகவும்தான் இருந்தது.ஆனால் ,எனக்குத்தான்

முதற்பரிசு கிடைக்கும் என்று எல்லோருமே சொல்லிவிட்டார்கள்.அதுவேதான் நடந்தது.என்னை என் வகுப்புத்

தோழர்கள் தோளின்மீது தூக்கிக்கொண்டு ,கூக்குரல் எழுப்பியதும்,கடைக்கு அழைத்துச்சென்று சோடா(!) வாங்கித்

தந்ததும் எனக்குப் புதிய அனுபவம்.பின்னாட்களில், இதுபோன்ற சம்பவங்க்கள் நிறைய நடந்தது.இப்படி வளர்ந்து

வந்த என்னைப்பார்த்து, சண்முகசுந்தரம் ,"நீ ஏன் பாடறே?"ன்னுக் கேட்டா எனக்கு எப்படி இருக்கும்?நீங்களே சொல்லுங்க.அவன் கொஞ்சம் ஞானி.என்னைவிட வயதில் மூத்தவன்.பிறகு இந்தக் கேள்விக்கு பதில்

யோசித்தபோது எனக்கு சில காரணங்கள் பட்டது.

1.நான், நன்றாகப் பாடுகிறேன் என்பதை மற்றவர்களிடம் வெளிப்படுத்திக்கொள்வதற்காகவும்,அவர்கள் என்னை

வியந்து பாராட்டவேண்டும் என்ற அங்கீகாரத்திற்காக ஏங்குகிற மனவேட்கை.

2.தம்பட்டம் அடித்துக்கொள்ளும்,பெருமைகொள்ளும் ஒரு முயற்சி.

3.சற்றுமுன்பாகவோ, அல்லது அன்றைய தினத்தில் கடைசியாகவோக் கேட்டப்பாடல் மனதிற்குள்ளேயே மௌனமாக உழன்று கொண்டிருப்பதை ,குரலெடுத்துப் பாடிவிடுவது ஒருவகையில், வடிகால்.

4.மேலும் கலை என்பது உணர்வுப் பூர்வமானது.இதில்,தத்துவதிற்கோ,ஆராய்ச்சிக்கோ நான் இடம் கொடுப்பதாக

இல்லாமல் இருக்கலாம்.

5.மனோநிலைக்கு,சூழலுக்கு ஏற்ப ஒரு பாடலை இயல்பாய் நினைவில் வரும்போது அதைப்பாடி ,உணர்ச்சியை

வெளிக்காட்டுவது.உதாரணமாக, என் நேசத்திற்கு உரியவள் என்னைக் கடந்து செல்லும்போது, சிரித்துவிட்டுச்

செல்கிறாள் .உடனே ஒரு பரவசம்.உடனே இதே போன்ற சூழலில் இடம்பெற்ற ஒரு திரைப்படப்பாடலைப் பாடி

மகிழ்தல்.(அச்சச்சோப் புன்னகை...)

இப்படியெல்லாம், ஆராய்ந்து,தெளிவு பெறுவதில் ஒரு சிக்கல் இருக்கவே செய்கிறது.என்னவென்றால்,அதன் சுவாரஸ்யம் குறைந்துபோதல்.ஏதோ ஒரு வெறுமை தோன்றுதல்.திரைப்படத்தைப் பார்த்து சிரிக்கிறோம்,அழுகிறோம்,கோபப்படுகிறோம்,பதற்றப்படுகிறோம்.ஆனால், அது வெறும் பிம்பம்தான்,என்று யோசிக்கும்போது அதன் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறதல்லவா?இதனாலேயோ என்னவோ

நான் இப்போதெல்லாம் முன்போலப் பாடிக்கொண்டிருப்பதில்லை.நீங்களே கூடப் பார்க்கலாம்.வாய்விட்டுப்பாடிக்

கொண்டிருக்கும் பெரியவர்கள் குறைவாகவே இருப்பார்கள் அல்லவா?வயது ஏற ஏற இவை குறைந்துபோகிறது.

எனக்கும் அப்படித்தான் குறைந்துவிட்டது.பாட ஆரம்பிக்கும்போதே, சண்முகசுந்தரதின் கேள்விமனதில் எழும்.

சில வேளைகளில் நிறுத்திவிடுவேன்.சில வேளைகளில் அனுமதித்துவிடுவேன்.