Thursday, August 20, 2009

ராழி
வணிக இதழ்களில் இடம்பெறும் ஓவியங்களைப் பார்த்தவுடனேயே யார் வரைந்தது என்பதைச் சொல்லிவிடமுடியும். அந்தளவுக்கு அவ் வோவியங்கள் நம்முடன் இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது.ஒரே மாதிரியான முகச்சாயல்களுடைய மனிதர்கள் ஒவ்வொரு ஓவியருக்கும் பொதுவானது. ராமு என்பவர் பெயரை நான் வெகு நாட்களாக ராழி என்றே நினைத்திருந்தேன். அவர் அப்படித்தான் கையெழுத்திட்டிருப்பார். ஏதோ சுருக்கம்போல என நினைத்துக்கொண்டேன். ( என்னை மாதிரியே இன்னும் சிலரும் நினைத்திருந்தார்கள் என்று தெரியவந்தால் எனக்கு அது சற்று ஆறுதலாகக்கூட இருக்கும். இல்லையென்றால், கடைசிவரை வெட்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்). ஒருமுறை பள்ளித்தோழனோடு பேசிக்கொண்டிருக்கும்போது நான் ராழி என்று சொல்ல அவர்கள் வீட்டாரேச் சிரித்துவிட்டார்கள். பிறகுதான், அது ராமு என்று சொன்னார்கள்.


ம.செ.-மணியம் செல்வன் - வரையும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அனாயாசமாகக் கிறுக்கப்பட்ட கோடுகளைப்போலிருக்கும்.அவர் வரையும் மனிதர்களின் கண்களில் எப்போதும் ஒரு சோகம் இழையோடியிருக்கும். என்னதான் சிரித்தமாதிரி வரைந்தாலும் அந்த சோகமிருக்கும். அச் சோகமே நம்மை அந்தப் படங்களிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடும். ‘உனக்கு என்ன பிரச்னைப்பா?’,’ ஏம்மா நீ இப்படியிருக்கே?’ என்று அந்த ஓவிய மனிதர்களிடம் கேட்கத்தோன்றுவதுபோல் ஒரு பரிவு ஏற்பட்டுவிடும். நாடோடித் தென்றல் படத்தின் விளம்பரச் சுவரொட்டிகளே (போஸ்டர்கள்) ம. செ. ஓவியத்தில்தான் இருந்தது. மேலும் டைட்டிலில் பிரபல ஓவிர்களின் ஓவியங்களையே காட்டும் சில திரைப்படங்களும் உண்டு.(ராஜபார்வை, நாடோடித்தென்றல், இந்திரன் சந்திரன் போன்றவை நினைவுக்கு வருகிறது).வட்டமுகம், சதுர முகம், ஏறின நெற்றி, சிரித்தமுகம் , குழந்தைமுகம் என்றெல்லாம் வகைப்படுத்திக்கொள்கிறோமே, அதுபோல் ஒவ்வொரு ஓவியர்களும் ஒவ்வொரு விதமான மனித முகங்களையே வரைந்திருப்பார்கள்.மாருதி வரையும் பெண்களைப் பார்த்து, பதின் பருவத்தில் கிளுகிளுப்பும், அலைக்கழிப்பும் அடைந்திருக்கிறேன்.ராமு, ஜெ.., போன்றவர்கள் வரையும் படங்கள் என்னை வசீகரிப்பதில்லை. அவர்கள் தவிர அரஸ், ஸ்யாம் என்று நிறைய பேர். இதழ்கள் சார்ந்தும், வகைமை சார்ந்தும் வெவ்வேறு ஓவியர்கள்.

என் முதல் கவிதை வெளியாகியிருந்தபோது அதற்கான ஓவியத்தைப் பார்க்கும் ஆவல் என்னிடம் மிகுதியாயிருந்தது.அலுவலகம் முடித்துவிட்டு நேராகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்கிப்பார்த்தேன். மனோகர் வரைந்திருந்தார். மனம் நிறைவாயிருந்தது. பொருத்தமானதொரு சித்திரம்.அதிலொரு ஆனந்தம். அட! நாமும் ஒன்று எழுதி, அதுவும் புத்தகத்தில் அச்சாகி, அதற்கு ஒரு பிரபல ஓவியர் படம் வரைந்திருக்கிறாரே! அப்படியானால் நம்முடைய கவிதையை அவர் படித்திருப்பாரல்லவா!
குங்குமம் நடத்திய கவிதைத்திருவிழாவில் என் முதல் கவிதை வந்திருந்ததும், அவற்றை தேர்வுசெய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து என்பதும், அவர் தேர்வானவர்களையெல்லாம் அழைத்து சென்னையில் ஒரு பாராட்டுவிழா நடத்தினார் என்பதும் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்தக்கூட்டத்திற்கு ஓவியர் மனோகர் அவர்களும் வந்திருந்தார். நான் அவரிடம் என் கவிதையை நினைவுபடுத்தி, அந்த ஓவியம் குறித்த என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.அவர் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்துகொண்டிருப்பதால், இதழ்களுக்கு நிறைய வரைவதில்லை என்று சொன்னார்.
இணையத்திலும், சில இதழ்களிலும் கூட ஏற்கனவே வரைந்து வைக்கப்பட்டுள்ள ஓவியங்களோ, அல்லது புகைப்படங்களோ தேடியெடுத்துப் பிரசுரிக்கிறோம். இப்படியோரு நிலை நீடிக்கும்பட்சத்தில் ஓவியர்களுக்கும், ஓவியங்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதல்லவா? என்னதான் இருந்தாலும், ஒரு படைப்புக்கு ஏற்ற , தனிப்பட்டமுறையில் அதற்காகவே முக்கியத்துவம் கொடுத்து வரையப்படும் ஓவியங்களில் இருக்கும் நிறைவு மற்றதில் இல்லைதானே.