Tuesday, May 26, 2009

“ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது”- மகாதேவன்

நண்பர் அகநாழிகை பொன். வாசுதேவன் என்னை நீயூ புக் லேண்ட்ஸ் அழைத்துச் சென்றார். அங்குபோவது எனக்கு இதுதான் முதன்முறை. அவர் நிறைய புத்தகங்கள் வாங்கினார். என்னிடம் படித்துமுடிக்கப்படாத புத்தகங்களே நிறைய இருப்பதாலும், அவற்றிலேயே சிலவற்றை மீள் வாசிப்பு செய்து புரிந்துகொள்ள வேண்டிய வகையில் இருப்பதாலும் புத்தகங்கள் வாங்கிவிடக்கூடாது என்கிற தீர்மானமான முன்முடிவோடு சென்றிருந்தேன். ஆர்வக்கோளாறில், புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, வாசு சொன்னாரென இரண்டு கவிதைத் தொகுப்பு புத்தகங்கள் , சிறிய அளவிலானது மட்டும் வாங்கினேன். அவற்றில் ஒன்றுதான் மகாதேவனின் “ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது”. இவரை நான் இதற்குமுன்பு கேள்விப்பட்டதில்லை.

எல்லாமே நல்ல கவிதைகள்.ஒரு அனுபத்தை மட்டும் பகிர்வதாக நிறைய கவிதைகள் சிறுகதைத் தன்மையோடு அமைந்திருந்தது. ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமான, பகிரப்படவேண்டிய அனுபவங்கள், நிகழ்வுகள். சிறுகதைத் தன்மையோடானவை.சுயம் பற்றிய பிம்பம் குறித்து கவலையில்லாமல் வெளிப்படையாக, நேர்மையாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.எல்லாமே எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருப்பதும், மொழி நன்றாக கூடி வந்திருப்பதும் இக் கவிதைகளின் சிறப்பு.

எல்லாமே பெரிய நீண்ட கவிதைகள். எனவே தட்டச்ச எளிதாக இல்லாதபடியாலும், நீங்களும் பார்த்ததும் பயந்து ஓடிவிடக்கூடாது என்பதாலும் ஒரே ஒரு கவிதையை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.இக் கவிதைகூட தேர்ந்தெடுத்த ஒன்று அல்ல.எதேச்சையாக எடுத்த ஒன்றுதான்.

வெளிச்சம் வெப்பமாகத் தொடங்கும் வேளையில்
உடைந்த நடைபாதை வழியே
ஓடி ஓடி வருவாய்
ஷட்டர்களுக்கான திறவுகோல்களுடன்

வாடிக்கையாளர் அற்ற மதிய வேளைகளிலும்
ஷோகேஸ் பொம்மைக்கருகில் நின்றபடி
வெறித்துப் பார்த்திருப்பாய் தகிக்கும் தார்ச்சாலையை

இரவுச்சூடன் ஏற்றி திருஷ்டிக் காய் உடைத்த பின்
மதிய உணவு டிபன் பாக்ஸைக்
கக்கத்தில் இடுக்கியபடி மறைந்து போவாய்
அருகிலிருக்கும் இருளொன்றின் வழியாக

வண்ணத்துணிகளை விரித்துப் போடுவதிலும்
மடிப்புக் கலையாமல் அடுக்கி வைப்பதிலும்
நிபுணத்துவம் அடைந்துவிட்டிருக்கிறாய்

குளிர்சாதன கண்ணாடி அறையிலிருந்து
புன்னகையுடன் மீள கற்றுக்கொண்டுவிட்டிருக்கிறாய்

உனக்குத் தெரியுமா
உன் முதலாளி வீட்டில்
இன்னொரு முதலாளி பிறந்திருப்பது.தமிழினி வெளியீடு
ரூ.20.
முதல் பதிப்பு டிசம்பர் 2000

Thursday, May 14, 2009

தேவதேவனின் கவிதை

”வார்த்தை” என்கிற மாத இதழ் பலரும் அறிந்ததே. ஆனால், இவ் விதழ் இணையத்தில் படிக்கக்கிடைக்கவில்லை என்றே நம்புகிறேன். எனவே, இம்மாத இதழில் இடம்பெற்றுள்ள தேவதேவன் அவர்களின் சில கவிதைகளிலிருந்து எனக்குப் பிடித்த மற்றும் எளிய கவிதை ஒன்றை,இணையத்தில் அல்லாது படிக்கமுடியாதவர்களுடன் பகிரலாம் என்ற நினைப்பில் இப்பதிவு.( வேற ஒன்னும் சொந்தமா எழுதறதுக்கு இல்லன்னு சொல்றதுக்கு, எப்படில்லாம் மூச்சப் பிடிச்சு சமாளிக்க வேண்டியதாயிருக்குது)


தந்தையரும் குழந்தைகளும்

அவன் தன் தச்சுப்பட்டறையில்
உண்மையாகவே அவைகளைச் செய்தாக வேண்டும்
அவன் குழந்தைகள் அவனைச் சுற்றி அங்கே
பொம்மைகளாக அவைகளைச் செய்து விளையாடி மகிழ.

-தேவதேவன்

Monday, May 4, 2009

குங்குமம்... இந்த வாரம்..என் வலைப்பூஊஊ

இந்த வார குங்குமம்  இதழில் என்னுடைய வலைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய முதல் கவிதை வைரமுத்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குங்குமம் வார இதழில்தான் வெளியானது.(ஆகஸ்ட்-2007).அப்போதும் அட்டையில் ஷ்ரேயாதான் முறுவலித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்.இப்போதும் அப்படியே. நமக்கும்(அதாவது எனக்கும்) ஷ்ரேயாவுக்கும் என்னமோ இருக்குதுபோல.வடகரைவேலன் அண்ணாச்சியோட வலைப்பூகூட முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.ஆனால், அவர் இதையெல்லாம் ஒரு பதிவாப் போடல. இப்போதைக்கு பதிவிட சொந்த சரக்கு எதுவுமில்லாததாலும்,அவற்றுக்காக உழைக்க நேரமின்மையாலும், மற்றும் இந்தத் தகவல் அறியாத  நண்பர்கள் பலரோடும் (வெளி மாநிலம், வெளி நாடு) பகிர்ந்துகொள்வதற்காகவும் இந்த இடுகை. தகவல் அளித்த நண்பர் கே. ரவிஷங்கருக்கு நன்றி. குங்குமத்திற்கும் நன்றி.அறிமுகப்படுத்தப்பட்ட இடுகை