Wednesday, October 8, 2014

மெய் சிலிர்ப்பது சொற்ப நேரமே


எனது குழந்தைப் பருவம்
ஓடுதளத்தில்
மிகவிரைவாக ஓடிக்கொண்டிருப்பது
எனது கல்விச்சாலையின்
ஒவ்வொரு வகுப்புகளையும்
அது விரைவாக கடந்து செல்வதிலிருந்தே தெரிகிறது
சன்னலில் மாறும் காட்சிகளும்
அதன் ஓசையும்
புல்லரிக்கவைக்கிறது
இடுப்புப் பட்டை என்னை
இறுக்கிப்பிடித்திருக்கிறது

இப்போது என் இளமைப்பருவம்
விண்ணேறத் துவங்குகிறது
சக்கரத்தில் வழுக்கிச் சென்ற அதற்கு
இப்போது இறக்கைகள் முளைத்துவிட்டன
அது வானில் ஒருபக்கமாய் சாய்ந்து
அரைவட்டம் அடித்துத் திரும்புவது
திகிலும், குதூகலமுமாய் இருக்கிறது
என் ஊரின் மலையுச்சிக்கும் மேலான உயரத்தை
முதன்முதலாய் தாண்டுகிறேன்
மண்ணில் காணும் யாவையும்
நிமிடங்களில் சிறுத்துக்கொண்டேபோக
மேகங்களுக்கிடையில்  தடதடத்து ஊடுருவுகிறது

இப்போது எனது மத்திய பருவம்
தட்டையாக  நத்தையைப்போல் ஊர்ந்துகொண்டிருக்கிறது
பறந்துகொண்டிருப்பதே தெரியாமல்
எல்லா கணங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன
என் சன்னல் திரை
அலைவரிசை துண்டிக்கப்பட்ட தொலைக்காட்சித்திரையாகிவிட்டது
கைக்கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது
இடுப்புப் பட்டையிலிருந்து விடுபட்டுவிட்டேன்
சக்கரை வியாதிக்காரனான நான்
மூத்திரம் பெய்ய எழுகிறேன்

இப்போது எனது முதுமைப்பருவம்
தரையிறங்கிக் கொண்டிருக்கிறது
தலைகீழாக

Friday, July 4, 2014

பொம்மைவானத்தில் ஒரு குருவிகள்
விழித்திருக்கும் வேளையின் மொழி
அறிவதில்லை கனவின் வாக்கியங்களை
                                -முகுந்த் நாகராஜன்
  

 பேருந்தொன்றின் கண்ணாடிகல்லடிபட்டு உடைந்து விழுந்துவிடாமல் ஆனால் விரிசல்களாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். கல்பட்ட மையத்திலிருந்து விரிசல்கள் எல்லாத் திசைகளிலும்,வெவ்வேறு நீள அளவுகளில் இருந்தது. கல்லடி பட்ட கணத்திலேயே விரிசல்கள்விழுந்துவிடுவதைப்போல்ஒரு படைப்பை/கவிதையை படித்து முடித்தவுடனேயே அதை நம் மனம்நன்றாக உணர்ந்துவிடுவதுண்டு. ஆனால்அவற்றை வார்த்தைகளாக மொழிபெயர்க்கும்போது போதாமை சிறிதளவாவது இருக்கும்.  நொறுங்கிய கண்ணாடியை ஓவியமாக வரைவதுபோன்றது இது. இதன்,இன்னொரு பக்கமும் இருக்கிறது. அது ரசித்து மகிழும் லயிப்பு மன நிலையைக் கடந்து,ஆய்வுகொள்ளும் தீவிரத்தை அடையும் அவஸ்தை நிலை. அயர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். தேர்ந்த விமர்சகர்கள் சில வாக்கியங்களிலேயே ஒரு ஆளுமையையோஅல்லது தொகுப்பையோ எடுத்துச் சொல்லிவிடுவார்கள். இவர்கள் புகைப்படக்கருவி கொண்ட வித்தைக்காரகள்போல.அப்படியே நொடிகளில் கண்ணாடியை படம் எடுத்துவிடக்கூடியவர்கள்.

*** 

பரவசம் தரும் வினோதக் கற்பனைகளாலும்சுவைபட  மொழிதலுமான படைப்பூக்கம் நிறைந்த கவிதைகளாலானது ப.தியாகுவின் எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’ எனும் முதல் தொகுப்பு.தேவதச்சன்நரன்முகுந்த் நாகராஜன் போன்றோரிடத்தில் காணப்படும் சில கவிதைகளோடு ஒப்பிட்டு நினைவு கூரத் தோன்றும் வகையில் தியாகுவின் பல கவிதைகள்,மற்றும் செயல்பாட்டுத்தன்மை அமைந்திருக்கிறது. இவர்களைப் போலச் செய்தல் என்ற அர்த்தத்தில் அல்லாமல்அதேயளவு வித்தியாசமான பார்வைகளாலும்படைப்பூக்கத்துடனும் அமைந்திருக்கிறது.

சூரியன் பார்க்கமுடியாததை கவிஞன் பார்க்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால்ஒரு கவிஞனைப்போல் இன்னொரு கவிஞன் பார்க்காமல் வேறுவேறு விதமாகப் பார்க்கிறார்கள். தியாகுவின் கவிதைகளில் தற்குறிப்பேற்றம் மிகச் சிறப்பானது. (அதாவதுஇயல்பான ஒன்றின்மீது ஆசிரியர் ஏற்றும் கற்பனையான அர்த்தம்).  இங்கே வர்ணிப்பதும் தற்குறிப்பேற்றம்தான் என்றாலும்வர்ணிப்பதை நான் இதில் சேர்க்கவில்லை. உதாரணமாகசூரிய காந்திப்பூக்கள் முகம் காட்டி நிற்கும் திசையில்,தோட்டத்தில்  நுழையும் ஒருவன்தன் வருகையைத்தான் அவை லயித்துப்பார்க்கின்றனஅதனால்தான் சூரியன் கடுப்பாக தன்னை சுட்டெரிக்கிறான் என்று அர்த்தம் ஏற்றுவது  தற்குறிப்பேற்றம். அதேசமயம்சூரியகாந்தித் தோட்டத்தைசூரியனின் அந்தப்புரம்’ என்று பெயரிடுவது’ (மிக அழகான) வர்ணனை. இப்படி இரண்டுவிதங்களிலும் தியாகு ரசிக்கவைக்கிறார்.

தியாகுவின் தற்குறிப்பேற்ற அழகால் பிரகாசிக்கும் சில கவிதைகளாக தாக்கவென’, ’மழைக்கவிதை’,போன்ற நிறைய கவிதைகளை சுட்டிக்காட்டமுடிகிறது. எடுத்துக்காட்டாக,

1.
கை கொள்ளுமளவுக்கு கற்கள்
தாக்கவென ஒரு கல்லை
மறு கையிலேந்தி
கண்சுருக்கி
குறி பார்த்து நிற்கும்
சிறுவனிடம்

ஒரேயொரு பாறை
ஓணானின் வசம்

நான்கு கால்களிலும்
பற்றித்தூக்கி
அவனை நோக்கி
எப்படி எறியப்போகிறதென்றுதான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

2.
உடல் நீத்த சிறுமீனின்
எலும்புக்கூடு
இரு உள்ளங்கைகளிடை வைத்து
மூடுகிறேன்
அஃது உடலாகிறது

போன்றவற்றைச் சொல்லலாம். (இந்தக் கவிதையில் அடுத்து வரும் வரிகள் தேவையேயில்லை என்பது என் எண்ணம்) 

சுவைபட மொழிதலுக்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கவிதையைச் சொல்லலாம்.

// கண்ணாடியினுள்ளிலிருந்து ஒன்று
வெளியிலிருந்து ஒன்றாக
ஒன்றையொன்று
கொத்திக்கொள்கின்றன
ஒரு குருவிகள் //

கடைசி வரியைப் படிக்கும்வரை சாதாரணமானவழக்கமான ஒன்றாக இருந்த கவிதை ஒரு குருவிகள் என்பதைப் படித்ததுமே பரவசம் வந்து ஒட்டிக்கொள்கிறது. ஒரு குருவிகள்’, ’நல்ல ரொம்பது’ போன்ற சொற்றொடர்கள் மொழியை ஏமாற்றிஇலக்கணத்தைமீறி ஆனால் மொழியின் வழியாகவே சுவை சேர்க்கின்றன. மேலும்குறைந்த பட்ச வரிகளில்பொருத்தமான சொற்களோடு வரிகளை அடுக்கும் கச்சிதமான கவிதைமொழியும்அது தரும் பரவசமும் தியாகுவின் குறிப்பிடத்தகுந்த பலம்.நேரடிக்கவிதைகள் சில உண்டு. கண்ணாடி அம்மாஇலக்கங்களால் ஆனவன்போன்று பட்டியல் நீள்கிறது.

// ஒரு கை நீரள்ளி
மேல் தெளிக்கிறாள்
துணுக்குற்றதுபோல
கொஞ்சமே அசைந்துகொடுக்கிறது
இன்னும்
உயிரிருக்கும் ஒரு மீன்
அதைத்தான்
தேர்ந்தெடுக்கவேண்டும் நாம் //

யதார்த்தமும்குரூரமும் நிறைந்த இந்தக் கவிதை தொகுப்பின் நேரடிக்கவிதைகளுக்கும்தியாகுவின் ஒட்டுமொத்த கவிதைகளுக்கும் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு. பொம்மை வானம் என்ற கற்பனை அலாதியானது. நினைக்க நினைக்க இனிக்கும் பிரம்மாண்டம் கொண்டது. எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதம் இல்லை’ என்கிற தொகுப்பின் தலைப்பு நன்றாகவே இருந்தாலும் அதைவிட அழுத்தமானகவிதைகளும்சொற்றொடர்களும் தொகுப்பில் கிடைக்கின்றன. தொகுப்புக்கான தலைப்பில் இந்த பொம்மை வானத்தைதியாகு பயன்படுத்தத் தவறிவிட்டார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. அதுவும் நல்லதாகப் போயிற்று. இந்தக் கட்டுரையின் தலைப்பாக அவர் சார்பாக நான் சூட்டிவிட்டேன்.

பேச்சு வழக்கில் நகர்த்திச் சென்று முடிப்பது நெருக்கமாகவும்சுவையளிப்பதாகவும் இருக்கிறது. இனி நீங்கள் அழைக்கலாம் ஹல்லோ நிர்மல்’, ’பாருங்களேன் இங்கேயே  போஸ்ட் ஆபிஸ் இருந்திருக்கிறது’, ’இதை அவனிடம் சொல்லவில்லைஎன்று முடிக்கும் கவிதைகள் போன்றவை உதாரணங்கள்.

இனிப்பை சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்தும்போதுதேநீரின் இனிப்புச் சுவை உள்ளதைவிட மட்டுப்பட்டு தெரியும். அதுபோலதியாகுவின் சில கவிதைகள் வேறுசில கவிதைகளின் சுவையை கொஞ்சம் மட்டுப்படுத்திவிடுகிறது. தொகுப்பாக படிக்காமல் தனியாக படிக்கும்போது அதன் இயல்பான சுவை கூடுதலாய் தெரியும்.

தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் குறையாகஅவை அடுத்த வாசிப்பில் ருசிக்காமல் போய்விடுவதைச் சொல்லலாம். அனிச்ச மலரை முகர்ந்தாலே வாடிவிடும் என்பார்கள். அதுபோலபல கவிதைகள் மீள்வாசிப்பில் தன் பரவசத்தைபுத்துணர்ச்சியை இழந்துவிடுகின்றன. முதல் வாசிப்பில் முழு நிலவைப்போல் தண்ணொளி தரும் கவிதைகள்மறு நாளிலேயே மங்கிவிடுவதுபோல் அடுத்தடுத்த வாசிப்பில் தேய்பிறை நிலவாகிவிடுகிறது. அடங்கா இன்பம் தரும் கவிதைகளும் இருக்கத்தான்செய்கின்றன.

இன்னொரு குறை அவற்றின் முழுமையற்ற நிலை. வர்ணித்தலும்தற்குறிப்பேற்றமும் கவிதையின் ஒரு அங்கம்தானே தவிர அவை மட்டுமே முழு கவிதையாகிவிடாது. விறகுவெட்டிதேவதை கதையை மறு ஆக்கம் செய்த கவிதை, (இதே கதையை நான் மறுஆக்கம் செய்து ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அதைவிடதியாகுவின் கவிதை நன்றாக இருக்கிறது) யானைபார்க்கலாம் நாம்கூண்டுப்பறவை,பைத்தியத்தின் வானம்,குமிழ்கள் அல்ல கிரகங்கள்தேன்சிட்டு போன்ற மேலும் பல கவிதைகள்தற்குறிப்பேற்றத்தோடு சேர்ந்து முழுமையானதாகவும் விளங்கும் கவிதைகளாக சொல்லலாம்..

குழந்தைமைக் கவிதைகளாலான தொகுப்புக்கள் நிறைய வெளியாகிறது. தியாகுவின் தொகுப்பும் ஆங்காங்கே குழந்தைமைக் கவிதைகள் கொண்டிருந்தாலும்குழைந்தைமைக் கவிதைகளின்  தொகுப்பு என்று குறுக்கப்படுவதை  நான் ஏற்கமாட்டேன்.
நான் அண்மையில் வாசித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்த தொகுப்பு என்று சொல்வேன்.

ச.முத்துவேல்

Monday, June 16, 2014

கண்ணாமூச்சி விளையாட்டுஎனது ஊரின்
பழங்காலச் சித்திரம் ஒன்று
என்னிடத்திலிருக்கிறது
மெருகு குறையாமல்

குட்டி வாடகை சைக்கிளில்
ஊரைச் சுற்றி பழகியபோது
கிடைத்தது

இன்றைய ஊரின் சித்திரத்தையும்
என் சித்திரத்தையும்
ஒப்பிட்டு பார்க்கவே பிடிக்கவில்லை
சீ..ச்சீய்...
மலையின் தியானத்தோடு
சந்தையின் இரைச்சலையா 

வேண்டுமானால்
நாங்கள் இருவர் விளையாடிய
கண்ணாமூச்சி விளையாட்டில்
கடைசிவரைக்கும் என்னால்
கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விட்ட
வரதராஜனிடமும்
இதேபோல் ஒரு படம்
நெஞ்சுக்குள் இருக்கும்
அதனுடன் ஒப்பிட்டு அழகு பார்க்கலாம்
அவன் எங்கேதான் ஒளிந்திருக்கிறானோ?

 நன்றி : ஆனந்தவிகடன்  (18.6.14)

Thursday, June 5, 2014

தொழிற்சாலையில் திரியும் பட்டாம்பூச்சிகள்

நவீன வாழ்க்கையின் சிக்கலை அதே காத்திரத்துடன் வெளிப்படுத்த மரபான பழைய வடிவங்களை உடைக்க வேண்டிய திருந்தது. அதன் பிரச்சினைகளும் மன அழுத்தங்களும் அவ்வளவு வீரியமிக்கதாக எழுந்தன. நவீனக் கவிதை இவ்வாறுதான் எழுந்தது எனலாம். அந்தத் துணிச்சல் தந்த உத்வேகத்துடன்தான் மரங்கொத்திச் சிரிப்பு கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 79 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் அனைத்தும் ச.முத்துவேலின் அனுபவத்தில் விளைந்தவை. கவிதைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதருடனும் காட்சியுடனும் முத்துவேலுக்கு ஒரு ஸ்திரமான தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு, உரையாடலாகவோ அக உணர்வாகவோ கவிதைகளில் வெளிப்படுகிறது. இத்தொடர்புப் புள்ளியில்தான் முத்துவேல் தன் கவிதைகளை உருவாக்குகிறார்.

பால்ய கால நண்பன், தனது குழந்தை, அக்கம் பக்கத்து வீட்டு மனிதர்கள் எனப் பெரும்பாலும் மனிதர்களையே முத்துவேல் தன் கவிதைக்குள் சித்திரிக்கிறார். பெரும்பாலான இன்றைய நவீனக் கவிதைகள் மனிதர்களைத் தவிர்த்த உலகையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. இதைத் தவிர்த்து தனக்குள் பாதிப்பை உண்டாக்கிய மனிதர்களுடான அக உணர்வுகளைக் கவிதைகளின் வழியாக வெளிப்படுத்த விரும்புகிறார் என்பது கவனத்துக்குரியது.

அணுமின்சக்திக் கூடத்தில் பணியாற்றும் முத்துவேலின் மனம், தொழிற்கூடப் பூங்காவில் புகுந்த பட்டாம் பூச்சியைப் பிடிக்க ஆர்வம் கொள்கிறது; பயணத்தில் பார்த்த பெண்ணின் கழுத்தில் இருந்த தடத்தைத் தூக்குக் கயிற்றின் தடம் எனப் பிரித்தறிகிறது; தன் பால்ய நண்பனின் தற்போதைய நிலை பரிதாபத்துக்குரியது என்பதைச் சொல்லாமலேயே உணர்கிறது. இன்னும் சில கவிதைக் காட்சிகளில் கரிசனம், பரிவு, சமூக எதிர்வினை ஆகியவற்றையும் முத்துவேல் வெளிப்படுத்துகிறார். இப்படித் தொடர்ந்து கவிஞனின் தனிப்பட்ட குணங்கள் உணர்ச்சிபூர்வ கவிதைகளாக ஆகியுள்ளன. இப்பண்பு தொகுப்புக்குப் பலம் சேர்க்கவில்லை. அதுபோல் கவிதைகள் அனைத்தும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தும் அவற்றின் ஆதாரப் பொருள் தெளிவாக வெளிப்படவில்லை.

முத்துவேல் கவிதைகளுக்கான மிக எளிய மொழியைக் கண்டடைந் துள்ளார். இவரது கவிதைகளுக்குள் முதல் வாசிப்பிலேயே யாரும் எளிதாக நுழைந்து, வெளியேறிவிடவும் முடிகிறது. எளிமையான கவிமொழி பலம் சேர்க்கும்; ஆனால் உறுதியான கட்டமைப்பும், ஆழமும் சிறந்த வாசக அனுபவத்திற்கு அவசியமானவை.


நாங்கள் பார்த்த துறைமுகத்தில் 
தரையோடு பிணைக்கப்பட்டு கப்பல் 
தண்ணீரில் தளும்பிக்கொண்டிருக்க
சுருட்டி மேலிழுத்து வைக்கப்பட்ட
சேறு உலர்ந்த நங்கூரத்தில்
அமர்ந்துகொண்டிருக்கிறது ஒரு பறவை

நங்கூரம் மண்ணுக்கானது
கப்பல் நீருக்கானது
சிறகுகள் வானிற்கானது
மூவுலகும் கைகுலுக்கும்
ஒற்றைப் புள்ளி
அவன் மட்டும் கண்டது. 

ஆற்றலுடன் வெளிப்பட்டுள்ள இந்தக் கவிதை ச.முத்துவேலின் அடுத்த தொகுப்பு சிறப்புடன் வெளிப்படும் என்பதைக் கட்டியம் கூறுகிறது.
                                                                     -மண்குதிரை
நன்றி : மண்குதிரை, தி இந்து தமிழ் நாளிதழ் ( 5.6.14)

Tuesday, May 6, 2014

ஒட்டகச்சிவிங்கியை பாடிய கவிஞன்

அண்மையில் ஒரு வனவிலங்குகள் பூங்காவைச் சுற்றி வந்தபோது, ஷங்கரராம சுப்ரமணியனின் கவிதைகள்  நினைவில் வந்துகொண்டேயிருந்தன. வீடு திரும்பியதும் நினவில் வந்த கவிதைகளை மீண்டும் வாசித்துவிடும் ஆர்வம் துடித்தது. தமிழ் இந்து நாளிதழில் சிறுவர்களுக்கான இணைப்புகள் வெளியாகும் நாட்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விலங்கு பற்றிய தகவல்கள் ஷங்கர் தொகுப்பில் வெளிவருகிறது. பணியாற்றுவதன் நிமித்தம் தன் பங்களிப்பாக செய்யக்கூடியவைகளில் இவற்றையும் செய்கிறாரோ என்று முன்பெல்லாம் நினைத்ததுண்டு. தமிழின் ஒரு சிறந்த கவிஞன் பிழைப்புக்காக இப்படியெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கவேண்டியுள்ளதே என்றுகூட எண்ணி வருந்தியதுண்டு. ஆனால், விலங்குகளின் மேல் ஷங்கருக்கு உள்ள ஈடுபாட்டை இப்போது  உணரமுடிகிறது.ஒட்டகச் சிவிங்கி, மர நாய், சிங்கத்துக்கு பல் துலக்குதல், திரும்பத் திரும்ப இடம்பெறும் காகங்கள், நாய்கள், என்று அவருடைய கவிதைகளில் விலங்குகள்  நிறையவே இடம் பெறுகின்றன.  நானறிந்து ஒட்டகச் சிவிங்கியை கவிதைக்குள் கொண்டுவந்த கவிஞர் ஷங்கர்தான். ஆனால், அவை கவிதைகளில் பெறும் வெவ்வேறு பரிமாணமங்கள் துள்ளலையும், ஆச்சர்யத்தையும் எழுப்பக்கூடியன. அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் என்ற தலைப்பிலேயே விலங்குகளைக் கொண்ட தொகுப்பில்  நான் குறிப்பிடும் நிறைய கவிதைகள் உள்ளன. சந்தோசத்தின் பெயர் தலைபிரட்டை, காகங்கள் வந்த வெயில் போன்றவை மற்ற தொகுப்புகளின்  பெயர்கள். இவருடைய வலைப்பூவின் பெயர் ‘ யானை’.

இதேபோல், ஒருமுறை தக்ஷிணசித்ரா சென்றிருந்தபோது அங்கே மகாபாரதக் கதைகளின் ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சி  நடைபெற்றது, நான் முற்றிலும் எதிர்பாராதது. ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற கண்காட்சியை பற்றியும், அவற்றில் இடம் பெற்ற ஷங்கரின் கவிதைகள் சிலவற்றையும்  இணையதளங்களில் படித்து அறிந்திருந்தேன். எல்லாவற்றையும் பார்க்கவும், படிக்கவும்  நேர்ந்தபோது  நான் மிகவும் உணர்ச்சிகரமான நிலைக்கு ஆளானேன். ஆர்வத்தில் அங்கிருந்துகொண்டே ஷங்கருக்கு தொலைபேசி என் மகிழ்ச்சியைச் சொன்னேன். ஒரு கோளரங்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, தொடர்போடோ அல்லது தொடர்பில்லாமலோ ஷங்கரின் நீலமுட்டை அரங்கு கவிதை நினைவில் தலை நீட்டியது.
ஷங்கரின் கவிதைகள் பலவும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கும்போதே, நான் அவருடைய புத்தகங்களையும், அவருடைய தொலைபேசி எண்ணையும் வாங்கிவைத்துக்கொண்டேன். மிதக்கும் இருக்கைகளின் நகரம் என்ற தொகுப்பு இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒரு நாள் அவரின் கவிதைகள் பிடிபடக்கூடும் என்ற என் நம்பிக்கை இப்போது நனவாகியிருக்கிறது என்பதிலும் எனக்கு ஒரு தன்னம்பிக்கையும், உற்சாகமும் கிடைக்கிறது.