Wednesday, May 28, 2008

குப்பை

"ஏன்டீ! வூட்டுக்காரன் வர்ற நேரம் தெரியாதா ஒனக்கு? அப்பத்தான் பக்கத்து வீட்டுப் பொம்பளகிட்ட பேசறதுக்குப் போயிடுவியா?வூடு தங்கணுமின்னாலே உனக்கேன்டீ அப்டி கசக்குது?" என்று வீட்டுக்குள் நுழைந்த அஞ்சலையைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான் மாணிக்கம்."இல்ல...தே!இப்பத்தான் கொஞ்சம் முன்னால போனேன்.அவுங்க வூட்டு ரேசன் கர்ட வாங்கினுப் போயிருந்தேன்.அத்தக் குடுத்துட்டு வரலாமின்னுதான் போனேன்.அப்டியே கொஞ்ச நேரம் பேசினு இருந்திட்டோம்" என்று சமாதானம் சொல்லியபடியே கலைந்து கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்தத் துவங்கினாள்."ஆங்...வூட்டப்பாரு,எம்மாங் குப்பைனு . பெருக்கறதுக்குக்கூட முடியலியா உனக்கு?வூடு வூடு மாதிரியாடி இருக்குது?இதுக்கெல்லாம் உனுக்கு எப்டீடி நேரமிருக்கும்?அதான், உனுக்கு ஊருகதை பேசறதுக்கே நேரம் பத்தலையே" என்றான் ஆவேசமாக."அதில்ல...இன்னிக்கு ரேசன் கடை,பஜாருன்னு கொஞ்சம் வெளியிலயே வேலயா இருந்திட்டேன்.நீ வர்றதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாலதான் நானும் வூட்டுக்கே வந்தேன்",என்றாள். "ஏய்...நிறுத்துடீ...ஏதாவது சாக்கு சொல்லினு..." என்றான் மாணிக்கம்.
"என்னாய்யா ஒரேடியா குதிக்கிறே? இன்னிக்கு ஒரு நா தானே, இப்படி ஆயிடுச்சு.இதுக்குப்போயி...!நான் வூட்டு வேலைக்குப் போறேனே ஆபிசர் வூடு...அவ்ளோ பெரிய ஆபீசர்கூட யாரையும் எதிர்பார்க்காம சமயத்துல அவரே பெருக்கிக்குவாரு. இன்னிக்கு ஒரு நாள் நான் இல்லன்னா,நீயே பெருக்கக்கூடாதா?" என்று சொல்லியபடி குனிந்து பெருக்கிக்கொண்டே வந்தவள், எதேச்சையாக நிமிர்வதற்கும் அவள் சற்றும் எதிர்பாராத வகையில் அவள் கன்னத்தில் பளாரென்று மாணிக்கம் அறைவதற்கும் சரியாக இருந்தது.அடிவாங்கி உறைந்துபோய் நின்றுகொண்டிருந்தாள் அஞ்சலை."அடிங்...!யாரப் பாத்து பெருக்ககூடாதான்னுக் கேக்கற? உனுக்கு அவ்ளோ கொழுப்பயிடுச்சா?என்னை என்ன பொட்டைன்னு நெனச்சியா?இருடி...உன்னை வந்து வச்சிக்கிறேன்"என்று ஆவேசத்தோடு திட்டிக்கொண்டே ,வாசலில் கிடந்த ரப்பர் செருப்புகளை மாட்டிக்கொண்டு ,காதில் செருகியிருந்த ஒற்றை பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு வெளியேறினான்.
மறுநாள் காலை.வழியில் சைக்கிள் பஞ்சராகிப்போனதால் தாமதமாகிவிடவே ,பதற்றத்தோடு அவசர அவசரமாக அலுவலகத்துள் நுழைந்தான்."என்ன.. மாணிக்கம்!இப்பத்தான் விடிஞ்சுதா? ம்..ஆஃபிஸ் எப்படியிருக்குதுன்னுப் பார்த்தீங்களா?ஒன்னு,காலைல சீக்கிரம் வேலையை முடிக்கணும்.இல்லன்னா,அட்லீஸ்ட் சாயந்தரமேயாவது வீட்டுக்குப் போறதுக்கு முன்னால க்ளீன் பண்ணிட்டுப் போகணும்.ரெண்டுங்கிடையாது...பார்த்தீங்களா...எவ்வளவு மோசமயிருக்குதுன்னு!ம்...மசமசன்னு நிக்காதீங்க.சீக்கிரம் என் ரூமை க்ளீன் பண்ணுங்க" என்று கத்திவிட்டு வெளியே வந்தாள் மேனேஜர் விசாலாட்சி ."சரிங்கம்மா" என்று அவசரமாக துடைப்பத்தை எடுக்கப் போனான் மாணிக்கம்.
நன்றி-கல்கி(01-06-08)