சன் டிவியில் முதன்மை செய்தி
ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா வாசுதேவன். அதற்கும் முன்பே பத்திரிக்கைகளிலும், சன் டி.வி.யுடன் கூடுதலாக சில தொலைக்காட்சிகளிலும் பணி செய்தவர். ஏராளமான முதன்மைகளுக்குச் சொந்தக்காரர்.
இந்திய மொழிகளில் முதன்முதலில்
தனியார் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது, முழு நேர செய்தி தொலைக்காட்சி, காணொலி ஊடகத்திற்கான செய்தி வடிவத்தை உருவாக்கியது, செய்திகளை முந்தித் தந்தது, புதிய கலைச்சொற்களை உருவாக்கி அளித்தது போன்ற மேலும் பல முதன்மைகளுக்கு
சொந்தக்காரர்.
மிகவும் நெருக்கடியான வேலையிலிருந்து
மீண்டு தற்போது பணி ஓய்வில் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக சன் டி.வி.யில் செய்த பணிகள் சிலவற்றை மட்டும் அவர் எழுதிப் பதிவிட்டுள்ளார். அதுதான் மீண்டும் தலைப்புச் செய்திகள் என்ற
நூல்.
ஊடகத்தின் வலிமையை ஓரளவு
உணர்ந்தே இருந்தாலும், இந்த நூலை படிக்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. செய்திகளை சேகரித்துத் தொகுத்து அளிப்பது என்பதையும் தாண்டி, செய்திகளை உருவாக்கவும் செய்கிறார்கள். ’’நல்ல செய்திக்கான அடையாளம் என்பது சமூகத்தில் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். அல்லது ஒரு அநீதிக்கு எதிராக மக்களை திரட்டுவதாக இருக்க வேண்டியது அவசியம்’’ என்கிறார், ராஜா வாசுதேவன். அதற்காக, கீதை உரைத்த கண்ணன் வழியில், சில நியாயங்களைச் செய்வதற்காக சில அத்துமீறல்களை செய்வதும் தவறில்லை என்பது
ஊடக அறமாகவே தெரிகிறது.
‘தமிழ்நாட்டு அரசியலையே மாற்றிப் போட்டன’ என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார். இது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்றே படிக்கத் துவங்கினேன். ஆனால், உண்மை என்று விளங்கியது. குறிப்பிடப்பட்டுள்ளவை எல்லாமே பெரிய பெரிய சம்பவங்கள். அவற்றை இங்கே சொல்லிவிடுவது வாசிப்புக்கு இடையூறாகிவிடும்
என்பதால் சொல்லப்போவதில்லை.
1996
ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 20
ஆண்டுகள் தமிழக, இந்திய வரலாற்று நிகழ்வுகள், ஆளுமைகள், ஊடகத் தொழில் நுட்ப வளர்ச்சி நிலை போன்றவற்றை உள்ளடக்கியுள்ளன. தலைப்புச் செய்திகளாக சிலவற்றைதான் குறிப்பிட முடியும். அவற்றுள் எதை முன்வைத்து வரிசைப்படுத்துவது என்ற சிக்கல்
எழும். ஆசிரியர் முன்வைத்தவையும் தலைப்புச் செய்திகள் மட்டும்தான். இந்த நிகழ்வுகளையெல்லாம் நானும் கடந்து வந்தபோதிலும், இப்போது படிக்கும்போது கூடுதலாகவும், கோர்வையாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது. ஏற்கனவே அறிந்த செய்திகள்தான் என்பதால் ‘மீண்டும்’ தலைப்புச் செய்திகள்.
தலைப்புச் செய்திகளில் இருக்கும் பரபரப்பும், மர்மமும் பின்னர் வரும் விரிவான செய்தித் தொகுப்பில் விளக்கமும், புரிதலும் அடைகிறது. செய்திகளைக் கேட்டு முழுதும் முடிந்து மீண்டும் தலைப்புச் செய்திகளைக் கேட்கும்
போது அதன் மீது மறுபடியும் கவனம் குவியும். அப்போது இன்னும் தெளிவாக இருக்கும். அதுபோலவே இந்த நூல், நான் கடந்த, அறிந்த காலச் செய்திகளாலாயினும், வாசித்த பிறகு மேலும் துலக்கமடைகிறது. எனவே, நூலின் தலைப்பு மிகவும் பொருத்தமாகவும், அழகாகவும் இருக்கிறது. (தலைப்பைச் சூட்டியவர் கவிஞர் சுகுமாரன்!!!)
ஆசிரியர் பழைய நாட்களை நன்றாக நினைவு கூர்ந்து எழுதியுள்ளார். அந்த வகையில் ஒரு குறிப்பு நூலாக கைவசமிருக்க வேண்டிய நூல்
எனலாம்.
எழுதப்பட்ட உத்தியில், புனைவு வடிவில் எழுதியுள்ளார். எனவே, வாசிப்பில் சரளமும், ஈடுபாடும் கூடுகிறது. ஒவ்வொரு பகுதியையும் கமுக்கம் வைத்து தொடங்குவது, முடிப்பது, உரையாடல்கள் போன்றவற்றால் பரபரப்பான புலனாய்வு நாவல்களை நினைவுபடுத்துகிறது. ஆங்காங்கே நையாண்டி கலந்த துணிச்சலான எழுத்து. அத்தியாயங்களை துவக்கும்போது தனது பட்டறிவால் கிடைத்த கருத்துகளை பதிவிடுவது
நூலின் மதிப்பை கூட்டுகிறது.
சன் டிவி என்பது நாம் நன்கறிந்தவாறு
ஒரு கட்சியினருடையது. எனவே, அந்தக் கட்சியின் சார்புத் தன்மையே பொதுவாக்க் காணப்படுகிறது. எனினும், விதிவிலக்கான சில பகுதிகள் பாராட்டப்பட வேண்டியவை. இன்னும் சொல்ல அவருக்கு நிறைய இருக்கிறது என்கிறார். உண்மைதான் என்பதை நாமே உணரலாம். எடுத்துக்காட்டாக, அந்த நாட்களில் பரபரப்பாக பேசப்பட்ட வீரப்பன் இந்த நூலில் பெரிதாக தென்படவில்லை. நூலை சட்டென்று முடித்துவிட்டார். இன்னும் கொஞ்சம் பதிவு செய்திருக்கலாமே என்று வாசகரை எண்ணவைப்பது
ஒருவகையில், நூலின் மதிப்பிற்கான அங்கீகாரம். ஆங்காங்கே
சொற்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. (சந்திப் பிழைகள் கண்டுபிடிக்க எனக்குத் தெரியாது)
அவை அடுத்த பதிப்புகளில் களையப்பட விரும்புகிறேன்.
(நான் வாங்கியதைவிடவும் குறைவாக) இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது.