Friday, July 4, 2014

பொம்மைவானத்தில் ஒரு குருவிகள்




விழித்திருக்கும் வேளையின் மொழி
அறிவதில்லை கனவின் வாக்கியங்களை
                                -முகுந்த் நாகராஜன்
  

 பேருந்தொன்றின் கண்ணாடி, கல்லடிபட்டு உடைந்து விழுந்துவிடாமல் ஆனால் விரிசல்களாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். கல்பட்ட மையத்திலிருந்து விரிசல்கள் எல்லாத் திசைகளிலும்,வெவ்வேறு நீள அளவுகளில் இருந்தது. கல்லடி பட்ட கணத்திலேயே விரிசல்கள்விழுந்துவிடுவதைப்போல், ஒரு படைப்பை/கவிதையை படித்து முடித்தவுடனேயே அதை நம் மனம்நன்றாக உணர்ந்துவிடுவதுண்டு. ஆனால், அவற்றை வார்த்தைகளாக மொழிபெயர்க்கும்போது போதாமை சிறிதளவாவது இருக்கும்.  நொறுங்கிய கண்ணாடியை ஓவியமாக வரைவதுபோன்றது இது. இதன்,இன்னொரு பக்கமும் இருக்கிறது. அது ரசித்து மகிழும் லயிப்பு மன நிலையைக் கடந்து,ஆய்வுகொள்ளும் தீவிரத்தை அடையும் அவஸ்தை நிலை. அயர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். தேர்ந்த விமர்சகர்கள் சில வாக்கியங்களிலேயே ஒரு ஆளுமையையோ, அல்லது தொகுப்பையோ எடுத்துச் சொல்லிவிடுவார்கள். இவர்கள் புகைப்படக்கருவி கொண்ட வித்தைக்காரகள்போல.அப்படியே நொடிகளில் கண்ணாடியை படம் எடுத்துவிடக்கூடியவர்கள்.

*** 

பரவசம் தரும் வினோதக் கற்பனைகளாலும், சுவைபட  மொழிதலுமான படைப்பூக்கம் நிறைந்த கவிதைகளாலானது ப.தியாகுவின் ‘எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’ எனும் முதல் தொகுப்பு.தேவதச்சன், நரன், முகுந்த் நாகராஜன் போன்றோரிடத்தில் காணப்படும் சில கவிதைகளோடு ஒப்பிட்டு நினைவு கூரத் தோன்றும் வகையில் தியாகுவின் பல கவிதைகள்,மற்றும் செயல்பாட்டுத்தன்மை அமைந்திருக்கிறது. இவர்களைப் போலச் செய்தல் என்ற அர்த்தத்தில் அல்லாமல், அதேயளவு வித்தியாசமான பார்வைகளாலும், படைப்பூக்கத்துடனும் அமைந்திருக்கிறது.

சூரியன் பார்க்கமுடியாததை கவிஞன் பார்க்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், ஒரு கவிஞனைப்போல் இன்னொரு கவிஞன் பார்க்காமல் வேறுவேறு விதமாகப் பார்க்கிறார்கள். தியாகுவின் கவிதைகளில் தற்குறிப்பேற்றம் மிகச் சிறப்பானது. (அதாவது, இயல்பான ஒன்றின்மீது ஆசிரியர் ஏற்றும் கற்பனையான அர்த்தம்).  இங்கே வர்ணிப்பதும் தற்குறிப்பேற்றம்தான் என்றாலும், வர்ணிப்பதை நான் இதில் சேர்க்கவில்லை. உதாரணமாக, சூரிய காந்திப்பூக்கள் முகம் காட்டி நிற்கும் திசையில்,தோட்டத்தில்  நுழையும் ஒருவன், தன் வருகையைத்தான் அவை லயித்துப்பார்க்கின்றன, அதனால்தான் சூரியன் கடுப்பாக தன்னை சுட்டெரிக்கிறான் என்று அர்த்தம் ஏற்றுவது  தற்குறிப்பேற்றம். அதேசமயம்சூரியகாந்தித் தோட்டத்தை, ’சூரியனின் அந்தப்புரம்’ என்று ’பெயரிடுவது’ (மிக அழகான) வர்ணனை. இப்படி இரண்டுவிதங்களிலும் தியாகு ரசிக்கவைக்கிறார்.

தியாகுவின் தற்குறிப்பேற்ற அழகால் பிரகாசிக்கும் சில கவிதைகளாக ’தாக்கவென’, ’மழைக்கவிதை’,போன்ற நிறைய கவிதைகளை சுட்டிக்காட்டமுடிகிறது. எடுத்துக்காட்டாக,

1.
கை கொள்ளுமளவுக்கு கற்கள்
தாக்கவென ஒரு கல்லை
மறு கையிலேந்தி
கண்சுருக்கி
குறி பார்த்து நிற்கும்
சிறுவனிடம்

ஒரேயொரு பாறை
ஓணானின் வசம்

நான்கு கால்களிலும்
பற்றித்தூக்கி
அவனை நோக்கி
எப்படி எறியப்போகிறதென்றுதான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

2.
உடல் நீத்த சிறுமீனின்
எலும்புக்கூடு
இரு உள்ளங்கைகளிடை வைத்து
மூடுகிறேன்
அஃது உடலாகிறது

போன்றவற்றைச் சொல்லலாம். (இந்தக் கவிதையில் அடுத்து வரும் 3 வரிகள் தேவையேயில்லை என்பது என் எண்ணம்) 

சுவைபட மொழிதலுக்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கவிதையைச் சொல்லலாம்.

// கண்ணாடியினுள்ளிலிருந்து ஒன்று
வெளியிலிருந்து ஒன்றாக
ஒன்றையொன்று
கொத்திக்கொள்கின்றன
ஒரு குருவிகள் //

கடைசி வரியைப் படிக்கும்வரை சாதாரணமான, வழக்கமான ஒன்றாக இருந்த கவிதை , ஒரு குருவிகள் என்பதைப் படித்ததுமே பரவசம் வந்து ஒட்டிக்கொள்கிறது. ’ஒரு குருவிகள்’, ’நல்ல ரொம்பது’ போன்ற சொற்றொடர்கள் மொழியை ஏமாற்றி, இலக்கணத்தைமீறி ஆனால் மொழியின் வழியாகவே சுவை சேர்க்கின்றன. மேலும், குறைந்த பட்ச வரிகளில், பொருத்தமான சொற்களோடு வரிகளை அடுக்கும் கச்சிதமான கவிதைமொழியும், அது தரும் பரவசமும் தியாகுவின் குறிப்பிடத்தகுந்த பலம்.நேரடிக்கவிதைகள் சில உண்டு. கண்ணாடி அம்மா, இலக்கங்களால் ஆனவன், போன்று பட்டியல் நீள்கிறது.

// ஒரு கை நீரள்ளி
மேல் தெளிக்கிறாள்
துணுக்குற்றதுபோல
கொஞ்சமே அசைந்துகொடுக்கிறது
இன்னும்
உயிரிருக்கும் ஒரு மீன்
அதைத்தான்
தேர்ந்தெடுக்கவேண்டும் நாம் //

யதார்த்தமும், குரூரமும் நிறைந்த இந்தக் கவிதை தொகுப்பின் நேரடிக்கவிதைகளுக்கும், தியாகுவின் ஒட்டுமொத்த கவிதைகளுக்கும் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு. பொம்மை வானம் என்ற கற்பனை அலாதியானது. நினைக்க நினைக்க இனிக்கும் பிரம்மாண்டம் கொண்டது. ’எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதம் இல்லை’ என்கிற தொகுப்பின் தலைப்பு நன்றாகவே இருந்தாலும் அதைவிட அழுத்தமானகவிதைகளும், சொற்றொடர்களும் தொகுப்பில் கிடைக்கின்றன. தொகுப்புக்கான தலைப்பில் இந்த பொம்மை வானத்தை, தியாகு பயன்படுத்தத் தவறிவிட்டார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. அதுவும் நல்லதாகப் போயிற்று. இந்தக் கட்டுரையின் தலைப்பாக அவர் சார்பாக நான் சூட்டிவிட்டேன்.

பேச்சு வழக்கில் நகர்த்திச் சென்று முடிப்பது நெருக்கமாகவும், சுவையளிப்பதாகவும் இருக்கிறது. ’இனி நீங்கள் அழைக்கலாம் ஹல்லோ நிர்மல்’, ’பாருங்களேன் இங்கேயே  போஸ்ட் ஆபிஸ் இருந்திருக்கிறது’, ’இதை அவனிடம் சொல்லவில்லை’, என்று முடிக்கும் கவிதைகள் போன்றவை உதாரணங்கள்.

இனிப்பை சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்தும்போது, தேநீரின் இனிப்புச் சுவை உள்ளதைவிட மட்டுப்பட்டு தெரியும். அதுபோல, தியாகுவின் சில கவிதைகள் வேறுசில கவிதைகளின் சுவையை கொஞ்சம் மட்டுப்படுத்திவிடுகிறது. தொகுப்பாக படிக்காமல் தனியாக படிக்கும்போது அதன் இயல்பான சுவை கூடுதலாய் தெரியும்.

தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் குறையாக, அவை அடுத்த வாசிப்பில் ருசிக்காமல் போய்விடுவதைச் சொல்லலாம். அனிச்ச மலரை முகர்ந்தாலே வாடிவிடும் என்பார்கள். அதுபோல, பல கவிதைகள் மீள்வாசிப்பில் தன் பரவசத்தை, புத்துணர்ச்சியை இழந்துவிடுகின்றன. முதல் வாசிப்பில் முழு நிலவைப்போல் தண்ணொளி தரும் கவிதைகள், மறு நாளிலேயே மங்கிவிடுவதுபோல் அடுத்தடுத்த வாசிப்பில் தேய்பிறை நிலவாகிவிடுகிறது. அடங்கா இன்பம் தரும் கவிதைகளும் இருக்கத்தான்செய்கின்றன.

இன்னொரு குறை அவற்றின் முழுமையற்ற நிலை. வர்ணித்தலும், தற்குறிப்பேற்றமும் கவிதையின் ஒரு அங்கம்தானே தவிர அவை மட்டுமே முழு கவிதையாகிவிடாது. விறகுவெட்டி, தேவதை கதையை மறு ஆக்கம் செய்த கவிதை, (இதே கதையை நான் மறுஆக்கம் செய்து ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அதைவிட, தியாகுவின் கவிதை நன்றாக இருக்கிறது) யானை, பார்க்கலாம் நாம், கூண்டுப்பறவை,பைத்தியத்தின் வானம்,குமிழ்கள் அல்ல கிரகங்கள், தேன்சிட்டு போன்ற மேலும் பல கவிதைகள்தற்குறிப்பேற்றத்தோடு சேர்ந்து முழுமையானதாகவும் விளங்கும் கவிதைகளாக சொல்லலாம்..

குழந்தைமைக் கவிதைகளாலான தொகுப்புக்கள் நிறைய வெளியாகிறது. தியாகுவின் தொகுப்பும் ஆங்காங்கே குழந்தைமைக் கவிதைகள் கொண்டிருந்தாலும், குழைந்தைமைக் கவிதைகளின்  தொகுப்பு என்று குறுக்கப்படுவதை  நான் ஏற்கமாட்டேன்.
நான் அண்மையில் வாசித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்த தொகுப்பு என்று சொல்வேன்.

- ச.முத்துவேல்

Monday, June 16, 2014

கண்ணாமூச்சி விளையாட்டு



எனது ஊரின்
பழங்காலச் சித்திரம் ஒன்று
என்னிடத்திலிருக்கிறது
மெருகு குறையாமல்

குட்டி வாடகை சைக்கிளில்
ஊரைச் சுற்றி பழகியபோது
கிடைத்தது

இன்றைய ஊரின் சித்திரத்தையும்
என் சித்திரத்தையும்
ஒப்பிட்டு பார்க்கவே பிடிக்கவில்லை
சீ..ச்சீய்...
மலையின் தியானத்தோடு
சந்தையின் இரைச்சலையா 

வேண்டுமானால்
நாங்கள் இருவர் விளையாடிய
கண்ணாமூச்சி விளையாட்டில்
கடைசிவரைக்கும் என்னால்
கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விட்ட
வரதராஜனிடமும்
இதேபோல் ஒரு படம்
நெஞ்சுக்குள் இருக்கும்
அதனுடன் ஒப்பிட்டு அழகு பார்க்கலாம்
அவன் எங்கேதான் ஒளிந்திருக்கிறானோ?

 நன்றி : ஆனந்தவிகடன்  (18.6.14)

Thursday, June 5, 2014

தொழிற்சாலையில் திரியும் பட்டாம்பூச்சிகள்

நவீன வாழ்க்கையின் சிக்கலை அதே காத்திரத்துடன் வெளிப்படுத்த மரபான பழைய வடிவங்களை உடைக்க வேண்டிய திருந்தது. அதன் பிரச்சினைகளும் மன அழுத்தங்களும் அவ்வளவு வீரியமிக்கதாக எழுந்தன. நவீனக் கவிதை இவ்வாறுதான் எழுந்தது எனலாம். அந்தத் துணிச்சல் தந்த உத்வேகத்துடன்தான் மரங்கொத்திச் சிரிப்பு கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 79 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் அனைத்தும் ச.முத்துவேலின் அனுபவத்தில் விளைந்தவை. கவிதைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதருடனும் காட்சியுடனும் முத்துவேலுக்கு ஒரு ஸ்திரமான தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு, உரையாடலாகவோ அக உணர்வாகவோ கவிதைகளில் வெளிப்படுகிறது. இத்தொடர்புப் புள்ளியில்தான் முத்துவேல் தன் கவிதைகளை உருவாக்குகிறார்.

பால்ய கால நண்பன், தனது குழந்தை, அக்கம் பக்கத்து வீட்டு மனிதர்கள் எனப் பெரும்பாலும் மனிதர்களையே முத்துவேல் தன் கவிதைக்குள் சித்திரிக்கிறார். பெரும்பாலான இன்றைய நவீனக் கவிதைகள் மனிதர்களைத் தவிர்த்த உலகையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. இதைத் தவிர்த்து தனக்குள் பாதிப்பை உண்டாக்கிய மனிதர்களுடான அக உணர்வுகளைக் கவிதைகளின் வழியாக வெளிப்படுத்த விரும்புகிறார் என்பது கவனத்துக்குரியது.

அணுமின்சக்திக் கூடத்தில் பணியாற்றும் முத்துவேலின் மனம், தொழிற்கூடப் பூங்காவில் புகுந்த பட்டாம் பூச்சியைப் பிடிக்க ஆர்வம் கொள்கிறது; பயணத்தில் பார்த்த பெண்ணின் கழுத்தில் இருந்த தடத்தைத் தூக்குக் கயிற்றின் தடம் எனப் பிரித்தறிகிறது; தன் பால்ய நண்பனின் தற்போதைய நிலை பரிதாபத்துக்குரியது என்பதைச் சொல்லாமலேயே உணர்கிறது. இன்னும் சில கவிதைக் காட்சிகளில் கரிசனம், பரிவு, சமூக எதிர்வினை ஆகியவற்றையும் முத்துவேல் வெளிப்படுத்துகிறார். இப்படித் தொடர்ந்து கவிஞனின் தனிப்பட்ட குணங்கள் உணர்ச்சிபூர்வ கவிதைகளாக ஆகியுள்ளன. இப்பண்பு தொகுப்புக்குப் பலம் சேர்க்கவில்லை. அதுபோல் கவிதைகள் அனைத்தும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தும் அவற்றின் ஆதாரப் பொருள் தெளிவாக வெளிப்படவில்லை.

முத்துவேல் கவிதைகளுக்கான மிக எளிய மொழியைக் கண்டடைந் துள்ளார். இவரது கவிதைகளுக்குள் முதல் வாசிப்பிலேயே யாரும் எளிதாக நுழைந்து, வெளியேறிவிடவும் முடிகிறது. எளிமையான கவிமொழி பலம் சேர்க்கும்; ஆனால் உறுதியான கட்டமைப்பும், ஆழமும் சிறந்த வாசக அனுபவத்திற்கு அவசியமானவை.


நாங்கள் பார்த்த துறைமுகத்தில் 
தரையோடு பிணைக்கப்பட்டு கப்பல் 
தண்ணீரில் தளும்பிக்கொண்டிருக்க
சுருட்டி மேலிழுத்து வைக்கப்பட்ட
சேறு உலர்ந்த நங்கூரத்தில்
அமர்ந்துகொண்டிருக்கிறது ஒரு பறவை

நங்கூரம் மண்ணுக்கானது
கப்பல் நீருக்கானது
சிறகுகள் வானிற்கானது
மூவுலகும் கைகுலுக்கும்
ஒற்றைப் புள்ளி
அவன் மட்டும் கண்டது. 

ஆற்றலுடன் வெளிப்பட்டுள்ள இந்தக் கவிதை ச.முத்துவேலின் அடுத்த தொகுப்பு சிறப்புடன் வெளிப்படும் என்பதைக் கட்டியம் கூறுகிறது.
                                                                     -மண்குதிரை
நன்றி : மண்குதிரை, தி இந்து தமிழ் நாளிதழ் ( 5.6.14)

Tuesday, May 6, 2014

ஒட்டகச்சிவிங்கியை பாடிய கவிஞன்





அண்மையில் ஒரு வனவிலங்குகள் பூங்காவைச் சுற்றி வந்தபோது, ஷங்கரராம சுப்ரமணியனின் கவிதைகள்  நினைவில் வந்துகொண்டேயிருந்தன. வீடு திரும்பியதும் நினவில் வந்த கவிதைகளை மீண்டும் வாசித்துவிடும் ஆர்வம் துடித்தது. தமிழ் இந்து நாளிதழில் சிறுவர்களுக்கான இணைப்புகள் வெளியாகும் நாட்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விலங்கு பற்றிய தகவல்கள் ஷங்கர் தொகுப்பில் வெளிவருகிறது. பணியாற்றுவதன் நிமித்தம் தன் பங்களிப்பாக செய்யக்கூடியவைகளில் இவற்றையும் செய்கிறாரோ என்று முன்பெல்லாம் நினைத்ததுண்டு. தமிழின் ஒரு சிறந்த கவிஞன் பிழைப்புக்காக இப்படியெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கவேண்டியுள்ளதே என்றுகூட எண்ணி வருந்தியதுண்டு. ஆனால், விலங்குகளின் மேல் ஷங்கருக்கு உள்ள ஈடுபாட்டை இப்போது  உணரமுடிகிறது.ஒட்டகச் சிவிங்கி, மர நாய், சிங்கத்துக்கு பல் துலக்குதல், திரும்பத் திரும்ப இடம்பெறும் காகங்கள், நாய்கள், என்று அவருடைய கவிதைகளில் விலங்குகள்  நிறையவே இடம் பெறுகின்றன.  நானறிந்து ஒட்டகச் சிவிங்கியை கவிதைக்குள் கொண்டுவந்த கவிஞர் ஷங்கர்தான். ஆனால், அவை கவிதைகளில் பெறும் வெவ்வேறு பரிமாணமங்கள் துள்ளலையும், ஆச்சர்யத்தையும் எழுப்பக்கூடியன. அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் என்ற தலைப்பிலேயே விலங்குகளைக் கொண்ட தொகுப்பில்  நான் குறிப்பிடும் நிறைய கவிதைகள் உள்ளன. சந்தோசத்தின் பெயர் தலைபிரட்டை, காகங்கள் வந்த வெயில் போன்றவை மற்ற தொகுப்புகளின்  பெயர்கள். இவருடைய வலைப்பூவின் பெயர் ‘ யானை’.

இதேபோல், ஒருமுறை தக்ஷிணசித்ரா சென்றிருந்தபோது அங்கே மகாபாரதக் கதைகளின் ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சி  நடைபெற்றது, நான் முற்றிலும் எதிர்பாராதது. ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற கண்காட்சியை பற்றியும், அவற்றில் இடம் பெற்ற ஷங்கரின் கவிதைகள் சிலவற்றையும்  இணையதளங்களில் படித்து அறிந்திருந்தேன். எல்லாவற்றையும் பார்க்கவும், படிக்கவும்  நேர்ந்தபோது  நான் மிகவும் உணர்ச்சிகரமான நிலைக்கு ஆளானேன். ஆர்வத்தில் அங்கிருந்துகொண்டே ஷங்கருக்கு தொலைபேசி என் மகிழ்ச்சியைச் சொன்னேன். ஒரு கோளரங்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, தொடர்போடோ அல்லது தொடர்பில்லாமலோ ஷங்கரின் நீலமுட்டை அரங்கு கவிதை நினைவில் தலை நீட்டியது.
ஷங்கரின் கவிதைகள் பலவும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கும்போதே, நான் அவருடைய புத்தகங்களையும், அவருடைய தொலைபேசி எண்ணையும் வாங்கிவைத்துக்கொண்டேன். மிதக்கும் இருக்கைகளின் நகரம் என்ற தொகுப்பு இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒரு நாள் அவரின் கவிதைகள் பிடிபடக்கூடும் என்ற என் நம்பிக்கை இப்போது நனவாகியிருக்கிறது என்பதிலும் எனக்கு ஒரு தன்னம்பிக்கையும், உற்சாகமும் கிடைக்கிறது.

Friday, December 13, 2013

திரையில் காணமுடியாத மீதிகள்



        தமிழ் பேசும்படத்திற்கு வயது 80 ஆண்டுகளைத் தாண்டுகிறது. துவக்க காலங்களில் எடுக்கப்பட்ட படங்கள் பலவும் இன்று கிடைக்காத நிலையில் அழிந்தேபோய்விட்டன. எம்.ஜி.ஆர் ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது, தான் நடித்த பழைய படங்களை அழிவிலிருந்து மீட்க முயற்சியெடுத்தும், அவராலேயேகூட பெரியளவில் வெற்றிபெற முடியவில்லை.  இவ்வாறான சூழலில், முதல் பேசும் படத்திலிருந்து அவற்றின் விவரங்களை அறிந்துகொள்ள பாட்டுப் புத்தகங்கள், அப்போதைய பத்திரிக்கைகள்,  சினிமா இதழ்கள் போன்றவை பெரும் உதவி புரிகின்றன. இவற்றை சேகரித்து வைத்திருக்கக்கூடிய தனி நபர்களையோ, நூலகங்களையோ  நாடினாலும், அவை ஒரு வரைபடத்தைப்போல மட்டுமே எஞ்சும். பாட்டுப்புத்தகங்களில் கதைச்சுருக்கங்கள் பெரும்பாலும் முழுக்கதையைச் சொல்லாமல் மீதியை வெள்ளித் திரையில் காண்க என்று போக்குக்காட்டி முடிந்துபோய்விடுகிறது.

        இவ்வாறான சூழலில், படங்களை அந்தக் காலத்திலிருந்து பார்த்து அனுபவித்தவர்கள் கிட்டத்தட்ட 90 வயதுக்காரர்களாக இருக்கவேண்டும். அதிலும் அவர் கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் பார்த்திருக்கக் கூடியவராகவும், அவற்றைப் பற்றிய விவரங்களை தெரிந்தவராக, குறிப்புகள் எடுத்தவராக, நினைவாற்றல் உள்ளவராகவும் இருக்கவேண்டும். பொதுவெளியில் வைக்க அவருக்கு எழுத்தாற்றலோ, வாய்ப்புகளோ இருக்கவேண்டும். இவ்வளவு அரிய வாய்ப்புகளையும் ஒருங்கேப் பெற்றவராக, ’ கூடிவந்த அரிய நன்மை’யாக விட்டல்ராவ் விளங்குகிறார். அதன் சான்றே  ,  நிழல் இதழில் அவர் எழுதிய சினிமாக் கட்டுரைகளின் தொகுப்பு நூலான ’தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’.
      விட்டல்ராவ் திரைத்துறையைச் சேர்ந்தவரோ, திரையியல் ஆய்வாளரோ அல்ல. தொலைபேசித் துறையில் பணிபுரிந்தவர் தன்னுடைய அன்றாடங்களிலிருந்தே இந்நூலை அனுபவித்து, தொகுத்திருக்கிறார். சிறுவயது முதலே  படங்களை நாட்குறிப்புகளாக எழுதிவந்திருக்கிறார். மேலும் தன்னுடைய வளமான நினைவாற்றலின் துணைகொண்டும் சாத்தியமாக்கியிருக்கிறார். படத்தின் கதையை உள்வாங்கி, நாட்குறிப்புகளில் கதைச்சுருக்கத்தை சிறுசிறு கதாபாத்திரங்களின் பெயர்களோடும், பதிவு செய்திருந்திருக்கிறார். இந்தப் பழக்கமே அவரை ஒரு எழுத்தாளராக வளர்த்தெடுத்தது என்று எண்ணத் துணியலாம். இவற்றையெல்லாம் செய்த சிறுவன் விட்டல்ராவை, வியப்பும் அன்பும் மேலிட்டு ,  ஆவிதழுவி உச்சி முகரத் தோன்றுகிறது.
           1935-1950வரை கிட்டத்தட்ட எல்லாப் படங்களையுமே பார்த்து,  பரந்த வாசிப்பனுபவத்தோடு சேர்த்துப் பதிவு செய்திருக்கிறார்.  நடிகர்களோடு நின்றுவிடாமல், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களைக்கூட பதிவு செய்திருக்கிறார்.படம்பார்க்கும்போதே திரையரங்கிலேயே உட்கார்ந்து குறிப்புகள் எடுத்திருப்பாரரோ !  இத்தோடும் நின்றுவிடவில்லை. அந்தக்கால கதாநாயகனான ஹொன்னப்ப பாகவதர், மாடர்ன் தியேட்டர் தொழில்நுட்பக் கலைஞர் B.V.மோடக் போன்றவர்களிடம் நேரடிப்பழக்கம் விட்டல்ராவுக்கு இருந்திருக்கிறது.  படங்களின் வெற்றி தோல்வி நிலவரம், வெளியான அந்தக் கால சூழல்கள், சிக்கல்கள் ஆகியவற்றையும் உற்றுக் கவனித்து எழுதியிருக்கிறார்.
              விட்டல்ராவ் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பதால், அவர் எழுதியிருக்கிற விதமும் சிறப்புக்குரியது. படங்களை வகைப்படுத்தும்போது தனிநபர்களின் அடிப்படையிலோ, சார்புடையவராகவோ எதையும் செய்யாமல் படங்களை, அப்படங்களின் தன்மையிலேயே வகைப்படுத்தி எழுதியிருக்கிறார். எம்.கே.டி, பி.யு.சின்னப்பாவுக்கும் முந்தைய கலைஞர்கள்,  நடிகர் கே.பி.கேசவன், இசையமைப்பளர் ரங்கசாமிநாயகர் போன்றவர்களையும்கூட கவனித்து எழுதியிருப்பதால், விடுபடல்களே இல்லையெனலாம்.
இந்நூல் ஏதோ திரையியல் ஆய்வாளர்களுக்கு மட்டுமோ, ரசிகர்களுக்கு மட்டுமோ என்று எடுத்துக்கொண்டு விடமுடியாது.ஏனெனில், அந்தக்கால அரசியல், சமூகப் பின்னணிகளும் பதிவாகியிருப்பதால் எல்லோருக்குமான நூல்.
புகைப்படங்கள் நிறைந்த அரிதினும் அரிதான இந்நூலுக்கு சமூகம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது.நீடூழி வாழ்க... விட்டல்ராவ் !
தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்- விட்டல்ராவ்
நிழல்
31/48, இராணி அண்ணாநகர்,
கே.கே. நகர், சென்னை – 78
பக்கங்கள் 230
விலை ரூ.100

 நன்றி: தி இந்து நாளிதழ் 08.12.2013, மண்குதிரை

Tuesday, November 26, 2013

வளர்ச்சியின் வீழ்ச்சி




போக்கிடம் நாவலின் கதைச்சுருக்கம் இதுதான்….
சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ள டேனிஷ்பேட்டை ( புனைப்பெயர்தான்) கிராமத்தில், மாக்னஸைட் கிடைப்பதால், அந்த ஊரையே அரசு கையகப்படுத்திக்கொள்கிறது. ஊர் மக்களுக்கு இழப்பீடாக பணமும், வேறு ஊரில் நிலமும் அளிக்கிறது. சிற்றூர்  நகரியமாக மாறுகிறது. அதன் தாக்கங்களை பேசுகிறது  நாவல்.
Unique: Writer Vittal Rao with his award –winning book.Photo:K. Gopinathan

விட்டல்ராவின் புனைவு எழுத்தில் நான் படிக்கும் முதல் நூல் இதுதான். எந்தவித அறிமுகமும், எதிர்பார்ப்புமில்லாமல் படித்தேன். இந்தளவுக்கு என்னைக் கவரும் என்று எதிர்பார்க்கவில்லை. 1977 ல் முதற்பதிப்பு வந்திருக்கிறது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் 2013 ல் படிக்கிறேன். ஆனாலும், சமகால வாசிப்புச் சுவையோடு உள்ளது. இந்த நாவலின் சிறப்பாக முதன்மையாக நான் வலியுறுத்துவது, அது கையாண்டிருக்கும் நிலமும், மனிதர்களும்தான். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் இலக்கியத்தில் அவ்வளவாக பதிவாகாத பகுதி. இன்றைக்கு ஆதவன்தீட்சண்யா, மு,ஹரிகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதுகிறார்கள். ஆனாலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இன்றளவும் இடம்பெறவில்லை எனலாம். அம் மக்களின் வட்டார வழக்கு சொல்லாடல்கள் இலக்கியத்திலோ, சினிமாவிலோ பதிவாகவில்லை.

எனக்குத் தெரிந்த  கிராமம் என்றால் அது ஒன்றே ஒன்றுதான். என் தாய்வழி உறவுகள் இன்றும் வசித்துவரும் கிராமம். திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையிலும், தர்மபுரி மாவட்டத்தின் எல்லையிலும் அமைந்த ஒரு கிராமம். அங்கும்கூட நான் நிறைய காலம் வாழ்ந்ததில்லை. ஒரு விளையாட்டுப் பையனாக, என் பதின்வயதில் பள்ளி விடுமுறைகளில் சென்று தங்கி முழு நாட்களையும் கழித்திருக்கிறேன்.  ஆண்டின் இரண்டு பருவங்களில் வாழ்ந்திருக்கிறேன். அவை, கோடைக்காலம் மற்றும் அரையாண்டு பரீட்சை விடுமுறை வரும் காலம். அரையாண்டு விடுமுறையின்போது கிணறுகள் நிரம்பிவழியும். கோடையில் தண்ணீர் குறைவாகவே இருக்கும். அங்குதான் நீச்சல் கற்றேன். அந்த ஊரின் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களையும் முகம் அறிவேன். பெயர்கள் தெரியும். சிறுவர்கள் எல்லோரும் நண்பர்களாயிருந்தனர். அந்த வயதில் நான் பார்த்த ரஜினி, கமல் படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் வரிக்குவரி இன்றளவும் எவ்வளவு ஆழமாக நினைவில் இருக்கிறதோ அதேபோல் அந்த வாழ்க்கையும் நினைவில் இருக்கிறது. பேசிப்பேசி , நினைவுகூர்ந்து ஆழமாகப் பதிந்துபோனவை அவை. பருவராகம் படம் ரிலீசான காலகட்டத்தில், அந்தப் படத்தை வீடியோவில் கருப்பு வெள்ளை டிவி யில் அங்கேதான் பார்த்தேன். சந்தை, நுங்குவண்டி, இரவில் தெருக்கூத்து, பொம்மலாட்டம், கிராமபோன் ஆகியவை அப்போதுதான் அறிமுகம். பகல்தூக்கமும் அங்கேதான் அறிமுகம். எதுவும் வேலையில்லாமல் ஒருமுறை பகலில் தூங்கி, எழுந்து பொழுது விடிந்துவிட்டதாய் எண்ணிக்கொண்டு பல்துலக்கும்போது பரிகாசத்திற்கு ஆளானேன். தண்ணீருக்காக காட்டைவிட்டு வெளியேவந்த மானின் கறியை மனதில் கழிவிரக்கத்தோடு ஓரிரு துண்டுகள் மட்டும் சாப்பிட்டிருக்கிறேன். சிறுவர்கள்கூட சுதந்திரமாக கெட்டக்கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள். நானும் உற்சாகமாகி பேசுவேன். அந்தச் சிறுவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தியவர்கள். படிப்பில் மட்டும்தான் என்னைவிட அல்லது நகரத்து மனிதர்களை விட பின் தங்கியிருப்பார்கள்.ஆனால், பெரிய மனிதர்களுக்கு இணையாக முதிர்ச்சியும், ஈடுபாடுகளும் கொண்டவர்கள். கட்டற்றவர்கள். என்னைவிட நல்ல பணப்புழக்கம் கொண்டவர்கள். வரப்பில் சுமையோடு சைக்கிள் ஓட்டும் தீரர்கள்.  நான் அங்கே பார்த்த துவக்கப் பள்ளிக்கூடத்தில் பாடம் நடந்துகொண்டிருக்கும்.பிள்ளைகள் தன்னிசையாக எழுந்து வெளியில் ஓடுவார்கள். திரும்ப வருவார்கள்.

அப்படி நான் வாழ்ந்து பார்த்த என் கிராமத்து வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு நாளாக, அனுபவங்களாக நினைவுகளைக் கிளறும்  வகையில் அமைந்திருக்கிறது விட்டல்ராவின் எழுத்து. மீண்டும் அதே ஊருக்கு  நான் சென்றால் மட்டுமே அந்தளவுக்கு நினைவுகள் பெருக்கெடுக்கும். ஏதாவது ஒரு கிராமத்திலோ அல்லது அதே கிராமத்திலோ மீண்டும் இப்போது கொஞ்ச நாட்கள் வாழ்ந்துபார்க்க வேண்டும் என்ற ஆசை குன்றாமலிருக்கிறது. ஆனால், நான் மீண்டும் அங்கே செல்வதையோ, சென்று தங்கி வாழ்வதையோ இப்போது விரும்பவில்லை. ஏனெனில், பொதுவாக வெள்ளந்தியாக கருதப்படும் கிராமத்தார்கள் எல்லோருமே வெள்ளந்திகள் இல்லை. எனக்கு இப்போது அவர்களில் பலரும் வெறுப்புக்கு ஆளானவர்கள். வேறு ஏதாவது கிராமங்களில் வாய்ப்பு கிடைக்குபோது பார்த்துக்கொள்ளவேண்டியதுதான்.

நாவலில் வரும் பையப்பன் காலத்தையும்விட வயதில் சிறியவன் என்பதால், நான் பார்த்த கிராமம் , விட்டல்ராவ் எழுதியிருக்கும் காலத்திற்கும் பிந்தைய கிராமம். நாவலில் வரும் காலம் ,  ரேடியோ அறிமுகமாகும் காலம்  . நான் பார்த்தது டேப்ரெக்கார்டர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்ட காலம்.

வெறும் தகவல்களாக அல்லாமல் கதையோடு சேர்ந்த காட்சிகளாக காட்டையும், சந்தையையும் , வயல்களையும் கலாபூர்வமாக மாற்றி சுற்றிக் காட்டுகிறார் விட்டல்ராவ். எவத்த, இவத்த, பொறைக்கி, எருமுட்டை போன்ற சொற்கள் நான் கேட்டு அறிந்தவை. பொறைக்கி என்பதற்கு இரவு என்று குறிப்பு கொடுத்திருக்கிறார். பிறகு என்பதே பொறைக்கி என்று சொல்லப்பட்டது என்பது என் அனுமானம். ஆனால், பெரும்பாலும் பகல் வேளைகளில் மட்டுமே சொல்லப்படும் பொறைக்கிக்கு , பிறகான வேளையான இரவு என்ற அர்த்தமும் வந்துவிடும். புங்க மரத்தைப் பற்றி சொல்லும்போது புன்னை என்றும் சொல்கிறார். நானறிந்தவரையில் இரண்டும் வெவ்வெறு மரங்கள்.

சில நூறு குடும்பங்கள் கொண்ட கிராமம். அந்தக் குடும்பங்கள் அனைவருமே பொதுவாக உறவினர்களாகவே இருப்பார்கள். உறவினர்களாகாத,  மற்ற சாதியினரும் தொழில் தேவைகளின் அடிப்படையில் கொஞ்சம் பேர் இருப்பார்கள். ஊரைத்தாண்டினால், விரிந்துகிடக்கும் வயல்கள் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் உரியதாக நீண்டுகொண்டே போகும். சிலர் வயல்வெளிகளிலேயே வீடு கட்டிக்கொண்டு  தங்கிவிடுவது உண்டு.கொல்லி அல்லது கொல்லை என்பார்கள். என்னைவிட வயதில் மூத்தவர்களான கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இளைஞர்களுடனும் சுற்றியிருக்கிறேன். அப்போதுதான் நான் நிறையக் கெட்டுப்போனேன் அல்லது கற்றுக்கொண்டேன். காமம் பொதுவாக, கட்டற்றதாகவே இருக்கும். அதற்கான வாய்ப்புகள் நகரச்சூழலைக் காட்டிலும் கிராமங்களில் மிக அதிகம். எண்ணங்களை வேறுவகைகளில் மடைமாற்றிக்கொள்ளும் ஈடுபாடுகள் அவர்களுக்கு கிடையாது. பேச்சியின் வாழ்வு அப்படியான ஒன்றுதான்.

’வெள்ளாள கவுண்டர்களில்தான் விதவைகள் வெள்ளைப் புடவை கட்டிக்கொள்வார்கள் . நாங்கள் அப்படியில்லை’ என்று பேச்சி ஓரிடத்தில் சொல்வாள். வெள்ளைப் புடவை கட்டிய வெள்ளாளர் வீட்டுக் கிழவிகளை பார்த்து, ’வெள்ளைப்புடவை கட்டியிருப்பதால்தான் வெள்ளாளர்கள் ‘ என்கிறார்களோ என்று அப்போது நினைத்திருக்கிறேன். எனில், இந்தக் கவுண்டர்கள் வன்னியர்கள். வன்னியர்களும், கொங்கு வெள்ளாளர்களும் கலந்துவாழும் தர்மபுரி போன்ற பகுதிகளில் வித்தியாசம் தெரிவதற்காக, வன்னியக் கவுண்டர்கள், வெள்ளாளக் கவுண்டர்கள் என்றே சொல்லிக்கொள்வார்கள். சந்தை நாட்களில் இலம்பாடிகள் எனப்படுவோர் எங்கிருந்தோ வந்துபோவார்கள். பழங்குடியினர்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குரைத்துக்கொண்டேயிருக்கும். வண்ணவண்ண ஆடைகளில் கண்ணாடிகள் வட்ட வட்டமாகப் பதிந்திருக்கும். விட்டல்ராவ் எழுதிய கதையில் ஊரில் மற்ற சாதியினர்கள் இருப்பதாக எழுதவில்லை. ஊர்த்தலைவர் முதல் உழைக்கும் அடிமட்டத் தொழிலாளர்வரை ஒரே சாதிக்காரர்கள் என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் வாழ்க்கைப் படி நிலையை காட்டும் சரியான அளவுகோல்தான் இது. ஆனால், நான் பார்த்த கிராமத்தில் தலித்துகள் உண்டு. அவர்களே பொதுவாக விவசாயக்கூலிகள். ஊர் குடியானவர்களும் விவசாயக்கூலி வேலைகள் செய்வதுண்டு.

ஊருக்குள் ரோடு ரோலர் நுழைவதன் அதிர்வை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். சுகவனம் வாத்தியாரின் மேசை கடகட வென ஆடும். அதேபோல், இன்னும் சில காட்சிப்படுத்தல்களை, கதைக்குப் பொருத்தமாக குறியீடாக அமைத்த விதம் நுட்பமானதும் கலாபூர்வமானதுமாகும். பேச்சியை மிரட்டி வற்புறுத்தி சுப்புரு உடலுறவு கொள்ளும்போது, ஆடு கட்டுப்படுத்துவாரின்றி, அத்துமீறி சுதந்திரமாக பேச்சியின் வயலில் மேயத்தொடங்கும். வயதான ஊர்த்தலைவர் மாரியப்ப கவுண்டருக்கு தொடுப்பாக வாழும் பேச்சி, தன் விருப்பம்போல் பீர் முகம்மதுவோடு ஓடிப்போகவிருக்கும் சூழலில், பையப்பனால் பெட்டிக்குள் சிறைப்படுத்தப்பட்ட பொன்வண்டு கொஞ்சம் கொஞ்சமாக பெட்டியைத் திறந்துகொண்டு வெளியேறும். இதுபோல் அழகான குறியீட்டுத்தன்மையிலான காட்சிப்படுத்தல்கள். தான் ஆசிரியராக வேலைபார்த்த நிலப்பகுதியை எழுத்தில் பதியவேண்டுமென்ற வேட்கையுடனே எழுதியிருக்கிறார். அதற்காக, மீண்டும் அந்தக் கிராமங்களுக்குச் சென்று தங்கி சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார். சேலம் ஜில்லா என் ஜில்லா என்கிறார் விட்டல்ராவ். மகிழ்ச்சியாயிருந்தது.

நாவலைப் படித்துமுடித்துவிட்டு இணையத்தில் கொஞ்சம் தேடியபோதுதான் தெரிந்தது, போக்கிடம்  நாவல் என் கருத்துக்கிணங்கவே, சிறந்த நாவலாகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறது என்பது. ஆனால்,  நாவல் பற்றிய வாசிப்பு அனுபவமோ, மதிப்புரைகளோ எனக்குத் தென்படவில்லை. எனவேதான், நான் இங்கே எழுதி பதிவிடுகிறேன். அளவில் சிறியதான நாவல் என்பதால் விரைவில் படித்துவிடலாம். ஆனால் கனமான நாவல்.