Tuesday, August 26, 2008

பொய்யாய் கனவாய்-பாலமுரளிவர்மன்

ஒரு திரைப்படம் மற்றும் சில தொலைக்காட்சித் தொடர்களுக்கு (ஆட்டோ சங்கர்,சந்தனக்காடு மற்றும் சில)வசனம் எழுதியிருப்பவர்தான் பாலமுரளிவர்மன்.ஏற்கனவே 2500 நாட்கள் (episode) கடந்திருந்த செய்தியை செய்தித்தாளில் படித்திருக்கலாம். இவர் எழுதியிருக்கும் புதினம்தான் பொய்யாய் கனவாய்.
டெல்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லேண்ட்மார்க் புக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும், தமிழில் முதல் நூல் இது.இதுவரை இந்தி,வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல்வேறு படைப்புகளை வெளியிட்டிருக்கும் தகவல்கள் பதிப்புரையில் காணப்படுகிறது.வடிவமைப்பும் மிக நேர்த்தியாக,படிக்கத்தூண்டும் வகையில் அமைந்துள்ளது.இந்நூலுக்கு ஈரோடு தமிழன்பன் அவர்கள் வழங்கியிருக்கும் அணிந்துரை மிகப்பொருத்தமானதாகவும்,சிறப்பாகவும் அமைந்துள்ளது.
இப்புதினத்தை(நாவல்) தனது 23 வது வயதில் எழுதியிருக்கிறார்.பல ஆண்டுகள் கழித்து(10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம்) வெளியிட்டிருப்பதாக தனது உரையில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்,புதினத்தை தனது இன்றையப் பக்குவத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள விரும்பாமல் அப்படியே வெளியிட்டுள்ளார்.படித்த பலரும் கதையின் நாயகன் கிருஷ்ணமூர்த்தி நீங்கள்தானா என்று தன்னைக் கேட்டதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.இதற்குக் காரணம்,கதையில் உள்ள உயிரோட்டமான நடை.உணர்ந்து எழுதியது போல் உள்ளது.அவ்வாறு கற்பனையும்,உண்மை அனுபவமும் கலந்து உயிரோட்டமாக எழுதுவதற்கு தனித் திறன் வேண்டும்தான்.எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளில் இப்போக்கை நன்கு உணரமுடியும்.இந்தக் கதையைப் பொறுத்தவரையில் இதற்கு உதாரணமாக ஒரு சிறிய காட்சியமைப்பைச் சொல்லலாம்.கிருஷ்ணமூர்த்தியை ஜீப்பில் அழைத்துச் செல்லும்போது,அவன் கண்களில் சாலை வழுக்கிக் கொண்டு நகர்ந்து செல்வதாக எழுதியிருப்பார்.
கிருஷ்ணமூர்த்தி என்கிற இளைஞன் சத்ரியனாகப் பிறந்து,வேதம் ஆன்மீகம் போன்றவற்றில் புலமையும்,ஆர்வமும் உள்ளவனாகவும் அதே சமயத்தில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் சாதிய ஏற்ற இறக்கக் கொடுமைகளை எதிர்ப்பவனாகவும்,புரட்சிகர சிந்தனைகள் உள்ளவனாகவும் விளங்குகிறான்.ஆன்மீகம்,தத்துவம் என்பது வேறு.மதம் என்பது வேறு.தியானம் என்பதும் வழிபாடு என்பதும் ஒன்றல்ல.கதைநாயகன் கிச்சா இதை நன்கு உணர்ந்தவனாகவே தெரிகிறான்.இருந்தபோதிலும் வாழ்க்கைப் பாடத்தை அனுபவித்து உணராத, வேகம் கொண்ட இளம்பருவத்தில் இருக்கிறான்.அதனால் பல இன்னல்களை அனுபவிக்கிறான்.பல்வேறு கட்டங்களில் இவன் நிகழ்த்தும் தர்க்கங்கள் சிந்தனைவீச்சு கொண்டது.சமூகத்தின் மீதான விமர்சனங்களை ஆசிரியர் கிச்சா மூலம் வைக்கிறார்.

கிச்சாவுக்கும்,பார்ப்பனப் பெண் மாலதிக்கும் இடையே அரும்பும் காதல் கதைதான் இது.கதையின் தலைப்பையொட்டியும்,முடிவையொட்டியும் நிறைய எழுதத் தோன்றுகிறது.எனினும்,எழுதப் போவதில்லை.காரணம் கதையின் கமுக்கம் உடைந்து விடக்கூடாது என்பதுதான்.படிக்கிற ஒவ்வொருவரும் அவரவராகவே உணர்ந்து சொந்தக் கருத்துக்களுக்கு,தீர்மானத்திற்கு வரவேண்டும்.இதனாலேயே,நான் சில திரைப்படங்கள்,படைப்புகள் பற்றிய விமர்சனங்களைப் படிப்பதைத் தவிர்த்து விடுவது உண்டு.இந்த அனுபவத்தைத்தான் ‘இல்லாமல் இருப்பது’ என்கிற எனது கவிதையில்(இதே வலைப்பூவில் உள்ளது) அரைகுறையாகப் பதிவு செய்துள்ளேன்.
கதை நகரும் இடம் ஆசிரியரின் சொந்த ஊரான கும்பகோணம்.பிற்பகுதியில் சென்னைக்கு வந்து காதலர்கள் படும் இன்னல்கள் ஒரு பொதுவான ஆவணம்.காதலிக்கும் வரை இனிக்கிற வாழ்க்கை கல்யாணத்திற்குப் பிறகு கசக்க ஆரம்பிப்பது நடைமுறை வாழ்வில் பெரும்பான்மையாக உள்ளது.இதை தக்கப் பின்புலங்களோடு , காட்சியமைப்போடு சொல்லியிருக்கிறார்.கதையின் முதல் அத்தியாயத்தை கால ஓட்டத்தின் வரிசையிலேயே அமைத்திருக்கலாம் என்று படுகிறது.
வர்ணாசிரம அமைப்பை, பார்ப்பனர்களை பல இடங்களில் சாடும் ஆசிரியர்,கிச்சாவை கடவுள் பக்தி உள்ளவனாகவும்,மதங்களின் பெயரால் நிகழும் நல்லவைகளை ஆதரிப்பவனாகவும் காட்டியுள்ளார்.நிறைய தகவல்களை சொல்லியிருப்பது குறிப்பிடத் தகுந்தது.சிதம்பரம் கோயில் பற்றி அப்போதே எழுதியுள்ளார்.காதலர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் குறும்பும்,காதல் ரசமும் கொட்டுகிறது.’படிக்கிறது மாதிரி ஒரு சுகம் வேறு எதுவும் கிடையாது தெரியுமா?’ என்று கிச்சா மாலதியிடம் சொல்வான்.கவிதை,இலக்கியம் போன்றவைகளும் கதையினூடே இழையோடுகிறது.
மொத்தத்தில் இப்படி முடிக்கலாம் என நினைக்கிறேன்.
‘சமூக விமர்சனங்களை,சிந்தனை வீச்சு கொண்ட தர்க்கங்களை,சுவாரஸ்யமாகச் சொல்லும் காதல்கதை’
(படித்து முடித்து சில வாரங்கள் ஆகி விட்டபடியால்,இன்னும் சற்று நன்றாகவே ஆய்ந்து எழுதியிருக்க முடியும் என்பது மிஸ்ஸிங்)
இவரின் வலைப்பூ santhanakkadu.blogspot.com

பொய்யாய்...கனவாய்...
(நாவல்)
பாலமுரளிவர்மன்

வெளியீடு
லேண்ட் மார்க் புக்ஸ்
இ42,செக்டர் 18,ரோஹிணி,
தில்லி 110085

விலை ரூ.100

No comments: