Tuesday, September 2, 2008

கவிதை,நான் & வைரமுத்து

கடந்த 03-11-2007 அன்று கவிப்பேரரசு அவர்களுக்கு சொந்தமான பொன்மணி மாளிகையில் நடந்த இளம் கவிஞர்களின் பாராட்டுவிழாவில் கவிப்பேரரசு அவர்கள் ஆற்றிய உரையின் சில துளிகளை உங்களோடு பகிரந்து கொள்வது பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.


குங்குமம் வார இதழ் நடத்திய வாசகர் கவிதைத் திருவிழாவிற்கு வைரமுத்து அவர்கள் நடுவராக இருந்து 10 வாரங்கள்,தலா 10 கவிதைகள் தேர்ந்தெடுத்து மொத்தம் 100 கவிதைகள் இடம் பெற்றிருந்ததை, அனைவரும் அறிந்திருக்கலாம்.இவற்றில் வாரம் ஒரு கவிதை சிறப்புப் பரிசு பெற்றது.சிலர் மீண்டும் மீண்டும் இடம் பெற்றமையால் மொத்தம் 85 கவிஞர்கள் தேர்வாகியிருந்தனர்.அவர்களில் அடியேனும் ஒருவன்.என்னுடைய கவிதை ‘திரை’ என்பதாகும்.(இதே வலைப்பூ வில் இடம்பெற்றுள்ளது) 2 வது வாரத்தில் இடம்பெற்றது.அதற்குப் பிறகு முயன்றும் தேறவில்லை.குங்குமம் அறிவித்திருந்த பரிசுகள் அல்லாது வைரமுத்து அவர்களும் பரிசும் விருந்தும் தந்து நேரில் வாழ்த்தியது மிக நல்ல அனுபவமாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரை புதிதாக வாசிக்கத் தொடங்கி எழுதவும் தொடங்கி மிகக் குறுகிய காலத்தில் அச்சில் ஏறிய என் முதல் கவிதை இது.பலருக்கும் இது முதல் கவிதையாக இல்லாதிருந்தபோது நான் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்தேன்.இத்தனைக்கும் எப்படி அனுப்ப வேண்டும் என்ற வழிமுறைகள்கூட ஏதும் அறியாமல் அஞ்சல் அட்டையில் அனுப்பி இருந்தேன்.தேர்வானதே பெருமகிழ்ச்சியாக இருந்தபோது,வைரமுத்து அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெறும் அறிவிப்பு வந்தபோது,அந்த நாளுக்காகக் காத்துக் கிடந்ததை நினைத்துப் பார்க்கின்றேன்.உணவு வேளையின்போது கவிஞரிடம் பலரும் அளவளாவியும்,தன்னுடைய படைப்புகளை அவரிடம் காண்பித்தும் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.நான் அன்புத் தொல்லை அதிகமாகி விட வேண்டாமே என்ற நோக்கில் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.தமிழகம் முழுவதிலுமிருந்து நிறைய பேர் வந்திருந்தனர்.ஒரு பையன் மட்டும் கவிப்பேரரசுவை மிகவும் தொல்லை செய்து கொண்டிருந்தான்.இதை நன்றாக கவனித்த கவிஞர், மிகப் பொறுமையோடும் அன்போடும் எல்லோருடனும் பேச வாய்ப்பளித்துக் கொண்டு வந்தவர் ,இந்தப் பையனை ஒரு கட்டத்தில் எப்படி சமாளிப்பதென யோசித்து லேசான,காட்டமான ஒரு பார்வை பார்த்து வைத்தார்.ம்ஹூம்.அதற்கெல்லாம் அவன் அசருவதாகவே தெரியவில்லை.இப்படிப்பட்ட தேர்வாகும் கவிதைகளை எழுதியவர்களும் எப்படி இதுபோல் இங்கிதம் இல்லாமல் நடந்துகொள்கின்றனர் என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.சற்று ஓய்வான ஒரு இடைவேளையில் நான் கொஞ்சம் பேசினேன்.’அஞ்சலட்டையில் வந்த கவிதையென்றும் பாராமல் தேர்வு செய்த்தற்கு நன்றி’யைச் சொன்னேன்.’நல்ல கவிதைகள் ஓலைச்சுவடியில் வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்’ என்றார்.’அனுபவித்து எழுதும் கவிதைகள் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்கிறீர்களே?அப்படியென்றால் நிறைய எழுதுவது சாத்தியமா?’ என்று கேட்டேன்.அவர்,’ஆமாம் அனுபவித்து எழுதும்போது சிறப்பாக இருக்கும்.ஆனால் அனுபவம் என்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?ஒரு தாயின் பிரசவ வலியை உங்களால் எப்படி அனுபவிக்க முடியும்? ஒரு மரணத்தை உங்களால் எப்படி அனுபவிக்க முடியும்? மற்றவர்களின் அனுபவர்களிருந்தும் நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம்’ என்று உடனடியாக பதில் சொன்னார்.வியப்பாக இருந்தது.

அந்நாள் வரை அவர் எழுதிய ஒரு புத்தகத்தையும் நான் படித்தவனில்லை.நிகழச்சியில் எல்லா கவிஞர்களுக்கும் ஒரு parker pen மற்றும் அவருடைய நூல் ஒன்றும் பரிசளித்தும்,புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.நிறையப் படித்தலின் மூலம் நிறையப் படைக்க முடியும் என்று வலியுறுத்தினார்.அதன் அடையாளமாகவே படிக்க புத்தகம்,படைக்க பேனா தந்தார்.மேடையில் கவிதை பற்றி அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை சுருக்கமாக எழுதுகிறேன்.

1.கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.அவை

1.வட்டாரக் கவிதைகள்

2.சமகாலக் கவிதைகள்(contemporary poetry)

3.Universal poems(எல்லாப் பகுதிகளுக்கும் ,முக்காலங்களுக்கும் பொருந்தும் தன்மை கொண்டவை)

இவை எல்லாவற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளிலிருந்தே உதாரணங்களை எடுத்து விளக்கினார்.(என்னுடையது எந்த ரகம்?)

2’.கவிதை எங்கும் இருக்கிறது.இங்கே இங்கே’ என்று தலையை மேலே கீழே இடது வலது என எல்லாப் பக்கத்திலும் திருப்பியபடியே சொன்னார்.

3.அடைமொழி,உவமை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு எளிய தரமான கவிதைகள் எல்லோரும் எழுதியிருப்பதைப் பாராட்டினார்.

4.’உரைநடையை எவ்வளவு வேண்டுமானாலும் இழுக்க முடியும்.ஆனால் கவிதை அசைக்க முடியாதது.’

5.’கவிஞர்களுக்குத் திமிர் வேண்டும்’.(நாளிதழ்களில் வந்த செய்திகளில் இதுதான் தலைப்பு)

6.’கவிதைகளை எழுதிவிட்டு சுடச்சுட இதழ்களுக்கு அனுப்ப வேண்டாம்.எங்காவது எடுத்து வைத்துவிடுங்கள்.ஒரு ஆறு மாதம் கழித்து எடுத்துப் பார்க்கும்போது அது மீண்டும் கவிதையாகத் தெரிந்தால் அனுப்புங்கள்.’

7’.தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களில் ஒரு பத்துப் பேராவது ஒரு வைரமுத்துவாக,ஒரு தமிழன்பனாக,ஒரு அப்துல் ரகுமானாக,ஒரு மேத்தாவாக வருவீர்கள் என்பது உறுதி’.(இது எனக்குப் பொருந்துமா?)

8.’போதையின் பின்னால் போய்விடாதீர்கள்.தமிழ் தரும் போதையைவிட வேறெது வேண்டும் நமக்கு.’

அவரைச் சந்தித்துவிட்டு வந்த அப்போதே ,அதே உத்வேகத்தில்,அனுபவித்து ஒரு கவிதை எழுதினேன்.பிரசுரமும் ஆனது.அது ‘நாணயம்’ என்ற கவிதையாகும்.என் வலைப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.கவிதை எங்கும் இருக்கிறது என்பது எத்தனை உண்மை!கண்ணோட்டம்தான் தேவை.கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பது போல் அவருடனான சந்திப்பு எனக்கொரு கவிதையை உடனேயே தந்துள்ளது.என் முதல் கவிதை அச்சில் ஏறி மிகச் சரியாக ஒரு வருடம் ஆகிறது.மெல்லத் திரும்பிப் பார்க்கும்போது இன்று வரை 13 கவிதைகள்,2 கதைகள் சிறியதும்,பெரியதுமாய் இதழ்களில் இடம்பெற்றுள்ளதைப் பார்க்கிறேன்.மெல்ல என் கவிதைகளின் போக்கும் வாசிப்பின் போக்கும் மாறிக்கொண்டு வருவதாக உணர்கிறேன்.தமிழன்னையின் ஆசிக்காக தலைதாழ்ந்து வணங்கும் மகன் நான். தமிழன்னை என்னை வளர்த்தெடுப்பாள்.உங்களையுந்தான்.

4 comments:

anujanya said...

முத்துவேல்,

நல்ல பதிவு. நல்ல அனுபவம். நேற்று உயிரோசையில் உங்கள் கவிதையைக் கண்டேன். உங்களுக்கு எப்படி எழுதுவது (மின்னஞ்சல் முகவரி தெரியாது) என்று யோசித்தேன். நல்ல வேளையாக உங்கள் பதிவே வந்து விட்டது. அந்தக் கவிதையில் வேறு முத்துவேல் தெரிந்தார். இதுவரை நான் பார்த்திராத முத்துவேல். வாழ்த்துக்கள். சந்தேகம் வேண்டாம். இப்போதே முத்து உள்ளது. சில வைரங்கள் சேர்ந்தால், இன்னொரு வைரமுத்து ஏன் ஆக முடியாது?

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி,அனுஜன்யா.உயிரோசை தகவல் உங்களின் மூலமே அறிந்தேன்.
நன்றி.
என் மின்னஞல் என் வலைப்பக்கத்திலேயே உள்ளது.(see about me area)

Bee'morgan said...

வாழ்த்துகள் முத்துவேல்..இப்போதுதான் உங்கள் படைப்புகளைப் படிக்கத் தொடங்கியுள்ளேன்..

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Villas In Trivandrum