Wednesday, September 9, 2009

ஹேமா

தபால் பெட்டியில் புத்தகம் இருந்தது. அப்படியென்றால்? நம் கதை வந்திருக்கவேண்டும்! எடுத்துக்கொண்டு கதவு திறந்து உள்ளே போனேன்.ஷூக்களைக் கழட்டிவிட்டு நாற்காலியில் அமர்ந்து , புத்தகம் பிரித்தேன். என் கதையைத் தேடி, ஒருமுறை அதற்கான ஓவியங்களை ரசித்தேன். கதையின் தலைப்பு ஹேமா. ஆமாம். அதைவிட பொருத்தமான, ரசனையான, சுவாரசியமான, வசீகரமான, இன்னும் ஏராளமான …தலைப்பு எனக்குக்கிடைக்கவில்லை.மனமும் வரவில்லை.பின் கதையை ஒருமுறை மீண்டும் படித்துவிடத் தீர்மானித்து …துவங்கினேன் .
ஒரு கதையை, அதை எழுதினவன் மட்டுமே அதிகபட்ச எண்ணிக்கையில் படிப்பான் போலும்.மனதிற்குள் பலமுறை எழுதிப்பார்த்து, பேப்பரில்-இல்லையில்லை..இப்போதெல்லாம் கணினியில்- பிறகு சரிபார்த்தலுக்கென்று. மீண்டும் பிரசுரமான பிறகென்று.
"எனதுயிரே..எனதுயிரே.. உனக்கெனவே.."- செல் கொஞ்சியது.
மனைவி.
லேசான எரிச்சலுடன் "ம் .சொல்லு" என்றேன்.
"ம். என்னா பண்றீங்க. வேலையிலருந்து வந்தாச்சா? வீட்டுக்குள்ளேயே சிகரெட் புடிக்கிறீங்களா?.."
"இல்ல"
" ஏன் நானேதான் தினமும் ஃபோன் பண்ணணுமா? நீங்க ஒரு நாளாவது பண்ணியிருக்கீங்களா?.. நாளையிலருந்து நான் பண்ணவேமாட்டேன். எனக்குமட்டும் என்ன வந்துச்சி.."
அப்படித்தான் சொல்வாள். ஆனால், செய்யமாட்டாள்.அதாவது ஃபோன் பண்ணாமலிருக்கமாட்டாள்.
"இப்பத்தானெ வந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து இப்படிக் கேட்டிருந்தா , அதில ஒரு நியாயம் இருக்குது.அதுக்கும் முன்னால நீயேதான் தினமும் பண்ணிடறயில்ல"
" சரி, ஊருக்கு இந்த வாரம் வர்..."
டொய்ங். செல் அணைந்துவிட்டது.இப்போதெல்லாம் ஏனோ தகராறு இதனுடன்.ஹேங்க் ஆகிவிடும். மீண்டும் ஆன் ஆவதென்பது பெரிய போராட்டம். கால் லாக்கெல்லாம்(calls log) அழிந்துவிடும். சரி. ஒருவகையில் நல்லதாய்ப் போயிற்று. அவளிடமிருந்து தப்பித்தோம். பின்ன! ஊருக்குப்போன இரண்டுவாரத்தில், தினமும் இதே பல்லவி. வேறொன்றும் இல்லையா பேச?
சரி,கதையைப் படிப்போம்.
*******
ஹேமா
மேற்குக் கோபுரத்துக்குப் பின்னால் என் வீடு. தெற்குக் கோபுரத்துக்கு அருகே ஹேமா வீடு.அவளைத்தாண்டித்தான் நான் போயாகவேண்டும்.
ஹேமா!
சொல்லும்போதே சிகரெட்டின் முதல் பஃப் இழுப்பதுபோலிருக்கிறது. அழகி. அவளைப்பற்றி அப்படி, இப்படி என்று நான் சொல்வதெல்லாம் வீண். அவள் அவள்தான்.அவளைப்பார்க்க , எங்கோ தொலைவிலிருக்கும் கல்லூரி மாணவர்கள் அதாவது எங்கள் அண்ணன்கள் எல்லாம் தேடி வருவார்கள். அவள் பள்ளி விட்டு வெளியேறும் சமயம் அவளைப்பார்க்கக் காத்திருப்பார்கள்.கல்லூரியில் இல்லாததா! எனக்கும் அன்றைய நாட்களில் கனவுதேவதை அவள்தான்.ஆனால், மனதிற்குள் மட்டுமே இருக்கும். ஊரின் கிழக்குக்கோடியில் இருக்கும் ராபின் சில கிலோமீட்டர் தொலைவையும் பொருட்படுத்தாமல், சைக்கிளை மேட்டில் மிதித்துக்கொண்டு என்னைத் தேடி வந்தான். என்னிடம் சைக்கிள் இல்லாததால் என்னை அழைத்துப்போக வருவதாகச் சொல்வான். ஆனால், சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. ஹேமா! ஆமாம். அதுதான் காரணம்.ட்யூஷன் போகும்போது அவளைத்தாண்டி, அவளுக்கு இணையாக, அவளுக்கு முன்னால் செல்வதில் அவனுக்கு ஆறுதல். தலைமுடியெல்லாம் முன் மண்டையில் சுரண்டியிருப்பான். ஸ்டைல். அவள் வரும் வரை நேரம் கடத்த ஏதாவதொரு டீக்கடையில் டீ வேறு. உபயம் ராபின். அவன் மட்டும் சிகரெட் பிடிப்பான். நான் அநியாயத்துக்கு நல்லவன். புகைப்பதில்லை.ஆச்சரியமாகவும் பயத்தோடும் பார்த்தேன் ராபினை.அன்று கையில் ஒரு ரோஜா வைத்திருந்தான். எனக்கு உள்ளுக்குள் உதறல்.
மொட்டைமாடியில் கீற்றுக்கொட்டைக்குள் சிலரும் , சிலர் வெளியேயும் தரையில் அமர்ந்து மாதிரித் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. நான், ஹேமா, பாபு, ராபின் ( சொல்லணுமா என்ன?)எல்லோருமே வெளியே
உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தோம். ராபின், பாபு, சதா என ஒவ்வொருத்தராக எழுந்து ஹேமாவைக் கடந்துபோவதும், வருவதுமாயிருந்தனர். அதே நேரம் மற்ற பையன்களைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புவேறு. ஹேமா இதையெல்லாம் கவனிக்காமல் பொறுப்பாக எழுதிக்கொண்டிருந்தாள்.
சதா என்னருகில் வந்து, " டேய்! ச்சீனு. அப்படியே நைஸா எழுந்துபோய் தண்ணிக குடிக்கப்போறாமாதிரி ஹேமாவைப்பாரு.ஜட்டி தெரியுது. "
அதற்குமேல் நின்றுபேசமுடியாத காரணத்தால் போய் அமர்ந்து, எழுதத்துவங்கினான். (?!) எனக்கு மனம் கனக்கத்துவங்கிவிட்டது. நிச்சயம் நான் போய்ப் பார்க்கப்போவதில்லை. ஆனால், இவர்கள் இப்படிப் பார்ப்பதையும், சிரிப்பதையும், அது எதையும் தெரியாமல் ஹேமா எழுதிக்கொண்டிருப்பதையும் எப்படி நிறுத்துவது.வயது வந்த ஒரு பெண்ணுக்கு இந்த உணர்வுகூடவா இல்லாமலிருப்பது! குட்டைப்பாவாடை போட்டுக்கொண்டு..ச்சே!
கதையைமுடிக்கவிடாமல் (காலிங்) பெல் காலிங்.கதவைத்திறந்தால் நட்டு வந்திருந்தான். கம்பெனியில மோட்டார் என் பிரச்சினைன்னா, பம்ப் அவன் பிரச்சினை. அதனாலதான் நடராஜன், நட்டு. வெளியில் கிளம்பிவிட்டோம். கதையைமுடிக்கவில்லை. இருந்தால் என்ன? நாம் எழுதியதுதானே.
••••
மனைவி ஊரிலிருந்து வந்துவிட்டிருந்தாள்.அலுவலகத்தில் சரியாக தேனீர் இடைவேளையில் , "எனதுயிரே..எனதுயிரே.. உனக்கெனவே.." யாரென்று தெரியவில்லை. புதிய எண்ணாக இருந்தது.
" ஹலோ?"
" மிஸ்டர் சீனுவாசன்?"பெண்குரல்.
" ஆமாங்க. "
" நான் ஹேமா"
"......."
"என்ன ஞாபகம் வரலையா? இல்ல..பல ஹேமாக்கள்ள எந்த ஹேமாங்கிற குழப்பமா? கதை படிச்சேன்"
சொல்லிவிட்டு வேண்டுமென்றே நின்றது குரல்.
எனக்கு கணத்திற்குள் மளமளவென எல்லாம் புரிந்துவிட்டது.என் கனவுக்கன்னியாக இருந்த ஹேமா. கதை படித்திருக்கிறாள். பரவாயில்லையே. இந்த மாதிரி நல்ல பழக்கமெல்லாம் கூட இருக்கா. படிச்சதோட இல்லாம சரியா புரிஞ்சுக்கிட்டு, என்னோட நம்பரை தேடிப்புடிச்சு வாங்கிப்பேசறாளே. எப்படியும் இருபது வருசமிருக்கும் பார்த்து. ஸ்கூல் முடிஞ்சப்பவே அவங்க அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர். என்ன ஊருன்னுகூட எனக்குத் தெரியல.ச்சே. ஒரிஜினல் பேருங்களப் போட்டது தப்பாப்போச்சு.ஒருவேளை அவ வீட்டுக்காரரும் படிச்சிருந்தா எவ்ளோ கஷ்டப்படுவார்! இல்லயில்ல. நல்லதாப்போச்சு. இதோ ஹேமா பேசறாளே.
அதே நேரம் மனத்தின் வேகத்தை எண்ணி வியந்தது இன்னொரு மனம். ஒருகணத்திற்குள் எவ்வளவு தூரம்! வேகம்!
" என்ன சீனுவாசன். சத்தமேயில்லை. கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்களா? ஆச்சரியமா இருக்குது. சந்தோசமாவும் இருக்குது. உங்க நம்பரத்தேடி, விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்."
" அதெல்லாம் இருக்கட்டும். எப்படியிருக்கீங்க? புவனா, ஹெப்ஸிபா எல்லாம் எப்படி இருக்காங்க. அவங்களோட கான்டாக்ட் இருக்கா?"
"ம்ஹூம். நீங்க அதே ஊர்ல இருந்துக்கிட்டு என்னைக் கேட்டா என்ன அர்த்தம்? "
" இல்லை. நான் இப்ப ஊர்ல இல்ல. ஆனா அவங்க எப்படியிருக்கப்போறாங்க. நல்லா குண்டாகி இரண்டு மூனு பிள்ளைங்களோட.... மாமியாகியிருப்பாங்க. நீங்களும் அப்படித்தான் இருக்கணும்."
" நீங்க மட்டும் என்னவாம். அங்கிள் ஆகியிருப்பீங்க."
"ச்சேச்சே! நான் இன்னும் பாக்க சின்னப்பையன மாதிரிதான் இருக்கேன்னு எல்லாருமே சொல்றாங்க. உண்மைதான் அது."
" ம். இப்படியொரு நினைப்பு வேறயா? சரி , இருக்கட்டும். கதையைப் படிச்சிட்டு அழுதிட்டேன் தெரியுமா? முடிச்சிருந்தவிதம் ரொம்ப நல்லாயிருந்தது. அப்ப ஒருவாட்டி மறுபடி அழுதேன்."
" எனக்கு சங்கடமாயிருக்கு இப்போ. தப்பா நினைச்சுக்காதீங்க. அட்லீஸ்ட் பேரையாவது மாத்தி எழுதியிருக்கலாம் நான். ஸாரி."
" பரவாயில்ல. நான் அழுதது அத நினைச்சு இல்ல. உங்க எல்லார் ஞாபகமும் வந்துடிச்சி."
" அப்புறம் அதுல எனக்கும் உங்கமேல ஒரு இதுன்னு எழுதியிருந்தது வெறும் ஒரு சுவாரசியத்துக்குத்தான். தப்பா நினைச்சுக்காதீங்க. அதெல்லாம் கற்பனை."
" அப்படியா! நான் அதெல்லாம் உண்மைன்னு நம்பித்தான் அழுதது, ரசிச்சது, சந்தோசப்பட்டது எல்லாம்.. நீங்க.."
டொய்ங். பாடாவதி செல்போன்.

20 comments:

Vidhoosh said...

:) புன்னகை.

--வித்யா

குடந்தை அன்புமணி said...

நல்லாருக்கு முத்துவேல். வாழ்த்துகள்... உயிரோசையில் வந்ததற்கும்...

கலையரசன் said...

உயிரோசை இணைய வார இதழில் வந்ததா? இல்லை நீங்கள் எழுதியதா?

எதுவாயிருந்தாலும் நன்று!!!

மண்குதிரை said...

nalla iruku nanba

uyirosaiyil nerru patiththavudan
thodarpu kolla ninaiththeen.

Ashok D said...

நல்லாயிருந்தது, பல்வேறு முடிச்சுகள்.. சிறு சிறு சஸ்பென்ஸ்.. கதை சொல்லும் பாங்கு, நான்லீனியர்.
அருமை முத்துவேல்.

எனக்கு எங்க போரடடிச்சுதுன்னு கில குறிப்பிடுகிறேன்.

//இப்போதெல்லாம் ஏனோ தகராறு இதனுடன்.ஹேங்க் ஆகிவிடும். மீண்டும் ஆன் ஆவதென்பது பெரிய போராட்டம். கால் லாக்கெல்லாம்(calls log) அழிந்துவிடும். சரி. ஒருவகையில் நல்லதாய்ப் போயிற்று. அவளிடமிருந்து தப்பித்தோம். பின்ன! ஊருக்குப்போன இரண்டுவாரத்தில், தினமும் இதே பல்லவி. வேறொன்றும் இல்லையா பேச? //
//சொல்லும்போதே சிகரெட்டின் முதல் பஃப் இழுப்பதுபோலிருக்கிறது.//

மத்தபடி கதை சூப்பரு.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

மணிஜி said...

/பாராட்டுவதில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, நிறைகளை மட்டுமே குறிப்பிட்டு பாராட்டுவது.//


நல்லா வந்திருக்கு முத்துவேல்...ஹேமா ,நீங்களாவது அன்னிக்கு ஒரு சின்ன சைகை செஞ்சிருக்காமே ...அப்படின்னு கேப்பான்னு நினைச்சேன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு கதை. நீங்கள் உபயோகித்திருந்த உத்திகளும் பிடித்திருக்கின்றன.

KarthigaVasudevan said...

ஆரம்பம் நிதானம் ...நடுவில் கொஞ்சம் வள வளா ...ஆனால் முடிவு "நச்" .நிறை..குறை ரெண்டும் சொல்லியாச்சுங்க. உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துகள் .

சந்தனமுல்லை said...

உயிரோசையில் வந்ததுக்கு வாழ்த்துகள்!
அழகா வந்திருக்கு கதை! வித்தியாசமான கதை சொல்லும் பாணி - நல்லாருக்கு! :-)

யாத்ரா said...

நல்ல கதை, வாழ்த்துகள் முத்து.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றாக இருக்கிறது.

நந்தாகுமாரன் said...

கதை மஹாஅருமை ... அசத்திட்டீங்க தலைவா ... படு ஸ்வாரஸ்யம் ... நடை அருமை ... எனக்கு மிகப் பிடித்திருக்கிறது ... வாழ்த்துகள்

you have rekindled my shchool & college thoughts ... thanks buddy

// ஹேமா! ஆமாம். அதுதான் காரணம் // அவள் தான் எனச் சொல்லாமல் விட்டதற்கு ஒரு பாராட்டு ... 'cause this is about a phenomenon ...

நந்தாகுமாரன் said...

and about the techniques you have used in this story ... marvelous ... i like it :)

துபாய் ராஜா said...

//" ஏன் நானேதான் தினமும் ஃபோன் பண்ணணுமா? நீங்க ஒரு நாளாவது பண்ணியிருக்கீங்களா?.. நாளையிலருந்து நான் பண்ணவேமாட்டேன். எனக்குமட்டும் என்ன வந்துச்சி.." //

இதுதான் பெண்ணின் குணம்.

//அப்படித்தான் சொல்வாள். ஆனால், செய்யமாட்டாள்.அதாவது ஃபோன் பண்ணாமலிருக்கமாட்டாள்.//

அதை உணரமறுப்பது நம்மைப்போன்ற ஆணின் மனம்.

//"இப்பத்தானெ வந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து இப்படிக் கேட்டிருந்தா , அதில ஒரு நியாயம் இருக்குது.அதுக்கும் முன்னால நீயேதான் தினமும் பண்ணிடறயில்ல"//

இப்படித்தான் பல நேரங்களில் சமாளிக்க வேண்டியிருக்கு... :))

சென்ஷி said...

ரொம்ப நல்லா இருக்குது முத்துவேல். கதை சொல்லும் முறையும் கலக்கல்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல கதை படித்த திருப்தி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தை சொல்வதில் வித்தியாசமான முயற்சி

செல்ஃபோனை கொண்டே கதையை முடித்தவிதம் நல்லா இருந்தது.

ச.முத்துவேல் said...

-> நன்றி விதூஷ்
-> நன்றி அன்புமணி
-> நன்றி கலையரசன்.இரண்டும்தான்.
-> நன்றி மண்குதிரை.அழைத்துப்
பேசியமைக்கும்
-> நன்றி அஷோக்.
-> நன்றி தண்டோரா
-> நன்றி சுந்தர்ஜி.இந்தக்கதையில எனக்கும் திருப்தியாத் தெரிஞ்ச ஒரு அம்சம், கொஞ்சம் உத்தி கூடிவந்திருப்பதுதான். சரியாகச் சுட்டிக்காட்டியதோடு அல்லாமல், தொலைபேசியிலும் அழைத்துப் பாராட்டியமைக்கு நன்றி.

-> நல்வரவு மிஸஸ் தேவ். நிறை, குறை இரண்டையும் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி
-> நன்றி சந்தனமுல்லை

-> நன்றி யாத்ரா.

-> நன்றி ஸ்ரீ

-> நன்றி நந்தா. உற்சாகமாயிருக்குது எனக்கு.

-> நல்வரவு துபாய்ராஜா. சேம் பிளட். நன்றி.

-> நன்றி சென்ஷி.நீண்ட நாட்களுக்குப் பிறகு படிச்சதாலதான் அப்படி நல்ல கதை படித்த திருப்தின்னு நான் சொல்றேன்.:)

-> நன்றி அமித்து அம்மா.

anujanya said...

முத்து,

கதையை விட, சொல்லிய உத்தி பிரமாதம். நீங்க கொஞ்ச நாட்கள் லீவ் என்று சொல்லிய ஞாபகம். அதனால் இந்தப் பக்கம் வரவேயில்லை. மன்னிக்கவும். இன்னிக்கு சென்ஷி சொல்லித்தான் தெரிந்துகொண்டேன்.

அனுஜன்யா

பி.கு.: ஆளு, செம்ம ஸ்மார்ட்டா இருக்கீங்க. கேபிள் சங்கர் பதிவில் உங்க புகைப்படம் பார்த்தேன் :)

ச.முத்துவேல் said...

-> அனுஜன்யா
நன்றி தலைவரே. எப்ப வந்தாலும் பரவாயில்லை. சென்ஷிக்கு மீண்டும் நன்றி.

பி.கு. நர்சிம் பக்கத்துல நின்னுருக்கும்போதும் நான் ஸ்மார்ட்டா இருக்கறதாச் சொல்லியிருக்கிறீங்க.ரொம்ப சந்தோசமாயிருக்கு.:) நன்றி