Tuesday, November 24, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-

என் பார்வையில் படைப்பாளிகள் - கவிஞர் இசை
isai
கவிஞர் இசை
வெவ்வேறு காலக்கட்டங்களில், சூழலில்,அனுபவங்களில், மனோ நிலைகளில் ஒரு கவிஞன் தன் கவிதைகளை எழுதுகிறான்.அவற்றை ஒரு தொகுப்பாகப் படிக்கமுடிகிறபோது, தொகுப்புகளின் அடிநாதமாய், ஒரு மையப்புள்ளி இருந்துவிடுகிறது. அந்த மையத்தை, ஒற்றுமையை ஒற்றைச்சொல்லிலோ அல்லது ஓரிரு வரிகளிலோ அடையாளப்படுத்திவிடமுடிகிறது. அந்த மையமே கவிஞனின் தனித்தன்மையாகிறது.சிறப்புத்தன்மையை அளிக்கிறது.அந்த வகையில் கவிஞர் இசையின் கவிதைகளின் அடிநாதமென இயலாமைகளைப் பற்றிய பரிகாசம் கலந்த குரல் எனச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
 
லௌகீக உலகின் நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்வை வாழவிரும்புபவர்களுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன.ஒன்று, விதிக்கப்பட்ட வாழ்வை மாற்ற முயல்வது. மற்றொன்று அதனோடு பணிந்து ஒத்துப்போய்விடுவது(.மடிந்துபோகுதல் வாழவிரும்புபவர்களுக்கான தெரிவல்ல)..இதையே கவிஞர் இசையின் கவிதை வரிகளில் சொல்லலாமெனில்
 
”ஒரு பிடிவாதமான சிறுமியை
பலம்பொருந்திய ஒற்றைக்கை
அனாயாசமாக இழுத்துச் செல்வதைப்போல”



இருந்துவிடுகிற வாழ்வில்

”இச்சாக்கடையில்
உறுமீன் ஏது
கிடைக்கிற குஞ்சுகளைக்
கொத்தித் தின்
என் கொக்கே”



எனச் சமரசம் செய்துகொள்ளவேண்டியதன் துயரை, அவலத்தை,இயலா நிலையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
பல்வேறு இயலாமைகளைப் பட்டியலிடுவதாக அமைந்துள்ள இவரின் கவிதைகள் எளிமையையும், இயல்பான வசீகரம் கொண்ட மொழியையும் கொண்டுள்ளது.துயரங்களையும் பரிகாசம் கலந்து எழுதுவது இவருடையத் தனிச்சிறப்பு.

”இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப்போன குரூரங்களின் முன் ஒரு பார்வையாளனாகவே நிற்கும் இயலாமை என எல்லாமும் நகையுணர்வுடன் கூடிய கிண்டலான பார்வையில் கவிதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன”
என்கிற வரிகள் ,இவரின் உறுமீன்களற்ற நதி தொகுப்பில் அமைந்துள்ள செறிவான, தெளிவான மதிப்புரை.

மேலும் கவிஞர் இசையின் பார்வையிலேயே அமைந்துள்ள பின்வரும் சுயமதிப்புரையை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும்.
 
‘என் கவிதைகள் துயரத்தையே அதிகம் பேசுகின்றன. ஆனால் துயரத்தை மட்டும் பேசு என்று நான் அதற்கு கட்டளையிடுவதில்லை. அப்படி கட்டளையிடவும் முடியாது. ஆனாலும் அவை துயரத்தையே தன் பேச்சாக தெரிவு செய்கின்றன. “நான் எவ்வளவு பெரிய சுக போகி . . . , களியாட்டுக்காரன் . . . , அறை அதிரச் சிரிப்பவன் . . . , எத்தனை காதல்களை கொள்பவன் . . . , எத்தனை காதல்களை கொடுப்பவன் . . . இப்படி அழுது வடியாதே” என்று எத்தனையோ முறை நான் கெஞ்சியாகிவிட்டது. ஆனாலும் “துயரத்தின் கைமலராக” இருப்பதையே அவை விரும்புகின்றன. இதை யோசிக்கையில் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தன் எழுத்தில் எதைச் சொல்ல வேண்டும் என்பதில் அவன் அறிந்தோ அறியாமலோ ஒரு தேர்வு இருக்கவே செய்கிறது என்று தோன்றுகிறது. அல்லது ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவன் படைப்பு மனத்தை தூண்டிவிடுவது சில குறிப்பிட்ட விஷயங்களாக அமைந்துவிடுகின்றன என்றும் கருதலாம். என் கவிதையில் தொழில்படும் அங்கத உணர்வே இந்த அழுகையின் அலுப்பிலிருந்து வாசகனை விடுவித்து ஒருவித புத்துணர்வையும் வாசிப்பின்பத்தையும் அளிக்கிறது என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.”


”என் கவிதைகளில் சொற் சிக்கனம் இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் இசைத்தன்மை கூடி வர வேண்டும் என்பதையே நான் விரும்புவதாக சந்தேகிக்கிறேன். இசையின் பெரும் துடிப்பு எதுவும் என் கவிதைகளில் இல்லாத போதும், என்னளவில் ஒரு இசை அதில் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று விருப்புகிறேன். இதற்காக கவிதைக்கு தேவையற்றது என்று சொல்லப்படுகின்ற சில வாக்கியங்களையும் நான் கவிதையில் அனுமதிப்பதாக நினைக்கிறேன். இந்த வாக்கியங்கள் எனக்கான பிரத்தியேக கவிதை மொழி ஒன்றை உருவாக்குவதிலும் துணை செய்கின்றன என்று கருதுகிறேன்.”


புத்தாயிரம் ஆண்டிற்குப்பிறகு எழுதத்தொடங்கியுள்ள கவிஞர்களில் இசை-யின் வரவு மகிழ்ச்சியளிக்கிறது.இவரின் இயற்பெயர் ஆ.சத்தியமூர்த்தி.கோவை மாவட்டம் இருகூரில் வசிக்கிறார்.அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராகப் பணியாற்றுகிறார்.இவரின் கவிதைத்தொகுப்புகள்,

1.காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி(2002)
2.உறுமீன்களற்ற நதி(2007),காலச்சுவடு பதிப்பகம்.

இசைக்கருக்கல் (டங்கு டிங்கு டு) என்கிற வலைப்பூ எழுதுகிறார்.

உறுமீன்களற்ற நதியிலிருந்து சில கவிதைகள்
அழகான சொற்றொடர்


குரலுயர்த்த இயலாதது உனது நா
தழுதழுப்பதொன்றே அதன் இயல்பு
நீ காண்டீபம் உயர்த்தும்
ஒவ்வொரு முறையும்
யாருன் காலில் விழுந்து
மன்றாடுவது
மனைவியா குழந்தையா
பற்கடிப்பும் முணுமுணுப்புமே
நம் ஆகச்சிறந்த தீரச் செயல்கள்
என்றாகிவிட்டது
அழுவதற்கென்றே செய்யப்பட்ட
முகங்களைக் கொண்டு
அழுதுகொண்டிருக்கிறோம்
அழுதோம்
அழுவோம்
“கண்ணீர்த் துளிகள்
சாம்ராஜ்யங்களையே சரித்துவிடும்”
இது ஒரு அழகான சொற்றொடர் நண்பா.

தற்கொலைக்கு தயாராகுபவன்


தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது .
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்க துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுன்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

ஒரு கூரான கத்திக்கு முன்னால்


ஒரு கூரான கத்திக்கு முன்னால்
உங்களால் செய்ய இயன்றதென்ன
ஒரு கூரான கத்திக்கு முன்னால்
நீங்கள் அற நெறிகளைப் பிரசங்கிக்கலாகாது
ஏனெனில்
உலகின் முதல் கத்தி
உண்மையைக் கிழிப்பதற்கென்றே வடிவு
செய்யப்பட்டது
ஒரு கூரான கத்திக்கு என்றுமே
தோல்வி பயம் தோன்றுவதில்லையாதலால்
சமரசத்திட்டங்கள் எதையும்
நீங்கள் முன்வைக்க இயலாது
ஒரு கூரான கத்திக்கு முன் தோன்ற
கடவுளர்க்கும் குலை நடுக்கம் உண்டென்கிறபடியால்
உங்கள் அபயக்குரல்கள் செவிமடுக்கப்படுவதில்லை
ஒரு கூரான கத்திக்கு முன்னால்
உங்களுக்கு நன்றாக நினைவிருக்கவேண்டும்
நீங்கள் சே குவேரா அல்ல
ஒரு கூரான கத்திக்கு முன்னால்
உங்களால் செய்ய இயன்றதென்ன
மன்னித்தருள வேண்டி
கத்தியின் கால்களைக் கட்டிக்கொண்டு
மன்றாடுவது அல்லது
அதன் கணக்கில் மேலும்
ஒரு வெற்றிப்புள்ளியைக் கூட்டி
துடிதுடித்தடங்குவது.

சகலமும்


சகலமும் கலைந்து சரிய,
அழுதழுதடங்கியவன்
தன்னருகே வந்து
குழைந்த நாய்க்குட்டியை
மெல்லமெல்லத் தடவிக்கொடுத்தான்
அது அவன்
உடலாகவும் இருந்தது

பிதாவே

ஒரு பந்தென இருக்கிறோம்
கடவுளின் கைகளில்
அவரதைத் தவறவிடுகிறார்
தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் எற்றி
புஜங்களில் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கு இடையே
மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்
‘' நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை;உன்னைக் கைவிடுவதுமில்லை''
பிதாவே தயவு பண்ணி எம்மைக் கைவிடும்.
நன்றி – தடாகம்
Thadagam_Logo_Eng

7 comments:

யாத்ரா said...

நண்பர் இசை பற்றி மிக அழகாக எழுதியிருக்கீங்க முத்து, எனக்கு அவரை நீங்கள் வாசிக்கக் கொடுத்த அந்த அப்பர் பர்த் பயணம் நினைவுக்கு வருகிறது முத்து. அந்தப் பயண முன்னிரவில் அந்த மிதமான போதையில் இசையை வாசித்த அனுபவம் மிக மிக இனிமையானது,

விநாயக முருகன் said...

”ஒரு பிடிவாதமான சிறுமியை
பலம்பொருந்திய ஒற்றைக்கை
அனாயாசமாக இழுத்துச் செல்வதைப்போல”


இந்த வரிகள் மனதுக்குள் பலமாக அறைந்து சற்று கண்மூடி சிந்திக்க வைக்கின்றது. எவ்வளவோ உள்அடுக்குகள் இதற்குள் ஒளிந்துக்கிடக்கின்றன. இழுத்துச்செல்வது யார் என்பது குறித்தும், இழுத்துச்செல்லும் நோக்கங்கள் பற்றியும் பலவித யூகங்கள். மனதை கனக்க வைக்கும் வரிகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

”ஒரு பிடிவாதமான சிறுமியை
பலம்பொருந்திய ஒற்றைக்கை
அனாயாசமாக இழுத்துச் செல்வதைப்போல” //

பகிர்வுக்கு நன்றி.

புத்தகச்சந்தையில் வாங்க குறித்துக்கொண்டாயிற்று :)

Ashok D said...

தற்கொலை
கூரான கத்தி
பிதாவே

அருமையான பொய்களற்ற கவிதைகள். follower ஆகிட்டேன்.
ப.ந.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கார்த்தியும் இதே இடுகையைத்தான் இட்டுள்ளார்.ஆச்சரியம்.

கமலேஷ் said...

உங்களுடைய ஒவ்வொரு வரிகளிலும் உங்களுடைய அனுபவம் தெரிகிறது. ஒவ்வொரு வார்த்தைகளும் உங்களுடைய முதிர்ச்சியை சொல்கிறது. சமான்யகளால் உணர முடியாத உணர்ச்சி.......அருமையான எழுத்து.....

ச.முத்துவேல் said...

யாத்ரா
எனக்கும் நீங்கள் சொல்லும் இனிமையான தருணம் நினைவ்ருகிறது. நன்றி யாத்ரா

நன்றி வினாயகமுருகன்

நன்றி அமித்து அம்மா

நன்றி அஷோக்.

நன்றி ஸ்ரீ.

நல்வரவு கமலேஷ். நன்றி.