Wednesday, December 16, 2009

கூத்தப்பனையும், முத்தூவெல்லும்

                                             மதுரையில் இவ்வாண்டு நடந்த கடவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது சு.வேணுகோபால் அவர்களைப் பார்க்கமுடிந்தது.ஜெயமோகனின் இணையதளத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாசித்துவருவதின் வழியாக, சு.வேணுகோபால் அவர்கள் பெயரையும், அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த முக்கியமான படைப்பாளி என்று மட்டுமே அறிந்திருந்தேன். ஆனால், அதுவரை அவரின் ஆக்கங்கள் எதையும் படித்ததில்லையாதலால் அவரோடு என்னால் கலந்துரையாடமுடியாமல் போனது. நண்பர் கும்கி மற்றும் அவரின் நண்பரொருவர் ஆகிய இருவரும் சு.வேணுகோபாலை ஒரு ஓரமாக அழைத்துச் சென்று நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர்.திரும்பிவந்த கும்கி, என்னிடம் வேணுகோபால் பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவரின் ‘கூந்தப்பனை’ பற்றியும் மற்ற சில ஆக்கங்களை பற்றியும் எனக்குச் சொன்னார். நான் அப்போதுதான் ‘கூந்தப்பனை’ என்கிற சொல்லையே முதன்முதலாக அறிகிறவனாயிருந்தேன். மாநகரமும் அல்லாமல், கிராமமும் அல்லாமல் ஒரு இடைப்பட்ட நகரத்தில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நான் , முதன்முதலில் குயிலைப் பார்த்ததே சென்னையில்தான்.கிட்டத்தட்ட இருபது வயதில்தான். நான் பிறந்த நகரத்தை இதற்குக் குற்றம் சொல்ல முடியாது. நான் வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது.

பிறகான சில நாட்களில் கூந்தப்பனை என்கிற சொல் எப்படியோ கூத்தப்பனை என்றே என் நெஞ்சில் நிலைத்துவிட்டது.இதற்கிடையில் சு.வேணுகோபாலின் சிறுகதைத் தொகுப்பான ‘களவு போகும் புரவிகள்’ லிருந்து இரண்டு கதைகளை மட்டும் படித்திருந்தேன். மிகவும் தாவித்தாவிச் செல்கிறபடியும், வாசிப்பில் பொறுமையையும், தேர்ச்சியையும் கோரும் வகையில் இருந்தமையாலும் அதற்குமேல் அப்போதைக்கு படிக்கமுடியாமல் ஒத்திவைத்தேன்.பிறகு ‘சாயாவனம்’ நாவலைப் படிக்கிறபோது, அதில் கூந்தல்பனை என்கிற சொல்லைக் கண்டபோது, நினைவிலிருந்த கூத்தப்பனையை மீட்டு கூந்தப்பனை என்பதாக சரிசெய்துகொண்டேன். கூத்தப்பனை என்று ஒரு சொல்லே கிடையாது என்று தெரிந்திருந்தால்தானே, அச்சொல்லிலிருக்கும் பிழையை என்னால் மாற்றிக்கொள்ள முடியும். என்னுடன் பணிபுரியும் வட இந்தியர் ஒருவர் என் பெயரை முத்தூ வெல் என்பார். அதுபோல்தான் இருக்கிறது இது.

இதற்குப்பிறகு என்னுடன் பணிபுரியும் என் வயது நண்பர்கள் சிலரிடம், அவர்கள் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து, நிலப்பகுதிகளிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் கூந்தப்பனை என்பதுபற்றி விசாரித்தேன். கூந்தப்பனை என்று சொல்வதா அல்லது கூந்தல்பனை என்று சொல்வதா என்கிற சிறிய தடுமாற்றம் வேறு. என்னைப்போலவே நண்பர்கள் சிலருக்கும் தெரியவில்லை. ஒரேயொருவன் மட்டும் தாலிப்பனை என்ற ஒன்று இருக்கிறது என்று மட்டும் சொன்னான்.அவன் வடதமிழ் நாட்டுப்பகுதியைச் சேர்ந்தவன்.அதன்பிறகு கிராமவாசியானவரும், வயதில் மூத்தவரும், உள்ளுர்க்காரருமான ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர் கூந்தல்பனை , பனைமரம் தான் என்றும் பார்க்கத் தென்னைமரம்போலிருக்கும் என்றுமட்டும் சொன்னார். மேலும், நானிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி ,ஒரேயொரு கூந்தப்பனை மட்டும் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருந்தார். நானும் சென்று பார்த்தேன். மற்ற பனைமரங்கள் அடிமுதல் முடிவரை ஒல்லிக்குச்சியாக, நிகு நிகுவென நின்றிருக்க இந்த ஒன்றுமட்டும் தடித்ததும் ,மிக உயரமாகவும், தண்டின் நிறத்தில் சிறிது கருமை நீங்கி சாம்பல் நிறத்திலும், இலைகளிலும் கூடுதல் வனப்பும் கொண்டதாகத் தென்பட்டது. வாய்ப்பிருந்தால் பிறகொருமுறை புகைப்படம் எடுத்து இணைக்கிறேன்.
இன்னொரு உள்ளூர்க்காரர் இதன் பெயர் தாலிப்பனை என்றார். வட்டாரம் சார்ந்த சொல்லாடல்போல. இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும். இலக்கியம் படிப்பதன் மூலம் இப்படியாவது ஏதாவது நடந்தால் சரி.
ஜெயமோகன் , அண்மையில் எழுதியிருக்கிற ‘சு. வேணுகோலின் மண்’ என்கிற பதிவில், கூந்தப்பனை பற்றிய படிம பிரயோகத்தை, வெளியிட்டிருந்த இடம் கூந்தப்பனை ஆக்கததை படிக்கும் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டியுள்ளது.

6 comments:

அகநாழிகை said...

முத்துவேல்,
பகிர்தல் அருமை. இன்னமும் கூட எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். முழுமையடையாத ஒரு உணர்வு இருக்கிறது. குமுதம் - ஏர் இந்தியா போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘நுண்வெளிக் கிரகணங்கள்‘ நாவலை வாசித்த அதிர்வுகள் அடங்குவதற்கு பல நாட்களாகியது. அப்பொழுதே ‘புதிய பார்வை‘ அலுவலகத்திற்கு வந்திருந்த அவரை சந்தித்தேன். தனித்துவமான எழுத்து நடை அவருடையது. ‘கூந்தப்பனை‘ நுட்பமான பாலியல் அகச்சிக்கல்களை துலக்கும்படியான எழுத்துவகை. அவ்வகை எழுத்தில் குறிப்பிடத்தகுந்த படைப்பு. வேணுகோபாலின் ‘பூமிக்குள் ஓடுகிறது நதி‘ ‘களவு போகும் புரவிகள்‘ இரண்டுமே எனக்கு பிடித்தமானது. பாசாங்கற்ற, பழக இனிமையான நண்பர் சு.வே.

சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை ‘தமிழினி‘ வசந்தகுமார் இல்லத்தில் சந்தித்தபோது, பழைய நினைவுகளை அசைபோட்டோம். மகிழ்ச்சியாய் இருந்தது.
பகிர்தலுக்கும், பழைய நினைவுகளுக்கும் கொண்டு சென்றதற்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்

Ashok D said...

கூந்தப்பனை மற்றும் சு.வேணுகோபாலின் அறிமுகம் நன்று முத்தூவெல் :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மதுரையில் அதைக் கூந்தல்பனை என்றுதான் சொல்கிறார்கள்.சில இடங்களில் அதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் நான் பார்த்ததுதான் அந்த மரமா என்று கேட்டால் தெரியாது.அழகுக்காகவும் வளர்க்கிறார்கள் . அந்த தொகுப்பைப் பற்றி நானும் கேள்விப் பட்டதில்லை.படிக்க முயற்ச்சிக்கிறேன்.அறிமுகத்திற்கு நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி.

கூந்தல்பனை என்றுதான் சொல்லக்கேள்வி. பனைமரம் போலவே இருக்கும், ஆனால் அதன் கிளைகள் அடர்த்தியாக நீள நீளமாக கவிழ்ந்து தொங்கும்.(நீளமான முடியை கவிழ்த்த மாதிரி)
காரப்பாக்கத்திலிருக்கும் எங்கள் பள்ளியின் பார்ம் ஹவுஸில் நான் இந்த மரத்தினைப் பார்த்திருக்கிறேன். விசிறிவாழையை பார்த்ததும் அங்கேதான்.

அகநாழிகை said...

கூந்தல்பனையின் முக்கியமான விஷயம் அது காய்க்காது என்பதுதான். அதுதான் கதையும் கூட.

பொன்.வாசுதேவன்

ச.முத்துவேல் said...

@அகநாழிகை வாசு,
கருத்துக்களின் பகிர்வுக்கு நன்றி.இன்னும் எழுதியிருக்கலாம் என்பது நானும் உணர்ந்ததுதான். ஆனால், மேற்கொண்டு எழுத வரவில்லை.இயறகையை விட்டு எத்தனைபேர், எந்தளவுக்கு விலகியிருக்கிறோம் என்று ஏங்கி நொந்துகொண்டதன் பதிவு இது. நம்மைச்சுற்றியுள்ள பல தாவரங்களின் பெயர் தெரிந்திருக்கவில்லை.தெரியவேண்டிய தேவையும் இன்று அவ்வளவு இல்லை என்பது தான் வருத்தமான நிலை.

நன்றி அஷோக்

நன்றி ஸ்ரீ.வட தமிழ் நாட்டில் தாலிப்பனை என்பதாக அறிகிறேன்..

நன்றி அமித்து அம்மா.