Wednesday, January 27, 2010

சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்-தபசி

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்

கவிஞர் தபசி
*சொற்களின் எளிமையைப் புறந்தள்ளிவிட்டு தன்னைச் சுற்றி ஒரு மாயவலையைப் பின்ன ஆரம்பித்த தருணமே நவீன தமிழ்க்கவிதையின் வீழ்ச்சி நிலை.
*கவிதையின் பிரதான அம்சங்களாக நான் காண்பது நேரடித்தன்மை,எளிமை மற்றும் உண்மை.ஒரு உண்மையை எளிமையன்றி வேறு எந்த விதத்திலும் வெளிப்படுத்தமுடியாது என்பதே உண்மையாகும்.
-தபசி

                       பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவும், ஏழு கவிதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ளவர் கவிஞர் தபசி.தபசியைப் பற்றின பரவலான அறிமுகம் நம் தமிழ்ச்சூழலில் இல்லை என்பது என் தனிப்பட்ட கணிப்பு.இது எந்த அளவுக்கு ஆச்சரியமானதோ, அதைவிட வருத்தமளிக்கக்கூடியது.இதற்குச் சான்றாக, இணையத்தில் தபசியின் பெயரில் தேடினால் கிடைக்கும் விரல்விட்டு எண்ணிவிடும் அளவுக்கு அமைந்துள்ள பதிவுகளே போதும்.

                       கவிதைக்கென நாம் ஒரு தனித்துவமான, மொழியமைப்பை வரித்துக்கொள்கிறோம். சராசரி பேச்சு மொழியிலிருந்து அன்னியப்பட்டு நிற்கக்கூடியது இது.மாறாக, சராசரி பேச்சு மொழியில் கவிதைகளை எழுதிவிடும்போது, அவற்றை கவிதைகளாக ஏற்க நாம் தயக்கம் காட்டுகிறோம் என்றே படுகிறது.ஆனால், கவிதை என்பது தீவிரமான முதிர்ச்சி கொண்ட மொழியமைப்பில் வெளிப்படுத்தப்படுவது மட்டுமேயல்ல என்பதே உண்மை.கவிஞர் தபசியின் பெரும்பாலான கவிதைகள் நேரடியான பேச்சு வழக்கிலுள்ள, எளிய சொற்களாலேயே எழுதப்பட்டுள்ளது. இவரின் சொற்பிரயோகங்களிலிருக்கும் எளிமையும், நேரடித்தன்மையும் கவிதை உணர்த்த விரும்புவதற்கான பொருளோடு நேரடித்தொடர்பு கொண்டதல்ல.அதை நேரடியாக புரிந்துகொள்ளக்கூடாது. அது, பிறிது மொழிந்து,விரிந்துகொண்டே செல்லும் அடர்த்தி கொண்டது. சொன்ன சொற்களிலிருந்து பெருகும் சொல்லப்படாத சொற்களே இங்கு கவனிக்கத்தக்கது.இதுவே, இவரின் கவிதைகளை அணுகுவதற்கான வழியாக நான் குறிப்பிட விரும்புகிறேன்.நவீன இலக்கியம் என்பதே வாசிப்பில் தேர்ச்சியைக் கோருவது.இல்லாமல்போனால், நிறைய படைப்புகள் வெறுமையானதாகத் தோன்றிவிடக்கூடும்.

ஒரு வசந்தத்தின் பாடலென்பது/எங்கோ/எப்போதோ/ஒலிப்பதன்று அது/இங்கே/இப்போது/ஒலித்துக்கொண்டிருப்பது என்று அமைந்துள்ள இவரின் ஒரு கவிதையின் சில வரிகளைப்போல், இவர் கவிதைகள் இயங்கும் தளம் சராசரியான, அன்றாட வாழ்விலிருந்து, உலகத்திலிருந்து எடுத்தாளப்பட்ட நிகழ்வுகளும், காட்சிகளுமே.

இவரின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் அங்கதச்சுவையும், கேலியும்.வாய்விட்டும் சிரிக்கும் அளவுக்கு அங்கதம் கொண்ட கவிதைகள் நிரம்ப உள்ளன.சமூகத்தின் மீதான விமர்சனத்தை இவர் அங்கதச்சுவையோடு கேலி செய்கிறார். நேரடியான , மறைமுகமான அரசியல் கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். விட்டு விலகிடும் நிலை பற்றி நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார்.தொன்மத்தையும், நவீன வாழ்வையும் இணைத்துப்பார்த்து அங்கதம் தெறிக்க எழுதுகிறார்.கடவுளும் டாஸ்மாக்கும் போன்ற படிமமெல்லாம் உதாரணம். வித்தியாசமான சொல்முறைகளை கவிதைகளில் பயன்படுத்தியிருக்கிறார்.

தபசி - சில குறிப்புகள்

இயற்பெயர் சங்கர்.திருக்கோயிலூரில் பிறந்த இவர் தற்போது திருச்சியில் வசிக்கிறார்.ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் தபசி, மத்திய கலால் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.இவரது சில கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் கவிதைத் தொகுப்புகள்

1.ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்(1994),
2.இன்னும் இந்த வாழ்வு(2000)
3.தோழியர் கூட்டம் 2003,
4.ரசிகை(2003)(மோகனா பதிப்பகம்)
5.மயன் சபை
6.குறுவாளால் எழுதியவன் 2004( சந்தியா பதிப்பகம்)
7.காதலியர் மேன்மை(2007),(அம்ருதா பதிப்பகம்)

நீள நீளமான கவிதைகளாக இருப்பதால் சிலவற்றை மட்டுமே அளிக்கிறேன்.

ஞானம்


சித்தார்த்தனைப் போல்
மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு
நடுராத்திரியில்
வீட்டைவிட்டு
ஓடிப்போக முடியாது என்னால்

முதல் காரணம்
மனைவியும்,குழந்தையும்
என்மேல்தான்
கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள்
அவர்கள் பிடியிலிருந்து
தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல

அப்படியே தப்பித்தாலும்
எங்கள் தெரு நாய்கள் எமன்கள்
லேசில் விடாது
என்னைப் போன்ற
அப்பாவியைப் பார்த்து
என்னமாய் குரைக்கிறதுகள்

மூன்றாவது
ஆனால்
மிக முக்கியமான காரணம்
ராத்திரியே கிளம்பிவிட்டால்
காலையில்
டாய்லெட் எங்கே போவது
என்பதுதான்.

நண்பர்கள்

கடவுளும் சாத்தானும்
சந்தித்துக்கொண்ட ஒரு மாலை வேளை

கடவுள் கையில் பால் டம்ளர்
சாத்தானிடம் சாராய பாட்டில்

ஆரம்பித்தது சாத்தான்
“ என்ன சாமி...எப்படி இருக்கீங்க...
எங்கப் பாத்தாலும் உங்க பேருதான்...
திருப்பதி, திருத்தணி, பழநின்னு வசூலை
அள்ளிக்கொட்றீங்களே...”

“அட போப்பா...”
அலுத்துக்கொண்டார் கடவுள்,
“என்ன இருந்தாலும்
டாஸ்மாக் வருமானத்துக்கு
ஈடாகுமா நம்ப வருமானம்..”

சாத்தான் விடுவதாயில்லை
“ என்ன குருவே...அப்படிச் சொல்லிட்டீங்க...
தேர்,திருவிழா,தெப்பம்னு உங்களுக்குத்தானே
எல்லாக் கொண்டாட்டமும்...”

“ நீதானே மெச்சிக்கணும்..எந்தப் பேப்பரை பாரு...
உன்னோட ராஜ்ஜியம்தான்...
கள்ளக்காதல்,கற்பழிப்பு,
கொலை,குண்டுவெடிப்புன்னு
பூந்து விளையாடுறியே தம்பி..”

சாத்தானுக்குக் கூச்சமாகப் போய்விட்டது
அதற்குள்
பாலை காலி செய்துவிட்டிருந்தார் கடவுள்

“என்ன பிரதர்...அதுக்குள்ள முடிச்சிட்டீங்க...
வேணும்னா இதைக் கொஞ்சம் டேஸ்ட்
பண்ணிப் பாக்கறீங்களா...”
“ஒன்னும் பண்ணாதில்ல...ஒன்னும்
பண்ணாதுன்னா கொஞ்சூண்டு ஊத்து பாப்போம்.”

நண்பர்


நேராய்ப் பேசும்போது
புத்திசாலி

தொலைபேசி உரையாடலில்
அசடு

மனைவியிடம் பேசும்போது
(எப்போது பேசினார்)
பயந்தாங்கொள்ளி

பிள்ளைகளிடம்
கோமாளி

அதிகாரியின் அதட்டலுக்கு
மௌன சாமியார்

பேச்சுதான்
அவருக்குப்
பிரச்னையே

இந்தக் கணத்தில்


எல்லாவற்றையும் கடந்துவிடு
உன்முன் இருக்கும்
வீடு, மனைவி, மக்கள்
பணம்,பதவி,பவிசு,
நட்பு, சொந்தம், பந்தம்
புகழ், அதிகாரம்,ஆணவம்,
அறிவு, திமிர், நடிப்பு,
பேச்சு,சிரிப்பு,அழுகை,
வாழ்க்கை,மரணம்,கண்ணீர்...
எல்லாவற்றையும்.
ஒரு நொடியில் நிகழவேண்டும் இது.
காத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை.

(குறிப்பு- ரசிகை, குறுவாளால் எழுதியவன் மற்றும் காதலியர் மேன்மை ஆகிய திகுப்புக்களை மட்டுமே வைத்து எழுதப்பட்டிருப்பது இது)
நன்றி- தடாகம்
Thadagam_Logo_Eng

5 comments:

சந்தனமுல்லை said...

கவிதைகளை மிகவும் ரசித்தேன்! :-)

விநாயக முருகன் said...

‌நீ‌ங்க‌ள் சொல்லித்தான் காதலியர் மேன்மை வாங்கி படித்தேன். என்னத்த சொல்ல....முத‌ல் வாசிப்பிலேயே இ‌து நம்ம ஆளு எ‌ன்று நினைத்தேன். இ‌து மாதிரி கவிதைகளை படிக்கும்போது மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றது

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதைகள் எல்லாமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. அருமையான பகிர்வு.

காதலியர் மேன்மை - தலைப்பே ;)

"உழவன்" "Uzhavan" said...

நண்பர்கள் கவிதை அட்டகாசம்.. பகிர்வுக்கு நன்றி

ச.முத்துவேல் said...

@சந்தனமுல்லை
நன்றி சந்தனமுல்லை

@வினாயாகமுருகன்
உங்களுக்குப் பிடிக்கும் என்கிற என் நம்பிக்கை வீண்போகாதது மகிழ்ச்சியே.
நன்றி வினய்.

@அமித்து அம்மா

நன்றி அமித்து அம்மா

@உழவன்
நன்றி உழவன்.