Tuesday, March 2, 2010

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் - கவிஞர் கரிகாலன்

படைப்பாளிகள் அறிமுகம்
கவிஞர் கரிகாலன்

எல்லோருக்கும் காணக்கிடைக்கும் சராசரிக் காட்சிகளிலிருந்துகூட கவிஞன் சில கண்டறிதல்களை அடைகிறான்.அந்த மாற்றுக் கோணத்தை, சிந்தனையை கற்பனையும், கவித்துவமும் கலந்து தருகிறான். கவிஞர் கரிகாலன் தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவர்.அதிகாரத்தின் முன் கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்தம்,வஞ்சிக்கப்படும் எளிய மனிதர்களுக்கான அக்கறை,அரசியல்,காமம், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, பகடி, அலாதியான கற்பனை, காட்சிகளை முன்வைத்துவிட்டு ஒதுங்கி நின்றுகொள்ளுதல், தொன்மையையும் நவீனத்தையும் இணைத்து ஒரு மாயக்காலத்தை உருவாக்குதல் , சிதையும் தொன்மம் பற்றிய கவலை, குழந்தைகள் உலகம் என இவரின் கவிதைகளின் தன்மைகள் பலதரப்பட்டது. 90 களுக்குப் பின் நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள் என்கிற இவரின் திறனாய்வுக் கட்டுரைகள் கொண்ட நூல் இவரின், திறனாய்வு ஆளுமையை நன்கு வெளிப்படுத்தும் சிறந்தவொரு நூல்.கவிதைகளோடு நின்றுவிடாமல் திறனாய்வு, கட்டுரைகள், நாவல் எழுதுவது, சமூக நலன் சார்ந்த செயல்களில் ஈடுபாடு என இயங்குகிறார்.மேலும் களம் புதிது என்கிற சிற்றிதழ் நடத்தியிருக்கிறார். தற்போது மீண்டும் இதழைத் தொடர இருப்பதாக அறிய நேர்ந்தது.

தொன்னூறுகளிலிருந்து இலக்கியவெளியில் இயங்கிவரும் கரிகாலன் 1965ல் கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்தவர்.ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணுபுரிகிறார். இவரது கவிதைகளில் சில ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.புனை
விலக்கியத்திற்காக கதா விருதும், கவிதைக்காக ஏலாதி இலக்கிய விருதும் பெற்றுள்ளார். இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முன்னணிப் புதின எழுத்தாளர்களுள் ஒருவர்.இவரது தம்பி இரத்தின.புகழேந்தி அவர்களும் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் எனும் 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பு உயிர் எழுத்து வெளியீடாக வந்துள்ளது. அதன் பின்னைட்டையில் காணப்படும் வரிகளே, இவரைப் பற்றின செறிவான, ஆழ்ந்த திறனாய்வுக்கு சான்றாக அமைந்துள்ளது. அது பின்வருமாறு

தொன்னுறுகளில் உருவான தனித்துவம் மிக்க கவி ஆளுமைகளுள் ஒருவரான கரிகாலனின் கவிதைகள் அதிகார எதிர்ப்பை மையச் சரடாகக் கொண்டவை.தொன்மமும், புனைவும், மர்மமும் மிகுந்த இவரது கவிதைகள் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியும், மேலைத்தேயக் கவிதைகளின் புதுமையும் இணையப் பெற்றவை.ஐவகை நில அடையாளங்கள் திரிந்து உருவாகிக்கொண்டிருக்கும் ஆறாவது நிலத்தையும், அபத்தங்களின் கூட்டிசையாக மலர்ந்திருக்கும் நம் நலவாழ்வையும் கேலிசெய்யும் இத்தொகுப்பு இதுவரை வெளிவந்துள்ள அவரது தொகுப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு கவிதைகளை உள்ளடக்கியிருக்கிறது'

இவரின் படைப்புகளாவன

1.அப்போதிருந்த இடைவெளியில்- கவிதைகள்
2.புலன்வேட்டை- கவிதைகள்
3.தேவதூதர்களின் காலடிச்சத்தம்- கவிதைகள்
4.இழப்பில் அறிவது- கவிதைகள்
5.ஆறாவது நிலம்- கவிதைகள்
6.அபத்தங்களின் சிம்பொனி- கவிதைகள்
7.கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்
8.நவீனத்தமிழ்க் கவிதையின் போக்குகள்- கவிதைத் திறனாய்வுக் கட்டுரைகள்
9. நிலாவை வரைபவன் - நாவல்

தொடர்ந்து இதழ்களிலும், இணைய இதழ்களிலும் இயங்கிக்கொண்டு வருகிறார்.இவர் பற்றி எழுத எனக்கு ஏற்பட்ட அளவுக்கு, சொற்களும் சிந்தனையும் பக்குவமும் ஏற்படவில்லை என்றே உணர்கிறேன்.எனவே, அது குறித்துப் பேச இவரின் கவிதைகளையே கூடுதலாகத் தருகிறேன்.

கரிகாலன் கவிதைகள்

டயானா மரணமும்
கிளிண்டன் காதல் லீலைகளும்
பஞ்சாயத்து தொலைக்காட்சியில்
பார்த்தபின் விவாதமாயிற்று
டீக்கடை பெஞ்சுகளில்

முதிர்ந்த கரும்பு காய்ந்து கருக
ஆலை திறக்குமா
நிலுவை கிடைக்குமா
இருள் சூழ் மர்மமாயிற்று

கழிப்பறைக்கு வழியற்று
ஒழுங்கிகளில் புதர் தேடும் பெண்கள்
பிரியங்கா அப்படியே பாட்டி ஜாடை
துணிமழித்து உட்கார்ந்தபடி
பேசிக்கொண்டார்கள்

வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி
லட்சியமானபோது
மருங்கூருக்குள் வந்துவிட்டது உலகம்
உலகத்துக்குத்தான் கவலையில்லை
மருங்கூர் பற்றி
***

ஹிட்லர் முசோலினியென கலிங்கத்திற்கு முந்தைய
அசோகர்களைக் கடந்து வரும் வரலாற்றின்
உருளும் பாதங்கள் சமகாலத்தில் வந்து நிற்கிறது
வாஷிங்டன் நகரின் பிரதான வீதியில்
வெள்ளை மாளிகையினுள் அமைதியிழந்து
திரியும் மன நோயாளி
பாவம் புத்தனால் கைவிடப்பட்டவன்
விதம்விதமான ரத்தக் குழம்புகள் கொண்டு
அவன் உலகப்படத்தை
அமெரிக்காவாய் வரைந்து பழகுகிறான்

நிலா

கிணற்றுக்குள்
விழுந்த நிலவை
சிறுவர்கள்
வாளியால் இழுத்தார்கள்
கனம் தாங்காது
கயிறறுந்து
நிலா மீண்டும்
கிணற்றுக்குள் விழுந்தது
பாதிக்கிணறுவரைத் தூக்கியதை
பெருமையோடு
பார்ப்பவர்களீடமெல்லாம்
சொன்னார்கள்
அச்சிறுவர்கள்

விடுதலை

பள்ளிக்கூடம் போக
அவசியமற்ற பூனைமீது
பொறமை சிறுவன் கார்க்கிக்கு
ஒரு நாள் ஒப்பந்தமாக
பூனைவால் அவனுக்கும்
புத்தகப்பை பூனைக்கும் மாறியது
சீருடை அணிந்து பூனை பள்ளிக்குப்போக
நாள்முழுதும்
கொய்யாமரத்தில் ஏறித்தாவினான்
சன்னல் கிராதிகளைப் பற்றி
வீட்டைக் குறுக்குவாட்டில் சுற்றினான்
கரப்பான் பூச்சிகளையும்
எலிக்குட்டிகளையும் துரத்தித் திரிந்தான்
கடிகாரத்தில் பள்ளி முடியும் நேரத்தைப்
பார்த்த பூனைக்கார்க்கி
விசனம் கொண்டான்
கார்க்கியாய்த் திரும்புவதற்கு விருப்பமற்று
தான்தான் பூனையென்று
வீட்டைத் துறந்து வெளியேறினான்
பள்ளீக்கூடத்திலிருந்து திரும்பிய பூனை
கார்க்கியைக் காணாமல் திடுக்கிட்டது
பின் அழுதுகொண்டே ஹோம் வொர்க்
செய்யவும் ஆரம்பித்தது.

மயக்கம்

ஆடுகளத்து நியான் சூரியன்
பெருவிரலின் முனைவழியே
எல்லா வீடுகளுக்குள்ளும்
பகலை அழைத்துவரும்
சோடியம் மினுங்கலை
நட்சத்திரமென மயங்கும்
அயல்தேசப் பறவை திசைகுழம்ப
உயிர்விடும் சுவர்மோதி
அசல்சூரியன் தலைகாட்டும்போது
மின்னொளியென நம்பி
அசட்டு ஆமைக்குட்டி
கடற்கரைப் பரப்பெங்கும்
பாதம்வேக அலையும்
இரண்டும் கெட்டான் பொழுதில்
மருத்துவமனையொன்றில்
தேவையில்லாத விசயங்களில்
நுழைத்துவிடுவதுபோல்
துருத்திக்கொண்டிருக்குமென் மூக்கை
கொஞ்சமாய் வெட்டிக்கொண்டு
வெளியேறுகையில்
வரவேற்க வாசலில் வளர்ந்து நிற்கிறது
பறவைகளின் புழக்கமற்ற சிறுகுன்று
அதனின்றும் வீழுகின்ற அருவியுடன்
***

இசைவற்று
அசைகிறது
சிறகுகள்
பறவை உடலின்
வலி தெரியாமல்
***

தென்னங் குருத்துகளை
அழிக்கும் ஆனைக்கொம்பு
வண்டுகள் பற்றி அறியாத கவிஞனுக்கு
இளநீரையருந்தும்
உரிமை இருப்பதுபோலவே
குடும்பம் நடத்தத் தெரியாத அவன்
சம்சாரியாகவுமிருக்கிறான்
***
சாகச விரும்பிகளின்
கரவொலிக்கிடையில்
காற்றில் அலைந்து
புறா கொண்டுவரும்
மேஜிக் நிபுணர்
அடுத்த காட்சி துவங்குமுன்
வேர்வை நெடிவீசும்
கருப்பு அங்கியை அகற்றி
அரங்கின் பின்புறம் செல்கிறார்
சாதாரண மனிதராக
நின்று கொண்டிருக்கும்போது
சுதந்திரமாக உண்ர்கிறார்
அவ்வெண்ணத்தின் குறியீடாகவொரு
சிகரெட் பற்றவைத்து
புகைவளையங்களைக்
காற்றில் செலுத்துகிறார்
***
குளிருக்கு இதமாக
வயிற்றை
எரியும் இண்டிகேட்டரில்
வைத்திருக்கும்
கருவுற்ற பல்லி.
***

நாயும் பிழைக்கும்

கறக்கும் பசுவை விற்று
தொலைக்காட்சிப் பெட்டியை
வாங்கிவருகிறான் குடியானவன்
தொழு நோயாளியின் பிச்சைப்
பாத்திரத்தில் சில்லறைகளை
திருடிக் கொண்டிருக்கிறான் போலீஸ்காரன்
துப்பாக்கியை அடகுவைத்து
மதுப்போத்தல்களைப் பெறுபவன்
ராணுவவீரன்
சாதகமான தீர்ப்பொன்றிற்காக
வேசியை இனாம் பெறுகிறான்
அறங்கூறுபவன்
தனது கழிப்பறையை நவீனப்படுத்த
தேசத்தின் ஒரு பகுதியை உலகவங்கியில்
அடகுவைக்கிறாள் அரசி
முச்சந்தியில் எழுந்தருளியிருக்கும்
தெய்வத்தின் முகத்தில்
சிறு நீரைப் பெய்துவிட்டு ஓடுகிறது
தெரு நாயொன்று.
***
ஒரு வார்த்தையை
வீசியெறியுங்கள்
உங்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ
அது ஒரு வேலையை
செய்துகொண்டிருக்கும்.5 comments:

பா.ராஜாராம் said...

மிக அருமையான பகிரல்.

சசிகுமார் said...

மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் சுவாரஸ்யமான பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை.பாராட்டுகள். அறிமுகத்திற்கு நன்றியும்.

ursula said...

anna pakirvukku nanri,

anbudan
ursularagav

ச.முத்துவேல் said...

நன்றி ஊர்சுலா.