படைப்பாளிகள் அறிமுகம்-த.அரவிந்தன்
வெயிலோடு கலந்துமரம் ஈனுகிறது
கொழுகொழுவென
நிழற்குழந்தை
ரசிக்காவிட்டால்
ஒரு துயரமுமில்லை
மிதிகளால் அழும்
குழந்தையைத் தூக்கி
இப்படியும் அப்படியுமாக
அசைத்து
தாலாட்டுகிறது காற்று
இதுதான், இவர்தான் த.அரவிந்தன்.கவிதைகளில் கருத்துக்களையும், பயன்களையும் வலியுறுத்துபவர்களால் இக்கவிதையை சிலாக்கிக்காமல் இருக்கமுடியுமா? கவிதைகள் கருத்துச் சொல்லும் ஊடகங்களோ, பயன்படும் ஒரு பொருளோ மட்டுமே அல்ல. இந்தக் கவிதை தரும் பரவசம்,உத்வேகம், மீட்சி நமக்கு தேவையற்றதாகிவிடுமா? இவைதான் இக்கவிதைகளில் நாமடையும் பயன்பாடு.ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கட்டிடத்தை கட்டிமுடித்திருந்தபோது, அதன் மேல்பூச்சில் சல்லிக் கற்களை பதிப்பித்து பூசியிருந்தார்கள். அழகுக்காக மட்டுமேதான். அதன் செலவுத்தொகை மட்டுமே பல லட்சங்களைத் தொட்டது. அந்த வழியில் போவோர் வருவோரில் பலரும் அந்தக் கட்டிடத்தை புகைப்படம் எடுத்துச் சென்றனர். வெறும் சுவர் மட்டுமே கட்டிடத்திற்கு போதுமெனும்போது, பூச்சுவேலையே கூட எதற்கு? இப்படி நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் கலை நயத்திற்காகவும், படைப்புத்திறனுக்காகவும் முன்னுரிமை அளிக்கப்படுவதை காணமுடிகிறது.இந்தச் சிந்தனையே வளர்ச்சியின் காரணியாகிறது.உயிர்வாழ அரிசிச்சோறை உண்கிறவர்கள் ஐஸ்கிரீமையும், பால்கோவாவையும் ஏன் உருவாக்கினோம்? பசியும் ருசியும் உணவிலேயே கிடைத்துவிடும்போது, இவைகளுக்கென்ன வேலை என்று விட்டுவிடமுடியுமா? ‘ மனிதர்களுக்கு சிறகு முளைக்காத குறையை தீர்க்கவல்லவைதான் கவிதைகள்’ என்றார் கந்தர்வன்.
அதேசமயம் மேற்சொல்லப்பட்டதுபோன்ற கவிதைகளிலும் பயனில்லாமல் போகவில்லை. அது மிகவும் நுட்பமாய் .உணரத்தக்கது. இப்படி எழுதவும், ரசிக்கவும் வாய்த்த மேன்மைப்படுத்தப்பட்ட மனிதர்கள்களைச் சுமக்க பூமி மகிழ்கிறது என்பேன்.
இப்படி சொல்லின் ருசி கொண்ட கவிதைகள் நிறைய எழுதும் வல்லமை, இவரது சிறப்பு எனலாம்.ஆனால், இந்த ஒன்றை மட்டுமேக் கொண்டு எதைவேண்டுமானாலும் எழுதித்தள்ளிவிடாமல், அனுபவங்களுக்காகவும், சிந்தனைத்தெறிப்புகளுக்காகவும், கருத்துக்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறார். தூண்டில் வீசிக் காத்திருக்கும் மனிதரைப்போல. மீனல்லாதவைகள் சிக்கினால் அவற்றை தூக்கி எறிந்துவிடுகிறார்.கவிதைகளைப் படிக்குபோது” அட புதுசா இருக்கே!” என எண்ணும்படியான நிறைய இடங்களை சந்திக்க முடிகிறது. குழந்தைப் பருவ நினைவுகூரல், கிராம வாழ்வை தகவல்களுடன் முன்வைக்கும் வாழ்வனுபவம், கதைத்தன்மை கொண்ட கவிதைகள் என கவிதைகள் பரவலாக உள்ளன. ஒரு ஒளிப்படக் கருவியால் பதியப்பட்டதுபோல் காட்சிகளாக மட்டுமே வைத்துவிட்டு, கவிஞர் விலகி நின்று, அவர் பெற்ற சலனங்களை, வாசகருக்குள்ளும் நிகழ்த்திக்கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளும் உள்ளன.( மிருதகரம்,படிவம்..,) கவிஞருக்கு உலக இலக்கிய வாசிப்புப் பரிச்சயம் இருப்பதை இவர் கவிதைகளின் வழியாகவே கண்டுகொள்ள முடிகிறது. டோரா புஜ்ஜி போன்ற சில கவிதைகள் அவ்வளவு தூரம் கவிதையாகிவிடமுடியவில்லை.குழந்தைகளின் உலகம் இவர் கவிதைகளீல் பரவலாக பதிவாகியுள்ளது.
1977 ல் பிறந்த த.அரவிந்தன் பிறந்தது நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.1996 லிருந்து பல்வேறு பத்திரிக்கைகளில் பணீயாற்றிய அனுபவமுள்ளவர்.இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘பூமத்திய வேர்கள்' 2003 ல் வெளியானது.குழிவண்டுகளின் அரண்மனை என்கிற இந்தத் தொகுப்பு இரண்டாவது. கவிஞர் சுகுமாரன் அவர்களின் அணிந்துரையோடு வெளிவந்துள்ளது.இவரின் வலைப்பூ
குழிவண்டுகளின் அரண்மனை தொகுப்பிலிருந்து சில கவிதைகள்.
பூசணித் தாதி
விட்ட மழையிலிருந்தது
ஒதுங்கும் காடு
காக்கி கால்சட்டை அணிந்த சிறுவன்
பச்சை மிளிரலிலிருந்த
ஒரு பூசணிக் கொடியைக் கண்டான்
அதன் கொடிகளில் விழுந்து படர்ந்திருந்த
மின்னல் அவன் கண்களில் அடிக்க
ஒரு தாதியைப் போல் செயல்படத் தொடங்கினான்
இரு கைகளாலும்
அந்தப் பச்சிளம் பூசணிக் குழந்தையின்
கால் பகுதியைப் பிடித்தான்
குலுங்கி வலியால் துடித்த
தாயின் சத்தத்தைக் கவனியாது
வெடுக்கென இழுத்தான்
அதன் பிசுபிசுப்பான ஈரத் தலையை
மார்போடு அணைத்து
வீட்டிற்கு விரைந்தான்
அவன் அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு
அவன் கண்களில்
அவன் தந்தையாக ஏறிநின்று
பகிர்வளித்த சந்தோஷத்தில் குதித்தான்.
வால்கள் வரையும் இதயம்
நீலக் குழைவுநுழைவுகளை
பார்வையில் பறக்கவிட்டு
நெருப்பாய் நெளிந்து
புளிய மரத்தோரம் நிற்பவள்
வருந்தி பார்க்கலானாள்
சேர்மையிலிருந்த இரு தும்பிகளை
பிடிபடலுக்கு நடுங்கி
வேகம் கூட்டி
கிளை மோதி
சுவர் மோதி
மின்கம்பி மோதி
அந்தரத்தில் புணர்ந்தவற்றின் சுற்றலில்
தொடர் ஓட்டங்கள் கிழித்து
காய்ந்திருந்த அவள் காயங்களின் வடுக்கள்
ரணமாகி இரத்தம் கொட்டின
கரும்பாறை அழுத்தலில்
மூச்சு திணறி
பெண்தும்பியின் முதுகெலும்புகள் முறிகிற
ஓசைகளின் பிரமை
காதுகளுள் குதிக்க
அவள் பிண்ட சராசரமும்
வேட்டுகளாய் வெடித்தன
பொறுக்கமாட்டாது
பிரித்துவிட
கல்லெடுத்து குறிபார்த்தவள்
தன் ஒப்புமை கயமைக்காக
அவளையே ஓங்கிஓங்கி இடித்துக்கொண்டு
பெரும் சத்தத்துடன் அழத்தொடங்கினாள்
தும்பிகளின் வால்கள் வளைந்து பிணைந்து
வரைந்திருந்த இதயப்பூர்வம் கண்டு.
பூனையின் உலக இலக்கியம்
எலி சாப்பிடாத
ஒரு பூனையை எனக்குத் தெரியும்
வீட்டிற்கு வரும்
லியோ டால்ஸ்டாய், அன்ரன் செக்கோவ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி
காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே
மரீயா லூயிஸô பொம்பல், மார்கெரித் யூர்ஸ்னார்,
இஸபெல் அலெண்டே, நவ்வல் அல் ஸôதவி
நதீன் கோர்டிமர், ஆல்பெர் காம்யூ, ஆஸ்கர் ஒயில்ட் - எனச்
சகலரின் எழுத்தையும் படிக்கும்
மழையில் நனையும்
ஒரு பூனைக்குட்டி மீது
பரிதாபம் கொள்ளும் பெண் பற்றி
எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய
'மழையில் பூனை'* சிறுகதையை
ஒரு குளிர்காலத்தில் சொன்னதிலிருந்து
அந்தப் பூனைக்குக் கட்டுப்படாத
பூனைகளே இல்லையாம்
உச்சிவெயில் ஒழுகிக்கொண்டிருந்த
சன்னலோரம் ஒருநாள்
சினுவா ஆச்சிபி "சிதைவுகள்' நாவலின்
இருபதாம் அத்தியாயத்தைப்
படித்துக் கொண்டிருந்தபோது
எதேச்சையாய் அதனிடம் கேட்டேன்:
'திருட்டுத்தனமாய் நீ எலிகளைச் சாப்பிடுகிறாயாமே'
வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டது.
எல்லாம் காற்றுவாழ்வனவே...
காற்றின் நுண் ஆய்வாளனெனக் கைகுலுக்கியவன்
தோள் மாட்டி பை முழுவதும்
எண்ணிறாத பறவைகளின்
வண்ணவண்ண இறக்கைகள் பறந்தன
காற்றில் ஒற்றையில் அலைந்து
இறக்கை எழுதும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை என்றவன்
நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் என்று
கண்டறிந்ததாய்ச் சொன்னவை:
தாமரைக்கொடியின் காற்றைச் சுவாசிக்கும்
மீன்கள் அதிகம் ருசிக்கும்
வேப்ப மரக்காற்றைச் சுவாசித்து உறங்கினால்
தீரா நோயனைத்தும் திரும்பிப் பாராமல் நடை கட்டும்
ஆலமரக் காற்றைச் சுவாசித்து உறங்கினால்
ஆயுள் கொடுக்கும் செல்கள் வீர்யம் கொள்ளும்
அரச மரத்துக் காற்றால்
மூளையின் அறைகளில் புது ஊட்டம் பிறக்கும்
அழகிய பெண் சுவாசித்தைச் சுவாசித்த மரம்
அதீதமாய்ப் பூத்துக் குலுங்கும்
மரங்களில் முட்கள் முளைப்பதற்கு
முரடர்கள் சுவாசக் காற்றே காரணம்
பூச்செடி, கொடிகளில் முட்கள் முளைப்பதற்கு
முரட்டுப்பெண்ணின் சுவாசம் காரணம்
சற்று நிறுத்தியவன் தொடர்ந்து சொன்னவை:
பறத்தல் எனும் வினை
தேர்ந்த கண்கட்டு வித்தை
காற்றின் ஆழத்தில் எல்லாமே மூழ்கிக் கிடக்கின்றன
எல்லாம் காற்றுவாழ்வனவே...
துடுப்புகள் பிணைந்த பறவைகள் மிதந்தே செல்கின்றன
துடுப்படிக்காது பறவைகள் கடக்கிற இடங்களில்
பிரபஞ்ச ரகசியத்தின் பிடிபடலிருக்கும்
களைப்பைப் போக்க
கடலைச் சில்லறைத் துளிகளாக்கி
அதன் ஈரப்பதத்தில் காற்று சாய்வு கொள்ளும்
உயர மிதக்கும் பறவையின் நிழலைக்
காற்று கீழே பிரதிபலிக்கவிடுவதில்லை
ஓரிடத்தில் பறவைகள்
அதிகம் குவிவதால் நேரும் சரிவால் புயல்
பெருமூச்சுகளின் வெப்பம் கூடுவதால்தான் வெக்கை
சுவாசித்தலுறவை முறித்துக் கொள்ளும் எதையும்
காற்று கரைத்து இன்மையாக்கிக் கொள்ளும்.
நீர்மாலை
நிசி விறைத்த பனியில்
மூழ்கிக்கிடந்தது
வேலிக்கம்பிகளுக்குள் காலி மனை
அதில் சற்றுமுன் முளைவிட்ட
நெல்விதையொன்று
உள் பரவும் காற்றில்
தன் சகங்களின் வாடையை நுகரத் துடித்தது
வேரில் சுழலும் ஊற்றில்
தன் சகங்களின் உறிஞ்சோசையைக் கேட்கத் துடித்தது
ஏதும் உணராததில் சுணங்கி
இருளை நகர்த்தித் தள்ளத் தொடங்கி
துவண்டு
வெளிச்சத்துக்கு வழிவிட இறைஞ்சியது
விடி சிறகோசைகளில்
மேலும் சிறு துளிர்த்த உயரத்திலிருந்து எக்கி
பிஞ்சு பச்சையம் பதற
முன்னும்பின்னுமாக வலமும் இடமுமாக
அசைவற்ற பார்வையால் தேடித்தேடிப்பார்த்து
பெருகின தன் அடர்காடு காணாது தவித்தது
அசை செடி முட்கள்
நெருங்கி வந்துபோன திகைப்பில்
தானேவொரு களையாய் வேரிடுவதாகத் துணுக்குற்றது
அதைச் சீந்தாது கால்கள் கடந்ததும்
தனித்து உயிர்க்காது
சவத்தின் இறுதி நீராடலுக்கு
நிரப்பி வரும் நீர்போல
துளிதுளியாய் ஊற்றை
உள்ளுக்குச் சுமக்கத் துவங்கியது.
கல்யாணத்துக்குப் போகையில்...
பேருந்தில் இடம்பிடித்து
வைத்திருப்பதுபோல
வாழ்த்து அட்டையில்
இடம் ஒதுக்கி
நண்பர்கள் காத்திருக்கிறார்கள்
மண்டபத்திற்குள் நுழைவதற்குள்ளே
மாலையிலிருந்து கொட்டிய
இதழ்களெல்லாம் திரும்ப அறிவிக்கிறார்கள்
'இவர் கவிஞர்
கவிதை எழுதப் போகிறார்'
வியர்த்து சிரித்து
காற்புள்ளியைக்கூட
இட இயலாது திணறுகிறபோது
கண்டுகொள்கிறோம்
என்னை அவர்களும்
கவிதையை நானும்
அவர்களைக் கவிதையும்.
நிழல் மின்சாரம்
வெயில் வேய்ந்திருந்த சாலையில்
பெரிய சைக்கிளைத்
தாவித்தாவி
மிதித்துப் போன சிறுவன்
நாலு மின்கம்பிகளின்
நீள நிழல்களைக் கண்டான்
விளையாட்டு மனம்
சக்கரமாகச் சுழலத் தொடங்கியது
இரு மின்கம்பி நிழல்களின்
இடைப்பட்ட வெயிலை
நிழலின் மதிலாக நினைத்து
அதன் மேல்
ஒடித்தொடித்து வளைந்து
விளம்புகளில் நழுவிநழுவி
வித்தை காட்டிக் கொண்டே
சில மிதிகள் போனான்
எதிர்பாராமல்
திடுமென பின்னால் வந்தது
சிற்றுந்தின் பெருஞ் சத்தம்
அதில் நிழல் கம்பிகளில்
தொற்றிய மின்சாரம் பாய்ந்து
தூக்கியடிக்கப்பட்டான்
மதிலிலிருந்து சாலைக்கு.
தந்தைப்பால்
தளிர் விரல்களால்
குழந்தை வருடி
உடன் திகைத்துப் பின்வாங்குகிறது
சற்று நேரம் கழித்து
திரும்பவும் வந்து தடவி
ஏமாந்து வெறிக்கிறது
திரண்ட இரத்தங்கள் கட்டி
தகப்பனுக்கு
நெஞ்சு வலிக்கிறது.
**
குழிவண்டுகளின் அரண்மனை- கவிதைகள்
அருந்தகை
E-220, 12 வது தெரு, பெரியார் நகர்,
சென்னை-82
arunthagai@gmail.com
பக்கங்கள் -80
விலை ரூ.40.
நன்றி - தடாகம்
8 comments:
தத்தக்க பித்தக்க என்று சொல்லிக் கொள்வதன் மூலம் தப்பிக்க முடியாது முத்து
இந்த அறிமுகம் மற்றும் கவிதைதேர்வுகள் அருமை
தூறல் ...
உயிர்வாழ அரிசிச்சோறை உண்கிறவர்கள் ஐஸ்கிரீமையும், பால்கோவாவையும் ஏன் உருவாக்கினோம்?
நம்நாட்டில் பலருக்கு அரிசிச்சோறே கிடைப்பதில்லை.
எனக்கு ஐஸ்கிரீம்,பால்கோவாவை விட அரிசிச்சோறே பிடித்துள்ளது. எப்பவாச்சும் ஐஸ்கிரீம்,பால்கோவா சாப்பிட்டால் உடம்புக்கு நோவு வந்துவிடுகிறது.
பூனையின் உலக இலக்கியம் அருமை :)
நல்ல தெரிவு முத்துவேல்.
(நீங்கள், வா.மணிகண்டன் இருவரும், அரவிந்தனைன் கவிதை விமர்சித்தலை படித்துவிட்டு குழிவண்டுகளின் அரண்மனைப் பற்றி வேறு என்ன பெரிதாய் எழுதிவிட முடியும் என்ற தயக்கம் பெரிதாகிக் கொண்டேப் போகிறது)
பூனை இலக்கியம், ஸ்தனக்கவிதைகளின் சொற்கட்டமைப்பு பிடித்தமானதாயிருந்தது.
அறிமுகத்திற்கு நன்றிகள் பல
நல்ல அறிமுகம்.
நன்றி நேசன்
நன்றி வினய்
நன்றி சென்ஷி. நீங்கள் எழுதவிருக்கிறீர்களா? தயங்காமல் எழுதுங்கள். படிக்க ஆவலாயிருக்கிறது.
நன்றி பாலா
நன்றி அன்புடன் அருணா
நல்ல அறிமுகம் முத்துவேல். நன்றி
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி.சிறந்த அறிமுகம் .
Post a Comment