Saturday, June 26, 2010

புதிய வெளிகளைத் தேடி..- சு.தமிழ்ச்செல்வி


அண்மையில் நான் படித்தவற்றுள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அனுபவமாய், மிகவும் குறிப்பிடத்தகுந்ததாய் அமைந்த நாவல் சு.தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய ’மாணிக்கம்’. இதற்குமுன் இவரது ஒரேயொரு சிறுகதையை மட்டும் படித்திருந்தேன்.


தனது முதல் படைப்பாகவே ஒரு நாவலை எழுதியிருப்பது, அந்த நாவலும் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது ஆகியவற்றினால் ஏற்படும் பிரமிப்பு சு.தமிழ்ச்செல்வி அவர்களின் மாணிக்கம் நாவலைப் படித்தபோதும் எழுந்தது. எந்த மேதமைத்தனத்தையும் வெளிக்காட்டாமல் எதார்த்தமான அசலான எழுத்து இவருடையது.இலக்கியத்தில் அறியப்படாத, பதிவாகாத பகுதியான பழைய கீழைத்தஞ்சை பகுதியான , திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கற்பக நாதர் குளத்தைச் சார்ந்தவர் இவர். இப்பகுதி கடலோர கிராம மக்களின் வாழ்வை அவர்களது வட்டார மொழியிலேயே பதிவு செய்து ஒரு புதிய வெளியை தமிழுக்குக் கிடைக்கச் செய்திருக்கிறார்.


மீன் பிடிக்க தெற்கேச் செல்லும் மனிதர்களின் கதை. தமிழகம் முழுவதற்கும் கிழக்கில்தானே கடல்? என்கின்ற வினாவோடு வரைபடத்தில் தேடியதில், மாணிக்கம் நாவலில் வரும் கடலோர கிராமங்கள் நாகப்பட்டணம் பகுதியில் மூக்குப் போன்று நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியில் அமைந்துள்ளவை. அங்கிருப்பவர்களுக்கு தெற்கில்தான் கடல். இந்த நாவலில் வருபவர்களும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களல்ல. விவசாயம் பொய்த்துப்போய், வறுமையின் காரணமாக மீன் பிடிக்க நேர்ந்தவர்கள். முத்தரையர் சமூகத்தினர் என்பதாக அறியமுடிகிறது. தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் இருந்துகொண்டு நான் அறிந்திராத ஒரு பகுதியை, நிலத்தை, மக்களை , அவர்களின் வாழ்க்கைமுறையை, சம்பிரதாயங்களை, வட்டாரமொழியை, வாழ்வனுபமாகவே பெறுகிற வகையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.


விரிவான கதைசொல்லலும், தகவல்களின் களஞ்சியமாகவும் அமைந்துள்ளது நாவல்.

ஒரு படைப்புக்கு செவ்வியல் தகுதி எவ்வாறு கிடைக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், செவ்விலக்கியம் என்ற அடையாளப்படுத்தப்பட்ட, நான் படித்திருக்கிற சில நாவல்களோடு ஒப்பிட்டுக் கொள்கையில் மாணிக்கம் நாவலை செவ்வியல் என்றே சொல்வேன்.
அவருடைய படைப்புகளைப் பற்றி அவரே எழுதிய கட்டுரையை இங்கே வெளியிடுவது நான் சொல்வதைவிட பலமடங்கு சிறப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் அக நாழிகை 2 வது இதழில் வெளியான கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுரையை அளித்துதவிய அகநாழிகை ஆசிரியர் பொன்.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.

புதிய வெளிகளைத் தேடி..
சு.தமிழ்ச் செல்வி

தமிழ் படைப்புகளில் புதி களங்களைத் தேடும் முயற்சியில் உத்வேகத்தை ஏற்படுத்திய போக்குகள் இந்திய/தமிழக அளவிலான அரசியல், கலாச்சார நிகழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை அடையாளம் காண இயலும், அம்பேத்கர் மற்றும் பெரியார் எனும் இரு பெரும் அரசியல்/சமூக சக்திகளின் இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களுக்கு வழிவகுத்தன என்பதை நாம் மறந்து விட முடியாது. இந்தியச் சமுதாயத்தில் கல்வி பெறும் வாய்ப்பு சாதி மற்றும் பால் அடிப்படையில் மறுக்கப்பட்ட நிலையில் தங்களது அயராத போராட்டங்களின் மூலம் அந்நிலையை மாற்றி அமைத்தவர்கள் இவர்கள்.

இவ்விரு ஆளுமைகளின் நூற்றாண்டு விழாக்களும் இந்திய அளவில், பண்பாட்டுத் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நிகழ்த்தின. கல்லி சனநாயகப்படுத்தப்பட்டதின் வாயிலாகவும், சமூக நீதி அடிப்படையில் வழங்கப்பட்டதன் வாயிலாகவும், நிகழ்ந்த மாற்றம் இது. குறிப்பாக, தலித்துகள்,பிற ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்கள் இவர்களது கலாச்சார வழிபாடுகள் ஒரு பெருவெள்ளமாகப் பொங்கி எழுகின்ற நிலைமை நாம் காண்கிறோம்.

இந்தியா எனும் பெரும் தேசியம் உள்ளடக்கியுள்ள பல்வேறு தேசிய இனங்களிலும் உள்ள வெளிச்சத்துக்கு வராத பல இனக்குழுக்களிலிருந்து இன்று பலர் எழுத வருகின்ற அற்புதம் நேர்ந்துள்ளது. ஏகாதிபத்தியமும், இந்திய தேசியமும் என்னதான் ஒற்றைக் கலாச்சாரத்தை கட்ட முனைந்தாலும் அவ்வாதிக்கத் தளைகளைத் தகர்த்து உயிர்த்துடிப்புள்ள தன்னுணர்வு பெற்ற இச்சமூகக் குழுக்களின் உயிரோட்டமுள்ள இயக்கம் தம்முடைய இருப்பை, தம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்தவே முனையும் என்பது இலக்கியக் களத்தில் இன்று நிரூபணம் ஆகியுள்ளது.

சாதிய மேலாண்மை மற்றும் ஆணாதிக்கச் சொல்லாடல்கள் நிரம்பிய கதையாடல் பரபரப்பாக விளங்கிய தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகள் இன்று பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூதாயத்தைச் சார்ந்த படைப்பாளிகளால் விரிவு படுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம், இப்படி தமிழ் இலக்கியத்தின் பன்முகத்தன்மைக்கு வலுச்சேர்த்த வகையில் பெண் எழுத்துக்கள் முக்கியமானவை. கதையாடும் உரிமையை இன்று பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலை சமூகத்தினர் கைப்பற்றியிருப்பது நம் செந்தமிழ்த் தமிழுக்கு மேலும் அழகும், வலிமையும் சேர்க்கக்கூடியது.

தமிழ் இலக்கியச் சூழலில் அதிகம் வெளிச்சத்திற்கு வராத சில இனக்குழுச் சங்கங்களின், பண்பாட்டு அரசியல் வெளியை, அச்சமூகத்து உழைக்கும் பெண்களின் அகவெளியை, உடல் உழைப்பைக் கோரி நிற்கும் நில வெளியை, இக்குழுவில் புழங்கும் மொழி வெளியை எனது புதினங்களின் வழி கவனப்படுத்தியிருப்பதை குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதுகிறேன்.

- 2


மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை கண்ணகி என இதுவரை ஆறு புதினங்களை தமிழ்ப்புனைவிலக்கியத்திற்கு அளித்துள்ளேன். இவற்றில் மாணிக்கம், அளம், கற்றாழை ஆகிய மூன்று புதினங்களும் தமிழக இலக்கிய/அரசியல் வெளியில் அதிக அளவில் பிரதிநிதித்துவம்பெறாத முத்தரையர் சமூகத்தின் வாழ்நிலையை, பண்பாட்டை விவரிப்பவை. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி போன்ற பகுதிகளில் பெருமளவில் வசிக்கும் இவர்கள் ஒடுக்கப்பட்ட இனக்குழுவாக அடையாளம் காணப்படுவார்கள். ஒப்பீட்டளவில் தமிழகத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அடைந்துள்ள அரசியல், சமூக, பொருளாதா உயர்வுகளை இவர்கள் இன்னும் எட்டவில்லை.

தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகளிலோ, பிற கட்சிகளிலோ இவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. வியாபாரம், கல்வி போன்ற துறைகளிலும் இவர்கள் பின்தங்கியே உள்ளார். ஏழ்மையும், உழைப்பும் நிரம்பிய இவர்ளகது நிறை வாழ்வு தமிழ் இலக்கியத்தில் உரிய வகையில் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இதுபோலவே, இராமநாதபுறம் பகுதிகளிலிருந்து தஞ்சை, திருச்சி, கடலூர் என தமது ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடி இடம் பெயர்ந்து நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் யாதவர் (அ) கோனார்களது வாழ்வியல் பதிவுதான் கீதாரி. 21 ம் நூற்றாண்டு அடைந்துள்ள அபார வளர்ச்சியின் சிறு இழையும் இவர்களை தீண்டிப்பார்க்கவில்லை. தமது நிலங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட அகத வாழ்வும், பிறரது நிலங்களையும், அரசு காடுகளையும் மேய்ச்சல் நிலங்களாகக் கொண்ட சார்பு வாழ்க்கை உண்டாக்கும் மனப் பதற்றமும் இவர்களிடம் ஒருவித அடிமை மனநிலையை கட்டமைத்திருக்கிறது. புற உலகில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியோ, நகர மயமாக்கலோ இவர்களது வாழ்வில் எவ்விதத்திலும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. கி.ராவின் ‘கிடை‘ க்குப் பிறகு கீதாரியில் விரிவான அளவில் இவர்களது வாழ்க்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆறுகாட்டுத்துறை வேதாரண்யம் அருகிலுள்ள ஒரு நெய்தல் கிராமம். இங்கு மீன்பிடித்து வாழும் வன்னியர்கள் பிற பகுதியில் வசிக்கும் வன்னியர்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ளனர். கவிஞர். பழமலய் இப்புதினத்திற்கு எழுதியுள்ள விமர்சனத்தில் இவர்களை மீன் பள்ளிகள் என்றழைக்கிறார். இவர்களிடம் பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ பிற வன்னியர்கள் வருவதில்லை. இக்குழுக்களுக்குள் அகமண முறைதான் வழக்கிலிருந்தது வருகிறது. இத்தகையதொரு குறுங்குழு வாழ்வும் தமிழ் இலக்கிய வெளிக்கு புதியதாகவே கருதப்பட வேண்டும்.

வடமாவட்டங்களில் தலித் மற்றும் வன்னியச் சமூக பிண்ணனியில் உருவானது. கண்ணகி புதினம், சாதி/பால் ரீதியாக ஒதுக்கப்பட்ட பெண்ணின் ரௌத்ர வெளிப்பாடுதான் இப்புதிய கண்ணகி.

இப்படைப்புகளில் இச்சமூகத்தினரின் அரசியல், சமூக, பண்பாட்டு நிலைகள் புதின அழகியலையொட்டி, விவரணத் தன்மையற்று கலைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களது இல்லச் சடங்குகள், பொது விழாக்கள், வழிபாட்டு முறைகள், ஏராளமான சொலவடைகள், தொன்ம நம்பிக்கைகள், என இப்புதினப் பரப்பில் நிரம்பியிருக்கும் தரவுகள் தமிழ் வாழ்வின் பன்முனத் தன்மையை அதன் செழித்த கூறுகளை உள்ளடக்கியிருப்பவை.

- 3

எனது புதினங்கள் யதார்த்த வாத வகைமைக்குள் அமைந்திருந்தாலும் அவை தூலமாக நாம் காணும் யதார்த்தங்கள் மட்டுமன்று. அனுபவத்தின் வாயிலாக கல்வியின் வாயிலாக எனக்குக் கிட்டியுள்ள சமூக அரசியல் பார்வைகளின் வழியே சில புதிய யாதார்த்தங்களை இப்புதினங்களில் உருவாக்கியுள்ளேன். இதன் மூலமே ஒரு கதை சொல்லி எனும் நிலையிலிருந்து ஒரு புதினப் படைப்பாளியாய் நான் மலர்ந்திருப்பதாக நம்புகிறேன்.

கதை சொல்வதில் பாரம்பரியமும், தொடர்ச்சியும் உள்ள தமிழ் மொழி எனக்கு மிகவும் ஒத்துழைப்பை வழங்குகிறது. நமது மரபான கதை சொல்லும் முறை இன்று பரிட்சார்த்தமான கதை கூறும் முறையின் சாத்தானக் கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. புனைவும், மாயா வினோதங்களும், மர்மங்களும் நிரம்பிய நமது கதையாடும் முறைக்கு இணையானது. இத்தகையதொரு கதையாடல் முறையில் புனைவை வளர்க்கும் போது மனித குலத்தை முன்னெடுத்துச் செல்லும் புதிய மதிப்பீடுகளை ஊடுபாவாக புனைவு வழி நெய்கிறேன்.

உதாரணமாக, பெண்கள் ஒரு கம்யூனாக வாழ முடியும் எனும் ஒரு இலட்சியத்தை கற்றாழையில் நிலவும் யதார்த்தமாக கட்டமைத்திருக்கிறேன். ஒரு கணவன் இரு மனைவி என்பதை இயல்பாகக் கருதும்போது ஆறுகாட்டுத்துறை சமுத்திரவல்லியின் நிலைபாடும் கண்ணகி புதினத்தில் வரும் கண்ணகியின் முடிவுகளும் இயல்பானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் மனப் பழக்கத்தை ஏற்படுத்தும் விழைவோடு கதைப் பின்னலை உருவாக்கியுள்ளேன்.

யதார்த்த வாத படைப்பில் ஒரு புனை கதையாளருக்கு இத்தகைய இலட்சிய வகை யதார்த்தங்களை கட்டுவது சிக்கலானதும், சவாலானதும் ஆகும். இது கத்தி முனையில் நடப்பதைப் போன்றது. புது வகை எழுத்தில் இப்புதிய மதிப்பீடுகளை குறியீடாகக் கூறி விட முடியும். ஆனால், யதார்த்த வகைமையில் நடைமுறைக்கு இந்நிகழ்வு ஒத்துவருமா எனும் கேள்வி வாசக மனதில் எழாத வண்ணம் இப்புதிய யதார்த்தை கட்டமைப்பது ஒரு புதின ஆசிரியருக்கு எழக்கூடிய சவால். இந்தச் சவாலை கற்றாழையிலும், ஆறுகாட்டுத்துறையிலும் வெற்றிகரமாகக் கடந்து வந்திருப்பதாகவே நம்புகிறேன். பரிட்சார்த்தமான புதிய வடிவங்களுக்கு மத்தியில் யதார்த்த வகை படைப்புகள் தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கு இவை முதன்மையான காரணங்களாக அமைகின்றன.

புதிய உள்ளடக்கங்கள், புதிய மதிப்பீடுகள் இலட்சிய வாத யதார்த்தங்களை நடைமுறை யதார்த்தங்களை சித்தரிப்பது போன்ற காரணிகள் யதார்த்த வகைமைக்கு புதிய அழகியலை அளிக்கின்றன.

- 4 -இயற்கையை முன் எப்போதையும் விட நாம் வாழும் காலத்தில் மூர்க்கமான முறையில் அழித்து வருகிறோம். வெட்டவெளியினை மெய்யெனக் கொண்டாடியது நம் தமிழ் மரபு. ஆனால், அவ்வெயிளில் இயற்கையின் கருணையை அபகரித்துக் கொண்டு செயற்கையின் நஞ்சை பரப்பி வருகிறோம். இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து இன்று இயற்கைக்கு திரும்புவது பற்றி விவாதித்து வருகிறோம். மலைகள், காடுகளை அழித்து தார்ச்சாலைகள், இருப்புப் பாதைகள், கனிச் சுரங்கங்கள் என முன்னேறிக்கொண்டிருக்கிறோம். விளை நிலங்களெல்லாம் கான்கிரீட் காடுகளாகிவிட்டது. நகரமயமாக்கல். பூச்சிக் கொல்லி மருந்துகளும், செயற்கைக் கோளின் மின் காந்த அலைகளும் போட்டி போட்டுக் கொண்டு சிற்றுயிரிகளை பலிவாங்கி வருகின்றன.

உயிர்ச் சமநிலை, தட்ப வெட்பச் சமநிலை குலைந்து பிரபஞ்சத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. இத்தகையதொரு சூழலில் தான் இயற்கையின் அருமையை, அது தரும் கொடைகளை, நம் நோய் தீர்க்கும் மூலிகைகளை, விவசாய வாழ்வின் மகத்துவத்தை, விவசாயத்தோடு இணைந்த கால்நடை வளர்ப்பின் அவசியத்தை, கடல் சார் வெல்வங்களை எனது படைப்புகள் கலை அழகுகளாய் மிளிரச் செய்திருக்கின்றன.

இயற்கை நமக்குத் தாய் போன்றவள். அவள் தன் குழந்தைகளுக்கு ஒரு போதும் தீங்கு செய்வதில்லை. அவளது தொப்பூள் கொடிச் சொந்தங்கள் நாம். அளம் புதினத்தில் மிகக் கொடிய பஞ்சகாலம் வருகிறது. பசியும், பட்டினியும் தலைவிரித்தாடும் கோரச் சூழலில் இயற்கையின் கடைசி கருணையாக அதன் வறண்ட நிலத்தில் இன்னும் சில உணவுப் பொருட்கள் மிச்சமிருக்கவே செய்கின்றன. கொட்டிக் கிழங்கு, பனங்கிழங்கு, சாரணக் கீரை, தொம்மட்டிப் பழம், பலாப்பழம் என அப்பஞ்சத்திற்கு தன் பிள்ளைகளுக்குத் தர நிலத்தாய் தன்னிடம் கீதங்களை வைத்திருக்கவே செய்கிறாள்.

நாமோ அமுதசுரபிகளையும் பிச்சைப்பாத்திரங்களாக்குபவர்கள். நமது ஆறுகளில் கானல் அலையடிக்கிறது. இருப்புப் பாதைகளால் பிளவு பட்ட காடுகளிலிருந்து விலகுகின்றன யானைகள். வழி குழம்பி அலையும் அவை புகை வண்டிகளால் மோதப்பட்டு உயிர்விடுவதைக் காண்கிறோம். பச்சையத்தை இழந்து பிளாஸ்டிக் பந்தாகி விட்ட இப்பூவுலகை அதன் தொப்பூள் கொடி நிணத்தோடும், தாய்ப்பாலின் கவுச்சி வாடையோடும் என் புதினங்களில் நிறைத்திருக்கிறேன். இயற்கையின் ரகசியத்தை, அதன் ஆற்றலை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஒரு தாய்க்குரிய பரிவோடு இயற்கைக்கும், மனிதர்க்குமான நெருக்கத்தை, உறவை தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறேன். இயற்கைச் சமநிலை குலைந்து அதன் பேரிடர்களால் மனித குலம் சந்திக்கும் அழிவுகளிலிருந்து மீள இயற்கையுடனான நேசத்தை வலுப்படுத்துவது அவசியம். இதற்கு எனது படைப்புகள் உதவும் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.

பாலை நீங்கலாக குறிஞ்சி, மருதம், நெய்தல் இந்நால்வகை நிலக்காட்சி படிமங்கள் விரவிக் கிடக்கும் எனது ஐந்து புதினங்கள் புவி வெப்பமடைதல் எனும் நவீன நெருக்கடியை விவாதிப்பதற்கான களங்களாகத் திகழ்வதை வாசகர்களும், விமர்சகர்களும் உணர முடியும்.

விவசாய நிலம், உப்பளம், மீன் பிடி கடல், மேய்ச்சல் நிலம், எனும் உழைப்புக் களங்களில் விரிகிறது. பெருமளவில் என் புதினப்பரப்பு. உழைப்புக் களங்களும், அதில் நிகழும் வேர்வைப் பாடுகளும், களப்பயணத்தின் மூலம் சேகரித்தத் தகவல்கள் அன்று. இயற்கையோடு இயைந்து பெற்ற ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண்யின் வாழ்வியல் படிப்பிணைகள் இவை. கடலோரச் சிற்றூரின் உப்புக் காற்றைச் சுவாசித்து வளர்ந்தது என் உயிர். அதன் குளிர்ச்சியும், வெம்மையும், என் எழுத்தெங்கும் நிறைந்திருக்கின்றது. ஓரிரு நாட்களில் களப்பயண நேர்காணல்களினால் கிடைக்கும் தரவுகளிலிருந்து கூட ஒரு படைப்பை உருவாக்கி விட முடியும். ஆனால், ஒரு படைப்பு மேலெழும்பி வளர்ந்து பிரகாரம் கொள்வது அதற்குள்ளிருக்கும் விவரணைகளில் மட்டும் அன்று. அதற்குள் இயங்கும் உயிர்த்துடிப்பில் தான். நிலமும், நீரும், காற்றும், வெப்பமும், ஆகாயமும் இணையாது புதினத்தில் செயல்படும் மனித வாழ்வு தட்டையானது. இப்பிரபஞ்சம் அதன் சிறு அலகான மனித உடலும் இந்த ஐம்பூதங்களாலானது. எனது புதினங்களில் இந்த ஐம்பூதங்களும் பாத்திரங்களாக இயங்குகின்றன. இவ்வகையில் இயற்கை முடிவுறாத படைப்பு வெளியாக எனது படைப்புகளின் ஊடாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

- 5
வாழ்க்கை துக்கமானது என்கிறார் பகவான் புத்தர். பெண்ணின் பேசித் தீராத பெருந்துயர் என்று புனைவுகளில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. துக்கமும் என் வெளிதான். இது எழுதியெழுதி கடக்கப்பட வேண்டிய வெளி. பெண்களுக்கு இவ்வாழ்க்கை வழங்கியிருக்கும் கவித்துவமான பரிசு துக்கம் தான். ஆறாத ரணங்களையும், தழும்புகளையும், அணிகலன்களாக மாற்றிக் கொண்டவர்கள் நமது பெண்கள்.

‘கண்ணீரை சிந்த வைக்கும் எழுத்துக்கள்‘ எனும் மேட்டிமை விமர்சனங்களை நிறையவே எதிர்கொண்டிருக்கிறேன். இங்கே பெண்ணின் கொண்டாட்டங்கள் தற்காலிகமானவை. குறுகிய ஆயுள் கொண்டவை. குடும்ப அமைப்பில் பெண்ணின் சுதந்திரம் என்பது நமது ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கியுள்ள அதிகார மதிப்பீடுகளின் இரக்கத்தலிருந்து கசிவதாகவே இருக்கிறது. மாணிக்கம் புதினத்தில் வரும் சொல்லாயி தமிழ்ப் பெண்களின் ஓர் ஒற்றை அலகு. அவளிடம் இவ் அவலம் மிக வாழ்வை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால், தன் குடும்பத்தின் நலன், கௌரம் பொருட்டு அவள் எல்லா இழிவுகளையும் சகித்துக் கொள்கிறாள். இத்தகைய போராட்ட குணமும், சகிப்புத் தன்மையும் அளம் புதினத்தில் சுந்தராம்பாளிடம் இருக்கிறது. ஆனால் இந்த சகிப்பு மனோபாவம் அடுத்தடுத்த வளரும் தலைமுறைகளில் குறைந்து வருகிறது.

கணவர்கள் இல்லற அறத்தை மீறும் போது குடும்பத்திலிருந்து வெளியேறுபவர்களாக அளம் புதினத்தில் ராசாம்பாளும் கற்றாழையில் மணிமேகலையும், சத்யாவும் விளங்குகிறார்கள். இனியும் பெண்ணுக்கு பூவும் பொட்டுமே மற்றும் போதுமானதன்று. சுதந்திரமும், மரியாதையும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் யாரும் பெண்ணிய வாதிகள் அல்லர். சாதாரண கிராமத்துச் சகோதரிகள். கல்வி கற்காதவர்கள். வாழ்வின் வெம்மையிலிருந்து உளொளி பெருக்கியவர்கள்.

அடுத்தாக, பெண் அனுபவிக்கும் முக்கியமான துயர்களுள் ஒன்று பாலியல் வன்முறைகள். கீதாரியில் வளர்ப்பு மகளையே சிதைக்கும் கொடூரமான ஆண் வக்கிரத்தை நீங்கள் சந்திக்க முடியும். பெண்ணின் துயரை எழுதுவது இரக்கத்தை யாசித்துப் பெற வேண்டி அன்று. அது நிதர்சனத்தின் காயத்திலிருந்து பெருகுகிற குருதி ஊற்று. அதற்குத் தேவை கண்ணீர் அல்ல, மருந்து.

பெண்ணின் பெருந்துயர் எனது புனைவின் ஒரு வெளி. அது சமூகத்திலிருந்து எழுவது. அத்துயருக்கான மாற்று வெளியை சமூகத்திலிருந்தும் உருவாக்குகிறேன். செல்லாயி, சுந்தராம்பாள் போன்றவர்கள் இத்தகைய துயரில் மூழ்கியவர்கள்.

ராசம்பாள், மணிமேகலை போன்றவர்களோ துயரிலிருந்து மீண்டெழுந்து வருபவர்கள். சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்க இப்பேருலகையே தம் குடும்பமாக கருதுபவர்கள். மிகவும் எளிய பிண்ணனி கொண்ட இவர்களை தம் ஆதர்சமாக ஏற்றுக் கொள்வதில் எனது சக பெண்களுக்கு மன ரீதியான எவ்விற தடைகளும் ஏற்படப்போவதில்லை.
- 6
உழைக்கும் பெண்களை மையமாக வைத்து எழுதும் எனது புதினங்களில் பாலியல் வெளிப்பாடு என விமர்சகர்கள் கருதுகின்றனர். பாலியல் ஒரு இயற்கைத் தூண்டல். அதனால் விளையும் துலங்கலும் இயல்பானதே. கிராமத்து உழைக்கும் பெண்ணின் பாலியல் மீறலை நீக்கு போக்கத்தான் கூறமுடியும். படைப்பில் அவற்றை வெளிப்படையாக பேசியாக வேண்டும் என்பது கட்டாயமொன்றுமில்லை. நாம் எடுத்துக் கொள்கிற உள்ளடக்கத்திற்கு எது தேவையோ அதைச் சொன்னால் போதுமென எண்ணுகிறேன். எனது பாத்திரங்கள், என்னுடைய சகோதரிகளாக, எனது தாய்களாக, தோழிகளாக இயங்குபவர்கள். அவர்களுக்கும் பாலியல் அபிலாஷைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட இல்லற நெறிகளுக்குள் இயங்குகிறார்கள். இவ்வில்லற நெறியை கற்பு எனும் வகைபாட்டிற்குள் அடக்கிவிட முடியாது. கற்றாழை பழநியம்மாளும் ஆறுகாட்டுத்துறையில் சமுத்திர வல்லியும், கண்ணகியும், இத்தகைய புதிய இல்லற நெறியை உருவாக்குபவர்கள்தான். பெண் தன் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தெரிந்தவள். சுதந்திரத்தின் பொருட்டு அவள் சுயமரியாதையை இழப்பவள் அல்லள். இவை இரண்டும் இரு விழிகள் அவளுக்கு.


பெண் தன் உடலின் தேவையை அறிந்தவள். தன் உடலின் மீது
சமூகமும், அது உருவாக்கியுள்ள பண்பாட்டு மதிப்பீடுகளும், விதித்துள்ள தலைகளை அவள் மீறுவதென்பது ஒரு ஆற்றை கடலை நோக்கி இட்டுச் செல்லும் இயற்கையின் விதியை ஒத்தது. இம்மீறலை அதன் இயல்பான தொனியல் படைப்புகளில் சொல்லி வந்திருக்கிறேன். பெண்ணாக இருப்பதால் இன்னும் உரத்த குரலில் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை.

பெண் தன் ஆன்மாவை நேசிப்பது போல் தன் உடலையும் நேசிக்கிறாள். அதே சமயம் உடலுக்காக அவள் ஆன்மாவை மீறுவதில்லை. இங்கே ஆன்மா என்பது சமூகம் உருவாக்கியுள்ள ஒழுக்க மதிப்பீடுகள் எனும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. பெண்ணினுடைய மனசாட்சி என வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். என் படைப்புகளில் இயங்கும் பாலியல் வெளி அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பெண்ணியத் தோற்றத்திற்காகவோ செயல்படுவதன்று. அது பெண்ணின் விழைவுகளிலிருந்தே உருவாக்கப்படுவது. நமது மரபு வழி அமைந்த பண்பாட்டுக் கூறுகளில் உள்ள பெண்ணடித் தனங்களை நீக்கி புதிய பெண்ணிய அறங்களை, இல்லற அறங்களை உருவாக்கக்கூடியதாக அப்பாலியல் வெளி இருக்கிறது. கீழைத் தேய சமூகத்திற்கான பெண்ணியத் தத்துவங்களை உருவாக்கும் வகையில் வலிமையான மூலாதாரங்களாக இப்படைப்புகள் எங்ஞனம் திகழ்கின்றன என்பதை இலக்கிய விமர்சகர்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும்.
- 7
எனது படைப்புகளின் பலமாகக் கருதப்படுவது அதன் உரையாடல்கள். அவ்உரையாடல்களை மேற்கொள்பவர்கள் எத்தகைய இனக் குழுவைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களது வழக்குகளிலேயே எழுதி வந்திருக்கிறேன். மொழி என்பது கருத்தைக் கடத்தும் வெறும் ஊடகமட்டுமன்று. அது தன்னுள் தான் புழங்கப்படும் சமூகத்தின் பண்பாட்டை, அரசியலை, அறிவியலை, சூழலியலை உள்ளடக்கி வைத்திருக்கிறது. நாட்டார் வழக்காற்றில் புழங்கப்படுகின்ற தொன்மக் கதைகள், பாடல்கள், விடுகதைகள், சொலவடைகள் போன்றவை ஒரு பண்பட்ட சமூகத்தின் பழமையை, கலாச்சார வளங்களை, அனுபவத்தின் கொடைகளை கொண்டிருக்கின்றன. இத்தகைய நாட்டார் வழக்காறு இன்றி ஒரு தொன்மச் சமூகத்தின் கதையாடல் முழுயடையாது.

ஒரு மொழியின் செம்மொழித் தகுதி என்பது அது எந்த அளவிற்கு பல்வேறு வட்டார வழக்குகளை உள்ளடக்குகிறது என்பதைப் பொருத்தே அமைகிறது. தேசியப் பேரினவாதம் எவ்வாறு தனக்குள் கொண்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்துத் தனது ஒற்றை அடையாளத்தை நிறுத்த முயலுகிறதோ, அது போலவே ஒரு தேசிய இனத்திலிருக்கும் ஆதிக்கச் சமூகம் தனது மொழியையும், பண்பாட்டையும் அத்தேசிய இனத்தின் அடையாளமாக கட்டமைக்க முயல்வது நாம் அறிந்ததே. இத்தகைய அதிகாரப்போக்கிற்கு மாற்றாக தமிழ்த் தேசியத்திற்குள் அடங்கியிருக்கும் பல்வேறு விளிம்பு நிலை குழுக்களின் குரல்களைப் பதிவு செய்வது என்பது அதிகாரத்திற்கு எதிரான ஒரு நவீன செயல்பாடாக் கருதப்பட வேண்டும்.
0
(அகநாழிகை )

3 comments:

Anonymous said...

முதல்ல எதாவது ஒழுங்கா எழுதிட்டு இந்த விமர்சனம்,வெங்காயமெல்லாம் பண்ணு........

ச.முத்துவேல் said...

@அனானி

வாங்க சாமி. வாங்க வாங்க.என்னாடா இவ்வளோ பெரிய போஸ்டு போட்டுருக்கிறோம் ஒரு கமெண்டுக்கூட இல்லையேன்னு வருத்தப்பட்டுக்கினுயிருந்தேன். இப்போ போயிடுச்சி சாமி.தேடிப்புடிச்சிப் போட்டிருக்கீங்க.என்னையும் ரௌடியா மதிச்சி ஜீப்புலல்லாம் ஏத்தி பெரிய ஆளாக்குறீங்க.ரெம்ப சந்தோசம்.

நல்லாப் படிச்சீங்களா? இது விமர்சனமா இல்லையான்னு?
ஆனா, உங்க உத்தரவுப்படி சாமி, நான் இனுமேலு இந்த விமர்சனம் வெங்காயமெல்லாம் எழுதறதில்லைன்னு முடுவு பண்ணிட்டேஞ்சாமி. எல்லாம் உங்க வார்த்தைக்கு இருக்கிற பயம், மருவாதைதான். ஏற்கனவே கொஞ்ச நாளா எதுவும் எழுதாமப்போனதுக்குங்கூட இதுதாஞ்சாமி காரணம்.
ஆனா, ப்லாக்கே எழுதாதேன்னு கண்டீசனு போடாம, எழிதிக்கோ.எழுதிக்கத்துக்கினு அப்பறமா எழுதுன்னு சொல்ற உங்க பெருந்தன்மைக்கும், கரிசனத்துக்கும் கும்பிடு போடுறஞ்சாமி. ரெம்ப நன்றி சாமி.
அப்ப நான் உத்தரவு வாங்கிக்கட்டுமா சாமி?

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Desktop Showrooms in Chennai
Printer prices in chennai
Buy Tablets online chennai
Laptop stores in chennai
Projectors price in Chennai
Buy pendrive online India
External hard disk price in Chennai
Laptop accessories online chennai
Best laptops in Chennai
Tablet showroom in Chennai
Inverters dealers in Chennai
Server dealers in Chennai