Thursday, February 10, 2011

ஜெமோ. பரிந்துரைத்த தேவதேவன் கவிதைகள்

நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்கிற நூலில் ஜெயமோகன் பல எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு பரிந்துரைத்துள்ளது நாமறிந்ததே.அவற்றில் கவிதைகளை மட்டும் இயன்றவரை இங்கு தொகுக்கலாம் என்றொரு எண்ணம்.முதலில் தேவதேவன் கவிதைகள்


பயணம்

அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற்பொழுதே தூரம்

அகண்டாகார விண்ணும்
தூணாய் எழுந்து நிற்கும்
தோணிக்காரன் புஜ வலிவும்
நரம்பு முறுக்க நெஞ்சைப்
பாய்மரமாய் விடைக்கும் காற்றும்
அலைக்கழிக்கும்
ஆழ்கடல் ரகசியங்களும்
எனக்கு, என்னை மறக்கடிக்கும்!

அமைதி என்பது...

பொழுதுகளோடு நான் புரிந்த
உத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வந்தேன்

அமைதி என்பது மரணத்தறுவாயோ?

வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ?

வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்குமுறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது

அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ?

எழுந்துசென்ற பறவையினால்
அசையும் கிளையோ?

வீடும் வீடும்

பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள்
பாதுகாப்புடன் இருக்கிறேன் நான்
என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு
ஒரு காலத்தில்
என்னை ஓய்வுகொள்ளவிடாது
வாட்டி எடுத்த ஓட்டைக்குடிசையிலும்
குளிருக்குப் பற்றாத
அம்மாவின் நைந்த நூல் சேலையிலும்
கருக்கொண்டது.
எப்போதும் நம் லட்சியமாயிருக்கும்
இவ்வுலகம் பற்றிய கனவு,
நம்மில் ஒருக்காலும் இதுபோல்
கருக்கொண்டதில்லை என்பதை நான் அறிவேன்
மலரோடு தன் வேலை முடிந்ததும்
விலகி வெளி உலாவும் கருவண்டைப் போல்
நாம் ஒருக்காலும் இருந்ததில்லை என்பதையும்

ஒரு பயணம்

கூட்டத்தில் ஓர் இடம் பிடிப்பதற்காகக்
காலங்கள் எவ்வளவை வீணாக்கினாய்
எஞ்சிய பொழுதுகள் எரிந்து நின்ற வெளியில்
என்ன நடந்துவிடுமென்று அஞ்சினாய்

பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர்த்த
உற்றோர் உறவினர்களை
உறவு சொல்லி விளிக்க
உன் நா காட்டும் தயக்கத்தில்
என்ன எச்சரிக்கையைச் சுமந்து வந்தாய்
உன் அறியாப் பருவத்திலிருந்தே

எப்போதும் உன் முகத்தில்
வெகு நீண்ட பயணத்தின் களைப்பு
இன்னும் வரவில்லையோ
நாம் வந்தடைய வேண்டிய இடம்?
இன்னும் காணவில்லையோ
நாம் கண்ணுற வேண்டிய முகங்கள்?

யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்

குப்பைத்தொட்டியோரம்
குடித்துவிட்டு விழுந்துகிடப்போனை

வீடற்று நாடற்று
வேறெந்தப் பாதுகாப்புமற்று
புழுதி படிந்த நடைபாதையில்
பூட்டு தொங்கும் கடை ஒட்டிப்
படுத்துத் துயில்வோனை

நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கிக்
கைக்குழந்தை குலுங்க அழுதுகொண்டு ஓடும் பெண்ணை

நடைபாதைப் புழுதியில் அம்மணமாய்
கைத்தலையணையும் அட்டணக்காலுமாய்
வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை

எதனையும் கவனிக்க முடியாத வேகத்தில்
வாகனாதிகளில் விரைவோனை

காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கைவிலங்குடன்
அழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை

உப்பளம்

சேறு மித்துக் கூறு கட்டிய
தெப்பங்களிலும் பாத்திகளிலும்
என் நாடி நரம்புகளிலும்
நிரம்புகின்றன
பூமியிலிருந்தும் கடலிலிருந்தும்
மின்சார வேகம்
உறிஞ்சிக் கொட்டுகிற
நீர்

நீருக்கும்
சூரியனுக்கும்
நடுவே
நீரோடு நீராய்க்
காய்ச்சப்படும் மனிதன்
முதிர்கிறான்
ஒரு தானியக் கதிராய்.
ஊமை இதழ் திறந்து
எட்டிப் பார்க்கின்றன
உப்புப் பற்கள்.
இப்புன்னகை காணவோ
இத்தனை உழைப்பும்?
மனிதப் பாட்டின் அமோக விளைச்சல்
மலை மலையாய்க் குவிந்து
கண்கூச வைக்கிறது
பூமியின் மேல்தோலைப் பிறாண்டித்
தூசு போர்த்தும் பேய்க்காற்றின்
ஜம்பம் சாயாதபடி
பூமியெங்கும்
இடையறாது நீர் தெளித்துக்
கண்காணிக்கிறான் மனிதன்
மீண்டும் எடுத்துக்கொள்ளப்
பொழியும் மழையிடமிருந்து
காக்கிறது
அம்பாரங்களின் மார்மூடிய
மேலாடைக் கற்பு.
கோடானுகோடிக்
கண்சிமிட்டல்கள் ஓய்ந்து
நிலைத்த பார்வை
இருள்திரை நீங்கிய
சூர்யப் பிரகாசம்
விடிவு
நிழலற்ற பேரொளி
ஓர் உப்புக் கற்பளிங்கில்
சுடர்கிறது
கடலும் பூமியும் பரிதியோடிய
பெருங்கதை
மானுஷ்யம்
வியர்வை

எத்தனை அழுக்கான இவ்வுலகின்...

கொட்டகை நோக்கிச் செல்லும்
காலி குப்பை வண்டியின் உள்ளே
ஆற அமர கால் மடித்து அமர்ந்து
வெற்றிலை போட்டுக் கொண்டு
வண்டியசைவுக்கு அசையும்
தன் ஒத்திசைவையும் அனுபவித்தபடி
ஆடி அசைந்து ஒரு அழகான் தேவதை போல்
சென்று கொண்டிருக்கும் பெண்ணே,

முகஞ்சுளிக்கும் புத்தாடைகளுடன்
அலுவலகம் செல்லும் வேகத்தினால்
பரபரப்பாகிவிட்ட நகரச் சாலை நடுவே...
பணி நேரம் முடிந்து ஓய்வமைதியோ
மாடு கற்பித்த ஆசுவாசமோ, இல்லை
அபூர்வமாய் ஒளிரும் பேரமைதியே தானோ

எத்தனை அழுக்கான இவ்வுலகின் நடுவிலும்
நீ இரு மூலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு
வாழ்ந்தே விடுவது கண்டு
இன்பத்தாலோ துன்பத்தாலோ துடிக்கிறதேயம்மா
என் இதயம்.

தூரிகை

வரைந்து முடித்தாயிற்றா?

சரி
இனி தூரிகையை
நன்றாகக் கழுவிவிடு

அதன் மிருதுவான தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாய்
வருடிக் கழுவி விடு

கவனம்,
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையைக் கெடுத்துவிடும்

சுத்தமாய்க் கழுவிய
உந்தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டு விடாதபடி
எப்போதும் மேல் நோக்கிய
வெளியில் இருக்க-
இப்படிப் போட்டு வை
ஒரு குவளையில்

ஒரு சிறு குருவி

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டைக் கட்டியது ஏன்?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?
பார்,ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப் பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக் கடலை நோக்கி

சுரீரெனத் தொட்டது அக்கடலை,என்னை,
ஒரு பெரும் பளீருடன்.
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்தப் பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை:

ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர்சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்
- தேவதேவன்



5 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒன்றுமே புரியவில்லை; அதனால் தான் இதைக் கவிதை என்கிறார்களா?புரிந்தது போல் பாவனை காட்டுகிறார்களா?
எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாவிடில் தான் அது கவிதையா,
நானும் வாசித்துத் தான் பார்க்கிறேன். புரியவே இல்லை. களைத்துவிட்டேன்.
இவை கேலியாக நான் கூறவில்லை . என் ஆதங்கம்.
கம்பன், காளமேகம்; பாரதி, கண்ணதாசன்;வைரமுத்து....எழுதினார்கள் புரிந்ததே! இப்போ இவர்கள்...புரியவில்லையே இவர்களும் கவிஞர்கள் என அங்கீரித்தது யார்?
எல்லோருமே கவிஞர் என போட்டுக் கொள்ளலாமா? இடமிருந்து வலம்- எந்தப் பொருளுமின்றி எழுதுவதை; மேலிருந்து கீழ் உடைத்துடைத்து ஒன்று இரண்டு சொற்களாக எழுதினால் அது கவிதையா?
ஜெமோ - சொல்லிவிட்டார் என்பதால் அவை கவிதையா?
தமிழ்க் கவிதை ரசிகர்களிடம் உள்ள பெருங்குறை; ஒருவர் சொல்லிவிட்டார் என்பதும் ; ஆகா ஓகோ
என ஒத்து ஊதுவது; இது பள்ளிப் பிள்ளைகள் போன்ற மனநிலை.
அடுத்து தமிழர்கள் உலகிலே மிக இலகுவான விடயமாகக் கருதுவது, கவிதை எழுதல்.
என்ன பாவம் செய்தோமோ நாம், தட்டுண்டு விழுந்தாலும் கவிஞர்களில் தான் தட்டுண்டு விழுமளவுக்கு
கவிஞர்கள் உலகம் பூராகவும் மிக மலிந்து விட்டார்கள்.
ஒரு கடிதம் ஒழுங்காக எழுதத் தெரியாதோரெல்லாம் கவிஞராகத் திகழக்கூடியது இந்த தமிழுலகமே!
இவையும் ஒரு வகை சுற்றுச்சூழல் மாசே!

MANO நாஞ்சில் மனோ said...

அருமை நண்பரே....

கவி அழகன் said...

கிட்ட நெருங்க முடியல

ச.முத்துவேல் said...

@யோகன் பாரிஸ்
உங்கள் ஆதங்கத்தை என்னால் உணரமுடிகிறது. உங்களுக்கு நான் செய்யக்கூடியது ஒன்றுதான்.வேறென்ன ஆலோசைகள்தான்.

நாம் சின்ன வயதிலிருந்து தூர்தர்ஷனில் பார்த்து, கேட்டு வளர்ந்திருக்கக்கூடிய ' மிலே சுரு மேரா ..' என்கிற பாடலை வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று இணையத்தில் தேடிக் கண்டேன். மிகுந்த உணர்வெழுச்சியை அடைந்தேன். கண்ணீர்கூட விட்டேன். தெரியாத மொழிகளில் அமைந்த பாடல். அழுவதற்கு இதில் என்ன இருக்கிறது.அதே படைப்புதான். மாற்றம் என்னிடத்தில்தான்.
இதுவொரு உதாரணம்தான். நாம்தான் மாற்றமடையவேண்டும்.அதற்கு பயிற்சியும், முயற்சியும் தேவை.விருப்பமில்லாவிட்டால் விட்டுவிடலாம்.ஆனால், நமக்குப் புரியவில்லையென்பதற்காக எப்படி குறை சொல்லமுடியும்? நானும் பயிற்சியில் இருப்பவன்தான்.

நீங்கள் சொல்கிற புரியக்கூடிய கவிதைகளையேக் கூட வீச்சோடு புரிந்துகொள்ள இயலாதவர்கள் இருக்கிறார்கள் அல்லவா?

இதற்கெல்லாம் வழிகாட்டியாக நான் ஜெயமோகனின் ' நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' என்கிற நூலையே பரிந்துரைக்கிறேன். குறிப்பாக தேவதேவன் கவிதைகள் பற்றிய வழிகாட்டுதலுக்கு ' ஜெயமோகன் எழுதிய ' நவீனத்துக்கு பின் கவிதை தேவதேவன் கவிதைகளை முன்வைத்து' என்ற நூலைத்தான் பரிந்துரைக்கிறேன்.

ஜெமோ சொல்லிவிட்டார் என்பதற்காக மட்டுமே, விசிலடிச்சான் குஞ்சு மனப்பான்மையில் ஏற்றுக்கொண்டு, இங்கே இவற்றை அளிக்கவில்லை. இதுவொரு திரி. இதை ஒரு தொகுப்பாக கிடைக்கச் செய்யும் எண்ணம் அவ்வளவுதான்.

உங்களிடம் தேடலும்,வெளிப்படையான பேச்சும் இருப்பதால்தான் இவ்வளவும் சொல்கிறேன்
4 வது முறை மீண்டும் தட்டச்சு செய்தேன்.முதல் 3 முறைகளிலும் அழிந்துவிட்டது)

ச.முத்துவேல் said...

நன்றி மனோ

நன்றி யாதவன்.யோகன் பாரிசோடு பகிர்ந்துகொண்டவற்றில் உங்களுக்குப் பொருத்தமான வரிகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.