Monday, June 27, 2011

மீண்டும் வாழ்தல்

அடையாள அட்டை எண் 396
பணி ஓய்வு பெறும்போது
அடையாள அட்டை எண் 3342
பதினெட்டு பணிஆண்டுகள்  நிறைவுற்றிருந்தார்

இவர்களிருவருக்கும் முன்னும் பின்னும்
பல அடையாள அட்டைகள்
எனினும்
396க்கும் 3342க்கும் பல ஒற்றுமைகள்

396 வாழ்ந்த வாழ்க்கையையே
3342 மீண்டும் வாழ்வதும்
பெரிய வேறுபாடு
காலம் மட்டுமே என்பதையும்
3342 கண்டுணர்ந்தபோது
சலிப்பினால் இமைப்பொழுதில் இளைத்தார்

எஞ்சிய வாழ்நாட்களிலாவது
தனக்கெனவொரு தனித்த வாழ்வை
வாழ்ந்துவிடுவது என்று சூளுரைத்தார்
‘அந்த வாழ்க்கையும் யாராலாவது
வாழப்பட்டிருக்கலாமே’ என்று ஒலித்த அசரீரி 
வந்த திக்கில்
வெறுப்புடன் வெறுங்கையை வீசியதில்.
ஒரு மஞ்சள் மலரில் அமர்ந்திருந்த
சாகாவரம் பெற்ற வண்ணத்துப்பூச்சி
கலைந்து எழுந்து
அதே செடியின் இன்னொரு
மஞ்சள் மலரில் அமர்ந்து
உறிஞ்சத்தொடங்கியது

10 comments:

anujanya said...

வாவ், ரொம்ப நல்லா வந்திருக்கு முத்து. தொடர்ந்து எழுதவும்.

நந்தாகுமாரன் said...

அற்புதம்

அகநாழிகை said...

முத்துவேல், நல்ல கவிதை. ஏற்கனவே எழுதியதோ? படித்த நினைவிருக்கிறது.

ச.முத்துவேல் said...

@ அனுஜன்யா
@ நந்தா
அப்பாடா! எவ்வளவு நாட்களுக்குப் பிறகு, மீண்டும் வந்து, கருத்துரைத்திருக்கிறீர்கள்!! நீங்களே பரவாயில்லை. நான் இன்னும் மோசம்:)

நன்றி.

@அகநாழிகை
நன்றி, வாசு. நீங்கள் படித்திருக்கமுடியாது. எழுதி, இருவாரங்கள்தானிருக்கும். இதுதான் மீண்டும் வாழ்தலோ!!

rajasundararajan said...

முதலில் வாழ்த்திப் பாராட்டுகிறேன், உங்களுடையதொரு கவிதையை தேவதேவன், கல்பற்றா கவிதைகளோடு ஒருங்குவைத்து ஜெயமோகன் பேசியிருப்பதற்காக!

'மீண்டும் வாழ்தல்' கூறும் இதே கருத்தை வலியுறுத்துவதற்காக 'வால்டன்' என்றொரு புத்தகம் எழுதினார் தோரோ. "ஆகவே எளிமையாக வாழ்ந்து கடப்போம்," என்றும் அறிவுறுத்தினார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஓர் அரசியல்வாதி என்பதினால் இதனை, கலைஞர்களைப் போல் இப்படிக் கண்டறிந்து கூறாமல், சற்றதுபோல் வழிபற்ற வற்புறுத்தினார். நாமும் அவரை நக்கலடித்து நாசமாய்ப் போனோம்.

//சாகாவரம் பெற்ற வண்ணத்துப் பூச்சி//, //மஞ்சள் மலர்// இவற்றில் 'சாகாவரம் பெற்ற', 'மஞ்சள்' இன்ன உரிமொழிகள் என்ன விளக்க வருகின்றன என்று, பொதுவாக, தமிழ்மரபின் நமக்கு மூளை விடைக்கும். ஏனென்றால் சங்கக் கவிதைகள் நெடுகிலும் இப்படி உரிமொழிகளுக்கு ஊடாகவே 'இறைச்சி'யும் 'உள்ளுறை'யும் பயின்றுவரப் பழகி இருக்கிறோம்.

துய்த்தல் தவிர்க்க முடியாமையால் இங்கு வண்ணத்துப் பூச்சி, இருத்தலியம் உணர்த்த வேண்டும். ஆனால் 'சாகாவரம்' காரணம் ஆன்மவாதத்தில் அமரத் துடிக்கிறதோ என்று ஐயுறுகிறேன். அப்படியே, 'மஞ்சள்' இழிபொருள் உணர்த்துகிறதோ என்றும் ஐயம்! அல்லது எனக்குத்தான் கண்ணில் காமாலையோ?!

ச.முத்துவேல் said...

@ராஜசுந்தரராஜன்
வாங்க சார். உண்மையில், நான் உங்களுக்காக ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ஜெயமோகன், எழுதியிருந்தது எனக்கு மிக்க மகிழ்வையும், ஊக்கத்தையும் கொடுத்தது. குரு வாயால் அங்கீகாரம்..
நான் அதிலிருந்து இன்னும் மீளவேயில்லை. நீங்களும் அதே கவிதையை, முன்னமேயே பாராட்டியிருந்ததை நினைவுகூர்கிறேன்.

கவிதையின் இதே கருத்தை ஏற்கனெவே மகாத்மா உட்பட பலரும் பேசியிருப்பது எனக்கு நிறைவைத் தருகிறது. முக்கியமானதொரு விசயத்தைத்தான் எழுதியிருக்கிறேன் என்ற வகையில். இதுதான் மீண்டும் வாழ்தல் போலும் என்று எண்ணி சிரித்துக்கொள்கிறேன்.

/சாகாவரம் பெற்ற வண்ணத்துப் பூச்சி/
என்று எழுதியிருப்பது என் வரையில் உள்ளர்த்தத்தோடுதான். ஒரே மாதிரியான வாழ்க்கை நேற்றும், இன்றும், நாளையும் என தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அந்தவிதமாக பல வாழ்க்கைகள்.ஆட்கள்தான் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள்.பெயர்களாகவும் எண்களாகவும் இன்னும் மற்றைவகளாகவும் அடையாளங்களோடு. வாழ்க்கை சாகாவரம் பெற்றதாய் உள்ளதெனக் கருதி, வண்ணத்துப்பூச்சியாக புனைந்திருக்கிறேன்.

மஞ்சள் மலர் என்று எழுதியிருப்பதில் ஏதும் உள்ளர்த்தம் யோசித்துச் செய்யவில்லை. காட்சிப்படுத்தலுக்காகத்தான்.

மீண்டும் வாழ்தல் என்று இங்கே நான் சொல்லியிருக்கிற (படிமம்?) பக்கத்திலிருந்து மட்டுமே நான் சொல்பவை.ஆனாலும், பல தளங்களிலும் மீண்டும் வாழ்தல் பொருந்தும் சாத்தியம் உள்ளது என நம்புகிறேன்.

இப்படி நிறை, குறைகளை அலசுவதுதான் எனக்குப் பயனளிக்கக்கூடியது. தொடருங்கள், சார். மிக்க நன்றி.

கீதமஞ்சரி said...

வட்டமான வாழ்க்கைத் தத்துவம்... சொன்னவரிகளில் வெகு சுவாரசியம். கவிதை அருமை.

ச.முத்துவேல் said...

நன்றி கீதா!

Anonymous said...

பூ விற்ற பெண்ணின் கவிதை மிக அழகு!

ச.முத்துவேல் said...

@ ஷீ நிஷி
என்ன சொல்கிறீர்கள்? புரியவில்லை.