Tuesday, July 26, 2011

ஜெமோ பரிந்துரைத்த முகுந்த் நாகராஜன் கவிதைகள்


அகி

என்ன விளையாட்டு பிடிக்கும் என்று
கண் நிறைய மை தடவிக்கொண்டு வந்த
U.K.G பெண்ணிடம் கேட்டாள்
குழந்தைகள் நிகழ்ச்சி நடத்தியவள்.
யோசித்து மெதுவாக,
‘’ஓடிப் பிடிச்சி’ என்றாள்.
யாருடன் விளையாடுவாளாம்?
‘அகி கூட’ என்றாள்.
‘அகி’ என்றால் அகிலாவா?
தலை ஆட்டினாள்,
ஆமாம் என்றோ இல்லை என்றோ.
யாராம் அந்த அகி?
ஸ்கூல் ஃப்ரண்டா? இல்லையா?
அப்போ அக்காவா?அதுவும் இல்லையா?
பக்கத்து வீட்டுப் பெண்ணோ?
பின்னே யாராம்?
‘தெரியாது’ என்றாள் மெதுவாக.
முதலில் சிரித்தாலும்
அப்புறம் புரிந்துகொண்டேன்.

ரயில் பூக்கள்

பெட்டியில் இருந்த பெண்களை எல்லாம்
‘அக்கா’ என்று அழைத்தபடி
பூ விற்றுக் கொண்டிருந்தாள்,
சின்ன கைகளால் முழம் போட்டபடி.
முழம் சின்னதாக இருப்பதாக
முணுமுணுத்தவளுக்கு
தன் கை ரொம்ப பெரியது என்று
சொல்லிச் ச்மாதான செய்தாள்.
ஒரு சில அக்காக்களுக்கு அவளே
தலையில் வைத்துவிட்டாள்.
கைக்குழந்தைக்கு ஒன்றிரண்டு உதிரிப்
பூக்களைக் கொடுத்துக் கொஞ்சினாள்.
வியாபாரம் முடித்ததும்
கூடையை காலி சீட்-ட்ல் வைத்துவிட்டு
பெட்டியின் வாசலில் வந்து நின்றாள்;,
வேகக் காற்று கூந்தல் கலைக்க.
பாவாடையைக் கையில் பிடித்துகொண்டு
‘லா-லா’ என்று பாடிக்கொண்டு
மயில் போல முன்னும் பின்னும் மெதுவாக
ஆடிக்கொண்டிருந்தாள்,
அடுத்த ஸ்டேஷனில் நிற்கும் முன்னே
பூக்கூடையுடன் குதித்து இறங்கி
அடுத்த பெட்டிக்குப் போகும் வரை.

விளையாட்டுப் பிள்ளைகள்

இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன அந்தப் பூங்காவில்.
ஒன்று
ஊஞ்சலில் நின்றும்,உட்கார்ந்தும்,
ஒற்றைக்காலைத் தூக்கியும்,
வேகமாக வீசி ஆடியும்,
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
மற்றொன்று
காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக்கொண்டும்
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்?

அம்மாவின் தோழி

நாங்கள் எதிர்பார்க்காத விதத்தில்
எங்கள் அம்மாவின் பழைய தோழி விசாரித்து
வந்தாள் அம்மாவின் பழைய தோழி ஒருத்தி,
அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து.
உட்காரச் சொன்னதைக் கேட்காமல்
வீட்டை சுற்றிச் சுற்றி வந்து பார்த்தாள்.
‘இங்கே ஒரு ரூம் இருந்ததே’ என்று கேட்டால்
என்ன சொல்லமுடியும்?
வீடு மட்டுமா?ஊரே மாறிப்போயிற்றாம்.
ஸ்டேஷனில் இருந்து பார்த்தாலே
வீடு தெரியுமாம் அப்போது.
ஒரே கடைகளாய் இருக்கிறதாம் இப்போது.
‘ நீதான் பெரியவனா, நீ சின்னவனா?’
என்று கேட்டாள்.
அப்போதெல்லாம் நாங்கள்
சின்னச் சின்ந்தாக இருப்போமாம்.
‘ஒரு விதத்தில் உங்களுக்கு உறவுகூட’
என்று சொல்லி
நிறைய உறவுகளின் வழியாக அதை நிறுவினாள்.
அந்த மாதிரி எங்கள் அம்மாவின் பெயரை
சுருக்கிக் கூப்பிட்டது அவள் மட்டும்தானாம்.
அதேமாதிரி, அம்மாவும் அவள் பெயரை
ஒரு தனி மாதிரியாகக் கூப்பிடுவாளாம்.
அது என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தபோது
நல்லவேளையாக அம்மாவே வந்துவிட்டாள்.
தோழியை அடையாளம் கண்டுகொண்டு
கூப்பிட்டாள் ஒரு பெயர் சொல்லி.
அதை எங்களால் யூகித்திருக்கவே முடியாது.

காயத்ரி

லதா எப்படி இருப்பாள் என்று
எனக்குத் தெரியும்.
ப்ரியாவை கூட்டத்திலும்
கண்டுகொள்வேன்.
ரயிலில் பக்கத்திலோ, எதிரிலோ
வரும் விதயாவை எப்போதும்
அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன்.
கோவில் கர்ப்பூர வெளிச்சத்தில்
சட்டென்று தெரிந்துவிடுவாள் கல்பனா.
அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும்,
நந்தினியையோ, நளினியையோ,
விஜயாவையோ,உஷாவையோ
கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்
கண்டுபிடித்துவிடுவேன்.
அன்றொரு நாள்
குறும்பு மின்ன வந்த ஒரு காயத்ரி
தன்னை வசந்தி என்று
அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
‘ நீ வசந்தி அல்ல: காயத்ரி.
கொஞ்சம் யோசித்துப் பார்’ என்றேன்.
யோசித்துப் பார்த்தாள்.

தோசை தெய்வம்

தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
என் பாட்டி சுட்ட தோசையா?
என் அம்மா சுட்ட தோசையா?
வெளியூர் பஸ் வழியில் நிறுத்தியபோது
அங்கே சாப்பிட்ட தோசையா?
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
அந்தந்த தோசையில் உள்ள ருசியை
அடுத்த தோசையில் தேடுதல் பெரும் பிழை.
ஒவ்வொரு அவதாரத்திலும்
ஒவ்வொரு குணம்.
இரண்டும் ஒரே ருசி என்று
எப்போதும் சொல்லாதே.
தோசை தெய்வம் கோபித்துக்கொள்ளும்.

10 comments:

கீதமஞ்சரி said...

பிரத்யேகக் கவித்துவம் தென்படாவிடினும் இறுதியில் முறுவல் வரவழைக்கும் ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கக் குறுங்கதைகள்.

ச.முத்துவேல் said...

@ கீதா
நன்றி கீதா.

Anonymous said...

6 கவிதைகளுக்கும் முதலில் வாழ்த்துக்கள்

ரயில் பூக்கள் கவிதை ஒரு ஏழைப்பெண்ணின் சந்தோஷங்கள் கண நேரத்தில் கடந்து போவதாய் இருக்கின்றது என்பதை கோடிட்டு காட்டியது படிப்பவரின் மனதை தஞ்சமடைகிறது...

நலமா நண்பரே!

ச.முத்துவேல் said...

@ ஷீ நிசி
நலம் நண்பா.
வாழ்த்துக்கள் முகுந்த் நாகராஜனுக்குத்தானே சொல்கிறீர்கள்.
ஏனெனில் கவிதைகள் அவருடையதுதான் அல்லவா!

முனைவர் இரா.குணசீலன் said...

தூறல் நின்ற உணர்வு..

முனைவர் இரா.குணசீலன் said...

முதலில் சிரித்தாலும் அப்புறம் புரிந்துகொண்டேன்...

:)

முனைவர் இரா.குணசீலன் said...

முதலில் சிரித்தாலும் அப்புறம் புரிந்துகொண்டேன்...

:)

ச.முத்துவேல் said...

@முனைவர் இரா.குணசீலன்
நன்றி, குணசீலன். நல்வரவு.

Murali Sankar Venkatraman said...

”கடைக்குப் போய் கத்திரிக்காய் வாங்கி வா” என்றாள் அம்மா.
சட்டைப் பையை துழாவினேன்..காசு இருந்தது.
கடை அதே பழைய கடை.
புளிப்பு மிட்டாய் புதிதாக வந்திருந்தது.
சப்பிக்கொண்டே வந்தேன்
சாணியில் விழுந்தேன் மிட்டாயோடு..கல் தட்டி.
அம்மா கேட்டாள் “கத்தரிக்காய் எங்கே ?”

Murali Sankar Venkatraman said...

குதூகலிக்கின்ற குட்டிச் சாத்தான்களிடம் கேட்டேன்:
“குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா ?” என்று.
குனிந்து பார்த்துவிட்டுச் குரவையிட்டபின் கூறியது.
“என்னைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது ?”