Monday, October 31, 2011


பால் கொடாத முலைகள்

            தேவாலய வாசலில் பேருந்து நின்றதும் இறங்கி சிவப்பு நிற கோபுரத்தைப்  பார்த்தேன். பள்ளியில் படித்தபோது சர்ச்சுக்குள் போய்வந்ததுண்டு. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என சொந்த ஊருக்கு வரும்போது, இப்படி நடந்துகொண்டே ஊரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டுப்போவதும், என்னென்னெவோ ஞாபகத்தில் வந்துபோவதும் நல்ல சுகமான அனுபவம்தான். பரவாயில்லையே!  ஊரில் ட்ராஃபிக் சிக்னல் விளக்குகள் எல்லாம் அறிமுகமாகிவிட்டிருக்கிறதே! எப்போதும் இரவில்தான் ஊருக்கு வருவது. பகலில் ஊரிலிருந்து திரும்பி பையுடன் எங்கள் தெருவில்  நடக்கும்போது ஏதோவொரு கூச்சம்.ஏதோ எல்லோரும் தன்னையே பார்ப்பதுபோல் ஒரு உணர்வு.வெறும் உணர்வு என்று மட்டும் சொல்லிவிடவும் முடியாதுதான். அப்படித்தான் பார்ப்பார்கள். அதுவுமில்லாமல், வேலைமுடிந்து கிளம்பிவர இரவாகிவிடும். தோராயமாக 5 மணி நேர பயணம்.  மலையடிவாரத்தில் இருக்கும் தெரு. மேடான தெருவின் முனையிலேயே கதிர், சரவணன், சங்கர் உட்கார்ந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் உற்சாகமாகக் கத்தினார்கள்.வாடா. மெட்ராஸ்காரா, வா. எந்நேரத்துக்கு வர்ற? மணி இப்பவே எட்டரை ஆவுது.இதுக்கப்புறம் நீ வீட்டுக்கு போயிட்டு, பேசிட்டு, சாப்ட்டுட்டு வர்றது எப்போ? நாம சினிமாவுக்கு போறது எப்போ?என்று அடுக்கிக்கொண்டே போனான், சங்கர். இதோ வந்துர்றேன் இருடா.வீட்டுல நான் என்ன பேசப்போறன். போய் பைய வச்சிட்டு, கொஞ்சமா சாப்பிட்டுட்டு வரவேண்டியதுதான.கால் மணி நேரமே அதிகம். டைம்தான் இருக்குதே.சரி,எந்த படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கீங்களா?என்றேன்.  ‘ஆஆங்.அதெல்லாம் முடிவு பண்ணித்தான் வச்சிருக்கிறோம். நீ எதாவது படத்தைமுடிவு பண்ணிக்கினு வந்திருப்பயே. வேணாண்டா சாமி. நீ பாக்குறமாதிரி அழுவற படமெல்லாம், வேணும்ன்னா இதோ இருக்கிறான் பாரு,உன் ஆளு. சரவணன். அவந்தான் உனுக்கு சரி. அவனக்கூட்டிக்கிட்டு நாளைக்கிப் போயிக்கோ.இப்போ நீ போயிட்டு சீக்கிரமா வர்ற வழியப் பாரு, ராசா.என்று கோபால் சொன்னதும் எல்லோரும் சிரித்தனர். நான் மெல்ல சரவணனை பார்த்தேன். கேலியை ஏற்கும் பாவனையில் மெலிதாகச் சிரித்தான். நானும் சிரித்துக்கொண்டே சரி, இதோ வந்துர்றேன்என்று சொல்லிவிட்டு பையை தோளில் மாட்டியபடி வீடு நோக்கி நடந்தேன். என் முகத்தில் சிரிப்பு சட்டென்று காணாமல்போய் ஒருவித இறுக்கம் கொண்டது அல்லது கொள்ளவைத்தேன் அல்லது இரண்டுமே.

           வீட்டிற்குள் நுழையும்போதே அம்மா நடையில் உட்கார்ந்திருந்தாள். தங்கை உள்ளே பாயில் படுத்துக்கொண்டிருந்தாள். இன்னும் தூங்கியிருக்கவில்லை. நான் வந்திருப்பதை அவளும் பார்த்திருந்தாள். ‘ சாப்பாடு எடுத்து வைக்கட்டுமாடா?என்றாள் அம்மா. அந்தக் குரலில் இருக்கும் பாவனையே வெறுப்பேற்றியது.
ம்
தட்டின் முன் அமர்ந்தேன். ரேஷன் அரிசிச் சோறு ஆறிப்போயிருந்தது. ஒரேயொரு குழம்பு மட்டும். கோபம் கோபமாக வந்தது. இதெல்லாம் நாடகம். ஃப்யூஸ் போன பல்புகளைகூட மாற்றாமல் அப்படியே விட்டுவைத்திருப்பாள். நான் போன அன்றுதான் வீட்டிலிருக்கும் சில்லறை செலவுகளையெல்லாம் செய்வது.டூத் பேஸ்ட், சோப், ப்ரஷ் இன்னும் மற்றவை. நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்குக்கூட வக்கில்லாமல் போய்விடவில்லை. டவுனில் இரண்டு வீடுகள்.குடியிருக்கும் வீடு போக இன்னொன்றில் வாடகை வருகிறது. கிராமத்தில் தரிசாக சில ஏக்கர் நிலம் இருக்கிறது. எல்லாம் அவள் பெயரில் உள்ள சொத்து. அவளுடைய அப்பா கொடுத்துவிட்டுப்போன சொத்து.ஒருவகையில் இதுதான், இந்த ஒன்னேகாலணா சொத்துதான் எல்லாவற்றுக்கும் காரணம். நானும் பலமுறை சொல்லிப்பார்த்துவிட்டேன். நிலத்தை வித்து, வீட்டை இன்னும் முழுசா கட்டி வாடகை விட்டுடு. எங்களுக்குக் குடுன்னு சொல்லல.  நல்லதா சாப்பிடுங்க, துணி கட்டுங்க. இப்பத்தான் வேலைக்குப்போக ஆரம்பிச்சுட்டோமில்ல. எல்லாரும் நல்லாத்தான் படிச்சோம். எங்கள மேலப் படிக்கவைக்கறதுக்கு உன் சொத்து உபயோகமாகல.  சாவற வரைக்கும் அப்படியே தண்டமா வச்சிருக்கிறதால யாருக்கு என்னா பிரயோசனம்?  ஊர்ல இனிமேல் போய் நிலத்தை சீர்பண்ணி,செலவு பண்ணி யார் விவசாயம் செய்யப்போறது. யாருக்கு விவசாயம் தெரியும்? எப்ப இருந்தாலும் அதை வித்துத்தானே ஆவணும். அதை இப்பவே செஞ்சா, இருக்கிறவரையிலும் நல்லா இருக்கலாமே. நான் என்ன அழிச்சிடவா சொல்றேன்.அந்த நிலத்தை விக்கிற காச எடுத்து வீடு கட்டுறதுக்கு முதல்தானே போடச் சொல்றேன். இதெல்லாம் என்னைக்கா இருந்தாலும் செய்யவேண்டிய காரியந்தானே?அதை காலத்துக்கும் அப்படியே வச்சிருக்கிறதால எந்தப் பிரயோசனமும் இல்ல.ஆனால் விற்கமாட்டாள்.சொத்துதான் அவளுக்கு முக்கியம். ஆனால்,அதை வளர்க்கத் தெரியாதவள். நாயிடம் கிடைத்த தேங்காய் என்று சொல்கிறார்களே. இதுதானோ அது? ஒருமுறை இப்படி விற்கச் சொல்லி நான் வலியுறுத்தியபோது, என்னிடமே சில லட்சங்களுக்கு  நிலத்தை விலை பேசினாள். மற்றவர்களைவிட எனக்கு,  கொஞ்சம் சலுகை விலையாம்.அதற்குப் பிறகு நான்  நிலம்,வீடு பற்றி பேசுவதேயில்லை.பிள்ளைகளிடமே விற்கிறாள், எனில் யாருக்கு இந்த சொத்து?
வேண்டா வெறுப்பாக சாப்பிட்டுவிட்டு எதுவும் பேசாமல் வெளியேறினேன்.
‘நாங்க இதைத்தான் சாப்பிடறோம்னு காட்டிக்கிறதுக்காகத்தான் இப்படி..

       சைக்கிள்ல இப்படி முன்னால கம்பியில உட்கார்ந்துக்கிட்டுப் போய் எவ்வளவோ நாளாச்சுடா. மெட்ராஸ்ல ,செகனண்டுல வாங்கின ஒரு சைக்கிள் வச்சுருக்கேன். ஆனா, என்னை முன்னால உட்கார வச்சு ஓட்டறது யாரு?. எப்போதும் சரவணன் சைக்கிளில்தான் உட்காருவது.குறுக்கில்  நீலக்கோடுகள் போட்ட ஒரு வெள்ளை டீ சர்ட் அணிந்திருந்தான் சரவணன்.உன் ஞாபகம் வந்தா, அப்ப உன் உருவம் இந்த சட்டையிலதாண்டா இருக்கும். எத்தனையோ முறை எத்தனையோ சட்டையில உன்னை பாத்திருந்தாலும் மொதல்ல ஞாபகத்துல வர்றது இந்தச் சட்டையிலதான். நீ எதாவது பெரிய டூர் போயிர்ந்தாக்கூட,  அந்த டூரைப் பத்தி அப்புறமா யோசிச்சா எதாவது ஒரு இடமோ, சின்ன சம்பவமோதான் ஞாபகத்துக்கு வரும். அது டூர்ல பாத்த முக்கியமான இடமா இல்லாம சும்மா சாப்பிட்டிருந்த இடமாவோ, நடந்துபோன ரோடாவோ கூட இருக்கும். இல்லையா? அதுக்கும் காரணம் இருக்குதுன்னு நினைக்கிறேன். எப்படின்னா, அந்த நேரத்துலதான் நாம அந்த டூருக்குள்ள இருக்கோங்கிறத யோசிச்சிருப்போம். அதனாலதான் அப்படி என்றேன். சரவணனிடம் மட்டும்தான் இப்படியெல்லாம் பேசமுடியும்.
கடைசியா என்னா படம் பாத்தே?என்றான் சரவணன். ‘ அங்க எங்க படம் பாக்கிறது? கம்பெனி, கம்பெனியில வேலை முடிஞ்சா ரூம். போனமுறை உங்கக்கூட இங்கப் பாத்ததுதான். ‘ உங்க அம்மா உனக்கு ஜெயராம கவுண்டர் பொண்ணை பாத்து வச்சிருக்காங்களாமே. ஆளும் பெரிய இடம். பொண்ணும் பெரிய உருவந்தான்என்று இன்னொரு சைக்கிளில் வந்த கோபால் அருகில் வந்து சொன்னதும் எல்லாரும் சிரித்தார்கள்.கோபால் எப்போதும் இடக்காகப் பேசி சிரிக்கவைப்பவன்.யார்ரா அது? எனக்குத் தெரியலையே.?“நகைக் கடைக்காரன்டா. அவன் பெரிய பொண்ணை நாளைக்கிப்போய் பாக்கிறதுன்னு பேசி வச்சிருக்காங்களாம். உங்கம்மா இன்னும் உங்கிட்ட சொல்லலயா? ரெண்டு பொண்ணுங்க.பெரிய பொண்ணு ஒன்னு.அதுக்கடுத்து இன்னொன்னு இருக்குது. மொதப் பொண்ணு செம குண்டாயிருக்கும்.  நல்லா கறுப்பா இருக்கும்என்றான் சங்கர். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.டேய்.யார்ராவன். அவ சொன்னான்னு நீயும் பேசற. நகைக்கடைக்காரன் எனக்குப் பொண்ணு குடுக்கிறதுக்கு அவனுக்கு என்ன தலையெழுத்தா? பைத்தியக்காரனா அவன்? இவளுக்கு பேராசை. அவன் நம்மள சீண்டக்கூட மாட்டான். இவ பெருமையடிச்சுக்கிறதுக்கு இப்படில்லாம் பேசிக்கிட்டுத் திரியறா? என்று சொல்லும்போதே அவமானமாக இருந்தது.

          தவைத் திறந்து வைத்தே தூங்கிக்கொண்டிருந்தார்கள். தம்பி வந்துவிட்டிருந்தான். ஃபேன் காற்று கட்டிலை நோக்கி பெருமளவில் வீசிக்கொண்டிருந்தது.கட்டிலில் அம்மா.உபரி காற்றுதான் தம்பி, தங்கைக்கு சென்றுகொண்டிருந்தது. நான் வரும் சத்தம் கேட்டு கட்டிலை விட்டு எழுந்து, எனக்கு இடம் தந்துவிட்டு கீழே படுத்துக்கொண்டாள். நான் வந்ததால்தான் இப்படி.இல்லையென்றால் கட்டிலும், காற்றும் அம்மாவினுடையது.  நானும் படுத்துவிட்டேன்.புழுங்கித் தள்ளுவதை உணர்ந்து எழுந்தேன். எல்லோரும் தூங்கிவிட்ட பிறகு  நள்ளிரவில் திடீரென்று ஃபேனை நிறுத்திவிட்டிருந்தாள். நான் கவனித்துவிட்டு எழுந்து கத்திவிட்டு மீண்டும் ஃபேனைப் போட்டுவிட்டு வந்து படுத்தேன்.
இது வழக்கமானதுதான்.இப்படிச் செய்வதால் கரண்ட் பில் எவ்வளவு குறைந்துவிடும்?அந்தக் கணக்கையெல்லாம் அவளுக்குப் புரியவைக்க முடியாது. சொன்னால் எடுத்துக்கொள்ளவும் மாட்டாள்.தூக்கம் கெட்டு அவதிப்படுவதை விடவா கரண்ட் பில் பெரியது? அந்த அளவுக்கு இல்லாமலா போய்விட்டது. யோசித்துக்கொண்டே உறங்கிவிட்டிருந்தேன்.

          ல்லோரும் எழுந்துவிட்டிருந்தார்கள். தம்பி வீட்டிலிருந்து சொம்பு எடுத்துப்போய் டீக்கடையிலிருந்து டீ வாங்கி வந்து தனியாக குடித்துக்கொண்டிருந்தான்.டே. என்னாடா இது பழக்கம். நான் போனமுறையே சொல்லிட்டுப் போனனில்ல.இப்படிச் செய்ய உனக்கு அசிங்கமாயில்ல. மறுபடியும் ஓட்டல்லதான் சாப்பிடுறயா?என்றேன் கடுப்பான குரலில்.  ‘இதுல என்னா அசிங்கம் இருக்குது.எத்தனை ஆம்பிளைங்க காலையில டீக்கடையில போய் டீக்குடிக்கிறாங்க. டீக்கடையிலன்னா கம்மியாத்தான் இருக்கும்.சொம்பில வாங்கினு வந்தா  நெறைய இருக்கும்
நாம தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்குதுன்னு நினைக்கிறவனுக்குத்தான்டா எல்லாம் வெளங்கும். நமக்கு எல்லாமே தெரியும், நாம செய்றது எல்லாமே சரிதான்னு நினைச்சா அவ்வளவுதான்.முடிஞ்சது கதை. நீ அப்படித்தான்டா   நினைச்சுக்கிட்டிருக்கிற. ஒன்னு..  அவங்கள மாதிரி டீக்கடையிலயே போய் குடிச்சுட்டு வா. இல்லன்னா வீட்டுல போடற டீய குடி
வீட்டுலல்லாம் இப்ப டீ குடிக்கிறதுல்ல. ஓட்டல்லதான் சாப்பிடுறேன். என்றபோது அவன் குரல் தணிந்திருந்தது, என்னைத் தொந்தரவு செய்தது.  ‘ஏன்? நீ ஒழுங்கா காசு குடுத்திருக்கமாட்டே. இதான் சாக்குன்னு உங்கம்மாவும் சாப்பாடு போடறத நிறுத்திருப்பாங்க’.
‘ டேய். நீ வரும்போதெல்லாம் உன் தம்பி, தங்கச்சிங்களையே தூக்கி வச்சுட்டு பேசிட்டுப் போயிடறே. அதுங்களுக்கு குளுர் உட்டுப்போகுது. நீ வந்தா அவங்களை மிரட்டுவன்னு பாத்தா, என்னைக் குத்தம் சொல்றதுக்குத்தான் அங்கேருந்து கிளம்பி  வர்றயா?. அவனையேக் கேளு.ஒரு நாளு காசு குடுக்கல.எங்கியோ பிரெண்டுகளோட சுத்திக்கினுருந்துட்டு வேலைக்கிப் போவல. அன்னிக்கும் சாப்பாடு போட்டேன். மறு நாளும் ஒடம்பு சரியில்லன்னு சாக்கு சொல்லிக்கினு படுத்துனுக்கிருந்தான். சரின்னு, அன்னைக்கும் சாப்பாடு போட்டேன். சாப்பாடு புடிக்கலன்னு தகராறு பண்ணான். அப்படின்னா ஓட்டல்லயே போய் சாப்பிட்டக்கப்பான்னு சொல்லிட்டேன். இங்க பார்றா. அவன் ஒழுங்கா வேலைக்கு போவவும் மாட்டான். எங்கிட்ட காசு குடுக்கவும் மாட்டான். அதனால அவனை வீட்டுல சாப்பிடற ஏற்பாடெல்லாம் நீ செஞ்சு வச்சுட்டு போவாத. ஆமா, சொல்லிட்டேன்என்றாள். ஆரம்பமாகிவிட்டது என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். வேண்டுமென்றே அவனை வெறுப்பேத்துகிற மாதிரி சமையல் செய்திருப்பாள். இதெல்லாம் அவளுடைய திட்டப்படி நடக்கிற நாடகம் என்பது தம்பிக்கே தெரிந்திருந்தாலும், அவனால் தவிர்க்கமுடியாமல் தானும் ஒரு கதாபாத்திரமாகி பங்கேற்றுவிடுவான். இப்படி வீட்டில் கொடுத்து சாப்பிடும் நிர்ப்பந்தம் இருந்தால்தான் அவன் அதற்காகவாவது வேலைக்குப் போவான். அவனே ஓட்டலில் சாப்பிடுவதாக இருந்தால் அவனுக்கு சாப்பாடுகூட முக்கியமில்லை. ஏதோ சாப்பிட்டுவிட்டு சோம்பேறியாய் ஊர் சுற்றுவான். வாலிபால் விளையாடுபவர்களை, கிழங்களோடு சேர்ந்து வேடிக்கைப் பார்ப்பான்.   ‘ஒழுங்கா வேலைக்கு போறதுக்கு முடியலன்னாலும், ஊர் சுத்தறதுல ஒன்னும் கொறைச்சல் இல்ல உனக்கு.
அவன், இல்ல. ரொம்ப நாளாச்சேன்னு, சும்மா பசங்களோட சாத்தனூர் டேமுக்குப் போயிட்டுவந்தேன் என்றான். ஆமா, சார்.ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க  இல்லீங்களா. அதனால கொஞ்சம் எண்டெர்டெயின்மெண்ட் வேணுந்தான் உங்களுக்கு. என்னவோ போங்க.  உங்களையெல்லாம் திருத்த முடியாது
காஃபி போட்டு முடித்திருந்தாள். எனக்கு ஒரு டம்ளரில் வந்தது. அவனுக்கும் கொஞ்சம் குடுங்க
“ வேணாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே டீ குடிச்சேன்என்று எழுந்துபோய்விட்டான். தம்பிக்குக் கொடுக்காமல் குடிப்பதற்கு எனக்குத்தான் ஒருமாதிரியாக இருந்தது.எங்கள் அம்மாவுக்கு இது மிகவும் சாதாரணம்.என்னை விட்டுவிட்டு எவ்வளவு வருடங்கள், என் கண்ணெதிரிலேயே காஃபி, டீ குடித்திருக்கிறாள்.  நானோ, என் தம்பி, தங்கையோ எதாவது பிரச்னை என்றால் அதற்குத் தண்டனையாக அடி, திட்டு போக சோறுபோடாமல் பட்டினிபோட்டுவிட்டு, கண்ணெதிரிலேயே சாப்பிட்டிருக்கிறாள். எத்தனை வேளையானாலும் இரங்கிவந்து சாப்பிடவிடமாட்டாள். பிள்ளைகளை அடித்துவிட்டு கோபத்தில் சாப்பாடுபோடாமல் விட்டுவிட்டு, பிறகு கெஞ்சி கூத்தாடி பிள்ளைகளை சாப்பிடவைப்பதெல்லாம் எங்கள் வீட்டில்  நடக்காத கதை.கண்ணே, மணியேன்னு கொஞ்சறதெல்லாம் கனவுலக்கூட வந்தது கிடையாது. சொந்த வீட்டிலேயே எத்தனையோ முறை வைராக்கியத்தையும் தாண்டி பசியில் சோற்றைத் திருடிச் சாப்பிட்டிருக்கிறோம்.
 வாப்பா, போப்பான்னு கூட பேசமாட்டாள். குரலில் கனிவோ, அன்போ இருக்கவே இருக்காது. நன்றாக ஞாபகம் இருக்கிறது. வெளியில் சென்று வீடு திரும்பத்  தாமதமானால் சிவாஅம்மா மாதிரி தவிக்கமாட்டாள். தெருவுக்கும் வாசலுக்கும் அல்லாடிக்கொண்டு, வருவோர் போவோரிடமெல்லாம் விசாரித்துக்கொண்டிருக்கும் பேதை அல்ல. சின்ன வயதில் நடந்தது. எங்கள் வீட்டில் நிறைய பேர் தெருப்பொம்பளைங்க கூடி பேசிக்கிட்டிருந்தாங்க. சின்னப் பசங்க விளையாடறதும், ஓடிப்போய் அம்மா மடியில் படுத்துக்கிறதுமா இருந்தாங்க. எனக்கும் திடீரென்று ஆசை வந்து எங்கம்மா மடியில் போய் படுத்தேன். சுளீரென்று முதுகில் விழுந்தது. இது என்னா புதுப் பழக்கம்என்று திட்டினாள்.  
      குளித்துக்கொண்டிருக்கும்போது, தகரக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ‘ டேய். முதுகு தேச்சி விடட்டுமா? என்று வெளியிலிருந்து கேட்டது அம்மாவின் குரல்....என்று கெட்ட வார்த்தை மனசுக்குள் ஆத்திரமும், அருவருப்பும் ஓங்கரித்துக்கொண்டு  வாந்திபோல் வந்தது.  ‘ஒன்னும் வேணாம் என கடுகடுப்பாகச் சொன்னேன். ச்சீ. எப்படி இவளால் இந்தமாதிரில்லாம் சட்டென மாறிக்கொள்ள முடிகிறது. நினைவு தெரிந்த நாளிலிருந்து என் துணிகளை என்னையேதான் துவைத்துக்கொள்ளவைத்தாள். தம்பிக்கும் இதே நிலைதான். எத்தனை  குளிர்காலத்திலும் சுடுதண்ணி கிடைக்காது.எங்களை அனுப்பிவிட்டு இவள் மட்டும் போட்டுக் குளிப்பாள்.  நினைவு தெரிந்த வயதில்கூட ஒரு நாளும் அவள் என்னையோ, என் தம்பி தங்கச்சியையோ குளிப்பாட்டினதோ, முதுகுத் தேய்த்து விட்டதோ கிடையாது. இன்னிக்கு இப்படி கூசாமல் எப்படி கேட்கிறாள்!

    துவட்டிக்கொள்ள வைத்திருந்த துண்டு உப்புக்காகிதம்போல் காய்ந்து, கிழிந்து, சொரசொரவென்றிருந்தது.
‘ அந்தப் புதுத் துண்டு எங்க? பொட்டியில போட்டு பூட்டி வச்சிக்கினியா?
ஏண்டா கத்துற. இதோ வர்றேன் இருபொட்டியை சாவிபோட்டு திறந்து  எடுத்த பூத்துவாலை துண்டு ஓரிரண்டு சலவை கண்டிருக்கும்.
‘ நாளைக்கு வேணுமின்னு யோசிக்கிறதுல தப்பில்ல.ஆனா, அதுக்காக  இன்னிக்கு வயித்துல ஈரத்துணி போட்டுக்கினு பட்டினியா தூங்கக்கூடாதுகத்தினேன். ‘ போனவாட்டி வந்தப்பவே சொன்னேன்ல. இந்தத் துண்டையே எடுத்து யூஸ் பண்ணுங்கன்னு. கம்பெனியிலதான் வருசா வருசம் குடுப்பாங்கன்னு சொன்னேன்ல.

         தம்பி வேலைக்கு போய்விட்டிருந்தான்.காலையிலேயே எனக்குப் பிடிக்கும் என்பதற்காக தேங்காய் சோறு தயாராகிக் கொண்டிருந்தது. மதிய சாப்பாட்டுக்கான சாம்பார், ரசம், கூட்டு, பொறியல் எல்லாம் மும்முரமாக தயாராகிக்கொண்டு இருந்தது. சமையலில் உதவிக்கு தங்கை. இதையெல்லாம் பார்க்கும்போதே எரிச்சல்தான் வந்தது. ரெண்டு வருஷம் கவர்மெண்ட் ஐடிஐ படிக்கும்போது எத்தனை நாள் நான் எழுந்து சமைச்சு எடுத்திட்டுப் போயிருப்பேன். நீ அப்படியே பாறாங்கல்லு மாதிரி படுத்துக்கிட்டிருப்பியே. சோத்தை வடிச்சி,வெறும் புளிக்கரைசலை தாளிச்சு எடுத்துக்கிட்டு அதையே காலையில சாப்பிட்டுட்டு, மதியத்துக்கும் எடுத்துக்கிட்டு 8 கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சிருப்பேன். வெறும் சோறும் ,அதுக்கூட இல்லாமயும் எத்தன நாள் போயிருப்பேன்? வெளியூர்ல இருந்து பஸ் புடிச்சி, காலங்காத்தாலயே கிளம்பி வர்ற பசங்கள்லாம் விதவிதமா சாப்பாடு எடுத்துக்கினு வருவானுங்க. அவனுங்க சாப்பாட்டை நம்பியே எத்தனை நாள் போயிருக்கேன். அவனுங்க சாப்பாட்டைப் பாக்கும்போதெல்லாம் அவனுங்க அம்மாங்கள நினச்சா சந்தோசமாவும், ஏக்கமாவும் இருக்கும். இந்த மாதிரி ஒரு அம்மா நமக்கு ஏன் கிடைக்கலேன்னு இருக்கும். இன்னிக்கு மட்டும் இந்தப் பாசம் எங்கிருந்து வந்துடுச்சி உனக்கு. நான் கேட்கவில்லை. கேட்டால் இருக்கிற அமைப்பும் குலைந்துவிடும். என் தங்கச்சிக்கு ஒரு கல்யாணம், எனக்கு ஒரு கல்யாணம் ஆகிற வரையிலுமாவது பொறுத்துப்போய்த்தான் ஆகவேண்டும். ஏற்கனவே அப்பன் இல்லாத வீடுன்னு யோசிக்கிறாங்க. அப்பன் உயிரோடதான் இருக்கிறான். ஆனா, அந்தாளு அவரோட அம்மா வீட்டோட இருக்கிறான்னா என்ன அர்த்தம்? அந்தமாதிரி வீட்டுக்கெல்லாம் நம்ம பொண்ணைக் குடுக்கமுடியாது என்று நான் பெண் பார்த்திருந்த வீட்டில் சொல்லிவிட்டிருந்தனர். இவளிடம் சமாளிக்க முடியாமல் ஓடிப்போன கோழை, சோம்பேறி அவன் என்பதை எப்படி ஊருக்கெல்லாம் சொல்லிப் புரியவைக்கமுடியும். அவரவர் நினைத்துக்கொள்வதே அவர்களுக்கு.

      காலை உணவு சாப்பிட்டு முடித்து வெளியில் கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தபோது தங்கை பழைய சோறு தண்ணீர் விட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
அதான் வடிச்ச சோறு இருக்குதுல்ல. எதுக்கு பழைய சோத்தப் போட்ட?
அம்மாவை பார்த்து கத்தினேன். ‘இல்லண்ணா. நாந்தான் கேட்டு சாப்பிடறேன்.என்றாள் தங்கை. எனக்குத் தெரியும். ஆனால், பேசி பயனில்லை. தினம் இந்தப் பெண் இதைத்தான் சாப்பிடுவாள். நானும் சாப்பிட்டவன்தானே. மீதி ஆகிற மாதிரி ஏன் வடிக்கிறீங்க.அளவா சமைச்சுட்டு, காலையில எழுந்து சமைச்சு சூடா சாப்பிடலாம் இல்ல? எத்தனையோ முறை கேட்டிருப்பேன். ஆனால் மாற்றமே வந்ததில்லை.
‘ உன் சட்டையிலருந்து காலையில பால் வாங்கிறதுக்கு காசு எடுத்தேண்டா.
நான் தூங்கி எழுவதற்கு முன்பே சட்டைப்பை ஆராயப்பட்டுவிடும் என்பது நான் அறிந்ததே.
டேய் எனக்குக் குடுக்கிற காச குடுத்துட்டுப் போடா. நீ நாளைக்கு ஊருக்கு போகும்போது, உன் பிரெண்டுகளுக்கெல்லாம் செலவு பண்ணது போக மீதிய குடுப்பே.இடக்காக, வெறுப்பேற்றும் தொனியில் ஒலித்தது அவள் குரல்.
‘நா ஒன்னும் அவனுங்களுக்கு அழிச்சிடல.அவனுங்கதான் எனக்கு செலவு பண்ணுறானுங்க.
‘டேய். இன்னிக்கு பொண்ணு வூட்டுல வரச் சொல்லியிருக்கிறாங்கடா. எங்க போற நீ?. எங்க போனாலும்  சீக்கிரம் வந்துடு. கேட்டும் கேட்காதவனைப்போல், அமைதியாக வாசற்படி இறங்கி போய்க்கொண்டேயிருந்தேன்.

மதிய சாப்பாடு சாம்பார்,ரசம், பொரியல், கூட்டு என்று இருந்ததைப் பார்த்தபோது ஏனோ வெறுப்பாகத்தானிருந்தது. ‘ டேய்.. இன்னிக்கு ரெண்டு வீட்டுல பொண்ணு பாக்க வர்றம்னு சொல்லி வச்சிருக்கேண்டா. மதியம் வரோம்னு சொல்லிடலாமா.’ 
நான் எத்தனவாட்டி சொல்லிருக்கிறன். வயசுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்குது.அதுக்கு மொதல்ல முடிச்சுட்டு, அப்புறம் பாக்கலாம்னு.தங்கை சற்று தொலைவில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். தம்பிக்கும் பிறகு பிறந்தவள்தான் தங்கை. கடைக்குட்டி. குட்டி என்றுதான்  கூப்பிடுவோம்.
‘அவளுக்கும் பாத்துக்கிட்டுத்தாண்டா இருக்கிறேன். மொதல்ல யாருக்கு முடியுதோ அவங்களுக்கு செஞ்சுடலாம். ரெண்டு பேர் வந்துட்டுக்கூட போயிட்டானுங்க. இவளுக்குப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாடா. டீ மாஸ்டர் வேலை செய்றவன் வேணாவாம்.என்றாள் குத்தலான தொனியில்.
என்னது. டீ மாஸ்டரா! ஏன் ஒனக்கு வேற மாப்பிளயே கெடைக்கலயா? பன்னண்டாவது படிச்ச பொண்ணுக்கு டீ மாஸ்டர்தான் கிடைச்சானா?இன்னொருத்தன் என்ன பண்றானாம்? ‘
சித்தாளு வேலைடா
இதோபாரு.டீ மாஸ்டரையோ, சித்தாளையோ நான் கொறை சொல்லல. ஆனா, அவ்வளோதானா நம்ம லெவலு. இன்னும் கொஞ்சம் நல்லா பார்க்க வேண்டியதுதான. வாத்தியார்.. இந்த மாதிரி
‘அவனுங்கள்லாம் அதிகமா கேப்பானுங்கல்ல
‘ஆமா.கேப்பானுங்கதான். நீ கேக்கல?. என்னவோ உன் புள்ளை இஞ்சினியர் வேலை செய்ற மாதிரி, 50 பவுனு, 60 பவுனுன்னு வீடு வீடா பெருமையடிச்சுக்கினு, பேரம் பேசிக்கிட்டு வர இல்ல.

‘சரி.இன்னிக்கு வரன்னு சொல்லிட்டனே. அவங்களுக்கு என்னா பதில் சொல்றது?
‘நாந்தான் சொல்லியிருகிறேனுல்ல. இப்படி நீயா யாருக்கும் வாக்குறுதி குடுக்காதன்னு. சொல்லிட்டேன் அது இதுன்னு.. ஒரே நாள்ல ரெண்டு வீட்டுல போய் பாக்கணும்கிற. ஏன் அப்படி? ஒன்னொன்னா பாக்கவேண்டியதுதானே. பொண்ணு பாக்க போறதுக்கு முன்னால போட்டோ வாங்கு. என் போட்டோவையும் அவங்களுக்குக் குடுன்னும் ஏற்கனவே சொல்லியிருக்கன். போய் பார்த்துட்டு பொண்ணு புடிக்கலன்னா, புடிக்கிலன்னு சொல்றது நல்லாவாயிருக்குது.அந்தப் பாவம் வேற சேரணுமா

‘யாரும் போட்டோல்லாம் குடுக்கமாட்டேங்கறாங்கடா. வந்து வீட்டுலயே நேரிலயே பாருங்கன்னு சொல்றாங்கடா.புடிக்கலன்னா புடிக்கலன்னு சொல்றதுக்கு என்னா இருக்குது? பெண்ணுக்கு எதிரி பெண்தான் என்று சொல்கிறார்களே, அது சரிதான்.

             பெண் பார்க்கக் கிளம்பும்போது வாசலில் உட்கார்ந்திருந்த தங்கையை கடந்து செல்வது ரணமாக இருந்தது. டெய்லர் குட்டி அண்ணன் கடையில் உட்கார்ந்துகொண்டிருந்தோம். குட்டி அண்ணன்தான் பெண் வீட்டில் போய் தகவல் சொல்லிவிட்டு, என்னையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு போனார். மாடியில் வீடு. கீழே முழுக்க நிறைய கடைகள்.வாடகைக்கு விட்டுவிட்டு மேலே குடியிருந்தார்கள். எனக்கு இந்தக் குடும்பத்தை தெரியும். எங்களுடைய இன்னொரு வீடு இருக்கும் தெருதான் இது. சின்ன வயசுல இந்த ஏரியாவுல இருக்கும்போது  பார்த்திருக்கிறேன். அந்தப் பெண்ணைக்கூட சின்ன வயசுல பார்த்திருக்கேன். அழகாயிருக்கும். ஆனா, கண்டிப்பாக ஒத்தே வராது. செல்வாக்கான குடும்பம். பொண்ணோட அப்பா புல்லட் வச்சிருப்பாரு. நல்ல வேலையில இருக்கிறவரு. சத்யராஜ் மாதிரியே இருப்பாரு. உயரம், நிறம் , மிடுக்கு எல்லாம். பெரிய குடும்பம். எல்லாரும் நல்லா வசதியானவங்க. அவரோட சின்னத் தம்பி காலேஜ்ல படிக்கும்போதே எலக்‌ஷன்ல ஜெயிச்சி, சேர்மனாகி, ஊரே அமர்க்களப்படுற அளவுக்கு ஊர்வலம்  நடத்துனத சின்னப்ப  நான் வேடிக்கை மட்டும் தான் பாக்கமுடிஞ்சது.இன்னொரு தம்பி கட்டப்பஞ்சாயத்துல ஊர்ல பெரிய ஆளு. நகராட்சியில வைஸ் சேர்மனா இருந்தவரு. கட்சியில ஊர்லயே பெரிய ஆளு.
ஏந்தான் இவ இப்படியெல்லாம் பேராசைப்பட்டு, இப்படி அசிங்கப்பட வைக்கிறாளோ. கூச்சமாக பின் தொடர்ந்தேன். சொல்லிட்டேன் என்கிறாள். ஆனால்,பிறகுதான் தெரிந்தது. உண்மையில் இவள் வலிய போய் பேசியிருக்கிறாள். அதுவும் குட்டி அண்ணன் மூலம் இப்போதுதானாம். எனக்குத் தெரியாதவாறு என்னை வைத்துக்கொண்டே நடந்த  நாடகம் இதெல்லாம். பெண்ணை ஏதோ சம்பிரதாயத்துக்கு கேஷுவல் உடையிலேயே வரவைத்திருந்தார்கள். ரொம்ப சின்னப்பெண்.அம்மா மேல் ஆத்திரமாக இருந்தது.
கீழே அவ்ளோ கடைங்க இருக்குதே.இதோ இந்தப் படிக்கட்டு தாண்டி யாரும் மேல வரமாட்டாங்கக்கா. இப்போதான் நீங்கதான் வந்துருக்கிறீங்க. பொண்ணு ரொம்ப சின்னப்பொண்ணு.படிக்கிறா.இப்ப கல்யாணம் பண்ற ஐடியால்லாம் இல்லக்கா
செருப்பால் அடிபட்டதுபோல் இருந்தது எனக்கு.

     போதாக்குறைக்கு இன்னொரு வீடு. இப்போது பார்த்த தெருவிற்கு அடுத்த தெருவிலேயே. ஒருவர் வீட்டிற்கு வந்துபோனது, இன்னொருவர் வீட்டிற்கு தெரியும்போது, அவர்களே கூடத்தான் என்ன நினைப்பார்கள்? லீவுல ஊருக்கு வரும்போதுதானே பாக்க முடியும்.இதுல என்ன தப்பு என்றாள் என்னைப் பெற்றவள்..

இந்தப் பெண்ணையும் நான் சின்ன வயதிலேயே பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட என் வயதேயிருக்கும். சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை. இப்படிச் சொல்லவைத்து விட்டாளே என்று அம்மா மேல் எனக்கு எரிச்சல் வந்தது. அந்தப் பெண் ரொம்ப ஆர்வமாய் பேசியதுவேறு தர்மசங்கடமாய் இருந்தது. அந்தப்பெண்ணின் வீட்டாரிடம் ஏதாவது கேட்டால்கூட இந்தப் பெண்ணே எளிதாக்குவதுபோல் வலியவந்து பதில் சொல்லிக்கொண்டிருந்தது.

           வீட்டிற்கு திரும்பியதும் கத்த ஆரம்பித்தேன் ‘இதோ பாரு. இதுமாதிரி இனிமேல் செஞ்சேன்னா நான் சும்மா இருக்கமாட்டேன். அசிங்கப்பட வைக்கிறதே உனக்கு வேலையாப்போச்சி. நீ மட்டும் ஏன் இப்புடி இருக்கிற?.
இதுதான் பெரிய கேள்வி. ‘நீ மட்டும் ஏன் இப்புடி இருக்கிற?

        தோ பாருடா. உன் தங்கச்சிக் கிட்ட என்னைப்பத்தி ஏத்திவிட்டுட்டு போயிடற. அவ என்னை மதிக்கிறதேயில்ல. எப்பவும் பக்கத்து வீட்டுல புதுசா கல்யாணமாயி வந்துருக்குற சுந்தரி பொண்ணு வீட்டுலயே உட்காந்திருக்கா. வீட்டுல ஒரு வேலை செய்றதில்ல..சொல்லி வச்சுட்டுப்போ

‘ இல்லண்ணா. நாந்தான் வேலையெல்லாம் செய்வேன். அம்மாதான் எதாவது குறை சொல்லிக்கினே, திட்டிக்கினே இருக்கும். அடிச்சாக்கூட வாங்கிக்கலாண்ணா.அசிங்கம் அசிங்கமா, கெட்டக் கெட்ட வார்த்தையில திட்டிக்கிட்டேயிருப்பாங்கண்ணா.அதனாலதான்னா நான் சுந்தரி வீட்டுக்குப்போய் உட்கார்ந்திட்டிருப்பேன். இதோ இன்னிக்கி நீ வந்திருக்கங்கிறதால காலையிலருந்து அதுவே வேலை செஞ்சு ட்ராமா பண்ணுது.  நான் போய் பாத்திரம் துலக்கினேன்.வேணுமின்னே  கொறை கண்டுபிடிச்சு திட்டி, என்னை வேலை எதுவும் செய்யவேணான்னு சொல்லிட்டாங்க. ரெண்டு வாரத்துக்கு முன்னால இப்படித்தான், அசிங்கம் அசிங்கமா திட்டிக்கினு இருந்தாங்க. அடிச்சாங்க.தண்ட சோறு, தண்ட சோறுன்னு திட்டறதத்தான் என்னால தாங்கிக்கவே முடியல. எனக்கு என்ன வேலைன்னா தெரியும்? நான் எங்க போய் சம்பாதிச்சிட்டு வந்து குடுக்கறது. அப்படியும்  பக்கத்துத் தெருவுல இருக்கிற எலிமெண்டரி ஸ்கூலுக்கு கொஞ்ச நாள் வேலைக்குப் போய்க்கிட்டுத்தான் இருந்தேன். லீவுல போன டீச்சர், வேலைக்கு வந்ததுமே நிறுத்திட்டாங்க.
வீட்டுக்குள்ள நுழையவே முடியல. சாப்டவும் வுடல. நான் எங்கே போறதுன்னே தெரியாம, நம்ம பழைய வீட்டுல குடித்தனம் இருக்காங்களே பானு அக்கா. அவங்க வீட்டுல போய் ரெண்டு நாள் இருந்தேன்.  நான் தனியாக இருக்கும்போது என்னிடம் வந்து சொன்னாள், தங்கை.
அவ்வளவு தூரம் போகிவிட்டதா விசயம்!
‘உங்கம்மாவப்பத்தி எனக்கும் தெரியும். ஆனா வேற வழியில்ல. அவங்க சீண்டுனாக்கூட கொஞ்சம் பொறுத்துப்போ.ஏன்னா கஷ்டப்படப்போறது நீதான். அவங்க இல்ல.

தெரியும். நானும் இதையெல்லாம் கடந்து வந்தவன்தான். வீட்டிற்குள் நுழையவே முடியாது. ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஊரைவிட்டே ஓடியவன்தானே நான். திட்டிக்கொண்டேயிருப்பாள். அடிப்பாள்.எத்தனையோ இரவுகள்கூட வீட்டிற்கு வராமல் நண்பர்களின் வீட்டில், பெயிண்டர் கடையில், ஏன் கோயில்களில்கூட சில நாட்கள் படுத்துத் தூங்கியிருக்கிறேன். ஒருமுறை மணலில் படுத்து ஊதுகாமாலை வந்துவிட்டது.அவள் திட்டுவதைவிட இதுவொன்றும் தொந்தரவில்லை. நானாவது பரவாயில்லை.வயசுக்கு வந்த பெண் எங்கே போவாள்? எப்படியிருப்பாள்? இவர்களுக்கு செய்துவைக்கும் சமரசம் சில நாட்களுக்குக் கூட தாங்காது. அம்மாதான் ஆரம்பித்து வைப்பாள். பேசாமல் நம்மோடு மெட்ராசுக்குக் கூட்டிப்போயிடலாமா. இல்லை அது சரியாக வராது. அவளுக்கு கல்யாணம் செய்யும் வரை மாப்பிள்ளை வீட்டார் வந்துபோகவெல்லாம் இங்கிருப்பதுதான் சரி.அதுவுமில்லாமல்,  நான் வேலைக்குப்போய்விடும் சமயங்களில் வேறு யார் துணையுமில்லாமல் ரூமில் தனியாக எப்படி இருப்பது. என்னாலும் சுதந்திரமாக இருக்கமுடியாது. ச்சே. புத்தி ஏன் இப்படியெல்லாம் போகிறது. தங்கையின் பிரச்னையைவிடவா என் ஜாலி?

ஊருக்குப் புறப்படும்போது பணத்தைக் கொடுத்தேன்.ட்ரெயினிங் பீரியட் என்பதால் பெரிய அளவில் எல்லாம் சம்பளம் கிடையாது. ஆனால் என்னளவில் கணிசமான பணம். இதற்காகத்தானே எல்லாம்  என்று வெறுப்போடு மனதில் சொல்லிக்கொண்டேன். இன்னும் வேண்டும் என்றாள், வழக்கம்போல. நானும் வழக்கம்போல எதுவுமே பேசாமல் பையை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். போய்வருகிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் பழக்கமேயில்லை.
பஸ் பிடிக்க மீண்டும் சர்ச் வாசலிலேயே சைக்கிளில் கூட்டிவந்து விட்டுவிட்டுப்போனான் சரவணன்.    ‘தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும்  நிலை நிற்காதுஎன்கிற வேதாகம வசனமும் ‘ மரமானது அதின் கனியினால் அறியப்படும்என்கிற வசனமும் சர்ச் காம்பவுண்டு சுவரில் படித்துக்கொண்டு பேருந்துக்காக காத்து நின்றுகொண்டிருந்தேன்.

(என்னை ஈன்ற சிறந்த தீயாளுக்கு)


2 comments:

manjoorraja said...

ஒவ்வொரு அம்மாவும் அவர்களது குழந்தைகளுக்கு கடவுளாகவே தெரிவர் ஒரு சிலரை தவிர.

இங்கு நீங்கள் எழுதியிருக்கும் கதையில் மிகவும் வித்தியாசமான அம்மாவை காட்டியிருக்கிறீர்கள். இதுபோன்ற அம்மாக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சிலர் இன்னும் மோசமாக இருக்கின்றனர்.

நல்லதொரு சிறுகதை.

பாராட்டுகள்.

மேலும் நன்றாக எழுதி வெற்றிப் பெற வாழ்த்துகள்.

ச.முத்துவேல் said...

மஞ்சூர் ராஜா

/ இதுபோன்ற அம்மாக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சிலர் இன்னும் மோசமாக இருக்கின்றனர்./

ஆறுதலாய் இருக்கிறது. வாசிப்புக்கும், கருத்துக்களுக்கு நன்றி