Thursday, September 30, 2021

அழிந்த படங்கள் : அழியாத தடங்கள் #1

 

 


இரு சகோதர்கள் (1936)

அழிந்து போன படங்களை நினைத்தால் எனக்கேனோ அளவுக்கதிகமாகவே வருத்தம் ஏற்படுகிறது. இது சரியா,இல்லையா என்று தெரியவில்லை. தற்போதும் ஆவணங்கள் தனியுடைமை மனப்பான்மையால் வீணாகி அழிவது இன்னும் தவிப்பை உண்டாக்குகிறது.

இன்று கிடைக்காத சில படங்களை,கிடைக்கும் ஆவணங்களை வைத்து படம் பார்ப்பதற்கு நிகரான ஒரு வாய்ப்பை அளிக்க விரும்பி இப்படியொரு முயற்சி.வரவேற்பைப் பொறுத்து தொடர எண்ணம்.



கே பி கேசவன்

இவருதான் இரு சகோதரர்கள் படத்தோட ஹீரோ.இளைய சகோதரர்தான் என்றாலும் ஹீரோ என்பதால் முதலில் இவரைச் சொல்லிவிட்டுத்தான் பிறகு அண்ணனைப் பார்க்கப் போகிறோம். இந்த ஹீரோ எப்படிப்பட்டவரென்றால், ஜாலியானவர்.படிக்காதவர்.குடும்பத்தில் அக்கறையில்லாதவர். வேலையெதுவும் செய்யாதவர். ஆனால், நன்றாகப் பாடக்கூடியவர். நாடகங்களில் ஆர்வத்துடன்  நடிப்பவர்.

இவருடைய மனைவி மிகவும் நல்லவர்.பொறுமைசாலி.இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள்.ஒரு பெண்.ஒரு பையன்.



சரி, இப்போது அண்ணனைப் பார்க்கலாம்.

கே கே பெருமாள்


இவர்தான் அவர். அறிவுள்ளவர். வேலையில் உள்ளவர். ஆனால், மனைவி சொல்வதை அப்படியே கேட்பவர். சரி, இவர் மனைவி யார்? அவர் எப்படி?


S.N.விஜயலக்‌ஷ்மி

 

இவர்தான் மூத்தவரின் மனைவி. பொறாமையும், அகம்பாவமும் பிடித்தவர். நம்முடைய ஹீரோவைப் பற்றியும், அவருடைய குடும்பத்தாரையும் பற்றி வெறுப்பு வரும் வகையில் எப்போதும் தன் கணவரிடம் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டேயிருப்பவர். ஹீரோவின் குழந்தைகளையும் கொடுமைப்படுத்துபவர். இந்தம்மாவுக்கு ஒரு தம்பி.அவர் வேற எப்படியிருப்பார்? இவர்தான் இந்தப் படத்தோட வில்லன்.

T.S.பாலையா


அண்ணனும், தம்பியும் எப்பவும் ஒன்னாவேயிருக்கணும் அதுதான் நல்லதுன்னு சொல்லிட்டு இவங்க ரெண்டுபேரோட அப்பா, வயசான காலத்திலே போய்ச் சேர்ந்துடறார்.




 நம்ம ஹீரோ ரொம்ப ஆசைப்பட்டு நடிச்சிக்கிட்டிருந்த நாடகக் கம்பெனிக்காக கடன் வாங்கியிருந்தாரு.அந்தக் கடன் தவணை தள்ளிப்போகவே, கடன் கொடுத்த மார்வாடி நேரா வீட்டுக்கு வர்றார்.அங்கேயிருந்த ஹீரோவோட அண்ணன்கிட்ட சொல்லிட்டுப் போயிடறாரு. ஏற்கனவே வெறுப்பாயிருந்த அண்ணன் இன்னும் கடுப்பாகி தம்பிக்கிட்டே சண்டைபோட்டு வாக்குவாதம் வளர்ந்து கடைசியிலே பாகப் பிரிவினை வரைக்கும் ஆகிடுச்சு.ஒரே வீட்டிலயிருந்தாலும் கொடுமைகள் அதிகமாகிடுச்சு.

ராதாபாய்


 

 

இவங்கதான், ஹீரோ குடும்பத்துக்கு உதவியா வேலைக்காரியா அந்த வீட்டுக்கு வர்றாங்க. சிக்கனமா செலவு பண்ணிக்கிட்டு, ஆறுதல் சொல்லிக்கிட்டு தன்னால் ஆன உதவிகளை செய்றாங்க. இவங்க ஆலோசனைப்படிதான், ஹீரோ சென்னைக்கு வேலை தேடிப் போறார்.

 

கே பி கேசவன்

சென்னையில கொண்டுபோன பறிகொடுத்திட்டு ஆண்டியாத் திரியறாரு.அப்போ அங்கே நடக்கிற ஒரு திருட்டுல பழி ஹீரோ மேல வந்திடுது.  நல்லா அடிச்சுடறாங்க. அப்புறமா உண்மை தெரியுது.திருட்டு கொடுத்தவர் நம்ம ஹீரோ மேல மனமிரங்குறாரு. அவர் பெரிய வேலையில இருக்கிறவரு. ஹீரோதான் நல்லாப் பாடுவாரே. உடனே, ரேடியோவில பாடுறதுக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்தாரு.அவ்வளவுதான் ஹீரோ எங்கியோ பொயிடறாரு. அதுமட்டுமில்லாம நாடகத்துலயும் சேர்ந்து நல்லா பேரும் பணமும் சம்பாதிக்கிறாரு. தவிச்சுக்கிட்டிருக்கிற மனைவி மக்களுக்கும் பணம் அனுப்பறாரு.



 

ஆனா, அப்படி வர்ற பணத்தையெல்லாம் அண்ணன் மனைவி ஏமாத்தி வாங்கிக்கிடறாங்க.வில்லன்தான் ஐடியா கொடுத்தவரு.

 


இப்படியே தொடர்ந்து நடந்துக் கிட்டிருக்குது. அப்போதான், அந்த ஊர் ப்ளேபாய் ஜமீன்தார், நம்ம ஹீரோ மனைவிய ஒரு நாள் பாக்கிறார். அடையத் துடிக்கிறார். இதுக்கு வில்லன் ஒத்துழைக்கிறார். வில்லன்,தன்னுடைய மனைவிதான்னு சொல்லி ஒரு நல்ல தொகை வாங்க்கிட்டு வித்துடறாரு.

ஒரு நாள், கதா நாயகிய தந்திரமா மயக்கம் கொடுத்து ஜமீன் வீட்டுல கொண்டுபோய் விட்டுடறாரு.அதோட விடாம, நம்ம ஹீரோவுக்கும் தந்தி கொடுத்து மனைவி ஓடிப் போயிட்டான்னு நம்ப வச்சுடறார்.அக்காவும் தம்பியுமா சேர்ந்து ஊரையே நம்ப வச்சுடறாங்க.

 

 

மனைவி இப்படி பண்ணிட்டாளேன்னு அவமானமடைந்த ஹீரோ தற்கொலை பண்ணிக்க முயற்சி செய்யும்போது ஒரு சன்னியாசி வந்து காப்பாத்துறாரு.அப்புறம்,ரெண்டு பேருமா சேர்ந்து உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க ஊருக்கு வர்றாங்க.



இதுக்கிடையிலே, ஏற்கனவே ஜமீன் வீட்டோடயிருந்த தாசி வெளியே போய் வேலைக்காரியிடம் சொல்லிவிடுகிறார்.

கே. நாகராஜன் ( ஜமீன்தார்)



வேலைக்காரி போலீசிடம் தெரிவித்து கதாநாயகியை மீட்கிறார். ஜமீந்தாரும், வில்லனும் தண்டிக்கப்படுகிறார்கள்.



 

ஹீரோவின் அண்ணனுக்கு ஒரு சூழலால் வேலை போகிறது.அவரின் மனைவியையும் ஹீரோ குடும்பம் மன்னித்துவிடுகிறது. அனைவரும் உண்மைகளை அறிந்து ஒன்று சேர்கின்றனர்.

 


 

புராண, இதிகாச நாடகங்களை அப்படியே ஒரே கோணத்தில் படம்பிடித்து திரையிடப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், புதுமையான சமூகக் கதைகளை புரியும்படியும் ரசிக்கும்படியும் எடுப்பது ஒரு அறைகூவலாகவே இருந்தது. ஹாலிவு இஅயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் வந்த இரு சகோதரர்கள் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வழியமைத்த படங்களில் ஒன்றாகும்.







50 பாடல்கள் என்றிருந்த நாட்களில், 14 பாடல்கள் மட்டுமே அவையும் சிறிய பாடல்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. கதை வசனம் பாடல்கள் ச.து.சுப்ரமண்ய யோகி என்று



S.N.கண்ணாமணி



S.N.விஜயலக்‌ஷ்மி



M.கண்ணன்

 

 

 

 

Sunday, August 23, 2020

இராசோவின் கதைமகளிர்

 


                          இராசோவின் 70க்கும் மேலான சிறுகதைகளைப் படித்து முடித்தபிறகு, (இராசேந்திர சோழன் கதைகள்,தமிழினி பதிப்பகம்) எனக்கு நினைவில் மேலோங்கி நிற்பவை அவருடைய ’இல்லறவியல்’ கதைகளும், அவற்றில் வரும் பொறையுடைய பெண்களுமேதான். ஆண்பெண் உறவின் சிக்கல், நெருக்கம் என்பது என்றென்றைக்குமானது. எல்லாத் தேசங்களுக்குமானது.

முதல் தோற்றம்


                         ’இராசோ பாலியல் கதைகள் எழுதியவர்,பெண்களின் காமம் பற்றி எழுதியவர்’ என்ற சில அறிமுகங்களோடு படிக்கத் துவங்கியவன் நான். அந்த முன்தீர்மானத்தோடு படித்துக் கொண்டே போனபோது, ஒரு கட்டத்தில் ’என்ன இவர்? பெண்களை இப்படிச் சித்தரிக்கிறார்? பெண்கள் ஆணிடம் கிடைக்கும் உடல்சுகம் என்ற  ஒன்றுக்கே முக்கியத்துவம் தருபவர்களா?, அந்த ஒன்றுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறவர்களா?’’ என்ற மேலோட்டமான எண்ணம் எழுந்தது. ’இடம்’ கதையில் வரும் கல்லூரிப் பெண், வாயாடி, திமிர் பிடித்தவள்...தங்கள் வீட்டில் குடியிருக்கும் மெக்கானிக் இளைஞனை அலட்சியப்படுத்துபவள்...ஒரு நாள் அந்த மெக்கானிக் இளைஞன் அவளை வன்புணர்வு செய்தவுடன் அவள் அப்படியே அடங்கிப் போகிறாள். அவனிடம் திமிர் காட்டுவதில்லை, வம்பு வைத்துக் கொள்வதில்லை.மாறாக, அடங்கி, ஒதுங்கிப் போகிறாள். ‘’ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே...ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே’’ என்ற சினிமாப் பாடல் வரி வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. கமலஹாசன் சாரங்கபாணியாகி காலைத் தூக்கி வைத்து அழுத்தமாய் பாடுவதாகவும்  மனதில் ஆடியது. ’அதுபோலல்லவா இராசோவும் எழுதுகிறார்?!’. ‘இழை’ கதையில் வார்த்தைக்கு வார்த்தை கணவனிடம் வம்பிழுத்து இழுபறி ஆட்டம் நடத்திக் கொண்டிருந்தாலும்,எல்லா வேலைகளையும் போலவே  ’அந்த’ வேலையையும் இயல்பாய் நடத்துகிறாள் அவள்.  ’கோணல் வடிவங்கள்’ கதையில் கள்ளக் காதலனிடம் அவ்வளவு அடிபட்டாலும் பொறுத்துப் போகிறாள். ’புற்றில் உறையும் பாம்புகள்’ கதையில் வரும் வனமயில்,எதிர்வீட்டுக்காரன் தன்னைக் கண்காணிப்பதாக சீற்றம் காட்டுபவளாகவும், உண்மையில் அவள்தான் அவனை தொடர்ந்து கண்காணிக்கிறாள், தன்னைக் கண்காணிப்பதற்கும் வாய்ப்பளிக்கிறாள். தன்னுடைய சினேகிதியைப் போல தன்னால் எல்லை மீற முடியவில்லையே என்று உள்ளூரப் பொறுமுகிறாள். ’ஊனம்’கதையில் வரும் சாந்தா, கணவனை மதிக்காமல் அவனுடைய கெஞ்சல்களுக்கும் கட்டுப்படாமல் ஆண்களோடு பழகி,அவளுடைய கணவனின் தற்கொலைக்கு காரணமாகிறாள்.  ’நாய் வேஷம்’ கதையில் வரும் மனைவி, கணவனுக்கு தெரிந்தேயிருப்பதுபோல் ஊருக்கும் தெரிந்தே சோரம் போகிறாள். ’சூழல்’ கதையில் வரும் பெண் தொடர்ந்து கள்ள உறவு வைத்துக்கொள்கிறாள். தோது கதையில் வரும் பொன்னம்மாவின் மகள் படிக்கும் வயதிலேயே கர்ப்பம் தரித்து நிற்கிறாள். இவ்வாறாக, இராசோவின் கதைமகளிர் காமாந்தகிகளாகவோ, அல்லது காமத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள்.மனத்தில் காமம் உள்ளவர்கள், செயலில் காமம் உள்ளவர்கள், காமத்தில் ஒழுக்கம் மீறுபவர்கள்...இவ்வாறு வாசித்துக் கொண்டே போகும்போது ’ருசிப்பு’ கதை வாசிப்பின்போதுதான் எனக்கு ஒரு திறப்பு கிடைத்தது. (ருசிப்பு கதை அதற்கானது அல்ல.எனக்கு அந்தக் கதையின் வாசிப்பின்போதுதான் நேர்ந்தது)

இரண்டாம் தோற்றம்

                உண்மையில்,இராசோ பெண்களை பெருமைப்படுத்தியே, உயர்வாகவே எழுதியிருக்கிறார்.ஆண்-பெண் என்ற இருமையை ஒட்டிக் காட்டி, அந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்துகிறார். அந்த வகையில் ஆண்களை இடித்தும், பெண்களை உயர்த்தியுமே எழுதியிருக்கிறார்.

           அவருக்கு அங்கீகாரம் அளித்த முதல் கதையான ‘எங்கள் தெருவில்’ இடம்பெறும் பவுனாம்பாள் அளிக்கும் சித்திரமே இவருடைய எல்லா பெண் கதாபாத்திரங்களுக்கும் பொருந்துகின்ற ஒரு முன்னோடியாக அமைந்துவிட்டது என பொதுமைப்படுத்தலாம். அதாவது, முதல் பார்வைக்கு எதிர்மறையான தோற்றம் காட்டுவதும், அதன்பிறகே  நல்லவிதமான தோற்றம் புலனாகும்படியும் அமைந்துவிட்ட பெண்கள்.’ரோதனை’ கதையில் வரும் சண்டைக்காரியான, வாயாடிப் பெண்தான் ஒரு கர்ப்பிணியின் வாந்தியைக் கழுவித் துடைத்து கரிசனம் காட்டுகிறாள். ’இழை’ கதையில் வரும் அந்த அவள், ‘’உங்களுக்கென்ன ! வேளாவேளைக்கி பொண்டாட்டியும் சாப்பாடும் இருந்துட்டாப் போதும்’’ என்று அவனைப் புரிந்துகொண்டு, அதற்காகவே அவனுக்குப் பரிமாறுபவள். ’ருசிப்பு’ கதையில் வரும் பெண்ணும் கணவனை அவன் இல்லாதபோது திட்டித் தீர்க்கிறாள்.சன்னதம் கூடிக்கொண்டே போகிறது.ஆனால், அவனைக் கண்டதும் அத்தனையும் வடிந்து போகிறது.

’’ ஐய, த! கைய வச்சிக்கினு சும்மா இரு.பசங்க எதுர்க்க..’’ என்று குழைகிறாள். இரண்டுமே உண்மைதான்.முதல் நிலை அவளுடைய ஆற்றாமை.இரண்டாவது நிலை அனுசரணை.

           தற்செயல் கதையில் வரும் வத்சலாவுக்கு தன்னைவிட அந்தஸ்து குறைந்த செல்வராசு தனக்குக் கணவனாக முடியாது என்று எண்ணி அவனிடம் அவனைப்போல் காதலேதும் இல்லாமல் , காமத்தை ஒரு விளையாட்டாக, நிகழ்த்திக் கொள்கிறாள்.//அவளுக்கு அது என்ன ஏதென்று புரியாத ஒரு பழக்கம்.சின்னக் குழந்தைகள் தின்பண்டத்திற்கு ஆசைப்படுவது மாதிரி.மனசில் எந்தவிதச் சிராய்ப்பும் இல்லை.எப்போதும் போலவே இருக்கிறாள்.அவன் ரொம்பக் கரைந்து போயிருப்பதைக்கூட அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை//.ஆனால், வருங்கால கணவனுக்கு உண்மையாகவும், பொறுப்பாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள்.

                     புற்றிலுறையும் பாம்புகள் கதையின் வனமயில் மனதில் காமவிழைவு இருந்தாலும், ,ஊருக்கும் பேருக்கும்  அஞ்சி வாழ்பவள். ’இடம்’ கதையில் வரும் கல்லூரிப்பெண்ணும், அவளுக்கு நேர்ந்த வன்புணர்வை எளிதாக எடுத்துக் கொள்ளமுடியாதவளாக இருக்கிறாள்.அவளை வன்புணர்வு செய்த மெக்கானிக் இளைஞன், அவளைப் பழி தீர்த்துவிட்டதாக எண்ணி, அதோடு அந்தச் சம்பவத்தை எளிதாகக் கடந்துவிடுகிறான். அவளால் அப்படி கடக்கமுடியவில்லை.அவள் அந்த ‘உண்மையை’ உள்ளுக்குள் வைத்துக்கொண்டு மனப்போர் நடத்திக் கொண்டிருக்கிறாள். நாய்வேஷம் கதையில் வரும் பெண், ‘இயலாத’ கணவனை மணந்துகொண்டு,   ஈடேற்றுவதாகவே பிழைப்பு நடத்துகிறாள்.’ஊனம்’ கதையின் சாந்தா,கணவனின் தற்கொலைக்குப் பிறகு விபரீதம் உணர்ந்தவளாக இடிந்துபோகிறாள்.

                 ’இடம்’ கதையில் வரும் இன்னொரு பெண் சாந்தா,தன்னிடம் அத்துமீறும் மெக்கானிக் இளைஞனை, பொறுத்துக் கொண்டு, மன்னித்து, தோழமையை தொடர்பவள்.

                    சொல்லப்பட்ட விதத்தில் ‘சூழல்’ கதைதான் சற்று பாலியல் கதைபோல் அமைந்துவிட்டது என்பது என் எண்ணம். என்றாலும், அந்தக் கதை கவனப்படுத்துவது 1.அவள் அந்த இளைஞனிடம் கொள்ளும் கரிசனமும், மற்றும் 2.அவளுடைய கணவன் நடந்த தவறை உணராமலும், 3.நடக்காத தவறுக்காக கொடுமைப்படுத்துவதுமாக நேர்ந்துவிட்ட விசித்திரத்தைச் சொல்லும் உளவியல் கூறுகளையும் சுட்டிக் காட்டுவதுதான்.

                  இராசோவின் கதைமகளிர் ’’எதுவொண்ணும் மனசுல வக்யாதவர்கள்’’. சகிப்புத் தன்மை கொண்டவர்கள். அவர்களுடைய ஆத்திரமும், புலம்பல்களும் அவர்களுக்கு ஒரு வடிகால் மட்டுமே. அவர்களுடைய தொணதொணப்புகளை கேட்பதற்கு ஆட்கள் கூட யாரும் தேவையில்லை. (கடவுளிடம் முறையிடுகிறார்கள் போலும்).  தானாகவே, எதிரில் யாரோ இருப்பதுபோல் கொட்டித் தீர்த்து இளைப்பாறிக் கொள்வார்கள்.

                  ஆண்கள் பெண்களைச் சுரண்டுபவர்களாகவும், பகல்தூக்க சொகுசுக்காரர்களாகவும்,சீட்டாடுபவர்களாகவும், பொய்யர்களாகவும், ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு வேறு நீதி என்ற ஆதிக்க மனம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

செம்பாகம் அன்று பெரிது

                காமத்தைத் தூண்டும் பாலுறவு விவரிப்புக் கதைகளாக அல்லாமல், காமத்தை ஆராயும் உளவியல் நுட்பங்கள் கொண்ட கதைகளே இராசோ எழுதியுள்ளார்

                    காமம் என்பது உயிர்களின் அடிப்படையான, இயற்கையான ஒரு விழைவு, மற்றும் செயல். உயிர்களின் வாழ்வில் காமத்தின் பங்கு பெரிது. எனவே, காமத்தைப் பற்றி பேசுவதோ, கதை எழுதுவதோ, ஆராய்வதோ தவிர்க்கப்பட வேண்டியது அல்ல. அம் மாதிரியான கதைகளை துணிந்து, வெளிப்படையாக எழுதியிருப்பது இராசோவின் துணிச்சலையும்,வெளிப்படைத் தன்மையுமே காட்டுகிறது.   காமம் நோயோ, குற்றமோ அல்ல.அளவில் கூடும்போதும், குறையும்போதும்தான் அது நோயாகவோ, குற்றமாகவோ மாறுகிறது.மனிதன் விலங்குகளினும் பகுத்தறிவால் பண்பட்டவன். அவன் உருவாக்கிய ’உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல்’ மீறிச் செல்வதே குற்றமாகிறது. இந்த உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது,ஒரே புவிக் கோளத்தில், ஒரே காலத்தில், வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மனிதர்களுக்கு வெவ்வேறாக இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஒழுக்கம்,பண்பாடு,சட்டங்கள் போன்றவை  காலத்திற்கு காலம் மாறுவதுமாகவே இருக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும். அதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது ஆணாதிக்கம். இதன் அர்த்தம், கற்பு நிலை என்ற ஒன்றை வலியுறுத்தினால், இருபாலருக்கும் பொதுவாக வைப்பதுதான் நியாயம் என்பதே. நீதிமன்றங்களில் தொடரப்படும் குடும்ப நல வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகும் காலத்தில் தனபாக்கியம் போன்ற பெண்களும் அவள் கணவனைப் போன்ற ஆண்களுமாக எல்லாருமே இருந்துவிட்டால்,  நிறைய சிக்கல்கள் ’ரவ’ நேரத்தில் தீர்ந்துவிடும்.

                 இராசோவின் ஆண்-பெண் கதைகள், தனிமனிதர்களின் வாழ்விலும், சமூகத்திலும் காமத்தின் பங்கு எவ்வாறு, என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது? அவற்றுக்கான கடந்தகால வரலாறு என்ன? வருங்காலத் தீர்வுகள் என்ன? என்பன போன்ற சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கேளிவிக்குட்படுத்தி விசாரணைகளை முன்வைப்பதாகவே அமைந்துள்ளன.

                       இராசோவின் கதைகள் எளிமையாக சொல்லப்பட்டவை என்றாலும், வாசகனின் பங்கேற்பை கோரும் நுட்பங்களும், பல்வேறு சாத்தியங்களையும் கொண்டவை என்பதால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோருபவையும்கூட. அரசியல் இயக்கம், சமூக விமர்சனக் கதைகளென்று சொல்லத் தக்கவையாக மற்ற கதைகளையும் இராசோ எழுதியிருக்கிறார். என்றபோதிலும் ஆண்பெண் உறவு பற்றி எழுதிய கதைகளே அவருக்கு  ஒரு தனித்தன்மையையும், அடையாளத்தையும், புகழையும் ஏற்படுத்திவிட்டிருக்கிறது

                                                  -ச.முத்துவேல்

 

Saturday, August 1, 2020

ஐயன்மீர்...


 

முதன்முதலில்
சார்என்று

அழைக்கப்பட்டபோது
அத்தனை தாழ்ந்துகிடந்த ஒரு ஊரின்
அதனினும்  பள்ளத்தில் கிடந்த
சின்னஞ் சிறியனாயிருந்த  நான்
விண்ணேகிப்  பறந்தேன்.
இப்போது  நினைக்குந்தோறும்
வெட்கச் சிரிப்பாயிருக்கிறது.
என்னை முதன்முதலில்
’சார்’ என்று அழைத்தவரை

மறுமுறை கண்டிராவிடினும்

இப்போதும் நினைவில் திகழும்
அவர் ஒரு
‘’நல்ல சார்’’


Wednesday, June 10, 2020

ல லவ்யூ ந நண்பா !

                கவிதையெனும் சிவதனுசு வேண்டி, காட்டில் ஜடாமுடி தரித்து, உடல் மேல் புற்றுறைய தவம் கிடக்க வேண்டிய தேவை ஜான் சுந்தருக்கு இல்லை வசீகரம்,கவித்துவம்,இசைத்தன்மை இவற்றோடு, கூடுதல் சிறப்பாய் குறும்பும் கலந்த கவிதை மொழி ஜான் சுந்தருடையது. வாழ்வே இசையும் கவிதையுமாய் ஆனவர் என்பதாலோ! நன்கு கைவரப் பெற்றுவிட்ட தொழில் நுட்பமும் சேர்ந்துகொள்வதால் சொல்லிலும் புதிதாய்,சுவையிலும் புதிதாய் கவிதைகளை அன்றாடக் காட்சிகளிலிருந்தே கூட அள்ளிவிட முடிகிறது.கதைகதையாய், பக்கம் பக்கமாய் நீட்டிக்கவல்லவற்றை கவிதைகளில் சிக்கெனப் பிடித்து ருசியாகக் கொடுத்துவிடுகிறார்.

                   
கைமூங்கில் தாங்கும் காட்சியிழந்தவனும் உள்ள எங்கள் அரங்கம்
ருசிக்கும் ஐஸ்கிரீமுக்காக நீங்கள் இன்னும் கொம்பூதுங்கள், ஜான்! இன்னும் ஆயிரஞ்சொல் வேண்டும். எம்மோடு சேர்ந்து, தளிர்க் கரங்களை நீட்டி
தமிழே உங்களை அணைத்துக் கொண்டாகிவிட்டது. இன்னுமின்னும்
ஐந்தாறு மார்புகள் முளைக்கட்டும். உங்கள் ரவிக்கைச் சுகந்தம் போலொன்று
கிடைத்துக்கொண்டேயிருக்கட்டும்.

Friday, June 5, 2020

அடங்கின குரலின் வீரியம்- அசோகமித்திரன்


           அசோகமித்திரனை வாசிக்கும் பலரும் அவருடைய எழுத்தைப் புரிந்துகொள்ள,தன்னுடைய வாசிப்புடன் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ள, தேடுதல் முயற்சிகளை செய்யக்கூடும். நான் செய்தேன். அந்த வகையில் பயன்படும் என்று கருதியே என்னுடைய  குறிப்புகளை பதிவு செய்கிறேன். அசோகமித்திரனை வாசித்தல் என்ற வழிகாட்டி நூல், கருத்தரங்கு,முயற்சிகள் ஆகியவையெல்லாம் ஏற்கனவே  நிகழ்ந்தவை. தனிப்பட்டமுறையில் எனக்கான குறிப்புகள் என்பதால் சுதந்திரம் எடுத்துக் கொண்டு எழுதியுள்ளேன்.


                    அசோகமித்திரனின் சிறுகதைகள் தோராயமாக 80 கதைகள் வரை மட்டுமே படித்துவிட்டு, நான் எழுதும் குறிப்புகள் இவை. பொதுவாக, ஒரு எழுத்தாளரைப் பற்றி தொகுத்துக் கொள்ள இந்த எண்ணிக்கை போதும். ஆனால், அவர் எழுதியவை, கிட்டத்தட்ட 300 சிறு கதைகள் நெருங்குமாம்.  நற்றிணை பதிப்பகம், யுகன் தேர்வில் அமைந்த  42 கதைகள் தொகுப்பான ’’காந்தி’’, நான் முதலில் வாசித்தது. பிறகு, காலச்சுவடு வெளியீடான ஐந்நூறு கோப்பைத் தட்டுகள், அரவிந்தன் தேர்ந்தெடுத்தவை, வாசித்தேன். இவையல்லாமல் இணையத்தில் சிலவற்றை வாசித்தேன். காந்தி தொகுப்பில் அவருடைய புகழ்பெற்ற புலிக்கலைஞன் கூட இடம்பெறவில்லை.அவருடைய மற்ற நல்ல கதைகளை அடையாளப்படுத்த எண்ணி, புகழ்பெற்ற கதைகளை தவிர்த்திருக்கலாம் என்று வாசித்தால், ஏமாற்றமே. ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் நல்ல தேர்வுகள் நிரம்பியது. அசோகமித்திரன் கதைகளின் வகை மாதிரிகளின் சான்றடையாளங்களாக (நன்றி-கவிஞர் சுகுமாரன்) அமைக்கப்பட்ட தேர்வு .
            அசோகமித்திரன் 1950 களில் எழுதத்துவங்கி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இறுதிவரை எழுதிக்கொண்டேயிருந்தவர். அதனால் அவருக்கு சொல்ல நிறைய கதைகள் இருக்கும்தானே! அவருடைய பல கதைகளில் அவர் ஒரு கதாபாத்திரமாக-பெரும்பாலும் கதைசொல்லியாக-  இருப்பதை உறுதியாக சொல்லலாம். நாமே சில கதைகளின் தொடர்ச்சியாக அமைந்த மற்ற கதைகளையும், கதாபாத்திரங்களையும் காணலாம். இது எனக்கு வேறு ஒரு கோணத்தில் அமியை பெருமையாக எண்ண வைத்தது.அமி உலக இலக்கியம் நன்கறிந்தவர்.ஆங்கிலத்திலேயே நேரடியாகவும் வாசித்தவர்,எழுதியவர். அவற்றை தமிழில் போலி செய்யவில்லை என்ற எண்ணத்தை, சுயசரிதத் தன்மை கொண்ட கதைகள் உணர்த்தியது.(விதிவிலக்கும் இருக்கிறது).

        நான் முதலில் வாசித்த பல கதைகளில் சுயசரிதம் போல் இவரே நேரடியாக இருப்பதைக் கண்டு, இவரால் வேறொரு கதாபாத்திரத்திற்குள் கூடுவிட்டு கூடு தாவி எழுதும் வகையான கற்பனை வளம் இல்லாதவரோ என்று யோசித்தேன்.பின்னர் வாசித்த கதைகள் என் ஐயத்தை நீக்கியது.
            உலக இலக்கியம் அறிந்தவர் என்பதாலோ என்னவோ, கதையின் (கடைசி வரிகளில், எதிர்பார்க்க முடியாத)  ’இறுதி திருப்பம்’ என்கிற சிறுகதையின் ஒரு இலக்கணத்தை அறிந்தவராகவும், தன்னுடைய கதைகளில் மிகச் சிறப்பாக அதைக் கையாண்டிருப்பதையும் காணலாம்.

        அசோகமித்திரனின் கதைகளில் காணப்படும் கதைசொல்லியின்/எழுதுபவரின் குரல், அடங்கிய குரல். அவரது உருவத்தை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தும்  தணிந்த குரல். வேதனைகளை எடுத்துச் சொல்லும் குரல், உற்சாகமாக கூக்குரலிடுமா?  அதேவேளையில், அடங்கிய, சாதுவான குரலில் சொல்லப்படும் நையாண்டிகளுக்கு வீரியம் அதிகம். அது அமியின் கதைகளில் பரவலாக உண்டு. புதுமைப் பித்தனின் கதைகளின் மையமாக இருப்பது, ’நம்பிக்கை வறட்சி’ என்று அவரே சொல்லியிருக்கிறார். அமியின் கதைகளிலும் இதைப் பார்க்கலாம். ஆனால்,புதுமைப்பித்தனின் குரல் ஓசை மிகுந்தது,இடக்கானது, துணிச்சலானது. அமியின்  குரலோ வம்பு வேண்டாம் என்ற தொனி கொண்டது.
அமியின் பாணி என்று பொதுவாக இப்படிச் சொல்லலாம்.ஒரு சிறுவன் பெரியவர்கள் முன் தான் கண்ட சம்பவங்களை விளக்குவானேயானால், அப்போது பெரியவர்கள் இன்னும் அதிகமாக புரிந்துகொள்ளக் கூடுமல்லவா! அதுவொரு சிறிய சவால்தானே.அமியும் அதற்கு நிகரான-அப்படியான அல்ல- விலகலை கடைபிடித்து சவாலை வாசகர்களுக்கு கொடுக்கிறார்.ஆசிரியர் கூற்றாக அல்லாமல், காட்சிப் படுத்துதல் தன்மையில் அமைந்து, வாசக இடைவெளியோடு கூடியவை.
அமியின் மொழி, பொதுவாக எழுத்துத் தமிழ். பேச்சு வழக்கு, வட்டார வழக்கு என்பது இடம்பெற்றாலும் கூட எழுத்து நடையிலான நல்ல தமிழே அவருடைய மொழி. உரையாடல்களில்கூட எழுத்து நடைத் தமிழ்தான். அதனால்தான், கதைகள் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கழித்துப் படிக்கும்போதும் மொழியில்  அன்னியத்தன்மை இல்லை. அசோகமித்ரனின் சமகாலத்தில் எழுதப்பட்ட வேறுசில எழுத்தாளர்களின் கதைகளின் பழைய மொழி நடை, சமஸ்கிருதம் கலப்பு போன்றவை இல்லாததால் புதிது போலவே இருக்கிறது இன்று வரை அவருடைய மொழி. ஆனால், வலிந்து திணித்த மொழி வேட்கையாகவோ,  செயற்கையாகவோ, உறுத்தாமல் வாசிப்பவர்க்கு இயல்பாகவே இருக்கிறது.
       அசோகமித்திரனின் களம் என்பது பெரும்பாலும் நடுத்தர வர்க்கம்தான்.அவர்களின் ‘ஏழ்மை’தான். வீணை கற்றுக் கொள்ள முடியாதவரின் ஏக்கம் போன்றவைகள். ஆனால், அதனினும் கீழான, பசிக்கொடுமையை அனுபவிக்கும்,’சோற்றுக்குச் செத்த’ மனிதர்களின் கதைகளையும் எழுதியேயிருக்கிறார்.

அமியின் கதைகளை பொதுவாக 4  வகைகளாக பிரிக்கலாம். 1.செகந்தராபாத் கதைகள் 2. சென்னை கதைகள் 3. திரைப் பின்னணி கொண்டவை 4.இதர கதைகள். செகந்தராபாத் கதைகள் என்றே ஒரு தொகுப்பு இருப்பதை பார்த்தேன்.
       அ.மியை கணங்களின் கலைஞன் என்று ஜெயமோகன் ஏற்கனவே  சொன்னதை மனதில்  கொண்டு அமியின் நிறைய கதைகளை அணுகலாம்.உளவியல் தன்மை கொண்ட ஒரேயொரு கணத்தை மட்டுமே மையமாக்கி , நகர்ந்து செல்லும் கதைகள் ஏராளம்.பொதுவாகவே, அமி என்றில்லாமல் சிறுகதைகளின் மையமே எப்போதும் இதுபோன்றதொரு தருணத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. சட்டென்று நினைவிலெழும் மற்ற எழுத்தாளர்களின் சில சிறுகதைகளை நினைவுகூர்ந்தால் உணரலாம்.ஆனால், அமி நமக்கு அவ்வளவாக முக்கியம் என்று படாத,சாதாரணமான  தருணங்களை கூட  நிறைய பக்கங்களில் தொடர்பில்லாமல் நீட்டித்து கவனப்படுத்துகிறார். அதைப் படிக்கும்போது  அயர்ச்சி ஏற்படுகிறது.
              எடுத்துக்காட்டாக,’நூலகத்துக்குப் போகும் வழியில் கிரிக்கெட் மேட்சை வேடிக்கை’ பார்ப்பவருக்கு, ஹாட்ரிக் பந்து வீசவிருக்கும் பையனின் மேல் ஒரு வெறுப்புத் தோன்றி அவன் முயற்சி தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.பந்து வீசுபவன் துள்ளி ஓடும் விதமோ, தோற்றமோ அவன் மீது வெறுப்பை உண்டாக்கிவிட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொண்ட அடுத்த வினாடியே, தன் மனதை மாற்றிக்கொண்டு, பந்து வீசுபவன் வெல்ல வேண்டும் என கதைசொல்லி நினைக்கிறார்.இதுவொரு சின்ன விசயம் என்று தோன்றலாம்.அல்லது இதைச் சொல்ல இவ்வளவு நீளமான விவரிப்பு தேவையற்றது என்றும் தோன்றி, சலிப்பு ஏற்படுகிறது.
           காட்சி என்ற கதை, 13 பக்கங்கள் நீளமான விவரிப்பு கொண்டது.ஆனால், அந்தக் கதை ஒரே பக்கத்தில் சொல்லிவிடக்கூடியது.அப்படியெனில், அதில் சொல்லப்படும் விவரிப்புகள் கதைக்கு துணை சேர்க்காமல், தேவையற்ற நீளம் கொண்டது.

            நவீனக் கவிதைகள் பெரும்பாலும் குட்டிக் கதைகளாகவே, நுண் சித்தரிப்புகளாகவே இருக்கின்றன.அமி செய்யும் கணங்களை கவனப்படுத்துவது,கண்டடைவது ஆகியவற்றை கவிதைகளே அளவில் சிறியதாகவும், போதுமான  நுட்பத்துடனும் செய்துவிடுகின்றன.அந்த வகையில், அமி கவிதைகளாகச் சொல்லியிருக்கலாம். அவருடைய வடிவம் அதுவில்லையென்றால், அளவில் சிறிய கதைகளாக, கச்சிதமாக சொல்லியிருக்கலாம்.
             மேலும், அவர் கதைக்குள் மனவோட்டங்களை எழுதித் தள்ளுகிறார்.காலத்தையும், கதையையும் சிவப்புக் கொடி காட்டி, உறைந்து நிற்கச் செய்துவிட்டு மனவோட்டங்களை கிளைகிளையாக பரவி விரிந்துகொண்டே போகும்படி எழுதுகிறார். ’’ஒருவேளை’’ ....என்று துவங்கி ’அப்படியிருக்குமோ, இப்படியிருக்குமோ, அவனாகயிருக்குமோ அல்லது இவனாகயிருக்குமோ’ என்பது போன்று போய்க்கொண்டேயிருக்கும். பிறகு, கதையை உறைந்த நிலையிலிருந்து மீட்டு, நகர்த்திக் கொண்டு போகிறார்.சுந்தரராமசாமி அவருடைய ஒரு உரையில் சொந்தமான ஒரு  உதாரணத்தோடு அமியின் இத் தன்மையை குறிப்பிட்டிருக்கிறார்.

            இந்த மனவோட்ட எழுத்து சில கதைகளில் பொருந்தி வருகிறது.சிலவற்றில் தேவையற்ற நீளமாக அமைந்து சலிப்பு ஏற்படுத்துகிறது.சிலவற்றில் கதையையே சிதைக்கும் வகையில் எனக்கு எரிச்சலையே ஏற்படுத்திவிட்டது என்பதையும் சொல்ல வேண்டியதாகிறது.
அவருடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றான காத்திருத்தல் என்கிற கதையில், இந்த மனவோட்டம் இயல்பானதாக, கதையோடும், காலத்தோடும் நிகழ்காலமாக நகருவதோடு, தத்ரூபமாகவும் இருக்கிறது.
தமிழில், நோபல் பரிசு வாங்கத் தகுந்தவர் அசோக மித்திரன் என்ற ஜெயமோகனின் கருத்து என்னுடைய எதிர்பார்ப்பை கூட்டியிருக்கலாம்.ஆனால், படிக்கும்போது நிறைய சாதாரணமான கதைகளை( பல எழுத்தாளர்களுக்கும் நேர்வதுதான்)  படித்தபோது ஒருவித ஏமாற்றம் அடைந்திருப்பேன்.மேலும், அமியின் எழுத்துக்கள் ஏமாற்றும் எளிமை கொண்டவை என்று எற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.

           ஆனாலும், மீண்டும் ஜெயமோகன் சொன்னதுதான். ‘அமி 50 கதைகளுக்கு குறையாமல் நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.ஒரு தனி நபருக்கு இந்த எண்ணிக்கை என்பது சாதனைதான் ‘ என்கிறார். அப்படித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

               எனக்குப் பிடித்த கதைகளில் சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன். காத்திருத்தல், பார்வை, உத்தரராமாயணம், கோலம், ராஜாவுக்கு ஆபத்து, ஐநூறு கோப்பைத் தட்டுகள், திருப்பம், புலிக்கலைஞன், சுந்தர், நடனத்துக்குப் பின், வழி, விடிவதற்குள், அப்பா மகள் மகன், அப்பாவிடம் என்ன சொல்வது?, முறைப்பெண் & பாக்கி (இந்தக் கடைசி 2  கதைகளும் எப்போதும் ஒரு சிரிப்போடுதான் நினைவுகூர முடிகிறது. அதிலும், பாக்கி கதை, வயது வந்தவர்களுக்கு மட்டும் ரகம் என்பதால் அந்தச் சிரிப்பு வேறு தினுசு)