Friday, May 18, 2012

சூத்திரர்களின் கதை


சூத்திரர்களின் கதை


                             ஒரு நூல் நாவலாகவும், தன் வரலாறாகவும், இனவரைவியல் கூறுகளோடும், அரசியல் பின்னணியோடும், தகவல்களோடும், ஆய்வறிக்கைகளாகவும், கலை நேர்த்தியான எழுத்தோடும்தன் முன்னேற்ற நூலாகவும்  என்று பன்முகத்திறன் கொண்டு விளங்கமுடியுமா? முடியும் என்பதற்குச் சான்றாக ‘ஒரு சூத்திரனின் கதை நூலைச் சொல்லலாம். ஏ.என்.சட்டநாதன் எழுதிய தன் வரலாறே இந்த நூல்.முழுமையடையாத தன் வரலாறு.   நூலாசிரியர் படித்துமுடித்துவிட்டு, வேலை தேடும் சமயத்தில்  நூல் நின்றுவிடுகிறது.ஆனாலும், அதற்குப் பிறகான சட்டநாதன் என்பவரைத்தான் பலரும் அறிந்திருக்கக்கூடும். இட ஒதுக்கீடு  வழங்கும் சமூக நீதி ஏற்பாட்டில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கிய தமிழ் நாட்டில், அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் என்ற வகையில் அறிந்திருக்கமுடியும்.

  

                                இந்த நூலை அவர் தன் விருப்பப் பணிவோய்வுக்குப் பிறகே எழுதத் துவங்கிருக்கிறார். ஆனாலும், தன் சிறுவயது காலத்தையும் ஈரம்காயாமல் நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார். பள்ளிக்கூட மாணவர்கள் பயன்படுத்துவது போன்ற கோடுபோட்ட ஒரு நோட்டில் சட்டநாதன் எழுதிவைத்ததை அவருடைய பேத்தியும், இலண்டன் பல்கலைக்கழக கோல்ட்ஸ்மித் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும் பணியாற்றும் உத்தரா நடராஜன்  நூலாகப் பதிப்பித்திருக்கிறார். பெர்மணண்ட் பிளாக் என்னும் வெளியீடு மூலம் முதலில் ஆங்கிலத்திலேயே இந்நூல் PLAIN SPEAKING:  A SUDRA’S STORY’ என்று வெளிவந்திருக்கிறது. ஆங்கிலப் பதிப்பைவிட, தமிழில் விலை குறைவாகவே காலச்சுவடு அளிக்கிறது.இதை தமிழில் மொழிபெயர்த்து இருப்பவர்கள் கே.முரளிதரன் மற்றும் ஆ.திருநீலகண்டன் ஆகியோர். மேலும்,  இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் சட்டநாதனின் உரைகளை தமிழில் மொழிபெயத்தவர்கள் வ.ஜெயதேவன், சிவ.மாதவன் ஆகியோர். இந்நூல் தமிழில் வர உறுதுணையாக இருந்தவர் ஆ.இரா.வேங்கடாசலபதி என்று அறிய முடிகிறது.


                    பிறந்தது, வளர்ந்தது, படிப்பு, பணிகள் என்பன போன்ற விவரங்களை முன்னுரையிலேயே படித்துவிட முடிகிறது. இதைத் தாண்டி ஒரு தன் வரலாற்று நூலுக்குள் என்ன இருந்துவிடப்போகிறது  என்கிற சலிப்போடு படிக்கத்துவங்கியபோது, ஆச்சரியமாக , நூல் அப்படியே வசியப்படுத்திக்கொள்கிறது. உத்தரா நடராஜன் எழுதியுள்ள முன்னுரை குறிப்பிடத்தகுந்தது.
சட்ட நாதனின் பூட்டி(பாட்டியின் தாய்) முதல், இந்த நூலை பதித்தவரான சட்ட நாதனின் பேத்தி உத்தரா நடராஜன் வரை என்று எடுத்துக்கொண்டால் ஆறு தலைமுறைகளை உள்ளடக்கி, ஒரு நாவலின் பின்புலத்தோடும், வெளிப்பாட்டு அழகோடும் அமைந்திருக்கிறது.

                      பள்ளி என்று இருந்த சாதியை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டங்களில், பலருடைய தொடர்முயற்சிகளால் வன்னிய குல ஷத்ரியர் என்று பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்த சட்டநாதன் சாதியில் சத்திரியர் என்னும் பின்னொட்டு  இருக்கும்போதும் இவராகவே சூத்திரனின் கதை என்று தன்கதையை எழுதியிருப்பது ஏன்?ஏனெனில், பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் சூத்திரர்களாகவே கருதப்பட்டனர். இதைச் சுட்டிக்காட்டும் ஒரு இடமும் கதைக்குள் வருகிறது. வன்னியர்கள் சிறுபான்மையாக, ஆதிக்கம் இல்லாதவர்களாக இருக்கும் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சட்டநாதன். இதையும் நாம் கவனிக்கவேண்டியதாகிறது.ஆனாலும், இவர் தன் சாதி மீதான ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இருந்தவராக தென்படவில்லை. சாதிபேதங்களை வெறுப்பவராகவே இருந்திருக்கிறார்.

                                  இலக்கிய வாசிப்பின் வழியாக பல மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் வாசகர்களின் நெஞ்சில், வெவ்வேறு ரூபங்களில் நிலைத்து நிற்கின்றனர். அதில் சட்டநாதனின் தாய்வழிப் பாட்டியும் சேர்ந்துகொள்கிறார். நூலில் முகப்பு அட்டையில் அமைந்துள்ள புகைப்படத்தில் தென்படுபவர்கள் பற்றிய குறிப்பு எதுவும் தரப்படவில்லை.

                                   சுயசரிதை என்பதை தமிழ்ப்படுத்தினால் தன் வரலாறு என்று எழுதப்படுகிறது. ஆனால் வரலாறாக ஆகமுடியாதவர்கள்கூட சுயசரிதை எழுதுவதாலும், மேலும் பொருத்தமான தமிழாக்கமாகவும் சுயசரிதை என்பதை தன்கதை என்று குறிப்பிடலாம் என்றே எண்ணுகிறேன்.

                                    சட்டநாதன் அவருடைய தன்கதையில், இடம்பெறும் பெரும்பாலான மனிதர்களின் பெயர்களை நேரடியாகப் பதிவு செய்யாமலேயே தவிர்த்திருக்கிறார்.குறிப்புப் பெயர்களாகவும், உறவுமுறைகள் பெயர்களாலுமே குறிப்பிடுகிறார்.

                              ஆனர்ஸ் படிப்பில் தன்னுடன் படித்த தோழிகளைப் பற்றியும், பின்னர் அவர்கள் என்னவானார்கள் என்றும் சொல்லும் இடம் வருகிறது.அப்போது, அவ்வளவாக படிப்புவராத ஒரு தோழி அரசியல்வாதியானதைப் பற்றி மிக இயல்பாகச் சொல்லும்போது, ரசிக்கும்படியாக உள்ளது.

                          சட்டநாதனை பார்ப்பனர் என்று எண்ணிக்கொண்டு வேலைதரும் ஒரு பார்ப்பனர், பின்னர் உண்மை தெரிந்தவுடன் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றங்கொள்கிறார். அதே பார்ப்பனர்தான் பிறகு, சட்டநாதன் தன் இளைமைக்காலம் வரை  பல இன்னல்களையும், அவமானங்களையும் எந்த ஐ.சி.எஸ். படிப்பின் பொருட்டுப் பொறுத்துக்கொண்டு , கனவு கண்டுகொண்டிருந்தாரோ அந்த  ஐ.சி.எஸ். படிப்பிற்கே,    வாழ்க்கை இலட்சியத்திற்கே தடையாக நின்று சதி செய்கிறார். இந்தச் சம்பவம் சட்டநாதன் அவர்களின் வாழ்க்கையில் எப்படியொரு முக்கியமான இடமோ, அதுபோலவே சமூகத்தைப் பிரதிபலிப்பதிலும் முக்கியமான இடம். ஒருவர் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் எத்தனைதான் அறிவும், திறனும் பெற்றிருந்தபோதும் அவர் தாண்டவேண்டிய தடைகளும், தோல்விகளும், வாய்ப்புமறுப்புகளும், அவமானங்களும் சேர்ந்து முன்னேற்றத்தையே தடுத்துவிடுகிறது.உயர்சாதியினரைவிட மிகவும் போராடித்தான் வெற்றியை அடையமுடிகிறது.காணாமல்போகக்கூடியவர்களே நிறையபேர். அதையெல்லாம் கடந்து வெற்றி கண்டவர்களுடைய வரலாற்றில், மறைக்கப்பட்டது, மறுக்கப்பட்டது, திரிக்கப்பட்டது, பதிவு செய்யப்பாடாதது போன்றவற்றையெல்லாம் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்திருப்பவை சிலவே.

                                சிக்கல்களை உணர்ச்சி கலக்காமல், தெளிவாக அதன் ஆதாரம் நோக்கி சிந்திப்பவராகவும், செயல்திறனும், விடாமுயற்சியும் கொண்டவாராக இவர் இருந்தது, சிறுபிராய காலக்கட்டங்களிலேயே தென்படுகிறது.இதுவே, இவரது பின்னாளைய வளர்ச்சிக்கு ஆதாரமான காரணிகள். கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் படித்தவர் என்பதால் அதன் தேவையை நன்கு உணர்ந்திருக்க இவரால் முடிந்திருக்கும்.

சமூகத்தில் சாதி எவ்வளவு பெரிய காரணியாக இருக்கிறது என்பதை பல படிப்பினைகளின்மூலம் உணரமுடிவதுபோலவே, சட்டநாதனின் வாழ்க்கை மூலமும் அறிய முடிகிறது. ஆனால், அமைதியான முறையிலும், சார்பு நிலைகொள்ளாமலும்தான் சாதியைப் பற்றிய இடங்களிலெல்லாம் சட்டநாதன் எழுதியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. சாதி பற்றி எழுதும்போது மட்டும் என்றில்லாமல்,எப்போதுமே தற்சார்பை நிலை நிறுத்தாமல் விலகி நின்றே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இந்த நூலை வெளியிட்டமைக்காக காலச்சுவடு பதிப்பகமும், அதற்கு உறுதுணையாய் நின்றவர்களும், உழைத்தவர்களும் பாராட்டுக்குரிவர்கள். சட்ட நாதன் ஆற்றிய உரைகள், மற்றும் கட்டுரைகள் ஆகியவை இணைப்பாக அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

ஒரு சூத்திரனின் கதை
சட்டநாதன் ஐ.ஏ.எ.ஸ்
தன் வரலாறு
காலச்சுவடு பதிப்பகம்

No comments: