Saturday, August 30, 2008

காய சண்டிகை-இளங்கோ கிருஷ்ணன்

எதிர்க் கவிதைகள்
உயிர்மை,காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களின் பின் அட்டையில் அந்நூல் பற்றிய அறிமுக,மதிப்புரை காணப்படுகிறது.சில சமயங்களில் ,புத்தகத்தினுள்ளே எழுதப்பட்ட உரையிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்டும்,அதை எழுதியவரின் பெயரும் அச்சாகியிருக்கும்.ஆனால் சில சமயங்களில் அவ்வாறில்லாமல் மதிப்புரை மட்டுமே பின்னட்டையில் காணப்படுகிறது.இவ்வாறு எழுதுபவர்கள் யாரென்ற ஆவல்,அவற்றைப் படிக்கும்போது எழுவது தவிர்க்க முடியாததாய் இருக்கிறது.அத்தனை துல்லியமாகவும்,செறிவோடும்,எழுதும் திறன் பெற்றவர் தன் பெயரைப் போட்டுக் கொள்ளாததில், ஒரு அசாத்திய முதிர்ச்சி தென்படுகிறது. அதுபோலவே,காயசண்டிகை என்ற கவிதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்டிருக்கும் மதிப்புரையை இங்கு எழுதுவதே சரியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.இதைவிடப் பெரிதாய் நான் என்ன எழுதிவிடமுடியும்? தவிர,நான் எழுதுவதெல்லாம் வெறும் நூல் அறிமுகம் மட்டுந்தானே!
‘இளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது.பொதுவாக இவரது கவிதைகளின் மையச்சரடு,ஆட்டத்தின் விதிகளை அறியாத’சூதாட்டத்தின் காய்களை’ப்போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல்.எனினும்,தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும் மென்மையான கிண்டல் கலந்த குரல்.காலம்,சூழல் சார்ந்த குறுகிய எல்லைகளை உடைத்துக்கொண்டு திமிறியெழும் நவீன மனிதனின் சுதந்திரக் குரல்.
உரைநடையில் கவிதையை எழுப்பமுனையும் இன்றைய இளம் கவிஞர்களிடையே தனித்து ஒலிக்கிறது இளங்கோ கிருஷ்ணனின் கவிதைக் குரல்’
எளிய உரைநடையில் கவித்துவத்தோடு சிறந்த கவிதை எழுதுவது என்பது அறைகூவலானது என்கிறார் மனுஷ்யபுத்திரன்.நவீன கவிதைகள் புரியவில்லை என்ற குற்றச்சாற்று நிலவும் சூழலில் இவ்வாறாக எளிய கவிதைகள் வருமானால் வரவேற்கத் தகுந்ததுதான்.முகுந்த் நாகராஜன் போன்ற கவிஞர்கள், நவீன இலக்கிய உலகில் குறிப்பிடத் தகுந்தவர்களாக ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் போன்றோர் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.மிகவும் எளிமையோடு காணப்படும் இவரது கவிதைகள் உள்ளபடியே சிறப்பாகவும் இருக்கிறது.
சமூக விமர்சனத்தை,அங்கதச்சுவையோடு, எதிர்ப் பார்வையில் ,புதிய கண்ணோட்டத்தில் உணர்த்துகிறது பெரும்பாலான கவிதைகள்.குறிப்பாக சமூகத்தில் நிலவும் வன்முறைக் கலாச்சாரத்தை.
ஒரு சமூக விரோதியின் குரலாக, சில கவிதைகள் ஒலிப்பது ஆச்சரியத்தைத் தரலாம்.அவற்றின் மூலம் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பதே இவற்றின் நோக்கம்.
பத்தி வடிவில் சில கவிதைகள் தென்படுகின்றன.சில கவிதைகள் குறியீட்டுத் தன்மை கொண்டனவாய் இருப்பதாக புரிந்து கொள்கிறேன்.என் அறிவுக்கு எட்டாத, புரியாத சில கவிதைகளும் இருக்கிறது.புரிந்த,பிடித்த கவிதைகளிலிருந்து இரண்டை மட்டும் கீழே தருகிறேன்.முன்முடிவுகள் ஏதுமில்லாமல் புத்தகக் கடைகளிலோ,நூலகங்களிலோ, புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு நாம் ஒரு முடிவுக்கு வருவோமல்லவா?அந்த வகையில்தான் நான் இந்த நூலை ,சில கவிதைகளை உங்கள் பார்வைக்குக் கிடைக்கச் செய்கிறேன்.

பேனா-1

மேசையில் இருந்து தவறி விழுந்த நாளொன்றில்
தலையில் பலத்த அடிபட்டுப்
பைத்தியம் பிடித்துவிட்டது என் பேனாவுக்கு
அதைக்கொண்டு
காதலிக்குக் கடிதம் ஒன்று எழுத முயன்றபோது
அது பசியின் கொடூரத்தையும்
வறியவன் இயலாமையையும் எழுதியது
வசந்தத்தின் கொண்டாட்டத்தை எழுதப் பார்த்தபோது
கலவரங்களின் பீதியையும் உயிரின் வலிமையையும் எழுதியது
கடவுளர்களின் மகிமையை எழுதப் பணித்தபோது
மதங்களின் குரோதத்தையும் படுகொலைகளையும் எழுதியது
கலைகளின் மேன்மையை எழுதப் பார்த்தபோது
தேசங்களின் பகைமையையும் ஆயுதங்களின் மூர்க்கத்தையும் எழுதியது
மிகுந்த திகைப்பும் அதிர்ச்சியுமாய் நான் இவைகளுக்கான
தீர்வுகளை எழுத முயன்றபோது
அது எனக்கொரு கொலை மிரட்டல் கடிதத்தை எழுதியது
*************************
ஒரு சாத்தானின் டைரிக்குறிப்புகள்

இன்று காலை கழிப்பறையில்
ஒரு கரப்பானுக்கு ஜலசமாதி தந்தேன்
பின்
பலவீனமான வலுவற்றயென்
கரங்களால்
ஒரு செடியைப் பிடுங்கி எறிந்தேன் காரணமின்றி
ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவுதான்
வழிபாட்டுத் தலங்களில் வெடிகுண்டு வீசுபவர்கள்
பாக்யவான்கள்
பரலோக ராஜ்யம் அவர்களுடையது
பொருளும் அதிகாரமுமற்ற
சாமானியன் என்ன செய்ய முடியும்
ஒரு கரப்பானையோ
சிறு செடியொன்றையோ இம்சிப்பதன்றி

$$$$$$$$$$$$$$$
நூல் விபரம்
காயசண்டிகை
(இளங்கோ கிருஷ்ணன்)
காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை,
நாகர்கோயில் 629001
மின்னஞ்சல் kalachuvadu@sancharnet.in

விலை 45 ரூபாய்
72 பக்கங்கள்

3 comments:

anujanya said...

முத்துவேல்,

பயனுள்ள பதிவு. 'காயசண்டிகை' மதிப்புரைக்குப்பின் முகுந்த் நாகராஜன் பற்றி ம.புத்திரன், ஜெமோ கூறியது எல்லாம் நீங்கள் எழுதியதா அல்லது மதிப்புரையிலேயே உள்ளதா? சிறிது குழப்பம். மேலும் படித்தபின்னரே புரிந்தது இந்த இரு அழகிய கவிதைகளும் இளங்கோ கிருஷ்ணன் எழுதியது என்று.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

முகுந்த் பற்றி அவர்களின்(தனித்தனியாக வேறு வேறு காலக் கட்டங்களில் சொல்லப்பட்ட) கருத்தையும்,என்னுடையதையும் சேர்த்து எழுதியுள்ளேன்.
இந்த இரு அழகிய கவிதைகளும் //

அழகிய கவிதை நான் எப்படி..?

மற்றபடி தெளிவாக எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

ச.முத்துவேல் said...

italic ல் காணப்படுவது மட்டும் புத்தகத்தில் உள்ள அணிந்துரை.மற்றவை என் கருத்து.