Monday, January 12, 2009

நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் நத்தை.

நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் நத்தை.

கவிஞர் மயூரா ரத்னசாமி அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பாக வந்துள்ள நூல்தான் ”நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் நத்தை.” கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான பரிசைப் பெற்றிருப்பதாக அறிய முடிகிறது.
வாழ்வைப் பித்து நிலையில் அல்லாமல் தத்துவார்த்தமாக அணுகும் நடைமுறை இவர் கவிதைகளில் உள்ளது.சிந்தனையில், நவீனத்தன்மை நன்றாகப் புலப்படுகிறது. கலவையான கவிதைகள் தென்பட்டாலும் பெரும்பாலும் நவீன கவிதைகள். காதல், நகைச்சுவை, உணர்ச்சிமயம், சாதாரணத் தன்மை கொண்ட கவிதைகள் எனவும் சில தென்படுகிறது. முதல் தொகுப்பு என்பதால் ஆரம்ப நிலையில் எழுதப்பட்ட, இதழ்களில் அச்சாகியும்விட்ட ,கவிதைகளை தொகுப்பில் இடம்பெறச் செய்திருக்கக்கூடும். எனினும் இவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தென்படுகிறது. அடுத்தத் தொகுப்புகளில், கவிதைகளில் நிச்சயம் அடர்ந்த ,செறிவுமிக்க, நவீன சிந்தனையுள்ள கவிதைகள் மட்டுமே நிறைந்திருக்கும் என்பது திண்ணம். கவிதாயினி அ.வெண்ணிலா மற்றும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் அணிந்துரை எழுதியுள்ளனர்.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளாக நான் குறிப்பிடுவது இடங்கொடுத்தான்,உறிஞ்சான், உறவு, முகங்கள், செகப்பு, சித்திரம்- 1, போன்ற இன்னும் சில கவிதைகளையும் சொல்லமுடியும். நகரம் சார் வாழ்விலுள்ள சிக்கல்கள், செயற்கைத்தனம், நடைமுறை இயலாமைகள் “காவல்”, ”நகரத்து மழை” போன்ற கவிதைகளில் பகடியோடுப் பதிவாகி, பலவிதமான சிந்தனைகளை நம்முன் எழுப்புகிறது.கிராமத்தான்களை நகரவாசிகள் கேலி செய்கிறார்கள்.
மாறாக, நகரவாசிகளை கிராமத்தான்கள் கேலிசெய்யும்போது, அதிலுள்ள உண்மை நன்றாகவே சுடத்தான் செய்கிறது. காலுடைகாதை என்கிற கவிதையில் உண்மையிருப்பினும், என்னால் அதை நகைச்சுவைக்காக எழுதப்பட்டதாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது. மாதிரிக்கு நான் விரும்பிய சில கவிதைகள்.

இடங்கொடுத்தான்

இடதுக்கும் வலதுக்குமான
வேலைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன

வலதுகாலை முதலில்
எடுத்துவைக்கவேண்டும்
லாபமென்று சொல்லி
இரண்டாவதாக
உள்ளே வரவேண்டும் இடதுகால்

இடது கூடை சுமக்க
வலது கை பூப்பறித்தது
இரண்டும் தொடுத்து
இரண்டும் எடுத்துக் கொடுத்து
இரண்டும் சேர்ந்து வணங்கி
கற்பூரம் ஒற்றியபின்
விபூதி வாங்க வலதுகை முன்னே வரும்

வலது நீருற்ற இடதுகை
குண்டி கழுவ வேண்டும்
சாப்பாட்டைத் தொட்டுவிடக்கூடாது
கை மறதியாய்

கை தட்டும் ஓசை கேட்டு
திரும்புகையில்
வலது கையால் சைகை செய்தழைத்து
வலதுகை குலுக்கிப் பாராட்டினார்
திறமையாக கதிரடித்தீரென்று

திருச்செங்கோட்டில்
அருள்பாலிக்கும் அர்த்த நாரீஸ்வரா!

முகங்கள்

நிச்சயிக்கப்பட்ட முன்முடிவுகளை நோக்கி
நகர்ந்துகொண்டிருந்தது மாறுவேடப் போட்டி

ராஜா வேடத்தில் வாள்வீசி நடந்த சிறுவன்
கிரீடம் சரிய இறங்கி வந்து சொன்னான்,
“கழற்றிவிடு அம்மா தொப்பி கனக்கிறது”

உலக அழகி வேடமிட்ட ஒன்றாம்வகுப்புக் குழந்தை
மேடையில் சிறுநீர் கழித்து அம்மாவிடம் அடிபட்டது

காந்தி வேடதாரி கதராடை புரள வந்து
“குளிரெடுக்குது சட்டை போட்டுவிடு” என்றான்

வேஷம் கலைத்து விளையாடப் போய்விட்டனர்
குழந்தைகள்
பரிசளிப்பு விழாவில் கத்திக்கொண்டிருந்தனர்
பெற்றோர் வேடமிட்டவர்கள்.

செகப்பு

எல்லாருக்கும்
அக்காதான்
மருதாணி
வச்சு விடுவா

அக்கா அரைச்சு வச்சா
அப்பிடி செவக்கும்
கோவப்பழமாட்டா

கல்யாணத்துக்கு
முந்தின நாள்
வச்சுவிட்டா
கை நெறைய

செகப்பு நகத்தடியியிலெ
வெள்ளை முளைச்சப்ப
மத்தியான பஸ்சுலே
அக்கா வந்தா
தனியா

ஆரு வச்சு விட்டது
அக்கா கண்ணுக்கு
மருதாணி.


சித்திரம்: 1

அச்சிறுமி ஒன்றாம் வகுப்பு வாசிக்கிறாள்.
தொட்டியில் மீன் வளர்க்கிறாள்.ஓயாமல் துரத்தித் துரத்தியே ஒரு மீனைக்கொன்றுவிட்டது மற்றொரு மீன்.துரத்தும் மீனை வேறு தொட்டிக்கு மாற்றிய பிறகு ஒரு நாள் எந்த மீனும் பழையபடி நீந்துவதில்லை எனப் புகார் செய்தாள் அச்சிறுமி. அவளது அப்பா சுறு சுறுப்பா இருக்கிற மீனா, மத்த மீன்களைக் கடிக்காத ஜாதியா பார்த்து கொடுங்க என்றார். கடைக்காரர் யோசித்தபடி இருக்க, நல்லா நீச்சல் தெரிஞ்ச மீனாக கொடுங்க என்றாள் அச்சிறுமி.

நூல் விபரம்

நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை( கவிதைகள்)
ஆசிரியர்: மயூரா ரத்தினசாமி
தொடர்புக்கு 9360789001

முதல் பதிப்பு: ஜூன் 2007
வெளியீடு : மயூரா பதிப்பகம்
37, தொட்டராயன் கோயில் வீதி,
காட்டூர்,கோயமுத்தூர் 641009
விலை ; ரூ. ௪0


2 comments:

anujanya said...

'நல்லா நீச்சல் தெரிஞ்ச மீனா கொடுங்க' - குழந்தைகள் எவ்வளவு உன்னதம்! நாம் எப்படி அவர்களைச் தினந்தோறும் சிதைத்து, மனிதர்களாக்குகிறோம்!

நல்ல நூல் அறிமுகம். நன்றி முத்துவேல்.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

நன்றி அனுஜன்யா..
தாமதமான என் பின்னூட்டத்திற்கு வருத்தம்...