Friday, February 6, 2009

ஜி. நாகராஜனின் குறத்திமுடுக்கு

மது,புகை,மாது போன்ற தீய பழக்கங்களைக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று வரையறை செய்துவிடமுடியுமா? மாறாக,இதுபோன்ற பழக்கங்கள் எதுவுமில்லாமல் பொய், துரோகம்,அடிவருடித்தனம்,கயமை,திருட்டு,பொறாமை,போலியான நடத்தை…. கொண்டிருப்பவர்களை எல்லாரையும் நல்லவர்கள் என்று கூறிவிடமுடியுமா?


கோகுலத்தில் சீதை என்ற திரைப்படம் வெளியான புதிதில் பார்த்தேன். என்னை மிகவும் தொந்தரவு செய்த படம் அது. மிகவும் பிடித்ததும்கூட. ஜி. நாகராஜன் அவர்களின் குறத்திமுடுக்கு என்கிற குறு நாவலை தற்போதுதான் படிக்கவாய்த்தது. 1963 ல் வெளியிடப்பட்ட இக்குறு நாவல்தான் இவரின் முதல் நூலாகும். நானொரு புதிய வாசகன் என்பதால் இப்போதுதான் படித்தேன் என்கிற குறுகுறுப்பு இருந்தாலும் இப்போதாவது படிக்க வாய்த்ததே என்று ஆறுதல் பட்டுக்கொள்கிறேன்.
தன்னுடைய சமூக இருப்பிற்கு அவமரியாதை, குந்தகம் என்று நினையாமல் வெளிப்படையாக, உண்மையாக எழுதிய ஜி. நாகராஜன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார்.புகைப்படத்தில் பார்த்தால் ஒரு ராணுவ அதிகாரியைப் போன்ற தோற்றமும், மிடுக்கும், வசீகரமும் கொண்டுள்ள அவரின் இறுதிக்காலம் பற்றி எங்கோ கொஞ்சம் படித்த நினைவு, என் நெஞ்சை அறுக்கிறது. இப்படியெல்லாம் அவருக்கு நேர்ந்திருக்க வேண்டாம்தான்.

இக்குறு நாவலின் முன்னுரையாக ஜி. நாகராஜன் அவர்கள் எழுதியிருப்பது ஒன்றே போதும், அவர் யார் என்பதை நாம் உணர. அது பின் வருமாறு.
என் வருத்தம்
நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; “இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.


குறத்தி முடுக்கு என்பது ஒரு பகுதியின் பெயர்.பாலியல் தொழில் பரவலாக நடக்கும் பகுதி. இக்குறு நாவலின் அத்தியாயங்கள் இரண்டு பாதைகளாகப் பயணிக்கிறது. ஒரு அத்தியாயம் இப்பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்ட, அடுத்த அத்தியாயம் கதையின் நாயகனின் அனுபவங்களை விவரித்துக்கொண்டுபோகிறது. இவ்வாறாக மாறிமாறி சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போதே பாலியல் தொழில் புரியும் பெண்களின் மேல் நமக்கு ஒரு கழிவிரக்கத்தை ஆசிரியர் தன் எழுத்தின் மூலம் கொண்டுவந்துவிடுகிறார். தங்கம் என்பவள் கதை நாயகனை மணக்காமல், தன் தகுதிக்கு ஏற்றவன் என்று நம்புவதாலோ என்னவோ, நடராஜனையேத் திருமணம்(!) செய்துகொண்டு, கதை நாயகனை ஏமாற்றிவிடுகிறாள்.(!) ஆனால் இது விவரித்துச் சொல்லப்படாமல் அவரவர் ஊகத்திற்கு விடப்பட்டிருப்பது சிறப்பு. குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் ஒரு விபச்சாரியின் கருவோ சிதைவுக்குள்ளாகிறது. தூக்கில் தொங்க விரும்பும் ஒரு விபச்சாரி, அதுகூட நிறைவேறாத நிலையில் நடைபிணம்தானே அவள் வாழ்வு. மது, மாது போன்றவை எப்படி ஒரு உன்னதமான மனிதனைக்கூட சீரழித்துவிடும் என்பதற்கும் உதாரணமாகவே ஜி. நாகராஜன் அவர்கள் வாழ்ந்துவிட்டுப்போய்விட்டார் என்பது வருத்தமானதுதான் , எனினும் எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது.

2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஜி நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே படித்துப் பாருங்கள். அது ஒரு master piece!

அவரது எல்லா எழுத்துகளையும் அடங்கிய தொகுப்பொன்று வந்திருக்கிறது (காலச்சுவடு?).

ஒரு வேண்டுகோள் : ஒழுக்கம் சார்ந்த்தோ அல்லது நம் நிலைப்பாடு சார்ந்தோ ஜி நாகராஜன் என்றில்லை, யாரைப் பற்றியும் தீர்ப்பெழுதுவதைத் தவிர்த்தால் நலம்.

ச.முத்துவேல் said...

பரிந்துரைத்தலுக்கு நன்றி.வேண்டுகோள் என்றில்லாமல், அன்புக்கட்டளையே இடலாம். நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.