Saturday, April 4, 2009

இரவுக்கு முன்பு வருவது மாலை (தொடர்ச்சி)


இயலாத, எளிய ஒருவனுக்கு ஏற்படும் ஆத்திரம், நிர்ப்பந்தங்கள், இன்னல்கள், உணர்வுகள் ஆகியவற்றைப் பகிரும் கதை இது. பிரதிபலன்எதிர்பார்த்து காட்டப்படும் அன்பும் அதிலுள்ள போலித்தனமும் கணபதிக்குஅயர்ச்சியை,வெறுப்பையே ஏற்படுத்துகிறது.பின் இவற்றையெல்லாம் வேறுவழியில்லை என எண்ணியவனாய், தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களாய், தன்னுடைய நிழலாய், மனம் ஒட்டாமல் ஏற்றுக்கொள்கிறான். வேறுஎன்னதான் செய்துவிட முடியும் கணபதி என்கிற ஒரு கீழ் மட்டத்துஊழியனால்?
இசக்கிபிள்ளை, காந்திமதியை பால்யகாலத்திலிருந்தே நேசிக்கிறார். காந்திமதிக்குப் பிடிக்கும்படியாக, அவளை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவே தன் போக்குகளை மாற்றிக்கொள்கிறார். பெரியவர்களாகும்போது, காந்திமதிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்துவிடுகிறது.இசக்கிப் பிள்ளைக்கு வாழ்வே வெறுத்துப்போகிறது. ஆனாலும், காந்திமதியின் மேல் அவருக்கிருக்கும் அன்பு ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்கிற பாணியில் மனதைத் தேற்றிக்கொண்டு வாழ்வைத் தொடர்கிறார்.தானும் மணம் முடித்துக்கொள்கிறார்.மனைவியையும் பரிவோடு கவனித்துக்கொள்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு இசக்கிப் பிள்ளையின் மனைவி இறந்துவிடுகிறாள். இருந்தபோதிலும், காந்திமதியை நெஞ்சில் சுமந்து கொண்டு, அவளிடம், இன்னமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற அதே சிறு பிள்ளைக் காலந்தொட்ட எண்ணத்தோடு, நல்ல காரியங்களில் ஈடுபட்டுக்கொடும், மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இவ்வாறான ஒரு நாளில்தான், தன் அன்புக்குரிய காந்திமதி வாழாவெட்டியாக வாழ்கிறாள் என்று அவருக்கு அறிய நேருகிறது.குழந்தை இல்லை என்கிற காரணத்தால், காந்திமதியை அவளின் கணவன் தள்ளி வைக்கிறான்.வேறு திருமணமும் செய்துகொள்கிறான்.இச்சங்கதிகளை அவரிடம் சொன்னவனே இன்னொரு தகவலையும் சொல்லிவிட்டுப் போகிறான். அது,இசக்கியாப் பிள்ளையை , காந்திமதி சந்திக்க விரும்புகிறாள் என்பது.இசக்கியாப் பிள்ளைக்கு என்னவென்றே அறியமுடியாத உணர்வுகள் ஏற்படுகிறது.தன்னை மலை என்றும் , காந்திமதியை நதி என்றும் உருவகித்து எண்ணங்களை சிந்திக்கிறார். கடைசி பத்தி இப்படி முடிகிறது.
“மலை நதியிடம் போகிறதா” என்று பிள்ளை நினைத்தார். அவருக்கு சிரிப்பு வந்தது. நான் மலையல்ல. வெறும் மனிதன். ஆதரவு தருவதற்காக அல்ல. ஆதரவு பெறுவதற்காகச் செல்கிறேன்.” என்று அவர் நினைத்தார்.
கொஞ்சம் பூ படக் கதாநாயகியை நினைவுப்படுத்தும் அன்பு இவருடையது.
லல்லி வேலை கிடைத்து வேலைக்குச் செல்கிறாள்.அங்கு வேலை செய்யும் சக ஊழியனான செல்வராஜ் என்பவனை நேசிக்கிறாள்.ஒரு கட்டத்தில் தொழிற்சங்கத் தலைவியாகிறாள். காதல் விலகிப்போகிறது. கதையின் கடைசி வரைப் படித்து முடித்தபிறகே, தலைப்பு புரியத் துவங்குகிறது.மிக இனிமையாக நகரத் தொடங்கும் காதல், முறிந்துபோவது வாசகர்களுக்கே வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
இந்தக்கதை என் வாழ்வனுபத்திற்கு சற்றுப் பொருந்தி வருவதாலோ என்னவோ, மிகவும் பிடித்திருந்தது. மிக இயல்பான நடை என்பதைக் குறிப்பிட வேண்டும். அலுவலகங்களுக்குள் இருக்கும் அரசியல், அதாவது மனிதர்களுக்குள் இருக்கும் அரசியல் நன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெண்கள் வேலைக்கு செல்லத் துவங்கிய காலக்கட்டத்து (சற்று பிறகு) கதை எனலாம்.ஒருதலை ராகம் திரைப்படம் வந்த காலக்கட்டம் என்பது கதைக்குள்ளாகவே வரும்.1982 ல் கதைக்கதிரில் வெளியானதாம்.அவ்வாறு ஒரு பெண் வேலைக்குச் செல்வதால், அவளை மற்றவர் எப்படிப் பார்க்கின்றனர், குடும்பத்தார் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நன்றாகவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இக்கதையும் ஒரு பெண்ணையே மையப்படுத்தி, அவளின் மனவோட்டங்களைச் சித்தரிப்பதாகவே நகர்கிறது. இது மேற்சொன்ன காரணங்களினாலேயே எனக்கு ஆச்சரியமளிக்கிறது. நேர்மையானவனாக காட்டப்படுகிற செல்வராஜ் சங்க வேலைகளில், சந்தர்ப்ப சூழலால் செயல்பட நேர்கிறது.ஆனால், சில வருடங்களுக்குப் பின், அதிலிருந்து விடுபட விரும்புகிறான். இத்தனைக்கும் ஒரு நல்ல தலைவனாகவே, நிறைவுடன் பணியாற்றியவன்தான். ஆனாலும் இதுபோன்ற சாகசங்களில் விருப்பமில்லாததாலும், யாருக்காக உழைக்கிறோமோ, அவர்களிடமே நல்ல பெயரும், திருப்தியான உறவுமுறையும் இல்லை என்கிற வருத்தத்தில், இது நமக்கான பாதை அல்ல என்று விலகுகிறான். இச்சமயத்தில்தான், லல்லி தலைவியாக்கப்படுகிறாள். செல்வராஜுக்கு இதில், உடன்பாடான எண்ணம் இல்லையென்றாலும், அவளின் சுதந்திரத்தில் தலையிட விரும்பாதவனாய், திணிக்க விரும்பாதவனாய், அவளின் எண்ணத்தை, போக்கை வரவேற்கிறான்.கொஞ்சம் ஒதுங்கவும் செய்கிறான்.லல்லி இப்படி நினைக்கிறாள்.” அவளுடைய புதிய உருவத்தைக் கண்டு அவன் பயப்படுகிறான்.அவன் வேண்டுவது காவியங்களில் வரும் தலைவனே உயிரென வாழும் தலைவி. அவளைப் போன்று மேடையில் பேச விரும்பும் தலைவி அல்ல”
ஆனால், செல்வராஜின் தரப்பு விளக்கப்படாததும்,பிறகான நாட்களில், தலைவியான லல்லி, தலைவியானதற்காக வருத்தப்பட்டாளா அல்லது பெருமை பெற்றாளா என்பதெல்லாம் சொல்லப்படாமலேயே கதை முடிகிறது.
எல்லாமே நல்ல கதைகள் என்கிற ஒரு நிறைவு ஏற்படுகிறது.


2 comments:

யாத்ரா said...

தாங்கள் ஆதவன் அவர்களுடைய முழுசிறுகதைத்தொகுப்பு, மற்றும் காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் நாவல்களை வாசிக்க வேண்டுகிறேன்.

ஆதவன் நவீன இலக்கியத்தின் பொக்கிஷங்களுள் ஒருவர். அருவியில் சிக்கி இறந்து போனார். இது இலக்கியத்திற்கு மிகப்பெரிய இழப்பு.

ச.முத்துவேல் said...

என் பெயர் ராமசேஷன் வாசித்துக்கொண்டிருக்கிறேன்(06/04/09)
நன்றி யாத்ரா.