Wednesday, October 14, 2009

சாளரத்தில் தெரியும் வானம்#1-கவிஞர் மனுஷ்யபுத்திரன்

என் பார்வையில் படைப்பாளிகள் : கவிஞர் மனுஷ்யபுத்திரன்


      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்

‘உங்கள்(மனுஷ்யபுத்திரன்) கவிதைகளின் வன்முறை மிக்க கசப்பு என்னை எப்போதுமே தாக்குவதில்லை.அதை தாண்டி அதிலுள்ள மென்மையான ஏக்கத்தினாலேயே நான் மனம் தீண்டப் பெறுவேன். அந்த வன்முறை தனக்குத்தானே செய்துகொள்ளும் பாவனையே என்றும் எண்ணிக்கொள்வேன்”
-ஜெயமோகன்

ஆத்மாநாம், சுகுமாரன், கலாப்ரியா ஆகியோர்களை முன்னோடியாகக் கொண்டு எழுதுவதாகக் கூறினாலும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனித்தன்மையோடு எழுதுபவர்.இன்றைய இளம் கவிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளவர்.14 வயதில் கவிதை எழுதத் துவங்கி 16 வயதில் தனது முதல்கவிதைத் தொகுப்பு”மனுஷ்யபுத்திரன் கவிதைகள்” கொண்டுவந்தவர். இருந்தாலும் “என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” என்கிற இவரின் இரண்டாவது தொகுப்பையே, முதலாவதாகக் கொள்ளுமாறு குறிப்பிடுகிறார்.இவைகளைத் தவிர ‘இடமும் இருப்பும்”, 'நீராலானது', 'மணலின் கதை', 'கடவுளுடன் பிரார்த்தித்தல்' ஆகிய கவிதைத்தொகுப்புகளையும் ‘எப்போதும் வாழும் கோடை', ‘காத்திருந்த வேளையில்' ஆகிய இரண்டு கட்டுரைத்தொகுப்புகளையும் கொண்டுவந்துள்ளார்.எப்போதும் வாழும் கோடை என்னும் கட்டுரை நூல் நவீன கவிதைகள் பற்றிய கருத்துகள்,விமர்சனக் கட்டுரைகள் கொண்ட நூல்.கவிதைகளைப்போலவே இவரின் உரைநடைக்கு சிறந்ததொரு சான்றாக இக் கட்டுரைத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது.மேலும் ‘உயிர்மை' மாத இதழ் மற்றும் உயிரோசை எனும் இணைய வார இதழின் ஆசிரியர்.உயிர்மை பதிப்பகமும் நடத்திவருகிறார்.

2002 ஆம் ஆண்டு இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான 'சன்ஸ்கிருதி சம்மான்', 2003 ல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய'இலக்கியச் சிற்பி',2004 ல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தனி நபர் படைப்பாற்றலுக்கான'விருது ஆகிய விருதுகளை இதுவரை பெற்றிருக்கிறார்.

பனிமலையின் நதிபோல தெளிவானதும், துல்லியமானதும் ,சிலிர்ப்பும் கொண்டவை இவரது கவிதைகள்.'உரையாடல் தன்மை கொண்ட,அதே சமயம் செறிவூட்டப்பட்ட சொற்களையே கவிதைக்காக என் மனம் சார்ந்திருக்கிறது' என்கிற இவரின் கவிதைகள் மிகவும் உரையாடல் தன்மை கொண்டதாய் இருக்கின்றன.'ஒரு கவித்துவமான சொல்கூட இல்லாமல் கவிதையின் உக்கிரத்தை ஏற்றிய வரிகளை தமிழில் எழுதவேண்டும்'என்று கூறும் இவரின் கவிதைகள் துல்லியமான, எளிமையான சொற்களினால் ஆனது.வார்த்தைகளாக நீட்டிக்கப்படவேண்டிய வரிகளை ஒரு சொல், அல்லது ஓரிரு சொற்களில் வெளிப்படுத்திவிடும் செறிவும், சொல்லின் ருசியும் இவர் கவிதைகளிலும், உரை நடையிலும் உண்டு. ஆனாலும் அவை எளிமையான சொற்களாய் இருப்பது ஆச்சரியமூட்டுவது.வாசகனை சிரமப்படுத்தாமல் இட்டுச்செல்லும் கவிதை தொனியை கவிதையின் இயல்பான தன்மையாகவே படைத்திருக்கிறார்.பத்திகளாக எழுதுவது எளிய வாசகனுக்கும் உகந்ததும் வரவேற்கத்தகுந்ததுமாகும்.மனிதர்களுக்கிடையிலான உறவுகளையும், பிரிவுகளையும் உளவியல் ரீதியில் அணுகுகிறது இவர் கவிதைகள்.அதீத அன்பும் கூட ஒரு வன்முறையே என நேர்ப்பேச்சில் குறிப்பிட்டவர், இது பற்றி எத்தனை எழுதினாலும் எழுதித்தீரவில்லை என்று கூறுகிறார்.கவிதைகளைப்போலவே கவிதைகளுக்கான தலைப்புகளும் அலாதியானவை.தனித்துவமானவை.ஒரு உட்பொருளை எழுதுகையில் அதற்கு மிக நெருக்கமானதும், மிக யாதார்த்தமானதும், துல்லியதுமானவற்றை பட்டியலிடும் தன்மை இவர் கவிதைகளில் விரவிக்கிடக்கும்.ஒரு சிறு சூழலை,சம்பவத்தை முன்வைக்கும் கவிதைகள் பல கோணங்களில், பல தளங்களில் தன்னை அவிழ்த்துக்கொள்ளும் மர்மங்களும், பன்முகத்திறனும் கொண்டவை.ஆற்றமுடியாத துக்கத்தையே ஏற்படுத்தும் இவர் கவிதைகள் பதற்றத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தவல்லவை. அம்மா இல்லாத ரம்ஜான், அரசி போன்ற நெடுங்கவிதைகள் நிறைய எழுதியுள்ளார்.

காத்திருத்தலின்

காத்திருத்தலின்
கடைசி கண
நிரம்பி வழிதல்களுக்கும்
பிரிவின்
முதல் கண ஆவியாதல்களுக்கும்
நடுவே
இல்லை
இடையில் நிகழ்ந்தது
எதும் இல்லை

சிவப்புப் பாவாடை

சிவப்புப்பாவாடை
வேண்டுமெனச்சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொணடையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி

அமைதி

நீரில்
இரவெல்லாம்
ஓசையற்று
உடைந்துகொண்டிருக்கிறது
நிலவு
ஒரு
விசும்பலற்று
அழுகின்றன
மீன்கள்
எந்த உராய்வுமற்றுச்
சுழல்கின்றன
நீர் வளையங்கள்
ஏதோ ஒரு மரத்தின்
பெருமூச்சுகளிலிருந்து நீங்கி
நெடுந்தொலைவாய்
பயணம் செய்கிறது ஓரிலை
நீரின்
அத்தனை அமைதிகளும் கூடி
யாருமற்ற கரைநோக்கி வந்துகொண்டிருக்கிறது
அக் குழந்தையின் உடல்

அழுகை வராமலில்லை

அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்களின் முன்னால்
அழக்கூடாது

ஒரே ஒரு மீன்

மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன
ஒருமீன்
துள்ளுகிறது
சும்மா
துள்ளுகிறது
யாரும் பதட்டமடையத்
தேவையில்லை
எனக்கு உறுதியாகத் தெரியும்
ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது

நன்றி- தடாகம்

Thadagam_Logo_Eng

10 comments:

சென்ஷி said...

மிகையில்லாத சொற்களைக் கொண்டு தொடுத்த அழகான சொற்றொடர்கள் முத்துவேல். ரசிப்புக்குரிய சில கவிதைப்பகிர்வுகளுடன் உங்கள் வாசகப்பயணம் அருமையாக ஆரம்பித்துள்ளது. மேலும் தங்களின் பகிர்தல்களுக்காக காத்திருக்கிறோம்!

யாத்ரா said...

தடாகத்திலும் வாசித்தேன் முத்து, ரொம்ப நல்லா இருக்கு, மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம். தொடருங்கள்,,,,,,

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அவருடைய கவிதைத் தொகுப்பு எதையும் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் உயிர்ம்மையில் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். சிறப்பான எளிமையான நடை உங்களுடையது.வாழ்த்துகள்.

Ashok D said...

எனக்கென்னமோ கவிதைகள் நிறைவேறதா ஆசைகள் கொண்ட குழந்தையின் வெளிபாடாக தெரிகிறது. படம் ஹமீதை 10 வயது கூட காட்டுகிறது. நேரில் அவர் 20 வயது இளைஞரை போலவே இருப்பார். ஆதலால்தான என்னவோ சாருவையும் சுஜாதவையும் கவர்ந்தார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஹமீதின் "கடவுளுடன் பிரார்த்தித்தல்" மட்டுமே வாசித்து இருக்கிறேன்.. என்றாலும் அவருடைய கவிதைகளைப் பற்றி நண்பர்கள் யாத்ராவும் நரனும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. அருமையான கவிதைகளைப் பகிர்ந்து இருக்கிறீர்கள் நண்பா.. நன்றி..

அகநாழிகை said...

இன்றைய இளம் கவிஞர்களின் ஆதர்சமானவரான மனுஷ்யபுத்திரனைப் பற்றிய உவத்தல் வியத்தலற்ற நேர்மையான பதிவு. வாழ்த்துக்கள் முத்துவேல்.

- பொன்.வாசுதேவன்

உயிரோடை said...

நல்ல பகிர்வு முத்துவேல். தலைப்பு அருமை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் முதல் பதிவைப் பார்த்தபின்னர் தடாகத்திலேயே இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டேன்.

அட்டகாசமான ஆரம்பம்.

இன்னும் நிறைய அட்டகாசங்களை செய்ய வாழ்த்துக்கள், மேற்கொண்டு படிக்க ஆவலாய் ....

Karthikeyan G said...

மனுஷ்யபுத்திரன் கவிதையை("பட்டியலில் இருந்து") முதன்முதலில் குமுதத்தில்(2001/2002) படித்தேன். அவர் மீதான பிரமிப்பு இன்னமும் அப்படியே தொடர்கிறது.

ச.முத்துவேல் said...

நன்றி சென்ஷி
நன்றி யாத்ரா
நன்றி ஸ்ரீ
நன்றி அஷோக்
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி வாசு
நன்றி உயிரோடை
நன்றி அமித்து அம்மா
நன்றி கார்த்திகேயன். வாசிப்பில் நீங்கள் எனக்கு மூத்தவர்தான்.:)