Sunday, October 25, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-கவிஞர் தென்றல்

என் பார்வையில் படைப்பாளிகள் - கவிஞர் தென்றல்

கவிஞர் தென்றல்

OLYMPUS DIGITAL CAMERA
நவீன கவிதைகள் என்பதில் கூறுமுறை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சொல்லப்படும் முறையும் நவீனத்தன்மையுடனும்,புதிதானதாகவுமிருப்பது.கவிஞர் தென்றலின் கவிதைகள் வித்தியாசமான, நூதனமான கோணங்களில் அவதானிக்கப்பட்டவைகளாக இருப்பது தனிச்சிறப்பு.வழக்கங்களிலிருந்து விடுபட்டு,புதியதொரு பார்வையுடன் பார்க்கப்பட்டிருக்கிறது.ஒன்றினை விளக்க உவமை பயன்படுத்தப்பட்டு, அது எதை விளக்கமுனைகிறதோ அதையும் சொல்வது உவமை, உவமேயம் என்று அறியப்படுகிறது. உவமையாக சொல்லப்படுவது மட்டுமே தனித்து நின்றும், போலவே , அது உணர்த்துவது வேறொன்றும்,ஒன்றுக்கும் மேற்பட்டதுமானதுமான தன்மை கொண்டதை படிமம் என்கிறோம். கவிஞர் தென்றலின் கவிதைகள் நிறையவே படிமக்கவிதைகளாக அமைந்திருக்கிறது.


பறத்தல் சுதந்திரத்தின் குறியீடாகப்பயன்படுகிறது.தென்றலின் சில கவிதைகளும் சுதந்திரத்தின் விழைவைக் கூறுகிறது.தலையீடுகளும், நிர்ப்பந்தங்களையும் வெறுக்கிறது.அதுபோலவே, மனிதர்களுக்கிடையிலான உறவுமுறைகளில் உள்ள சிக்கல்கள் குறித்த வருத்தத்தை சில கவிதைகளில் காணலாம்.அக் கவிதைகள் தன்னுணர்வாக, விரக்தியையும், சலிப்பையும், ஏமாற்றத்தையுமே கொண்டிருக்கின்றன.பெண்ணியம் சார்ந்த கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் கவிதைகளும் தொகுப்பில் இருக்கின்றன.
ஒரு விளையாட்டுச் சிறுமியின் மனப்பாங்கைத் தொலைத்துவிடாத இளம்பெண்ணின் அனுபவங்களாகவே இவர் கவிதைகளில் பூனை, பொன் வண்டு, ரோஜாத்தொட்டி, கிளி, தும்பி ஆகியவை மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது.

நீல இறகு என்கிற இவரின் முதல்கவிதைத்தொகுப்பு, உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.சிறியதும், பெரியதுமான 89 கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு நல்ல கவிதைகளால் நிரம்பியிருக்கிறது.சிந்தனைகளில் இருக்கும் வீச்சு கவிதைகளின் கட்டமைப்பில் கூடிவரும்போது இன்னும் நல்ல கவிதைகளாகப்படும்.செறிவும், கவிமொழியும் அடுத்தத் தொகுப்புகளில் இவரிடம் நிச்சயம் முன்னேற்றம் கண்டிருக்கலாம்.

புதுச்சேரியைச் சார்ந்தவரான தென்றல் சென்னையில் மென்பொறியாளராகப் பணியாற்றுகிறார்.இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கவிஞர் தேவமகள் அறக்கட்டளை இவருக்கு கவித்தூவி விருதுகொடுத்துச் சிறப்பித்துள்ளது.


ஒற்றையடிப்பாதை

ஒற்றையடிப்பாதை
அதிகாரம் வாய்ந்ததாய்
திரும்பச் சொல்லும் இடத்திலும்
வளைந்துபோகும் இடத்திலும்
திரும்பவும்
வளையவும் வைக்கிறது.
முதுகில்
துப்பாக்கி முனை பதித்து
முன் நடத்தும்
கொள்ளைக்காரன்போல
நன்றாகத் தெரியும் அதற்கு
அவ்வழியே
பயணிப்போர் இல்லையென்றால்
புற்களால் தின்னப்பட்டு
மடிந்துபோகுமென்று
இருந்தபோதிலும் வெட்கமின்றி
ஓயாமல்
மிரட்டிக்கொண்டேதானிருக்கிறது
அவ்வழியே
போவோரையும் வருவோரையும்

பஞ்சின் கனவு


இலவு காத்த கிளி
ஒரு பக்கம் இருக்கட்டும்
தானும் ஒரு நாள்
மேகமாவதாய் எண்ணியிருந்த பஞ்சின் கனவு
தலையணையில் முடிந்தது

என் ஒரே கேள்வி


பெரிதாய் ஒன்றும் நான் கேட்கவில்லை
அன்று
நீங்கள் நம்பமாட்டீர்கள்
அப்போது யாவரும்
ஒருமாதிரியாய் என்னை
புரிகிறதா
அதைவிடுங்கள்
நீங்கள் இருக்கின்றீர்கள்
இதுபோதும்
இப்பொழுது
இங்கு
நான் கேட்கிறேன்
பிய்ந்து கிடக்கும் மீன் தலைக்கு
நான் யார்?
ஏன் வியர்க்கிறது உங்களுக்கு?

கேள்வி

யார் உடைத்தது
என்ற கேள்வி
முழுக்கண்ணாடிக்கு
அபத்தமாய்த் தெரிய
யாருமில்லா ஒரு பொழுது
விடை வேண்டி
விழுந்து நொறுங்கியது


நன்றி-தடாகம்
Thadagam_Logo_Eng

10 comments:

velji said...

அறிமுகத்துக்கு நன்றி.

என் தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

http://jeyaperikai.blogspot.com/2009/10/blog-post_23.html

selventhiran said...

தாங்கள் கொடுத்திருக்கும் சாம்பிள் கவிதைகள் கவிஞரின் பிற கவிதைகளைத் தேடிப் படிக்கத் தூண்டுவதாய் இருக்கிறது.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமையான கவிதைகள்.

காமராஜ் said...

//யார் உடைத்தது
என்ற கேள்வி
முழுக்கண்ணாடிக்கு
அபத்தமாய்த் தெரிய
யாருமில்லா ஒரு பொழுது
விடை வேண்டி
விழுந்து நொறுங்கியது //

ஆழச் சிந்திக்க வைக்கும் கவிதை

கார்த்திகைப் பாண்டியன் said...

அறிமுகத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா..

யாத்ரா said...

ரொம்ப நல்ல கவிதைகள் முத்து, அதை நீங்கள் அறிமுகப்படுத்திய விதமும் அருமை, அவசியம் படிக்க வேண்டும் இத்தொகுப்பை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி

கார்க்கிபவா said...

எப்போதும் படித்துவிட்டு செல்பவன், இன்னைக்கு தலைப்பை பார்த்ததும் பின்னூட்டமிட்டே ஆக வேண்டுமென்று தீர்மானித்துவிட்டேன் !!!!!

ச.முத்துவேல் said...

நன்றி வேல்ஜி. உங்கள் தளத்திற்கு வந்திருந்தேன்.

நன்றி செல்வேந்திரன்.

நன்றி ஸ்ரீ

நன்றி தோழர் காமராஜ்

நன்றி கார்த்திகப்பாண்டியன்

நன்றி யாத்ரா

நன்றி அமித்து அம்மா

நன்றி கார்க்கி.

உயிரோடை said...

நீல இற‌கு த‌லைப்பே அழ‌காக‌ இருக்கின்ற‌து