என் பார்வையில் படைப்பாளிகள்
மௌனி-இழந்த காதலின் சஞ்சலங்கள்
சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தனால் புகழ்ந்துரைக்கப்பட்டவர் மௌனி. நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர்.மணிக்கொடி காலத்திலிருந்தே(1932-38) எழுதத் தொடங்கியவர்.பி.எஸ்.ராமையாவால் எழுதத்தூண்டப்பட்டு அவராலேயே மணி என்கிற இயற்பெயரிலிருந்து மௌனியாக்கப்பட்டவர்.
அச்சில் கிடைக்கும் 24 சிறுகதைகளை மட்டுமே எழுதிய இவரை நவீனத்தமிழிலக்கிய உலகம் இன்றைக்கும் கொண்டாடியும் அதேசமயம் எதிர்மறையான விமர்சனங்களும் எழுப்பிக்கொண்டுமிருக்கிறது. அவர் காலம் முதல் இன்றைக்கும் இந்நிலை தொடர்கிறது. மௌனியின் தனித்துவம் என்பது அவர் எழுதியிருக்கும் விதம்தான். மௌனி எழுதியக் காலக்கட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.
”மௌனி அவர்கள் கணித்ததில் பட்டம் பெற்றவர்.ஆழ்ந்த இலக்கிய ஞானம் உடையவர். சங்கீதத்தில் பயிற்சி கொண்டவர்.தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.மௌனியின் ஆளுமை கணிதத்தில் ஏற்பட்ட அறிவு நுட்பமும், சங்கீதத்தில் உண்டான கலையுணர்வின் நளினமும், இலக்கியத்தால் வந்த கற்பனையும், தத்துவம் அளித்த தீர்க்க முடியாத தாகமும் இத்தனையும் அடங்கியது” என்கிறார் கி.அ.சச்சிதானந்தம்.
மௌனியின் கதைகளைப் படித்துவிட்டு முதல் வாசிப்பில் புரியவில்லை, பிடிக்கவில்லை என்று புகழ்பெற்ற படைப்பாளிகளே சொல்லியிருக்கிறார்கள். உணர்ந்திருக்கிறார்கள்.அதுதான் மௌனியின் எழுத்து.இவர் கதைகளில் மனம், மனவோட்டங்களே பிரதானமாயிருக்கிறது.பெரும்பாலான கதைகள் உரையாடல்தன்மை மிகச் சொற்பமே கொண்டிருக்கிறது. உரையாடல்களற்ற மனவோட்டங்கள் மிகை உணர்ச்சியில் சஞ்சலத்துடனும், கவித்துவங்களோடும் மனம் போகும் போக்கிலேயே தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கிறது.ஒன்றிப் படிக்கவேண்டியது அவசியம். ஒருமுறைக்கு மேல் படித்தால் புரியும் கதைகள் அதிகம்.இரண்டாவதுமுறை படிக்கும்போது மிக எளிதாகவும், விரைவாகவும் நகரமுடிவது ஆச்சரியமளிக்கும் அனுபவம். 1930 களிலான மொழி இன்று எவ்வளவு மாற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை இவர் கதைகளைப் படிக்கும்போது நன்கு உணரமுடிகிறது.தண்ணீர் என்றே சொல்லப்படாமல் ஜலம் என்றும் யோசனை என்கிற பதம் யோஜனை என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இது இன்றைக்கு ஒருவித சலிப்பைத் தருகிறது. மௌனியின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களைப்போலவே, அவர்களது வாழ்வும், சூழலும் ஒரே மாதிரியாகவே இருப்பதால் சில கதைகளில் குழப்பம் ஏற்படுகிறது. மனதில் நிற்கமுடியாமல் போகிறது.தீர்க்கமாய் இன்னதென்று சொல்லிவிடாமல் புதிரானதாகவே எழுதப்பட்டிருப்பது வாசிப்பில் தேர்ச்சியைக் கோருகிறது.
காதலுக்குரியவர்களையும், நெருங்கியவர்களுமான உறவுகளையும் இழந்து தவிக்கும் மனதின் சஞ்சலமும், தனிமையும், அதே சூழலில் நீடித்திருக்க விரும்பும் எண்ணமும் கொண்ட கதாபாத்திரங்கள் அதிகமாய் தென்படுகிறது. பகடி செய்யும் பண்பு இவர் கதைகளில் பரவலாக உண்டு.அழியா சுடர், பிரபஞ்ச கானம், மாறுதல், ஆகிய கதைகள் குறிப்பிடத்தகுந்ததும் புகழ்பெற்றதுமாகும். மேலும் மனக்கோட்டை, கொஞ்ச தூரம் ஆகிய கதைகளும் குறிப்பிடத்தகுந்தவை.முதல் வாசிப்பிலேயே புரியத்தக்க சில எளிய கதைகளும் எழுதியிருக்கிறார்.'இந்நேரம்,இந்நேரம்' என்கிற சிறுகதையில் கதைக்குத் தொடர்பற்றதாகவே வருகிறது மிராசுதாரர்(பிராமணர்) பாத்திரம் . கதையின் நாயகனான செல்லக்கண்ணு படையாச்சி என்கிற பண்ணையாள் இளைஞன், கொஞ்சம் கரடுமுரடான வேலைகளுக்கு பறையர்களை வைத்து வேலை வாங்கவேண்டும் என்று நினைப்பதாக எழுதியிருக்கிறார் மௌனி. கதைக்கு தொடர்பற்ற கதாபாத்திரங்களின் சித்தரிப்பு வர்க்கபேதத்தை, சாதிகளின் படி நிலைகளைக் காட்டுவதற்காகவே எழுதபட்டிருப்பதுபோல் தோன்றச்செய்கிறது. ஆனால், அதே நேரத்தில் மிஸ்டேக் என்னும் கதையில் படி நிலையில் வேறுபட்ட மனிதர்களை முன்வைத்து அவர்களுக்குள் இருக்கும் போலியான செய்கைகளையும், பிழைப்புவாதத்தையும் கேலிக்குட்படுத்துவதன் மூலம் இன்னொரு கோணத்தை அளிக்கிறார்.”மாறாட்டம்”, ”சுந்தரி” போன்ற கதைகள் மிகச் சாதாரணமாகவேப் படுகிறது.சலிப்பாகக் கூட இருக்கிறது.”உறவு, பந்தம், பாசம்', ;குடை நிழல்' நினைவுச்சுவடு ஆகிய கதைகள் தாசிகள் கதாபாத்திரங்களாக வரும் கதைகள்.ஆங்கிலத்தில் கடவுளைக் குறிப்பிடும்போது , வாக்கியங்களின் இடையில் வந்தாலும் He என்ற பெரிய எழுத்திலேயே குறிப்பிடுவது மரபு. அதையே பின்பற்றுவதுபோல், மௌனி தன்னுடைய கதைகளில் கடவுளைக் குறிப்பிடும் இடங்களில் 'அவன்' என்று தடிமன் எழுத்துக்களில் எழுதுகிறார்.
மௌனி பற்றிய நிறை, குறை என்று வாதிடுபவர்களின் கூற்றுகளில், இரு தரப்பிலுமே நியாயம் இருக்கமுடியும்.ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றிய அபிப்பிராயங்களையும் சுய வாசிப்பனுவத்தின் மூலமே கண்டடைவது மிகச் சரி.
1907 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்மங்குடி கிராமத்தில் பிறந்தார். 1926 வரையில் கும்பகோணத்தில் படித்த பிறகு 1929 வரையில் திருச்சியில் படித்து, வேலைக்கொன்றும் போகாமல் 1943 வரையில் கும்பகோணத்தில் தன் வீட்டில் வசித்தார். பிறகு தனது பிதுராஜித நிலம் தொழிலை கவனிக்க சிதம்பரம் வந்து, அங்கேயே வாழ்ந்து 1985- ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று காலமானார்.
நன்றி- தடாகம்
5 comments:
பகிர்வுக்கு நன்றி!
தேடிப்பார்க்கிறேன், நானும்!
/மிராசுதாரர்(பிராமணர்) பாத்திரம் . கதையின் நாயகனான செல்லக்கண்ணு படையாச்சி என்கிற பண்ணையாள் இளைஞன், கொஞ்சம் கரடுமுரடான வேலைகளுக்கு பறையர்களை வைத்து வேலை வாங்கவேண்டும்/
:-)
முத்துவேல்,
மௌனி பற்றிய அறிமுகம் நன்று.
மௌனியின் மொழியை வாசிப்பதில் உள்ள சிக்கல் பற்றி எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக ஜலம்-தண்ணீர், யோசனை- யோஜனை.
இவற்றையெல்லாம் காலத்தின் வரலாற்றுப் பதிவுகளாகத்தான் கொள்ள வேண்டும். சங்கப்பாடல்களோ, திருக்குறளோ இப்படியிருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் இல்லையா அது போலத்தான் இதுவும். எப்படி ஒரு வட்டார வழக்கிற்கு நாம் அங்கீகாரம் அளித்து புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்கிறோமோ அதுபோலத்தான். நமக்கு அதிக பரிச்சயமில்லாத (உதாரணத்திற்கு கண்மணி குணசேகரன்) போன்றோரின் மொழி நடையை அதன் வாசிப்பு வசீகரத்திற்காக இரசிப்பது போன்றது இது.
மறுபடியும் ஒரே கருத்துதான் தோன்றுகிறது. மௌனியோ அல்லது வேறொரு எழுத்தாளரோ வெறும் குறிப்புகளால் மட்டுமே விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. இவ்வாளுமைகளின் படைப்புகளை அணுகுதல், இது சார்ந்தெழும் எண்ணங்கள் இவையே பகிரப்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. முழுமையற்ற ஒரு தோற்றம் ஏற்பட இது காரணமாக இருக்கிறது. இன்னமும் எழுதியிருக்க வேண்டும். மௌனியின் கதைகளில் விரவிக்கிடக்கும் மௌன இடைவெளிகளைப் புரிந்து கொள்வதில் தான் அவரது எழுத்துக்களின் வாசிப்பு சுவாரசியம் இருக்கிறது.
(பதிவின் இறுதியில் ‘பிதுரார்ஜித‘ என்று வர வேண்டும்)
அருமையான பகிர்வுக்கும், மீள்நினைவு கொள்ளச் செய்ததற்கும் நன்றி முத்துவேல்.
தஞ்சை பிரகாஷ் பற்றி அடுத்து எழுதுங்களேன்.
- பொன்.வாசுதேவன்
தற்போது மௌனியின் கதைத் தொகுப்பைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.உண்மையில் எனக்கும் சற்று கடினமாகத்தான் இருக்கிறது.ஒருமுறைக்கு இருமுறை படிக்க வேண்டியதுதான். வேறென்னசெய்ய?
Mouniyai patri melum
therinthukonden.
Nantru nanba..
Nalla muyarchi
thodarungal.
Post a Comment