Wednesday, February 3, 2010

பாலிஸ்டர் சட்டை

ங்கம்மா போவணும்?’ னாரு கண்டக்டர்.

போளூருக்கு ஏழு டிக்கெட் குடுப்பான்னாங்க கணக்கமூட்டு சரசுவதி அக்கா. அவங்க பையன் செந்தில பக்கத்துல உட்கார்த்தி வச்சுக்கிட்டாங்க.

யார் யாரெல்லாம்மா?’
சரசுவதி அக்கா தலைங்களைக் காட்டுனாங்க.’இவங்களுக்கும் அரை டிக்கட் எடுக்கணும்மான்னு இரண்டுபேரக் காட்டினாரு.அப்படின்னா மொத்தம் ஏழு முழு டிக்கட், ரெண்டு அரை டிக்கட்டு ஆவுது.. சரசுவதி அக்காக்கிட்ட அவங்க மகன் செந்திலத்தவிர மத்த எல்லாரும் ஏற்கனவே டிக்கட் காச குடுத்துவச்சிருந்தோம்.கொஞ்ச தூரம் போனதுமே வழியில ஏறின யாரோ ஒருத்தரு , கணேசன் அம்மாவுக்குத் தெரிஞ்சவங்களாட்டம் இருக்குது.

 ‘
அடடே ! என்னக்கா? இந்தப்பக்கம்? எங்கப்போறீங்க, போளூரா?’

 ‘
ஆமாப்பாநம்ம கோணவாய்க் கவுண்டரு பேத்திக்குக் கல்யாணம். போளூர்ல.இன்னைக்கிப் பொண்ணு போயி நாளைக்கி கல்யாணம்.’

ஓஹோ! பொன்னுதான் பெருசுல்ல? ஒரு பையன் இருக்கிறான்ல?’

ஆமாப்பா. பையன்தான் கடேசி. நடுவில இன்னொருபொண்ணிருக்குது. அதுவும் வயசிக்கி வந்தப்ப்பொண்ணுதான். பையன்தான் சின்னவன்.”

தவமணி அக்காக் கல்யாணத்துக்குப் போறதுக்கு என்ன மட்டும் அனுப்பிட்டு , அம்மா வூட்டுலயே நின்னுக்கிட்டாங்க. பக்கத்துவூட்டு தவமணி அக்காவோட அம்மாவுக்கும், எங்கம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். அப்பல்லாம் நானும் அவங்கூட்டுக்குப் போகமாட்டேன். மோகனும் எங்கூட்டுக்கு வந்து என்னக் கூப்பிடமாட்டான். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் நாங்க எப்பவும் போல ஆரம்பிச்சுடுவோம். கல்யாணத்துக்குல்லாம் பெரிய ஆளுங்கத்தானே போவாங்க? கூட வேண்ணா சின்னப்பசங்கப் போவலாம். ஆனா, எங்கம்மா  என்னமட்டும் கல்யாணத்துக்குப் போவச்சொல்லி அனுப்புறது எனக்குப் புடிக்கல. ரொம்பக் கூச்சமா இருக்குது.அதைவிட என்னன்னா, போட்டுக்கிட்டுப் போவ நல்லதா ஒரு  டவுசர், சட்டைகூட  இல்ல. அம்மாக்கிட்ட  நானும் இதச் சொன்னப்ப,

ஏன்டா? பச்சை சொக்காதான் இருக்குதுல்ல?புது பாலிஸ்டர் சொக்காதான ,.  இப்பதான், எடுத்துக்கொஞ்ச நாள்தான ஆவுதுன்னாங்க.

அந்தப் பச்சை சட்டைதான் எங்க ஸ்கூல் யூனிஃபாம் ஆச்சே. அதைப்போயா கல்யாணத்துக்கு போட்டுக்கினு போறது? டவுசரும் நல்லதா எதுவும் இல்ல. சத்துணவுலக் குடுத்த காக்கி டவுசர்தான் பின்னால கிழியாம நல்லாயிருக்குது. ஆனா,அது ரொம்பப் பெரிசா இருக்குது. இடுப்பை மடிச்சுவுட்டு, அண்ணாக்கவுத்த எடுத்து மேலவுட்டுக்கினாத்தான் நிக்கும். சட்டைய மேல எடுத்துவுட்டு  மறச்சுக்கணும்.சத்துணவுல குடுத்த வெள்ளைச் சட்டை ரொம்பச் சின்னது. அது பாய்ஸ் ஸ்கூல்லதான் யூனிஃபாம். நானு என்னா சொல்லியும் கேட்காம , செந்தில் அம்மாக்கிட்ட சொல்லிவுட்டு, எங்கிட்ட மொய்ப்பணமும் , போவ, வர மட்டும் பஸ்ஸுக்கும் காசக் குடுத்து அனுப்பிவச்சுட்டாங்க.’ தொணைக்குத்தான் செந்திலு, கணக்கமூட்டம்மா, கணேசன் அவங்க அம்மால்லாம் இருக்காங்களே ன்னுட்டாங்க.' சரி, நானும் பஸ்ஸுல ஊருக்குப்போற ஆசையில, கூட பசங்க இருக்கிறதால ஒத்துக்கிட்டேன்.போளூர் பக்கம் நான் போனதேயில்ல. இப்பதான் மொதோவாட்டி போறன். சரவணன் மாமா படிக்கிற ஐடிஐ கூட அந்த வழியிலதான் இருக்குது. அதைப்பாக்கணும்னு நினைச்சேன். இருட்டிடுச்சிங்கறதால வெளிய வேடிக்கைப் பாக்கமுடியல. நானு, செந்தில், கணேசன்லாம் பேசீக்கிட்டெ போனோம்.

                                                             
வமணி அக்கா ஸ்கூல் போனதுலாம் நான் பாத்ததே கிடையாது.கேர்ல்ஸ் ஸ்கூல்ல படிச்சி முடிச்சுடுச்சி. சின்னக்கா கேர்ல்ஸ் ஹைஸ்கூல் ட்ரஸ்ல போவும்.மோகனும், நானும் ஒன்னாத்தான் எங்க வீட்டுக்கிட்டயிருக்கிற எங்க ஸ்கூலுக்குப்  போவோம். அவன் எட்டாவது. ஆறாவதுல ஒருவாட்டி ஃபெயிலு.நான் ஏழாவது. எங்கக் கிளாஸ்ல எப்பவும் மொத அஞ்சு ரேங்குக்குள்ள வந்திடுவேன். மோகன் சரியாப்படிக்கமாட்டான். ஆனா,பெரிய பெரிய பசங்க மாதிரி  நடந்துக்குவான். நிறைய தைரியம் அவனுக்கு. சில நேரம் யார் வூட்டுலயாவது விளையாடிட்டு இருக்கும்போது எதையாவது திருடிக்கிட்டு வந்துடுவான். அப்பல்லாம் எனக்கு பயமா இருக்கும்.


தவமணி அக்கா, சின்னக்கா , மோகன் அப்புறம் நானு எல்லாருமா அவங்கவூட்டு மெத்தையில சாயந்திரந்த்துல நின்னுக்கிட்டு ரோட்ட வேடிக்கைப் பாத்துக்கிட்டு, பேசிக்கிட்டிருப்போம். டாங்கி மங்கி, திருடன் போலீஸ், ராஜா ராணி  எல்லாம் விளையாடுவோம்.அப்பவும் தவமணி அக்கா எதாவது வேலை செஞ்சுக்கிட்டே இருக்கும்.துணி மடிக்கிறது, செடிக்கித் தண்ணி ஊத்துறதுன்னு எதாவது செஞ்சுக்கிட்டேருக்கும். சின்னக்கா அதெல்லாம் எந்த வேலையும் செய்யாது.எங்க வீட்டுப்பக்கம் இருக்கிற மெத்தை சொவரு  என்னால எட்டிப்பாக்க முடியாத அளவுக்கு உசரமா இருக்கும். எப்பவாவது எங்கம்மா கீழ எங்கூட்டுல இருந்துக்கினே மெத்தையில் நான் இருக்கிறனான்னுக் கேப்பாங்க.அப்ப எதாவது நான் பேசுறதுன்னா  தவமணி அக்காதான்  என்னைத்தூக்கிப்புடிச்சிக்கும்.தவமணி அக்காமேல எப்பவும் ஒரு வாசனை அடிக்கும். ரொம்ப நல்லாயிருக்கும். அந்த வாசனை அவங்க வூட்டுக்குள்ள நொழையும்போதே அடிக்கும். அதுவும் பெட்ரூம்லதான் நல்லா அடிக்கும். சாக்லேட் வாசனை மாதிரியிருக்கும். நான் எப்பன்னாவதுதான் அவங்க வீட்டு பெட்ரூம்க்குப்போவேன். ஆனா, இந்த பாலா வந்தான்னா நேரா அவங்க வூட்டு பெட்ரூமுக்குப் போவான். மோகன் அம்மா கொஞ்ச நேரத்துலயெல்லாம்,
டேய். அங்க என்னடா பண்றீங்க. வெளியில வாங்கடா. போய் மெத்தையில விளையாடுங்கன்னு சொல்லிடுவாங்க.

தவமணி அக்காவும், சின்ன அக்காவும்  மெத்தயில நின்னு வேடிக்கப்பார்க்கிறதப் பத்தி  கொஞ்ச நாள் முன்னாலதான்  மோகன் எங்கிட்டச் சொல்லித் திட்டுனான். ‘இதுங்க இப்படி நிக்கிறதுனாலத்தான ரோட்டுல போற வர்ற பொறுக்கிங்கள்லாம் மேலயும், வாசல்லயும் பார்த்துட்டேப் போறானுங்க’ ன்னு.போனவாரம் தவமணி அக்கா காலையில வாசத்தெளிச்சுட்டுக் கோலம் போடறதுக்காக , வீட்டுக்குள்ளப் போயி வரும்போது ஒரு லவ் லெட்டர கோலம் போடற இடத்தில எவனோ வச்சுட்டுப்போயிட்டானாம். மறு நாளும் இதேமாதிரி நடந்துச்சாம். அப்புறமா, அதுக்கும் மறு நாள் அவங்க அம்மா, அப்பால்லாம் கதவுக்குப்பின்னால ஒளிஞ்சு நின்னுக்கிட்டிருந்துப் பாத்தாங்களாம். அன்னிக்குன்னு பாத்து  அவன் வரவேயில்லயாம். அதனால, இப்பல்லாம் அவங்கம்மாவே முடியலன்னாலும் காலையில வாசத்தெளிக்கிறாங்களாம்.

அன்னிக்கி ஒரு நாள் சாயந்திரம், தவமணி அக்கா வூட்டுல எல்லாரும் வெளிய எங்கயோ போறதால தவமணி அக்காக்கு தொணையா என்ன அவங்க வூட்டுல இருக்கச்சொன்னாங்க. தவமணி அக்கா பெட்ரூம்ல இருக்கிற கண்ணாடியிலதான் எப்பவும் தலைய வாரிக்கும், பவுடர் அடிச்சுக்கும். அன்னிக்கும் எங்கூடப்பேசிக்கினே தலையவாரி, பவுடர்லாம் அடிச்சுக்கிட்டிருந்துச்சி.பெட்ரூம்ல சாக்லேட் வாசனயோட பவுடர் வாசனையும் சேர்ந்து அடிச்சது. எனக்கும் தல வாரிவுட்டு, பவுடர் அடிச்சுவுட்டது.பவுடர் அடிக்கிற பஞ்சிப்பூ சில்லுன்னு, மெத்துன்னு பூமாதிரி இருந்துச்சி. மொதோ முறையா நான் அப்பத்தான் பஞ்சிப்பூவுல பவுடர் அடிச்சிக்கிட்டது.தரையப்பாத்தாமாதிரி, சாய்ச்சி வச்சிருந்த கண்ணாடியில முழு ஆளும், தலைமேல அழுத்தி உடம்பு பூராவும் ஒரு நசுக்கு நசுக்குக்கனமாதிரி, குறுக்கித்  தெரிஞ்சது. என்னை கண்ணாடி முன்னால நிக்கவெச்சுட்டு, எனக்குப்பின்னால நின்னுக்கிட்டிருந்த தவமணி அக்கா எங்கையி ரெண்டையும் புடிச்சுக்கிட்டு கண்ணாடியில என் உருவம்தாண்டி, அதும் உருவம் வர்ற மாதிரியும், அப்புறம் என் உருவம் மறச்சிக்கிற மாதிரியும், இப்படி அப்படின்னு ஆடிஆடி விளையாடிக்கிட்டிருந்துச்சி.
தூங்கப்போற நேரத்துல தவமணி அக்கா  ஞாபகம் வரும். அதெல்லாம் தப்புன்னும் நினைச்சுக்குவேன். அப்புறம், சினிமாவுல பாத்த யாராவது கதா நாயகியை நினைச்சுப்பேன்.சினிமால்லாம் யாராவது சொந்தக்காரங்க ஊருல இருந்து வந்தா கூட்டிக்கிட்டுப் போனாத்தான் உண்டு. அதுவும் அம்மா சரின்னு சொன்னாத்தான். இல்லன்னா எவ்வளவோ கெஞ்சினாலும் நடக்காது.ஆனா, தினமும் எங்கூட படிக்கிற சசிகலாவ நினைக்காம தூங்கறதில்ல.

                                    
ஸ்ஸை விட்டு இறங்குனதுமே பக்கத்துலயே கோயில். கோயில்லதான் பொண்ணும் , மாப்பிள்ளையும் இருக்கிறதாச் சொன்னாங்க. நாங்க எல்லாரும் அங்க போனோம்.. அங்கப்பாத்தா கோயில் வாசல்ல கொஞ்சம் பசங்க எங்க ஸ்கூல் யூனிஃபார்மப் போட்டுக்கினு விளையாடிக்கிட்டிருந்தாங்க. பாக்கும்போதே ஏழைப் பசங்கன்னு தெரிஞ்சுடும்.கணேசன் அம்மாதான், நாங்க படிக்கிற அதே ஸ்கூல் இந்த ஊர்லயும் ஒன்னு இருக்கிறதா சொன்னாங்க.அந்த ஊரு பசங்க இருட்டியும் யூனிஃபாமோடயே விளையாடிக்கிட்டிருந்தப் பாத்துக்கிட்டே போனோம்.கோயில் வாசல்ல மாப்பிள்ளையும், பொண்ணும் கும்பலுக்கு நடுவில மாலையெல்லாம் போட்டு நின்னுக்கிட்டிருந்தாங்க. தவமணி  அக்கா பக்கத்துல நிக்கிற மாப்பிள்ளையப் பார்த்தேன். மாப்பிள்ளய எனக்கு அவ்வளவாப் புடிக்கல. ரொம்ப வயசான மாதிரி இருந்தாரு. அக்காவைவிட கொஞ்சம் குள்ளம் வேற.எனக்கு தவமணி அக்காவ நினச்சு பாவமா இருந்துச்சி . தவமணி கொஞ்சம் கருப்பாயிருந்தாலும் ரொம்ப அழகாயிருக்கும்.மோகன் அந்தக்கும்பல்லதான் அவங்க சொந்தக்காரங்கக்கூட ஆடி,ஓடிக்கிட்டிருந்தான்.ஃபோட்டோல்லாம் எடுத்துக்கிட்டிருந்தாங்க. மோகன் எல்லா ஃபோட்டோலயும்  நின்னுக்கிடிருந்தான். நான், செந்தில், கணேசன்லாம் ஒரு பக்கமா போய் மரத்துக்குப் பின்னால, இருட்டுல  ஒன்னுக்கடிச்சுட்டு வந்தோம்.கொஞ்ச  நேரத்துல கும்பலு மண்டபத்துக்குப்போகறதுக்கு  நவுந்தாங்க. நாங்களும், பஸ்ஸுல வந்தவங்கள்லாம் ஒரே கும்பலா பின்னாடியே மெதுவா போயிக்கிட்டிருந்தோம்.கோயிலுக்குப் பக்கத்துலயே மண்டபம் இருந்ததால சீக்கிரம் மணடபத்து வாசலுக்கு வந்துட்டோம். நான் வைக்கவேண்டிய மொய்ப்பணத்தை, எங்கம்மா சொன்ன மாதிரி செந்தில் அம்மாக்கிட்ட எடுத்துக்குடுத்தேன்.கும்பல்ல இருந்த ஜனங்க எல்லாரும் ஒரு சின்ன வாசப்படி வழியா நெருக்கியடிச்சிக்கிட்டு போயிக்கிட்டிருந்தாங்க. சாப்பாட்டுக்குப் போறாங்கன்னு பேசிக்கிட்டாங்க. எங்க கும்பலும் அந்த இடத்துக்கு சாப்பிடப் போனாங்க. அவங்கவங்க அம்மா , அவங்கவங்க பசங்கள கையிலப் பிடிச்சுக் கூட்டுக்கிட்டுப் போனாங்க.எல்லாரும் முன்னாடி போவ நான் அவங்க பின்னாடி, கடைசியாப் போயிக்கிட்டிருந்தேன். வாசல்ல ரெண்டு மூனு அண்ணனுங்க நின்னு கூட்டத்த சரி பண்ணிக்கிட்டிருந்தாங்க. நாங்க உள்ளே நுழையறப்ப, அங்க  விளையாடிக்கிட்டிருந்த உள்ளூர்ப் பசங்களும் சிலபேரு வந்து நின்னுக்கிட்டிருந்தானுங்க. செந்தில், செந்தில் அம்மா, கணேசன், கணேசன் அம்மா, அவங்க தம்பி, தங்கச்சினு எல்லாரும் உள்ளே போயிட்டிருக்கும்போது, நான் கடேசியாபோக,அந்த நேரத்துல அந்தப் பசங்களும் வர, அவங்களோடச்  சேர்த்து நானும் உள்ளூர் யூனிஃபார்ம் போட்டிருந்தாதால, நிறுத்திப்புட்டாங்க.எல்லாரையும்  விரட்டுனாங்க. அந்தப்பசங்கள்லாம் முண்டியடிச்சு, கெஞ்சுனாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. நான் கம்முன்னு திரும்பிட்டேன்.

                         
ரோட்டுக்கு அந்தப்பக்கம் கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டுருந்தேன். யாரோ ஒரு பெரியவர், தோளுல துண்டுப்போட்டுக்கிட்டுபாவாடை தாவணியில் பார்த்த உருவமாபாடிக்கிட்டேப் போனார். எங்கூட சில பொம்பளைங்க,  இன்னும் சிலபேர் என்னாட்டமே பஸ்ஸுக்கு நின்னுக்கிட்டிருந்தாங்க.திருவண்ணாமலைன்னு போர்டு போட்ட பஸ்ஸு வந்ததும் எல்லாரும் ஏறினாங்க. ”இது திருவண்ணாமலைதானே போகுது'னு  ஒரு ஆளக் கேட்டுக்கிட்டே நானும் பஸ்ஸுல ஏறி காலியாயிருந்த கடைசிச் சீட்டுல உக்கார்ந்துக்கிட்டேன். கண்டக்டர் எல்லார்கிட்டயும் டிக்கட் வாங்கி முடிச்சிட்டு என் பக்கத்துல வந்து உட்கார்ந்துக்கிட்டாருநானும் டிக்கட் வாங்கினேன்.நாங்க வரும்போது வந்த அதே பஸ். அதே கண்டக்டர்.

இன்னாடா, தம்பி நீ மட்டும் தனியா வர்ற? உங்கூட வந்தவங்க எல்லாம் எங்க?' ன்னுக் கேட்டார்.

அவங்க பின்னால வருவாங்க.”

ஏன்டா தம்பி அழுவற? கண்ணுல்லாம் கலங்கிப்போய் இருக்குது. வழி தெரியுமில்ல?”

ஒன்னும் பயமில்ல. எனக்கு வழி தெரியும்
                                                                      *******

 நன்றி- உயிரோசை இணைய வார இதழ்,08-02-10.

3 comments:

நிலாரசிகன் said...

நல்லா இருக்கு முத்துவேல் :)

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...

ச.முத்துவேல் said...

நன்றி நிலா ரசிகன்

நல்வரவு ,நன்றி அண்ணாமலையான்.