Monday, February 15, 2010

சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்- அ.வெண்ணிலா

என் பார்வையில் படைப்பாளிகள்- ச.முத்துவேல்
கவிஞர் அ.வெண்ணிலா
vennila
பெண்ணாகப் பிறந்துவிடுவதாலேயே உடல் சார்ந்தும், சமூக நியதிகள் சார்ந்தும் ஒருவர் அடையக்கூடிய இன்னல்களும் பெருமைகளும் ஆணுடன் ஒப்பிடும்போது வெகுவாக வேறுபடுகிறது.அன்னிய ஆடவர்களின் முன்னால் பெண்குழந்தைகளைக் கூட நிர்வாணமாக தோன்ற அனுமதிப்பதில்லை.ஆனால்,ஆண் குழந்தைகளை பெண்கள் முன் தோன்ற அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.காட்சி ஊடகங்களிலும் இவ்வாறே.உடல் சார்ந்த இன்னல்கள் இயற்கையானது. மாதவிடாய், கருத்தரிப்பு,பிரசவம் என்பதாக நீளும் பட்டியல்.ஆனால், குடும்பங்களிலும், சமூகத்திலும் பெண்ணுக்கு ஏற்படும் இன்னல்களும், கட்டுப்பாடுகளும் இயற்கையானதல்லாமல் நாம் ஏற்படுத்திக்கொண்டவை. இவைகளை உணர்வுபூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் பட்டியலிட்டு , பெண்ணியம் உரத்துப்பேசும் கவிதைகளை எழுதிவருபவர் அ.வெண்ணிலா.தமிழின் பெண் கவிஞர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்.

ஆணை நோக்கிய அதிருப்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது, கவிதைகளில் இவர் குரல். இக் குரலில் பெண்பற்றிய சரியான புரிதலை ஆணுக்கு ஏற்படுத்துவதும், பெண்களீடம் இணக்கமான, பரிவான சூழலை ஆணிடம் ஏற்படுத்தும் விழைவுமே இருக்கிறது.'பெண்களை சரியாக புரிந்துகொள்ளுங்கள், அவளிடம் அன்பு காட்டுங்கள், அவளை சமமாய், உயர்வாய் நடத்துங்கள்' என்கிற கோருதலை முன்வைப்பவை இவர்தம் பெரும்பாலான கவிதைகள். இவர் பட்டியலிடும் இன்னல்கள் தமிழ்ச்சூழல் சார்ந்தவை, உலகளாவியவை எனப் பிரிக்கமுடியும்.
கவிதைகளின் படைப்பூக்கத்திற்கு மதி நுட்பத்தை பெரிதும் சாராமல், உணர்வுபூர்வமான அணுகுமுறையை கொண்டிருக்கிறார். இவரின் கவிதைகள் நேரடியானவை. பெரும்பாலானவை ஒற்றைத்தன்மை கொண்டவை.சொல்லவிரும்புவதை எளிதாக நேரடியாக முன்வைப்பவை.பன்முகத்தன்மையளிக்கும் வாய்ப்பிருக்க ஏதுவாக ,தலைப்புகள் இல்லாமல் கவிதைகள் எழுதுவதாக சொல்கிறார்.

''உபயோகமற்றுப்போன
கூர் நகங்களின் அவஸ்தைகளை
கூண்டுக்கம்பி பிறாண்டித் தணிக்கும்
புலிகள்''
என்ற வரிகள் வருகிற கவிதையில் இவ்வரிகளுக்கு முன்னும் பின்னுமான வரிகள் விரயமாகவேத் தோன்றி, பன்முகத்தன்மையையும் சேதப்படுத்திவிடுகிறது.மாறாக மேற்சொன்ன வரிகளோடு மட்டுமே அக் கவிதையை நிறுத்திவிட்டிருந்தால் ஒரு சிறந்த படிமக்கவிதையாக அது மிளிரும். கவிதையின் நீளம் பற்றி கவலை கொள்ளாமல் செறிவாகவே அமையும் வகையில் இவர் எழுதலாம் என நினைக்கும்படியாக சில கவிதைகள் அமைந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகிலுள்ள அம்மையப்பட்டு என்கிற கிராமத்தில் வசிக்கும் இவர் ஆசிரியையாக பணிபுரிகிறார். கவிதைகள் மட்டுமல்லாது சிறுகதைகள், கட்டுரைகள், ஆகியவையும் எழுதிவருகிறார்.பெண்ணெழுத்தாளர்களின் வாழ்க்கை பற்றிய ஆவணத்தொகுப்பு ஒன்று இவரின் பெருமுயற்சியில் உருவாகியிருக்கிறது. பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகள், சமூக நலன் சார்ந்த செயல்கள், ஆகியவற்றில் ஈடுபடுகிறார்.தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப்பு வகிக்கிறார்.
இவரின் படைப்புகளாவன

1.நீரில் அலையும் முகம்- கவிதைகள்
2.
ஆதியில் சொற்கள் இருந்தன-கவிதைகள்
3.கனவை போலொரு மரணம்- கவிதைகள்
4.
பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில் -சிறுகதைகள்
5.கனவிருந்த கூடு-காதல் கடிதங்களின் தொகுப்பு
6.மீதமிருக்கும் சொற்கள்-பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கை பற்றிய ஆவணத்தொகுப்பு.




'நீரில் அலையும் முகம்','ஆதியில் சொற்கள் இருந்தன' ஆகிய தொகுப்புகளிலிருந்து சில கவிதைகள்...

மூஞ்சூறு,பசு
மயில்,எருமை என
விதவிதமான
வாகனமேறி உலகம்
காக்கிறார்கள்
ஆண் கடவுள்கள்
பெண்கடவுள்கள் மட்டும்
பின் தொடர்ந்தே நடந்திருக்கிறார்கள்
சினந்து வெகுண்டெழுந்த காளிக்கு
சிங்கத்தை வாகனமாக்க
துரதிர்ஷ்டவசமாக
சிங்கத்தை அடக்குவதே
காளியின் வேலையாயிற்று.
***
மணமிக்க
பூச்சூடிக்கொள்கிறேன்
கூடுதலாய்
முகப்பவுடரும்
புடவைகளுக்குக்கூட
வாசனை திரவியம்
பூசி வைத்துள்ளேன்
வியர்வையை
கழுவிக் கழுவி
சுத்தமாய் வைத்திருப்பதாய்
நினைத்துக்கொள்கிறேன்
என்னை
அத்தனையையும் மீறி
ஆடைகளுக்குள்ளிருந்து
தாயின் வாசம்
சொட்டு சொட்டாய்
கோப்புகளில் இறங்குகிறது
அவசரமாய்
அலுவலகக் கழிப்பறையில் நுழைந்து
பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்று அலறும்
குழந்தையின் அழுகுரல்.
*****
அன்பு செய்து
அல்லாடுவதைக்காட்டிலும்
வாய்க்கால் கரையோரம்
புழுவில்லா தூண்டிற்போட்டு
உட்கார்ந்திருக்கலாம்
நீரில் அலையும் முகம் பார்த்து.
****
சுக இருப்புக்காக
கால் மேல் உள்ள காலைக் கண்களால்
நெருடிப்போகாத
பார்வையைச் சந்தித்தவுடன்
சரியாய் இருக்கும்
முந்தானையைக் கூட
இழுத்துவிட்டுக்கொள்ளவைக்காத
குழந்தைக்குப் பாலூட்டும்
வினாடிகளில்...
தரைபிளந்து உள் நுழையும்
அரைப்பார்வை வீசாத
காற்றில் ஆடை விலகும்
நேரங்களில்
கைக்குட்டை எடுத்து
முகம் துடைத்துக்கொள்ளாத
ஆண்களுக்கு
நண்பர்கள் என்று பெயர்.
****
சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...
நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து
கேட்டால் கிடைக்கும்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்
கரு சுமந்து
குழந்தை தவமிருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.
நன்றி- தடாகம்
Thadagam_Logo_Eng

10 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அற்புதமான கவிதைகள்.மிக்க நன்றி அறிமுகத்திற்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் இவர். பெரும்பாலும் இவரின் எல்லா கவிதைகளையும் வாசித்திருக்கிறேன் ஆரம்ப காலத்திலேயே. தொலைபேசியும் இருக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி.
நீங்கள் தேர்ந்தெடுத்த கவிதைகள் யாவும் நன்று.

அகநாழிகை said...

நல்லாயிருக்கு முத்துவேல்,

க.பாலாசி said...

இவரின் கடைசிக்கவிதையை எங்கோ படித்து இன்றும் படித்துவருகிறேன்.....

நல்ல பகிர்வு...

மரா said...

சுகன்ல இவங்க கவித நெறையாப் படிச்சிருக்கேன்.நன்றி

உயிரோடை said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு முத்துவேல்.

"உழவன்" "Uzhavan" said...

ஒரு ஊராட்சியின் நூலகத்தில் "பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்" தற்சமயமாய்க் கண்ணில்பட எடுத்துவந்து படித்தேன்.
அனைத்தும் நன்றாக இருந்தன. அவருக்கு வாழ்த்துக்கள்

ச.முத்துவேல் said...

நன்றி ஸ்ரீ
நன்றி அமித்து அம்மா
நன்றி வாசு
நன்றி க.பாலாசி
நன்றி மயில்ராவணன்
நன்றி உயிரோடை
நன்றி உழவன்

Geetha said...

நல்ல பதிவு ..முதன்முறையாக பார்க்கின்றேன்...புதுகையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழாவிற்கு பதிவு செய்து விட்டீர்களா..அவசியம் கலந்து கொள்ளவும்...நன்றி

Geetha said...

நல்ல பதிவு ..முதன்முறையாக பார்க்கின்றேன்...புதுகையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழாவிற்கு பதிவு செய்து விட்டீர்களா..அவசியம் கலந்து கொள்ளவும்...நன்றி