Monday, May 10, 2010

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் ச.முத்துவேல்


கவிஞர் வே.ராமசாமி
புதுக்கவிதை, நவீன கவிதை என்பதெல்லாம் வகைமை சார்ந்து நாம் பகுத்துக்கொள்வதே. இரண்டிற்கும் பொருள் ஒன்றேயல்லவா. பாடுபொருட்கள், கூறும் முறைகள், வெளிப்பாட்டு உத்தி, தொனி, போன்ற பல்வேறு கவிதைக் கூறுகளின் அடிப்படையில் இவ்வகைப்படுத்துதலை வகுத்துக்கொள்கிறோம். இதழ்களும், படைப்பாளிகளும் அடையாளப்படுத்தப்படுவதுகூட இந்த அடிப்படையில்தான். இந்தப் பிரிவினை அதிக அளவில் இயங்கும் இலக்கிய வடிவம் கவிதையாகவே இருக்கிறது. சிறுகதை, நாவல் ,கட்டுரை போன்ற வடிவங்களில் இயங்கும் பல படைப்பாளிகள் இரண்டுத் தளங்களுக்கும் பொதுவானவராகவே இயங்குவதை, ஏற்றுக்கொள்ளப்படுவதை நாம் காணமுடிகிறது. அதுபோல் இவ்விரண்டு வகைமை சார்ந்த தளங்களுக்கும் பொருந்திவரும் வகையிலும், இந்தப் பிரிபினையை தகர்த்துக்காட்டக் கூடியவகையிலும் சில கவிஞர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் ஒருவராக குறிப்படத்தகுந்த கவிஞர், வே.ராமசாமி.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். குரோட்டன்கள் எனது விரல்களின் நீட்சி என்றார் பழமலய்.(குரோட்டன்களோடு கொஞ்ச நேரம், கவிதைத் தொகுப்பு). ‘எனது /நரம்பெல்லாம் /இலைகள் /அரும்பின./ இடையன்/ தன் ஆடுகளுக்கு /என்னை /கட்டுவானாக, என்கிறார் வே.ராமசாமி. கவிதை என்பது பித்து நிலை. உணர்வெழுச்சிகளாலானது. அதனால்தானோ என்னவோ காதலிக்கத்தொடங்குபவர்கள் பெரும்பாலோர் கவிதையெழுதவும் தொடங்கிவிடுகின்றனர். ராமசாமியின் காதல் அவரின் பிறந்த மண்ணான செவக்காட்டின் மீதும், அம்மனிதர்களின் மீதும், உயிரினங்களின் மீதுமாயிருக்கிறது. இந்தக் காதலை நினைத்து வியப்புறாமல் இருந்துவிடமுடியாது. பிறந்து வளர்ந்த கிராமத்தைவிட்டு பொருள்தேடி நகரத்திற்கு வந்து போராடும் ஒரு இளைஞனின் சித்திரம் இவரின் கவிதைகள் வழி நமக்குக் கிடைக்கிறது. வறட்சியான தன் சொந்த மண் வாழ்வாதாரத்திற்கு ஏதுவாகயில்லாதபோதும், அதன் மீது உயர்வான எண்ணங்களும், கசிந்துருகும் காதலும் கொண்டிருக்கும் அதேவேளை வாழ்வாதாரம் அளிக்கும் நகரத்தை , அதன் நிர்ப்பந்தங்களை, போலித்தனங்களை, பகட்டை வெறுக்கும் ஒருவராகவே இவர் எழுத்தில் தெரிகிறார். நினைவில் காடுள்ள மிருகமாய் தன் செவக்காட்டைச் சுமந்துகொண்டிருக்கிறார். இக் கவிதைகளின் மூலம் வாழ்வின் அற்புதமான உணர்வுகள், நிகழ்வுகள், தருணங்களை உள்ளடக்கிய கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். வேளாண்மை சார்ந்த தகவல்களும், சொற்களும், அனுபவபூர்வமான, கலைபூர்வமான, தருணங்களும் நுட்பமாக இவர் கவிதைகளில் மிகுந்துள்ளது.

செவக்காட்டுப் பகுதியின் வறட்சியை உக்கிரமாகவும் துல்லியமாகவும் பதிவுசெய்கிறது இவர் கவிதைகள். இலக்கியம் எப்போதும் அவலங்களையே, துயரங்களையே பேசுகிறது. இவரின் பெரும்பாலான கவிதைகளின் உணர்வும் விரக்தி மனப்பான்மையே. சிறுகதை , நாவல் ஆகிய வடிவங்களில் விவசாயம் பற்றியும், விவசாயிகளின் நிலைபற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதுபவர்களைப் போல கவிதைகளின் வழியாக அறியத்தருகிறவர்களுள் வே.ராமசாமி முக்கியமானவர் என்று சொல்லமுடியும்.உவமைகள்கூட விவசாயம் சார்ந்த, கிராம வாழ்வு சார்ந்தவையாகவும், தனித்துவமானதாகவும், அசலானதாகவும்,சிறப்பானவைகளாகவும் இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் சம்சாரிகள் என்று அழைக்கப்படுகிற விவசாயிகளின் அவல நிலையையும், சிறப்புக்களையும் கவிதைகளின் வழி அறியத்தருகிற இவர் தன்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பை ‘உலகமெங்குமுள்ள விவசாயிகளுக்கு’ அர்ப்பணித்திருப்பதிலிருந்தே இவரின் பற்றுதல் விளங்கும்.அற்புதமான பல கவிதைகள், அல்லது ஒவ்வொரு கவிதையிலும் குறைந்தபட்சம் அற்புதமான சில வரிகளாவது நிச்சயம் வாசிப்பவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கவிதைகள். கவிதைகளின் இறுதியில் இவர் ஏற்படுத்தும் திருப்பங்கள், மற்றும் முத்தாய்ப்புகள் குறிப்பிடத் தகுந்தவை. உயிரினங்களின் மீதான இவரின் பரிவும், கனிவும் இயற்கையின் மீதான இவரின் நாட்டமும் இவர் கவிதைகள் மீது மிகுந்த மதிப்பை ஏற்படுத்த வல்லவை. சிறுகதைகள், திறனாய்வுகள் ஆகியவையும் எழுதிவருகிறார். செவக்காட்டுச் சித்திரங்கள் என்ற தலைப்பில் கல்கி வார இதழில் தொடராக எழுதியவை விகடன் பிரசுர நூலாக வெளிவந்துள்ளது.

இவரின் படைப்புகள்

1. ஏலேய் ( கவிதை தொகுப்பு, 2005 மதி நிலையம்)

2. கிணற்றுக்குள் முளைத்த மருதாணி (கவிதைகள் 2007 மதிநிலையம் வெளியீடு)

3. செவக்காட்டுச் சித்திரங்கள் ( விகடன் பிரசுரம்)

4.பூ மாரியும், தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும் -( சிறுகதைகள் அச்சில்)

ரெட்டைச்சுழி என்கிற திரைப்படத்தில் ‘பட்டாளம் பாரடா’ என்கிற பாடலின் மூலம், திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகியிருக்கிறார்.

வே.ராமசாமி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் வட்டம் மலையாங்குளம் கிராமத்தைச் சார்ந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இவரது வலைப்பூ http://ramasamyvee.blogspot.com/

ஏலேய், கிணற்றுக்குள் முளைத்த மருதாணி ஆகிய கவிதைத் தொகுப்புகளிலிருந்து சில கவிதைகள் மற்றும் நீளம் கருதி கவிதைகளிலிருந்து சில வரிகள் மட்டும் கீழே தருகிறேன்.

வழிவந்த ஆட்டுமந்தையின்
கால்தடங்கள்தோறும்
கச்சித முத்திரையாகின
பட்டாம்பூச்சிகளின்

வர்ண றெக்கைகள்

***

பனையைப்
பச்சைக் கண்ணாடியெனச்
சொன்னவன் யாரெனத்
தெரியாது போயினும்…

அவன் பிறந்தது
பூமியிலேயே
மிகச்சின்னஞ்சிறியதாய்
ஈனப்பட்ட
ஐந்துகால் ஆட்டுக்குட்டியை
நெஞ்சணைக்கிற
ஆட்டுக்காரன் மகள்
வாழுமிந்த
முல்லை நகரந்தான்

***

வாழ்வறு நிலை

என்னைப் போலல்லாது
எப்போதும் ஊரிலேயே வாழும்
வேலி மரங்களின் மேலே
பொறாமை நிரப்பினேன்

மனதின் சல்லிவேர்களில்
விழுந்துகொண்டேயிருக்கும்
நிகழ்வு கோடாரி

கனவுப் பொதியில்
தீப்பற்றியெரிய
கேட்பாரற்றுக்கூச்சலிடும்
ஆன்மா

பசிவாடை வீசும்

நகரத் தெருக்களில்
அலைந்த கால்களில்
பிசுபிசுக்கும் நிராகரிப்பு
துயரவெளிகளில்
நைந்து நைந்து
துளிர்விடத் தயங்கும்
நம்பிக்கை
திசைகளெங்கும்
அறைவாங்கி துடித்துவிழும்
உயிர்ப் பறவை
இக்கவிதையே பற்றுக்கோடானால்
கழியுமோ பிறவிப் பெருங்கடல்
முளைக்குமோ கருகுமோ
பாலை மணலில்
புதைந்த விதையாய்
கிடைக்கும் வாழ்வு

***

அன்னையிடமும்
உச்சபட்சமாய்
அடிவாங்கிய
குழந்தைபோலானதென்
நிலை

இன்று
பசிய சோள நாற்றில்
வாய் வைத்து
அலகில் அறைவாங்கிய
பசுவின் துயரோடு
பாதையில் போகிறேன்

புறா வாழ்வு

எச்சங்களால் அறியப்படும்
அதன் இருப்பிடம்
சிறுபிள்ளைகளும்
கல்லெறியும்படியானது

பழைய சோற்றை
கிணற்றுள் வீசும்
சிறுசப்தத்திற்கும்
அஞ்சிப் பறக்கும்
அவற்றின் பதற்றம்
எவ்வுயிரும் அறியாதது

முட்டைகளை
நீரில் தவறவிட்டு
மலங்க மலங்க
மின்கம்பத்தில் முழிக்கும்
நாள் முழுவதும்

பொரித்ததானாலும்
கிணற்றின் இடுப்பில்
கிளைத்த மஞ்சணத்திக்கு
தீயிடும்போதோ
உள்விவிழுந்த தென்னையோலைகளை
அகற்றுகையிலோ
அப்பாவின் கண்பட்டு
குழம்புக்கு வரும் குஞ்சுகள்

மறுநாள் தாய்ப்புறாக்களின்
கேவலில் நிறையும்
கிணறு

குயிலோசை

உழுது முடித்த ஓய்வில்
தகப்பன்
தயாரித்துத் தந்த
பூவரசு இலைச் சுருட்டில்
பீப்பி எழுப்பும்
அம்மணச் சிறுவனின் இசைக்குப்
பதிலிறுக்கத்தான்
காலமெல்லாம்
கூவித்திரிகிறது குயில்

செல்லும்
திசைஎல்லாம்
ஊழித்தீ
பிடித்து துரத்தினாலும்
பூத்து வெடிக்கிற
ஒரு பொழுதுவரை
பத்திரமா இரு

என் கனவே நீ

நன்றி - தடாகம்

9 comments:

நேசமித்ரன் said...

அருமையான பகிர்வு

அற்புதமான கவிதைகள்
வாழ்த்துகள் முத்து !

Ashok D said...

’நான் அவ்வளவா படிச்சதில்லைன்னு’ சொன்னீங்களே முத்து... எல்லாம் டூப்பா? ஓ...நீங்க சீரியஸா கலைக்கற மனிதரா.. சரி கவனிச்சுக்கறன் :)

நந்தாகுமாரன் said...

முத்து ... உங்களின் இந்த முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது ...

ச.முத்துவேல் said...

@ நேசமித்ரன்

நேசனே சொல்வதால் ,தெம்பாக உணர்கிறேன். நன்றி நேசன்.

@ அஷோக்

அவ்வளவா படிச்சதில்லை என்று சொன்னதில் சிறிதளவும் சந்தேகமே வேண்டாம் உங்களுக்கு. அது உண்மைதான். இவையெல்லாம் நான் இப்போது படித்துக்கொண்டிருப்பவை.இப்போது ஓரளவுக்கு நான் படித்துக்கொண்டிருப்பதையும் உங்களீடம் சொல்லியிருக்கிறேனே.என்ன செய்வது? 30 வயசுக்கு மேல வாசிக்க ஆரம்பிச்சதால, போனதையெல்லாம் சேத்துப் படிக்க கூடுதலா உழைச்சித்தான் ஆகவேண்டியதாயிருக்குது.

உரிமையோடவும் குறும்பாவும் நீங்க கேட்டாலும், இதையே சாக்கா வச்சி, தன்னிலை விளக்கம் கொடுக்கமுடிந்ததற்காகவும்

நன்றி அசோக்.

@ நந்தா

இதுல நான் எழுதிக் கத்துக்கிறதுங்கிற சுய நலத்தோட பெர்சண்டேஜ்தான் அதிகம்.

நன்றி .

Ashok D said...

//உழுது முடித்த ஓய்வில்
தகப்பன்
தயாரித்துத் தந்த
பூவரசு இலைச் சுருட்டில்
பீப்பி எழுப்பும்
அம்மணச் சிறுவனின் இசைக்குப்
பதிலிறுக்கத்தான்
காலமெல்லாம்
கூவித்திரிகிறது குயில்//

இதை அருமைன்னு சொல்லறதா.. அழகியல்ன்னு சொல்லறதா.. யதார்தம்ன்னு சொல்லறதா...

அழகிய சொல்லாடல்...

Ashok D said...

//அன்னையிடமும்
உச்சபட்சமாய்
அடிவாங்கிய
குழந்தைபோலானதென்
நிலை //

நம்ம storyய யாருங்க உள்ள சேர்த்தது... :(

vasan said...

புது ம‌ழையில் திடுமென‌ ந‌னைந்து
செவக்காட்டில் செருப்புடன் சிக்கிய‌தாய்
மீள‌ முடிய‌வில்லை, இந்த‌ க‌விம‌ழையை க‌ட‌ந்து.

ச.முத்துவேல் said...
This comment has been removed by the author.
ச.முத்துவேல் said...

@ வாசன்
நல்வரவு மற்றும் நன்றி.