Thursday, July 15, 2010

யார் அந்தச் சிறுமி?

இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் ஒரு சம்பவம் பற்றிய கட்டுரை தமிழ் ஓசை நாளேட்டில் வெளியாகியிருந்தது.

காமராஜர் முதல்வராக இருக்கும்போது அவரைப் பார்க்க பலரும் அவர் வீட்டில் குழுமியிருக்கின்றனர். அப்போது 12 வயது சிறுமியும், அவளது தம்பியான 8 வயது சிறுவனும் காமராஜரைப் பார்க்க வருகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போதே ஏழ்மை நிறைந்தவர்கள் என்று அறிந்துகொள்ள முடிகிறது. காவலாளி அவர்களை விரட்டுகிறார். பயத்தால் அச்சிறுவர்களும் வெளியேறி வாசலில் நிற்கிறார்கள். வீட்டிற்கு வந்திருந்தவர்களை வழியனுப்ப வந்த காமராஜர், வாசலில் நிற்கும் அச் சிறுவர்களைக் கண்டு , அவர்களை அணுகி விசாரிக்கிறார். அச் சிறுமியும், தன்னுடைய அண்ணனுக்கு இன்று டைப் பரீட்சை இருப்பதாகவும் அதற்கு பணம் தர இயலவில்லை என்பதால் உங்களைப் பார்க்க வந்திருப்பதாகவும் சொல்கிறாள். காமராஜர் வீட்டிற்குள் சென்று , யாரையோ தொலைபேசியில் அழைக்கச் சொல்லி உத்தரவிடுகிறார். பிறகு, மனம் மாறி மாடி ஏறிச் செல்கிறார். அவருக்கு உடல் நிலை முடியாத காரணத்தால், எப்போதாவது மட்டுமே மாடி ஏறும் நிலையிலுள்ளார். இருந்தபோதிலும், இம்முறை அவராகவே மாடி ஏறி, சில பத்து ரூபாய் தாள்களை ஒரு காகித உறையிலிட்டு அச் சிறுமியிடம் கொடுக்கிறார். மீண்டும் மறு நாள் அதே சிறுவர்கள், காமராஜரைப் பார்க்கவருகிறார்கள். அவரிடம் தேர்வுக்கு பணம் கட்டியதற்கான ரசீதைக் காட்டிவிட்டு வரும்படி சொல்லியனுப்பியிருப்பதாகச் சொல்கிறாள். வாங்கிப்பார்த்த காமராஜர், ’ பாத்தீங்களா. ஏழைப் பிள்ளைகள் ஏமாற்றாது. பணம் கட்டிய ரசீதைக் காட்டுகிறார்கள்’ என்று சொல்கிறார்,
என்பதாக சம்பவம் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் காமராஜரின் திரைப்படத்திலேயே இடம் பெற்றிருப்பதாகவும் நண்பர் சொன்னார். நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

இச்சம்பவத்தை நான் அலுவலகத்தில் என்னுடைய அறைக்குள் தனியாகப் படித்துக்கொண்டிருந்தபோது கட்டுப்படுத்தமுடியாத அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. என் அறைக்கதவு எப்போதும் திறக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் நான் அழுகையைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன். அதுவுமல்லாமல் இப்படியெல்லாம் அழுவதை எண்ணி நான் வெட்கமடைவேன்.ஓவென்று வாய்விட்டு ஒருமுறை வெடித்து அழுதுவிட்டால் சுமை இறங்கிவிடும் என்றும் கருதினேன். ஆனால் செய்யவில்லை. மெல்ல எழுந்து சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

இச்சம்பவம் மூலம் முன்னிறுத்தப்படும் காமராஜரின் பெருந்தன்மைகள் நமக்குப் புதிதல்ல என்பதால் என்னைப் பாதித்தது காமராஜர் அல்ல. இன்னும் சொல்லப்போனால், அவருடைய ஆட்சியில் இத்தகைய நிலையிருப்பதை எண்ணி நாம் காமராஜரை குற்றம்கூடச் சாற்றலாம். ஆனால், இத்தகைய மாற்றங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவதில்லை. தவிர, ஏழைகளின் கல்வி விசயத்தில் காமராஜரைக் குறை காணவும்தான் முடியுமா? ஆனால், காமராஜர் அன்று செய்தது ஒரு தற்காலிக நிவாரணம்தான். வழிப்போக்கன் ஒருவன் செய்கிற உதவியைப் போன்றது. அவர் இன்னும் கூட செய்திருக்கலாம் என்றுதான் படுகிறது.

நான் அழுதது அந்தச் சிறுமிக்காக. பொதுவாக நான் இரண்டு கட்டங்களில் அழுதுவிடுவேன்.

1.உண்மையான அன்பு வெளிப்படும் தருணங்கள்
2. சிறுவர்கள் சுட்டியாக இருப்பதையும், அவர்களுக்கு கல்விபெறுவதில் ஏழ்மை பெருந்தடையாய் இருப்பதையும் காணும்போது.

நான் அந்தச் சிறுமியை நினைத்து ஆனந்தத்தாலும் , துயரத்தாலும் ஒருசேர அழுதிருக்கிறேன். அந்தச் சிறுமி யார்? இப்போது அவர் என்னவானார் என்று ஆவல் எழுகிறது.

கல்வி இன்றுவரையிலும் முதலீட்டுக்குத் தகுந்த பலன் தரும் வணிகமாகவே இருந்துவருகிறது. முன்னைவிட பெரும்பலத்துடன் கல்விபெறுவதைத் தீர்மானிக்கும் ஆகச் சிறந்த காரணியாக பணமேயிருக்கிறது.

12 comments:

விநாயக முருகன் said...

பெருந்தலைவர் இறந்தபிறகு ஒரு தமிழ்த்தலைவர் அவரது வீட்டு பீரோவை உடைத்து சோதனை போட சொன்ன வரலாறு தெரியுமா உங்களுக்கு ?

வடுவூர் குமார் said...

ஹூம்! படித்துவிட்டு பெருமூச்சு மட்டுமே விடமுடிகிறது.
அப்படி இருந்த மாநிலம்/நாடு இன்று தினம் ஒருவர் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்படும் நிலையை பார்க்கும் போது 40 ஆண்டுகளில் நம்முடைய தாழ்வு நிலையை கண்டு தலைகுனிய வேண்டியிருக்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு சில உணர்வுகளை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை.. இல்லையா நண்பா? அந்த சிறுமியை நினைக்கும்போது ஒரு பக்கம் பாவமாகவும் இன்னோரு பக்கம் பெருமையாகவும் இருக்கிறது..

ச.முத்துவேல் said...

@ வினய்
உண்மையிலயேத் தெரியல. யாரவர்?ஆனா சில யூகங்கள் இருக்கு. நன்றி

@வடுவூர் குமார்
உண்மைதான்.
நல்வரவு, நன்றி.

@காபா
ஆமாம் நண்பா. நன்றி

த.அரவிந்தன் said...

ஆத்மார்த்தமான அழுகைக்காக வெட்கப்பட வேண்டியதில்லை. அந்த சிறுமியைப் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஏனோ எனக்குச் சம்பந்தமில்லாமல் வியட்நாம் போரின் போது குண்டு வீச்சில் தப்பி நிர்வாணமாய் ஓடி வரும் சிறுமியின் நினைவு வருகிறது. சமீபமாய் அவருடைய பேட்டி வெளிவந்ததால் இருக்கலாம்.

ச.முத்துவேல் said...

@த.அரவிந்தன்
நன்றி.

VELU.G said...

காமராஜரை பற்றி அவர் பிறந்தநாளில் நல்ல பகிர்வு

நன்றி

ச.முத்துவேல் said...

@VELU G
நன்றி.

மதன் said...

எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும் போலுள்ளது முத்துவேல்!

ச.முத்துவேல் said...

@ மதன்
மதன், மனசைத் தொட்டுட்டீங்க.ரொம்ப நன்றி. ஆனா, பாத்தா ஏமாந்துடுவீங்க :)

கமலேஷ் said...

மனசை தொடும் பதிவு...மற்றும் பகிர்வு..

ச.முத்துவேல் said...

நன்றி கமலேஷ்!