Monday, May 14, 2012

சொல்வனத்தில் தழைக்காத தனிச்செடிகள்

 தீவிர இலக்கியத்தை, படைப்பாளிகளை முன்னிறுத்துவது,இடம்பெறச் செய்வது, விருதுகள் அளிப்பது ஆகிய முன்மாதிரியான, தமிழிலக்கியத்திற்கு மிக அத்தியாவசியமான செயல்களை செய்துவரும் ஒரே வணிக இதழ் ஆனந்தவிகடன் என்றே சொல்லலாம்.

வேண்டாத வேலைதான் .இருந்தாலும்...
ஆனந்தவிகடனில் இடம்பெறும் சொல்வனம் பகுதிக்கு நான் நிறைய நாட்களாவே கவிதைகள் அனுப்பிக்கொண்டுதானிருக்கிறேன்.(சொல்வனம் ரேஞ்சுக்கு நான் எழுதிவிட்ட கவிதைகள்)ஆனால், இதுவரை ஒன்றுகூட இடம்பெறவில்லைதான்.ஏனென்று எனக்குத் தெரியவில்லை.

வைரமுத்து தொடங்கி ஜெயமோகன் வரை கவிஞன் என்று விளிக்கப்பட்டுவிட்ட என்னுடைய தன்னகங்காரம் இப்படியொரு கேள்வியை எனக்குள் எழுப்புகிறதா? அல்லது உள்ளபடியே என் கவிதைகள் சொல்வனம் ’ரேஞ்சுக்கு’ இல்லையா என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் சில கவிதைகளை மட்டும் கீழே அளிக்கிறேன்.(சிலவற்றை என்னுடைய தொகுப்பு நூலில் இடம்பெறச் செய்துவிட்டேன் என்பதால் இங்கே பகிரவில்லை.)


அவள் பெயர் ஹவுஸ்கீப்பிங்

உள்ளே நுழையும் ஒவ்வொரு
புற நோயாளியும்
எடை பரிசோதிக்கப்பட்டுக் குறித்துக்கொள்ளப்பட்டனர்

எடைபோட ஒருத்தி.
கோப்பில் குறிக்க இன்னொருத்தி.

முதன்முறையல்லாதவர்கள்
வருகை நடையை முடித்துக்கொண்டதே
எடை மேடையில் நின்றுதான்

ஹவுஸ்கீப்பிங், ஹவுஸ்கீப்பிங்
என்றொரு தாதியின் அலறலுக்கு
ஓடிவந்து நின்றாள்
ஹவுஸ்கீப்பிங் என்ற பெயர்கொண்டவள்

அதற்குள் இன்னொருத்தி அழைக்க
அவளிடமும் ஓடினாள்

எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும் தேவைப்படுபவளாக
எல்லாமானவளாக இருந்தாள்

ஓய்வுபெறும் வயதைக் கடந்தவள் போலிருந்தும்
ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்தவளின் தோற்றம்
நான் எப்போதோ பார்த்திருந்த
நனைந்த அணில்பிள்ளையை என் நினைவில் மீட்டது.

நோயாளிகளின் உடன்வந்த பெரியவர்களும்
சிறு பிள்ளைகளும் எடை பார்த்துக்கொண்டு
அதைப்பற்றியே பேசிச் சிரித்துக்கொண்டனர்
அந்தச் சின்னத்திரையில் தெரியும் எண்களில்
மனிதர்களை எடைபோட்டுவிடமுடியுமா?

காத்திருக்கும் பார்வையாளர்களில் ஒரு சிறுவன்
கையோடு கொண்டு வந்திருந்த பாடப்புத்தகங்களில்
வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தான்

ஒரு சிறு இடைவெளியில்
ஹவுஸ்கீப்பிங் என்ற பெயர்கொண்டவள்
எடைமேடையில் ஏறி நின்றுவிட்டு
சிறிய வெட்கப் புன்னகையுடன் இறங்கிக்கொண்டாள்
யாருக்குமே அவளுடைய எடை தேவைப்படவில்லை
ரயில் கவிதைகள்
1.
நடைமேடையிலிருந்து
ரயிலுக்குள் ஏறி
முதல் வரிசையில் அமர்ந்திருக்கும்
உங்களிடத்தில் வந்துவிட்டானா
குருட்டுப் பிச்சைக்காரன்?

சக பயணிகள்
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்கிறீர்களே, ஏன்?

ஈயாமல் தவிக்கும்
கூச்சக்கரங்களை
வழி நடத்தவாவது
ஒரு சிறு நாணயத்தை
நீங்கள் பிச்சையிடுங்களேன்
அது குருட்டுப் பிச்சைக்காரனின்
அன்றைய நாளின்மீது
இடப்படுகிற பிள்ளையார் சுழி
2.
கூடைக்காரிகள்
வேர்க்கடலை
விற்றுக்கொண்டே
முன்னே போகிறார்கள்
சுத்தம் செய்பவன்கள்
தோல்குப்பைகளைப் பெருக்கித் தள்ளி
பின்னே போகிறான்கள்
இரண்டிற்கும் இடையில்
பழம் தின்று
கொட்டை போடுகிறவர்கள் பயணிகள்
சுவரொட்டி ஒட்டுபவன்

ஆபாசப்பட சுவரொட்டியில்
ஆடைவிலகிக் கிடக்கும்படி
நேர்ந்த பெண்களுக்கு
திரையரங்கின் பெயர்கொண்ட தாள்களை
ஆடையாக்கித் தரும்
கலியுகக் கண்ணன்

தள்ளு/இழு
இப்புறம் நான்
இழுப்பது தெரியாமல்
அப் புறம் நீ
தள்ளிக்கொண்டிருந்தாய்

அப்புறம் நீ தள்ளுவது அறியாமல்
இப்புறம் நானிழுக்க
கொஞ்சம் திரைவிலைக்கியது
ஒற்றை மரக்கதவு

எதிர்பாராவொரு வேளையில்
என்னெதிரே நீ
உன்னெதிரில் நான்

கடக்கும் கணங்களுடன் நகராமல்
உறைந்து நின்றோம்

அப்போதுதான் அது நடந்தது !
நீ வந்தாய்
என் உள்ளே
நான் சென்றேன்
உன் உள்ளே5 comments:

செய்தாலி said...

நெஞ்சை வருடிய
அழகிய கவிதைகள் கவிஞரே

ஒன்றை குறிப்பட்டு சொல்ல முடியவில்லை

MANO நாஞ்சில் மனோ said...

கவிதைகள் பலே வாழ்த்துகள்....!!!

நந்தாகுமாரன் said...

அது என்ன முத்து சொல்வனம் ரேஞ்சு கவிதை ... இப்படியெல்லாம் தரம் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து ...

நந்தாகுமாரன் said...

தவிர இவற்றில் எந்தக் கவிதையும் என்னைக் கவரவில்லை

ச.முத்துவேல் said...

@செய்தாலி
நன்றி நண்பரே

@ நன்றி மனோ

@ நந்தா

சொல்வனம் ரேஞ்சுன்னு நிச்சயமா ஒன்னு இருக்குதுதான் நந்தா. அது ஒருவகையில் ஆனந்த விகடனின் பெரும்பான்மை வாசகர்களுக்கான இடம். ஆனா, இதேகூட மற்ற வணிக இதழ்களைக் காட்டிலும், தரமான, முன்மாதிரியான தேர்ந்தெடுப்புகள்தான்.இது பொதுவானதுதான். சமயங்கள்ல மாற்றம் நேரலாம்.

ஆ.வி.யிலயே சிறப்பான தனிப்பக்கம் ஒதுக்கி நவீன கவிதை வெளியிடுறதை பார்த்திருக்கீங்கள்ல. அவற்றை எழுதுகிறவர்கள் யார், அவை எப்படிப்பட்ட கவிதைகள் என்பதெல்லாம்? நான் அதுக்கு ஆசைப்படலியே.ஏன்னா, நீங்களே சொல்ற மாதிரி இந்தக் கவிதைகள் பத்தி எனக்கும் ஒரு மதிப்பீடு உங்களைப்போல்தான் இருக்குது.

நானும் திட்டமிட்டு சொல்வனத்துக்குன்னுல்லாம் எழுதறதுல்ல.தோணுறதை, சில சமயம் வீணாக்கவேணாமின்னு நினைச்சு, எழுதிட்டு, அதை இதழ்களுக்கேத்தவாறு அனுப்பிவைச்சுடறதுதான். அந்த வகையிலதான் வேண்டாத வேலைன்னு சொல்றேன். ஆவி போன்ற வணிக இதழ்களின் ரீச் மீது அவ்வப்போது யாருக்குத்தான் ஆசைவராது?

இம்மாதிரி எழுதின ஓரளவு தேறக்கூடிய கவிதைகளை இங்கே வெளியிடலை.சிலவற்றை தொகுப்பில் சேர்த்துவிட்டேன்.அதனால்தான் தொகுப்புப் பற்றி எழுதிய பதிவில், சில கவிதைகளே எனக்குப் பிடித்தவை என்று எழுதியிருந்தேன்

நன்றி நந்தா! ரியல்லி ஐ லைக் யுர் கமெண்ட்ஸ்.