Monday, August 12, 2019

’தொடு’ திரை



காட்சி# 1


சூர்யா தன் அறையில்
துணையில்லாத ஒற்றை காதல் பறவை
வளர்க்கிறான்.
தொடுதிரையில்
காதற்கிளிகளை உயிர்ப்பித்து
கீச்சு கீச்சென பேசி 
சிறகடிக்கச் செய்கின்றான்

அப்போதெல்லாம் அந்த
தனித்த காதல்கிளி
அவன் தோளிலிருந்து பறந்து
தொடுதிரை மீதமர்ந்து
கீச்சு கீச்சென்று ஏதேதோ பேசி
அலகுகளால் கொஞ்சிக் கொஞ்சி
முத்தமிட்டுகொண்டேயிருக்கிறது  

காட்சி # 2 

ஓடும் பேருந்தின்
சன்னலோர இருக்கையில்
அமர்ந்திருந்தான் அவன்

பார்த்தவுடனே யார்க்கும்
புரிந்தது
அவன் பித்தன்

தன் கைபேசியின்
தொடுதிரையில் ஒளிர்ந்த
பச்சைப் புடைவைக்காரியை
ஓயாது
முத்தமிட்டுக்கொண்டேயிருந்தான்
தொடுதிரையை அணைய
விடவேயில்லை

திரையில் விரல்களிட்டு
இழுத்தான்
அவள் விர்ரென்று அருகில்
மிக அருகில் வந்துவிட்டாள்
அவர்களுக்குள் இப்போது
தொலைவேயில்லை
அவள் கிடைத்துவிட்டாள்
அவளன்றி எதுவுமே எதுவுமே
அவனைச் சுற்றி
நடந்துகொண்டிருக்கவில்லை.


இதுதான் கடைசி முத்தம்
இதுதான் கடைசி முத்தம்
இன்னும் ஒரு...
இன்னும் ஒரு...

1 comment:

Shea said...

This is a beautifully written and evocative portrayal of love in the digital age.