Friday, June 5, 2020

அடங்கின குரலின் வீரியம்- அசோகமித்திரன்


           அசோகமித்திரனை வாசிக்கும் பலரும் அவருடைய எழுத்தைப் புரிந்துகொள்ள,தன்னுடைய வாசிப்புடன் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ள, தேடுதல் முயற்சிகளை செய்யக்கூடும். நான் செய்தேன். அந்த வகையில் பயன்படும் என்று கருதியே என்னுடைய  குறிப்புகளை பதிவு செய்கிறேன். அசோகமித்திரனை வாசித்தல் என்ற வழிகாட்டி நூல், கருத்தரங்கு,முயற்சிகள் ஆகியவையெல்லாம் ஏற்கனவே  நிகழ்ந்தவை. தனிப்பட்டமுறையில் எனக்கான குறிப்புகள் என்பதால் சுதந்திரம் எடுத்துக் கொண்டு எழுதியுள்ளேன்.


                    அசோகமித்திரனின் சிறுகதைகள் தோராயமாக 80 கதைகள் வரை மட்டுமே படித்துவிட்டு, நான் எழுதும் குறிப்புகள் இவை. பொதுவாக, ஒரு எழுத்தாளரைப் பற்றி தொகுத்துக் கொள்ள இந்த எண்ணிக்கை போதும். ஆனால், அவர் எழுதியவை, கிட்டத்தட்ட 300 சிறு கதைகள் நெருங்குமாம்.  நற்றிணை பதிப்பகம், யுகன் தேர்வில் அமைந்த  42 கதைகள் தொகுப்பான ’’காந்தி’’, நான் முதலில் வாசித்தது. பிறகு, காலச்சுவடு வெளியீடான ஐந்நூறு கோப்பைத் தட்டுகள், அரவிந்தன் தேர்ந்தெடுத்தவை, வாசித்தேன். இவையல்லாமல் இணையத்தில் சிலவற்றை வாசித்தேன். காந்தி தொகுப்பில் அவருடைய புகழ்பெற்ற புலிக்கலைஞன் கூட இடம்பெறவில்லை.அவருடைய மற்ற நல்ல கதைகளை அடையாளப்படுத்த எண்ணி, புகழ்பெற்ற கதைகளை தவிர்த்திருக்கலாம் என்று வாசித்தால், ஏமாற்றமே. ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் நல்ல தேர்வுகள் நிரம்பியது. அசோகமித்திரன் கதைகளின் வகை மாதிரிகளின் சான்றடையாளங்களாக (நன்றி-கவிஞர் சுகுமாரன்) அமைக்கப்பட்ட தேர்வு .
            அசோகமித்திரன் 1950 களில் எழுதத்துவங்கி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இறுதிவரை எழுதிக்கொண்டேயிருந்தவர். அதனால் அவருக்கு சொல்ல நிறைய கதைகள் இருக்கும்தானே! அவருடைய பல கதைகளில் அவர் ஒரு கதாபாத்திரமாக-பெரும்பாலும் கதைசொல்லியாக-  இருப்பதை உறுதியாக சொல்லலாம். நாமே சில கதைகளின் தொடர்ச்சியாக அமைந்த மற்ற கதைகளையும், கதாபாத்திரங்களையும் காணலாம். இது எனக்கு வேறு ஒரு கோணத்தில் அமியை பெருமையாக எண்ண வைத்தது.அமி உலக இலக்கியம் நன்கறிந்தவர்.ஆங்கிலத்திலேயே நேரடியாகவும் வாசித்தவர்,எழுதியவர். அவற்றை தமிழில் போலி செய்யவில்லை என்ற எண்ணத்தை, சுயசரிதத் தன்மை கொண்ட கதைகள் உணர்த்தியது.(விதிவிலக்கும் இருக்கிறது).

        நான் முதலில் வாசித்த பல கதைகளில் சுயசரிதம் போல் இவரே நேரடியாக இருப்பதைக் கண்டு, இவரால் வேறொரு கதாபாத்திரத்திற்குள் கூடுவிட்டு கூடு தாவி எழுதும் வகையான கற்பனை வளம் இல்லாதவரோ என்று யோசித்தேன்.பின்னர் வாசித்த கதைகள் என் ஐயத்தை நீக்கியது.
            உலக இலக்கியம் அறிந்தவர் என்பதாலோ என்னவோ, கதையின் (கடைசி வரிகளில், எதிர்பார்க்க முடியாத)  ’இறுதி திருப்பம்’ என்கிற சிறுகதையின் ஒரு இலக்கணத்தை அறிந்தவராகவும், தன்னுடைய கதைகளில் மிகச் சிறப்பாக அதைக் கையாண்டிருப்பதையும் காணலாம்.

        அசோகமித்திரனின் கதைகளில் காணப்படும் கதைசொல்லியின்/எழுதுபவரின் குரல், அடங்கிய குரல். அவரது உருவத்தை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தும்  தணிந்த குரல். வேதனைகளை எடுத்துச் சொல்லும் குரல், உற்சாகமாக கூக்குரலிடுமா?  அதேவேளையில், அடங்கிய, சாதுவான குரலில் சொல்லப்படும் நையாண்டிகளுக்கு வீரியம் அதிகம். அது அமியின் கதைகளில் பரவலாக உண்டு. புதுமைப் பித்தனின் கதைகளின் மையமாக இருப்பது, ’நம்பிக்கை வறட்சி’ என்று அவரே சொல்லியிருக்கிறார். அமியின் கதைகளிலும் இதைப் பார்க்கலாம். ஆனால்,புதுமைப்பித்தனின் குரல் ஓசை மிகுந்தது,இடக்கானது, துணிச்சலானது. அமியின்  குரலோ வம்பு வேண்டாம் என்ற தொனி கொண்டது.
அமியின் பாணி என்று பொதுவாக இப்படிச் சொல்லலாம்.ஒரு சிறுவன் பெரியவர்கள் முன் தான் கண்ட சம்பவங்களை விளக்குவானேயானால், அப்போது பெரியவர்கள் இன்னும் அதிகமாக புரிந்துகொள்ளக் கூடுமல்லவா! அதுவொரு சிறிய சவால்தானே.அமியும் அதற்கு நிகரான-அப்படியான அல்ல- விலகலை கடைபிடித்து சவாலை வாசகர்களுக்கு கொடுக்கிறார்.ஆசிரியர் கூற்றாக அல்லாமல், காட்சிப் படுத்துதல் தன்மையில் அமைந்து, வாசக இடைவெளியோடு கூடியவை.
அமியின் மொழி, பொதுவாக எழுத்துத் தமிழ். பேச்சு வழக்கு, வட்டார வழக்கு என்பது இடம்பெற்றாலும் கூட எழுத்து நடையிலான நல்ல தமிழே அவருடைய மொழி. உரையாடல்களில்கூட எழுத்து நடைத் தமிழ்தான். அதனால்தான், கதைகள் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கழித்துப் படிக்கும்போதும் மொழியில்  அன்னியத்தன்மை இல்லை. அசோகமித்ரனின் சமகாலத்தில் எழுதப்பட்ட வேறுசில எழுத்தாளர்களின் கதைகளின் பழைய மொழி நடை, சமஸ்கிருதம் கலப்பு போன்றவை இல்லாததால் புதிது போலவே இருக்கிறது இன்று வரை அவருடைய மொழி. ஆனால், வலிந்து திணித்த மொழி வேட்கையாகவோ,  செயற்கையாகவோ, உறுத்தாமல் வாசிப்பவர்க்கு இயல்பாகவே இருக்கிறது.
       அசோகமித்திரனின் களம் என்பது பெரும்பாலும் நடுத்தர வர்க்கம்தான்.அவர்களின் ‘ஏழ்மை’தான். வீணை கற்றுக் கொள்ள முடியாதவரின் ஏக்கம் போன்றவைகள். ஆனால், அதனினும் கீழான, பசிக்கொடுமையை அனுபவிக்கும்,’சோற்றுக்குச் செத்த’ மனிதர்களின் கதைகளையும் எழுதியேயிருக்கிறார்.

அமியின் கதைகளை பொதுவாக 4  வகைகளாக பிரிக்கலாம். 1.செகந்தராபாத் கதைகள் 2. சென்னை கதைகள் 3. திரைப் பின்னணி கொண்டவை 4.இதர கதைகள். செகந்தராபாத் கதைகள் என்றே ஒரு தொகுப்பு இருப்பதை பார்த்தேன்.
       அ.மியை கணங்களின் கலைஞன் என்று ஜெயமோகன் ஏற்கனவே  சொன்னதை மனதில்  கொண்டு அமியின் நிறைய கதைகளை அணுகலாம்.உளவியல் தன்மை கொண்ட ஒரேயொரு கணத்தை மட்டுமே மையமாக்கி , நகர்ந்து செல்லும் கதைகள் ஏராளம்.பொதுவாகவே, அமி என்றில்லாமல் சிறுகதைகளின் மையமே எப்போதும் இதுபோன்றதொரு தருணத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. சட்டென்று நினைவிலெழும் மற்ற எழுத்தாளர்களின் சில சிறுகதைகளை நினைவுகூர்ந்தால் உணரலாம்.ஆனால், அமி நமக்கு அவ்வளவாக முக்கியம் என்று படாத,சாதாரணமான  தருணங்களை கூட  நிறைய பக்கங்களில் தொடர்பில்லாமல் நீட்டித்து கவனப்படுத்துகிறார். அதைப் படிக்கும்போது  அயர்ச்சி ஏற்படுகிறது.
              எடுத்துக்காட்டாக,’நூலகத்துக்குப் போகும் வழியில் கிரிக்கெட் மேட்சை வேடிக்கை’ பார்ப்பவருக்கு, ஹாட்ரிக் பந்து வீசவிருக்கும் பையனின் மேல் ஒரு வெறுப்புத் தோன்றி அவன் முயற்சி தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.பந்து வீசுபவன் துள்ளி ஓடும் விதமோ, தோற்றமோ அவன் மீது வெறுப்பை உண்டாக்கிவிட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொண்ட அடுத்த வினாடியே, தன் மனதை மாற்றிக்கொண்டு, பந்து வீசுபவன் வெல்ல வேண்டும் என கதைசொல்லி நினைக்கிறார்.இதுவொரு சின்ன விசயம் என்று தோன்றலாம்.அல்லது இதைச் சொல்ல இவ்வளவு நீளமான விவரிப்பு தேவையற்றது என்றும் தோன்றி, சலிப்பு ஏற்படுகிறது.
           காட்சி என்ற கதை, 13 பக்கங்கள் நீளமான விவரிப்பு கொண்டது.ஆனால், அந்தக் கதை ஒரே பக்கத்தில் சொல்லிவிடக்கூடியது.அப்படியெனில், அதில் சொல்லப்படும் விவரிப்புகள் கதைக்கு துணை சேர்க்காமல், தேவையற்ற நீளம் கொண்டது.

            நவீனக் கவிதைகள் பெரும்பாலும் குட்டிக் கதைகளாகவே, நுண் சித்தரிப்புகளாகவே இருக்கின்றன.அமி செய்யும் கணங்களை கவனப்படுத்துவது,கண்டடைவது ஆகியவற்றை கவிதைகளே அளவில் சிறியதாகவும், போதுமான  நுட்பத்துடனும் செய்துவிடுகின்றன.அந்த வகையில், அமி கவிதைகளாகச் சொல்லியிருக்கலாம். அவருடைய வடிவம் அதுவில்லையென்றால், அளவில் சிறிய கதைகளாக, கச்சிதமாக சொல்லியிருக்கலாம்.
             மேலும், அவர் கதைக்குள் மனவோட்டங்களை எழுதித் தள்ளுகிறார்.காலத்தையும், கதையையும் சிவப்புக் கொடி காட்டி, உறைந்து நிற்கச் செய்துவிட்டு மனவோட்டங்களை கிளைகிளையாக பரவி விரிந்துகொண்டே போகும்படி எழுதுகிறார். ’’ஒருவேளை’’ ....என்று துவங்கி ’அப்படியிருக்குமோ, இப்படியிருக்குமோ, அவனாகயிருக்குமோ அல்லது இவனாகயிருக்குமோ’ என்பது போன்று போய்க்கொண்டேயிருக்கும். பிறகு, கதையை உறைந்த நிலையிலிருந்து மீட்டு, நகர்த்திக் கொண்டு போகிறார்.சுந்தரராமசாமி அவருடைய ஒரு உரையில் சொந்தமான ஒரு  உதாரணத்தோடு அமியின் இத் தன்மையை குறிப்பிட்டிருக்கிறார்.

            இந்த மனவோட்ட எழுத்து சில கதைகளில் பொருந்தி வருகிறது.சிலவற்றில் தேவையற்ற நீளமாக அமைந்து சலிப்பு ஏற்படுத்துகிறது.சிலவற்றில் கதையையே சிதைக்கும் வகையில் எனக்கு எரிச்சலையே ஏற்படுத்திவிட்டது என்பதையும் சொல்ல வேண்டியதாகிறது.
அவருடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றான காத்திருத்தல் என்கிற கதையில், இந்த மனவோட்டம் இயல்பானதாக, கதையோடும், காலத்தோடும் நிகழ்காலமாக நகருவதோடு, தத்ரூபமாகவும் இருக்கிறது.
தமிழில், நோபல் பரிசு வாங்கத் தகுந்தவர் அசோக மித்திரன் என்ற ஜெயமோகனின் கருத்து என்னுடைய எதிர்பார்ப்பை கூட்டியிருக்கலாம்.ஆனால், படிக்கும்போது நிறைய சாதாரணமான கதைகளை( பல எழுத்தாளர்களுக்கும் நேர்வதுதான்)  படித்தபோது ஒருவித ஏமாற்றம் அடைந்திருப்பேன்.மேலும், அமியின் எழுத்துக்கள் ஏமாற்றும் எளிமை கொண்டவை என்று எற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.

           ஆனாலும், மீண்டும் ஜெயமோகன் சொன்னதுதான். ‘அமி 50 கதைகளுக்கு குறையாமல் நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.ஒரு தனி நபருக்கு இந்த எண்ணிக்கை என்பது சாதனைதான் ‘ என்கிறார். அப்படித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

               எனக்குப் பிடித்த கதைகளில் சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன். காத்திருத்தல், பார்வை, உத்தரராமாயணம், கோலம், ராஜாவுக்கு ஆபத்து, ஐநூறு கோப்பைத் தட்டுகள், திருப்பம், புலிக்கலைஞன், சுந்தர், நடனத்துக்குப் பின், வழி, விடிவதற்குள், அப்பா மகள் மகன், அப்பாவிடம் என்ன சொல்வது?, முறைப்பெண் & பாக்கி (இந்தக் கடைசி 2  கதைகளும் எப்போதும் ஒரு சிரிப்போடுதான் நினைவுகூர முடிகிறது. அதிலும், பாக்கி கதை, வயது வந்தவர்களுக்கு மட்டும் ரகம் என்பதால் அந்தச் சிரிப்பு வேறு தினுசு)

No comments: