Tuesday, February 24, 2009
எல்லாப் புகழும் இறைவனுக்கே
நம் வலைப்பதிவுலக நண்பர்கள் பலரும் தன்னுடைய விருப்பமாக இளையராஜா அவர்களை மட்டுமேக் குறிப்பிட்டு எழுதியிருந்தை பல இடங்களில் படித்திருக்கிறேன். இளையராஜாவின் அபிமானம் பற்றி மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. ஆனால், ரஹ்மானை ஏன் விட்டுவிடுகிறார்கள் என்று நான் வருந்துவதுண்டு. இன்று முதல் ரஹ்மானைப் பற்றி மட்டுமே குறிப்பிடத் துவங்கினால், அதுவும் சரியானதாக இருக்க முடியாது.
10,12 வருடங்களுக்கு முன்பு, என்னிடம் பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு நண்பர்கள் கேட்டபோதெல்லாம் அதில் ரஹ்மானின் மெல்லிசைப் பாடல்கள்(MELODY SONGS) ஒரு ஒலிநாடா அளவுக்கு எழுதித் தருவது என் வழக்கம். ஒவ்வோரு படத்திலும் ஒரு பாடலாவது, நல்ல மெல்லிசைப் பாடலாக இருக்கும். என்னுடைய அடுத்தத் தேர்வாக இருப்பது திரையிசையில் வந்த பாரதியார் பாடல்கள்.
ரஹ்மானின் பாடலைக் கேட்கும் மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும், இது ரஹ்மானின் பாடல் என்று. அதற்குக் காரணம் அவர் கையாளும் இசைக் கருவிகளும், இசையமைப்பும் என்பது என் கருத்தாகும். மேற்கத்திய கலாச்சார பாணியில் இசையமைப்பதுபோல் தோற்றமளித்தவர் ஆச்சரியப்படுத்தியது, கிழக்குச் சீமையிலே படத்தில் வந்த நம்ம ஊர் இசையமைப்பில் .அதைத் தொடர்ந்து கருத்தம்மா போன்ற படங்கள்.
தமிழகம், தென்னிந்தியா, வட இந்தியா, பிறகு ஒட்டுமொத்த இந்தியா, அதன் பின் உலகையேத் திரும்பிப் பார்க்க வைத்தத் தமிழர் ரஹ்மான்.’வந்தே மாதரம்...சுஜலா.’.என்றெல்லாம் வருமே. அந்தப் பாடல் அவ்வப்பொழுது, தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும். அப்போதே அந்தப் பாடல் என்னை உருக்கிக் குழைத்துவிடும். இப்படி நிறையப் பாடல்களைச் சொல்லலாம்.
சுதந்திர தினப் பொன்விழா ஆண்டில், ரஹ்மான் சென்னை மெரினாக் கடற்கரையில் , இசைநிகழ்ச்சி நடத்தியபோது, அதைப் பார்க்கும் நல்வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. மிகக் குறைந்த அளவிலான இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தியதைப் பார்த்தபோது, வெறும் ஒரு ரசிகனான எனக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவரின் பாடல்களில் நான் குறிப்பிட விரும்புகிற அம்சம், அவை மிகக் கலவையான ,எளிதானதல்லாத மெட்டுக்கள் என்பது. எடுத்துக்காட்டாக, நியூயார்க் நகரம், முன்பே வா போன்ற பல பாடல்களைச் சொல்லலாம்.இதில், நியூயார்க் நகரம் பாடல் பாடுவதற்கு மிகவும் சிரமமானது என்பது என் கருத்து. ஆனால், அவரைத் தவிர வேறு யாராவது பாடியிருந்தால், ஒருவேளை இப்பாடலின் சுவை மாறுபட்டிருக்கலாம்.இவர் செய்த இன்னொரு நல்ல செயல், பல பாடகர்களை தமிழுக்கு அறிமுகம் செய்ததும், இறக்குமதி செய்ததும்.
ஆஸ்கார் விருது விழாவில்,ரஹ்மான் உணரச்சிவயப்பட்டுப் பேசிய உரைப் போற்றுதலுக்குரியது.’எனக்கு எது கிடைக்காவிட்டாலும் கவலையில்லை. ஏனெனில் என் தாய் இங்கே இருக்கிறார்’,
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனத் தமிழில் சொன்னபோது,உற்சாகத்தில் கூக்குரலிட்டேன். ரஹ்மானை சொந்தம் கொண்டாடி மகிழ்ந்தேன். தமிழில் பேசியதற்காக, தமிழர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒரு தமிழனின் உலகளாவிய இந்த வெற்றி, ஒவ்வொரு தமிழரின் மனதிலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இன்னும் நம்மிடையே உள்ளப் பல இசையமைப்பாளர்களும் திறன் பெற்றவர்களே. அவர்களும் இதுபோன்ற வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவோம். சட்டென்று, நினைவுக்கு வருபவர், யுவன். அவரின், முதிர்ச்சியான, பக்குவப்பட்ட, சலனமில்லாத, அடக்கமான, பேச்சை தொலைக்காட்சியில் பார்த்தபோது, வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ரஹ்மானுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.
Monday, February 23, 2009
படித்ததில் பிடித்தது
(அம்ருதா வலைத்தளத்திலிருந்து எடுத்து ஒருங்குறிக்கு(UNICODE) மாற்றியுள்ளேன்.மற்றும், வரிகளின் அமைப்பு ஒருவேளை ,கீழே இருப்பதிலிருந்து மாறுபட்டிருக்கலாம்.)

நேரமிருந்தால்
- கணேசகுமாரன்
வீதிகளில் திரியும்
மனநிலை தவறிய ஒருவனின்
கண்களை உற்றுப் பாருங்கள்
அவன் அழுக்கு ஆடைகளை
முகர்ந்து பாருங்கள்
மனநிலை தவறியவர்
பெண்ணெனில்
அவள் நிர்வாண அலட்சியத்தைப் பாருங்கள்;
ரசிக்காதீர்கள்
எவருக்கும் புரியாத மொழியில்
இறைவனை அழைத்து
சுருங்கி காய்ந்து வெடித்த
தன் முலைகளை சுட்டி
முறையிடுபவளை நிதானியுங்கள்
உதிரம் உறைந்த யோனியை
ஒரு கையால் தட்டித் தட்டி
தரை அதிர நடக்கும் அவளின்
புட்டத்தின் மீதிருக்கும்
சூட்டுத் தழும்பினை
கவனித்து அதிருங்கள்
உங்களுக்கு
இந்தக் கவிதை கிடைக்கலாம்
Friday, February 6, 2009
ஜி. நாகராஜனின் குறத்திமுடுக்கு
கோகுலத்தில் சீதை என்ற திரைப்படம் வெளியான புதிதில் பார்த்தேன். என்னை மிகவும் தொந்தரவு செய்த படம் அது. மிகவும் பிடித்ததும்கூட. ஜி. நாகராஜன் அவர்களின் குறத்திமுடுக்கு என்கிற குறு நாவலை தற்போதுதான் படிக்கவாய்த்தது. 1963 ல் வெளியிடப்பட்ட இக்குறு நாவல்தான் இவரின் முதல் நூலாகும். நானொரு புதிய வாசகன் என்பதால் இப்போதுதான் படித்தேன் என்கிற குறுகுறுப்பு இருந்தாலும் இப்போதாவது படிக்க வாய்த்ததே என்று ஆறுதல் பட்டுக்கொள்கிறேன்.
தன்னுடைய சமூக இருப்பிற்கு அவமரியாதை, குந்தகம் என்று நினையாமல் வெளிப்படையாக, உண்மையாக எழுதிய ஜி. நாகராஜன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார்.புகைப்படத்தில் பார்த்தால் ஒரு ராணுவ அதிகாரியைப் போன்ற தோற்றமும், மிடுக்கும், வசீகரமும் கொண்டுள்ள அவரின் இறுதிக்காலம் பற்றி எங்கோ கொஞ்சம் படித்த நினைவு, என் நெஞ்சை அறுக்கிறது. இப்படியெல்லாம் அவருக்கு நேர்ந்திருக்க வேண்டாம்தான்.
இக்குறு நாவலின் முன்னுரையாக ஜி. நாகராஜன் அவர்கள் எழுதியிருப்பது ஒன்றே போதும், அவர் யார் என்பதை நாம் உணர. அது பின் வருமாறு.
என் வருத்தம்
நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; “இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.
குறத்தி முடுக்கு என்பது ஒரு பகுதியின் பெயர்.பாலியல் தொழில் பரவலாக நடக்கும் பகுதி. இக்குறு நாவலின் அத்தியாயங்கள் இரண்டு பாதைகளாகப் பயணிக்கிறது. ஒரு அத்தியாயம் இப்பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்ட, அடுத்த அத்தியாயம் கதையின் நாயகனின் அனுபவங்களை விவரித்துக்கொண்டுபோகிறது. இவ்வாறாக மாறிமாறி சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போதே பாலியல் தொழில் புரியும் பெண்களின் மேல் நமக்கு ஒரு கழிவிரக்கத்தை ஆசிரியர் தன் எழுத்தின் மூலம் கொண்டுவந்துவிடுகிறார். தங்கம் என்பவள் கதை நாயகனை மணக்காமல், தன் தகுதிக்கு ஏற்றவன் என்று நம்புவதாலோ என்னவோ, நடராஜனையேத் திருமணம்(!) செய்துகொண்டு, கதை நாயகனை ஏமாற்றிவிடுகிறாள்.(!) ஆனால் இது விவரித்துச் சொல்லப்படாமல் அவரவர் ஊகத்திற்கு விடப்பட்டிருப்பது சிறப்பு. குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் ஒரு விபச்சாரியின் கருவோ சிதைவுக்குள்ளாகிறது. தூக்கில் தொங்க விரும்பும் ஒரு விபச்சாரி, அதுகூட நிறைவேறாத நிலையில் நடைபிணம்தானே அவள் வாழ்வு. மது, மாது போன்றவை எப்படி ஒரு உன்னதமான மனிதனைக்கூட சீரழித்துவிடும் என்பதற்கும் உதாரணமாகவே ஜி. நாகராஜன் அவர்கள் வாழ்ந்துவிட்டுப்போய்விட்டார் என்பது வருத்தமானதுதான் , எனினும் எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது.
Saturday, January 17, 2009
எஸ். ராமகிருஷ்ணனுடன் 2 நிமிடப் பேச்சு.
அடையாளம் பதிப்பகத்தின் கடைக்குள் கண்மணி குணசேகரனின் உயிர்த் தண்ணீர் (சிறுகதைகள்), மற்றும் அ.வெண்ணிலாவின் ‘நீரில் அலையும் முகம்’ (கவிதைகள்), வாங்கிக் கொண்டிருந்தபோது, வாசலில் உரக்கவும், மிரட்டல்போலவும், ஒரு குரல் இலக்கியம் பேசிக்கோண்டிருந்தது.
யாரது என்று எட்டிப் பாரத்தால் நம்ம எஸ்.ராமகிருஷ்ணன். உடன் உரையாடிக் கொண்டிருந்தவர் ந.முருகேச பாண்டியன் அவர்கள். அவரை நேரில் பார்த்தபோது நன்கறிந்த இலக்கிய முகம் என்று மட்டும் பிடிபட்டுவிட்டது. ஆனால், யாரென்பது தெரியவில்லை. நல்ல வேளையாக, கடைக்காரர் அப்போதுதான் தொலைபேசியில் இவர்கள் இருவரும் இங்கிருக்கும் விபரத்தை யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார்.
மாலையில் உயிர்மை கடையில் இருப்பதாகத்தானே இணையத்தில் குறிப்பிட்டிருந்தார். என்று யோசித்தவாறு அவரிடம் போனேன். நான், எனது நண்பனும், வகுப்புத் தோழனுமான மணிமாறனுடன்தான் செல்வதாகத் திட்டம் வைத்திருந்தேன். ஆனால், அவனுக்கு அன்று முக்கியமான வேலை (உயர்நீதி மன்ற வழக்கறிஞர், நல்ல இலக்கிய வாசகன்) ஒன்று வந்துவிட்டதால் வரமுடியாத காரணத்தை வருத்தத்தோடுத் தெரிவித்திருந்தான். அவனுக்கு திரௌபதை கூத்துப் பற்றியும், நாடகங்கள் பற்றியும் அறிய வேண்டியிருந்தது. அதற்காக, எஸ்ரா வைச் சந்திக்கவேண்டும் என்பது எங்களின் திட்டமாயிருந்தது. ஆனால் அவனால் வரமுடியாமல் போகவே, நானே கேட்டுவிடுவது என முடிவு செய்து அவரிடம் போனேன்.
தங்கள் இணையப் பதிவுகளைப் படித்து வருவதாகச் சொன்னேன். நல்லாருக்கா என்று ஆர்வமாகக் கேட்டார். எனக்கு வேண்டியதைப் பற்றி விபரங்களைச் சொன்னேன். சிறிதும் தயங்காமல், ஆர்வத்தோடு உதவி செய்தார். அவருடைய செல்பேசி எண்ணை வேண்டுமானால் பெற்றுக்கொண்டு நண்பரைப் பேசச் சொல்லுங்கள் என்றார். நான் உடனடியாக, என் கைபேசியிலிருந்து அவனை அழைத்து, ‘ மணி, எஸ்ரா பேசறார். பேசு’ எனக் கொஞ்சமும் மரியாதையில்லாமல் அவர் முன்னாலேயே சொல்லிவிட்டேன். இப்போது வருத்தப்படுகிறேன்.அவர் விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் முருகேசபாண்டியன் அவர்களிடம் சற்று நேரம் மொக்கைப் போட ஒதுங்கினேன். எஸ்ரா பேசி முடித்ததும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். (செல்பேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டேன். யார் கேட்டாலும் தரமாட்டேன். ஆ.. அஸ்கு...புஸ்கு)
புத்தகக் காடசியரங்கில் நான் சந்தித்த மற்ற சில பிரபலங்கள் அழகிய சிங்கர், ரா.ஸ்ரீனிவாசன், பழனிவேள், மற்றும் உன்னதம் ஆசிரியர்(கௌதம சித்தார்த்தன் என்று நினைக்கிறேன்).
இரண்டு இளைஞர்கள்,தலையணை அளவான புத்தகங்களாகவே வாங்கிக் கொண்டிருந்தனர். வினோதமாகப் பார்த்தேன். ஒரு இளம்பெண் மற்றுமொரு இளைஞர் தமிழினியில் நம்ம தல ஜெமோ புத்தகங்களை என்ன ஏது என்றெல்லாம் ஆராயாமல், எல்லாவற்றிலிருந்தும் ஒன்றை எடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். அட! நம்ம ஆளுங்க ! (ஆனா,நான் வாங்காமலே இப்படிச் சொல்லிக்கக் கூடாது)
.
Tuesday, January 13, 2009
கண்மணி குணசேகரனின் அஞ்சலை
கண்மணி குணசேகரன் ,2007 ஆம் ஆண்டில், 40 வயதிற்கும் குறைந்த இளம்படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.
கண்மணி குணசேகரனின் அஞ்சலை என்கிற புதினம் தமிழினி பதிப்பகத்தின் இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.
கண்மணி குணசேகரன் ஒரு சாதாரண ITI படித்த தொழிலாளி. அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணிபுரிகிறார். சிறுகதை,கவிதை, புதினம், கட்டுரைகள், எனப் பன்முகத்திறன்கொண்ட, தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி.நடு நாட்டு சொல்லகராதி என்ற ஒன்றைத் தன் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கியிருக்கிறார். ஒரு பல்கலைக்கழகமோ, பெரிய குழுவோ செய்ய வேண்டிய வேலையை தனி மனிதராகச் சாதித்திருக்கிறார். அதுவும், விளம்பர நோட்டீசுகள் போன்ற தாள்களைப் பயன்படுத்திப் பின்னால் வெள்ளைப் பக்கங்களில் எழுதித் தகவல் திரட்டியிருக்கிறார். எனவேதான், அவரே தன்னுடைய அஞ்சலை மற்றும் நடு நாட்டு சொல்லகராதி ஆகிய இரண்டையும் முத்திரைப் படைப்புகளாக குறிப்பிடுகிறார். அஞ்சலைப் போன்றொரு புதினத்தை ஒரு கிராமத்தான்தான், விவசாயிதான் எழுத முடியும். கண்மணி அப்படிப்பட்டவர்தான்.
அஞ்சலையின் சிறப்புகளாக நான் கருதும் சிலவற்றை (ஒழுங்கற்ற முறையில் ) பட்டியலிடுகிறேன்.
முதலாவதாக, ஒரு பெண்ணை மையமாக வைத்த புதினத்தை ஒரு ஆண் எழுதியிருப்பது வரவேற்கத் தகுந்தது. நடுநாடு என்று சொல்லப்படும் முந்திரிக்காட்டுப் பகுதியின் செம்மண் புழுதி, படிக்கிறவர்களின் கால்களிலும் ஒட்டிக் கொண்டுவிடும் அளவுக்கு இவரின் விவரிப்புகள் ,ஒரு திரைக்கதை போல எழுதப்பட்டுள்ளது. ஒரு கதையை 4 வரிகளிலும் சொல்லிவிடமுடியும்.400 பக்கங்களுக்கும் எழுதலாம். 400 பக்கங்கள் எழுத ஏதோ ஒரு திறன் தேவைப்படுகிறது.அது கண்மணிக்கு மிக நன்றாக வாய்த்திருக்கிறது.
ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால், அது ஒரு குழுவினரின் உழைப்பு. ஆனால், ஒரு திரைப்படைத்தை பார்ப்பதுபோல் நம் கண்முன் காட்சிகளை துல்லியமாக விவரிக்கிறார்.
பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பார்களே அதுபோல அமைந்ததுதான் அஞ்சலையின் வாழ்வு. அஞ்சலை என்கிற தலித் பெண்ணின்
வாழ்வில் மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்கிற பச்சாதாபம் நமக்கே ஏற்படுகிறது.முதல் கணவன், ஆளே மாறிப்போய் ஏமாற்றுகிறார்கள் என்றால், இரண்டாவது கணவனின் பெயர்கூடத் தெரியாமல் திருமணம் நடக்கிறது.
”நேற்று மணக்கொல்லையில் விடிந்தபோது, இன்று தொளாரில் விடிந்தது”என்று ஒரு இடத்தில் சித்தரிப்பு வரும். இதுதான் அஞ்சலையின் வாழ்க்கை.
அஞ்சலை வரப்பில் நடந்துபோகிறாள் என்றால், அங்கிருப்பது வரப்பும், அவளும் மட்டும்தானா? அணில் இருக்கிறது.அது பழம் தின்னுகிறது. முந்திரி மரங்கள் இருக்கிறது. அந்த முந்திரி மரங்களைப் பற்றிய குறிப்புகளை விளக்குகிறார்.
தேங்காய் எண்ணெய் பனிக்காலத்தில் உறைந்துபோய் இருப்பதை ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார்.
அவளின் கெட்ட நேரம் ஒரு கணவன் என்பது இல்லாமல் இருவருக்கு வாழ்க்கைப்பட நேர்கிறது. எனினும், சோரம் போவளாக இல்லை.
ஒரு கிழவன்/கிழவிக்கிருக்கும் அனுபவப் பக்குவத்தோடு எழுதியுள்ளார். அதிலும் பெண் வாழ்வை, வலியை, உணர்வை, பழக்க வழக்கங்களை எழுதியிருப்பது வியக்க வைக்கிறது.
”கையெடுத்துக் கும்பிட்டாள் பால் சுறாக்காரனையும்,தன் அக்கா வீட்டுக்காரனையும் மானசீகமாய்.,” என்று ஒரு இடத்தில் வரும். நெகிழவைக்கும் தருணங்கள் அவை.
”தண்ணீர் பட்டு நனைந்த தரை புழுதியடங்கிப் போயிருந்தது” என்று ஒரு இடத்தில் சம்பந்தமே இல்லாதது போல் ஒரு சித்தரிப்பு வரும். ஆனால், இது நுணுக்கமான, குறியீட்டு சித்தரிப்பு என்றே நான் கருதுகிறேன்.
ஒரு கட்டத்தில்,அஞ்சலை மற்றும் அவளின் நடு அக்காவும் உரையாடும்காட்சிகள் நெகிழ்ந்து கண்ணில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது.
”இல்லாதவளின் கதை” என்கிற தலைப்போடு இரண்டாவது பதிப்புக்கு கண்மணி முன்னுரை எழுதியுள்ளார். இதுதான் இக்கதையின் மையமோ என்று நான் யோசிக்கிறேன். இருக்கப்பட்டவளாக அவளது பெரிய அக்காவே இக்கதையில், இம்மையத்துக்கு வலு சேர்க்கும் உதாரணமாக வந்து போகிறாள்.
“அவசரத்துல அண்டாக்குள்ள கை நுழையலயாம்” போன்ற கிராமத்து சொலவடைகளும், உருவகங்களும் நிறைந்து காணப்படுகிறது.
இன்னும் நிறைய எழுதலாம். எனக்குத்தான் தெரியவில்லை.
நூல் விபரம்
அஞ்சலை ( புதினம்)
ஆசிரியர்-கண்மணி குணசேகரன்
யுனைடெட் ரைட்டர்ஸ் (தமிழினி)
63, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை, சென்னை, 14.
விலை .ரூ.160
பக்கங்கள் 320
Monday, January 12, 2009
நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் நத்தை.
நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் நத்தை.
கவிஞர் மயூரா ரத்னசாமி அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பாக வந்துள்ள நூல்தான் ”நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் நத்தை.” கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான பரிசைப் பெற்றிருப்பதாக அறிய முடிகிறது.
வாழ்வைப் பித்து நிலையில் அல்லாமல் தத்துவார்த்தமாக அணுகும் நடைமுறை இவர் கவிதைகளில் உள்ளது.சிந்தனையில், நவீனத்தன்மை நன்றாகப் புலப்படுகிறது. கலவையான கவிதைகள் தென்பட்டாலும் பெரும்பாலும் நவீன கவிதைகள். காதல், நகைச்சுவை, உணர்ச்சிமயம், சாதாரணத் தன்மை கொண்ட கவிதைகள் எனவும் சில தென்படுகிறது. முதல் தொகுப்பு என்பதால் ஆரம்ப நிலையில் எழுதப்பட்ட, இதழ்களில் அச்சாகியும்விட்ட ,கவிதைகளை தொகுப்பில் இடம்பெறச் செய்திருக்கக்கூடும். எனினும் இவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தென்படுகிறது. அடுத்தத் தொகுப்புகளில், கவிதைகளில் நிச்சயம் அடர்ந்த ,செறிவுமிக்க, நவீன சிந்தனையுள்ள கவிதைகள் மட்டுமே நிறைந்திருக்கும் என்பது திண்ணம். கவிதாயினி அ.வெண்ணிலா மற்றும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் அணிந்துரை எழுதியுள்ளனர்.
இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளாக நான் குறிப்பிடுவது இடங்கொடுத்தான்,உறிஞ்சான், உறவு, முகங்கள், செகப்பு, சித்திரம்- 1, போன்ற இன்னும் சில கவிதைகளையும் சொல்லமுடியும். நகரம் சார் வாழ்விலுள்ள சிக்கல்கள், செயற்கைத்தனம், நடைமுறை இயலாமைகள் “காவல்”, ”நகரத்து மழை” போன்ற கவிதைகளில் பகடியோடுப் பதிவாகி, பலவிதமான சிந்தனைகளை நம்முன் எழுப்புகிறது.கிராமத்தான்களை நகரவாசிகள் கேலி செய்கிறார்கள்.
மாறாக, நகரவாசிகளை கிராமத்தான்கள் கேலிசெய்யும்போது, அதிலுள்ள உண்மை நன்றாகவே சுடத்தான் செய்கிறது. காலுடைகாதை என்கிற கவிதையில் உண்மையிருப்பினும், என்னால் அதை நகைச்சுவைக்காக எழுதப்பட்டதாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது. மாதிரிக்கு நான் விரும்பிய சில கவிதைகள்.
இடங்கொடுத்தான்
இடதுக்கும் வலதுக்குமான
வேலைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன
வலதுகாலை முதலில்
எடுத்துவைக்கவேண்டும்
லாபமென்று சொல்லி
இரண்டாவதாக
உள்ளே வரவேண்டும் இடதுகால்
இடது கூடை சுமக்க
வலது கை பூப்பறித்தது
இரண்டும் தொடுத்து
இரண்டும் எடுத்துக் கொடுத்து
இரண்டும் சேர்ந்து வணங்கி
கற்பூரம் ஒற்றியபின்
விபூதி வாங்க வலதுகை முன்னே வரும்
வலது நீருற்ற இடதுகை
குண்டி கழுவ வேண்டும்
சாப்பாட்டைத் தொட்டுவிடக்கூடாது
கை மறதியாய்
கை தட்டும் ஓசை கேட்டு
திரும்புகையில்
வலது கையால் சைகை செய்தழைத்து
வலதுகை குலுக்கிப் பாராட்டினார்
திறமையாக கதிரடித்தீரென்று
திருச்செங்கோட்டில்
அருள்பாலிக்கும் அர்த்த நாரீஸ்வரா!
முகங்கள்
நிச்சயிக்கப்பட்ட முன்முடிவுகளை நோக்கி
நகர்ந்துகொண்டிருந்தது மாறுவேடப் போட்டி
ராஜா வேடத்தில் வாள்வீசி நடந்த சிறுவன்
கிரீடம் சரிய இறங்கி வந்து சொன்னான்,
“கழற்றிவிடு அம்மா தொப்பி கனக்கிறது”
உலக அழகி வேடமிட்ட ஒன்றாம்வகுப்புக் குழந்தை
மேடையில் சிறுநீர் கழித்து அம்மாவிடம் அடிபட்டது
காந்தி வேடதாரி கதராடை புரள வந்து
“குளிரெடுக்குது சட்டை போட்டுவிடு” என்றான்
வேஷம் கலைத்து விளையாடப் போய்விட்டனர்
குழந்தைகள்
பரிசளிப்பு விழாவில் கத்திக்கொண்டிருந்தனர்
பெற்றோர் வேடமிட்டவர்கள்.
செகப்பு
எல்லாருக்கும்
அக்காதான்
மருதாணி
வச்சு விடுவா
அக்கா அரைச்சு வச்சா
அப்பிடி செவக்கும்
கோவப்பழமாட்டா
கல்யாணத்துக்கு
முந்தின நாள்
வச்சுவிட்டா
கை நெறைய
செகப்பு நகத்தடியியிலெ
வெள்ளை முளைச்சப்ப
மத்தியான பஸ்சுலே
அக்கா வந்தா
தனியா
ஆரு வச்சு விட்டது
அக்கா கண்ணுக்கு
மருதாணி.
சித்திரம்: 1
அச்சிறுமி ஒன்றாம் வகுப்பு வாசிக்கிறாள்.
தொட்டியில் மீன் வளர்க்கிறாள்.ஓயாமல் துரத்தித் துரத்தியே ஒரு மீனைக்கொன்றுவிட்டது மற்றொரு மீன்.துரத்தும் மீனை வேறு தொட்டிக்கு மாற்றிய பிறகு ஒரு நாள் எந்த மீனும் பழையபடி நீந்துவதில்லை எனப் புகார் செய்தாள் அச்சிறுமி. அவளது அப்பா சுறு சுறுப்பா இருக்கிற மீனா, மத்த மீன்களைக் கடிக்காத ஜாதியா பார்த்து கொடுங்க என்றார். கடைக்காரர் யோசித்தபடி இருக்க, நல்லா நீச்சல் தெரிஞ்ச மீனாக கொடுங்க என்றாள் அச்சிறுமி.
நூல் விபரம்
நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை( கவிதைகள்)
ஆசிரியர்: மயூரா ரத்தினசாமி
தொடர்புக்கு 9360789001
முதல் பதிப்பு: ஜூன் 2007
வெளியீடு : மயூரா பதிப்பகம்
37, தொட்டராயன் கோயில் வீதி,
காட்டூர்,கோயமுத்தூர் 641009
விலை ; ரூ. ௪0
Friday, January 2, 2009
ரசிகை-தபசி
மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2009
கவிஞர் தபசி ”மயன் சபை”,”இன்னுமிந்த வாழ்வு”, ”குறுவாளால் எழுதியவன்”,”ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்”(1994), ”இன்னும் இந்த வாழ்வு”(2000) ”தோழியர் கூட்டம்” 2003, மற்றும் ”ரசிகை”(2003) ஆகிய கவிதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
ரசிகை தொகுப்பில் பின் அட்டையில் காணப்படும் வரிகள் இவ்வாறு உள்ளது. “ தபசியின் கவிதைகள் எளிய சொற்கட்டுகளால் ஆனவை. வாழ்வின் தத்துவப் பொருளை மன அமைதியுடன் வெளிப்படுத்துவதோடு, புற நிகழ்வுகளை, அவற்றுக்கேயான முரண் நகையுடனும், அங்கதச் சுவையுடனும் எடுத்தியபம்புவை.”
நவீன அகம் புறம் என்ற சிற்றிதழில்( காலாண்டிதழ் 9) இவரின் செவ்வி இடம் பெற்றிருந்தது. மிக அருமையாக இருந்தது. இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் , இவரின் பதில்களும் எழுதத் துவங்கியிருக்கும் கவிஞர்களுக்கு பல திறப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன். ”உணர்தலுக்கும், உணர்த்துதலுக்குமான இடைவெளி குறையும்போது நல்ல இலக்கியம் பிறக்கிறது” என்கிறார். எனில், எளிமைப்படுத்துவதைத்தான் இவர் ஆதரிக்கிறார் என்பதை இவரின் கவிதைகளும் எடுத்துக்காட்டுகிறது. இன்னும் கூட நீண்ட செவ்வியாக அமைந்திருக்கலாம் என்ற ஆவல் ஏற்படுகிறது.
“ நவீன கவிதைகளின் சுதந்திரத்தை உணர்ந்துகொள்பவர்களுக்கு வேறு வடிவங்கள் உவப்பானதாக இருக்காது” என்கிறார். இது என் நெஞ்சில் நிலைத்துவிட்ட ஒரு கூற்று. ரசிகைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் அல்லாமல், இன்னும் சில கவிதைகளை சில சிற்றிதழ்களில் படித்திருக்கிறேன். அந்தவகையில், ரசிகை தொகுப்பில், பல கவிதைகள் என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை என்றுதான் என் இன்றைய பக்குவத்தில் சொல்லமுடிகிறது. எனினும் ,இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஞானம் கவிதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்ற சிறப்புடையது. உள்ளபடியே அழகான, ஆழமான, பகடித்தன்மை கொண்ட கவிதை. இது ஏற்கனவே புகழ்பெற்ற கவிதை என்பதால்
பலரும் இதைப் படித்திருக்கக்கூடும்.
ஞானம்
சித்தார்த்தனைப் போல்
மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு
நடுராத்திரியில்
வீட்டைவிட்டு
ஓடிப்போக முடியாது என்னால்
முதல் காரணம்
மனவியும்,குழந்தையும்
என்மேல்தான்
கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள்
அவர்கள் பிடியிலிருந்து
தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல
அப்படியே தப்பித்தாலும்
எங்கள் தெரு நாய்கள் எமன்கள்
லேசில் விடாது
என்னைப் போன்ற
அப்பாவியைப் பார்த்து
என்னமாய் குரைக்கிறதுகள்
மூன்றாவது
ஆனால்
மிக முக்கியமான காரணம்
ராத்திரியே கிளம்பிவிட்டால்
காலையில்
டாய்லெட் எங்கே போவது
என்பதுதான்.
-தபசி.
Tuesday, December 16, 2008
சொப்புக்கடை
அவ்வளவாக இதுவரை கண்டுகொள்ளப்படாத குழந்தைகளின் உலகை மிக அழகாகப் பதிவு செய்த கவிஞர் முகுந்த் நாகராஜன் அளவுக்குப் பிரபலமானவராக இல்லாதவராயினும் ‘செஞ்சி தமிழினியன்’ அவர்களும் குழந்தைகளின் உலகை மிக அழகாகவே ,அனுபவித்து எழுதியுள்ளார்.இது இவரின் 2 வதுத் தொகுப்பு.எழுத்தாளர் பெருமாள் முருகன் அணிந்துரை எழுதியுள்ளார்.அதில்,’இலக்கியம் கவனம் கொள்ள வேண்டிய ஒரு பகுதியை தமிழினியன் இத்தொகுப்பில் கவிதைகளாக ஆக்கியுள்ளார்.குழந்தைகள் கொடுக்கும் மகிழ்வையும் அவர்கள் உலகத்திற்குள் நிலவும் அற்புதக் கற்பனைகளையும் பார்வையாளராகவும், உள்ளே நுழைய முயல்பவராகவும் இருந்து கவிதைக்குள் கொண்டு வருகிறார்’ என்கிறார். எளிமையும் நேரடித்தன்மையும் ,மண்மணக்கும் வாசமும் நிறைந்த நல்ல கவிதைகள் நிறைந்து இருந்தபோதிலும் தட்டச்ச எளிதான கவிதைகள் மட்டும் மாதிரிக்கு சில.
1.
வெறும் கையில்
பப்புக் கடைந்து
அம்மாவுக்குக் கொஞ்சம்
அப்பாவுக்குக் கொஞ்சம்
தாத்தாவுக்குக் கொஞ்சம்
ஆயாவுக்குக் கொஞ்சம்
அத்தைக்குக் கொஞ்சம்
அக்காவுக்குக் கொஞ்சம் என
கொடுத்துவிட்டு
வெளியே போகிறாள்
காக்காவுக்கு வைக்க.
2.
பொம்மையைக்
கால்மேல் போட்டு
பால் ஊற்றுகிறாள்
வேண்டாம் என்றாலும்
‘பாப்பா’ என முத்தம் கொடுக்கிறாள்
தூங்கும்போது
கண்டிப்பாய்
பொம்மைக்கும்
தனித் தலையணை போட்டு
போர்த்தி விடுகிறாள்
பாப்பாவாக இருப்பதை விடவும்
அக்கா என்பதே
அவளுக்குப் பெருமிதம்.
3.
ஒவ்வொரு இரவும்
சொல்லும் கதைகளால்
மகிழ்ச்சியுற்றுத் தூங்கிடுவாள்
முன்பு சொன்ன கதைகளை
இப்போது மாற்றிச் சொல்ல
இப்படி இல்லப்பா
அப்படி இல்லப்பா என்று
அவள் கதை சொல்ல
நான் தூங்கிப் போகிறேன்
4.
அடிவாங்கி
அழுதபடியே உறங்குகிறாள்
தலையணை
தனியே கிடக்கிறது
போர்த்திவிடுகிற துணியைத்
தள்ளி விடுகிறாள்
எப்படியும் நடு இரவாகும்
கை கால்களை
என் மேல் போட்டுக்கொண்டு
தூங்க…
5.
கார்ட்டூன் சேனலை
கண் விரித்துப் பார்க்க
பூனைக்குப் பயந்து ஓடிய
எலியைத் தேடுகிறாள்
பிடிபடாமல்
ஓடும்போது கை தட்டிச் சிரிக்கிறாள்
பாவம் பெரியவர்கள்
அழுகிற தொடர்களைப் பார்க்க
ஆவலாய் இருக்கிறார்கள்.
6.
”தொனத் தொனன்னு பேசாதே
போயி படி” என விரட்டப்பட்ட பெரியமகள்
முழுதும் மூடாத கதவு வழியே
படிப்பதுபோல பாவனை செய்கிறாள்.
எச்சில் நனைந்த
ஓரிரு சொற்களைச்
சின்ன மகள் சொல்லும்போது
மகிழ்ந்து
ஆளுக்கு ஆள் புகழ்ந்து
முத்தம் கொடுக்கிறோம்.
உள்ளேயிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
பெரிய மகள்.
7.
நிலா கேட்டு
அடம் பிடிக்கும் குழந்தை
பசியாறியது நாய்க்குட்டி.
8.
கூடத்தில்
விளையாடிக் கொண்டிருக்க
புதிதாய் நுழைந்தவர்கள்
இங்க வா
உன் பெயர் என்ன?
சாப்பிட்டையா? எனக்
கேள்விகளை அடுக்க
அழுது
அவசரத்தில் ஓடுகையில்
அவளைப் போலவே
சில பொம்மைகளும்
உடைந்து போகின்றன.
ஆசிரியர்; செஞ்சி தமிழினியன்
(9443877641)
பக்கம்-80
விலை-ரூ.50.00
வெளியீடு
நறுமுகை(ஜெ. ராதாகிருஷ்ணன்)
29 35, தேசூர்பாட்டை,
செஞ்சி-604202
விழுப்புரம் மாவட்டம்.
(9486150013)
Monday, October 13, 2008
இனியாவது ஒரு விதி செய்வோம்.

முடிவே தெரியாத நீளமான குகைக்குள் பயணம் செய்ய நேர்வதாக கனவுவரும்போது,எப்பேர்ப்பட்ட தூக்கமாக இருந்தாலும் ,கலைந்து எனக்கு விழிப்பு ஏற்பட்டுவிடுகிறது.மூச்சுத்திணறலாகவும்,நெஞ்சு முழுக்க ஏதோ பாரம் அழுத்தி வலிப்பது போலவும் உணர்கிறேன்.மீண்டு(ம்) தூக்கம் வர நெடுநேரம் ஆகிவிடும்.ஒருமுறை,திரைப்படம் பார்க்க நண்பர்களோடு ஒரு சுமாரான,பழைய திரையரங்குக்குச் சென்றிருந்தபோது, நுழைவுச்சீட்டு தரும் இடம் மிக நீண்ட,ஒரு நபர் மட்டுமே செல்லக்கூடிய அளவு அகலத்தோடும்,எங்கோ தொலைவில் ஒரேயொரு சிறிய ஜன்னல் மட்டுமே வைக்கப்பட்டதுமாக,மூடப்பட்டுக் குகைபோல இருப்பதைக் கண்டநான், பயந்துபோனவனாக,படம்பார்க்கவே வரவில்லை என்று சொல்லியிருக்கிறேன்.இன்னொருமுறை சிறுபிள்ளையாய் இருக்கும்போது,மற்ற பிள்ளைகள் என்னை கொசுவலைக்குள் அடைத்து,நான் வெளியேற முடியாதவாறு பிடித்துக்கொண்டபோது,நான் அலறிக் கூச்சல்போட்டது இன்னமும் என்னாலேயே நம்ப முடியாததாகவும்,ஆச்சரியமாகவும், நன்றாக நினைவில் உள்ளது.கேளிக்கைவிளையாட்டு மையங்களில்(THEME PARK)நீண்ட குழாய்களின் வழியே சறுக்கி விளையாடுவது என்பது எனக்கு மிகப்பரிய சவாலாகப்பட்டது.பாதிவழியில் சிக்கிக்கொண்டால்..?நினைக்கும்போதே மூச்சுத்திணறுகிறது.(ஆனாலும் BLACK THUNDER சென்றிருந்தபோது சவாலில் வென்றுவிட்டேன்.சில சமயம் உண்மையைவிட ,கற்பனை அதீதமான உணர்வுகளை ஏற்படுத்திவிடுகிறது) அதாவது,இதுபோன்ற நேரங்களில் நானே நினைத்தாலும்,நினைத்தமாத்திரத்தில் என்னால் வெளியேவரமுடியாது.இப்போது ,நான் எதுகுறித்து எழுதவிருக்குறேன் என்று உங்களால் ஊகித்திருக்கமுடியும்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவுமே மனித உயிர்களைப் பலிவாங்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல.ஆனால் அறிவியல் வளர,வளர ஆபத்துக்களும் ,விபத்துக்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது.சாலைப் போக்குவரத்தில்,தொடர்வண்டிகளில்,மின்சாரத்தால் என உயிர்ப்பலி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.இவ்வாறு உயிர்ப்பலி வாங்கும் கண்டுபிடிப்புகள் எப்போது முழுமையடைகின்றன என்றால்,அந்த அறிவியலால் விபத்துக்கள் இல்லாத ஒரு நிலையை எட்டும்போதுதான்.இந்நிலையையும் உள்ளடக்கியதாகவே கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும்.பாதுகாப்பு விதிமுறைகளும்,உறுதியான பின்பற்றலும் நடந்தேற வேண்டும்.
ஆழ்துளைக்குழாய்கள் அமைத்துத் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றும்பொருட்டு வளர்ந்த விஞ்ஞானம்,அதிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றவும் செய்யவேண்டும்.இதுவரை எத்தனையோ அப்பாவி சிறுவர்களை நாம் இழந்துவிட்டபோதிலும்,இன்றளவும் தொடர்கதையாகவே இருக்கிறது என்பது நாமனைவரும் வருந்தவேண்டிய,வெட்கப்படவேண்டிய ஒரு செயல்.குழந்தைகள் ஒன்றும் குடிபோதையில் குழிக்குள் விழுவதில்லை.சென்றவாரம்கூட 2 வயதேயான சிறுவன் 150 அடி ஆழக் குழிக்குள் விழுந்துவிட்டான்.இதில், அச்சிறுவனின்-சிறுவன்கூட அல்ல,குழந்தை-தவறு என்னவாக இருந்துவிடமுடியும்.150 அடி ஆழத்திற்குக் குழிதோண்டத் தெரிந்த விஞ்ஞானத்திற்கு அதிலிருந்துக் குழந்தைகளைக் காப்பாற்றத் தெரியவில்லை. ஏற்கனவேயுள்ள குழிக்கு இணையாக மற்றொரு குழி வெட்டுவதும்,ராட்சத இயந்திரங்களை வரவைப்பதும் ,ஒரு கட்டத்திற்கு மேல் மனிதர்களைவைத்தே மண்அள்ளுவதும்,சிறுவன் மூச்சுவாங்கும்பொருட்டு ,குழாய்கள் வழியாக காற்றுசெலுத்துவதும் என்று மணிக்கணக்கில்,நாள்கணக்கில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதுவரை, ஏதுமறியா அப்பிஞ்சுக் குழந்தையின் நிலையை,தவிப்பை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.போதாக்குறைக்கு குழிக்குள் நீர்மட்டம் வேறு உயரந்து கொண்டேயிருக்கிறது.நீங்கள் கற்பனைக்கு ஒதுக்கும் ஒரு வினாடி, இறந்த சிறுவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்கான பிரார்த்தனைக்கான நேரமாக இருக்கட்டும்.என்னதான் சூரரராகவே,வயதில் பெரியவர்களாக இருந்தாலுமேகூட,அந்த நிலையில் அவரால் என்ன செய்துவிடமுடியும்? இந்த மாதிரியான சூழலில் அக்குழந்தையின் நிலையை,தவிப்பை நான் விளக்கிக்கொண்டிருக்கப் போவதில்லை.அதை வெறும் சொற்களால் விளக்கிவிடமுடியாது.அவரவர் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூட இத்தொடர் நிகழ்வுகளுக்கு வருத்தமும் ,கண்டனமும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது.
செய்ய வேண்டியது.
வேலையை முடித்ததும் குழியை மேலே மூடிவிட்டுச் செல்ல வேண்டும்.
சிறு பிள்ளைகள் அப்பகுதிக்கு வரமுடியாத அளவுக்குச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
இம்மாதிரி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யாதவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.அப்போதாவது பயந்து செய்வார்கள் அல்லவா.
வந்தபின் அவதிப்படுவதைவிட, வருமுன் காப்பதே சிறந்தது என்ற கூற்று இவ்விசயத்தில் மிகவும் பொருந்தும்.
வெளியிட்டு மேன்மைப்படுத்தமைக்கு நன்றி-கீற்று.காம்
15-10-08
Monday, October 6, 2008
என் வீடு எங்கே?
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.மணிமாறனுக்கும் விடுமுறை நாள்.
அதிசயமாய் மணிமாறன் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தபடியால் அவன் மனைவிக்கும் மகிழ்ச்சியாயிருந்தது.ஓய்வாகப் படுத்துக் கொண்டு தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘குப்’பென்று வலது பக்க மார்பு ,தோள்பட்டை வலி எடுத்தது.தன் மனைவியை அழைத்து தைலம் தேய்த்துவிடச் சொன்னான்.அவளும் பதறிப்போனவளாக தைலம் தேய்த்துவிட்டாள்.இது என்ன புதுத் தொல்லையாக இருக்கிறதே என்று யோசித்தபோது, அன்று காலையில் கிரைண்டரை நகர்த்தி வைத்தது நினைவுக்கு வந்தது.அதன் விளைவுதான் என்று நம்பினான். கொஞ்ச நேரம் முன்பே லேசான வலி ஏற்பட்டிருந்தது என்றாலும் அலட்சியம் செய்துவிட்டான்.ஆனால் இப்போது வலி மிகவும் கடுமையாக இருக்கவே மருத்துவமனை செல்வதென தீர்மானித்தான்.’ஏதாவது ஒத்தடம் கொடுக்க ஏற்பாடு செய்’ என்று மனைவியிடம் சொன்னான்.அவளும் தெருவிலிருந்து கொஞ்சம் மணலை எடுத்து வந்து வாணலியில் இட்டு சூடுபடுத்தி துண்டில் சுற்றி எடுத்துவந்து ஒத்தடம் கொடுத்தாள்.சற்று ஆசுவாசமாகயிருந்தது.பிறகு,தன் இரு சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு தனியாகவே மருத்துவமனைக்குப் போனான்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால்,துறைவாரியான சிறப்பு மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள்.ஒரேயொரு பொது மருத்துவர் மட்டுந்தான்.மருத்துவமனை வளாகத்தில் தன் வண்டியை நிறுத்தியபோது ,வழக்கத்திற்கும் மாறாக,மருத்துவமனையே வெறிச்சோடிப் போயிருந்தது,ஞாயிற்றுக் கிழமை என்பதால்.யாரோ பின்னாலிருந்து அழைப்பதுபோல் உணர்ந்தான்.திரும்பிப் பார்த்தபோது,கூப்பிடு தொலைவில் ஒரு இளைஞன்,ஒரு இளம்பெண் மற்றும் ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதை கவனித்தான்.’இவன்தான் அழைத்திருப்பானா?’ என்ற சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது ,அம்மூவரும் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தபடியால்,சற்று நம்பிக்கையோடு அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.இப்போது சற்று தொலைவிலேயே அந்த இளம்பெண்ணை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.’இவள் முருகனின் மனைவியாயிற்றே! அப்படியென்றால்,அவள் பக்கத்தில்..அவன்..அவன்...முருகன்தானே? ஆமாம்.முருகனேதான்’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டான்.முருகன்,மருத்துவமனையில் கொடுக்கப்படும் உள்நோயாளிகளுக்கான ஆடைகள் அணிந்திருந்தான்.சக்கரம் வைத்த கம்பிக்கூடு போன்ற ஒரு நடைபழகும் சாதனத்தை கையில் பிடித்துக் கொண்டு,அதன் உதவியோடு நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.அந்த இடம் மருத்துவமனை நோயாளிகள் இளைப்பாறும் தோட்டம்.அவர்களை நெருங்குவதற்கு முன்னால் மணிமாறனுக்கு,முருகன் பற்றிய கடந்த கால நினைவுகள் மின்னல் வேகத்தில் சரசரவென வந்தது.
மணிமாறனும்,முருகனும் ஒரே நிறுவனத்தில் வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரிபவர்கள்.சமவயதுக்கார இளைஞர்கள்.நெருங்கிய நணபர்கள் இல்லையென்றபோதிலும்,நல்ல அறிமுகம் உள்ளவர்கள்.ஒருமுறை நிறுவனத்தில் நடத்தப்பட்ட நடனப்போட்டிக்கு,மணிமாறன்,முருகன் மற்றும் சில நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பயிற்சி எடுத்து,மேடையில் ஆடி,முதல் பரிசையும் பெற்றார்கள்.இதுபோன்ற சமயங்களில் பழகுவதுதான்.மற்றபடி,அவ்வப்போது வழியில் எங்கேனும் சந்திக்க நேர்ந்தால்,கொஞ்சம் பேசிக்கொள்வதும்,கையசைப்புமாக சென்றுவிடுவார்கள்.அப்போதெல்ல்லாம் பரபரப்பாகவே தென்படுவான் முருகன்.வண்டியில் சீறிக் கொண்டு வேகமாய்த்தான் போவான்.நடனப்போட்டி முடிந்த அன்று வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் எல்லோரும் குடிக்கச் சென்றார்கள்.இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் மணிமாறன் இதுபோன்ற சமயங்களில் மட்டுமே குடிப்பவன்.அதுவும் அளவோடுதான்.ஆனால்,முருகனோ நாள்தோறும் குடிப்பவன்.அதுவும் அளவில்லாமல்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திறகும் மேலாகவே இருக்கும் முருகனுக்கு விபத்து நடந்து.ஒருநாள் இரவில், ஆளரவமற்ற ஒரு சாலையில் வண்டியில் போய்க்கொண்டிருந்தபோது பேருந்து இடித்துவிட்டதாம்.பிறகு நீண்ட நேரம் கழித்தே நள்ளிரவில் சில கிராமத்து மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள்.பலத்த அடியென்றும்,பிழைப்பதே கடினம் என்றும் பேசிக்கொண்டார்கள்.’குடிச்சி அழிஞ்சிப் போகுதுங்க.இதுங்களுக்கெல்லாம் வேணும்’என்று விஷயம் கேள்விப்பட்டபோது உடன்பணிபுரியும் ஒருவர் ஈவிரக்கம் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதை இப்போது நினைத்தாலும் மணிமாறனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்திருந்ததாகவும்,சுயநினைவே இல்லாமலும்,கண்ணைத் திறக்காமலும் நெடு நாட்கள் இருந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தான்.ஆறேழு மாதங்களுக்குப்பிறகே கொஞ்சம் தேறி உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்ததையும் கேள்விப்பட்டிருந்தான்.உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டப் பிறகாவது போய்ப்பார்த்துவிட்டு வரலாம் என நினைத்துக்கொண்டிருந்தவன்,நண்பர்கள் சொன்னதைக் கேட்டு அந்த எண்ணத்தையே கொஞ்ச நாளைக்குத் தள்ளி வைத்து விட்டான்.’ஆளே அடையாளம் தெரியலப்பா.நாமப்போனா அவனால நம்மை யாரையும் அடையாளங்கண்டுபுடிக்க முடியல.நிக்கவே முடியல அவனால.ஒடஞ்சி ஒடஞ்சி விழறான்.பேச்சே வரல.ழே..ழே.. ழ்ழ..ழ்ழங்கிறான்.ரொம்பக் கொடுமை.ஏந்தான் போனோமோன்னு ஆயிடுச்சி.அவன் பொண்டாட்டியை கண்டிப்பாப் பாராட்டணும்ப்பா.இந்தச் சின்ன வயசிலேயே எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு பொறுப்பாப் பாத்துக்குது.நம்ம வீட்டுப் பொம்பளைங்கக் கூட இப்படியெல்லாம் பாத்துக்குவாங்களான்றது சந்தேகந்தான்.அப்பப்பா.ரொம்பக் கொடுமை’
இவையெல்லாம் நடந்துமுடிந்து சில மாதங்களுக்குப் பிறகு இன்றுதான்,கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இதோ இப்போதுதான் மீண்டும் பார்க்கிறான்.இபோது அவர்கள் மூவரையும் நெருங்கிவிட்டிருந்தான்.
‘அண்ணா.என்னை வீட்டுக்குக் கூட்டினுப் போயிடுண்ணா’ என்றான் எடுத்த எடுப்பிலேயே.முருகனைப் பார்க்கவே கொடுமையாக இருந்தது.உருக்குலைந்து என்று சொல்வோமே அது இதுதான் என்று உணர்ந்தான்.ஆளே அடையாளம் தெரியாத அளவு சிதைந்து போயிருந்தான்.மொட்டையடித்து முடி முளைத்திருந்தது.காயம்பட்ட சுவடுகள் நிறைய, ஆடைகள் மூடப்படாத பாகங்களிலேயே தெரிந்தது.கழுத்துப் பகுதியில் தெரிந்த ஒரு குழி மணிமாறனை என்னவோ செய்வது போலிருந்தது.பலூனை ஊதிவிட்டு உள்ளுக்குள் இழுத்து ஒரு முடிச்சுப் போட்டால் அந்த இடத்தில் ஒரு குழி தெரியுமே அதுபோல இருந்தது.’இவனாலதான் இவன் மனைவியே நமக்குத் தெரியும்.ஆனா இப்ப என்னன்னா இவன் மனைவியை வச்சிதான் இவனை அடையாளம் கண்டுபுடிக்கிற மாதிரி ஆயிடுச்சே’என நினைத்துக்கொண்டான். அண்ணா என்று தன்னை அழைத்ததும் மணிமாறனுக்கு சங்கடமாயிருந்தது.பரவாயில்லையே அடையாளம் கண்டுகொள்கிற அளவுக்கு, பேசுகிற அளவுக்கு தேறியிருக்கிறானே என்று நினைத்து சந்தோசப்பட்டவனுக்கு வா போ என உரிமையாய் பேசியவன் அண்ணா என்கிறானே.அவனின்நிலை மேல் கொண்ட கழிவிரக்கமா அல்லது இன்னமும் தன்னை சரியாக அடையாளம் காணவில்லையா? சுதாரித்துக் கொண்டு பேசத்துவங்கினான்.’என்ன முருகா.எப்படி இருக்க?’
‘அண்ணா.என்னை வீட்டுக்குக் கூட்டினுப் போயிடுண்ணா’ என்றான் மறுபடியும்.
என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றவன்,’இன்னுங்கொஞ்ச நாள்லே வீட்டுக்குப் போயிடலாம் முருகா’என்று சொல்லிக்கொண்டே அவன் மனைவியைப் பார்த்தான்
.’உங்க பேரு என்னா’ என்றாள்.’
மணிமாறன்’
’அதான் மணின்னுக் கூப்பிட்டாங்களா?’ என்றாள்.அப்படின்னா ஆளை நல்லாத் தெரியுது என்று உணர்ந்தான்.அவன் முதுகில் ஏதோ ஒரு பிளாஸ்டிக் பை லேசாக சட்டைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.அவனை அந்தப் பெண் கைத்தாங்கலாக்ப் பிடித்து,பிளாஸ்டிக் பையை வெளியே உருவி,அவனை ஒரு பெஞ்சில் உட்கார வைத்தாள்.மூத்திரப்பை போலும். இப்போது அவன் மனைவி,’ஆமா, வீட்டுக்குப் போலாம்னு சொல்றியே.வீடு எங்க இருக்குது?’என்றாள்.
’ஸ்கூல் பக்கத்தில’
‘எந்த ஸ்கூல், உன் பையன் படிக்கிறானே அந்த ஸ்கூலா? அந்த ஸ்கூல் பேரு என்னா?’
‘லாலிபாக்’ .லால்பாக் என்பதைத்தான் அவன் அப்படிச் சொன்னான்.
‘சரியாச் சொல்றாரா’ என்றான் மணிமாறன்.
‘இல்ல. அது நந்தவனம்.’
‘சரி,வீட்டுக்குப் போகணும்னு சொல்றியே.வீட்டுக்கு எப்டிப் போகணும்?’ அவன் மனைவி அவனை சோதித்துக் கொண்டிருந்தாள்.வைத்தியமும் கூடத்தான்.
‘லெப்டில போகணும்’ சாலையைக் காட்டியபடியே சொன்னான். அந்நேரம் ஒரு வடமாநிலத்து முதியவர் அவர்களை வேடிக்கைப் பார்த்தவாறு கடந்து சென்றார்.முருகன் அவரிடமும்,’அண்ணா என்ன வூட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுண்ணா.ஆஸ்பத்திரி வேணாம்ணா’ அழாத குறையாக கெஞ்சினான்.
முதியவர் மொழி தெரியாமல் திருதிரு வென விழித்தபடியே கடந்துசென்றார்.மணிமாறன் மீண்டும் முதுகுவலி நினைவுக்கு வந்தவனாக முருகனின் மனைவியிடம் சொல்லிவிட்டு அரை மனதோடு உள்ளே போனான்.சற்று நேரத்திற்கெல்லாம் வெளியில் வந்து மறுபடியும் தன் வண்டியை நகர்த்திக்கொண்டே அவர்களிடம் வந்தான்.இப்போதும் முருகன்,’ ’அண்ணா என்ன வூட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுண்ணா.ஆஸ்பத்திரி வேணாம்ணா’ என்றான்.வண்டியை நிறுத்திவிட்டு அவன் தோளை ஆதரவாகத் தொட்டுக்கொண்டு இந்த முறை,’நான் நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போறேன் முருகா.இப்போ வேற ஒரு இடத்துக்குப் போறேன்.சரியா?’ குழந்தையிடம் பேசுவதுபோல் பேசினான்.முருகனும் இப்போது ஒரு குழந்தை மாதிரிதானே என எண்ணினான்.அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகனுக்கு வணக்கம் சொல்லியவாறே வந்துகொண்டிருந்தார்.யார்யாரெல்லாம் புதுப்பது நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.மணிமாறன் தயக்கத்தோடும்,கனத்த இதயத்தோடும் செய்வதறியா ஒரு மனநிலையில் வண்டியை எடுத்துப் புறப்பட ஆரம்பித்தான்.முருகனின் மகன் இதுவெதுவும் அறியாதவனாக சற்றுத் தள்ளி மணலில் விளையாடிக் கொண்டிருந்தான்.மணிமாறனின் முதுகுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டுக்கொண்டிருந்தது.ஆம்புலன்ஸ் டிரைவரிடம் முருகன் சொல்லிக்கொண்டிருந்தான்.’அண்ணா,வண்டிய எடுத்துனு வாண்ணா.என்னக் கொண்டுபோய் வீட்டுல விட்டுடுண்ணா’
பின்குறிப்பு ; இந்த முருகனை ஒன்றரை வருடங்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு நாள் நீங்கள்கூடப் புகைப்படத்தோடுப் பார்த்திருக்கலாம்.மாநில அளவில் கராத்தேப்போட்டியில் பரிசு வாங்கியப் புகைப் படம்தான் அது.
‘

