Wednesday, September 12, 2012

வாடாத மலரன்னன்,கவிஞன்



அண்மையில் கவனத்தை இழுத்த, ரசித்த கவிதை...
(தேவதேவன்)


’வாடா மலரொன்று
எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது
தன் காதலன் வரவெண்ணி…’

அன்று அந்த அதிகாலைத்
தோட்டத்துள் ஒரு மலர் முன்
கூடுதலாய்ச் சில கணங்கள்
நின்றுகொண்டிருந்தபோது,
அவர் பின்னொரு அரவம் கேட்டது:
”(
பெண்களுக்கான)
அழகுக் குறிப்புகளில் அது ஒன்று, அப்பா!”
என்றாள் அவர் மகள்.

நெஞ்சுக்கூடு லேசாகிவிட்டதை உணரமுடிகிறது. இனி, கவிதை குறித்த என் சிறு பகிர்வு. இக் கவிதையில் கவிஞனும், தற்செயல் நேர்ச்சியும் ஒன்றுகலந்து ஒரு அருமையான கவிதை கிடைத்துவிட்டது. நவீன கவீதைகளுக்கு உள்ள சிறப்பிடமே இந்தக் காத்திருத்தல்தான்.ஒரு சூழலுக்கோ, தலைப்புக்கோ தானாகவே முயன்று எழுதுகிற கவிதைகள் ஒருவகைஇவை திட்டமிட்டு எழுதப்படுவன. அவ்வகைக் கவிதைகளை நீட்டித்துக்கொண்டே போகமுடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவ்வகைக் கவிதைகளில் வெளிப்படும் திறமை வேறுவகையானது.ஆனால், கவிதையுணர்வால் எப்போதும் விழிப்புணர்வோடு காத்திருக்கும் கவிஞனுக்கு காண்கின்ற எத்தனையோ காட்சிகள் கவிதைகளாகும்.கண்ணால் கண்ட காட்சிகள், நிகழ்வுகள் போனறவற்றால் தூண்டப்பட்டு கூடவே கற்பனையையும் கலந்து எழுதப்படுகின்றன, நவீனக் கவிதைகள். மேற்சொன்ன கவிதை திட்டமிட்டு எழுதியதல்ல என்பது திடமாகிறது.இந்தக் கவிதை தேவதேவன் மூலமாக நிகழ்ந்தேறியிருக்கிறது, அவ்வளவுதான்.

அன்று அந்த அதிகாலைத்
தோட்டத்துள் ஒரு மலர் முன்
கூடுதலாய்ச் சில கணங்கள்
நின்றுகொண்டிருந்தபோது...

’ கூடுதலாய்ச் சில கணங்கள்’ என்கிற வரி, கூடுதல் கவனத்திற்குரியது. இப்படி நிற்கிறவன்தான் கவிஞன். கவிஞனல்லாதவர்களும் ரசனையால் இப்படி நிற்கமுடியும். ஒருவகையில் இவர்கள் கவிஞனைவிட நற்பேறு பெற்றவர்கள் எனலாம். தன் மனவெழுச்சிகளை சொற்களில் பரிமாற்றும் இன்னல்  இவர்களுக்கில்லை, என்கிற வகையில்.
இதோ, இப்போது இந்தக் கவிதையை ருசித்ததோடு நின்றுவிடாமல் ,முன்வைத்து நான் எழுதிக்கொண்டிருப்பது போல்தான்.

கவிஞன் மலரின் முன் நின்றுகொண்டிருக்கும்போது மனதில் கவிதை வரிகள் பின்வருமாறு பிறக்கிறது...

’வாடா மலரொன்று
எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது
தன் காதலன் வரவெண்ணி…’

’எப்போதும்’ என்கிற இடம் சிறப்பானது. இம் மூன்று வரிகளை கவிதையில் முதலில் வைத்ததும் சிறப்பு. இவ் வரிகள் மட்டுமேகூட தனித்த கவிதையாய் நிற்கும் வல்லமையோடிருக்கிறது.இப்படி ஓயாமல் மனதிற்குள் எழுதியெழுதி அழித்துக்கொண்டேயிருப்பதுதான் கவிஞனின் வேலை, மற்றும் காத்திருத்தல். அவற்றுள் தேர்ச்சி பெறுகிற வரிகளே மற்றவர்களுக்குப்  பகிர்ந்துகொள்ளும்படி கிடைக்கிறது.
கவிஞனும் வாடாத மலர்தான். கவிதைகளுக்காக காதலோடு காத்திருப்பவன்தான்.

அவர் பின்னொரு அரவம் கேட்டது:
”(
பெண்களுக்கான)
அழகுக் குறிப்புகளில் அது ஒன்று, அப்பா!”
என்றாள் அவர் மகள்.

மகளின் தற்செயலான பேச்சு எத்தனைப் பொருத்தம் கொண்டு அமைந்துவிட்டது ! கவிதையை எங்கெங்கோ கூட்டிச் சென்றுவிடுகின்றன மேற்காணும் வரிகள்.ஒருவேளை தற்செயல் நிகழ்வாய் அல்லாமல் கவிஞரின் கற்பனையாகவும் இருக்கக்கூடும்.எனினும் வாய்ப்பு மிகக் குறைவென்றே எண்ணுகிறேன்.

நெகிழ்ச்சியாலும், பரவசத்தாலும் மேலெழுகிற கவிதை.

அழகுக் குறிப்புதான் இந்தக் கவிதை!

Friday, May 18, 2012

சூத்திரர்களின் கதை


சூத்திரர்களின் கதை


                             ஒரு நூல் நாவலாகவும், தன் வரலாறாகவும், இனவரைவியல் கூறுகளோடும், அரசியல் பின்னணியோடும், தகவல்களோடும், ஆய்வறிக்கைகளாகவும், கலை நேர்த்தியான எழுத்தோடும், தன் முன்னேற்ற நூலாகவும்  என்று பன்முகத்திறன் கொண்டு விளங்கமுடியுமா? முடியும் என்பதற்குச் சான்றாக ‘ஒரு சூத்திரனின் கதை’ நூலைச் சொல்லலாம். ஏ.என்.சட்டநாதன் எழுதிய தன் வரலாறே இந்த நூல்.முழுமையடையாத தன் வரலாறு.   நூலாசிரியர் படித்துமுடித்துவிட்டு, வேலை தேடும் சமயத்தில்  நூல் நின்றுவிடுகிறது.ஆனாலும், அதற்குப் பிறகான சட்டநாதன் என்பவரைத்தான் பலரும் அறிந்திருக்கக்கூடும். இட ஒதுக்கீடு  வழங்கும் சமூக நீதி ஏற்பாட்டில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கிய தமிழ் நாட்டில், அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் என்ற வகையில் அறிந்திருக்கமுடியும்.

  

                                இந்த நூலை அவர் தன் விருப்பப் பணிவோய்வுக்குப் பிறகே எழுதத் துவங்கிருக்கிறார். ஆனாலும், தன் சிறுவயது காலத்தையும் ஈரம்காயாமல் நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார். பள்ளிக்கூட மாணவர்கள் பயன்படுத்துவது போன்ற கோடுபோட்ட ஒரு நோட்டில் சட்டநாதன் எழுதிவைத்ததை அவருடைய பேத்தியும், இலண்டன் பல்கலைக்கழக கோல்ட்ஸ்மித் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும் பணியாற்றும் உத்தரா நடராஜன்  நூலாகப் பதிப்பித்திருக்கிறார். பெர்மணண்ட் பிளாக் என்னும் வெளியீடு மூலம் முதலில் ஆங்கிலத்திலேயே இந்நூல் PLAIN SPEAKING: ‘ A SUDRA’S STORY’ என்று வெளிவந்திருக்கிறது. ஆங்கிலப் பதிப்பைவிட, தமிழில் விலை குறைவாகவே காலச்சுவடு அளிக்கிறது.இதை தமிழில் மொழிபெயர்த்து இருப்பவர்கள் கே.முரளிதரன் மற்றும் ஆ.திருநீலகண்டன் ஆகியோர். மேலும்,  இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் சட்டநாதனின் உரைகளை தமிழில் மொழிபெயத்தவர்கள் வ.ஜெயதேவன், சிவ.மாதவன் ஆகியோர். இந்நூல் தமிழில் வர உறுதுணையாக இருந்தவர் ஆ.இரா.வேங்கடாசலபதி என்று அறிய முடிகிறது.


                    பிறந்தது, வளர்ந்தது, படிப்பு, பணிகள் என்பன போன்ற விவரங்களை முன்னுரையிலேயே படித்துவிட முடிகிறது. இதைத் தாண்டி ஒரு தன் வரலாற்று நூலுக்குள் என்ன இருந்துவிடப்போகிறது  என்கிற சலிப்போடு படிக்கத்துவங்கியபோது, ஆச்சரியமாக , நூல் அப்படியே வசியப்படுத்திக்கொள்கிறது. உத்தரா நடராஜன் எழுதியுள்ள முன்னுரை குறிப்பிடத்தகுந்தது.
சட்ட நாதனின் பூட்டி(பாட்டியின் தாய்) முதல், இந்த நூலை பதித்தவரான சட்ட நாதனின் பேத்தி உத்தரா நடராஜன் வரை என்று எடுத்துக்கொண்டால் ஆறு தலைமுறைகளை உள்ளடக்கி, ஒரு நாவலின் பின்புலத்தோடும், வெளிப்பாட்டு அழகோடும் அமைந்திருக்கிறது.

                      பள்ளி என்று இருந்த சாதியை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டங்களில், பலருடைய தொடர்முயற்சிகளால் வன்னிய குல ஷத்ரியர் என்று பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்த சட்டநாதன் சாதியில் சத்திரியர் என்னும் பின்னொட்டு  இருக்கும்போதும் இவராகவே சூத்திரனின் கதை என்று தன்கதையை எழுதியிருப்பது ஏன்?ஏனெனில், பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் சூத்திரர்களாகவே கருதப்பட்டனர். இதைச் சுட்டிக்காட்டும் ஒரு இடமும் கதைக்குள் வருகிறது. வன்னியர்கள் சிறுபான்மையாக, ஆதிக்கம் இல்லாதவர்களாக இருக்கும் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சட்டநாதன். இதையும் நாம் கவனிக்கவேண்டியதாகிறது.ஆனாலும், இவர் தன் சாதி மீதான ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இருந்தவராக தென்படவில்லை. சாதிபேதங்களை வெறுப்பவராகவே இருந்திருக்கிறார்.

                                  இலக்கிய வாசிப்பின் வழியாக பல மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் வாசகர்களின் நெஞ்சில், வெவ்வேறு ரூபங்களில் நிலைத்து நிற்கின்றனர். அதில் சட்டநாதனின் தாய்வழிப் பாட்டியும் சேர்ந்துகொள்கிறார். நூலில் முகப்பு அட்டையில் அமைந்துள்ள புகைப்படத்தில் தென்படுபவர்கள் பற்றிய குறிப்பு எதுவும் தரப்படவில்லை.

                                   சுயசரிதை என்பதை தமிழ்ப்படுத்தினால் தன் வரலாறு என்று எழுதப்படுகிறது. ஆனால் வரலாறாக ஆகமுடியாதவர்கள்கூட சுயசரிதை எழுதுவதாலும், மேலும் பொருத்தமான தமிழாக்கமாகவும் சுயசரிதை என்பதை தன்கதை என்று குறிப்பிடலாம் என்றே எண்ணுகிறேன்.

                                    சட்டநாதன் அவருடைய தன்கதையில், இடம்பெறும் பெரும்பாலான மனிதர்களின் பெயர்களை நேரடியாகப் பதிவு செய்யாமலேயே தவிர்த்திருக்கிறார்.குறிப்புப் பெயர்களாகவும், உறவுமுறைகள் பெயர்களாலுமே குறிப்பிடுகிறார்.

                              ஆனர்ஸ் படிப்பில் தன்னுடன் படித்த தோழிகளைப் பற்றியும், பின்னர் அவர்கள் என்னவானார்கள் என்றும் சொல்லும் இடம் வருகிறது.அப்போது, அவ்வளவாக படிப்புவராத ஒரு தோழி அரசியல்வாதியானதைப் பற்றி மிக இயல்பாகச் சொல்லும்போது, ரசிக்கும்படியாக உள்ளது.

                          சட்டநாதனை பார்ப்பனர் என்று எண்ணிக்கொண்டு வேலைதரும் ஒரு பார்ப்பனர், பின்னர் உண்மை தெரிந்தவுடன் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றங்கொள்கிறார். அதே பார்ப்பனர்தான் பிறகு, சட்டநாதன் தன் இளைமைக்காலம் வரை  பல இன்னல்களையும், அவமானங்களையும் எந்த ஐ.சி.எஸ். படிப்பின் பொருட்டுப் பொறுத்துக்கொண்டு , கனவு கண்டுகொண்டிருந்தாரோ அந்த  ஐ.சி.எஸ். படிப்பிற்கே,    வாழ்க்கை இலட்சியத்திற்கே தடையாக நின்று சதி செய்கிறார். இந்தச் சம்பவம் சட்டநாதன் அவர்களின் வாழ்க்கையில் எப்படியொரு முக்கியமான இடமோ, அதுபோலவே சமூகத்தைப் பிரதிபலிப்பதிலும் முக்கியமான இடம். ஒருவர் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் எத்தனைதான் அறிவும், திறனும் பெற்றிருந்தபோதும் அவர் தாண்டவேண்டிய தடைகளும், தோல்விகளும், வாய்ப்புமறுப்புகளும், அவமானங்களும் சேர்ந்து முன்னேற்றத்தையே தடுத்துவிடுகிறது.உயர்சாதியினரைவிட மிகவும் போராடித்தான் வெற்றியை அடையமுடிகிறது.காணாமல்போகக்கூடியவர்களே நிறையபேர். அதையெல்லாம் கடந்து வெற்றி கண்டவர்களுடைய வரலாற்றில், மறைக்கப்பட்டது, மறுக்கப்பட்டது, திரிக்கப்பட்டது, பதிவு செய்யப்பாடாதது போன்றவற்றையெல்லாம் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்திருப்பவை சிலவே.

                                சிக்கல்களை உணர்ச்சி கலக்காமல், தெளிவாக அதன் ஆதாரம் நோக்கி சிந்திப்பவராகவும், செயல்திறனும், விடாமுயற்சியும் கொண்டவாராக இவர் இருந்தது, சிறுபிராய காலக்கட்டங்களிலேயே தென்படுகிறது.இதுவே, இவரது பின்னாளைய வளர்ச்சிக்கு ஆதாரமான காரணிகள். கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் படித்தவர் என்பதால் அதன் தேவையை நன்கு உணர்ந்திருக்க இவரால் முடிந்திருக்கும்.

சமூகத்தில் சாதி எவ்வளவு பெரிய காரணியாக இருக்கிறது என்பதை பல படிப்பினைகளின்மூலம் உணரமுடிவதுபோலவே, சட்டநாதனின் வாழ்க்கை மூலமும் அறிய முடிகிறது. ஆனால், அமைதியான முறையிலும், சார்பு நிலைகொள்ளாமலும்தான் சாதியைப் பற்றிய இடங்களிலெல்லாம் சட்டநாதன் எழுதியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. சாதி பற்றி எழுதும்போது மட்டும் என்றில்லாமல்,எப்போதுமே தற்சார்பை நிலை நிறுத்தாமல் விலகி நின்றே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இந்த நூலை வெளியிட்டமைக்காக காலச்சுவடு பதிப்பகமும், அதற்கு உறுதுணையாய் நின்றவர்களும், உழைத்தவர்களும் பாராட்டுக்குரிவர்கள். சட்ட நாதன் ஆற்றிய உரைகள், மற்றும் கட்டுரைகள் ஆகியவை இணைப்பாக அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

ஒரு சூத்திரனின் கதை
சட்டநாதன் ஐ.ஏ.எ.ஸ்
தன் வரலாறு
காலச்சுவடு பதிப்பகம்

Tuesday, May 15, 2012

பூரணி பொற்கலை- கண்மணி குணசேகரன்


புனைவுக் கலையில் பூரண நிலை


ஆத்திகக் கொள்கை கொண்ட மனிதர்களுக்கு கடவுள் நம்பிக்கையே கடைசித்துணையும், ஆறுதலுமாகும்.தன் எல்லா வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையோடு கடவுளிடம் இறக்கிவைத்து ஆசுவாசம் பெறுகிறார்கள். நல்ல பலன்கள் நடைமுறை வாழ்வில் நிகழும்போது, அந்தக் கடவுளே செய்ததாக நன்றிகூர்கிறார்கள்.கடவுளுக்குப் படையல், நேர்த்திக்கடன் ஆகியவை செலுத்தி மகிழ்கிறார்கள்.  ஏழை, எளிய, சிற்றூர் மக்களின் கடவுள்கள் அவர்களைப்போலவே ஏழ்மையோடும், சிறுதெய்வங்களாகவுமே இருக்கிறார்கள். மண்ணின் மனிதர்களைப்போலவே, மண் சாமிகள்.தெய்வத்திலும்கூட சிறு தெய்வங்கள், பெருந்தெய்வங்கள் என்று மனிதர்களுக்குள் பிரிவினை. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

கண்மணி குணசேகரனின் அண்மைய சிறுகதைகளின் தொகுப்பு பூரணி பொற்கலை. மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அத்தனைக் கதைகளுமே ஓரிழையை அடிப்படையாக, தொடர்ச்சியாகக் கொண்டு ஒரு வரிசையில் வைக்கத்தக்கவை.காவல் தெய்வமான அய்யனார்,அய்யனாரின் மனைவிகள் பூரணி, பொற்கலை, அய்யனாரின் சேவகர்கள், மற்றும் சிறுதெய்வங்கள் ஆகியோரை கதை மாந்தர்களாகவே  கொண்டு எழுதப்பட்டவை.மானுடர்களும், அமானுடர்களும் கதைகளுக்குள் கலவாமல் கலந்து கதை மாந்தர்களாகியிருக்கிறார்கள். இப்படி ஒரே சரடில் கற்பனைவளத்தோடு எழுதித்தள்ளும் திறன் இருப்பதை கண்மணி இலக்கிய உலகிற்கு இத்தொகுப்பின் மூலம் பெருமையோடு அறிவித்திருக்கிறார்.

கண்மணி குணசேகரனுடையது யதார்த்த வகை எழுத்து. இந்தத் தொகுப்பைப் பொருத்தவரை யதார்த்த எழுத்தோடு சேர்த்தும், சற்று அதிலிருந்து மாறுபட்டும், இலக்கிய உத்திகளை மிக இயல்பாகச் சேர்த்துக்கொண்டும், புனைவுகளின் வழியாக வாசிப்பு சுவாரசியமளிக்கும் வகையில் எழுதப்பட்டவை இக்கதைகள்.யதார்த்தங்களிலிருந்து விலகிய புனைவுகளின் வழியாக இலக்கியம் செயல்படும்போது, அதற்கு பன்முகத்தன்மை அளிக்கும் சாத்தியங்கள் கூடுகிறது. கவிதைகளிலேயே இவ்வுத்தி பெருமளவில் செயல்படுகிறது. இத்தொகுப்புக் கதைகளிலும்  நாம் காணும் அய்யனார் மற்றும் சுற்றத்தினர் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமாக நமக்குக் காட்சியளிப்பார்கள். ‘ நாம வாழவச்ச மனுசாளுவோ, நம்ம வாழவச்சுப் பாக்காம வேரை வெட்டுதுங்க... வெந்நீரை ஊத்துதுங்க’ என்று சாமிகளே புலம்புவது, புறக்கணிக்கப்படுகிற பெற்றோர்களை, வாழ்ந்து கெட்டவர்களை, கலாச்சாரங்களை, கலைகளை என்று பல வகையில் நினைவுபடுத்திவிடுகிறார்கள். புனைவின் சாத்தியமே இங்குதான் சிறப்பாகச் செயல்படுகிறது.இவ்வாறு, சாமிகள் படிமங்களாக நின்று, பல்வேறு சூழலுக்குப் பொருந்திப்போகிறார்கள்.. பெண்ணியம் பேசுகிற, தலித்தியம் பேசுகிற, மாய யதார்த்தவாதம் என்கிற உத்திகளை இயல்பாக உள்ளடக்கிய,ஆனால் எளிமையாக சொல்லப்பட்ட கதைகள்.

நடைமுறை வாழ்வில் சாமிகள் எப்படி கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்? என்றொரு கேள்வியெழுவது இயல்புதான். குற்றவாளிக்கு உறுத்துகிற மனசாட்சியாகவும், அச்சுறுத்துகிற கனவாகவும், இயற்கை  நிகழ்வுகளின் காரணிகளாக கற்பிக்கப்படுபவர்களாகவும் வருகிறார்கள் சாமிகள்.

படையல் என்கிற கதையில் வீரனாருக்கும், அய்யனாருக்குமே சண்டை மூள்கிறது. மாமன், மச்சான் சண்டைதான். இடையில் சமரசம் செய்துவைப்பவள் பூரணிதான்.என்னதான் சாமிகளென்றாலும், அவர்களும் சராசரி மனிதர்களைப்போலவே நடந்துகொள்கிறார்கள். எனவே, இங்கே சாமிகள் குறியீடுகளாகவே நிற்கிறார்கள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் , நெய்வேலியைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் ஒரு பகுதியைச் சொல்கிறது, புழுதி எனும் கதை.

முன்பெல்லாம் மாட்டிறைச்சி  சற்று கமுக்கமான இடங்களில் விற்கப்பட்டு வந்தது.ஆனால், இன்று நகரங்களில்  நெரிசலான சாலையோரங்களில்கூட மாட்டிறைச்சி விற்கும் கடைகளும், அதில் வைக்கப்பட்டுள்ள மாட்டிறைச்சியும் பரவலாக காணமுடிகிறது. காலத்தால் ஏற்பட்டுள்ள இந்தச் சமூக நிலை மாற்றத்தை பதிவு செய்யும் இலக்கிய நுட்பமான, ஆவணமான ஒரு வாய்ப்பு ‘வேட்டை’ கதைக்குள் அமைந்திருக்கிறது.


உண்மை மனிதர்களுக்கும், சாமிகளுக்கும் தொடர்புபடுத்துகிற சந்தர்ப்பங்கள் புனைவின் உச்சம். பூரணி பொற்கலை கதையில் ஈயம் பூசும் குடும்பத்தைப் பார்த்து ஊர்த்தலைவன் மனம் பதைக்கும் இடம் அதற்குச் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம் .உடனே அதற்குப் போட்டியாக அரண் கதையில், மீண்டும் குடிப்பழக்கத்தைத் தொட நினைப்பவனை விரட்டி வந்து காப்பாற்றும் குதிரையையும் சொல்லலாம். இப்படி ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று போட்டி போட்டுகொள்ளும் வகையில் வரிசையில் தள்ளுமுள்ளு  கட்டி நிற்கின்றன.
நமது மண்ணின் சிறுதெய்வங்கள் வானத்திலிருந்து குதித்தவர்களில்லை. நம்மிடையே வாழ்ந்து மறைந்த நமது முன்னோர்களேதான். அவர்கள் செய்த தியாகங்களுக்காகவும், வஞ்சிக்கப்பட்ட ஆறாத்துயரங்களுக்காகவும், வீரதீரச் செயல்களுக்காகவும் வழிவழியாக போற்றப்பட்டு வந்து சாமிகளாகவே ஆகிவிட்டவர்கள். இக்கருத்தை சுட்டிக்காட்டுவதுபோல், ’சுவர்’ என்கிற கதையில் வருகிற மலையம்மாள் என்கிற குலசாமியைப் பற்றிய தகவல் கதைக்குள்ளேயே வருகிறது.

வாழ்ந்துமறைந்த நமது முன்னோர்கள் என்பதால்தானோ என்னவோ அவர்களுக்குள்ளும் சாதிய வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன போலும்.அந்தவகையில், தமுக்கு வீரன் கதை ஒடுக்கப்பட்டவனின் எழுச்சியை, தலை நிமிர்வை முன்வைக்கிற கதை. ஒடுக்குபவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையும்கூட. நடு  நாட்டு வட்டார மொழியிலேயே சாமிகளும் பேசுவது புனைவின் சுவையைக் கூட்டுகிறது.

ஒவ்வொரு கதையும் சமூகத்துக்கான செய்திகளாக, அறிவுறுத்தல்களாக அமைந்திருந்தாலும் அவை போதனைக் கதைகளைப்போல் அல்லாமல் இயல்பாக, உணர்த்துகிற வகையில் சொல்லிச்செல்கிறது.

ஆணிகளின் கதை என்கிற கதை மட்டும் கண்மணி குணசேகரனின் ’வெள்ளெருக்கு’ சிறுகதைத் தொகுப்பில் முன்னமே இடம்பெற்றது. என்றாலும், பொருத்தப்பாடு கருதி இத்தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆணிகளின் கதை ஆவிகளின் கதைதான். இந்தக் கதையில் மட்டும் சாமிகளுக்குப் பதில் ஆவிகள். ஆவிகளின் கதைகள் நமக்கு உணர்த்துவதும்,சாமிகளின் கதை போலவேதான். குலசாமிகளின் கதைகளைப்போலவே, கதைகளில் வருகிற உவமைகளும் தனித்துவமான, மண்சார்ந்த வாழ்க்கையிலிருந்து வெளிப்படும் உவமைகள்தான்.


நெகிழ்ச்சியான காட்சிகளாலும், உரையாடல்களாலும் அதேபோல்  அங்கதச் சுவையாலும் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை தருகின்றன கதைகள். வாசிப்பின்போது, மௌனக் கரை உடைத்து சிரிக்காமலும், தழுதழுக்காமலும் இக்கதைகளை படித்துவிடமுடியாது எனலாம்.

எழுத்தாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கும்போதே அத்தகைய திறனை, இயல்பாகக் கொண்டு பிறக்கிறார்கள், அதுவொரு மானுட நிகழ்வு என்றொரு கூற்று உண்டு. (ஒருவேளை மகாகவிகளுக்கு, மகா எழுத்தாளர்களுக்கு இக்கூற்று பொருந்தலாம் என்பது என் எண்ணம். சிறந்த கவிகளாக, எழுத்தாளர்களாக உருவாக தீவிரமான முயற்சியும், பயிற்சியுமே போதும் என்று எண்ணுகிறேன்) இக்கதைகளை படிக்கிறபோது இக்கூற்று உண்மைதானோ என்று நம்பத்தோன்றுகிறது. கண்மணி குணசேகரன் என்கிற கலைஞனின் எழுத்து வல்லமைக்கு சிறந்தவொரு சான்றாக, வெற்றிச்சின்னமாக , பூரணி பொற்கலை சிறுகதைத் தொகுப்பு பெருமை சேர்க்கிறது.தமிழினி வெளியீடாக வந்திருக்கிற இத்தொகுப்பில் எழுத்துப்பிழைகள் சற்று தென்படுகிறது.

சிறுதெய்வ வழிபாடுகள், சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவை அறிமுகமேயில்லாத நகர, மாநகர வாழ் மக்கள்கூட இக்கதைகளை வாசிப்பதன் வழியாக அவற்றை அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு கதைகளை வாசித்தபிறகு சிற்றூர் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சிறுதெய்வங்களின் சிலைகளை வெறும் சிலைகளாக பார்க்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அச்சிலைகள் உயிர்பெற்று கற்பனைக் கண்களுக்குள் துள்ளித்திரியும்.
                                                                                

Friday, January 20, 2012

இது என்ன தலைப்பு?




மரங்கொத்திச் சிரிப்பு என்கிற என் கவிதைகள் தொகுப்பு நூலின் தலைப்பைப் படித்த சில நண்பர்கள் ‘அப்படின்னா என்ன?’ என்று கேட்டனர். நண்பன் இசை கூட கேட்டார். இசைக்கு நான் சொன்னேன்.’மரங்கொத்திப் பறவை போடுற சத்தம் எக்காளமா சிரிக்கிற மாதிரி இருக்கும். ஆனா, அதை சிரிக்கிறதுன்னு சொல்லலாமான்னு எனக்கு  சந்தேகம் இருந்துட்டே இருந்தது.
தகவல் பிழையாக ஆகிவிடக்கூடாதேன்னு  யோசிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம், தி.ஜானகிராமனோட மோகமுள் நாவலை நான் இப்போதான் படிச்சு முடிச்சேன். அதுல ஒரு இடத்துல மரங்கொத்தி சிரிப்புன்னு வரும். இப்போ உன்னோட உறுமீன்களற்ற நதியாகட்டும், இளங்கோகிருஷ்ணனோட காயசண்டிகை தலைப்பாகட்டும். எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும்? ’உறு’ ங்கிற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்னன்னு உன்னோட கவிதைத் தொகுப்பை படிச்சதுக்கப்புறந்தான், தேடிப்படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். அதுபோல இதுவும் இருக்கட்டும்’


எப்படி ஒரு கவிதைக்குள் பொருத்தமாக குழந்தைகள் இடம்பெறும்போது, அந்தக் கவிதைக்கு ஒரு நெகிழ்ச்சி வந்துவிடுகிறதோ அதேபோல் பொருத்தமாக  பறவைகள் வந்துவிட்டாலும், அந்தக் கவிதைக்கு சிறகுகள் முளைத்துவிடுகிறது என்பேன்.

மரங்கொத்திச் சிரிப்பு என்கிற வரி என்னுடைய ஒரு கவிதையில், நான் செம்மையாக்கம் செய்யும்போதுதான் இடம்பெற்றது.அகநாழிகை இதழில் வெளியாகியிருந்த கவிதையில் திருத்தம் மேற்கொள்வதற்குமுன் பின்வருமாறு இருந்தது. (ஓரளவு, நல்ல வரவேற்பைப் பெற்ற கவிதை இது. கீழே கவிதை முழுமையாக இல்லை)

கடற்கரை வெளியில்
ஒருவன் தன் மகனை
உயரத் தூக்கி வீசி
பிடித்து
வீசி
பிடித்து
விளையாடிக்கொண்டிருந்தான்

அச்சமற்ற குழந்தையின்
முகத்தில் மகிழ்ச்சியலை
................................
................................

இவ்வரிகளை இவ்வளவு தட்டையாகச் சொல்லாமல் வேறெதாவது செய்யவேண்டும் என்று யோசனையிலிருந்தேன்.
அலுவலகத்தில் மழை சற்று பெய்து ஓய்ந்திருந்த ஒரு தேனீர் நேரத்தில்  தனியாக அமர்ந்திருந்தபோது அசரீரி போல் மரங்கொத்திப் பறவையின் சிரிப்புச் சத்தம் கேட்டது. குதூகலமாகிவிட்டேன்.திருத்திய பிறகு வந்த வரிகள் இப்படி

கடற்கரை வெளியில்
ஒருவன் தன் மகனை
உயரத் தூக்கி வீசி
பிடித்து
வீசி
பிடித்து
விளையாடிக்கொண்டிருந்தான்

முதல் பறத்தலை ருசித்த
மழலைப்பறவையின்
அச்சம் விலக்கியிருந்த கெக்களிப்பில்
மரங்கொத்திச் சிரிப்பலை
...

பொதுவாக என்னுடைய கவிதைகளில் உவமைகள், அலங்காரங்கள் இருப்பதில்லை. நேரடியாகவும், எளிமையாகவுமே இருக்கும். அந்த வகையில் நான் உவமையாய்ச் சொன்ன அரிதான ஒன்றாக இவ்வரி இருக்கிறது. தனித்துவமான தலைப்பாகவும் இருக்கும் என்று மரங்கொத்திச் சிரிப்பு என்று பெயர் தேர்ந்தெடுத்தேன்.

மரங்கொத்திச் சிரிப்பு என்கிற வரியை கூகிளில் தட்டச்சி தேடினால் ஒரு வலைப்பக்கம்கூட விடையாகக் கிடைக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் இதே அர்த்தம் கொண்ட வரியைத் தேடியபோது,இவ்வரி  மிகவும் புகழ்பெற்றதாக தெரிகிறது. இப்போது தமிழிலும் இந்தக் குறை நீங்கும் என்று உங்களையெல்லாம் நம்பிச் சொல்கிறேன்.

2 நாட்களுக்கு முன், காலையில் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பாட்டின் வரிகளை கவனித்தபோது ஆச்சரியமாகிவிட்டது. என் தனித்துவமான தலைப்புக்கு வந்த சோதனையைப் பாருங்கள். ராஜாதி ராஜா படத்தில் வருகிற பாடல்.

சிலுசிலுவென குளிரடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து
மரங்கொத்திப் பறவைகள்
மனம் விட்டுச் சிரிக்கின்றதே

மலையாளக் கரையோரம்..

கூகிளில் நான் தேடியவரை இப்பாடலை எழுதியவர் பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, பாடலை எழுதியவர்  கவிஞர் வாலி என்ற தகவலை கவிஞர் மகுடேஸ்வரனிடம் கேட்டு அறிந்தேன்

                                 

Friday, January 6, 2012

Blurb


இது நான் (ச.முத்துவேல்)செல்பேசி 9865685470


என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘மரங்கொத்திச் சிரிப்பு'' தொகுப்புக்கு நண்பர் கவிஞர் இசை அளித்துள்ள பின்னட்டை வாசகங்கள் (Blurb). இசைக்கு நன்றிகளுடன்...

‘'இக் கவிதைகள் அனுபவமாக கடல்களை நீந்திக் கடக்கவோ, மலைகளைத் தாவிக்குதிக்கவோ அவசியமில்லை. தினசரி வாழ்வின் மனிதர்களையும், காட்சிகளையும் கவித்துவத்தின் கண்களால் திருகியெடுத்துச் சேர்த்தவை இவை.இக் கவிதைகளின் சத்தியம், மேதாவிலாசத்தின் கண்களை அடைத்துக்கொண்டு எழுகிறது.ஒரு வளர் இளம் கவியின் நம்பிக்கையூட்டும் முதல் தொகுப்பு என்று இதற்கு உறுதி சொல்லலாம்''.
                                                                                                        -இசை

Thursday, January 5, 2012

மழலைப்பறவையின் முதல் பறத்தல்


 மரங்கொத்திச் சிரிப்பு


கவிஞர் ஸ்ரீநேசன் ஒரு விமர்சன அரங்கில் பேசும்போது சொன்னார், ‘ஒரு தொகுப்பில் ஐந்து  நல்ல கவிதைகள் இடம்பெற்றுவிட்டாலே, அந்தத் தொகுப்பு வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளலாம்’ என்று. நானும் இதையே ஆதாரமாகக்கொண்டு என்னுடைய கவிதைத் தொகுப்பை உங்கள் முன் வைக்கின்றேன். நிச்சயம் நல்ல கவிதைகளின்  எண்ணிக்கை ஐந்தைத்தாண்டும். ’’ மரங்கொத்திச் சிரிப்பு’’ என்பது நூலின் தலைப்பு. உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 80 பக்கங்கள். விலை ரூ.60

சராசரியான உலகியல் வாழ்க்கையோடு சேர்த்து, அல்லது அதிலிருந்து சற்று விலகி, நான் வேறொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தது அண்மையில்தான். இலக்கியத்தை அறிதல், இலக்கியத்தின் வழி அறிதல் எனும் வாழ்க்கைப்பாதையே அது.தோராயமாக 2007 லிருந்தே என் வாசிப்பும், எழுத்தும் துவங்கியிருக்கிறது. என் முதல் கவிதைக்குள்ளேயே  அப்போது நடமாடத் தொடங்கும் வயதிலிருந்த என் மகன் வந்துவிடுகிறான். 2007 ஆகஸ்டில்தான் என்னுடைய முதல்கவிதையே வெளிவந்தது. குங்குமம் வார இதழ், வாசகர் கவிதைத் திருவிழா ஒன்று ஏற்பாடு செய்து கவிஞர் வைரமுத்து அவர்களை நடுவராக நியமித்து இருந்தது. கிட்டத்தட்ட 100 கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் நானுன் ஒருவன். நான் அப்போதுதான் கொஞ்சம் வாசிக்கத்துவங்கி , சில கவிதைகளைப்போல் எழுதிப்பார்த்துக்கொண்டு, நண்பர் புது.மு. சுந்தரத்திடம் காண்பித்துக்கொண்டிருப்பேன். அந்நேரத்தில் நான் எழுதியிருந்த ஒரு கவிதையை சுந்தரம் பாராட்டவே, அதைக் குங்குமத்திற்கு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினேன். அது வைரமுத்து அவர்களால் தேர்வாகி வெளியாகியதும், அதன் பிறகு தேர்ந்தெடுத்தக்கப்பட்ட கவிஞர்களை சென்னையில் வைரமுத்து அவர்கள் சந்தித்து பாராட்டுவிழா எடுத்ததும், பரிசுகள் , அறிவுரைகள், ஆலோசனைகள் அளித்ததும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தன்னமிக்கையை அளித்தன. அந்த முதல்வெற்றியும், அது அளித்த உற்சாகமும் உந்துதலுமே இன்றுவரையிலான என் தேடலுக்கான ஊக்கசக்தியாக அமைந்தது, என்னுடைய நற்பேறுதான்.அதன் பிறகுதான் வைரமுத்து எழுதிய புத்தகங்களையேகூட தேடி படிக்க ஆரம்பித்தேன். இதுதான் என் வாசிப்பு நிலை. இத்தனைச் சிறிய காலத்திற்குள் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை நான் கவனித்துக்கொண்டே வருகிறேன். வாழ்நாளை நிறைய வீணடித்துவிட்டோமே என்று மனம் ஏங்குகிறது. 30 வயதிற்குப் பிறகு ஒருவன் கொண்டு வருகிற கவிதைத் தொகுப்பு என்று பார்க்கமுடியாத வகையில், இலக்கியத்தில் நான் துவக்கப்பள்ளி மாணவன் என்கிற நிலையிலேயே இருக்கிறேன். ஆனாலும் நன்றாகப் படிக்கும் மாணவன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்வேன்.

நான் வாசிக்க ஆரம்பித்த புதிதிலேயே, நவீன இலக்கிய அறிமுகம் நண்பர்கள் மூலம் ஏற்பட்டுவிட்டது. எனவே, முறையான வாசிப்புத் தளம் இல்லாமல், நேரடியாக நவீன இலக்கிய வாசிப்புக்குள் சென்று சேர்ந்துவிட்டேன். துவக்கத்தில் மிகவும் தடுமாற்றமாகவே இருந்தது. ஆனால், நான் தீவிர வாசிப்பை மேற்கொண்டேன். மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் வாசிப்பே எனது முதன்மையான வேலையாகியிருக்கிறது. அந்தவகையில், என் வாசிப்பின் பக்க விளைவுகளும், புறச்சான்றுகளுமே என் கவிதைகள். நான் வேறெப்போதும், வேறெதிலும் இவ்வளவு கடின உழைப்பை இதுவரையிலும் செலுத்தியதேயில்லை. வாசிப்பின் மீதான என் தீவிர ஆர்வத்திற்கு   உடல் ஒத்துழைக்கவில்லை என்கிற சூழலிலும். 

என்னுடைய வாசிப்பினால், இலக்கியம் பற்றிய புரிதல்களும், தீர்மானங்களும் ஒவ்வொரு நாளுமேகூட மாறியபடியேயிருக்கின்றன. அதாவது, அவை முன்னேறிக்கொண்டிருக்கின்றன என நான் எண்ணுகிறேன்.
        நான் வாசிக்கத்துவங்கியபோது என்னை மிகவும் கவர்ந்தவை எளிய கவிதைகள்தான்(plain poetry). அலங்காரங்கள், உவமைகள் அற்ற எளிய கவிதைகளையே நானும் எழுதத்துவங்கினேன். அல்லது அதுதான் எனக்குக் கைகூடியது என்றும் சொல்லலாம். ‘’கவிதையின் அனாவசியமான இறுக்கங்களைத் தளர்த்துவதுதான் இன்று நம் முன் இருக்கும் சவால்’’ என்கிற மனுஷ்யபுத்திரனின் வாக்கும், பழமலய் அவர்களின் கவிதைகளும் என்னை துவக்கத்தில் வழி நடத்தியது எனலாம். நானும் சவாலில் பங்கேற்றுக்கொள்ள  ஆசையை ஏற்படுத்திக்கொண்டேன். அதன்வழி எளிய கவிதைகளையே எழுதினேன்.

.
ஆனால், அண்மையில், மிக அண்மையில்தான் கவிதை பற்றிய என் புரிதலில் சிறு மாற்றம் ஏற்பட்டது. தளர்த்திக்கொண்டேன் என்றுகூட சொல்லலாம். மரபு இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றை படிக்கத் துவங்கியபோது, எனக்குள் ஏற்பட்ட தீர்மானம் இது. அழகான பொய்கள் கவிதையில்தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. (ஆனால், அழகான பொய்கள்தான் கவிதையையேத் தீர்மானிக்கின்றன என்கிற கருத்து எனக்கு இல்லை.) எனவே, கவிதை என்கிற தனித்துவமான வடிவம் என்பது அதன் உள்ளடக்கத்திற்கு அப்பால்,அழகிய பொய்கள், அலங்காரங்கள், மிகைப்படுத்துதல், புதிய சொல்லிணைவுகள், சொல்லுடைப்புகள்,  சிறப்பான புதிய உவமைகள் ஆகியவற்றை ஒரு கவிஞன் கொடையாக அளிக்கவேண்டிய   இலக்கிய வடிவம்தான் என்றும் ஆனால் அதேவேளையில் இவை கட்டாயமில்லை என்பதும் என் தற்போதைய தீர்மானம். இந்தத் தீர்மானத்தின்படியே, என்னுடைய கவிதைகளைத் தொகுப்பாக்கும் இவ்வேளையில், என் பழைய கவிதைகளில்கூட சிற்சில மாற்றங்களை நான் செய்திருக்கிறேன். அவை சில இடங்களில் முதிர்ச்சியில்லாமலும், சில இடங்களில் நன்றாகவும் அமைந்திருக்கிறது.

’வெள்ளத்தனைய மலரின் நீட்டம்’ என்கிற வரியை நான் அடிக்கடி எண்ணிக்கொள்வேன். என்னுடைய கவிதைகளைப் படிக்கும்போதும் அப்படியே. என்னுடைய கவிதைகள் என்னுடைய வாசிப்புக்கு ஏற்றவாறு மாற்றமடைந்துகொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். என் பெருமதிப்பிற்குரியவர்கள் வைரமுத்து துவங்கி ஜெயமோகன் வரை , இன்னும் சிலராலும், நான் கவிஞன் என்று விளிக்கப்பட்டமையே என்னுடைய இது நாள் வரையான சாதனையாகக் கருதுகிறேன்.

தூறல்கவிதை(http://thooralkavithai.blogspot.com) எனும் இந்த வலைப்பூ வழியாக என் செயல்பாடுகளுக்கு அன்பும், ஆதரவும், ஆலோசனைகளும், கண்டனங்களும் அளித்து உதவிய அனைவரையும் இவ்வேளையில் நன்றியோடு நினைவுகூர்கிறேன். ‘அவரைப் பார்க்க ஆசை’ என்கிற என் கவிதையை கருப்பொருளாகக்  கொண்டு சிறுகதைப் போட்டி ஒன்றை இணைய உலகில் நடத்திய கவிஞர் லாவண்யா சுந்தரராஜன் அவர்களுக்கும் ,உறுதுணையாய் இருந்த நண்பர்களுக்கும் நன்றி.உயிர் எழுத்து இதழில்’ புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகான கவிஞர்கள்’ கட்டுரையில் கவிஞர் கரிகாலன், என் பெயரையும் சேர்த்து, தன்னுடைய நம்பிக்கையை தெரிவித்திருந்தார். கரிகாலன் அவர்களுக்கு நன்றி. அதேபோல் உயிர் எழுத்து இதழில் ஐந்தாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தலையங்கம் எழுதியிருந்த ஆசிரியர் சுதீர் செந்தில் என் பெயரைக் குறிப்பிட்டிருந்தது நன்றிக்குரியது. இலக்கியத்தில் என்னுடைய பேசுபொருளாகவே அமைந்துவிட்ட எழுத்தாளர் ஜெயமோகன் என்னுடைய ‘ நீ-யும்’ என்கிற கவிதையை பாராட்டி அவருடைய வலைத்தளத்தில் ‘ உறவுகளின் ஆடல்’ என்கிற கட்டுரையை எழுதி என்னை வியப்பிலும், உற்காகத்திலும் ஆழ்த்தினார். என்னுடைய  வளர்ச்சியில் அவருடைய எழுத்துச் செயல்பாடுகள் பெரும்பங்களிப்பவை என்பதை நன்றியோடு குறிப்பிடுகிறேன். இலக்கியப் பள்ளியில் கற்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கெல்லாம் அவ்வப்போது எழுத்தாளர் பாவண்ணன் அவர்களிடம் வீட்டுப்பாடம் பயின்று தெளிவதுண்டு. இப்போது என் தொகுப்பிற்கு ஆலோசனைகளையும், தெரிவுகளையும் பொருத்தமான ஒரு அணிந்துரையும் வழங்கி சிறப்பித்திருக்கிறார்.பாவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் படைப்புகளை வெளியிட்ட இதழ்களுக்கு நன்றி. இந்தத் தொகுப்பு வெளிவர துணைபுரிந்த கவிஞர் சமயவேல் அவர்களுக்கும், பதிப்பாளர், கவிஞர் சுதீர் செந்தில் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. கவிதைகளைத் தணிக்கைசெய்து தேர்வு செய்தும், சிறிய அளவில் ஆனால் சிறப்பான அளவில் திருத்தங்களைச் செய்தும், பின்னட்டை வாசகங்கள் எழுதித் தந்தும் உதவிய  நண்பன்,  நான் கொண்டாடும் என் மனதிற்குகந்த கவிஞன் இசைக்கும் நன்றியோடு, முத்தங்களும்.

 மரங்கொத்திச் சிரிப்பு( கவிதைகள்)
உயிர் எழுத்து பதிப்பகம்
பக்கங்கள்:80
விலை ரூ.60

Monday, October 31, 2011


பால் கொடாத முலைகள்

            தேவாலய வாசலில் பேருந்து நின்றதும் இறங்கி சிவப்பு நிற கோபுரத்தைப்  பார்த்தேன். பள்ளியில் படித்தபோது சர்ச்சுக்குள் போய்வந்ததுண்டு. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என சொந்த ஊருக்கு வரும்போது, இப்படி நடந்துகொண்டே ஊரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டுப்போவதும், என்னென்னெவோ ஞாபகத்தில் வந்துபோவதும் நல்ல சுகமான அனுபவம்தான். பரவாயில்லையே!  ஊரில் ட்ராஃபிக் சிக்னல் விளக்குகள் எல்லாம் அறிமுகமாகிவிட்டிருக்கிறதே! எப்போதும் இரவில்தான் ஊருக்கு வருவது. பகலில் ஊரிலிருந்து திரும்பி பையுடன் எங்கள் தெருவில்  நடக்கும்போது ஏதோவொரு கூச்சம்.ஏதோ எல்லோரும் தன்னையே பார்ப்பதுபோல் ஒரு உணர்வு.வெறும் உணர்வு என்று மட்டும் சொல்லிவிடவும் முடியாதுதான். அப்படித்தான் பார்ப்பார்கள். அதுவுமில்லாமல், வேலைமுடிந்து கிளம்பிவர இரவாகிவிடும். தோராயமாக 5 மணி நேர பயணம்.  மலையடிவாரத்தில் இருக்கும் தெரு. மேடான தெருவின் முனையிலேயே கதிர், சரவணன், சங்கர் உட்கார்ந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் உற்சாகமாகக் கத்தினார்கள்.’வாடா. மெட்ராஸ்காரா, வா. எந்நேரத்துக்கு வர்ற? மணி இப்பவே எட்டரை ஆவுது.இதுக்கப்புறம் நீ வீட்டுக்கு போயிட்டு, பேசிட்டு, சாப்ட்டுட்டு வர்றது எப்போ? நாம சினிமாவுக்கு போறது எப்போ?’என்று அடுக்கிக்கொண்டே போனான், சங்கர். ’இதோ வந்துர்றேன் இருடா.வீட்டுல நான் என்ன பேசப்போறன். போய் பைய வச்சிட்டு, கொஞ்சமா சாப்பிட்டுட்டு வரவேண்டியதுதான.கால் மணி நேரமே அதிகம். டைம்தான் இருக்குதே.சரி,எந்த படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கீங்களா?’ என்றேன்.  ‘ஆஆங்.அதெல்லாம் முடிவு பண்ணித்தான் வச்சிருக்கிறோம். நீ எதாவது படத்தைமுடிவு பண்ணிக்கினு வந்திருப்பயே. வேணாண்டா சாமி. நீ பாக்குறமாதிரி அழுவற படமெல்லாம், வேணும்ன்னா இதோ இருக்கிறான் பாரு,உன் ஆளு. சரவணன். அவந்தான் உனுக்கு சரி. அவனக்கூட்டிக்கிட்டு நாளைக்கிப் போயிக்கோ.இப்போ நீ போயிட்டு சீக்கிரமா வர்ற வழியப் பாரு, ராசா.” என்று கோபால் சொன்னதும் எல்லோரும் சிரித்தனர். நான் மெல்ல சரவணனை பார்த்தேன். கேலியை ஏற்கும் பாவனையில் மெலிதாகச் சிரித்தான். நானும் சிரித்துக்கொண்டே ’ சரி, இதோ வந்துர்றேன்’ என்று சொல்லிவிட்டு பையை தோளில் மாட்டியபடி வீடு நோக்கி நடந்தேன். என் முகத்தில் சிரிப்பு சட்டென்று காணாமல்போய் ஒருவித இறுக்கம் கொண்டது அல்லது கொள்ளவைத்தேன் அல்லது இரண்டுமே.

           வீட்டிற்குள் நுழையும்போதே அம்மா நடையில் உட்கார்ந்திருந்தாள். தங்கை உள்ளே பாயில் படுத்துக்கொண்டிருந்தாள். இன்னும் தூங்கியிருக்கவில்லை. நான் வந்திருப்பதை அவளும் பார்த்திருந்தாள். ‘ சாப்பாடு எடுத்து வைக்கட்டுமாடா?’ என்றாள் அம்மா. அந்தக் குரலில் இருக்கும் பாவனையே வெறுப்பேற்றியது.
’ம்’
தட்டின் முன் அமர்ந்தேன். ரேஷன் அரிசிச் சோறு ஆறிப்போயிருந்தது. ஒரேயொரு குழம்பு மட்டும். கோபம் கோபமாக வந்தது. இதெல்லாம் நாடகம். ஃப்யூஸ் போன பல்புகளைகூட மாற்றாமல் அப்படியே விட்டுவைத்திருப்பாள். நான் போன அன்றுதான் வீட்டிலிருக்கும் சில்லறை செலவுகளையெல்லாம் செய்வது.டூத் பேஸ்ட், சோப், ப்ரஷ் இன்னும் மற்றவை. நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்குக்கூட வக்கில்லாமல் போய்விடவில்லை. டவுனில் இரண்டு வீடுகள்.குடியிருக்கும் வீடு போக இன்னொன்றில் வாடகை வருகிறது. கிராமத்தில் தரிசாக சில ஏக்கர் நிலம் இருக்கிறது. எல்லாம் அவள் பெயரில் உள்ள சொத்து. அவளுடைய அப்பா கொடுத்துவிட்டுப்போன சொத்து.ஒருவகையில் இதுதான், இந்த ஒன்னேகாலணா சொத்துதான் எல்லாவற்றுக்கும் காரணம். நானும் பலமுறை சொல்லிப்பார்த்துவிட்டேன். ‘நிலத்தை வித்து, வீட்டை இன்னும் முழுசா கட்டி வாடகை விட்டுடு. எங்களுக்குக் குடுன்னு சொல்லல.  நல்லதா சாப்பிடுங்க, துணி கட்டுங்க. இப்பத்தான் வேலைக்குப்போக ஆரம்பிச்சுட்டோமில்ல. எல்லாரும் நல்லாத்தான் படிச்சோம். எங்கள மேலப் படிக்கவைக்கறதுக்கு உன் சொத்து உபயோகமாகல.  சாவற வரைக்கும் அப்படியே தண்டமா வச்சிருக்கிறதால யாருக்கு என்னா பிரயோசனம்?  ஊர்ல இனிமேல் போய் நிலத்தை சீர்பண்ணி,செலவு பண்ணி யார் விவசாயம் செய்யப்போறது. யாருக்கு விவசாயம் தெரியும்? எப்ப இருந்தாலும் அதை வித்துத்தானே ஆவணும். அதை இப்பவே செஞ்சா, இருக்கிறவரையிலும் நல்லா இருக்கலாமே. நான் என்ன அழிச்சிடவா சொல்றேன்.அந்த நிலத்தை விக்கிற காச எடுத்து வீடு கட்டுறதுக்கு முதல்தானே போடச் சொல்றேன். இதெல்லாம் என்னைக்கா இருந்தாலும் செய்யவேண்டிய காரியந்தானே?அதை காலத்துக்கும் அப்படியே வச்சிருக்கிறதால எந்தப் பிரயோசனமும் இல்ல.’ ஆனால் விற்கமாட்டாள்.சொத்துதான் அவளுக்கு முக்கியம். ஆனால்,அதை வளர்க்கத் தெரியாதவள். நாயிடம் கிடைத்த தேங்காய் என்று சொல்கிறார்களே. இதுதானோ அது? ஒருமுறை இப்படி விற்கச் சொல்லி நான் வலியுறுத்தியபோது, என்னிடமே சில லட்சங்களுக்கு  நிலத்தை விலை பேசினாள். மற்றவர்களைவிட எனக்கு,  கொஞ்சம் சலுகை விலையாம்.அதற்குப் பிறகு நான்  நிலம்,வீடு பற்றி பேசுவதேயில்லை.பிள்ளைகளிடமே விற்கிறாள், எனில் யாருக்கு இந்த சொத்து?
வேண்டா வெறுப்பாக சாப்பிட்டுவிட்டு எதுவும் பேசாமல் வெளியேறினேன்.
‘நாங்க இதைத்தான் சாப்பிடறோம்’னு காட்டிக்கிறதுக்காகத்தான் இப்படி..

       ’சைக்கிள்ல இப்படி முன்னால கம்பியில உட்கார்ந்துக்கிட்டுப் போய் எவ்வளவோ நாளாச்சுடா. மெட்ராஸ்ல ,செகனண்டுல வாங்கின ஒரு சைக்கிள் வச்சுருக்கேன். ஆனா, என்னை முன்னால உட்கார வச்சு ஓட்டறது யாரு?’. எப்போதும் சரவணன் சைக்கிளில்தான் உட்காருவது.குறுக்கில்  நீலக்கோடுகள் போட்ட ஒரு வெள்ளை டீ சர்ட் அணிந்திருந்தான் சரவணன்.’ உன் ஞாபகம் வந்தா, அப்ப உன் உருவம் இந்த சட்டையிலதாண்டா இருக்கும். எத்தனையோ முறை எத்தனையோ சட்டையில உன்னை பாத்திருந்தாலும் மொதல்ல ஞாபகத்துல வர்றது இந்தச் சட்டையிலதான். நீ எதாவது பெரிய டூர் போயிர்ந்தாக்கூட,  அந்த டூரைப் பத்தி அப்புறமா யோசிச்சா எதாவது ஒரு இடமோ, சின்ன சம்பவமோதான் ஞாபகத்துக்கு வரும். அது டூர்ல பாத்த முக்கியமான இடமா இல்லாம சும்மா சாப்பிட்டிருந்த இடமாவோ, நடந்துபோன ரோடாவோ கூட இருக்கும். இல்லையா? அதுக்கும் காரணம் இருக்குதுன்னு நினைக்கிறேன். எப்படின்னா, அந்த நேரத்துலதான் நாம அந்த டூருக்குள்ள இருக்கோங்கிறத யோசிச்சிருப்போம். அதனாலதான் அப்படி’ என்றேன். சரவணனிடம் மட்டும்தான் இப்படியெல்லாம் பேசமுடியும்.
’கடைசியா என்னா படம் பாத்தே?’ என்றான் சரவணன். ‘ அங்க எங்க படம் பாக்கிறது? கம்பெனி, கம்பெனியில வேலை முடிஞ்சா ரூம். போனமுறை உங்கக்கூட இங்கப் பாத்ததுதான்’. ‘ உங்க அம்மா உனக்கு ஜெயராம கவுண்டர் பொண்ணை பாத்து வச்சிருக்காங்களாமே. ஆளும் பெரிய இடம். பொண்ணும் பெரிய உருவந்தான்’ என்று இன்னொரு சைக்கிளில் வந்த கோபால் அருகில் வந்து சொன்னதும் எல்லாரும் சிரித்தார்கள்.’ கோபால் எப்போதும் இடக்காகப் பேசி சிரிக்கவைப்பவன்.’யார்ரா அது? எனக்குத் தெரியலையே.?” “நகைக் கடைக்காரன்டா. அவன் பெரிய பொண்ணை நாளைக்கிப்போய் பாக்கிறதுன்னு பேசி வச்சிருக்காங்களாம். உங்கம்மா இன்னும் உங்கிட்ட சொல்லலயா? ரெண்டு பொண்ணுங்க.பெரிய பொண்ணு ஒன்னு.அதுக்கடுத்து இன்னொன்னு இருக்குது. மொதப் பொண்ணு செம குண்டாயிருக்கும்.  நல்லா கறுப்பா இருக்கும்’ என்றான் சங்கர். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.’டேய்.யார்ராவன். அவ சொன்னான்னு நீயும் பேசற. நகைக்கடைக்காரன் எனக்குப் பொண்ணு குடுக்கிறதுக்கு அவனுக்கு என்ன தலையெழுத்தா? பைத்தியக்காரனா அவன்? இவளுக்கு பேராசை. அவன் நம்மள சீண்டக்கூட மாட்டான். இவ பெருமையடிச்சுக்கிறதுக்கு இப்படில்லாம் பேசிக்கிட்டுத் திரியறா?’ என்று சொல்லும்போதே அவமானமாக இருந்தது.

          கதவைத் திறந்து வைத்தே தூங்கிக்கொண்டிருந்தார்கள். தம்பி வந்துவிட்டிருந்தான். ஃபேன் காற்று கட்டிலை நோக்கி பெருமளவில் வீசிக்கொண்டிருந்தது.கட்டிலில் அம்மா.உபரி காற்றுதான் தம்பி, தங்கைக்கு சென்றுகொண்டிருந்தது. நான் வரும் சத்தம் கேட்டு கட்டிலை விட்டு எழுந்து, எனக்கு இடம் தந்துவிட்டு கீழே படுத்துக்கொண்டாள். நான் வந்ததால்தான் இப்படி.இல்லையென்றால் கட்டிலும், காற்றும் அம்மாவினுடையது.  நானும் படுத்துவிட்டேன்.புழுங்கித் தள்ளுவதை உணர்ந்து எழுந்தேன். எல்லோரும் தூங்கிவிட்ட பிறகு  நள்ளிரவில் திடீரென்று ஃபேனை நிறுத்திவிட்டிருந்தாள். நான் கவனித்துவிட்டு எழுந்து கத்திவிட்டு மீண்டும் ஃபேனைப் போட்டுவிட்டு வந்து படுத்தேன்.
இது வழக்கமானதுதான்.’இப்படிச் செய்வதால் கரண்ட் பில் எவ்வளவு குறைந்துவிடும்?அந்தக் கணக்கையெல்லாம் அவளுக்குப் புரியவைக்க முடியாது. சொன்னால் எடுத்துக்கொள்ளவும் மாட்டாள்.தூக்கம் கெட்டு அவதிப்படுவதை விடவா கரண்ட் பில் பெரியது? அந்த அளவுக்கு இல்லாமலா போய்விட்டது’. யோசித்துக்கொண்டே உறங்கிவிட்டிருந்தேன்.

          எல்லோரும் எழுந்துவிட்டிருந்தார்கள். தம்பி வீட்டிலிருந்து சொம்பு எடுத்துப்போய் டீக்கடையிலிருந்து டீ வாங்கி வந்து தனியாக குடித்துக்கொண்டிருந்தான்.’ டே. என்னாடா இது பழக்கம். நான் போனமுறையே சொல்லிட்டுப் போனனில்ல.இப்படிச் செய்ய உனக்கு அசிங்கமாயில்ல. மறுபடியும் ஓட்டல்லதான் சாப்பிடுறயா?” என்றேன் கடுப்பான குரலில்.  ‘இதுல என்னா அசிங்கம் இருக்குது.எத்தனை ஆம்பிளைங்க காலையில டீக்கடையில போய் டீக்குடிக்கிறாங்க. டீக்கடையிலன்னா கம்மியாத்தான் இருக்கும்.சொம்பில வாங்கினு வந்தா  நெறைய இருக்கும்’
’நாம தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்குதுன்னு நினைக்கிறவனுக்குத்தான்டா எல்லாம் வெளங்கும். நமக்கு எல்லாமே தெரியும், நாம செய்றது எல்லாமே சரிதான்னு நினைச்சா அவ்வளவுதான்.முடிஞ்சது கதை. நீ அப்படித்தான்டா   நினைச்சுக்கிட்டிருக்கிற. ஒன்னு..  அவங்கள மாதிரி டீக்கடையிலயே போய் குடிச்சுட்டு வா. இல்லன்னா வீட்டுல போடற டீய குடி’
’வீட்டுலல்லாம் இப்ப டீ குடிக்கிறதுல்ல. ஓட்டல்லதான் சாப்பிடுறேன்.’ என்றபோது அவன் குரல் தணிந்திருந்தது, என்னைத் தொந்தரவு செய்தது.  ‘ஏன்? நீ ஒழுங்கா காசு குடுத்திருக்கமாட்டே. இதான் சாக்குன்னு உங்கம்மாவும் சாப்பாடு போடறத நிறுத்திருப்பாங்க’.
‘ டேய். நீ வரும்போதெல்லாம் உன் தம்பி, தங்கச்சிங்களையே தூக்கி வச்சுட்டு பேசிட்டுப் போயிடறே. அதுங்களுக்கு குளுர் உட்டுப்போகுது. நீ வந்தா அவங்களை மிரட்டுவன்னு பாத்தா, என்னைக் குத்தம் சொல்றதுக்குத்தான் அங்கேருந்து கிளம்பி  வர்றயா?. அவனையேக் கேளு.ஒரு நாளு காசு குடுக்கல.எங்கியோ பிரெண்டுகளோட சுத்திக்கினுருந்துட்டு வேலைக்கிப் போவல. அன்னிக்கும் சாப்பாடு போட்டேன். மறு நாளும் ஒடம்பு சரியில்லன்னு சாக்கு சொல்லிக்கினு படுத்துனுக்கிருந்தான். சரின்னு, அன்னைக்கும் சாப்பாடு போட்டேன். சாப்பாடு புடிக்கலன்னு தகராறு பண்ணான். அப்படின்னா ஓட்டல்லயே போய் சாப்பிட்டக்கப்பான்னு சொல்லிட்டேன். இங்க பார்றா. அவன் ஒழுங்கா வேலைக்கு போவவும் மாட்டான். எங்கிட்ட காசு குடுக்கவும் மாட்டான். அதனால அவனை வீட்டுல சாப்பிடற ஏற்பாடெல்லாம் நீ செஞ்சு வச்சுட்டு போவாத. ஆமா, சொல்லிட்டேன்’ என்றாள். ஆரம்பமாகிவிட்டது என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். வேண்டுமென்றே அவனை வெறுப்பேத்துகிற மாதிரி சமையல் செய்திருப்பாள். இதெல்லாம் அவளுடைய திட்டப்படி நடக்கிற நாடகம் என்பது தம்பிக்கே தெரிந்திருந்தாலும், அவனால் தவிர்க்கமுடியாமல் தானும் ஒரு கதாபாத்திரமாகி பங்கேற்றுவிடுவான். இப்படி வீட்டில் கொடுத்து சாப்பிடும் நிர்ப்பந்தம் இருந்தால்தான் அவன் அதற்காகவாவது வேலைக்குப் போவான். அவனே ஓட்டலில் சாப்பிடுவதாக இருந்தால் அவனுக்கு சாப்பாடுகூட முக்கியமில்லை. ஏதோ சாப்பிட்டுவிட்டு சோம்பேறியாய் ஊர் சுற்றுவான். வாலிபால் விளையாடுபவர்களை, கிழங்களோடு சேர்ந்து வேடிக்கைப் பார்ப்பான்.   ‘ஒழுங்கா வேலைக்கு போறதுக்கு முடியலன்னாலும், ஊர் சுத்தறதுல ஒன்னும் கொறைச்சல் இல்ல உனக்கு’.
அவன், ’ இல்ல. ரொம்ப நாளாச்சேன்னு, சும்மா பசங்களோட சாத்தனூர் டேமுக்குப் போயிட்டுவந்தேன்’ என்றான். ’ஆமா, சார்.ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க  இல்லீங்களா. அதனால கொஞ்சம் எண்டெர்டெயின்மெண்ட் வேணுந்தான் உங்களுக்கு. என்னவோ போங்க.  உங்களையெல்லாம் திருத்த முடியாது’
காஃபி போட்டு முடித்திருந்தாள். எனக்கு ஒரு டம்ளரில் வந்தது. ’ அவனுக்கும் கொஞ்சம் குடுங்க’
“ வேணாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே டீ குடிச்சேன்’ என்று எழுந்துபோய்விட்டான். தம்பிக்குக் கொடுக்காமல் குடிப்பதற்கு எனக்குத்தான் ஒருமாதிரியாக இருந்தது.எங்கள் அம்மாவுக்கு இது மிகவும் சாதாரணம்.என்னை விட்டுவிட்டு எவ்வளவு வருடங்கள், என் கண்ணெதிரிலேயே காஃபி, டீ குடித்திருக்கிறாள்.  நானோ, என் தம்பி, தங்கையோ எதாவது பிரச்னை என்றால் அதற்குத் தண்டனையாக அடி, திட்டு போக சோறுபோடாமல் பட்டினிபோட்டுவிட்டு, கண்ணெதிரிலேயே சாப்பிட்டிருக்கிறாள். எத்தனை வேளையானாலும் இரங்கிவந்து சாப்பிடவிடமாட்டாள். பிள்ளைகளை அடித்துவிட்டு கோபத்தில் சாப்பாடுபோடாமல் விட்டுவிட்டு, பிறகு கெஞ்சி கூத்தாடி பிள்ளைகளை சாப்பிடவைப்பதெல்லாம் எங்கள் வீட்டில்  நடக்காத கதை.கண்ணே, மணியேன்னு கொஞ்சறதெல்லாம் கனவுலக்கூட வந்தது கிடையாது. சொந்த வீட்டிலேயே எத்தனையோ முறை வைராக்கியத்தையும் தாண்டி பசியில் சோற்றைத் திருடிச் சாப்பிட்டிருக்கிறோம்.
 வாப்பா, போப்பான்னு கூட பேசமாட்டாள். குரலில் கனிவோ, அன்போ இருக்கவே இருக்காது. நன்றாக ஞாபகம் இருக்கிறது. வெளியில் சென்று வீடு திரும்பத்  தாமதமானால் சிவாஅம்மா மாதிரி தவிக்கமாட்டாள். தெருவுக்கும் வாசலுக்கும் அல்லாடிக்கொண்டு, வருவோர் போவோரிடமெல்லாம் விசாரித்துக்கொண்டிருக்கும் பேதை அல்ல. சின்ன வயதில் நடந்தது. எங்கள் வீட்டில் நிறைய பேர் தெருப்பொம்பளைங்க கூடி பேசிக்கிட்டிருந்தாங்க. சின்னப் பசங்க விளையாடறதும், ஓடிப்போய் அம்மா மடியில் படுத்துக்கிறதுமா இருந்தாங்க. எனக்கும் திடீரென்று ஆசை வந்து எங்கம்மா மடியில் போய் படுத்தேன். சுளீரென்று முதுகில் விழுந்தது. ’இது என்னா புதுப் பழக்கம்’ என்று திட்டினாள்.  
      குளித்துக்கொண்டிருக்கும்போது, தகரக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ‘ டேய். முதுகு தேச்சி விடட்டுமா?’ என்று வெளியிலிருந்து கேட்டது அம்மாவின் குரல்.’ ...’ என்று கெட்ட வார்த்தை மனசுக்குள் ஆத்திரமும், அருவருப்பும் ஓங்கரித்துக்கொண்டு  வாந்திபோல் வந்தது.  ‘ஒன்னும் வேணாம்’ என கடுகடுப்பாகச் சொன்னேன். ச்சீ. எப்படி இவளால் இந்தமாதிரில்லாம் சட்டென மாறிக்கொள்ள முடிகிறது. நினைவு தெரிந்த நாளிலிருந்து என் துணிகளை என்னையேதான் துவைத்துக்கொள்ளவைத்தாள். தம்பிக்கும் இதே நிலைதான். எத்தனை  குளிர்காலத்திலும் சுடுதண்ணி கிடைக்காது.எங்களை அனுப்பிவிட்டு இவள் மட்டும் போட்டுக் குளிப்பாள்.  நினைவு தெரிந்த வயதில்கூட ஒரு நாளும் அவள் என்னையோ, என் தம்பி தங்கச்சியையோ குளிப்பாட்டினதோ, முதுகுத் தேய்த்து விட்டதோ கிடையாது. இன்னிக்கு இப்படி கூசாமல் எப்படி கேட்கிறாள்!

    துவட்டிக்கொள்ள வைத்திருந்த துண்டு உப்புக்காகிதம்போல் காய்ந்து, கிழிந்து, சொரசொரவென்றிருந்தது.
‘ அந்தப் புதுத் துண்டு எங்க? பொட்டியில போட்டு பூட்டி வச்சிக்கினியா?’
’ ஏண்டா கத்துற. இதோ வர்றேன் இரு’ பொட்டியை சாவிபோட்டு திறந்து  எடுத்த பூத்துவாலை துண்டு ஓரிரண்டு சலவை கண்டிருக்கும்.
‘ நாளைக்கு வேணுமின்னு யோசிக்கிறதுல தப்பில்ல.ஆனா, அதுக்காக  இன்னிக்கு வயித்துல ஈரத்துணி போட்டுக்கினு பட்டினியா தூங்கக்கூடாது’ கத்தினேன். ‘ போனவாட்டி வந்தப்பவே சொன்னேன்ல. இந்தத் துண்டையே எடுத்து யூஸ் பண்ணுங்கன்னு. கம்பெனியிலதான் வருசா வருசம் குடுப்பாங்கன்னு சொன்னேன்ல’.

         தம்பி வேலைக்கு போய்விட்டிருந்தான்.காலையிலேயே எனக்குப் பிடிக்கும் என்பதற்காக தேங்காய் சோறு தயாராகிக் கொண்டிருந்தது. மதிய சாப்பாட்டுக்கான சாம்பார், ரசம், கூட்டு, பொறியல் எல்லாம் மும்முரமாக தயாராகிக்கொண்டு இருந்தது. சமையலில் உதவிக்கு தங்கை. இதையெல்லாம் பார்க்கும்போதே எரிச்சல்தான் வந்தது. ’ரெண்டு வருஷம் கவர்மெண்ட் ஐடிஐ படிக்கும்போது எத்தனை நாள் நான் எழுந்து சமைச்சு எடுத்திட்டுப் போயிருப்பேன். நீ அப்படியே பாறாங்கல்லு மாதிரி படுத்துக்கிட்டிருப்பியே. சோத்தை வடிச்சி,வெறும் புளிக்கரைசலை தாளிச்சு எடுத்துக்கிட்டு அதையே காலையில சாப்பிட்டுட்டு, மதியத்துக்கும் எடுத்துக்கிட்டு 8 கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சிருப்பேன். வெறும் சோறும் ,அதுக்கூட இல்லாமயும் எத்தன நாள் போயிருப்பேன்? வெளியூர்ல இருந்து பஸ் புடிச்சி, காலங்காத்தாலயே கிளம்பி வர்ற பசங்கள்லாம் விதவிதமா சாப்பாடு எடுத்துக்கினு வருவானுங்க. அவனுங்க சாப்பாட்டை நம்பியே எத்தனை நாள் போயிருக்கேன். அவனுங்க சாப்பாட்டைப் பாக்கும்போதெல்லாம் அவனுங்க அம்மாங்கள நினச்சா சந்தோசமாவும், ஏக்கமாவும் இருக்கும். இந்த மாதிரி ஒரு அம்மா நமக்கு ஏன் கிடைக்கலேன்னு இருக்கும். இன்னிக்கு மட்டும் இந்தப் பாசம் எங்கிருந்து வந்துடுச்சி உனக்கு.’ நான் கேட்கவில்லை. கேட்டால் இருக்கிற அமைப்பும் குலைந்துவிடும். என் தங்கச்சிக்கு ஒரு கல்யாணம், எனக்கு ஒரு கல்யாணம் ஆகிற வரையிலுமாவது பொறுத்துப்போய்த்தான் ஆகவேண்டும். ஏற்கனவே அப்பன் இல்லாத வீடுன்னு யோசிக்கிறாங்க. ’அப்பன் உயிரோடதான் இருக்கிறான். ஆனா, அந்தாளு அவரோட அம்மா வீட்டோட இருக்கிறான்னா என்ன அர்த்தம்? அந்தமாதிரி வீட்டுக்கெல்லாம் நம்ம பொண்ணைக் குடுக்கமுடியாது’ என்று நான் பெண் பார்த்திருந்த வீட்டில் சொல்லிவிட்டிருந்தனர். இவளிடம் சமாளிக்க முடியாமல் ஓடிப்போன கோழை, சோம்பேறி அவன் என்பதை எப்படி ஊருக்கெல்லாம் சொல்லிப் புரியவைக்கமுடியும். அவரவர் நினைத்துக்கொள்வதே அவர்களுக்கு.

      காலை உணவு சாப்பிட்டு முடித்து வெளியில் கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தபோது தங்கை பழைய சோறு தண்ணீர் விட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
’ அதான் வடிச்ச சோறு இருக்குதுல்ல. எதுக்கு பழைய சோத்தப் போட்ட?’
அம்மாவை பார்த்து கத்தினேன். ‘இல்லண்ணா. நாந்தான் கேட்டு சாப்பிடறேன்.’ என்றாள் தங்கை. எனக்குத் தெரியும். ஆனால், பேசி பயனில்லை. தினம் இந்தப் பெண் இதைத்தான் சாப்பிடுவாள். நானும் சாப்பிட்டவன்தானே. ’மீதி ஆகிற மாதிரி ஏன் வடிக்கிறீங்க.அளவா சமைச்சுட்டு, காலையில எழுந்து சமைச்சு சூடா சாப்பிடலாம் இல்ல?’ எத்தனையோ முறை கேட்டிருப்பேன். ஆனால் மாற்றமே வந்ததில்லை.
‘ உன் சட்டையிலருந்து காலையில பால் வாங்கிறதுக்கு காசு எடுத்தேண்டா.’
நான் தூங்கி எழுவதற்கு முன்பே சட்டைப்பை ஆராயப்பட்டுவிடும் என்பது நான் அறிந்ததே.
’டேய் எனக்குக் குடுக்கிற காச குடுத்துட்டுப் போடா. நீ நாளைக்கு ஊருக்கு போகும்போது, உன் பிரெண்டுகளுக்கெல்லாம் செலவு பண்ணது போக மீதிய குடுப்பே.’ இடக்காக, வெறுப்பேற்றும் தொனியில் ஒலித்தது அவள் குரல்.
‘நா ஒன்னும் அவனுங்களுக்கு அழிச்சிடல.அவனுங்கதான் எனக்கு செலவு பண்ணுறானுங்க’.
‘டேய். இன்னிக்கு பொண்ணு வூட்டுல வரச் சொல்லியிருக்கிறாங்கடா. எங்க போற நீ?. எங்க போனாலும்  சீக்கிரம் வந்துடு’. கேட்டும் கேட்காதவனைப்போல், அமைதியாக வாசற்படி இறங்கி போய்க்கொண்டேயிருந்தேன்.

மதிய சாப்பாடு சாம்பார்,ரசம், பொரியல், கூட்டு என்று இருந்ததைப் பார்த்தபோது ஏனோ வெறுப்பாகத்தானிருந்தது. ‘ டேய்.. இன்னிக்கு ரெண்டு வீட்டுல பொண்ணு பாக்க வர்றம்னு சொல்லி வச்சிருக்கேண்டா. மதியம் வரோம்னு சொல்லிடலாமா.’ 
‘ நான் எத்தனவாட்டி சொல்லிருக்கிறன். வயசுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்குது.அதுக்கு மொதல்ல முடிச்சுட்டு, அப்புறம் பாக்கலாம்னு.’தங்கை சற்று தொலைவில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். தம்பிக்கும் பிறகு பிறந்தவள்தான் தங்கை. கடைக்குட்டி. குட்டி என்றுதான்  கூப்பிடுவோம்.
‘அவளுக்கும் பாத்துக்கிட்டுத்தாண்டா இருக்கிறேன். மொதல்ல யாருக்கு முடியுதோ அவங்களுக்கு செஞ்சுடலாம். ரெண்டு பேர் வந்துட்டுக்கூட போயிட்டானுங்க. இவளுக்குப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாடா. டீ மாஸ்டர் வேலை செய்றவன் வேணாவாம்.’ என்றாள் குத்தலான தொனியில்.
’என்னது. டீ மாஸ்டரா! ஏன் ஒனக்கு வேற மாப்பிளயே கெடைக்கலயா? பன்னண்டாவது படிச்ச பொண்ணுக்கு டீ மாஸ்டர்தான் கிடைச்சானா?இன்னொருத்தன் என்ன பண்றானாம்? ‘
’சித்தாளு வேலைடா’
’இதோபாரு.டீ மாஸ்டரையோ, சித்தாளையோ நான் கொறை சொல்லல. ஆனா, அவ்வளோதானா நம்ம லெவலு. இன்னும் கொஞ்சம் நல்லா பார்க்க வேண்டியதுதான. வாத்தியார்.. இந்த மாதிரி’
‘அவனுங்கள்லாம் அதிகமா கேப்பானுங்கல்ல’
‘ஆமா.கேப்பானுங்கதான். நீ கேக்கல?. என்னவோ உன் புள்ளை இஞ்சினியர் வேலை செய்ற மாதிரி, 50 பவுனு, 60 பவுனுன்னு வீடு வீடா பெருமையடிச்சுக்கினு, பேரம் பேசிக்கிட்டு வர இல்ல.’

‘சரி.இன்னிக்கு வரன்னு சொல்லிட்டனே. அவங்களுக்கு என்னா பதில் சொல்றது?’
‘நாந்தான் சொல்லியிருகிறேனுல்ல. இப்படி நீயா யாருக்கும் வாக்குறுதி குடுக்காதன்னு. சொல்லிட்டேன் அது இதுன்னு.. ஒரே நாள்ல ரெண்டு வீட்டுல போய் பாக்கணும்கிற. ஏன் அப்படி? ஒன்னொன்னா பாக்கவேண்டியதுதானே. பொண்ணு பாக்க போறதுக்கு முன்னால போட்டோ வாங்கு. என் போட்டோவையும் அவங்களுக்குக் குடுன்னும் ஏற்கனவே சொல்லியிருக்கன். போய் பார்த்துட்டு பொண்ணு புடிக்கலன்னா, புடிக்கிலன்னு சொல்றது நல்லாவாயிருக்குது.அந்தப் பாவம் வேற சேரணுமா’

‘யாரும் போட்டோல்லாம் குடுக்கமாட்டேங்கறாங்கடா. வந்து வீட்டுலயே நேரிலயே பாருங்கன்னு சொல்றாங்கடா.புடிக்கலன்னா புடிக்கலன்னு சொல்றதுக்கு என்னா இருக்குது?’ பெண்ணுக்கு எதிரி பெண்தான் என்று சொல்கிறார்களே, அது சரிதான்.

             பெண் பார்க்கக் கிளம்பும்போது வாசலில் உட்கார்ந்திருந்த தங்கையை கடந்து செல்வது ரணமாக இருந்தது. டெய்லர் குட்டி அண்ணன் கடையில் உட்கார்ந்துகொண்டிருந்தோம். குட்டி அண்ணன்தான் பெண் வீட்டில் போய் தகவல் சொல்லிவிட்டு, என்னையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு போனார். மாடியில் வீடு. கீழே முழுக்க நிறைய கடைகள்.வாடகைக்கு விட்டுவிட்டு மேலே குடியிருந்தார்கள். ’எனக்கு இந்தக் குடும்பத்தை தெரியும். எங்களுடைய இன்னொரு வீடு இருக்கும் தெருதான் இது. சின்ன வயசுல இந்த ஏரியாவுல இருக்கும்போது  பார்த்திருக்கிறேன். அந்தப் பெண்ணைக்கூட சின்ன வயசுல பார்த்திருக்கேன். அழகாயிருக்கும். ஆனா, கண்டிப்பாக ஒத்தே வராது. செல்வாக்கான குடும்பம். பொண்ணோட அப்பா புல்லட் வச்சிருப்பாரு. நல்ல வேலையில இருக்கிறவரு. சத்யராஜ் மாதிரியே இருப்பாரு. உயரம், நிறம் , மிடுக்கு எல்லாம். பெரிய குடும்பம். எல்லாரும் நல்லா வசதியானவங்க. அவரோட சின்னத் தம்பி காலேஜ்ல படிக்கும்போதே எலக்‌ஷன்ல ஜெயிச்சி, சேர்மனாகி, ஊரே அமர்க்களப்படுற அளவுக்கு ஊர்வலம்  நடத்துனத சின்னப்ப  நான் வேடிக்கை மட்டும் தான் பாக்கமுடிஞ்சது.இன்னொரு தம்பி கட்டப்பஞ்சாயத்துல ஊர்ல பெரிய ஆளு. நகராட்சியில வைஸ் சேர்மனா இருந்தவரு. கட்சியில ஊர்லயே பெரிய ஆளு.
ஏந்தான் இவ இப்படியெல்லாம் பேராசைப்பட்டு, இப்படி அசிங்கப்பட வைக்கிறாளோ’. கூச்சமாக பின் தொடர்ந்தேன். சொல்லிட்டேன் என்கிறாள். ஆனால்,பிறகுதான் தெரிந்தது. உண்மையில் இவள் வலிய போய் பேசியிருக்கிறாள். அதுவும் குட்டி அண்ணன் மூலம் இப்போதுதானாம். எனக்குத் தெரியாதவாறு என்னை வைத்துக்கொண்டே நடந்த  நாடகம் இதெல்லாம். பெண்ணை ஏதோ சம்பிரதாயத்துக்கு கேஷுவல் உடையிலேயே வரவைத்திருந்தார்கள். ரொம்ப சின்னப்பெண்.அம்மா மேல் ஆத்திரமாக இருந்தது.
’ கீழே அவ்ளோ கடைங்க இருக்குதே.இதோ இந்தப் படிக்கட்டு தாண்டி யாரும் மேல வரமாட்டாங்கக்கா. இப்போதான் நீங்கதான் வந்துருக்கிறீங்க. பொண்ணு ரொம்ப சின்னப்பொண்ணு.படிக்கிறா.இப்ப கல்யாணம் பண்ற ஐடியால்லாம் இல்லக்கா’
செருப்பால் அடிபட்டதுபோல் இருந்தது எனக்கு.

     போதாக்குறைக்கு இன்னொரு வீடு. இப்போது பார்த்த தெருவிற்கு அடுத்த தெருவிலேயே. ஒருவர் வீட்டிற்கு வந்துபோனது, இன்னொருவர் வீட்டிற்கு தெரியும்போது, அவர்களே கூடத்தான் என்ன நினைப்பார்கள்? ’லீவுல ஊருக்கு வரும்போதுதானே பாக்க முடியும்.இதுல என்ன தப்பு’ என்றாள் என்னைப் பெற்றவள்..

இந்தப் பெண்ணையும் நான் சின்ன வயதிலேயே பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட என் வயதேயிருக்கும். சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை. இப்படிச் சொல்லவைத்து விட்டாளே என்று அம்மா மேல் எனக்கு எரிச்சல் வந்தது. அந்தப் பெண் ரொம்ப ஆர்வமாய் பேசியதுவேறு தர்மசங்கடமாய் இருந்தது. அந்தப்பெண்ணின் வீட்டாரிடம் ஏதாவது கேட்டால்கூட இந்தப் பெண்ணே எளிதாக்குவதுபோல் வலியவந்து பதில் சொல்லிக்கொண்டிருந்தது.

           வீட்டிற்கு திரும்பியதும் கத்த ஆரம்பித்தேன் ‘இதோ பாரு. இதுமாதிரி இனிமேல் செஞ்சேன்னா நான் சும்மா இருக்கமாட்டேன். அசிங்கப்பட வைக்கிறதே உனக்கு வேலையாப்போச்சி. நீ மட்டும் ஏன் இப்புடி இருக்கிற?’.’
இதுதான் பெரிய கேள்வி. ‘நீ மட்டும் ஏன் இப்புடி இருக்கிற?’

        ’இதோ பாருடா. உன் தங்கச்சிக் கிட்ட என்னைப்பத்தி ஏத்திவிட்டுட்டு போயிடற. அவ என்னை மதிக்கிறதேயில்ல. எப்பவும் பக்கத்து வீட்டுல புதுசா கல்யாணமாயி வந்துருக்குற சுந்தரி பொண்ணு வீட்டுலயே உட்காந்திருக்கா. வீட்டுல ஒரு வேலை செய்றதில்ல..சொல்லி வச்சுட்டுப்போ’

‘ இல்லண்ணா. நாந்தான் வேலையெல்லாம் செய்வேன். அம்மாதான் எதாவது குறை சொல்லிக்கினே, திட்டிக்கினே இருக்கும். அடிச்சாக்கூட வாங்கிக்கலாண்ணா.அசிங்கம் அசிங்கமா, கெட்டக் கெட்ட வார்த்தையில திட்டிக்கிட்டேயிருப்பாங்கண்ணா.அதனாலதான்னா நான் சுந்தரி வீட்டுக்குப்போய் உட்கார்ந்திட்டிருப்பேன். இதோ இன்னிக்கி நீ வந்திருக்கங்கிறதால காலையிலருந்து அதுவே வேலை செஞ்சு ட்ராமா பண்ணுது.  நான் போய் பாத்திரம் துலக்கினேன்.வேணுமின்னே  கொறை கண்டுபிடிச்சு திட்டி, என்னை வேலை எதுவும் செய்யவேணான்னு சொல்லிட்டாங்க. ரெண்டு வாரத்துக்கு முன்னால இப்படித்தான், அசிங்கம் அசிங்கமா திட்டிக்கினு இருந்தாங்க. அடிச்சாங்க.தண்ட சோறு, தண்ட சோறுன்னு திட்டறதத்தான் என்னால தாங்கிக்கவே முடியல. எனக்கு என்ன வேலைன்னா தெரியும்? நான் எங்க போய் சம்பாதிச்சிட்டு வந்து குடுக்கறது. அப்படியும்  பக்கத்துத் தெருவுல இருக்கிற எலிமெண்டரி ஸ்கூலுக்கு கொஞ்ச நாள் வேலைக்குப் போய்க்கிட்டுத்தான் இருந்தேன். லீவுல போன டீச்சர், வேலைக்கு வந்ததுமே நிறுத்திட்டாங்க.
வீட்டுக்குள்ள நுழையவே முடியல. சாப்டவும் வுடல. நான் எங்கே போறதுன்னே தெரியாம, நம்ம பழைய வீட்டுல குடித்தனம் இருக்காங்களே பானு அக்கா. அவங்க வீட்டுல போய் ரெண்டு நாள் இருந்தேன்.’  நான் தனியாக இருக்கும்போது என்னிடம் வந்து சொன்னாள், தங்கை.
அவ்வளவு தூரம் போகிவிட்டதா விசயம்!
‘உங்கம்மாவப்பத்தி எனக்கும் தெரியும். ஆனா வேற வழியில்ல. அவங்க சீண்டுனாக்கூட கொஞ்சம் பொறுத்துப்போ.ஏன்னா கஷ்டப்படப்போறது நீதான். அவங்க இல்ல.’

தெரியும். நானும் இதையெல்லாம் கடந்து வந்தவன்தான். வீட்டிற்குள் நுழையவே முடியாது. ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஊரைவிட்டே ஓடியவன்தானே நான். திட்டிக்கொண்டேயிருப்பாள். அடிப்பாள்.எத்தனையோ இரவுகள்கூட வீட்டிற்கு வராமல் நண்பர்களின் வீட்டில், பெயிண்டர் கடையில், ஏன் கோயில்களில்கூட சில நாட்கள் படுத்துத் தூங்கியிருக்கிறேன். ஒருமுறை மணலில் படுத்து ஊதுகாமாலை வந்துவிட்டது.அவள் திட்டுவதைவிட இதுவொன்றும் தொந்தரவில்லை. நானாவது பரவாயில்லை.வயசுக்கு வந்த பெண் எங்கே போவாள்? எப்படியிருப்பாள்? இவர்களுக்கு செய்துவைக்கும் சமரசம் சில நாட்களுக்குக் கூட தாங்காது. அம்மாதான் ஆரம்பித்து வைப்பாள். பேசாமல் நம்மோடு மெட்ராசுக்குக் கூட்டிப்போயிடலாமா. இல்லை அது சரியாக வராது. அவளுக்கு கல்யாணம் செய்யும் வரை மாப்பிள்ளை வீட்டார் வந்துபோகவெல்லாம் இங்கிருப்பதுதான் சரி.அதுவுமில்லாமல்,  நான் வேலைக்குப்போய்விடும் சமயங்களில் வேறு யார் துணையுமில்லாமல் ரூமில் தனியாக எப்படி இருப்பது. என்னாலும் சுதந்திரமாக இருக்கமுடியாது. ச்சே. புத்தி ஏன் இப்படியெல்லாம் போகிறது. தங்கையின் பிரச்னையைவிடவா என் ஜாலி?

ஊருக்குப் புறப்படும்போது பணத்தைக் கொடுத்தேன்.ட்ரெயினிங் பீரியட் என்பதால் பெரிய அளவில் எல்லாம் சம்பளம் கிடையாது. ஆனால் என்னளவில் கணிசமான பணம். இதற்காகத்தானே எல்லாம்  என்று வெறுப்போடு மனதில் சொல்லிக்கொண்டேன். இன்னும் வேண்டும் என்றாள், வழக்கம்போல. நானும் வழக்கம்போல எதுவுமே பேசாமல் பையை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். போய்வருகிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் பழக்கமேயில்லை.
பஸ் பிடிக்க மீண்டும் சர்ச் வாசலிலேயே சைக்கிளில் கூட்டிவந்து விட்டுவிட்டுப்போனான் சரவணன்.    ‘தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும்  நிலை நிற்காது’ என்கிற வேதாகம வசனமும் ‘ மரமானது அதின் கனியினால் அறியப்படும்’ என்கிற வசனமும் சர்ச் காம்பவுண்டு சுவரில் படித்துக்கொண்டு பேருந்துக்காக காத்து நின்றுகொண்டிருந்தேன்.

(என்னை ஈன்ற சிறந்த தீயாளுக்கு)