Thursday, January 21, 2010

சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்-மு.ஹரிகிருஷ்ணன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்

image

மு.ஹரிகிருஷ்ணன்

மொழிவழி பிரிந்து கிடக்கின்றன மாநிலங்கள்.தமிழகத்திலேயே பலவிதத் தமிழ் நிலவுகிறது. வட்டாரம் சார்ந்த வழக்குப்பேச்சும், ,சொல்லாடல்களுமாக வேறுபாடு கண்டுள்ளது.இலக்கியத்திலும், திரைப்படங்கள் போன்ற ஊடகங்களின் வழியாகவும் சில வட்டார வழக்குகள், அவ்வட்டாரத்தைச் சார்ந்த கலைஞர்களின் மூலம் எல்லாருக்கும் ஓரளவாவது தெரிந்திருக்கிறது. ஆனால், சில வட்டாரங்களைச் சார்ந்த வழக்குமொழியும், மக்களும் ஓரளவுக்குகூட அறியப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்.


சேலம், மேட்டூர் போன்ற வட்டாரத்திலுள்ள அசலான கிராம மக்களின் அசலான வட்டார வழக்குமொழியில் எழுதிவருபவர் மு. ஹரிகிருஷ்ணன்.மேட்டூர் அருகேயுள்ள ஏர்வாடி என்கிற கிராமத்தைச் சார்ந்தவர்.அடிப்படை தொழிற்கல்வியை(ஐடிஐ) பயின்று, தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிபவர்.


முப்பது வருடங்களுக்குமுன் நகரத்திற்குக் குடிபெயர்ந்துவிட்ட மனிதருக்கே, இன்றைய கிராம வாழ்க்கை பற்றியும்,இன்னல்கள், மாற்றங்கள் குறித்துத் தெரியவில்லை. நகரங்களிலேயே பிறந்து வளர்ந்த மனிதர்களுக்கு, கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கைமுறையை, அவர்களுக்குள் நிலவும் சாதிப்பாகுபாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் செய்திகளின் வழி மேலோட்டமாகவே உணரத்தகுந்தது.ஆனால், அங்கு நிலவும் பிரச்னைகளின் தீவிரத்தை உணரும் வகையில், சம்பவங்களாக, கதாபாத்திரங்களாக அறிய நேர்கிறபோது , நம்மால் ஆழமாக உணரமுடியும். அதை இவரின் கதைகளில் காணமுடியும்.


ஆழமில்லாத வாசிப்பனுபவத்தோடு இவரின் கதைகளை அணுகும்போது, நகைச்சுவைக்காகவும், பாலியல் கிளுகிளுப்புக்காகவுமே எழுதப்பட்டவைகளோ என்று தோன்றும்.எழுத்தில் காணப்படும் கெட்டவார்த்தைகளும், வெளிப்படைத்தன்மையும் அதிர்ச்சியளிக்கக்கூடும்.வட்டார வழக்கு மொழி பரிச்சயமில்லாதவர்களுக்கு , வாசிப்பில் அயர்ச்சி ஏற்படக்கூடும். ஆனால், தொடர்ந்து ஓரிரண்டு கதைகளைப் படித்துவிடும்போது மொழி பிடிபட்டுவிடும்.இவரின் கதைகளைப் படிக்கும்போது, தரையிலிருந்து பொங்கிவரும் நீரூற்றுப்போல நகைச்சுவை பீறிட்டுவரும்.ஆனால், சில கணங்களுக்குப்பிறகு பெருகும் நீரில் ஊற்று அடங்கிமறைந்து, தண்ணீர் பரவி நிற்பதைப்போல துயரமும், குற்றவுணர்வும் பரவி நிற்கும்.
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைமுறைகள், துயர்கள், ஆதிக்கசாதியினரிடம் பெறும் உழைப்புச் சுரண்டல்கள்,எதேச்சாதிகார ஒடுக்குமுறைகள், அதைக் கட்டுடைக்கும் முன்னேற்றத்தருணங்கள் என அனைத்தும் பதிவாகியிருக்கிறது இவரின் கதைகளில்.திருநங்கைகளைப் பற்றிய கதைகளில் இவர்களின் வாழ்க்கைத் துயரங்கள் , தகவல்களுடன் பதிவுசெய்திருக்கிறார்.இவரின் கதை மாந்தர்களில் கூத்துக்கலையும், கூத்துக்கலைஞர்களும் பரவலாக இடம்பெறுகின்றனர்.தொன்மக்கதைகளும், புராணங்களும் இன்றும் கிராமங்களில் வாய்வழிக்கதைகளாகவும், கூத்துக்கலை போன்ற நமது மரபுக்கலைகளின் வழியாகவும் நிலைப்பெற்றிருக்கிறது.சிதையாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது. தன்னுடைய சிறுகதைத்தொகுப்பான மயில்ராவணன் என்கிற தொகுப்பை , கூத்துக்கலைஞர்களுக்கே அர்ப்பணம் செய்துள்ள ஹரிகிருஷ்ணன், நடைமுறை வாழ்விலும் கூத்துக்கலைஞர்கள் முன்னேற்றத்திற்காகவும்,அங்கீகாரத்திற்காகவும் மிகவும் சிரத்தையுடன் தொண்டாற்றி,.உரிமைக்குரல் எழுப்புகிறார்.தொண்டு அமைப்பை நிறுவி, அதன்மூலம் விருதுகளும், பரிசுகளும் அளித்து ஊக்குவித்து வருகிறார்.
முதிர்ந்த அனுபவம் கொண்ட ஒரு கிராமத்துக்கிழவி கதை சொல்வதுபோல, இவர்கதைகளில் கதைசொல்லியின் சொல்முறையும், அனுபவ ஆழமும் இருக்கிறது.வா.மு.கோமுவை ஆசிரியராககொண்ட இறக்கை இதழின் இணையாசிரியராக இருந்த ஹரிகிருஷ்ணன் இப்போது மணல்வீடு எனும் இருமாத இதழை சிறப்பாக நடத்திவருகிறார்.


2007ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசை, இவரின் மயில்ராவணன் தொகுப்புக்கு, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கலை இலக்கியப் பெருமன்றமும் வழங்கியுள்ளது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார்.


இவரின் வலைப்பூ மணல்வீடு


மணல் வீடு இரு மாத இதழ்
ஆசிரியர் : மு. ஹரிகிருஷ்ணன்
தொடர்பு மற்றும் வெளியீட்டு முகவரி ( படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி )
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டுர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
அலைபேசி - 98946 05371
மின்னஞ்சல் - manalveedu@gmail.com
manalveeduhari@gmail.com
ஆண்டு சந்தா ரூ. 100
ஐந்தாண்டு சந்தா ரூ. 500
சந்தாவை மணியார்டராக அனுப்பலாம்
அல்லது ஐசிஐசிஐ வங்கியில் பின்வரும் கணக்கு எண்ணில் செலுத்தலாம்.
A/c.No. 611901517766
V.Shanmugapriyan,
ICICI bank, salem shevapet branch

தடாகத்தில் ஹரிகிருஷ்ணன் அவர்களின் சிறுகதைகள் :
பாதரவு - மு. ஹரிகிருஷ்ணன்
குண்டாம்புலக்காயனின் இங்கிலீஷ் பைட் - மு.ஹரிகிருஷ்ணன்

நன்றி - தடாகம்

6 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

படித்துக் கொண்டிருக்கிறேன்.

நந்தாகுமாரன் said...

இவர் தான் மு.ஹரிகிருஷ்ணனா (ஒளிப்படம்) - இவரோடு தொலைபேசியில் தான் உரையாடியிருக்கிறேன் ... பகிர்வுக்கு நன்றி முத்து ... இவருடைய மயில்ராவணன் தொகுப்பு கிடைத்தால் படிக்க வேண்டும் ... out of print என்று சொன்னார் ...

மண்குதிரை said...

நந்தா,

மணல்வீடு ப்ளாக்கில் கதைகள் வாசிக்கக்கிடைக்கின்றன.

இந்த முகவரியிலும் ஒரு கதை பதிவிட்டிருக்கிறேன்.

http://mankuthiray.blogspot.com/2009/09/blog-post_16.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு மிகவும் நன்றி.

நந்தாகுமாரன் said...

மண்குதிரை,

அது எனக்கும் தெரியும். அந்த குறிப்பிட்ட புத்தகத் தொகுதியை வாங்கி படிக்கலாம் என்று ஒரு ஆசை. :)

நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

குண்டாம்புலக்காயனின் இங்கிலீஷ் பைட் - மு.ஹரிகிருஷ்ணன் //

தடாகத்தில் படிச்சுட்டு ரொம்ப நேரம் சிரிப்பை அடக்க முடியலை. சில இடங்கள் இரண்டு முறை படிக்கிறா மாதிரி இருந்தாலும், வித்தியாசமான வாசிப்பனுபவமா இருந்தது.

பகிர்வுக்கு நன்றி