Thursday, July 30, 2009

நினைவில் காடுள்ள மிருகம்

நினைவில் காடுள்ள மிருகம்

மலையாளம்  சச்சிதானந்தன்

தமிழில் நிர்மால்யா
 
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
அவள் தோளில்
சதுப்பு நிலங்களின் குளிர்
அவள் முடிக்கற்றைகளில்
வனப்பூக்களின் கடும்நெடி
அவள் விழிமணியில்
பாறைகளில் தெறித்துவிழும்
காட்டுச் சூரியன்
அவள் வாயில் காட்டாறுகள்
சந்திக்கின்றன.
அவள் நாவில் காட்டுத்தேன்
ஊறுகிறது
அவள் செவிகளில்
இடிமேகங்கள் முழங்குகின்றன
அவள் ரத்தத்தில்
காட்டுயானைகள் பிளிறுகின்றன
அவள் இதயத்தில்
காட்டு நிலவுகள் பூக்கின்றன
அவளது சிந்தனைகள்
காட்டுப் பாதைகளினூடே
பாய்ந்து செல்கின்றன
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
என் நினைவில் காடுகளுண்டு

நன்றி- எழுத்தாளர் பாவண்ணன்

Monday, July 6, 2009

பழஞ்சோறு-அமல நாயகம்-சிறுகதைகள்

கண்மணி குணசேகரன், வா.மு.கோமு,மு.ஹரிகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகளின் வரிசையில் சொல்லத்தக்க, வரத்தக்க படைப்பாளியாக அமல நாயகம் என்கின்றவரை நான் பார்க்கிறேன்.ஆனாலும், இவர்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று அமல நாயகத்திடம் இல்லாதிருக்கிறது.பயிற்சி மற்றும் உழைப்பில் இதை அவர் பெற்றுவிடுவது சாத்தியம்.

அமல நாயகம் அவர்களை நீங்கள் யாரும் அறிந்திருந்தால், அது ஆச்சரியமானதுதான்.ஏனெனில், இவர் இதழ்களுக்கு படைப்புகளை எழுதி அனுப்பாமால், நேரடியாக தொகுப்பு கொண்டுவந்திருக்கிறார்.ஏற்கனவே கவிதைத் தொகுப்புகள் சில கொண்டுவந்திருக்கிறார். தங்கர்பச்சானின் செம்புலம் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருந்த “முந்திரித் தோப்பு” என்கிற கவிதைத் தொகுப்பைப் படித்தது நினைவிலிருக்கிறது. எப்போதாவது சற்று மிதமான வணிக இதழ்களில் இவரின் கவிதைகளை மட்டும் பார்த்திருக்க முடியும்.இவர் சிறுகதைகள் எதுவும் இதழ்களில் பார்த்திருப்பது கடினம்தான். அதனாலேயே இவர் பலருக்கும் தெரியாதவராக இருக்கிறார்.கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆசிரியப்பணியில் இருந்து வசித்துக்கொண்டிருப்பது கடலூர்.கண்மணி குணசேகரன் போன்ற செம்புல படைப்பாளி.

25 சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எந்தக் கதையுமே சோடை போனதில்லை என்பது என் கருத்து.5 கதைகள் மிக முக்கியமானது என்பதுவும்.காட்சியமைப்புகளை கலாபூர்வமாக விவரிப்பது, உணர்வு ஏற்படும் வகையில் எழுதுவது, தேவையற்ற பத்திகளை நீக்கவேண்டிய அவசியம் ஆகியவை இவரிடம் ஏற்படவேண்டிய முன்னேற்றங்கள்.தன் சொந்தக்கதைகளாக சிலதோடு நின்றுவிடாமல், ஊர் மக்களின் கதைகள் நிறையவும் எழுதியுள்ளார்.சிறுபிராயத்தில் நடந்ததைக்கூட துல்லியமாக நினைவுகூர்ந்து எழுதும் ஆற்றல் காணக்கிடைக்கிறது. நடு நாடு எனப்படும் செம்புல வட்டார கிராம வழக்குப் பேச்சில் உரை நடை அமைந்துள்ளது என்றாலும் எவ் வட்டாரத்தினருக்கும் இது பெருமளவில் சிரமம் ஏற்படுத்தாது.

மாரத்தான்,சில்லரை தேடி,வேலி, புருஷன் பொண்டாட்டி போன்ற கதைகளை படித்தபோது தாளமுடியாமல் சிரித்தது நினைவுக்கு வருகிறது.ஆனாலும் , வலியான வாழ்க்கையை கொண்ட வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை நினைத்து கடைசியில் வருத்தமே மிகும்.

சிங்க பொம்ம,காளையரு தாத்தா,மஞ்சப்பை,பலி ஆடுகள் போன்ற கதைகள் குறிப்பிடத்தகுந்த முக்கியமான கதைகள்.வெள்ளந்தியான கிராமத்து மக்களை விசயம் அறிந்தவர்கள் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்,அதைக்கூட அறிந்துகொள்ள முடியாமல், தன்னுடைய வாழ்க்கையை அவர்கள் வீணடித்துக்கொள்கிறார்கள், நிர்ப்பந்தமாகிவிடுகிறது போன்ற விசயங்களை முன்வைக்கும் கதைகள் .

இக் கதைகளைப் படித்துமுடித்திருந்த நாளிலேயே எழுதியிருந்தால ஓரளவாவது இவற்றின் தரத்திற்கு நெருக்கமாக நான் எழுதியிருக்கக்கூடும். ஆனால், படித்து சில வாரங்களாகிவிட்ட நிலையிலும், மனம் வேறு சூழல்களுக்கு சென்றுவிட்டு திரும்பிய காரணத்தாலும் ஆசிரியரின் உரையிலிருந்தே சில வரிகளை முன் வைப்பது பொருத்தமாய் இருக்கும்.

”என் கிராமத்து மனிதர்கள் எளிமையானவர்கள்.இனிமையானவர்கள்.உண்மையானவர்கள்.உணர்ச்சியானவர்கள்.எதை நம்பினார்களோ அதையே வாழ்பவர்கள், அதையே சொல்பவர்கள். அவர்களிடம் பொய் முகங்கள் இல்லை. இந்தப் பழஞ்சோறு எம் மக்களைப் பற்றிய மறு பதிவு.உயர்வையும், தாழ்வையும், வெற்றியையும், தோல்வியையும், முற்போக்கையும், பிற்போக்கையும் விவரிக்கும் வரலாற்று ஆவணம்.கருவிகளை நம்புகிற அளவுக்கு நாம் உறவுகளை நம்புவதில்லை,உறவு என்பது வெறும் சமன்பாடல்ல,கூட்டிக் கழித்துக் கொள்வதற்கு. உறவுகளை அறிந்து கொள்வதும் புரிந்துகொள்வதும் நம் சமூக மதிப்பீடுகளை உயர்த்தும். புதிய பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும்...

நம் மதிப்பீடுகளையும் பண்பாடையும், கலாச்சாரத்தையும் குற்றமான ஒன்றாக நாம் நினைக்கிறவர்களாய் இருந்தால், நாளை நம்முடையது என்று சொல்லிக்கொள்ள நம்மிடம் எதுவுமே இருக்காது...”

வம்சி புக்ஸ் நிறுவனத்தாரின் துணை நிறுவனத்தின் மூலம் நல்ல வடிவமைப்புடன் அச்சாகி வந்திருக்கிறது.

நூல் விபரம்
பழஞ்சோறு-சிறுகதைகள்
ஆசிரியர்-அமல நாயகம்(99527 45500)
முதற்பதிப்பு டிசம்பர் 2008
பக்கங்கள் 180
விலை ரூ.90.00

வெளியீடு
அமரபாரதி
பதிப்பாளர்&விற்பனையாளார்
84,மத்தலாங்குளத்தெரு,
திருவண்ணாமலை.
9443222997