Wednesday, June 17, 2009

பொம்மைக்காரி-சிறுகதை-பாவண்ணன்

இம்மாத (ஜூன்'09) உயிர் எழுத்து இதழில் வெளியாகியுள்ள பொம்மைக்காரி என்கிற சிறுகதையை பாவண்ணன் அவர்கள் எழுதியுள்ளார்.அண்மையில் நான் படித்த சிறுகதையில் மிகவும் பிடித்த கதையிது என்பது என் கருத்து.யதார்த்தவாதமான, இயல்பான இக்கதையைப் படித்துவிட்டீர்களா? படிக்காதவர்களை படிக்கத்தூண்டுவதும், படித்தவர்கள் விரும்பினால் தங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளவுமே இப் பதிவு.

Saturday, June 13, 2009

ஸ்ரீ நாராயணகுரு

இந்தியா, ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் சமய நெறியிலும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. மக்களைப் பிரித்தாளும் கொள்கையில் வல்லவர்கள் ஆங்கிலேயர்கள்.இந்தியாவில் இருந்த சாதி வேறுபாடுகளைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர்.சாதிகளின் ஏற்றத் தாழ்வுகள் மதங்களிலும் ஊடுருவியது.பல்வேறு காரணங்களால் விசுவரூபமெடுத்த சாதிப் போராட்டங்களிலிருந்து மக்களைக் காத்த மகான்களின் வரிசையில் முதன்மையானவர்,கேரளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நாராயணகுரு.சமய, சமுதாய உரிமைகளுக்காக அயராது அமைதி வழியில் உழைத்த நாராயணகுரு19 ஆம் நூற்றாண்டில் தோன்றி 20 ஆம் நூற்றாண்டில் மகா சமாதியடைந்த மகான்.எளிய குடும்பத்தில் பிறந்து, மாடு மேய்த்து , விவசாயம் செய்து, ஆசிரியராகப் பணியாற்றி,ஆயுர்வேதம் கற்று மருத்துவத்தொண்டாற்றி, தன் முயற்சியால் உயர்ந்து ஞான குருவானவர்.



ஓணம் திருவிழாவின் 3 ஆம் நாளான சதய நட்சத்திரத்திம் கூடிய நன்னாளில், 1854 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் நாள் அதாவது,கொல்லம் 1030 ஆம் ஆண்டு சிம்ம(ஆவணி) மாதம் 13 ஆம் நாள் நாராயணகுரு திரு அவதாரம் செய்தார். நாராயணகுருவின் தந்தை மாடன் ஆசானும் சிறந்த கல்வியாளர்.மலையாளம், தமிழ், சமஸ்கிருதம், சோதிடம்,ஆயுர்வேதம் என்று மாடன் ஆசான் பல துறைகளில் திறமைபெற்றவர்.குட்டியம்மை-மாடன் ஆசான் தம்பதியர் நான்கு குழந்தைகள் பெற்றனர். அவர்களில் மூவர் பெண்கள். ஒருவர் ஒப்பற்ற குரு நாதர் நாராயணகுரு.திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்பழந்தி என்கிற கிராமத்தில் வயல்வார வீட்டில் பிறந்தார். பிறந்தபோது குழந்தை நாராயணகுரு அழவேயில்லையாம்.

அக்கால கேரளத்தில் தீண்டாமை உச்சத்தில் இருந்தது.கீழ்ச்சாதியினர் உயர்சாதியினரிடம் 32 அடி தொலைவில் இருந்தே பேசவேண்டும் என்ற கொடிய வழக்கம் அங்கு நடைமுறையில் இருந்தது.நாராயணகுருவின் பெற்றோர் இது குறித்து அவரிடம் கூறி எச்சரிக்கை செய்திருந்தனர். நாணு இளமையிலேயே தீண்டாமைக் கொள்கையை வெறுத்தார்.நாராயணகுரு ஈழவர் சாதியில் பிறந்தவர் என்று அறிய முடிகிறது. இது அங்கே பிற்படுத்தப்பட்ட சாதி என்பதாகவே கணிக்க முடிகிறது. ஈழவரினும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட சாதியினர் ஒருவர் வீட்டில் உள் நுழைந்து வந்த சிறுவன் நாராயணகுருவை பற்றி அவர் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியானம் ,யோகம், பிரணாயாமம்,மருத்துவம்,என கற்றுத் தேர்ந்த நாராயணகுரு தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மும் மொழிகளிலும் புலமை பெற்றவராவார்.தமது 24 ஆவது வயதில் மும்மொழிகளிலும் கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றுள்ளார்.தமிழில் தொல்காப்பியம், திருக்குறள், தேவாரம் ,திருவாசகம் ஆகியவற்றைக் கற்று அறிந்திருந்தார்.நாராயணகுருவின் இளமைப்பருவத்தில் உறவுப் பெண்ணொருத்தியை மணமுடிக்க அவரின் பெற்றோர் நினைத்தபோது மறுத்துவிட்டார்.அய்யாவுசாமி என்ற தமிழர், திருவனந்தபுரத்தில் அரசுப் பணியில் இருந்தவர்.அய்யாவுசாமி ஆன்மீக அறிவும் முற்போக்குச் சிந்தனைகளும் உடையவாராகத் திகழ்ந்தார்.யோகக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்.நாராயணகுருவுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.மேலும் பல உபதேசங்களையும் கற்றுத் தந்தார்.அய்யாவுசாமியின் உபதேசத்தை நாராயணகுரு தமது வாழ்நாள் முழுதும் பின்பற்றி நடந்தார்.

நாராயணகுரு1888 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் அருவிப்புரத்தில் சமத்துவத் திருக்கோயிலை நிறுவினார்.”இங்கே அமைந்திருக்கும் கோயில் ஒரு முன் மாதிரியாக விளங்கவேண்டும், மனிதர்கள் யாவரும் உடன்பிறந்தவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். சாதி பற்றிய தவறான கருத்துகள் அழிக்கப்படவேண்டும். இக் கருத்துக்களை விளக்குவதற்காகத்தான் இந்த் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார் நாராயணகுரு.'ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்” என்பதே நாராயணகுருவின் முக்கிய உபதேசம்.

நாராயணகுரு சாதி, மத வேறுபாடுகளைக் களைய ஆல்வாய் அத்வைத ஆசிரமத்தில் சர்வ மத மாநாட்டை நடத்தினார். ஆசியாவில் நடத்தப்பட்ட முதல் சர்வ சமய மாநாடு இதுவேயாகும்.உயர்கல்வி, சமஸ்கிருத அறிவு, தூய்மை, பண்பு, ஒற்றுமை ஆகிய ஐந்தின் மூலமே முன்னேறி, சமுதாயத்தில் முதல் நிலையைப் பெற முடியும் என்று கருதினார் நாராயணகுரு.கைத்தொழிலை வலியுறுத்தினார்.சுவாமிகளின் அமைதியான அணுகுமுறையினால் கேரளத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது.30 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கின. கல்வி, வழிபாட்டு உரிமை, வேலை வாய்ப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் கேரளம் முன்னேறியது.கேரள மக்கள் தங்களுக்குள் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொடர்ந்து முன்னேற்றம் பெற்று வருகின்றனர். இவை அனைத்துக்கும் குருதேவர் கொண்ட்டிருந்த தீர்க்க தரிசனமும் அமைதி வழியுமே காரணம்.

நாராயணகுரு தர்ம பரிபாலன யோகத்தின் முதல் செயலாளராகத் தொண்டாற்றியவர் மகாகவி குமரன் ஆசான். இவர், கேரள மாநிலத்தின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவர். தமது கவிதைகளின் வழியே சமத்துவக் கொள்கைகளை எடுத்துரைத்தவர்.நாராயணகுருவை மகாத்மா காந்தி அவர்கள் சந்தித்துள்ளார். 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் நாள் இச் சந்திப்பு நடந்துள்ளது.”அழகு நிறைந்த திருவாங்கூர் ராஜ்ஜியத்துக்கு வந்தபோது, புண்ணிய ஆத்மாவான நாராயணகுருவைத் தரிசிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பினை என் வாழ்வின் பெரும்பேறாகவேக் கருதுகிறேன்” என்று காந்திக் குறிப்பிட்டுள்ளார்.தேசியக் கவிஞர் ரவீந்திரனாத் தாகூர் சந்திதுவிட்டு, “ நான் உலகின் பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். ஆங்காங்கு பல சித்தர்களளையும் மகரிஷிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், மலையாள நாட்டில் இருந்த நாராயணாகுருவைச் சிறந்த அல்லது இணையான மகா ஞானியை நான் எங்கும் பார்த்ததில்லை. அந்த மகானின் யோகக் கண்களும் ஒளிர்விடும் முக தேஜஸும், என்னால் ஒருபோதும் மறக்க இயலாதவை” என்று குறிப்பிட்டுள்ளார்.பெரியார், ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ,டாக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர்களும் நாராயணகுருவைச் சந்தித்துள்ளனர். மலையாள மனோரமா 1988 ஆம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவில் பிரபலங்களில் முதன்மையானவராக பல நூறு பேர்களிடையே நாராயணகுருவை ஏக மனதாகத் தேர்ந்தெடுத்து உள்ளது.

நாராயணகுரு தமிழகத்தில் பல இடங்களுக்கு வருகை புரிந்திருக்கிறார்.இவரின் தர்ம பரிபாலன யோகம் தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் இயங்கி வருகிறது.”என்னை முதலில் புரிந்துகொண்டது தமிழ் நாடே” என்று பலமுறை நாராயணகுரு குறிப்பிட்டுள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு சாலைக்கு ”திரு. நாராயணகுரு சாலை” என்றுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.திருக்குறளில் மூன்று அதிகாரங்களை (கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு & நீத்தார் பெருமை)மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் நாராயணகுரு. திருவண்ணாமலை சென்று பகவான் ரமணரை நாராயணகுரு சந்தித்துள்ளார்.இச் சந்திப்புப் பற்றி இன் நூலில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் சுவையானவையாகும்.

1928 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் நாராயணகுரு சமாதியடைந்தார்.கேரளத்தின் கயிறு, ஓடு முதலான தொழில்கள் உருவாகக் காரணமாயிருந்தவரும் சாதி, சமய வேறுபாடுகளைக் களைய தன்னை அர்ப்பணித்துக்கொண்டவருமான நாராயணகுருவை கேரள மக்கள் தெய்வமாக எண்ணுவதில் வியப்பேதுமில்லை.


- நிறைய படங்களுடன் கூடிய ஸ்ரீ நாராயணகுரு என்கிற நூலிலிருந்து.

பின் குறிப்பு_ நாராயண குரு பற்றிய திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்படுவதாகவும் அதி நாராயணகுருவாக நடிப்பவர் தலைவாசல் விஜய் என்பதும் அண்மையச் செய்திகள். நாராயணகுருவின் பிம்பமாகத் தோன்றும் தலைவாசல் விஜய்க்கு கேரளத்தில் இப்போது ஏக மரியாதையாம்.

நன்றி-கிழக்கு பதிப்பகம்.

நூல் விபரம்

ஸ்ரீ நாராயணகுரு
ஆசிரியர்-பருத்தியூர் கே. சந்தானராமன்
112 பக்கங்கள்
விலை ரூ.60.

இந்நூலை இணையம் மூலம் வாங்க இங்கே சொடுக்கவும்

Friday, June 12, 2009

ஒப்புக்குச் சப்பாணியா வேணா விளையாடுறேன்

இந்த 32 கேள்வி பதில் விளையாட்டெல்லாம் எனக்குன்னு வரும்போது அவ்வளவா ரசிக்க முடியல.பதில் சொல்லத் தெரியணுமில்ல! வாசுகிட்டயே கேட்டேன். 'வாசு, மாட்டிவிட்டுட்டீங்களே. பதில் எழுதலன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?' அப்படின்னு. 'அதெல்லாம் கோபப்படவோ, வருத்தப்படவோ மாட்டேன். ஆனா, என்ன தயக்கம். சும்மா எழுதுன்னு' சொன்னார். நானும் சும்மா எழுதுனாதான் என்ன என்கிற மன நிலையில்தானிருந்தேன். அதனால், சும்மா எதுவோ எழுதியிருக்கிறேன்.என்னைப் பற்றித் தெரிந்து யாருக்கு என்னவாகப்போகிறது.

வாசுவுக்கும்(அக நாழிகை பொன். வாசுதேவன்), குடந்தை அன்புமணிக்கும் என் மீதான அன்பிற்கும், ஆர்வத்திற்கும் நன்றி.




1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

கலைஞர் கருணாநிதியோட அப்பாப் பேரு.எங்கப்பன் ஒரு தி.மு.க.காரன்.(இதெல்லாம் அதிக அன்புன்னு நினைச்சுக்கணும்). தமிழ்ப் பெயரா இருக்கிறதால எனக்குப் பிடிச்சுருக்கு.. (புனைப்பெயர் வைக்கவேண்டியதெல்லாம் இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை என்பதால் வலைப்பூவிலும் இயற்பெயரே.)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அய்யோ! அத எதுக்குங்கக் கேட்டீங்க. நான் இப்பலாம் எதெதுக்கோ அழுதுடுறேன். பொசுக்கு பொசுக்குன்னு மிக எளிதாக. ஆனா, பெரும்பாலும் ஆனந்தக்கண்ணீர்தான்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பொறுமையா நிறுத்தி , கடைசிவரை நிதானமாக எழுதினால் பார்த்துச் சகித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்கும், கொஞ்சம் அழகாகவும் கூட இருக்கும். ஆனா, opening லாம் நல்லாத்தான்யா இருக்கு என்கிற கதைதான்.


4.பிடித்த மதிய உணவு என்ன?
செட்டி நாட்டு பாணி சுவையுள்ள உணவு.



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?


முன்னல்லாம் அப்படித்தான். இப்ப அப்படி இல்லை. அது மத்தவங்களயும் பொறுத்து.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவிதான். தலையில எதாவது பாம்பு, கல் வந்து விழுந்துடுமான்னு ஒரு திகிலோட, தண்ணீரின் சத்தத்தோட, தலையில் பட் பட்டுன்னு அடிவாங்கிக்கிட்டு.(புத்தியும் கொஞ்சம் தெளியுமே)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
நபரையும், வயதையும், பாலினத்தையும், உறவுமுறையையும் பொறுத்தது.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது- நல்லாப் பழகினவங்களக்கூட வேலை சொல்லவோ, உதவி கேட்கவோ, அவசியமான நேரத்திலும் உளமாறத் தயங்குவேன்.
பிடிக்காதது- அது நிறைய. நான் ஒரு நல்ல சோம்பேறி.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது- இந்த உலகத்துல என் மேல அன்பு வச்ச முதல் ஜீவன்.ரொம்ப நல்லவ.

பிடிக்காதது- திறமையின்மை, ஆர்வமின்மை.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

எனக்கு ஒரு பெரிய உந்துசக்தியான ஒரு ஆளுமை -யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்-

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கரு நீல அரைக்கால் சட்டை( வெறும்..வெறும் அரைக்கால் சட்டை மட்டுமே. அப்பா! என்ன புழுக்கம்!)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
நான் ஒரு பாட்டுப் பைத்தியம். இப்ப இணையம் மற்றும் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கியதிலிருந்தே பாட்டுக் கேட்கும் பழக்கம் மெல்லத் தேய்ந்து,இப்போ சுத்தமா இல்லாமலேப் போய்விட்டது வருத்தமாயிருக்கிறது.



13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு. கருப்பு...

14.பிடித்த மணம்?

நிறைய உண்டு. ஒன்னு, ஜாதி முல்லை.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

வாசு எனக்கிழைத்த வம்பை (சொம்மனாங்காட்டியும்) நான் யாருக்கும் செய்வதாயில்லை.(என்னா வில்லத்தனம்?)


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

போடா ஒம்போது!(என்ன அப்படிப் பாக்கறீங்க. பதிவோட பேருங்க இது)

17. பிடித்த விளையாட்டு?

கைப்பந்து, கேரம்.

18.கண்ணாடி அணிபவரா?

இதுவரை இல்லை. இணையம் மற்றும் புத்தகங்கள் படிப்பதால் கூடிய சீக்கிரம் அணியலாம்.

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எந்த மாதிரியான உணர்வு சார்ந்தத் தாக்கமாயிருந்தாலும் சரி. படம் பாத்து முடிச்ச பிறகு எவ்வளவு நேரம் அது நம்மைப் பிடிச்சு வச்சுக்கிட்டிருக்குங்குறதப் பொறுத்து, ரொம்ப நேரம் பாதிக்கிற படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
ராமன் தேடிய சீதை (தொலைக்காட்சியில்.)

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர் காலம். சிகரெட் பிடிக்க, தண்ணி அடிக்க, நல்லா இழுத்துப்போத்திட்டு காலையில ரொம்ப நேரம் தூங்க,குளிச்சுட்டு வந்தப்ப இருக்கமாதிரியேபுத்துணர்ச்சியாகவே இருக்கமுடியறதால,அணைச்சுக்க துணை தேட ன்னு நிறைய காரணங்கள்.


22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

அழுவாச்சி வருதுங் சாமி மற்றும் காலச்சுவடு.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அதையெல்லாம் நான் கண்டுக்கிறதில்ல. அதுபாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டுமே.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: பிடிக்காதவைகளிலிருந்து நீங்கலாக எல்லாமும்.
பிடிக்காத சத்தம்: பிடித்தவைகளிலிருந்து ‘' ‘' . (சட்டுன்னு எதுவும் பதில் தெரியலீங்க)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பாபா மந்திர். இந்திய,திபெத்,சீன எல்லை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சுமாராப் பாடுவேன். என் கணக்குப்படி 10 பேருக்கு 2 பேர் நல்லாப் பாடுவாங்க. அப்படியிருக்கும்போது இதுத் தனித்திறமையா?( ஆனா, பாடுன்னுச் சொன்னா பாட வராது. நானாக் கத்திக்கிட்டிருந்தா உண்டு)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

விரும்பாததுன்னு எடுத்துக்கிட்டா, தற்கொலை.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சில விசயங்களில் சுயக் கட்டுப்பாடற்ற , உறுதியில்லாத மனம்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

நல்லாச் சுத்தணும் நண்பர்களோட. அவ்ளோதான். வேணா, மூனாறு சொல்லலாம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

ஒரு நல்ல படைப்பாளியாக அறியப்படணும்.ஏற்றுக்கொள்ளப்படணும்.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இது நிறைய.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்ந்து தீராத, அறிந்துவிட முடியாத வாழ்வை அறிதலே வாழ்க்கை.

Thursday, June 11, 2009

மீண்டும் குங்குமத்தில் என் வலைப்பூ

குங்குமம் 04/06/2009 இதழில் என் வலைப்பூ மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.(குங்குமத்துல போட்ட பின்னும் hit counter தான் ஓடவே மாட்டேங்குது). மாறும் முகங்கள் என்கிற தலைப்பில் எழுதியிருந்த இரண்டு கவிதைகளில் இரண்டாவதை வெளியிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இணையத்திலேயே பார்க்க இங்கே சொடுக்கவும்.
 நன்றி -குங்குமம்

Saturday, June 6, 2009

கடவு -கூடல் சங்கமம்-2009




தமிழின் இலக்கிய வெளியில் முக்கிய நிகழ்வான கடவு அமைப்பு நடத்தும் "கூடல் சங்கமம் "மதுரையில் ஜூன்27,28 நடைபெறுகிறது கவிதை,சிறுகதை குறித்த கருத்தரங்குகள் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழின் முக்கிய படைப்பாளிகள் , எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வு இது .அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படிக்கு கேட்டு கொள்ளப்படுகிறது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .

இலக்கிய நண்பர்கள் இத்தகவலை அனைத்து இலக்கிய நண்பர்களுக்கும் அனுப்பிவைக்கும்படிக்கும் ,இந்நிகழ்வை பற்றி நேரிலும் ,தொலை பேசி, மின் அஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாகவும் ,இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எந்த வித வேறுபாடுமின்றி தெரியப்படுத்துங்கள் .

"தங்குதடையின்றி இலக்கியம் செழிக்கட்டும் "




கடவு


இலக்கிய அமைப்பு நடத்தும்


கூடல் சங்கமம் -2009


கவிதை ,சிறுகதை குறித்த கருத்தரங்கு


நாள் :27,28-06-2009


இடம் :பாஸ்கர சேதுபதி அரங்கு,ஓயாசிஸ் உணவகம் ,அழகர் கோயில் ரோடு ,மதுரை
நிகழ்வு குறித்த தொடர்புக்கு .
9659016277,9360282812,9366669469 /
koodalsangamam@gmail.com