Tuesday, December 16, 2008

சொப்புக்கடை

அவ்வளவாக இதுவரை கண்டுகொள்ளப்படாத குழந்தைகளின் உலகை மிக அழகாகப் பதிவு செய்த கவிஞர் முகுந்த் நாகராஜன் அளவுக்குப் பிரபலமானவராக இல்லாதவராயினும் ‘செஞ்சி தமிழினியன்’ அவர்களும் குழந்தைகளின் உலகை மிக அழகாகவே ,அனுபவித்து எழுதியுள்ளார்.இது இவரின் 2 வதுத் தொகுப்பு.எழுத்தாளர் பெருமாள் முருகன் அணிந்துரை எழுதியுள்ளார்.அதில்,’இலக்கியம் கவனம் கொள்ள வேண்டிய ஒரு பகுதியை தமிழினியன் இத்தொகுப்பில் கவிதைகளாக ஆக்கியுள்ளார்.குழந்தைகள் கொடுக்கும் மகிழ்வையும் அவர்கள் உலகத்திற்குள் நிலவும் அற்புதக் கற்பனைகளையும் பார்வையாளராகவும், உள்ளே நுழைய முயல்பவராகவும் இருந்து கவிதைக்குள் கொண்டு வருகிறார்’ என்கிறார். எளிமையும் நேரடித்தன்மையும் ,மண்மணக்கும் வாசமும் நிறைந்த நல்ல கவிதைகள் நிறைந்து இருந்தபோதிலும் தட்டச்ச எளிதான கவிதைகள் மட்டும் மாதிரிக்கு சில.
1.
வெறும் கையில்
பப்புக் கடைந்து
அம்மாவுக்குக் கொஞ்சம்
அப்பாவுக்குக் கொஞ்சம்
தாத்தாவுக்குக் கொஞ்சம்
ஆயாவுக்குக் கொஞ்சம்
அத்தைக்குக் கொஞ்சம்
அக்காவுக்குக் கொஞ்சம் என
கொடுத்துவிட்டு
வெளியே போகிறாள்
காக்காவுக்கு வைக்க.

2.
பொம்மையைக்
கால்மேல் போட்டு
பால் ஊற்றுகிறாள்
வேண்டாம் என்றாலும்
‘பாப்பா’ என முத்தம் கொடுக்கிறாள்

தூங்கும்போது
கண்டிப்பாய்
பொம்மைக்கும்
தனித் தலையணை போட்டு
போர்த்தி விடுகிறாள்

பாப்பாவாக இருப்பதை விடவும்
அக்கா என்பதே
அவளுக்குப் பெருமிதம்.

3.
ஒவ்வொரு இரவும்
சொல்லும் கதைகளால்
மகிழ்ச்சியுற்றுத் தூங்கிடுவாள்

முன்பு சொன்ன கதைகளை
இப்போது மாற்றிச் சொல்ல
இப்படி இல்லப்பா
அப்படி இல்லப்பா என்று
அவள் கதை சொல்ல
நான் தூங்கிப் போகிறேன்
4.
அடிவாங்கி
அழுதபடியே உறங்குகிறாள்
தலையணை
தனியே கிடக்கிறது

போர்த்திவிடுகிற துணியைத்
தள்ளி விடுகிறாள்

எப்படியும் நடு இரவாகும்
கை கால்களை
என் மேல் போட்டுக்கொண்டு
தூங்க…
5.
கார்ட்டூன் சேனலை
கண் விரித்துப் பார்க்க
பூனைக்குப் பயந்து ஓடிய
எலியைத் தேடுகிறாள்
பிடிபடாமல்
ஓடும்போது கை தட்டிச் சிரிக்கிறாள்

பாவம் பெரியவர்கள்
அழுகிற தொடர்களைப் பார்க்க
ஆவலாய் இருக்கிறார்கள்.
6.
”தொனத் தொனன்னு பேசாதே
போயி படி” என விரட்டப்பட்ட பெரியமகள்
முழுதும் மூடாத கதவு வழியே
படிப்பதுபோல பாவனை செய்கிறாள்.

எச்சில் நனைந்த
ஓரிரு சொற்களைச்
சின்ன மகள் சொல்லும்போது
மகிழ்ந்து
ஆளுக்கு ஆள் புகழ்ந்து
முத்தம் கொடுக்கிறோம்.

உள்ளேயிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
பெரிய மகள்.
7.
நிலா கேட்டு
அடம் பிடிக்கும் குழந்தை
பசியாறியது நாய்க்குட்டி.
8.
கூடத்தில்
விளையாடிக் கொண்டிருக்க
புதிதாய் நுழைந்தவர்கள்
இங்க வா
உன் பெயர் என்ன?
சாப்பிட்டையா? எனக்
கேள்விகளை அடுக்க
அழுது
அவசரத்தில் ஓடுகையில்
அவளைப் போலவே
சில பொம்மைகளும்
உடைந்து போகின்றன.

ஆசிரியர்; செஞ்சி தமிழினியன்
(9443877641)

பக்கம்-80
விலை-ரூ.50.00

வெளியீடு
நறுமுகை(ஜெ. ராதாகிருஷ்ணன்)
29 35, தேசூர்பாட்டை,
செஞ்சி-604202
விழுப்புரம் மாவட்டம்.
(9486150013)